கார்த்திகைச்செல்வி படிக்கும் கல்லூரியின் நுழைவு வாயிலில் ஆட்டோவை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான் பூச்சி. நேரம் ஒன்றை கடந்திருக்க, இன்னும் பத்தே நிமிடங்கள் தான் என்று பதட்டத்துடன் அந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவிகளை பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.
சில நிமிடங்களில் கூட்டம் கூட்டமாக மாணவிகள் வெளியே வரத் தொடங்க, தூரத்தில் வரும்போதே கார்த்திகாவை அடையாளம் கண்டுகொண்டான் பூச்சி. தன்னை நிதானமாக காட்டிக்கொண்டே அவள் தன்னை சமீபிக்கும் வரை காத்திருந்தவன் அவள் அருகில் வரவும், அவளுக்கு எதிரில் சென்று நின்றுவிட்டான்.
கதிர்வேல் பெயரைக் கூறவும், சற்றே தைரியம் கொண்டவளாக “என் அண்ணன் தான். நீங்க யாரு.” என்று அவனை கேள்வி கேட்டாள் கார்த்திகா.
“உன் அண்ணன் ஒரு பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டான் போல. உங்க அம்மாவையும், அப்பாவையும் போலீஸ்ல புடிச்சுட்டு போய்ட்டாங்க.. ஸ்டேஷன்ல தான் இருக்காங்க ரெண்டுபேரும்.. உன்னை கூட்டினு வர சொல்லி விஜயா அக்காகிட்ட சொன்னாங்க போல. அனுப்புச்சு.. இந்தா..” என்றவன் தன் அலைபேசியில் இருந்து விஜயாவுக்கும் அழைத்து கொடுத்துவிட,அவன் கூறிய தகவலில் பதறிப் போயிருந்தவள் வேகமாக அலைபேசியை கையில் வாங்கி கொண்டாள்.
அவள் “ஹலோ..” என,
“ஏய் கார்த்தி.. நாந்தான் விஜயா.. உன் அண்ணன் எவளையோ இழுத்துன்னு போய்ட்டானாம். உன் அப்பனையும், ஆத்தாளையும் போலீஸ் தூக்கினு போய்ட்டாங்க.. அவன் என் தம்பிதாண்டி.. அவன்கூட கெளம்பி வா.. உன்னை தனியா விட வேணாம்ன்னு சொல்ட்டு போச்சு மகாக்கா..” என்றாள் விஜயா.
தாயும், தந்தையும் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள் என்பதே அவள் மூளையை மழுங்கடிக்க, இருந்த பதட்டத்தில் எதைப்பற்றியும் யோசிக்காதவளாக பூச்சியுடன் அவன் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள் கார்த்திகா.
அவளையறியாமல் கண்கள் கலங்கிக்கொண்டே இருக்க, பயத்துடனே அமர்ந்திருந்தாள் அவள். மற்ற யாரையும்விட அன்னையைப் பற்றிய கவலையே பெரியதாக இருந்தது அவளுக்கு. என்ன செய்து கொண்டிருக்கிறாரோ.?? என்ற பயத்திலேயே அவள் அமர்ந்திருக்க, விவேகானந்தர் இல்லத்திற்கு முன்னே இருந்த சிக்னலில் நின்றது ஆட்டோ.
அங்கிருந்த தானியங்கி இயந்திரத்தில் நொடிகள் 40..39..38.. என்று குறைந்துகொண்டே இருக்க, பூச்சியின் கவனம் முழுவதும் சாலையில் தான். பச்சை விளக்கு ஒளிர இன்னும் மூண்டு நொடிகள் மட்டுமே இருக்க, அதற்குள்ளாகவே சாலையில் சீறிப்பாய்ந்தனர் இருச்சக்கர ஓட்டிகள்.
பூச்சி சற்றே பின்னால் நின்றிருந்ததால் அவன் நிதானமாக முன்னே செல்ல, சிக்னல் கம்பத்திற்கு அருகே நின்றிருந்த குமரகுரு கண் இமைக்கும் இடைவெளியில் ஆட்டோவின் பின்பக்கம் ஏறிக்கொண்டான். அவன் ஏறிய நிமிடம் பூச்சி ஆட்டோவை இடதுபக்கமாக ஒடித்து திருப்ப, திருவல்லிக்கேணியின் ஐஸ்ஹவுஸ் ஏரியாவுக்குள் நுழைந்துவிட்டது அவன் ஆட்டோ.
கார்த்திகா “அண்ணா வண்டியை நிறுத்துங்க.. யார் இவங்க.. எங்கே போறீங்க..” என்று பதற, காது கேளாதவன் போல் அவன் வேலையைப் பார்த்திருந்தான் பூச்சி.
குமரகுரு வாயில் எதையோ மென்றபடி, ஒரு காலை மட்டும் ஆட்டோவின் கம்பியின் மீது தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவனைத் தாண்டி வெளியில் செல்லவே முடியாது என்ற நிலை தான் கார்த்திக்கு.
