“உங்களோட போங்க” என்று மீனலோக்ஷ்னி கடுப்பாக மறுபக்கம் திரும்ப,
“இங்க வாடி” என்று அவளை பக்குவமாக இழுத்து தன் தோளில் போட்டு கொண்டான்.
அடுத்த சில வாரங்களில் மீனலோக்ஷ்னி பிரசவத்திற்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டாள்.
வில்வநாதன் கைகளை கட்டி அழுத்தமாக நின்றிருக்க, தயாளன் மகனின் அருகிலே இருந்தார்.
கஜலக்ஷ்மி ஒருமாதிரி பதட்டத்துடன் வேர்த்து போக, “ம்மா. என்னாச்சு உங்களுக்கு?” என்று பானுமதி கவனித்து கேட்க, வில்வநாதன் நொடியில் பாட்டியிடம் சென்று அவரை அணைத்து கொண்டான்.
“பானு அத்தைக்கு குடிக்க கொடு” என்று தயாளன் சொல்ல.
“இல்லை. வேணாம்” என்று உடனே மறுத்துவிட்டார் கஜலக்ஷ்மி.
“லட்சுமிமா. தயவு செஞ்சு உன் விரதத்தை விட்டு தண்ணீர் குடிமா. எங்களை பயமுறுத்தாத” என்று தனபாலன் மனைவியிடம் கெஞ்சி கேட்டார்.
“விரதமா? என்ன தாத்தா சொல்றீங்க?” என்று வில்வநாதன் கோபம்கொள்ள,
“ராசா அவளுக்கு கொஞ்சம் பயம். இரண்டாவது குழந்தை பிறக்கிறது பத்தி. அதான்” என்று தனபாலன் தயங்கி முழுங்க,
“அம்மா. என்ன இது? அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்க முதல்ல தண்ணீர் குடிங்க” என்று பானுமதி அம்மாவிடம் போராடவே செய்தார்.
கஜலக்ஷ்மி ஒரே பிடியாக நின்றுவிட, குடும்பத்தினருக்கு தான் இரண்டு பக்கமும் கவலை.
மேலும் சில நிமிடங்கள் சென்று குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடன் மீனலோக்ஷ்னியும் நன்றாக இருக்கிறாள் என்று சொன்ன பிறகே, குடும்பத்தினர் முழுதாக மகிழ்ந்தனர்.
வில்வநாதனின் நெருக்கிய தொண்டை குழி ஆசுவாசம் கண்டதுடன் கண்களை இறுக்கமாக மூடி திறந்தான்.
“பொண்ணு பிறந்திருக்காங்க” என்று மருத்துவர் சொன்ன நொடி, வில்வநாதன் கண்கள் தன்னை போல் அப்பாவிடம் சென்றது. தயாளனுக்கு உச்சகட்ட பரவசம்.
“குழந்தையை வாங்கிக்கோங்க” என்று சொல்ல,
“அவர்கிட்ட கொடுங்க” என்று வில்வநாதன், தன் தந்தை பக்கம் கை நீட்டினான்.
தயாளன் அதிர்ந்து மகனை பார்த்தார். மிகவும் விறைத்து, சிவந்த முகத்துடன் அவரை பார்த்திருந்தான் மகன்.
என்னமோ தந்தைக்கு மனது அப்படி பிசைந்தது. கண் முன் இருந்த பேத்தியை வாங்காமல் வேகமாக மகனை நெருங்கியவர், பட்டென அவனை அணைத்து கொண்டார்.
கண்களில் கண்ணீர் வேறு ஏனென்று தெரியாமல் வழிந்து மகனின் தோளை நனைத்தது.
வில்வநாதன் கைகளை இறுக்கமாக மூடி, சிலையாக நின்றிருக்க, அவனின் கண்கள் மட்டும் அவன் பேச்சை கேட்காமல் கலங்கியது.
“வில்வா. டேய் தம்பி” என்று மகன் நெற்றியில் முத்தம் வைத்து, அவன் தோள் தட்டி திரும்ப அணைத்து கொண்டார் தயாளன்.
