“மீனா பொண்ணு என்ன பேசுற நீ?” கஜலக்ஷ்மிக்கு கோவம். “இந்த வீட்டோட மருமகள் நீ. என் ராஜாக்கு எல்லாம் நீ தான். அவனோடது எல்லாம் உன்னோடது தான். இதுல வேணும், வேணாங்கிறது எல்லாம் எங்கிருந்து வருது?” என்று கடிந்து கொண்டார்.

“லட்சுமி நீ அமைதியா இரும்மா. என் பேத்திகிட்ட நான் பேசுறேன்” என்று தனபாலன் மனைவியை அடக்கியவர், “எனக்கு வந்த ஷேர்ஸ் எல்லாம் என் மாமனார் எனக்கு கொடுத்ததுமா” என்றார்.

“உன் பாட்டி வேற ரகம். ஆனா அவங்க அம்மா அப்படி இல்லை. என் மாமனார் ரொம்ப அடங்கி தான் இருக்கணும். வசதி இல்லை. ஆனா புத்திசாலி. அவர் முன்னெடுத்து ஆரம்பிச்சு, கடுமையா உழைச்சு சேர்த்த தொழில் பங்குங்களை தான், நான் உனக்கு கொடுத்தது”

“நான் என்னோட பேரனுக்கு கூட அதை கொடுக்கலை. இந்த வீட்டுக்கு வர மருமகனுக்கு கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனா என் மாப்பிள்ளை முடியவே முடியாதுன்னுட்டார். இப்போ உனக்கு கொடுத்திருக்கேன். உனக்கு புரியாதும்மா, நான் எவ்வளவு சந்தோஷமா அதை உனக்கு கொடுத்தேன்னு” என்றார் தனபாலன். 

மீனலோக்ஷ்னிக்கு இதை கேட்டு இன்னமுமே சுணக்கம். “என்னால அந்த ஷேர்ஸ்க்கு நியாயம் செய்ய முடியும்ன்னு தோணலை தாத்தா” என்றாள் மனதை மறையாமல்.

“என் பேரன் அதை பார்த்துப்பான்மா. நீ பங்கை முழு மனசா ஏத்துக்கிட்டாலே எனக்கு போதும்” என்றார் தனபாலன்.

பேத்திக்கு முகம் தெளிவேனா என்றது. தயாளன் கண்டுகொண்டவர், “எதையும் திணிக்க கூடாது இல்லை மாமா” என்றார்.

“மீனா பொண்ணுக்கு பிடிக்கலைன்னா விட்டுடலாமே” என,

“உங்களை விட்ட மாதிரியா?” என்று கஜலக்ஷ்மி கேட்டுவைத்தார்.

தயாளன் அவரை பார்க்க வேண்டுமே? பானுவை அவர் பிரிந்ததில் இருந்து, மாமியார் அவர் மேல் கடுங்கோவத்தில் இருக்கிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும். 

தனபாலன் பேச்சு வாங்குவதும் இவரால் தானே?

“வீட்டுக்கு வர மருமக, மருமகனை எல்லாம் விட்டுடணும்ன்னா, இந்த கல்யாணத்தை ஏன் பண்ணிக்கணும்?” என்று மேலும் கேட்க,

“அத்தை கல்யாணங்கிறது விருப்பத்துல வரது, அதோட இதை சேர்க்காதீங்க” என்றார் மருமகன் பொறுக்க முடியாமல்.

“துணை மட்டும் வேணும். ஆனா அந்த துணைக்கு தோள் கொடுக்க மாட்டேன்னு சொல்றது தான் விருப்பமா?”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிடித்தம் இருக்கும் அத்தை”

“அப்படி ஆளுக்கொரு திசையில போனா என் பேரன் கதி தான் எல்லோருக்கும்” என்று பொங்கிவிட்டார் மாமியார்.

“அத்தை” என்ற தயாளனுக்கு மகன் பேச்சு வரவும் வார்த்தை வரவில்லை.

கணவனை சொல்லவும் மீனலோக்ஷ்னிக்கு தொண்டை அடைத்து போனது. “நீங்க உங்க மகனை யோசிக்கலையா மாமா?” என்று தன்னை மீறி கேட்டுவிட்டாள் மருமகள். 

அவளுக்குமே அதிர்ச்சி தான். மனவுளைச்சலோ, அப்பா பேசியதோ, பங்கு வந்ததோ ஏதோ ஒன்று, கேட்டுவிட்டாள்.

பெரியவர்களுக்குமே அவள் கேட்டது புதிது. தயாளனுக்கு மருமகள் கேட்டது நெஞ்சை குத்தியது உண்மை. அதே நேரம் மகனுக்காக அவள் கேட்பதும் மகிழ்ச்சி. 

