வில்வநாதன் சாதாரணமாக இருக்க, மீனலோக்ஷ்னிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
ஒரு மாதிரி திகைத்த நிலையிலே இருக்கிறாள். இப்போது என்றில்லை கடந்த சில நாட்களாகவே அப்படி தான் இருக்கிறாள்.
வீட்டில் யார் என்ன கேட்டாலும, என்ன பேசினாலும் உடனே பதில் வருவதில்லை. இரண்டு மூன்று முறை அவர்கள் தொடர்ந்து கேட்டப்பின் தான் பதில் சொல்கிறாள்.
கனவும் இல்லாமல், விழிப்பும் இல்லாமல், என்னடா நடக்குது இங்க? எனக்கு மட்டும் தான் அப்படியா? என்று நொடிக்கொரு முறை அருகில் இருக்கும் வில்வநாதனை பார்த்தாள்.
“நீ என்னை பார்க்கிற, எல்லாம் உன்னை தான் பார்க்கிறாங்க” என்றான் வில்வநாதன்.
அப்போதும் இவள் பக்கம் திரும்பாமல் சொல்ல, அவளுக்கு அது எங்க தெரிய போகிறது?
“பாப்பா. என்னம்மா?” என்று சுஜாதா அவளின் தோள் தட்ட,
“ம்மா” என்று அவரின் முகம் பார்க்க,
“முன்னால பாரு மீனா” என்றார் அவர்.
கண்களை திருப்ப, அவ்வளவு கூட்டம். நிற்க இடம் இல்லாமல், எங்கும் ஆட்கள்.
அவளின் முன் மாங்கல்யம் வைக்கப்பட, மீனலோக்ஷ்னி நெஞ்சம் திடுக்கென்றது.
இன்று அவர்களுக்கு திருமணம். இருவரும் மணமேடையில் அமர்ந்திருக்கின்றனர்.
வெகு சில நாட்களுக்குள் முடிவெடுத்து விரைவாக நடந்தேறும் திருமணம்!
எங்கு, எப்போது எல்லாம் மாறியது என்று தெரியாமல், இதோ சில நொடிகளில் வில்வநாதனின் மனைவியாக போகிறாள் மீனலோக்ஷ்னி.
வில்வநாதன் சொன்னதை அப்படியே கஜலக்ஷ்மியிடம் சொன்னாள் மீனலோக்ஷ்னி. அவ்வளவு தான் தெரியும்.
அதன் பின் நடந்தது எல்லாம் மின்னல் வேகம்.
தயாளன் அந்த வாரமே அவர்களின் மாளிகைக்கு திரும்பிவிட்டார். இதை வருங்கால மருமகளிடமும் வீட்டிற்கே வந்து சொல்ல, அறிவழகன் சுஜாதா அதிர்ந்து போயினர்.
“பாப்பா என்ன இதெல்லாம்?” என்று மகளை கண்டிக்க,
“அறிவழகா. என் மருமகளை யாரும் ஒரு சொல் சொல்ல கூடாது. நம்ம குடும்பம் உடைஞ்சிருக்கிறது அவளுக்கு பிடிக்கலை. கேட்டா, அதை செஞ்சேன் நான்”
“இதுல என் சுயநலமும் இருக்கு. என் மகன் வாழ்க்கை செழிக்கிறது மட்டுமில்லை, நானும் என் குடும்பத்தோட இருக்க போறேன். இதை விட வேறென்ன வேணும் எனக்கு? இதுக்கு போய் மருமகளை பேச போறியா என்ன?” என்று அவர்களின் வாய் அடைந்துவிட்டார் தயாளன்.
அதன் பின் என்ன, அடுத்த மாதமே நன்றாக இருக்கிறது என்று முகூர்த்த தேதி குறித்துவிட்டனர்.
இதோ, இன்று வில்வநாதன் கைகளுக்கு மாங்கல்யம் வந்து சேர, அப்படியே அவனை பார்த்தாள்.
‘கட்டிடவா?’ என்பதாய் புருவம் உயர்த்தினான் அவன்.
