நல்ல நேரம் வந்தா எல்லா சரியா போகும் என்று சொல்லிற்கு இணங்க, மீனலோக்ஷ்னி வந்த நேரம் எங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லவும் செய்ய, அறிவழகன் தம்பதிக்கு அளப்பறியா மகிழ்ச்சி.

முன்பே இளவரசிக்கு  ‘ஆராதனா’ என்று பெயர் சூட்டியிருக்க, இன்று எல்லோருக்கும் விருந்து வைத்து கொண்டாடினர்.

இன்றய விருந்திற்கு வருகை தந்த பங்காளிகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்து கொண்டனர்.

அன்றிரவு வில்வநாதன் குடும்பத்தை நிற்க வைத்து திருஷ்டி எடுத்தே அறைக்கு அனுப்பினர் குடும்பத்தினர்.

தயாளனின் சமீபத்திய வழக்கமாக, இரவு வணக்கத்துடன் மகனை அணைத்து விடுவித்தார்.

வில்வநாதன் மறுப்பதில்லை. தந்தையை அணைப்பதும் இல்லை.

மூன்று மாதங்கள் கழித்து மனைவி இன்று தான் அறைக்கு திரும்பியிருக்கிறாள். வில்வநாதன் குழந்தைகள் தூங்க காத்திருந்து மனைவியை அள்ளி கொண்டான்.

இருவரும் பால்கனி ஊஞ்சலில் இடம் பிடித்து கொள்ள, கணவனின் மடியில் அவனின் அழகி.

அருகில் இருந்தும், தொலைவில் நின்ற தேடலில் இருவரும் மற்றவரை விடாமல் இறுக்கி கொண்டனர்.

மீனலோக்ஷ்னி வில்லனின் நெஞ்சை ஆக்கிரமித்து கொள்ள, கணவன் அவள் சூடியிருந்த பூவை தள்ளிவிட்டு, மனைவியின் கழுத்தடிக்கடியில் முகம் புதைந்து கொண்டான்.

விரும்பும் மௌனம், இணைந்த கைகள், சரணடைந்த உள்ளங்கள் என்று அந்த நேரம் அவ்வளவு இனித்தது.

அடிக்கடி எட்டி பிள்ளைகளையும் பார்த்து கொண்டதுடன், மகள் சிணுங்கி திரும்ப தூங்கிய அழகில் இருவருக்கும் புன்னகை.

கார்த்திக் கைகள் தடவி தலையணையை கட்டி படுக்க, “உங்க நெஞ்சுல படுத்து பழக்கம்” என்றாள் மனைவி உர்ரென.

“நீயும் இப்போ அங்க தானே இருக்க? அப்புறம் என்ன” என்று அவளின் மூக்கை கடித்து வைத்தான் நல்லவன்.

“நீங்களும் மாமா மாதிரி தான் அவனை வளக்குறீங்க” என்று சிரிப்புடன் சொல்ல, வில்வநாதன் முகம் மாறியது.

“அவர் என்னை விட்ட மாதிரி நான் என் பிள்ளைகளை  விட மாட்டேன்டி” என்றான் உறுதியாக, வைராக்கியமாக.

“மாமா உங்களை எப்போவும் விட்டதில்லை. தள்ளி இருந்தார். அவ்வளவு தான்” என்று சொல்ல, கணவனின் கோபம் அவன் பிடியில் தெரிந்தது.

அவனின் அழகியை முழுதும் தன் கைகளுள் வைத்து நெருக்க, “இப்போ பனிஷ்மென்ட் கொடுக்கிறீங்களா என்ன?” என்று கேட்டாள் மனைவி.

“ஆமா. நீ அதை தானே எப்போவும் கேட்கிற” என்று குரல் உயர்த்த,

“என் மனசுல உள்ளதை நான் தான் பேச செய்வேன்” என்றவள் விரல் என்னமோ கணவன் நெஞ்சை வருடிவிட்டு கொண்டிருக்க, “மாமாவை கட்டிபிடிச்சா தான் என்ன?” என்று பல நாள் ஆதங்கத்தை கேட்டாள்.

“அவருக்கு தேவைன்னா அவர் கட்டி பிடிக்கட்டும். நான் வேணா சொல்லலையே” என்று தோள் குலுக்கினான் வில்லன்.

