தென் பாண்டி மீனாள் 18

வில்வநாதன் முடிவை ஏற்று கொள்ள  முடியாத பெரியவர்கள், “ராஜா. என்னப்பா இது” என்றனர்.

மீனலோக்ஷ்னி கணவனின் பற்றிய கையை விட முடியாமல் நிற்க, வீட்டினர் பார்வை அதில் பதிந்தது.

‘போச்சு, என்னை தப்பா நினைக்கிறாங்களா?’ என்று மீனலோக்ஷ்னி பதறி, கையை இழுத்து கொள்வதற்கு பதிலாக, இன்னும் கணவனையே  இறுக்கமாக பற்றி கொண்டாள்.

வில்வநாதன், “என்ன எல்லோரும் சேர்ந்து என் பொண்டாட்டியை பயமுறுத்துறீங்களா?” என்று வீட்டினரை கேட்க,

“நாங்க இல்லை. நீ தான் அவளை பயமுறுத்திட்டு இருக்க. என்ன வில்வா இது? என்று தந்தை கேட்க,

“உங்க வழி தான், உங்க மகனும் எடுப்பான். சோ நீங்க என்னை கேள்வி கேட்க முடியாது” என்றான் திமிராகவே.

“என்கிட்ட திரும்ப அடி வாங்கிடாத வில்வநாதா” என்று பானுமதி எச்சரிக்க,

மகனோ அவன் அப்பாவை தான் பார்த்து வைத்தான். தயாளன், “பானு என்ன பேசுற நீ? முதல்ல பொறுமையா இரு” என்றார் மனைவியிடம்.

“ராஜா. நாங்க இதை ஏத்துக்க மாட்டோம். நீயும் இந்த நினைப்பை இங்கேயே விட்டுடு” என்று பெரியவர்கள் கண்டிப்புடன் சொல்ல, 

“நாம நாலும் பேரும் தான் பாட்டி தனி குடும்பம் போறோம்” என்றான் பேரன்.

“இதுக்கு பேர் தனிக்குடித்தனம் இல்லை. கூட்டு குடித்தனம்” என்றார் பானுமதி கேலியாக.

“அதுக்கு நம்ம மாளிகையிலே இருக்கலாம் இல்லை ராசா” என்று தனபாலன் கேட்க,

“நோ தாத்தா. நாம தனியா போறோம். அவ்வளவு தான்”

“அப்புறம் ஏண்டா என்னை இங்க வர வைச்ச?” தயாளன் கேட்க,

“இதுக்காக தான்” என்றான் மகன் தோள் குலுக்கி.

“வில்வா” என்று தந்தை கண்டிக்க,

“என் முடிவு இது தான். நாங்க தனியா போகத்தான் போறோம்” என்று உறுதியாக நின்றான் மகன்.

“மாப்பிள்ளை” என்று அறிவழகன் குரல் அதிர்ந்து வர, மீனலோக்ஷ்னிக்கு அப்பாவிடம் ஓடிவிடலாம் என்று பரபரத்தது.

கணவன் விட வேண்டுமே? அவள் இவனை விலக்குமுன், அவன் பிடியை இறுக்கிவிட்டான்.

மற்ற உறவினரை அனுப்பாமல், அறிவழகனும், சுஜாதாவுமே மணமக்களை மறுவீடு அழைத்து, மகளையும் பார்த்து செல்ல வந்திருந்தார்கள்.

“என்ன மாப்பிள்ளை இதெல்லாம்” என்று அறிவழகன் கேட்க,

“பாப்பா என்ன நடக்குது இங்க?” என்று சுஜாதா மகளிடம் கோவம் கொண்டார்.

மீனலோக்ஷ்னிக்கு அம்மாவின் கோவத்தில், கண்கள் கலங்கிவிட, “அத்தை. ப்ளீஸ். அவளை நீங்க எதுவும் பேச கூடாது” என்றான் மருமகன்.