“அவனை நான் யோசிக்கலைம்மா” என்றார் உண்மையாக.

மீனலோக்ஷ்னிக்கு கோவம் ‘அதெப்படி அவரை யோசிக்காமல் இருப்பார்?’

“எனக்கும், பானுக்கும் கல்யாணம் நடந்தப்போ, என் அண்ணா முதல் கொண்டு என்னோட சொந்தக்காரங்க எல்லாம் சொன்னது ஒன்னு தான். பணத்துக்காக தான் இந்த கல்யாணம்ன்னு”

“ஆனா என் காதல் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை, ம்ஹூம். கர்வம்!”

“எங்க காதலை பத்தி உங்ககளுக்கு என்ன தெரிய போகுதுன்னு கர்வமா நினைச்சேன். அந்த கர்வம் தான் என்னை உடைச்சு போட்டது”

“பல நேரம், பல இடத்துல வீட்டோட மாப்பிள்ளைங்கிற லேபிளை சுமந்திருக்கேன். கசப்பா இருக்கும். பிடிக்காது. பானுவுக்காக, என் மகனுக்காகன்னு பொறுத்துப்பேன்”

“ஆனா பானுவே என்னை அப்படி தான் நினைக்கிறாளான்னு தோண வைச்சது என் அண்ணனுக்கு பணம் கொடுத்த நேரம் தான்”

“அவ்வளவு கோவம். எனக்கு மரியாதை இல்லை, பானு என்னை  மதிக்க மாட்டேங்கிறான்ற விதை அங்க விழுந்துச்சு”

“அடுத்த கொஞ்ச நாள்ல என் அம்மா உடம்பு முடியாம போயிட்டாங்க. அண்ணி அவங்களை சரியா பாத்துக்கலை. பணம் மட்டும் அதிகமாவே என்கிட்ட தனியா, பானுகிட்ட தனியா வாங்கிடுவாங்க”

“நேர்ல பார்க்க போனப்போ தான் தெரிஞ்சு, ம்ப்ச். என்கிட்ட அவங்க சொல்லலை. நீயே வீட்டோட மருமகனா இருக்கிற, இதுல நானும் வரது நல்லா இருக்காதுன்னு உறுதியா மறுத்துட்டாங்க”

“என் அப்பா இல்லாம அம்மா எங்களை நல்ல படியா வளர்த்தாங்க. ஆனா நான் அவங்களுக்குண்டான எந்த கடமையும் செய்யலைங்கிற குற்ற உணர்ச்சி”

“அந்த நேரம் தான் பானுவும் மாத்திரை எடுக்கிறது தெரிஞ்சது. பேமிலி டாக்டர் சொன்னாங்க. டேப்ளெட் வேணாம், வேற வழி பாருங்கன்னு. என்னோட அதிர்ச்சியில எனக்கு இந்த விஷயம் தெரியாதுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க போல”

“நான் வெளியே வர முன்னவே, வீட்டோட புருஷங்கிற தைரியம் தான். இவருக்கு விஷயம் தெரிஞ்சு மட்டும் என்ன ஆகிட போகுதுன்னு ஏதேதோ பேசிக்கிட்டாங்க”

“என்னோட ஆசை, நம்பிக்கை இரண்டையும் உடைச்சுட்டா. இதுல காதல் எங்கிருக்குன்னு, மனசு அடிச்சு கேட்டுச்சு”

“அதுக்கு அப்புறமும் நிறைய முயற்சி, என் பக்கமும் அவள் பக்கமும்”

“அங்க என்னோட உறுதி தான் ஜெயிச்சது. என் கர்வம் என்னை யோசிக்க விடலை”

“பணம் இருக்க போய் தானே பானு என் நம்பிக்கையை உடைச்சுட்டான்னு ஏதேதோ வேண்டாத எண்ணம்”

“சொத்து இருந்தா அவளோட, அது என்னை கட்டுப்படுத்தாதுன்னு கோவம்”

“பானுவை மறந்துட்டேன், என் மகனை மறந்துட்டேன். இவங்க எனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு யோசிக்க நான் அப்போ ரெடியா இல்லை”

“ஒரு மாதிரி என்னை நானே கட்டாயப்படுத்தி தான் வெளியே போனேன். நான் பண்றது தப்புன்னு சொல்ல கூட யாரையும் நான் நெருங்க விடலை”

“கோவம், யார் யார் மேலயோ கோவம். பானு நிறைய போராடினா. குழந்தையில இருந்து அவளுக்கு ஊட்டி வளர்த்த வைராக்கியத்தை புரிஞ்சுக்க நான் தயாரா இல்லை”

