தென் பாண்டி மீனாள் 22

வில்வநாதனின் அழகிக்கு அவன் வேண்டும். அவன் மட்டுமே வேண்டும்!

எந்தவிதமான நியாய, அநியாயங்களும் அவளுக்கு வேண்டாம். எதையும், யாரையும் யோசிக்கும் நிலையில் கணவன் அவளை வைக்கவில்லை.

முற்றும் முழுதாக அவனை மட்டுமே நினைக்க வைக்கிறான். எதிலும் அவனின் நலத்தையே யோசிக்க வைக்கிறான்.

இப்போதும் மாமனார், மாமியார் பக்கம் இருக்கும் நியாயம், கணவனின் கோவம் எதுவும் அவளுக்கு தேவையில்லை.

கணவன் விடும் வார்த்தைகள், அவனை அவனே வருத்தி கொள்வது தான் மனைவியை துடிக்க வைக்கிறது. 

யார் இருக்கிறார்கள், என்ன நினைப்பார்கள், ஏன் கணவனே கூட கோவம் கொள்வானோ என்ற எந்த நினைவும்  இல்லாமல் கணவனை அடித்து கொண்டிருக்கிறாள்.

அவனின் மார்பு அவளுக்கே துடிப்பது போல், அதை விடாமல் பிடித்து கொள்பவள் போல், அங்கேயே தான் கை வைத்திருக்கிறாள்.

வில்வநாதனுக்கு மனைவி உணர்ச்சி வசப்பட்டிருப்பது புரிந்து போனது.

உணர்வுகளின் ரோலர் கோஸ்டர் அவனுக்கு நன்றாகவே பழக்கம், ஆனால் அவனின் பாண்டி நாட்டு பெண்ணுக்கு இல்லையே!

மனைவியின் அடியை வாங்கி கொண்டவன், “போதும்டி. உன் மாமனார், மாமியார் தான் என்னை பேச வைக்கிறாங்க” என்றான் அப்போதும் அவர்களை விடாதவனாய்.

“அவங்க பேசினா நீங்களும் பேசணுமா? அவங்க அப்பாம்மா, நீங்க பேச கூடாது” என்றாள் கண்டிப்புடன்.

“நான் பேசுவேன்டி. அதென்ன அவங்க பேசலாம், நான் பேச கூடாது. என்ன உன் மாமாக்கு சப்போர்ட்டா?” என்று எகிறினான் வில்வநாதன். 

“வில்வா. டேய். மருமக பொண்ணு உனக்காக பேசறாடா. கொஞ்சம் நிதானமா இரு” என்றார் தயாளன். 

மருமகள், மகனின் அன்பு அவரின் வேதனையை குறைத்தது நிஜம். 

தாத்தா, பாட்டி, பானுவும் கூட மீனலோக்ஷ்னியின் கோவத்தில், வில்வநாதனின் சமாதானத்தில் அவர்களையே தான் பார்த்திருந்தனர்.

மாளிகையின் ராஜா கோவப்படும் நேரங்களில் எல்லாம் அவனிடம் கெஞ்சி தான் சமாதானம் செய்வர். முதல் முறையாக அவனின் ராணி அவனையே அடி கொடுத்து கண்டித்து கொண்டிருக்கிறாள்.

எப்படி தடுப்பர் அதை? அதற்கு முன்னான பேச்சுக்கள் எல்லாம் கூட இதற்கு முன் எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும்.

பல வருட கோவத்தை எல்லாம் நொடியில் தூக்கியெறிய முடியாது என்பது பானு தம்பதிக்கும் புரியும்.

ஆனாலும் மகன் மேல் ஏக்கம் கொண்ட மனது அவர்களை ஏதேனும் பேச வைத்துவிடுகிறது. எதிர்வினையாக மகனும் திருப்பி கொடுக்கிறான். அதை தாங்கும் மனது தான் அவர்களுக்கு இருப்பதில்லை.

 இப்போதும் மாற்றி, மாற்றி காயம் வாங்கி கொண்டவர்களுக்கு மருமகளின் செயல், காயத்தின் மீது வெண்ணெய் வைத்தது போல் குளிர்ந்து போனது.

மீனலோக்ஷ்னி கோவத்தையும், ராஜா அவளிடம் அடங்கி சமாதானம் செய்வதையும் ரசித்து பார்த்தனர் பெரியவர்கள்.

வில்வநாதனுக்கு அப்பா சொன்னது இன்னும் பொங்க வைக்க, “உங்க மருமகளை இப்போ என்ன பண்ணிட்டேன் நான்? நிதானமா இருன்னு என்கிட்ட சொல்றீங்க. இவளை பாருங்க என்ன அடி அடிச்சிட்டு இருக்கான்னு” என்றான்.

“நீங்க பேசினது தப்பு, ஏன் பேசுறீங்க அப்படி?” என்று மனைவி கணவனை கேட்டாள்.

