Then Paandi Meenaal 17 2 10035 “ஆஹ். வலிக்குது” “கொன்னுடுவேன். மூச்” என்று அவளின் மறுகாலையும் பார்க்க போக, “அங்க ஒன்னும் இல்லைங்க” என்றாள். வில்வநாதன் இன்னமும் அந்த மருதாணியையவே வெறித்திருக்க, மீனலோக்ஷ்னி காலை இழுத்து கொள்ள பார்த்தாள். “எல்லாம் கையில தான் வைப்பாங்க. நீ என்ன காலுல வைச்சிருக்க?” என்று மீண்டும் கேள்வி கேட்க ஆரம்பிக்க, மீனலோக்ஷ்னிக்கு பதில் சொல்ல முடியாமல் அவ்வளுவு சங்கடம். “உன்னை தானே கேட்கிறேன்” என்று அதட்டலிட, பெண் உதடு பிதுங்கியதுடன், “நான் உங்க பேரை கையில எழுத கூடாதுன்னு சொல்லிட்டேன். அதுக்கு இப்படி பண்ணிட்டாங்க” என்றாள் விசும்பலாக. “பண்றதையும் பண்ணிட்டு, அழுக வேற பார்க்கிறியா? கண்ணுல சுத்தமா தண்ணீ இல்லை” என்று பல்லை கடித்தான். மீனலோக்ஷ்னி அச்சத்தில் லேசாக விரிந்த கண்களுடன் அவனை பார்க்க, வில்வநாதன் பார்வை மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது. மனைவி நேராக படுத்திருக்க, தலை நிறைத்த பூ மலர்ந்து அவளின் தோள்களின் தவழ்ந்து கொண்டிருந்தது. புது மஞ்சள் கயிறு அவளின் கழுத்தை நிறைத்து, தங்க செயினுடன் பின்னி பிணைந்திருக்க, அவன் பேர் சொல்லும் மாங்கல்யம் நெஞ்சில் ஜம்பமாக அமர்ந்திருந்தது. படுத்து உருண்டதில் முன் நெற்றி முடிகள் கலைந்து போயிருக்க, இடை சேலையும் லேசாக விலகியிருந்தது. அவன் கையில் இருந்த பாதங்கள் மருதாணியில் சிவந்திருக்க, மெட்டி அங்கு வைரமாக ஜொலித்தது. அழுத்தமாக பற்றியிருந்த பாதத்தின் பிடி தளர்த்தி, பூவாக தாங்கி கொண்டான். மீனலோக்ஷ்னி அவனை அதே அச்சத்துடன் பார்த்திருக்க, வில்வநாதன் அந்த நொடி அவளை ரசித்தான். மனைவியிடம் முதல் முதலாக ரசனை கொண்டான். நலங்கு வாசம் அவனை கட்டி இழுக்க, கண்களால் அவனை கவர்ந்திழுத்தாள் பெண். ரசனையில் திளைத்து, கண்ணுக்குள் இருந்த அவன் பெயரை ஒற்றை விரலால் வருட ஆரம்பித்தான். “என், என்ன பண்றீங்க?” என்ற மீனலோக்ஷ்னிக்கு தொண்டை திரும்ப வறண்டு போனது. “ஸ்ஸ்” என்றவன் குரலில் முன்பிருந்த அதட்டல் இல்லை. அவனின் இதமான வருடல், அவளின் உச்சியில் மின்னலை வெட்டிவிட்டது. தாங்கிக்கொள்ள முடியா மனைவி, “ப்ளீஸ்ங்க” என்று காலை இழுத்து கொள்ள, வில்வநாதனும் விட்டுவிட்டவன், ஜன்னலுக்கு அருகில் சென்று நின்றான். அதிகமாக விறைத்திருக்கும் அவன் உடல், இன்று மிகவும் இளகி நின்றது. நிமிடங்களே அந்த உணர்வை அனுபவித்தவன், மனைவியை பார்த்து திரும்ப, அவள் முகம் சிவக்க கண்களை மூடியிருந்தாள். அவளின் நெஞ்சம் வழக்கத்தை விட அதிகமாக ஏறி இறங்கி, அவளின் படபடப்பான நிலையை சொன்னது. வில்வநாதன் தலை முடியை கோதி கொண்டவன், மெல்லிய புன்னகையுடன் கட்டிலுக்கு வந்தான். மீனலோக்ஷ்னி இன்னமும் தனக்குள் சுருங்க, “ஓய். போதும்” என்றான் கணவன். பெண் கண்களை திறக்க வேண்டுமே! வில்வநாதன் மறுபக்கம் படுத்து கொள்ள, இவள் அந்த கடைசிக்கு சென்றாள். “போதும்டி. விழுந்துடாத” என்று கணவன் புன்னகையுடன் சொல்ல, ‘ம்ஹூம்‘ மனைவியிடம் அசைவே இல்லை. இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி, அவளுக்கும் அவனுக்குமான தூரமாக தெரிந்தது. வில்வநாதனுக்கு அந்த இடைவெளியும் ஏனோ பிடித்தது. பேச்சில்லா அடுத்த நிமிடங்கள், இருவரையும் தூக்கத்திற்கு இழுத்து சென்றிருந்தது. மறுநாள் சூரியன் உதித்து நீண்ட நேரம் சென்றே வில்வநாதன் தூக்கம் களைந்து எழுந்தமர, மீனலோக்ஷ்னி இன்னும் தூக்கத்திலே இருந்தாள். அதிலும் நேற்று படுத்த இடத்தை விட்டு சிறிதும் அசையாமல். ‘இவ மட்டும் எப்படி இப்படி பிடிச்சு வைச்சு பொம்மை மாதிரியே தூங்குறா?’ கணவனுக்கு முதல் ஆராய்ச்சி அவளிடம். அன்று ஒரு முறை விமான பயணத்தின் போதும், அப்படி தான் இருந்தாள். இவனின் பார்வையில் என்னமோ மீனலோக்ஷினிக்கும் முழிப்பு வந்துவிட்டது. கண்களை தேய்த்து இவனை பார்த்தவள், அதிர்வது நன்றாக புரிய, “ஓய் என்ன?” என்றான் கணவன். ஒன்னுமில்லை என்பதாய் தலையாட்டி எழுந்தவள், நேரம் பார்த்து “அச்சோ” என்றாள். “ரிலாக்ஸ். நேத்து சொன்னாங்க இல்லை. லேட்டா வந்தா போதும்ன்னு. அப்புறம் என்ன?” என்று வில்வநாதன் அவளை ஆசுவாச படுத்தினான். பெண்ணுக்கும் அது நினைவு வர, கட்டிலில் சாய்ந்தமர்ந்தாள். நேற்றைய அசதி இருக்கும் என்று, இன்று எந்த விதமான சம்பிரதாயமும் வைத்து கொள்ளவில்லை. “ராஜாக்கு அவ்வளவு சொகுசு” என்று மனைவி முணுமுணுக்க, “இனி என்னோட ராணிக்கும் கிடைக்கும்” என்றான் வில்வநாதன். ‘இவரை வைச்சுக்கிட்டு முணுமுணுத்தது என் தப்பு தான்‘ என்று தட்டி கொண்டவள், குளிக்க சென்றாள். வில்வநாதனும் குளித்து வர, இருவருமாக மூன்றாம் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கீழிறங்கி வந்தனர். ஹாலில் வீட்டினர் எல்லாம் காத்திருக்க, “நாம ரொம்ப லேட் பண்ணிட்டோமா?” என்று கணவனிடம் ரகசிய குரலில் கேட்டாள் மீனலோக்ஷ்னி. வில்வநாதனுக்கு அவள் முகம் தன் தோளில் உரச, காதுக்கருகில் எட்டி, கிசுகிசுப்பாக கேட்டது பிடித்து போனது. “நீ என்னைவிட கொஞ்சம் ஷார்ட் தான் இல்லை” என்று அவனும் அதே போல் கேட்க, “இல்லையே. நான் உங்க நெஞ்சளவுக்கு இருக்கேன்” என்று நேரே நின்று காட்டினாள். “ஓஹ் புரிஞ்சு போச்சு. அதனால் தான் நைட், எட்டி என் கழுத்தை கடிச்சியா?” என்று அவன் குறும்பாக கேட்க, மீனலோக்ஷ்னி அதிர்ந்து அவன் கழுத்தை பார்த்தாள். சிவந்து, கன்றி போயிருந்த இடம் ஈயென பல்லை காட்டியது. லிப்ட் நிற்க போக, “அதை மறைக்காம விட்டிருக்கீங்க” என்று பதட்டத்துடன் அவன் சட்டை காலரை இழுத்துவிட்டாள். லிப்டின் கதவு திறந்திருக்க, வீட்டினர் அத்தனை பேரும் அதை பார்த்துவிட்டனர். மீனலோக்ஷ்னி பதறி கண்களை விரிக்க, வில்வநாதனுக்கு அப்படி ஒரு புன்னகை. மனைவி பதட்டத்தில் சட்டென கணவன் கை பற்றி கொண்டாள். பெரியவர்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்? ஜோடியாக நடந்து வந்த மணமக்களுக்கு, கையால் திருஷ்டி எடுத்தார் கஜலக்ஷ்மி. சில மிக முக்கிய உறவுகளும் அவர்களுடன் இருக்க, இருவரையும் முதலில் பூஜை அறைக்கு அழைத்து சென்று, புதுப்பெண் கையால் விளக்கேற்றி, தீபாராதனையும் செய்து முடித்தனர். அடுத்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவுண்ண, கஜலக்ஷ்மி பேரன் அழகிக்கு தானே பரிமாறினார். பேத்திக்கு இனிப்பை இலையில் வைக்காமல், ஊட்டி விட, உறவுகளுக்கு மீனலோக்ஷ்னியின் முக்கியத்துவம் புரிந்து போனது. சில, சில பேச்சுகளுடன் உணவு முடிய, “ஊஞ்சல் போக கேட்ட இல்லை. வா போலாம்” என்று எல்லார் முன்பும் அழைத்து வைத்தான் வில்வநாதன். மீனலோக்ஷ்னி ‘நல்லா பண்ற மேன் நீ?’ என்ற பார்வையுடன் மறுக்காமல் கணவனுடன் நடந்தாள். மீனலோக்ஷ்னிக்கு அதுவரையில் இருந்த சிறு படபடப்பும் தோட்டத்திற்கு வந்ததில் மறைந்து போனது. ஆவலாகவே ஊஞ்சலில் அமர்ந்து கொள்ள, வில்வநாதன் எதிரில் கை கட்டி நின்று கொண்டான். அவளின் சில்க் புடவை தொகையாய் விரிய, பானுமதி வைத்துவிட்ட மல்லி அவளின் முகத்துக்கருகில் வந்து செல்ல, நெற்றி குங்குமம் சூரிய வெளிச்சத்தில் மினுக்க, மிதமாக அசைந்தாடினாள் பெண். “ராஜா” என்று வீட்டினர் அவர்களிடம் பேச வந்தனர். அடுத்தடுத்த சடங்குகள் பற்றி கேட்க வேண்டும். தேனிலவு திட்டம் இருந்தால், அதற்கேற்றது போல் மாற்ற வேண்டுமே. மீனலோக்ஷ்னி அவர்கள் வரவும் எழுந்து நிற்க, “நீ உட்காரு மீனா பொண்ணு” என்றார் கஜலக்ஷ்மி. “இருக்கட்டும் பாட்டி” என்று கணவனுக்கு அருகில் நிற்க, தயாளனுக்கு மகனையும், மருமகளையும் அப்படி பார்ப்பதே பேரானந்தமாக இருந்தது. அதை மகன் உணர்ந்திருக்க, அவன் உடல் லேசான விறைப்பு காண ஆரம்பித்தது. “வில்வநாதா. அடுத்த வாரம் ரிசப்ஷன் வைச்சிருக்கோம். அதுக்குள்ள மீதி இருக்க பார்மாலிட்டி எல்லாம் முடிச்சிடலாமா? இல்லை உனக்கு வேற பிளான் இருக்கா?” என்று கேட்டார் பானுமதி. தனபாலன், “எதையும் உடனே செய்யணும்ன்னு இல்லை ராசா. உன் வசதி பொறுத்து தான் எதுவும்” என்றார். “நான் இங்க தான் இருப்பேன் தாத்தா. ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று வில்வநாதன் சொல்ல, “சரி அப்போ நாளைக்கு குலதெய்வ கோவில் பூஜை, அப்புறம் மறுவீடு. விருந்து வைச்சுக்கலாம் இல்லை” என்று கஜலக்ஷ்மி சொல்ல, “பாட்டி. எனக்கு வேற ஒரு கமிட்மென்ட் இருக்கு. நாளை மறுநாள் கோவில் பார்த்துக்கலாம்” என்றான் வில்வநாதன். “என்னப்பா?” என்று பெரியவர் கேட்க, “நானே உங்ககிட்ட பேசணும்ன்னு தான் இருந்தேன்” என்றவன், நிதானமாக எல்லோரையும் பார்த்து, இறுதியில் தயாளனிடம் தன் பார்வையை நிலைக்கவிட்டான். பெற்றவருக்கு இவன் ஏதோ வில்லங்கம் செய்ய போகிறான் என்பது புரிந்து போனது. எதிர்கொள்ள தயாராக நிற்க, மகனுக்கு அது இன்னும் அவன் முடிவை உறுதியாக்கிவிட்டது. “நானும் என் சரிபாதியும் தனி குடித்தனம் போக போறோம். அதுவும் பக்கத்துக்கு வீட்டுக்கு” என்றான் அழுத்தமான புன்னகையுடன். “என்ன ராஜா சொல்ற நீ?” என்று வீட்டினர் அதிர, அவனின் சரி பாதிக்கோ மயக்கம் வரும் போலானது. ‘இவரோட நான் தனியாவா?’ கண்களை பெரிதாக விரித்து நின்றவள், பதட்டத்தில், பழக்கமாக கணவனின் கையையவே பற்றி கொண்டாள். வில்வநாதன் மனைவியின் கைகளை தனக்குள் பொதித்து கொண்டவன், “பயப்படாத பொண்டாட்டி. நான் இருக்கேன் உனக்கு” என்று சொல்லி வைத்தான். ‘யோவ் முரட்டு ராஜா என் பயமே அது தான்யா!’ என்று அலறி நின்றாள் மனைவி. ‘ஒரே ஸ்கெட்ச்ல மாமனார், மருமகள் இரண்டு பேரையும் காலி பண்ண பார்க்கிறார்!’ ‘சரியான கேடி ராஜா!’