“மகனை கூட்டிட்டு போகணும்ன்னு முடிவெடுத்து, மாமா, அத்தை சண்டை போட்டிருந்தா கூட தூக்கிட்டு போயிருப்பேன். ஆனா அவன் இல்லாம இவங்க இல்லைன்னு நிக்கவும், அவனையும் விட்டுட்டேன்”

“நான் என் மகனுக்கு முழு அப்பாவா இல்லை”

“ஆனா அவன் எனக்கு முழு மகனா மட்டுமே இருந்தான். வாடான்னு விரல் பிடிச்சிருந்தா போதும் எங்க வேணும்ன்னாலும் என்னோட வந்திருப்பான்”

“என் ஒருத்தனுக்காக இவங்களை ஏன் கஷ்டப்படத்தணும்? பணத்துலயும் நான் அப்போ ஒன்னும் இல்லை. இதே இங்கன்னா அவன் ராஜா, தொழில் சொத்துன்னு பல யோசனை”

“கொஞ்ச நாள்லே நான் அவனுக்கு பெரிய தப்பு பண்ணிட்டேன்னு என் மகன் எனக்கு புரிய வைச்சுட்டான். மனஅழுத்தம், கவுன்சிலிங்ன்னு, அதிகமா நான் நொந்துட்டேன்”

“திரும்பி அவனுக்காக வரலாம்ன்னா அவன் வீட்டை விட்டு கிளம்பிட்டான். இப்போவரை என்னை கிட்ட கூட சேர்க்க மாட்டேங்கிறான்” என்று மறுகி, குறுகி போனார் தந்தை.

கஜலக்ஷ்மிக்கு பேரன் எனவும் கண்கள் கலங்கி போனதுடன், “ராஜாக்கு எங்களை விட இவர் தான் முக்கியம்ன்னு எங்களுக்கே அப்போ தான் தெரிஞ்சது. அப்பான்னா உயிர் அவனுக்கு”

“இவ்வளவு வயசுக்கு அப்புறமும் கலங்கி நிக்கிறான். பார்க்க எங்களுக்கு தான் தெம்பில்லை”

“பேசாம அவனை மாப்பிள்ளையோட அனுப்பியிருந்தா அவன் சந்தோஷமா இருந்திருப்பான், எங்க மேல தான் தப்பு” என்றார் தனபாலன்.

“இல்லை தாத்தா. உங்க மேல எந்த தப்பும் இல்லை” என்ற குரல் மிக அழுத்தமாக ஒலித்தது.

மூவரும் அதிர்ந்து பார்க்க, பானுவும் வில்வநாதனும் நின்றிருந்தனர்.

“நான் வேணாம்ன்னு முடிவெடுத்தவரை விட நீங்க எப்படி தப்பாக முடியும்? என்ன பேசுறீங்க தாத்தா” என்று வெகு அலட்சியமாக கேட்டான் மகன்.

தயாளனுக்கு இன்னமும் முகம் சுருங்கி போனது. 

பானுமதி மகன் கை பிடித்து கட்டுப்படுத்த முயல, “மாம்” என்று அவரின் கைக்கு மேல் தன் கை வைத்து பிடித்து கொண்டான் மகன்.

“மாம் உங்க காதல் கணவரை நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். கூல் மாம்” என்றவன், “இப்போ எதுக்கு இந்த டாப்பிக். டைம் வேஸ்ட்” என்றான் தோள் குலுக்கி.

“வில்வா” என்று தந்தை பேச முனைய,

“நோ டாட். நாம பேச என்ன இருக்கு? இத்தனை வருஷமா கேட்ட அதே கதை தானே. போரிங்” என்றான்.

“வில்வநாதா. அவர் எல்லாம் உணர்ந்துட்டார்டா. தப்பு என் மேல தானே. புரிஞ்சுக்க தம்பி ப்ளீஸ்” என்றார் பானுமதி இறைஞ்சுதலாக.

“எஸ் மாம். அவர் உணர்ந்துட்டார், நீங்க தான் தப்பு. எனக்கு தெரியும். எல்லாம் தெரியும். ஆனா நான், என்னோட தப்பு என்னன்னு எனக்கு தெரியலை” என்றான்.

“ஒருவேளை உங்களுக்கு மகனா பிறந்ததா? இல்லை பிறந்ததேவா?” என்று கேட்டுவிட,

“என்னங்க” என்று மீனலோக்ஷ்னி குரல் நொடியும் இல்லாமல் கண்டிப்புடன், வேகமாக வந்தது.

“ராஜா என்ன பேசுற நீ?” என்று கஜலக்ஷ்மி பேரன் தோள் பற்றி கொண்டார்.

அவன் பிறந்ததையே திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தவர்களாச்சே!

