தித்திக்கும் முத்தங்கள் 04

                 தன் வீட்டிற்கு அருகில் இருந்த அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அன்று பிரதோஷம் என்பதால் கல்லூரி முடித்து வந்ததுமே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு  ஐந்து மணிக்கெல்லாம் சரியாக கோவிலில் வந்து அமர்ந்துவிட்டாள் அவள்.

              உள்ளே மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்க, முழுவதுமாக அவரிடம் லயித்துப் போய் அமர்ந்திருந்தாள் கார்த்திகா.பூஜை முடிந்து கோவிலில் கொடுத்த பிரசாதத்தைக் கையில் வாங்கிக் கொண்டவள் தன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

               அங்கிருந்து அவள் வீட்டிற்கு இருபது நிமிடங்கள் நடக்கவேண்டும் என்றாலும் ஆட்டோவிற்கு பத்து ருபாய் செலவழிக்க மனம் வராமல் பொறுமையாக நடந்தே அவள் வீடு வந்து சேர, அதற்குள் மகாலட்சுமியும் வீடு வந்திருந்தார்.

               தாயிடம் பிரசாதங்களை கொடுத்தவள் சமையலுக்கான வேலையைத் தொடங்க, “நான் செய்யுறேன்.. நீ படிக்க ஏதாவது இருந்தா பாரு போ.” என்றார் அன்னை.

                 “எல்லாம் முடிச்சுட்டேன்மா.. நானே செய்யுறேன்..” என்று மகள் மறுக்க, அதற்குமேல் வற்புறுத்தாமல் மாலை கோர்க்க அமர்ந்துவிட்டார் மகாலட்சுமி.

              அரசாங்கத்தில் கொடுத்திருந்த தொலைக்காட்சியையும் அவர் தந்தை ஒரு சண்டையில் தூக்கிப்போட்டு உடைத்திருக்க, தொலைக்காட்சிப்பெட்டியே கிடையாது அவள் வீட்டில். வீட்டிலிருக்கும் நேரங்களில் இந்த மாலை கோர்க்கும் வேலைதான் தாய்க்கும், மகளுக்கும் பொழுதுபோக்கு.

               மகாலட்சுமியும் பெரிதாக மற்றவர்களுடன் வெட்டிக்கதை பேசி பொழுதை போக்கும் ரகமில்லை என்பதால் பெரும்பாலும் இருவருமே வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. கீழே தெருவில் அமர்ந்து கொண்டு ஊர்நியாயம் பேசும் பெண்கள் நிறுத்தி ஏதாவது பேசினால் கூட, இரண்டே வார்த்தையில் பதில் கொடுத்துவிட்டு வீடு வந்துவிடுவார் மகாலட்சுமி.

              மொத்தத்தில் அன்னையும், மகளும் இருக்குமிடம் தெரியாது அந்த குடியிருப்பில். ஆனால்,எ தற்கு அப்படியே நேர்மாறானவர்கள். மகன் குடித்துவிட்டு அங்கிருக்கும் அவன் வயது கொண்ட இளைஞர்களுடன் சுற்றிவர, தந்தை அரசியல் அரசியல் என்று அதிலேயே விழுந்து சாக்கடையாகிப் போனவர்.

              இதோ இப்போதும் மனைவி அத்தனை சொல்லியும், அன்று இரவே மீண்டும் அந்த பேச்சைத் தொடங்கிவிட்டார் அவர். ஆயிரம் பேசினாலும், சண்டையிட்டாலும் மகனுக்கோ, கணவனுக்கோ எப்போதுமே உணவிட மறக்கமாட்டார் மகாலட்சுமி.

             இன்றும் அப்படிதான். மகனும், கணவரும் இரவு பத்து மணிக்கெல்லாம் வீடு வந்திருக்க, மகள் அப்போதுதான் உறங்கத் தொடங்கியிருந்தாள். மகாலட்சுமி இருவருக்கும் உணவு எடுத்து வைக்க, “நான் சொன்னதை யோசிச்சு பார்த்தியா மகா..” என்றார் தங்கராஜ்.