“ரொம்ப தாராள மனசு உங்களுக்கு” என்று மனைவி நொடித்து கொள்ள,

“விட்டு போனவர் தான் திரும்ப தேடி வரணும்” என்று தயாளனின் மகனாக நின்றான்.

“இத்தனை வருஷம் ஆகியிருக்கு உன் மாமா என்னை கட்டிப்பிடிக்க? என்கிட்ட கேட்டுட்டு நிற்பார். நான் எப்படி அவர்கிட்ட போவேன்? மாட்டேன். அவருக்கு நான் வேணும்ன்னா அவர் வரட்டும்” என்றான் அவன் திமிரில்.

மீனலோக்ஷ்னி அவன் கோவத்தில், திமிரில் ரசனையும் கொண்டாள், கடுப்பும் ஆனாள். “மாமா உங்களை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டம்” என்றாள்.

“ஏன் நீ என்னை சமாளிக்கலை” என்று அவளின் நெருக்கத்தை, மார்பின் மீதான அவளின் வருடலை பார்த்தான்.

மீனலோக்ஷ்னிக்கு அவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

எப்போது வில்வநாதன் கோவம் கொண்டாலும் அவனை வருடி, அணைத்து அவனுடனே தான் நிற்பாள் பாண்டி நாட்டு மீனாள். தள்ளி சென்றது இல்லை.

அதையே தான் தயாளனிடமும் வில்வநாதன் எதிர்பார்த்திருக்கிறான். அவர் செய்ய தவறி, இன்று அதில் வெற்றி கண்டிருக்கிறார் மனிதர்.

“நான் விலகினாலும் நீங்க என்னை விட கூடாது. ஏன் விடுறீங்க? உங்களுக்கு நான் வேணும் தானே?” என்று கேட்க, மீனலோக்ஷ்னி கலங்கிவிட்ட கண்களுடன் கணவனை அணைத்து கொண்டாள்.

“இரண்டாவது குழந்தை வேணும்ன்னு மாமாக்காக தான் ஆசை பட்டீங்களா?” என்று அவன் முகம் பார்த்து கேட்க,

“எனக்காக” என்றான் அவன்.

“பொண்ணு வேணும்ன்னு ஆசைப்பட்டதும் உங்களுக்காகவா?”

“ஏன் மிஸ்டர் அறிவழகன் பொண்ணு மட்டும் தான் பாண்டி நாட்டு அழகியா இருக்கணுமா? இந்த வில்வநாதன் பொண்ணு உலக அழகிடி. ஆராதனா என்னோட சூப்பர் பேபி” என்றான் சீண்டலாக.

மீனலோக்ஷ்னி கோவமாகி கணவன் மார்பிலே கடித்து வைக்க, “ஸ்ஸ்” என்று வலியில் அலறிய கணவனிடம்,

“உங்க பொண்ணு உலக அழகியா இருந்தாலும், உங்களுக்கு நான் தான் அழகி, நான் மட்டும் தான் அழகி. ஞாபகம் வைச்சுக்கோங்க” என்றாள் மிரட்டலாக.

வில்வநாதன் மனைவியின் கோபத்தை ரசித்து, திமிறியவளை அணைத்து கொண்டவன், “என் பொண்ணு வந்ததுக்கு அப்புறம் அவதாண்டி எனக்கு அழகி. எத்தனை முறை என்னை டென்சன் பண்ணியிருக்க, நான் என் அப்பாக்கு பொண்ணு, அப்படி, இப்படின்னு. இப்போ எனக்கும் பொண்ணு இருக்காடி” என்று நெஞ்சை நிமிர்த்தினான்.

அழகிக்கு பொறுக்க முடியாமல் நிமிர்ந்த நெஞ்சில் நன்றாக வலிக்க ஒன்று வைத்தாள். “இப்போவும் வலிக்கலை, மிஸ்டர் மாமனார் பொண்ணு அவ்வளவு வீக்” என்று இன்னும் வம்பிழுக்க,

“மிஸ்டர் வில்வநாதன் பொண்டாட்டியை பார்க்கிறீங்களா?” என்று கேட்ட மனைவி கணவனை ஊஞ்சலில் தள்ளி அவன் மேல் பாய்ந்து, அடித்து, கடித்து வைத்தாள்.

