“நான் ஒன்னு கேட்டா, கோவ படாம பேசுவீங்களா?” என்று மீனலோக்ஷ்னி நல்ல பெண்ணாக அனுமதி கேட்க,
“ம்ம். கேளு” என்றவன், சேரை அவள் பக்கமாக சுழற்ற,
“இல்லை. இல்லை நீங்க அங்கேயே இருங்க” என்று பதறி மறுத்தாள்.
கேட்க போகும் விஷயம் அப்படியானதே!
“தயா மாமா மேல ஏன் இவ்வளவு கோவம் உங்களுக்கு? அத்தைகிட்ட நல்லா தானே இருக்கீங்க?”
“கண்டிப்பா உனக்கு தெரியத்தான் வேணும்” என்று சில நிமிடம் எடுத்து கொண்டவன், ஆழமாகி மூச்சிழுத்து விட்டபடி, தயாளன், பானுமதி பிரிவிற்கான காரணங்களை சொன்னான்.
இதில் சிலது மீனலோக்ஷ்னிக்கு தெரிந்திருந்தது. சிலது இப்போது தெரிந்து கொண்டாள், முக்கியமாக தயாளன் இரண்டு விஷயங்களை சொல்லி பானுமதியுடனான திருமணத்திற்கு சம்மதம் சொன்னது.
வில்வநாதன் சொல்லிவிட்டேன் என்பதாய் இருக்க, மீனலோக்ஷ்னிக்கு தான் முகம் தெளியவில்லை.
“ஓய் என்ன?” என்று கணவன் கவனித்து கேட்க,
“மாமா பாவம்” என்றுவிட்டாள்.
“புரியலை” என்ற வில்வநாதனை அவள் அவதானிக்கவில்லை.
“அத்தை அவரோட மனசை உடைச்சிருக்காங்க”
“பணம் கொடுத்ததும், இரண்டாம் குழந்தை வேணாம்ன்னு சொன்னதும் அவ்வளவு பெரிய கிரைம் இல்லை”
“அதெப்படி நீங்க சொல்ல முடியும்? உங்க இடத்துல இருந்து பார்த்தா அது சாதாரண விஷயம். ஆனா அவருக்கு அப்படி இருக்கணும்ன்னு அவசியம் இல்லையே”
“ஓஹ் அப்போ அதை காரணமா வைச்சு பிரிஞ்சு போறது தான் அவசியம் இல்லை”
“பிரிய அவர் முதல்ல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்”
“அப்படி யார் அவரை போக சொன்னது”
“வார்த்தையில தான் சொல்லணும்ன்னு இல்லை. அவருக்கு பானு அத்தை மட்டும் தான் எல்லாம். அவங்களுக்காக அவர் செஞ்சது, இப்போ எப்படின்னு தெரியலை. முன்ன தலைமுறைக்கு அதிகம் தான்”
“ஏன் தாத்தா இல்லை? அவருக்கு முன்னாடி ஜெனெரேஷன்ல”
“தாத்தாவோட மாமாவை நீங்க எப்படி கம்பேர் பண்ண முடியும்? தயா மாமா உங்களவுக்கு பணக்காரர் இல்லன்னாலும், நல்லா படிச்சு நல்ல வேலையில இருந்தவர் தான். ஆனாலும் அத்தைக்காக மட்டுமே, அவரோட வேரை இங்க மாத்திக்கிட்டார்”
“அப்போ அவரை தியாகினு சொல்றியா நீ?” என்று கோவ சிரிப்புடன் கேட்டான் வில்வநாதன்.
“காதல். காட் அதை பத்தி மட்டும் பேசாத” என்று வில்வநாதன் முகம் சிவக்க, மீனலோக்ஷ்னி தெளிவாக தான் இருந்தாள்.
அவள் கொஞ்சம் பயம் கொண்டவள் தான், அதற்காக அவளின் நியாயங்களை ஒளித்து வைக்கும் அளவு கோழையும் இல்லை.