“ஏண்டி அவங்க பேசினதை நீ கேட்கவே இல்லையா?” கணவன் ஆதங்கம் கொண்டான்.

“அவங்க பேசினது தப்புன்னு பாட்டி கண்டிச்சுட்டாங்க தானே? அப்புறம் நீங்க ஏன் பதிலுக்கு பேசணும்?” என்று அதிலே நின்றாள்.

“என்கிட்ட மட்டும் கோவப்படுற? அவங்க இனி இப்படி பேச கூடாதுன்னு அவங்ககிட்ட நீ சொன்னியா?” என்றான்.

“பேச மாட்டாங்க. ஆமா தானே அத்தை?” என்று பானுமதியிடம் கேட்டு நின்றாள் மருமகள்.

“பேசவே மாட்டேன்” என்று பானுமதி உடனே இரு கைகளையும் தூக்கி விட்டார். 

இவ்வளவு நடந்த பின்னும், மகன் இவர்களிடம் உறுதி வாங்குவது பெற்றவர்களுக்கு புரிய, இதை விடவா அவன் காட்டும் பாசம் இனித்து விட போகிறது? 

பானுமதியும், தயாளனும் உணர்ந்து, ஆறுதலாக மற்றவர் கையை பற்றி கொண்டனர்.

மகன் கண்களில் அது படாமல் போகுமா என்ன? 

அப்பாம்மாவை ஒன்றாக முறைத்து வைத்தவன், “அவங்களே அங்க கை பிடிச்சுட்டு நிக்கிறாங்க. நீ இன்னும் என்னை அடிக்கிறதை விடலை” என்றான் மனைவியிடம் கடுப்பாக.

மீனலோக்ஷ்னி கை வலி கண்டதால் நிறுத்தி கொண்டவள், அப்போதும் கணவனை மூக்கு விடைக்க பார்த்து நின்றாள்.

கஜலக்ஷ்மி பேரனின் தோள் பற்றி கொண்டவர், “கோவத்துல கூட வார்த்தையை விடாத ராஜா. நாங்க யாரும் தாங்க மாட்டோம்” என்றார்.

தனபாலனும் வருத்தத்துடன் நிற்க, இருவரையும் அணைத்து கொண்டவன், “உங்க மூணு பேருக்காக மட்டும் இனி அப்படி பேச மாட்டேன்” என்றான். 

அவனை பெற்றவர்களுக்கு அதுவே போதும்!

“லக்ஷ்மி மேடம்” என்று பேரன் குரல் கொடுக்க,

“பானு. உனக்கும் இதுதான் கடைசி வார்னிங். உன் வாயில இருந்து எக்குத்தப்பா பேச்சு வந்துச்சு, நீ என் பேரனுக்கு கொடுக்கிறயோ இல்லையோ நான் உனக்கு நாலு கொடுத்துடுவேன். ஞாபகம் வைச்சுக்கோ” என்றார் மகளிடம் அறிவுறுத்தலாக.

“சாரிம்மா” என்று பானு உடனே கேட்டுக்கொள்ள, மகன் அவரை பார்த்து மிதப்பாய் புருவம் தூக்கினான்.

“உங்க மகனுக்கு ஓவர் திமிருங்க” என்று தயாளனிடம் பொருமி கொண்டார் பானுமதி.

தந்தைக்கு மகனின் அந்த திமிரை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. வலிக்க வைக்கிறான். ஆனாலும் மகனை ரசித்தார் தந்தை.

அதன் பின் மிகவும் கவனமான பேச்சுகளுடன் இரவு உணவையும் முடித்து அறைக்கு திரும்பினர் புதுமண தம்பதிகள்.

மீனலோக்ஷ்னி கைக்கு கிடைத்த உடையுடன் அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

வில்வநாதன் குளியல் போட்டு வர மனைவியை காணவில்லை.

“இந்த நேரத்துக்கு எங்க போனா?” என்று தேடி, கேமராவில் பார்க்க, அவனின் அழகி பக்கத்து வீட்டில் இருக்கிறாள்.

“இதென்ன?” என்று அவன் இறங்கி போக, பெரியவர்கள் எல்லாம் அறையில் இருந்தனர்.

மீனலோக்ஷ்னி அங்குள்ள ஏதோ ஒரு அறையில் இருக்க, தேடி கண்டுபிடித்து அவள் முன் நின்றான் கணவன்.

அப்போது தான் குளித்து வந்தவள், கணவனை கண்டுகொள்ளாமல் போக, “ஓய் என்ன?” என்று அவளை வழி மறைத்து நின்றான் வில்வநாதன்.

உங்ககூட பேச மாட்டேன் என்பதாய் முக திருப்பல். கணவனுக்கு வெகுவான சுவாரசியம். இதழ்கள் தன்னை மீறி புன்னகைத்து விட, கண்டுகொண்ட மனைவிக்கு கோவத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.