வில்லனுக்கு ஏகப்பட்ட உல்லாசம், உற்சாகம். “வலிக்கலை. வேஸ்ட், இப்போ அடிச்சியா என்ன?” என்று சீண்டியே நன்றாக மனைவியின் அருகாமையை, அவளின் கோவத்தை ரசித்தான்.

மீனலோக்ஷ்னி தான் சோர்வாகி அவன் மேலே படுத்து கொள்ள, வில்வநாதன் வாகாக மனைவியை தனக்குள் சேர்த்து கொண்டான்.

இருவரின் கைகளும் மற்றவரின் பிடித்த இடம் பற்றியிருக்க, கால்கள் நான்கும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்க, உதடுகள் அதன் ஜோடியை காந்தமாக இழுத்து கொண்டது.

மூச்சு வாங்க, நெஞ்சம் ஏறி இறங்க, உடைகள் கசங்க ஓர் ஆழ்ந்த முத்தம்.

பிடிக்கும், பிடிக்காது, ஒத்து வரும், ஒத்து வராது, விருப்பம் இருக்கு, விருப்பம் இல்லை என்ற எந்தவிதமான வரையறைக்குள்ளும் அடங்காமல் இணைந்த பந்தம் பாண்டி நாட்டு மீனாளுக்கு வில்வநாதன் எனும் வில்லனுடன்.

அழகு, பணம் இரண்டும் இவர்களிடையே நிரம்பி வழிந்த போதும், அதன் அளவீடு என்றும் வில்லன் அழகி இடையே எதிரொலித்தது இல்லை.

கணவன் எப்படியோ, அப்படியே அவனை ஏற்று கொண்ட பெண்ணை, ஆராதிக்க தெரிந்தவன் வில்வநாதன்!

மறுநாள் குடும்ப புகைப்படம் எடுக்கும் நிகழ்வு.

தனபாலன், கஜலக்ஷ்மி இருவரும் முகம் கொள்ளா பூரிப்புடன் கொள்ளு பேரன், பேத்தியை தங்களின் மடியில் வைத்திருக்க. அவர்களுக்கு பின்னால் தயாளன், மீனலோக்ஷ்னி தம்பதி.

தயாளனும், மகனும் அருகருகே நிற்க, அவர்களுக்கு மறுபக்கம் பானுமதியும், மீனா பெண்ணும்.

தயாளன் எட்டி மகனின் தோளில் கை போட்டு நிற்க முயல, அவரின் மகனோ அவரின் தலைக்கு மேல் அல்லவா நிற்கிறான்.

இரண்டொரு முறை எட்டி நிற்க முயன்று, மனிதர் சோர்ந்து போனார்.

மீனலோக்ஷ்னி, பானுமதி இதை கவனித்து முகம் வாடி போக, புகைப்படம் பதிவாக ஆரம்பித்த நேரம்,

“இருங்க” என்ற வில்வநாதன் மூச்சிழுத்து விட்டு கொண்டான். அவனின் கை சிறிது சிறிதாக உயர்ந்து, தந்தையின் தோளோடு அணைத்து கொண்டது.

தயாளன் அதிர்ந்து, ஆச்சரியம் கொண்டு, ஆனந்தத்தில் கலங்கிவிட்ட விழிகளுடன் மகனின் தோள்களில் சாய்ந்து விட்டார்.

பானுமதி மகிழ்ச்சியில் மின்னிய கண்ணீருடன் கணவன், மகன் நெருக்கத்தை பார்த்து நிற்க, தனபாலன், கஜலக்ஷ்மிக்கு அவ்வளவு ஆனந்தம்.

மீனலோக்ஷ்னி, “சூப்பர்ங்க” என்று கை தட்டி ஆர்ப்பரிக்க, வில்வநாதன் தன் இரு கைகளையும் முழுதும் விரித்து மனைவி, அம்மாவையும் தன்னுடன் சேர்த்து கொண்டான்.

வில்வநாதன் கையணைப்பிலே புகைப்படம் பதிவாக, அவர்கள் குடும்பத்தின் மிகசிறந்த புகைப்படமாக அவர்கள் தலைமுறைக்கு நிற்கும்.

பாண்டி நாட்டு மீனாள் அவளின் வில்வநாதனோடு என்றும் நிறைவாக வாழ்வாள்!