அவன் தோற்றமும், கல் போன்ற அவன் முகமும் இன்னும் பயம் கொடுக்க, “அண்ணா.. ப்ளீஸ் விட்டுடுங்க… வீட்டுக்கு அர்ஜண்டா போகணும்ண்ணா..” என்று பூச்சியின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி கத்தியவள், அவன் காதில் வாங்காமல் போகவும் “வண்டியை நிறுத்துடா.. நீ மட்டும் நிறுத்தாம போன, கீழே குதிச்சுடுவேன்..” என்றபடி இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள முயற்சிக்க, இருந்த இடத்தில் இருந்து அசையாமல் கையை மட்டும் நீட்டி அவளை தன்னருகில் இழுத்துக் கொண்டான் குமரகுரு.
அவள் கழுத்தை வலக்கை கொண்டு சுற்றி வளைத்தவன் மூடியிருந்த விரல்களுக்குள் இருந்து ஒரு சிறிய கூர்மையான கத்தியை அவள் கழுத்தருகே வைத்து அழுத்த, பயத்தில் உடல் நடுங்கிப் போனாள் கார்த்திகா.
அவளது நடுக்கம் வெளிப்படையாகவேத் தெரிய, “இப்டியே இருக்க.. சவுண்ட் உட்ட, கத்தி கழுத்துல இறங்கும்..” என்று மிரட்டினான் குமரகுரு.
கார்த்திகா அவன் கையிலிருந்து விடுபட்டால் போதும் என்று அவன் கூற்றிற்கு தலையசைக்க, மெல்ல அவளை விடுவித்தான் குமரகுரு. அந்த ஆட்டோவின் மறுமுனையில் கம்பியோடு ஒட்டியபடி அமர்ந்துகொண்டவள் வாயைக் கைகளால் மூடிக்கொண்டாள்.
குமரகுரு அவள் அழுகையைக் கொஞ்சமும் மதிக்காமல் அமர்ந்திருக்க, பூச்சிக்கு அவனை மீறி வாயைத் திறக்கும் துணிவு இல்லை. குமரகுருவின் மனநிலை புரிந்ததால் அவனும் அமைதியாகவே இருக்க, ஆட்டோ சிந்தாதிரிப்பேட்டையைத் தொட்டு, குறுக்கு தெருக்கள் வழியாகவே மூலக்கொத்தளத்தை அடைந்திருந்தது.
அங்கிருந்து வலதுபுறம் திரும்பியவன் மின்ட் மேம்பாலத்தை கடந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பின்பக்கமாக இருந்த சுரங்கப்பாதைக்குள் நுழைந்து ராயபுரத்தை அடைய, ராயபுரம் சிங்காரவேலர் மாளிகை சிக்னலில் நின்றிருந்த ஆட்டோவில் இருந்து கீழே குதித்துவிட முயன்றாள் கார்த்திகா.
ஆனால், முயற்சிக்க மட்டுமே முடிந்தது அவளால். அவள்மீதே கண் வைத்திருந்த குமரகுரு அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து பின்னே இழுத்திருக்க, மீண்டும் ஒருமுறை அவன் மீது விழுந்தாள் கார்த்திகா.
அவன் பிடி அளவுகடந்த வலியைக் கொடுக்க, “அம்மா..” என்று அலறியவளின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்திவிட்டான் மீண்டும். கார்த்திகா சிக்னலில் இருந்த காவலர்களை அழைக்க நினைத்தாலும், அவனை மீறி எதையும் செய்யும் துணிச்சல் வரவே இல்லை.
அதுவும் குரல்வளையில் அவன் கத்தியை வைத்து அழுத்திக் கொண்டிருக்க, எங்கே கத்துவது என்று நொந்து கொண்டாள் அவள். அந்த சிக்னலை கடந்து எதிரில் இருந்த குறுக்குத்தெரு ஒன்றில் நுழைந்த பூச்சி, அந்த தெருவின் வழியாகவே காசிமேடு கடற்கரையை அடைய, சென்னை துறைமுகத்திற்கு வெகு அருகில் இருந்தனர் அவர்கள்.
அந்த உச்சிவெயில் நேரத்தில் கடற்கரை ஆள்நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி இருக்க, அது குமரகுருவுக்கு சாதகமாகி இருந்தது. சாலையில் ஆட்டோவை நிறுத்தி இறங்கியவன் “வா..” என்று குனிந்து அழைக்க, மறுப்பாகத் தலையசைத்தாள் கார்த்திகா.
“ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. எனக்கு நீங்க யாருன்னே தெரியாது.. ஏன் என்னை இங்கே கூட்டிட்டு வந்து இருக்கீங்க.. என்னை விற்றுங்களேன் ப்ளீஸ்..” என்று கெஞ்சியவள் முகம் இதற்குள் அழுதழுது வீங்கிப் போயிருந்தது.