             “அதான் காலைலயே சொல்லிட்டேன்ல இத்த பேசாதன்னு.. இப்போ ஏன்யா ஏழரையைக் கூட்ற..” என்று தொடக்கத்திலேயே அவர் உஷ்ணமாக,

              “இல்ல மகா..”

             “நீ ஒன்னும் பேச வேணாம்.. மூடின்னு தின்னுட்டு எழுந்து போ.. என் பொண்ண நான் கரையேத்திக்கிறேன்..” என்று மகாலட்சுமி முடித்துவிட

             “இன்னா மேட்டருபா.. மகாலட்சுமி அங்காளியா மாறிடுச்சு..” என்றான் மகன்.

             அவன் நக்கலில் மகாலட்சுமி மகனையும் சேர்த்து முறைக்க, தங்கராஜ் அவரைக் கண்டுகொள்ளாமல் மகனிடம் முழு விவரத்தையும் கூறி முடித்தார் தங்கராஜ்.

              அவர் கூறி முடித்தது தான் தாமதம். மகன் அவன் பஞ்சாயத்தை தொடங்கிவிட்டான்.

            “அதெப்புடி நான் இருக்கும்போது அவளுக்கு மொத கல்யாணம் பண்ணுவ நீ.. நான் என்ன பொ….யா.. எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு உன் பொண்ணை எவனுக்கு வேணா கட்டி வை..” என்றான் கதிர்

            “டேய்.. உனக்கு இன்னாடா இப்போ அவசரம்.. அப்படியே உனக்கு கல்யாணம் பண்ணாலும், எவன் பொண்ணை குடுக்க, க்யூல நிக்கிறான்..” இது தந்தை.

             “யோவ். உன் பொண்ண கட்டிக்க ஒருத்தன் இருக்கும்போது, என்னை ஒருத்தி கட்டிக்க மாட்டாளா.. என் மேட்டரை முடிச்சுட்டு உன் பொண்ணு மேட்டருக்கு போ.”

              “இன்னாடா ரோதனை குடுக்கற நீ. இப்போ அவசரமா ஒரு பொண்ணுக்கு எங்கேடா போவேன் நானு..” என்று தந்தை வாதிட,

              “அதெல்லாம் பொண்ணு ரெடியாதான் இருக்கு. நான் கூப்பிட்டா நாளைக்கே என் கூட வருவா. எனக்கு கட்டி வை.” என்று மகனும் நிற்க, மகாலட்சுமி இருவரையுமே வெறுப்புடன் பார்த்து அமர்ந்திருந்தார்.

               மகனின் காதலெல்லாம் பாதிக்கவே இல்லை அவரை. இப்படி ஏதாவது வரும் என்றும் ஏற்கனவே எதிர்பார்த்து தான் இருந்தார். ஆனால், இவர்கள் இருவருமே தன் மகளை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பது அவர் மனதை அறுத்தது.

               தன் காலம் இருக்கும்போதே தன் பிள்ளைக்கு ஒரு வழி செய்துவிட வேண்டும். இவர்களை நம்பி அவளை விட முடியாது என்று தனக்குள் புலம்பியபடி அவர் அமர்ந்திருக்க,

               மகனிடம் “பொண்ணு யாருடா..” என்று விசாரித்துக் கொண்டிருந்தார் தங்கராஜ்.

                “எல்லாம் தெரிஞ்ச பொண்ணுதான்.. நீ கூட பார்த்து இருப்ப. ராணியக்கா இல்ல, அது பொண்ணு ப்ரியதர்ஷினி..”

                 “டேய்.. அது காலேஜ் படிக்கிற புள்ளையாச்சே.. உன்னை எப்பிடிடா பார்க்கும்.. சும்மா கதை குடுக்காத.. ஒழுங்கா உண்மைய சொல்லு.. அது ஆத்தாக்காரி வாயை பத்தி தெரியும்ல.. இந்த கோட்ரஸ்லியே நம்பர் ஒன்னு பஜாரி அவதான்.. கீச்சிடுவா உன்னை..” என்று தங்கராஜ் அலற, மகன் அலட்சியமாக சிரித்தான்.

