வில்வநாதன் மனைவிக்கு எல்லா விதத்திலும் பதிலளிக்க, மீனலோக்ஷ்னிக்கோ அவளின் கேள்விகளில் சந்தேகம் வந்துவிட்டது.
அவளின் புது மாப்பிள்ளையிடம் கேட்டால், நிச்சயம் சந்தேகம் இல்லை, நீ தப்பா தான் பேசுற என்பான்.
அவளின் நலனிற்காக, தானே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். “இதை தான் நான் முதல்லே சொன்னேன்” என்று தோள் உயர்த்திய வில்வநாதன், அங்கிருந்த ரோலிங் சேரில் அமர்ந்தான்.
இத்தனை வருட அவனுக்கான தனியறையில், புது வரவாக அவனின் மனைவி.
தயாளனுக்கு அடுத்து மீனலோக்ஷ்னி அவன் கட்டிலில். வித்தியாசமாக உணர்ந்தான்.
அதிலும் மனைவி அமர்ந்திருக்கும் இடம் தான் அவனின் படுக்கை. அவ்வளவு பெரிய கட்டிலில் அதிகம் இந்த பக்கம் தான் தூக்கம்.
அவனின் தொடர்ந்த பார்வையில் மீனலோக்ஷ்னி, தானே எழுந்து கொண்டவள், “பாருங்க இதுக்கு தான் சொன்னேன். உங்களுக்கு பிடிக்கலை தானே” என்றாள் படபடவென.
“நான் உங்க பெட்ல உட்கார்ந்ததுக்கே இந்த பார்வை பார்க்கிறீங்க. அப்புறம் ஏன் இப்படி பண்ணீங்க?” என்றாள் தொடர்ந்து.
வில்வநாதன் அவள் தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து, “முதல்ல உட்காருங்க மேடம். அது உங்களுக்கான இடம் தான்” என்றான் அழுத்தமாக.
“அப்புறம் ஏன் அந்த பார்வை?” நம்பாமல் கேட்டாள்.
“உன் மாமாக்கு அடுத்து நீ தான் என் ரூம்ல, என் பெட்ல இருக்க” என்றான்.
“அத்தை, தாத்தா, பாட்டி எல்லாம்” அவள் கண்களை விரித்து கேட்க,
“அம்மா ரொம்ப பிரைவசி பார்ப்பாங்க. மத்தவங்களுக்கும் கொடுப்பாங்க. தாத்தா, பாட்டி என் ரூம்க்கு வந்ததை விரல் விட்டு எண்ணிடலாம். நானும் இப்போ சில வருஷமா தானே ஊர்ல இருக்கேன்”
“அப்போ ஸ்கூல், காலேஜ்ல எல்லாம்”
“அங்கேயும் எனக்கு தனி ரூம் தான். அப்படியே பழகிட்டேன்” என்றான்.
“நானும் உங்களை மாதிரி சிங்கிள் சைல்ட் தான். ஆனா அம்மா அதிகமா என் கூடத்தான் படுப்பாங்க.” என்று சொன்னபடி மீனலோக்ஷ்னி திரும்ப அமர்ந்து கொண்டாள்.
“அதனால தான் உனக்கு தம்பி, தங்கை இல்லை” என்றான் வில்வநாதன் கிண்டலாக.
“என்ன பேசுறீங்க நீங்க?” என்று முகம் சுருக்கினாள் பெண்.
“இருக்கிறதை தான் சொன்னேன். மாமா, அத்தை பாவம்”
“அப்போ உங்களுக்கு ஏன் தம்பி, பாப்பா இல்லை?” என்று வேகமாக கேட்டுவிட, வில்வநாதன் சட்டென இறுகி போனான்.
“அதை போய் நீ உன் மாமனார், மாமியார்கிட்ட தான் கேட்கணும்” என்றவன், எழுந்து ஜன்னல் பக்கம் சென்றுவிட்டான்.
‘என்ன சட்டுன்னு கோவமாகிட்ட மாதிரி இருக்கு. திடீர்ன்னு கத்தினா நான் என்ன பண்ணுவேன்?’ அவளுக்கு வேற மாதிரி அச்சம்.
கண்ணால் இரண்டு முறை அவன் ஆக்ரோஷத்தை பார்த்துவிட்டாளே! இனி மாமா, அத்தை பத்தி அவர்கிட்ட பேசவே கூடாது. அது தான் எனக்கு நல்லது.