“இல்லை மாப்பிள்ளை”

“சுஜாதா. பண்றது எல்லாம் உன் மருமகன் தான். என் மருமககிட்ட ஏன் கோவத்தை காட்டுற” என்று தயாளனும் பேச,

“இல்லைங்கண்ணா. கல்யாணம் ஆன மறுநாளே தனி குடித்தனம் பேச்சுன்னா”

“சுஜாதா” என்று அவரை நிறுத்தினார் கஜலக்ஷ்மி.

பேரன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்துவிட்ட கஜலக்ஷ்மி, “என் பேரன் ஜோடியை எங்களுக்கு தெரியும், என் பேரனையும் எங்களுக்கு தெரியும். உன் மாப்பிள்ளை பண்றதுக்கு மககிட்ட கோவத்தை காட்டுறது என்ன பழக்கம்?” என்று பெரியவராய் கண்டித்தார் பாட்டி.

சுஜாதாவிற்கு அப்போது தான் அந்த பதட்டம் தணிய, அவரின் மகளோ விசும்பலோடு அம்மாவின் முகத்தை பார்க்க மறுத்தாள்.

அறிவழகனுக்கு மகள் மேல் எல்லாம் கோவம் இல்லை, மருமகன் மேல் தான் அதிருப்தி.

“மாப்பிள்ளை. எதனால இப்படி ஒரு முடிவை நீங்க எடுத்திருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா என் பொண்ணு குடும்பத்தோட இருக்கணும்ன்னு நான் ஆசைப்படுறேன்” என்றார் அறிவழகன்.

“மாமா. இப்போவும் உங்க பொண்ணு குடும்பத்தோட தான் இருக்கா. என்ன பக்கத்து, பக்கத்து வீட்ல. அவ்வளவு தான்” என்றான் மாப்பிள்ளை.

“அதெப்படி மாப்பிள்ளை சரியா வரும்?”

“தாத்தா, பாட்டி எங்களோட தான் இருக்க போறாங்க. உங்க சம்மந்திங்க மட்டும் தான் மாளிகையில இருப்பாங்க” 

“மாப்பிள்ளை”

“மாமா. இது பத்தி நாம அப்புறமா பேசுவோம். எங்க சொந்தக்காரங்க வந்து, வந்து பார்த்துட்டு போறாங்க. நாம உள்ள போலாம்” என்றவன் மனைவியின் கை பிடித்து நடக்கவே செய்ய,

மீனலோக்ஷ்னி திரும்பி பெரியவர்களை பார்த்துவிட்டு, “ஏன் இப்படி பண்றீங்க?” என்று கணவனிடம் ஆதங்கமாக கேட்டாள்.

“எப்படி பண்ணிட்டேன் நான்? என் பொண்டாட்டியோட நெஞ்சுல இடம் பிடிக்காம, முந்தானையில இடம் இல்லைன்னு சொல்லிட்டா. சுத்தி பெரியவர்களை வைச்சுட்டு நான் எப்படி உன்னை இம்ப்ரெஸ் பண்றது? அதனால தான்”

மீனலோக்ஷ்னி அங்கேயே நின்றுவிட்டவள், “என்னாலன்னு சொல்றீங்களா?” என்று கடுப்பாகி கேட்க,

“உனக்காகன்னு சொல்றேன்” என்றான் வில்வாதான்.

“ஏங்க இப்படி பண்றீங்க?” என்று நொந்து போனாள் புதுப்பெண்.

பெரியவர்களும் வந்துவிட, எல்லோருமாக வீட்டிற்குள் சென்றனர். அதன் பின்னான நேரம் உறவினர்களுடன் சென்றது.

இடையில் வில்வநாதன் போன் வழியாக அந்த வீட்டை தயார் செய்ய  சொல்லியிருக்க, அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தது.

வீட்டினருக்கு விஷயம் புரிய, உறவினர்கள் முன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தனர்.

வில்வநாதன் யாருக்கும் தனியே பேச வாய்ப்பளிக்காமல் போக, அறிவழகன் தம்பதி கிளம்பினர்.

உறவுகள் நாளை அதிகாலையில்  கிளம்புவதாக இருக்க, இரவு உணவு முடித்தும் ஏதேதோ பேச்சு, கலாட்டா என்று நீண்டது.