              “அதெல்லாம் நம்பகிட்ட ஒன்னும் வேலையாவாது. அது பொண்ணு அது என்ன சொன்னாலும் கேட்காது. அதே நான் சொன்னா, அப்படியே கேட்கும்..”

              “அதெப்பிடிடா..”

               “பொண்ணு நம்ம பெர்பாமென்ஸ்ல உழுந்துடுச்சு.. நான் எங்க கூப்டாலும் வருவா..” என்று அலட்சியமாக பேசியவனை பார்த்த மகாலட்சுமி, அந்த ப்ரியதர்ஷினிக்காக இரக்கப்பட்டார் அந்த நிமிடம்.

               “அந்த பெண்ணைப் பார்த்து பேச வேண்டும்..” என்று மனதில் முடிவெடுத்தவராக அவர் அமர்ந்திருக்க, “டேய்.. நீ சொல்ற அந்த லோகிளாசுக்காக லாம் என் பொண்ணு வெய்ட் பண்ண முடியாது. அவ கல்யாணம் முடிவாவட்டும்.. அது வரைக்கும் கம்முனு இரு.. உனுக்கும் கட்சில எவன் பொன்னையாவது பார்க்குறேன்.”

                 “இல்ல.. இருக்கவே இருக்குது உன் அத்தை பொண்ணு.. அவளை கேட்கறேன்..”

                “எனக்கு அந்த அல்டி எல்லாம் வேணாம்.. எனக்கு என் ப்ரியாதான் வேணும்..”

                 “செரிடா.. ஆனா, என் பொண்ணு மேட்டரு முடியட்டும்..” என்று அவர் நாளையே திருமணம் என்பது போல் பேசிக் கொண்டிருக்க, மகாலட்சுமியின் கோபம் எல்லை மீறியது அந்த நிமிடம்.

                 இருவரையும் கண்டுகொள்ளாமல் சாப்பாடு பாத்திரங்களை எடுத்து சமையல்கட்டில் அடுக்கி வைத்தவர் அவர்கள் தட்டையும் எடுத்து தேய்க்கும் பாத்திரங்களோடு போட்டுவிட, “ஏய்.. இன்னாடி அதப்பா.. மனுஷன் சாப்புடும்போதே தட்டை எடுக்கிற.. என்ன, மேல கைய வைக்காம குளிருட்டு போச்சா..” என்றார் தங்கராஜ்.

              “த்து.. பொறம்போக்கு பசங்களா.. நீங்க ராத்திரி எல்லாம் ராவடி வச்சா, நான் கூடவே உக்காந்து குடை பிடிக்கணுமா. என் ஊடு இது. கவர்மெண்டுல எனக்குன்னு தந்தது.. வெளியே போங்கடா.. உங்க கூத்தையெல்லாம் ரோட்ல வச்சுக்கோங்க.. போங்கடா..” என்று கணவன் மகன் இருவரையும் அவர் பொதுவில் பேசி விட, தங்கராஜ் ஏற்கனவே குடித்திருந்தவருக்கு இன்னும் வெறியேறிப் போனது.

“தே…. புருஷனையே வெளியே போவ சொல்றியா.. உன்னை இத்தினி நாள் உட்டுவச்சதே தப்புடி..” என்றவர் கையை ஓங்கிக்கொண்டு மகாலட்சுமியை அடிக்க வர, தந்தையை பயத்துடன் பார்த்துக்கொண்டு சுவற்றுடன் ஒட்டிக்கொண்டாள் கார்த்திகா..

          அவள் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க, அவள் கண்ணீருக்கு தேவையே இல்லையென்பதைப் போல் கணவனை வெகு சுலபமாக சமாளித்தார் மகா.

        அடிக்க வந்தவரைப் பிடித்து தள்ளிவிட்டிருக்க, சுவற்றில் மோதி கீழே விழுந்தார் தங்கராஜ். “அய்யோ அப்பா…” என்று மகன் அலறிக்கொண்டே அவரைப் பிடித்து எழுப்பி நிறுத்த, “என்னையே அடிக்கிறியாடி..” என்று மீண்டும் நெருங்கினார் தங்கராஜ்.