அவருக்கு தாங்க முடியவில்லை. அழுகையா? சந்தோஷமா? வருத்தமா? குற்ற உணர்ச்சியா? எதுவோ ஒன்றா இல்லை எல்லாம் சேர்ந்தா? காரணத்தை தேடாமல், மகனை தேடி நின்றார் தந்தை.
அவ்வளவு நெருக்கமான அணைப்பு. போதா தழுவல்!
மகனின் உச்சி முதல், பாதம் வரை வருட தந்தைக்கு தவிப்பு. வருடியும்விட்டார். நிமிடத்தில் மகனுக்கு அத்தனை முத்தமும் வைத்தார்.
அவரின் கட்டுப்பாட்டிலே அவர் இல்லை. இருக்கும் இடம், சுற்றி இருக்கும் ஆட்கள் எதுவும் அவருக்கு நினைவில் இல்லை.
அவர் விட்டு சென்ற மகன், அவரை விட்டு தள்ளி நிற்கும் மகன் மட்டுமே அவரின் நினைவில் நின்றான்.
“வில்வா. சாரி வில்வா. அப்பாவை மன்னிச்சுக்கோ சாமி. உன்னை விட்டுட்டேன். நான் அப்படி பண்ணியிருக்க கூடாது. நல்ல அப்பாவே இல்லை நான்” என்று மறுகி புலம்பினார் மனிதர்.
வில்வநாதனுக்குள் பலத்த சத்தத்துடன் எதோ, எங்கோ உடைய, அதன் வலி அவன் கண்களில் தெரிந்தது.
தந்தையின் கண்ணீர் முகத்தை பார்க்க அவன் துணியவில்லை. அழுத்தமாக கண்களை மூடி நின்றிருந்தான்.
தயாளனுக்கு அதுவெல்லாம் தெரியவில்லை. மகனை விடாமல் அணைத்து பிடித்து கொண்டார்.
விட்டால் மகன் திரும்ப என்னை நெருங்க விட மாட்டான். எனக்கு அவன் வேண்டும், அவன் அணைப்பு வேண்டும். வயதை மறந்தவராய் பரிதவித்து நின்றார் தயாளன்.
பானுமதிக்கு இதை பார்க்க, பார்க்க வெடித்து வந்தது அழுகை. ஓர் கட்டத்தில் அவரின் அழுகை சத்தமாக கேட்க, வில்வநாதன் கண்களை திறந்து அம்மாவை பார்த்தான்.
தனபாலன் அவரின் மகளை தாங்கி நின்றிருந்தார். இப்போது மட்டுமில்லை எப்போதும் அவர் அப்படி தான். மகன், கணவன் இருவரும் பிரிந்த நேரம் பானுமதியை அதிகம் தாங்கியது தனபாலன்.
அவள் என்ன பண்ணாலும் என் பொண்ணு. யார் விட்டாலும் அவளை நான் விட மாட்டேன் என்பதாய் நின்றார் அந்த தந்தை.
அறிவழகன் தம்பதிக்கு தன்னை போல் கண்ணீர் வர, கஜலக்ஷ்மி தான் சுதாரித்தார்.
“மாப்பிள்ளை. உங்க பேத்தியை வாங்குங்க. வாங்க” என்று மருமகனை சத்தமாக அழைத்தார்.
தயாளன் மகனை விடாமல் நிற்க, கஜலக்ஷ்மி மருமகன் கை பிடித்து அழைத்து சென்று அவர்களின் குட்டி இளவரசியை வாங்க வைத்தார்.
தயாளனுக்கு கைகள் அவ்வளவு நடுக்கம் கண்டது. உதறினார் மனிதர். முழு மகிழ்ச்சி மட்டுமே இல்லாமல் ஏதேதோ அவருக்குள்.
வில்வநாதன் மகளையும், அப்பாவையும் பார்த்திருக்க, பானுமதி தன்னை மீட்டு கணவரோடு சேர்ந்து பேத்தியை பாதுகாத்தார்.
தயாளன் நெஞ்சோடு அவரின் இளவரசியை வைக்க, அவளும் அழகாக தாத்தாவிடம் சேர்ந்து கொண்டாள்.