அந்த வீட்டிற்கு பொருட்கள் வந்திறங்கிவிட, மீனலோக்ஷ்னிக்கு தான் பொறுக்க முடியவில்லை.

வில்வநாதன் கவனத்தை தன் பக்கம் திருப்ப, அந்த பக்கம் செல்வது போல், அவனின் தோள் தட்டி சென்றாள். அவன் கண்டுகொள்ள வேண்டுமே?

மீனலோக்ஷ்னி விடாமல் மீண்டும் அவனின் மொபைலுக்கு அழைக்க, எடுத்து கட் செய்து வைத்தான்.

திரும்ப அவனின் கழுத்தை லேசாக வருடி செல்ல, வில்வநாதன் திரும்பி கூட பார்க்கவில்லை.

மாறாக உறவினர்கள் தான், “மருமகளே. ஒரு பத்து நிமிஷம்மா. என்னமோ அதிசயமா இன்னைக்கு தான் எங்களோட உட்கார்ந்து இப்படி பேசுறான். கொஞ்ச நேரம். அப்புறம் நாளையில இருந்து உன் புருஷன் உனக்கு மட்டும் தான்” என்று கேலி பேசினர்.

‘அதுதான் என் பயமே’ என்று சொல்லவா முடியும். ஒரு சங்கட புன்னகையுடன் கணவனை அடிக்கண்ணால் முறைக்க, அவன் எல்லோரும் பார்க்கவே மனைவியை புருவம் உயர்த்தி பார்த்து கண்ணடித்தான். அதில், “ஓஹ்” என்ற சத்தம் வீட்டை அதிர வைத்தது. 

மீனலோக்ஷ்னியின் முகம் சிவந்து போக, வேகமாக படியில் ஏற ஆரம்பித்தாள்.

“ஓய் லிப்ட்ல போ” என்று சத்தமாக சொன்னான் வில்வநாதன்.

திரும்பி பார்க்காமலே, “பரவாயில்லை” என்று சொல்லி, மூன்று மாடியும் மின்னலாக ஏறி ஓடிவிட்டாள்.

பெரியவர்கள் அதில் புன்னகை கொண்டாலும், வில்வநாதனின் உறுதி புரிந்து, வருத்தம் அடைந்தனர். கஜலக்ஷ்மி மாளிகையை விட்டு கிளம்ப மாட்டார். அவரில்லாமல் தனபாலனும் இல்லை.

தயாளன், பானுமதி உடன் வந்தால் மகன் அவர்களை அங்கு விட்டு, இவன் மாளிகைக்கு திரும்பி விடுவான்.

பெற்றவர்களோடு இருக்க மாட்டேன் என்று ஒரே பிடியாக நிற்கிறான்!

இரவே உறவுகள் வில்வநாதனிடம் விடைபெற்று கொள்ள, அவன் சோம்பல் முறித்து, படிக்கட்டில் ஏற, தயாளனும் அவனுடன் இணைந்தார்.

மகனின் இளகிய முகம் இறுக்கம் கண்டது. அவர்களின் அறை முதல் மாடி என்பதால், அங்கேயே, “வில்வா” என்று அவனை நிறுத்தினார்.  

மகன் கை கட்டி நிற்க, “ஏண்டா இப்படி பண்ற?” என்று ஆற்றாமையுடன் கேட்டார்.

“என்ன பண்ணிட்டேன் நான்?” என்று அவன் சாதாரணமாக கேட்டான்.

“பக்கத்து வீட்டுக்கு போகாதடா” 

“எல்லா ஏற்பாடும் முடிஞ்சிடுச்சு. காலையில குடி போறேன்”

“உனக்கு என்னோட இருக்க வேண்டாம்ன்னா, நான் போறேன்” 

வில்வநாதனுக்கு அவனை கட்டுப்படுத்துவது பெரிய விஷயமாக இருந்தது. “அம்மா உங்ககூட இருக்கட்டும்” என்று தயாளன் சொல்ல,

“அது தெரிஞ்ச விஷயம் தானே” என்று வெகு நக்கலாக சொன்னான் மகன். 

“டேய் நான் அப்படி சொல்லலை. நாம பொறுமையா பேசலாம்”