“ஓய் பொண்டாட்டி சில். இப்போ என்ன கோவம்?” என்று மனைவியை பார்த்து சொன்னவன், பாட்டியை தோளோடு அணைத்து கொண்டான்.

“லக்ஷ்மி மேடம் எனக்கு இதெல்லாம் பேசவே இன்ட்ரெஸ்ட் இல்லை, ஜஸ்ட் சும்மா கேட்டேன் அவ்வளவு தான்” என்றான்.

அவனின் கோவத்தை இப்படி கூட வெளிப்படுத்த முடியுமா? அலட்சியமாக, சுவாரஸ்யம் இல்லாதது போல்!

மனைவிக்கு அவன் குணங்கள் மலைக்க வைத்தது. உடன் அவனை புரிந்து, வருத்தமும் கொண்டாள்.

முடிந்தால் அவனை இறுக்கமாக அணைத்தும் கொள்வாள்!

பானுமதிக்கு கணவனின் வாடிய முகம் வலிக்க வைத்தது. “இன்னும் எங்களுக்கு எவ்வளவு தான்டா பனிஷ்மென்ட் கொடுப்ப?” என்று மகனிடம் கேட்டார்.

“நோ ஐடியா மாம்” என்றான் மகன் திமிராக.

“நாங்க அதுக்குள்ள இல்லாம போயிட கூடாதுன்னு வேண்டிக்கிறேன் வில்வநாதா” என்றார் அன்னை துயரத்துடன்

“பானு என்ன பேசுற நீ?” என்று பெற்றவர்கள் பதறி போக,

மகன் அந்த நொடி இறுக்கமாக நின்றவன், அடுத்த நொடி அங்கிருந்த டேபிளை உதைத்த உதையில் அது பல அடிகள் தள்ளி சென்று விழுந்தது.

“ஏங்க?” என்று மீனலோக்ஷ்னி, கணவன் மேலே கண்ணாக இருந்தவள் அவனிடம் ஓடி செல்ல, பெரியவர்கள் பதறிவிட்டனர்.

“ராசா. என்னப்பா இது?” என்று தனபாலன் பேரனின் கை பற்றி கொள்ள, 

கீழே குனிந்து கணவனின் காலை ஆராய்ந்த மீனலோக்ஷ்னி அவன் நெஞ்சில் கை வைத்து. “ப்ளீஸ்ங்க. ப்ளீஸ்” என்று ஆசுவாசப்படுத்தினாள். 

வில்வநாதனின் கண்கள் அப்பாம்மாவை வெறித்திருக்க, தயாளன் தளர்ந்து போனார். பானுமதியும் மகன் கோவத்தில் கண்களை மூடி திறந்தார்.

வில்வநாதன் நெஞ்சம் அதிக வேகத்துடன் ஏறி இறங்க, அவன் உடலோ துடித்து கொண்டிருந்தது. தயாளனுக்கு மகனை அணைத்து சமாதானம் படுத்த அவ்வளவு ஏக்கம்.

முடியா வேதனையில், “அவ ஏதோ கஷ்டத்துல பேசிட்டா வில்வா. விடுடா” என்றார் மகனிடம். 

“இது புது பிளாக் மெயிலா?” என்று மகன் விஷத்தை இறக்கினான்.

“வில்வநாதா. நான் பேசினது தப்பு தான். அதுக்காக பிளாக் மெயில் சொன்ன நிச்சயம் என்கிட்ட வாங்குவ” என்றார் பானுமதி.

“கொடுங்க. கொடுத்துட்டே இருங்க. வாங்கிட்டே இருக்க நான் இருப்பேனான்னு வேணா பாருங்களேன்” என்றான் திருப்பி கொடுத்த திமிருடன்.

தாத்தாவும், பாட்டியும் பேரனின் வார்த்தையில் கலங்கி போனார்கள்.

பெற்றவர்கள் தங்கள் மகனையே புதிதாக பார்த்து நின்றனர். 

வில்வநாதனின் அழகி மட்டுமே, “பேசுவீங்களா, இப்படி பேசுவீங்களா” என்று அவன் நெஞ்சிலே வலுவாக அடி கொடுத்தாள்.

அவனுக்கு மனைவி அடி எல்லாம் உறைக்குமா என்ன?

“உனக்கு இருப்பேன்டி என் அழகி. இவங்களுக்கு தான் சொன்னேன்” என்று மனைவி கை பிடிக்க,

“உங்களுக்கு கோவம்ன்னா உங்களோட. இந்த பேச்சு எல்லாம் வந்துச்சு, பார்த்துக்கோங்க” என்று திரும்ப, நன்றாகவே அடி வைத்தாள்.