           “மரியாதையா போய்ட்டா உனக்கு நல்லது.. இல்ல.. கிஷ்ணால் ஊத்தி கொளுத்திடுவேன்  உங்க ரெண்டு பேரையும்.. போங்கடா..” என்றவர் சமையலறைக்குள் நுழைய,

           “ப்பா.. இவளுங்களோட நமக்கு இன்னாப்பா பேச்சு.. நீ வாப்பா..” என்று தந்தையை அழைத்துக்கொண்டு வெளியேறினான் கதிர்வேல்.

            அவர்கள் வெளியேறவும், கார்த்திகா தன் அன்னையை நெருங்கி பயத்துடன் அணைத்து கொள்ள, “அடி ஏண்டி நீ வேற.. ஒன்னும் இல்ல விடு..” என்றவர் கதவை தாழிட்டு மகளை அணைத்தபடி படுத்துவிட்டார்.

            ஆனால், நடுராத்திரியில் கணவனும், மகனும் குடித்துவிட்டு வந்து மீண்டும் தங்கள் அலப்பறையை கூட்ட, இந்த முறை நடுத்தெருவில் நின்றபடி மகாவை வம்புக்கு இழுத்தார் தங்கராஜ்.

              “கட்ன புருஷனை வெளியே போவ சொல்றியாடி… ஏய் மகாலட்சுமி.. த்தூ.. பெரு வச்சான் பாரு உன் அப்பன்… சொர்ணாக்கா ன்னு வச்சிருக்கணும்டி உனக்கு… என் மேலேயா கையை வச்ச.. ஒரு அப்பனுக்கு பொறந்து இருந்தா வாடி… ஏய் மூதேவி இப்போ வாடி..” என்று அவர் கத்திய சத்தம் இரண்டாம் மாடியிலிருந்த இவர்கள் வீடு வரை கேட்க, படுக்கையை விட்டு அசையவில்லை மகா..

             மகள் விழித்திருப்பது புரிய, அவளை அணைத்த கையையும் விலக்கவில்லை அவர். ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்டவள் இன்னும் பயந்திருப்பது புரிய, வெளியே செல்வதாக இல்லை.

            “யாரவது போலீசுக்கு போன் பண்ணட்டும்.. வந்து தூக்கிட்டு போட்டும் ரெண்டு கழிசடையையும்..” என்று எண்ணியபடியே படுத்துக் கொண்டிருந்தார் மகா.

              வெகு நேரத்திற்கு பின் காவல்துறை வாகனத்தின் சைரன் ஒலி கேட்க, பட்டென நின்று போனது தங்கராஜின் குரல். தந்தை, மகன் இருவரும் அந்த குடியிருப்பின் பக்கவாட்டில் இருந்த இடைவெளியில் நுழைந்து, குடியிருப்பின் பின்பக்கமாக ஓடிவிட்டனர்.

              அந்த குடியிருப்பின் கழிவுநீர் குழாய்கள் இருந்த பகுதியில் இருவரும் ஒளிந்து கொள்ள, தேடிப் பார்த்த காவலர்கள் “ஓடிட்டானுங்க சார்..” என்று தூரத்தில் நின்று பார்த்துவிட்டு கிளம்பியிருந்தனர்.

              “போலீசுக்கு எவன்டா சொல்லி இருப்பான்..” என்று அங்கே நின்றபடியே தங்கராஜ் புலம்ப,

               “உன் பொண்டாட்டியே போன் பண்ணி சொல்லி இருப்பா..உன் பொண்ணு அவளுக்கு ஒத்து ஊதியிருப்பா..” என்றான் மகன்.

                “இவளுங்களை விடவே கூடாதுடா மவனே.. உன் கல்யாணம் அப்பன் பொறுப்பு.. பொட்டகழுத.. ஆத்தாக்காரி கூட சேந்துன்னு நம்மளையே போலீஸ்ல புடிச்சு கொடுக்க பார்க்கிறாளா.. நீ அந்த பொண்ணை தூக்குடா.. அப்பா என் தலைமையில உனக்கு கட்டி வைக்கிறேன்.. நாளைக்கே தூக்குடா..” என்றார் குடி மிகுதியில்..