வில்வநாதன் பாஷையில் அழுத்தம் நிறைந்தவள்!
“ஏன்? காதல் ஒன்னும் சொல்ல கூடாத வார்த்தை இல்லையே?” என்று கேட்க, வில்வநாதன் கோவத்தை கட்டுப்படுத்துவது நன்றாக தெரிந்தது.
“நீங்க கோவப்பட்டாலும் உண்மை இது தான். அவங்க காதலால மட்டும் தான் நீங்க” என்று மிகவும் நிதானமாகவே சொன்னாள்.
வில்வநாதன் சர்ரென எழுந்து அறைக்குள் நடக்க, மீனலோக்ஷ்னி அமைதியாக இருந்தாள்.
“ஏன் நிறுத்திட்ட? சொல்லு. மிச்சம் இருக்கிறதையும் பேசு” என்று அவளின் முன் விறைத்து நிற்க,
அவனின் மனைவி நிமிர்ந்து நேருக்கு நேர் அவன் கண்களை எதிர்கொண்டாள்.
“இதுக்கு தான் சொன்னேன். நீ எனக்கு வேண்டாம்ன்னு” என்று அவள் கண்களை பார்த்து, மிக தெளிவாக வார்த்தைகளை விட்டான்.
“அப்போ நீங்க அந்த முடிவுல உறுதியா இருந்திருக்கணும்” என்றாள் மீனலோக்ஷ்னியும் அதே தெளிவுடன்
“நீங்க எல்லா விஷயத்திலயும் செம சூப்பர். ஆனா தயா மாமான்னு வரும் போது மட்டும் நீங்க குழந்தை” என்று மேலும் சொல்ல,
வில்வநாதன் அவளை அழுத்தமாக பார்த்து நின்றான். அவளின் முகம் இவனை உரசும் அளவு நெருக்கமாக நின்றான்.
“காதல்ன்னு சொன்னா மட்டும் கோவப்படுற நீங்க, நம்பிக்கையை பத்தி ஏன் பேச மாட்டேங்கிறீங்க?”
“அத்தை உடைச்சது தயா மாமா காதலை மட்டுமில்லை, அவங்க மேல அவர் வைச்ச நம்பிக்கையையும் தான்” என்று ஆணித்தரமாக சொன்னாள்.
“அவர் எதையும் கேட்கலை. இரண்டு மட்டுமே கேட்டார். அதிலும் ஒன்னு நிபந்தனை, ஒன்னு ஆசை. நிபந்தனையும் மீறிட்டாங்க! ஆசையும் உடைச்சுட்டாங்க!”
“இது அவருக்கு நடந்த அநியாயம் இல்லையா?”
“மகனா நீங்க இதை எல்லாம் கேட்டிருக்க வேண்டாம், ஆனா அவருக்கு சப்போர்ட் பண்ணியிருக்கலாம் இல்லை”
“பண்ண மாட்டேன்” என்றான் வில்வநாதன் இப்போது கர்ஜனையாக.
மீனலோக்ஷ்னி நெஞ்சம் திடுக்கென்றது, அவளின் கண்கள் நொடி சுழன்று நின்றது. ஆனாலும் அதே நேர் பார்வை தான்.
“அவருக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன். அவருக்கு நான் தேவையும் இல்லை” என்று அதே கர்ஜனையில் திமிறி நின்றான்.
மீனலோக்ஷ்னி அவனின் கைகளை பற்றி கொள்ள போக,
“நோ. தொடாத” என்று மிக, மிக அழுத்தமாக சொன்னவன், அவளை கை பற்றி எழுப்பி விட்டான். இருவரின் ஓர் அடி இடைவெளியையும் உடைத்து, அவளை வெகுவாக உரசி நின்றவன், மனைவியின் கண்களை ஆழ பார்த்தான்.
மீனலோக்ஷ்னி அவனின் பார்வையை எதிர்கொள்ள விரும்பாமல் முகம் திருப்ப, கன்னத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தான்.