மீனலோக்ஷ்னி மணமேடையிலே அவனை உர்ரென பார்க்க, “என்ன ராசாத்தி” என்று அறிவழகன் கேட்டார்.
சுற்றி வீட்டு ஆட்கள் பளிச்சென்ற புன்னகையுடன் இவர்களை பார்த்திருக்க, எதுவும் இல்லை என்பதாய் தலையசைத்தாள்.
உள்ளூர் அழகி, மணப்பெண் அலங்காரத்தில் உலக அழகியாக ஜொலிக்க, அவளுக்கு நிகரான மணமகனாக வில்வநாதன் ஆளுமையில், அவ்வளவு கண்களும் அவர்கள் மேல் தான்.
“ஜோடி பொருத்தம்ன்னா இப்படி இருக்கணும்” என்ற வார்த்தைகள் மண்டபத்தில் இடைவிடாமல் ஒலித்தது.
“முதல்ல இரண்டு பேருக்கும் சுத்தி போடணும்” குடும்பத்தினர் அத்தனை பேரும் நினைத்து கொண்டனர்.
மணமக்களுக்கு இந்த வார்த்தைகள் எட்ட, ‘அப்படியா இருக்கோம்?’ என்று மீனலோக்ஷ்னி நினைத்து கொள்ள, வில்வநாதனுக்கு அது தெரிந்தது தான் இருந்தது என்பதாய் வசீகர புன்னகை.
தனபாலன், கஜலக்ஷ்மி மாங்கல்யம் எடுத்து கொடுக்க, மீனலோக்ஷ்னியை மாங்கல்யத்துடன் நெருங்கினான். வில்வநாதன்.
அவளின் கண்கள் நொடி மிரள, “ஓய் என்ன?” என்று கேட்டான் வில்வநாதன்.
மீனலோக்ஷ்னி பார்த்தே இருக்க, அவளின் கழுத்துக்கு கொண்டு சென்ற மாங்கல்யத்துடன், “பாண்டி நாட்டு அழகி, இனி வில்வநாதனோட அழகி!” என்று அவளின் காதுக்கருகில் சொன்னபடி, அவளுக்கு மூன்று முடிச்சிட்டான்.
பெண்ணுக்கு மொத்த தேகமும் சிலிர்த்து போனது. கண்களை விரித்து அவனை பார்க்க, குங்குமம் வைத்தவன், “என்ன சரி தானே?” என்று கேட்டான்.
வில்வநாதன் அவளை பார்த்து புன்னகைக்க, ஏனென்று தெரியாமல் அவளுக்கும் உதடுகள் அழகாக விரிந்தது.
அந்த தருணம் பொக்கிஷ புகைப்படமாக பதிவானது.
‘இப்போ என்ன பண்ணார் என்னை?’ அவனின் மனைவி நொடி விழித்து சமாளித்தாள்.
இருவரின் கோர்த்த கரங்களுடன் அவர்களும் இணைந்து, அடுத்த அத்தியாயத்திற்குள் காலடி எடுத்து வைத்தனர்.
குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியில் மணமக்களை கொண்டாடினர்.
தனபாலனுக்கு அப்படி ஒரு பூரிப்பு. என் ஆசை நிறைவேறிடுச்சு! அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய பேரன், பேத்தியை அப்படியே இருபக்கமும் அணைத்து கொண்டார்.
கஜலக்ஷ்மிக்கு கண்களில் கண்ணீர் மிதந்தது. “லக்ஷ்மி மேடம்” என்று பேரன் கண்டிக்க, அவர் அதனுடன் புன்னகைத்து மணமக்களை அணைத்து கொண்டவர், இருவரின் நெற்றியிலும் அன்பு முத்தம் பதித்தார்.
கூடுதலாக பேரனின் ஜோடிக்கு. இத்தனை வருட உடைந்த குடும்பத்தை முழுமை படுத்திவிட்டாளே!
அடுத்து பானுமதி, தயாளனிடம் வர, பெற்றவர்கள் அவனை பார்த்து ரசிக்க, மகனுக்கோ தம்பதியாக நின்ற அப்பாம்மா மனதை கொள்ளை கொண்டனர்.