“பாப்பா, பாப்பா” என்று அறிவழகன் கையில் இருந்த கார்த்திக் குதிக்க,
“வாடா தங்கம். வா. வா” என்று கஜலக்ஷ்மி கொள்ளு பேரனுக்கு, தன் கொள்ளு பேத்தியை காட்டி மகிழ்ந்தார்.
குழந்தை தயாளன் கையிலே இருக்க, எல்லாம் பார்த்து கொண்டனர்.
வில்வநாதன் மட்டும் இருக்குமிடம் இடம் விட்டு அசையாமல் போக, பானுமதி மகனுக்கு அருகில் அவனின் மகளை கொண்டு சென்று காட்டினார்.
மறைத்த கண்களை சிமிட்டி மகளை கண்டவனுக்கு அவனின் அழகி தான் தெரிந்தாள். அவன் பிரம்மை மட்டுமில்லாமல், விருப்பமும் அது தான். ஆசையும் அது தான்.
மீனலோக்ஷ்னி அறைக்கு மாற்றப்பட, வில்வநாதன் மனைவியின் நலம் பார்த்து மூச்சிழுத்து விட்டு கொண்டான்.
கஜலக்ஷ்மியின் பயம் அவனையும் அச்சப்படுத்தியிருக்க, மனைவியின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம்.
“என்னாச்சு?” என்று அவனின் அழகி கணவனை கவனித்து கேட்க,
“ஏன் நான் முத்தம் கொடுக்க கூடாதா?” என்று கேட்டு சண்டைக்கு நிற்க, போயா என்று இவள் தான் சோர்வில் தூங்கி போனாள்.
பிரசவம் முடிந்து நேரே மாளிகைக்கு தான் வந்தனர். சுஜாதா மகளுடன் இருந்து கொண்டார்.
சில வாரங்கள் கடந்ததே தெரியாமல் முடிந்து போயிருக்க, அவர்களின் இளவரசி பிறந்ததிற்கு விருந்து வைத்தனர். இதையும் மிக பிரம்மாண்டமாக அமர்களப்படுத்தினான் தந்தை.
இந்த சில நாட்களிலே வில்வநாதனின் மகள் எல்லோருக்கும் செல்ல பிள்ளையாகி போனாள். நான்கு வயது கார்த்திக் தங்கை பிறந்ததும் அண்ணனாக வளர்ந்து போக, பாப்பா என் பொறுப்பு என்று சுற்றி கொண்டிருந்தான்.
தயாளனுக்கு தோளில் பேரனோ, பேத்தியோ யாரோ ஒருவர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
மீனலோக்ஷ்னி இடைப்பட்ட வருடங்களில் PHD முடித்து, அவர்களின் கல்வி குழுமத்தில் இயக்குனராக பணி புரிந்து கொண்டிருக்கிறாள்.
வில்வநாதன் சொன்னது போல் மகன் பிறந்த நேரம் பள்ளி திறந்திருக்க, இப்போது மகளுக்காக முன்பிருந்த ட்ரஸ்டை இன்னும் பெரிதாக செய்ய திட்டமிட்டிருக்கிறான்.
மீனலோக்ஷ்னிக்கு சிறப்பு புடவையை வரவைத்து அவளை அலங்காரம் செய்ய ஆட்களையும் வர வைத்தார் கஜலக்ஷ்மி.
“பாட்டி எனக்கெதுக்கு ப்ளீஸ்” என்று அவள் மறுக்க,
“நீ தான் எங்க ராஜாவோட ராணி. உனக்கு பண்ணாம” என்று கஜலக்ஷ்மி முடித்துவிட்டார்.
பாண்டி நாட்டு அழகிக்கு எதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை.
மாளிகையின் ஜொலிப்பிற்கு அவள் முக்கிய காரணம். அவள் தான் எல்லாம் செய்தாள் என்றில்லாமல், அவள் இல்லாமல் எதுவும் இல்லை என்பதை மிகவும் ஆழமாக நம்பினார்கள் கஜலக்ஷ்மி தம்பதி.