“ஓய் ஓய். ரிலாக்ஸ்” என்று அவளின் கன்னங்களை பற்ற போக,

“ஒன்னும் வேணாம் போங்க” என்று அவனின் கை தட்டிவிட்டாள்.

“சரி வேணாம். இங்க ஏன் மேடம் வந்தீங்க?” என்று கேட்க,

“என் வீட்டுக்காரர் இனி இந்த வீட்ல தான் இருக்கணும்ன்னு சொன்னார். அதான்” என்றாள்.

“ஓஹ் புருஷன் பேச்சை கேட்கிற? ஆனா அது சொல்லி எத்தனை நாள் ஆகுது. இப்போ தான் என் பொண்டாட்டிக்கு ஞாபகம் வருதா?” என்று கிண்டலாக கேட்க,

“எப்போ வந்தா என்ன? இனி நான் இங்க தான் இருப்பேன்” என்றாள்.

“ஆனா இப்போ உன் வீட்டுக்காரருக்கு மனசு மாறிடுச்சு. மாளிகைக்கே திரும்பலாம்ன்னு நினைக்கிறான்”

“அவர் வேணா மாளிகைக்கு ராஜாவா இருந்து எந்நேரமும் சண்டை போட்டுட்டு இருக்கட்டும். எனக்கு அந்த தெம்பு இல்லை” 

“தெம்பு தான் பிரச்சனைன்னா நான் கொடுக்கிறேன்டி உனக்கு” என்று அவளை நெருங்க,

“கிட்ட வந்தீங்க கடிச்சு வைச்சிடுவேன்” என்றாள் மிரட்டி.

“கடி. ஐம் வெய்ட்டிங் மேடம்” என்று இரு கைகளையும் விரித்து நின்றான் நல்லவன்.

மீனலோக்ஷ்னி போயா என்பது போல் விலகி நடக்க, அப்படியே அவள் இடையில் கை கொடுத்து மனைவியை அள்ளிவிட்டான். 

“என்ன பண்றீங்க நீங்க? இறக்கி விடுங்க முதல்ல” என்று அழகி அவன் கையில் துள்ள,

“அமைதியா இரு. இல்லை இரண்டு பேரும் கட்டில்ல எக்குத்தப்பா ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்து வைப்போம், உதடும் அங்க, இங்க படும். கை, காலும் சொல் பேச்சு கேட்காது. பார்த்துக்கோ” என்றான் மிரட்டலாக.

“கட்டில் இருக்கு அங்க. பேச்சை பாரு” என்று மனைவி முகம் திருப்ப,

“பாய்ஞ்சு போய் கூடத்தான் விழுவேன். ட்ரை பண்ணி பார்ப்போமா?” என்று கேட்டான் நல்லவன். 

“ஒன்னும் வேணாம் போங்க” என்று சோர்ந்து போய் இறங்க, தன் கைப்பிடியிலே நிற்க வைத்து கொண்டவன், “என்னடி?” என்றான்.

“நான் அப்படி பேசியிருக்க கூடாது தான். ஆனா அவங்களோட நியாயம் எனக்கு அநியாயம் ஆச்சே? நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டான்.

மீனலோக்ஷ்னி அமைதியாக இருக்க, “ஓய் என்ன?” என்று அவளின் இடை இறுக்கினான்.

“நான் இதுக்கு சொல்ற பதில் கண்டிப்பா உங்களை கோவப்படுத்தும். சோ வேணாமே” என்றாள்.

“உன் சப்போர்ட் எப்போவும் அவங்களுக்கு தான் இல்லை” வில்வநாதனின் உடல் இறுக்கம் காண ஆரம்பிக்க,

கணவனை அணைத்து கொண்ட மனைவி, “என் வில்லன் இப்படி கஷ்டப்படுறது எனக்கு வருத்தமா இருக்கு. அவருக்கான நியாயம் எனக்கு தெரியும். ஆனா அவங்க என் ஆளோட அப்பாம்மா. அவங்களை எப்படி நான் யோசிக்காம இருக்க முடியும்?” என்று கேட்டாள்.

வில்வநாதனுக்கு அவளின் வார்த்தைகளில் கோவத்தை இழுத்து பிடிக்க தான் வேண்டியிருந்தது. 

மனைவி அவன் கன்னத்தை தன் கையால் தாங்கி கொண்டவள், “இனி நாம தலை கீழா நின்னாலும் இதை எல்லாம் மாத்த முடியாது தானே? அப்புறம் ஏன் நம்மை நாமே கஷ்டப்படுத்திக்கணும்?”

“நீங்க சிரிச்சா நாங்க சிரிப்போமா தெரியாது. ஆனா நீங்க கஷ்டப்பட்டா, உங்களுக்கு மேல, இந்த வில்லனை விட அதிகமா நாங்க வாடி போயிடுவோம்”

“சோ இந்த வில்வநாதன் எங்களை நினைக்கணும். கோவத்தை கொஞ்சம் குறைக்கணும்” என்றாள்.