நொடி நின்று பார்த்து தான், அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர். பானுமதி மருமகளை உள்ளார்ந்த அன்போடு அணைத்து கொண்டார். நெகிழ்ச்சியுடன் அவளின் கைகளை பற்றி கொண்டார்.
மருமகளாக வரும் முன்னமே அவரின் நெஞ்சை அப்படியே அள்ளி இருந்தாள் மீனலோக்ஷ்னி.
உண்மையில் அவருக்கு கோவபடக்கூட தோன்றவில்லை. மாறாக மகன், மணமகனாக நிற்பதே, அவரின் உள்ளத்தை மொத்தமாக நிறைத்துவிட்டது.
மகன் பற்றி அறிந்தவர் தானே?
‘எங்க மேல கோவத்தை காட்டுறேன்னு அவன் வாழ்க்கையை விட்டுடுவானோ?’ என்று அவர் கொண்ட அச்சம் தீர்ந்த நிம்மதி, ஆசுவாசம், அளப்பறியா மகிழ்ச்சியில் மணமகளுக்கு அன்பையும், ஆசீர்வாதத்தையும் கொட்டி கொடுத்தார் மனிதர்.
தந்தையின் பூவாய் மலர்ந்த முகத்தில், மகன் வாசம் கொண்டான்.
அடுத்து அறிவழகன் தம்பதி கலங்கிய கண்களுடன் மகளையும், மருமகனையும் ஆசீர்வாதம் செய்ய, தொடர்ந்து மற்ற பெரியவர்களிடமும் ஆசீ பெற்று கொண்டனர்.
திருமணத்திற்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் மேடைக்கு வர ஆரம்பித்தனர். அதன் பின்னான நேரம் மிக, மிக வேகமாக சென்றது.
இடையில் உறவுகள், ஊர்க்காரர்கள், “பொண்ணு அழகுல மட்டுமில்லை. குணத்திலும் சுத்த தங்கம். நம்ம பெரிய குடும்பத்தை கல்யாணத்துக்கு முன்னாடியே சேர்த்து வைச்சுட்டாளே! பெரிய குடும்பத்துக்கு பொருத்தமான மருமகள்” என்று மீனலோக்ஷ்னியை புகழ்வதும் காதில் விழுக, பெண்ணுக்கு எல்லையில்லா சங்கடம், கணவன் மேல் கோவம்.
அவன் உதட்டுக்குள் சிரிப்பை அடக்குவது தெரிய, மணப்பெண்ணுக்கு அடக்கத்தை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம்.
அவர்களை சாப்பிட வைத்து, புகைப்படம் எல்லாம் எடுத்து, அவர்கள் மண்டபத்தை விட்டு கிளம்பவே நேரம் நீண்டுவிட்டது.
வில்வநாதன் மாளிகைக்குள் மருமகளாக காலடி எடுத்து வைத்த மீனலோக்ஷ்னி விளக்கேற்றி, மணவாழ்க்கையை தொடங்கினாள்.
அறிவழகன் குடும்பமும் அங்கிருக்க, சுஜாதா மகளை ஓய்வெடுக்க தனியறைக்கு அழைத்து சென்றார்.
மணப்பெண் உடை மாற்றி படுத்தவள் தான், மாலை அவர்கள் எழுப்பிய பின் தான் எழுந்தாள். நல்ல தூக்கம்.
இத்தனை நாட்கள் அலைப்புறுதல் இனி இல்லை. கல்யாணம் நடந்து முடிஞ்சாச்சு. யோசிக்கவோ, குழப்பி கொள்ளவோ, கோவம் படவோ எதுவும் இல்லை.
சுஜாதா மகளை எழுப்பி குளித்து வர சொன்னார். கஜலக்ஷ்மி அடிக்கடி அவளை தேடி வந்து போனார்.
அதன் பின் முடிக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் முடித்து, மீனலோக்ஷ்னிக்கு இரவு உணவு வந்தது.