தீர்மானம் செய்து கொண்டவள், அதை நினைவிலும் வைத்திருக்க வேண்டுமல்லவா?
“ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் தனியா படுத்து பழகிட்டேன்” என்று மனைவிக்கு சொன்ன வார்த்தைகள் வில்வநாதனுக்கே திரும்ப கேட்டு கொண்டிருந்தது.
உண்மை அதுவல்லவே!
வில்வநாதன் பிறந்த சில வருடங்களில், பானுமதி தொழிலை கையிலெடுத்தார். அதிக வெளியூர் பயணங்கள், இரவில் வேலை பார்ப்பது என்று நேரங்கள் அவரின் கையில் இருக்காது.
அந்த நாட்களில் எல்லாம் மகன் ஏங்கிவிட கூடாது என்பதால், தயாளன் வில்வநாதனுடன் தான் தூங்குவார். வளர்ந்தும் அப்படி தான்.
அதிலும் அவர்கள் பிரிந்த வருடம், அநேக நாட்கள் அப்பா, மகன் மட்டுமே. “மாம்க்கு வேலை அதிகமா டாட். என் ரூம்ல தான் இருக்கீங்க” என்று வில்வநாதன் ஓர் முறை தயாளனிடம் கேட்டிருந்தான்.
“ஏன் சார்க்கு நான் வரது தொந்தரவா இருக்கா?” என்று தயாளன் கேட்க,
“டாட். நாட் லைக் தட்”
“டீனேஜ்ல வேற அடி எடுத்து வைக்க போற. ப்ரைவஸி வேணுமா உனக்கு?”
“நான் அப்படி கேட்கவே இல்லை”
“கேட்டாலும் கிடைக்காது. அப்பா உன்கூடவே இருந்து உன்னை வாட்ச் பண்ண போறேன். பி கேர்புல் மகனே” என்று தந்தையாக அவனை மிரட்ட,
“ஹாஹா. காமெடி பண்ணாதீங்க டாட். நாம விட்ட கேமை கன்டினியூ பண்ணலாம்” என்று அவருடன் செஸ் விளையாண்ட நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது.
அந்த வயதில் புரியாத பல விஷயம், பின்னாளில் நன்றாக புரிந்தது.
அப்பாம்மாக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டால் தான் அப்பா என்கூடவே இருந்திருக்கார் என்று தன்னாலே புரிந்து கொண்டான்.
ஆனால் அந்த புரிதல் அப்பாவின் மீதான கோவத்தை இன்னும் தூண்ட மட்டும் தான் செய்தது.
மீனலோக்ஷ்னி கேட்ட கேள்வி எதார்த்தமானது. ஆனால் அவர்கள் வீட்டில் நடந்தது எதார்த்தம் கிடையாது.
வேறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்த வில்வநாதன், முதல் இரவில், ரசனையே அண்ட முடியா வண்ணம், தோட்டத்தை வெறித்து கொண்டிருந்தான்.
தொடர்ந்த நிமிடங்களின், மிக கனமான அமைதியில் சலிப்படைந்த மீனலோக்ஷ்னி தானும் எழுந்து ஜன்னலுக்கு அருகில் சென்றாள்.
திருமண விளக்கு அலங்காரங்களில் தோட்டம் அதிக அழகை அள்ளி வீசி கொண்டிருந்தது.
மாளிகை முழுதும் ஜொலிக்க வைக்க பணத்தை வாரி இறைத்திருந்தனர். சிறு இடமும் தோரணம் இல்லாமல் இல்லை.
அவளின் இஷ்டமான ஊஞ்சலுக்கு கூடுதல் அலங்காரம். தேர் ரதம் போல் மின்ன, பெண்ணுக்கும் கண்கள் மின்னியது.
“ரொம்ப நல்லா இருக்கு” என்று வாய் விட்டு சொல்ல,
வில்வநாதன் அதில் தெளிந்து, அவளின் பார்வை சென்ற திசையில் இருந்த ஊஞ்சலை அவனும் அப்போது தான் ஊன்றி கவனித்தான்.
“தாத்தா, பாட்டி ஐடியாவா இருக்கும்” என்றான்.