அவளைக் கண்டு கொஞ்சம் பாவமாக இருந்தாலும், அவளை விடுவதாக இல்லை குமரன்.
நேற்று முதல் அவன் குடும்பம் அனுபவிக்கும் வேதனையே பெரிதாகத் தெரிய, கார்த்திகையைக் கண்டு இரக்கம் கொள்ளவில்லை குமரன்.
முகத்தை இன்னும் கடுமையாக்கி கொண்டவன் “ஒழுங்கா இறங்கி வந்தா உனக்கு நல்லது.. இல்ல, கையை காலை கட்டி தூக்கினு போய்டுவேன். என்னை இங்க எவனும் எதுவும் கேட்கமுடியாது.. என்னைத்தாண்டி உனக்கு எல்ப் பண்றதுக்கு எந்த ஈரோவும் வரமாட்டான். அதனால பல்பு வாங்காம என்கூட வந்துடு..” என்றபடியே அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்து நிறுத்தினான் குமரன்.
பூச்சிக்கு நடப்பது எதிலும் உடன்பாடு இல்லையென்றாலும், தன் நண்பனுக்காக உடன் நின்றான். அந்த கொளுத்தும் வெயிலில் அவள் கையைப்பிடித்து தரதரவென குமரன் இழுத்துச்செல்ல, யாராவது தன்னை காப்பாற்ற வரமாட்டார்களா..? என்று கண்ணீருடன் அலைபாய்ந்தது கார்த்திகையின் பார்வை.
அது மீன் இறக்கி ஏற்றும் வியாபார தளம் என்பதால் காலை வேளையிலும், மாலை மீன் வந்து இறங்கும் வேளையிலும் மட்டுமே ஆட்கள் நடமாட்டம் இருக்கும் அந்த பகுதியில். மற்ற நேரங்களில் கடற்கரை வெறிச்சோடித் தான் காணப்படும்.
இப்போதும் அப்படியே இருக்க, அதைக் குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் வேகமாக அவளை கடலுக்கு இழுத்துச் சென்றான் குமரன். சரியாக இவர்கள் கடலை நெருங்கவும், ஒரு மோட்டார் படகு இவர்களுக்கு அருகில் வந்து நிற்க, பூச்சி முதலில் ஏறிவிட்டான்.
குமரன் “ஏறு.” என்று கார்த்திகாவை அதட்ட, அதுவரை பயந்திருந்தவளுக்கு எங்கிருந்து அத்தனை தைரியம் வந்ததோ.. குமரனின் கையை உதறியவள் வேகமாக ஓட முற்பட, முட்டியளவு நீரில் நின்றுகொண்டு எங்கே ஓட முடியும். அந்த நேரம் வந்த பெரிய அலை ஒன்று அவளை புரட்டிப்போட, நீரில் விழுந்தாள் கார்த்திகா.
குமரன் அவளை பிடித்து எழுப்பி நிறுத்த, மீண்டும் அவன் கைகளை உதறி விடத்தான் முயன்றாள் அவள். அதில் கோபம் வரப்பெற்றவன் “ஏய்.. பைத்தியக்காரி..” என்று கையை உயர்த்த, “விடுடா என்னை..” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் அவன் சுதாரிப்பதற்குள் மீண்டும் ஒருமுறை அலையில் விழுந்திருந்தாள்.
குமரன் படகின் பக்கவாட்டில் இடித்து நின்றவன் படகைப் பிடித்துக்கொண்டு தன்னை சமாளித்துக்கொண்டு, வேகமாக கார்த்திகாவை நெருங்கினான். அவள் கடல்நீரில் மூழ்கி, எழ முடியாமல் திணறிக் கொண்டிருக்க, அவள் தலைமுடியைப் பிடித்து தூக்கியவன் தன் முரட்டுக் கைகளால் ஒரு அறைவிட, நிற்க முடியாமல் தள்ளாடினாள் கார்த்திகா.
அவள் தள்ளாடிய நேரம் அவள் இடுப்பை பிடித்து தூக்கி, அவளை படகில் வீசியவன் தானும் ஒரே தாவலில் படகில் ஏறிவிட்டான்.
“எட்றா..” என்று மோட்டாரின் அருகில் நின்றிருந்தவனைப் பார்த்து குரல் கொடுத்தவன் அந்த படகில் இருந்த கயிற்றைக் கொண்டு கார்த்திகாவின் கையையும், காலையும் அசையமுடியாதபடி கட்டி வைத்தான் முதலில்.
“சரியான ஆர்வக்கோளாறா இருக்குது அரைகொறை.. எங்கனா உழுந்து என் தாலிய அறுக்கப்போறா..” என்று தன் செயலுக்கு அவன் விளக்கம் கொடுத்துக் கொள்ள,
“தாலி கட்டப்போறேன்னு சொன்னியே மச்சி..” என்று நேரம் காலமில்லாமல் அவன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டான் பூச்சி.