அவளின் உதடுகள் லேசாக குவிந்திருக்க, “இந்த வாய் தானே என்னை பேசுச்சு” என்றான் சீறலான மூச்சுடன்.
அவள் பதில் சொல்லாமல் போக, “நியாயத்தை பேசுற. ஆனா உன் புருஷனுக்கு ஒரு நியாயம் இருக்கு. அதுபடி தான் அவன் போவான்” என்றான்.
மீனலோக்ஷ்னி அவன் கையை விலக்கி, “உங்க பொண்டாட்டிக்கும் ஒரு நியாயம் இருக்கு. அவளும் அப்படி தான் இருப்பா” என்றாள்.
“நீ அவர் மாதிரின்னு எனக்கு நல்லா தெரியும். திரும்ப, திரும்ப அதை நிரூபிக்கணும்ன்னு அவசியமில்லை.”
“தயா மாமா மாதிரி நான் இல்லை. ஆனா எங்களுக்கான எண்ணங்கள் ஒத்து போகலாம், அதுல தப்பிருக்கா?”
“இல்லை. ஆனா அவர் என் அம்மாவோட வாழ மாட்டேன்னு போனார். நீ எப்படி அப்படி போறேன்னு நானும் பார்க்கிறேன்”
“சோ அவரை கட்டுப்படுத்த முடியாததை, என்கிட்ட காட்ட நினைக்கிறீங்க”
“இருக்கலாம்” என்றான் வில்வநாதன்.
மீனலோக்ஷ்னியின் முகம் சிவந்து, கணவனை எரித்தது. “இது தான் காரணம் இல்லை, என்னை கல்யாணம் பண்ணிக்க?”
“அது தான்னு எனக்கும் உறுதியா தெரியாது. ஆனா நிச்சயம் என் மாம், டாட் போல நாம இருக்க மாட்டோம். இருக்கவும் கூடாது” என்றான்.
“உங்களுக்கு கட்டாயம் கவுன்சிலிங் வேணும்”
“சரி நீயே எனக்கு கொடு”
மீனலோக்ஷ்னி அவனை விட்டு விலக போக, “நோ” என்று அவளை தடுத்து அப்படியே நிற்க வைத்தான்.
“இப்போ நீங்க என்னை அரெஸ்ட் பண்ணி வைச்சிருக்கீங்களா?”
“என் கைக்குள்ள இருக்கிறது, உனக்கு அப்படி இருக்கா? சரி அப்போ உன் கைக்குள்ள என்னை வைச்சுக்கோ”
“நீங்க அடங்க மாட்டீங்க?” என்று நொடியும் இல்லாமல் சொன்னாள்.
“எப்படி மீன் பண்ற நீ?”
“உருவத்திலும், குணத்திலும். இரண்டிலும் தான்”
“அப்புறம் எப்படி என்னை முந்தானையில முடிச்சு வைக்க போற நீ?” என்று வில்வநாதன் சீண்டலாக கேட்டான்.
“என் முந்தானைக்குள்ள இருக்க உங்களுக்கு அவ்வளவு விருப்பமா?” என்று மீனலோக்ஷ்னியும் அவனை சீண்டினாள்.
“ஆமா சொன்னா சேர்த்துப்பியா?”
“மாட்டேன்” பட்டென பதில் வந்தது.
“நானே அதுக்குள்ள வந்துட்டா?” கணவன் புருவம் உயர்த்த,
“நான் உங்க நெஞ்சுள்ள நான் இருப்பேன்னு அர்த்தம்” என்று மின்னலை விட வேகமாக வெட்டினாள்.
“அப்போ உன் நெஞ்சுள்ள நான் வர முடியாதுன்னு சொல்ல வரியா?”
“அங்க வராம, என் முந்தானைக்குள்ள நீங்க வர முடியும்ன்னு உங்களுக்கு தோணுதா?” என்ற கேள்வியுடன் முடித்து வைத்தாள் பாண்டி நாட்டு அழகியான மீனலோக்ஷ்னி.