“அங்க போலாமா?” என்று ஆசையில் கேட்க,
“போலாம். ஆனா வீட்ல எல்லாம் இன்னும் தூங்கலை”
பெண்ணுக்கு முகம் கொஞ்சம் சுருங்கி போனது. முதல் இரவு, வெளியே சென்றால் நிச்சயம் பேச்சு வரும்.
“காலையில சீக்கிரம் எழுந்து போயிடுவேன்” என்று சொல்ல, வில்வநாதன் பக்கம் பேச்சு மூச்சே இல்லை.
விறைப்பு இன்னும் கூடியிருக்க, மீனலோக்ஷ்னி கவனித்து பார்த்தாள். தயாளனும், பானுமதியும் ஜோடியாக தோட்டத்திற்குள் வந்து கொண்டிருந்தனர்.
நிதானமான நடையில், ஏதோ பேசி கொண்டும், மெலிதாக புன்னகைத்து கொண்டும் நடந்தவர்களை மீனலோக்ஷ்னி ரசித்து பார்த்தாள். இந்த வயதிலும், ஒருவருக்கு ஒருவர் அவ்வளவு பாந்தமாக இருந்தனர்.
“ம்ஹூம். ரொம்ப பார்க்க கூடாது. கண்ணு பட்டுடும். இப்போதான் சேர்ந்திருக்காங்க” என்று மீனலோக்ஷ்னி பார்வையை திருப்ப, அவளின் கணவனோ, மொத்த திருஷ்டியையும் எடுத்து கொண்டிருந்தான்.
அடப்பாவி!
“அத்தை, மாமா சேரணும்ன்னு எல்லாம் வேலையும் பார்த்துட்டு, இப்போ என்ன அவங்களையே இப்படி முறைச்சு பார்க்கிறீங்க?” என்று பொறுக்க முடியாமல் வாய் விட்டாள் மீனலோக்ஷ்னி.
வில்வநாதனிடம் அவ்வளவு விறைப்பு.
தயாளன் சும்மா இராமல், பானுமதி அந்த ஊஞ்சலை வருடவும், அவரை பிடித்து அதில் அமர வைத்து மெலிதாக ஆட்டிவிட்டார் மனைவிக்காக.
பானுமதி மறுத்து, முறைத்து, சிரிக்க செய்தார். இங்கு மகனிடம் கோவ அனல் வீசியது.
“உனக்காக பண்ணதுல அவர் ஏன் மாம்மை உட்கார வைக்கிறார்” என்றான்.
“ஆங். இதென்ன கதையா இருக்கு. அவர் பொண்டாட்டியை அவர் ஆட வைக்கிறார்”
“நீயும் ஆசைப்பட்ட இல்லை. வா போலாம்” என்றான் சட்டென.
“ஏதே” என்று பின்னால் நகர்ந்து கொண்டவள், “புரிஞ்சு தான் பேசுறீங்களா? என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டாள்.
“ஏதோ ஆச்சு, இப்போ என்ன உனக்கு?” என்று பின் தலையை அழுத்தமாக கோதி கொண்டான்.
“நீங்க முதல்ல வாங்க. இப்படி உட்காருங்க” என்று சொல்ல, அவன் நகர வேண்டுமே?
“இது வேலைக்கு ஆகாது” என்று அவனின் கை பிடித்து இழுக்க,
“ஓய் என்ன பண்ற நீ?” என்றான் சிறிதும் அசையாமல்.
“கஷ்டப்பட்டு இழுக்கிறதுக்காகவாவது, கொஞ்சம் ஒத்துழைக்கலாம் இல்லை”
“உன் மாமா, அத்தையை நான் ஒன்னும் பார்வையிலே தின்னுட மாட்டேன். இரு” என்று அவர்கள் பக்கம் திரும்ப போக,
“நீங்க திங்குற மாதிரி இல்லை, அவங்களை கொத்து போட பார்க்கிறீங்க. வாங்க” என்று கை பிடித்து இழுத்து வந்தவள், அந்த ஜன்னலை முழுதும் கர்ட்டன்ஸ் வைத்து மறைத்தாள்.
“மாமா மேல அவ்வளவு பாசம்”
“உங்க மேல அவ்வளவு பயம். திடீர்ன்னு சண்டை போட ஆரம்பிச்சுட்டா”
“அப்போ என் டாட் மேல பாசம் இல்லையா உனக்கு?” என்று அதற்கும் கடித்தான் கணவன்.