Advertisement

*16*
நித்யாவுடன் பேசும் சுவாரசியத்தில் சுற்றிலும் பார்வையை சுழற்றாத குந்தவை கல்லூரி முடிந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க, அவள் குறுக்கே திடுமென வந்து வண்டியை நிறுத்தினான் தச்சன். நடைபாதையில் பயமுறுத்தும் வகையில் குறுக்கே வண்டி நிறுத்தியவனை திட்ட வார்த்தைகள் வெளிவரத் துடிக்க, தச்சனைக் கண்டதும் முறைப்போடு நிறுத்திக்கொண்டாள் குந்தவை.
அவளை திடமாய் பார்த்தவன் அழுத்தமாய், “ஏறு குந்தவை…”
உறுத்து விழித்த குந்தவையோ நடுரோட்டில் சண்டை பிடிக்க முடியாமல் நித்யாவிடம் தலையசைத்துவிட்டு உர்ரென தச்சன் பின்னே ஏறி அமர்ந்து, வண்டி இருக்கையை பிடித்துக் கொண்டாள்.
மெளனமாய் வண்டியை செலுத்திய தச்சன் ஒரு உணவகத்தில் நிறுத்த, கீழே இறங்காத குந்தவை, “வீட்டுக்கு போகாம எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த? அம்மா சமைச்சு வச்சிருப்பாங்க.”
“அதெல்லாம் தகவல் சொல்லியாச்சு… நீ இறங்கு.” என்று துரிதப்படுத்த இறங்கிய குந்தவை உணவக வாயிலில் சென்று நின்றுகொண்டாள்.
வண்டியை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு வந்தவன் அவளிடம் லேசாய் தலையசைத்துவிட்டு உள்ளேச் செல்ல, ‘ஏன் துரை பேசமாட்டாராமாம்? மூணு நாளா கண்டுக்காம இருந்துட்டு இன்னைக்கு அதிகாரத்தை பாரு…’ என்று மனதிற்குள் அவனை அர்சித்தப்படியே அவனைத் தொடர்ந்தாள் குந்தவை.
‘மூணு நாளா ஒரு மெசேஜ் இல்லை போன் இல்லை… இவள் திமிரும் குறையல.’ என்று அவனும் அவளை கடிந்து கொண்டிருந்தான் பதிலுக்கு.
குளிரூட்டப்பட்ட அந்த உணவு அறை இதமாய் இருக்க நேரே சென்று கைகழுவி விட்டு, எதிரெதிரே அமரும்படி இருந்த இருக்கையை விடுத்து நால்வர் அமரும் இருக்கையில் குந்தவையை சுவரோரம் இருந்த நாற்காலியில் அமரவைத்து அதை ஒட்டியே மற்றொரு நாற்காலியை இழுத்துப்போட்டு அவள் தோள் உரசும்படி அமர்ந்தான் தச்சன்.
‘இதெல்லாம் சரியாப் பண்ணுவான்.’ என்று மீண்டும் குந்தவையின் மனம் நொடித்தது.
“உனக்கு என்ன சாப்பாடு வேணுமோ சொல்லிக்கோ அப்புறம் அதுக்கும் சண்டை பிடிப்ப…” என்று அவள் புறம் திரும்பாமலேயே அவன் சொல்ல, இதழுக்குள் எதுவோ முணுமுணுத்தவள் உணவக ஊழியர் வரவும் தனக்கு தேவையானதை ஆர்டர் செய்தாள்.
தச்சனும் தனக்கு தேவையானதை சொல்லிவிட்டு மெளனம் காக்க, குந்தவை பார்வையை சுற்றும் விரட்டினாள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் அமர்ந்து உண்டுகொண்டிருக்க வேடிக்கை பார்க்க கூட அங்கொன்றுமில்லை. உடன் இருப்பவனும் அமைதி காக்க, அலுப்பு தட்டி நாற்காலியில் நெளிய ஆரம்பித்தாள். பையை நோண்டினாள். எது செய்தாலும் பொழுது நகரமாட்டேன் என்று அடம்பிடிப்பது போலத் தோன்ற, பையிலிருந்து அலைபேசியை எடுத்து ஸ்க்ரீன் லாக்கை எடுக்கும் முன்னர் அதை பிடுங்கினான் தச்சன்.
“எல்லாத்துக்கும் ரூல்ஸ் பேசுவ… போன் யூஸ் பண்ணிட்டு கைகழுவாம அப்படியே சாப்பிடக்கூடாதுனு தெரியாதா?” என்று முறைக்க,
“அதெல்லாம் எனக்குத் தெரியும்… நான் சாப்பிடுறத்துக்கு முன்னாடி திரும்ப அலம்பிப்பேன்.” என்றாள் அவளும் வேண்டுமென்றே…
இருவருமே பேச்சைத் துவங்க இதையொரு சாக்காய் பயன்படுத்திக் கொண்டணரேத் தவிர இரண்டு பேருமே மேல் சொன்னதை பின்பற்றுபவர்கள் இல்லை. அது இருவருக்குமே மற்றவர் உடல்மொழியிலிருந்து புரிந்திருந்தது. அதே நேரம் ஆர்டர் செய்த உணவுகளும் வந்துவிட கவனம் அதில் சென்றது.
“முதல் முறை இதுமாதிரி நாம வெளியே வந்து சாப்பிடுறோம்!” என்றான் தச்சன் இடையே. ம் மட்டும் கொட்டியவள் கவனம் உணவிலேயே பதிந்திருக்க தன் முழங்கையால் அவளை இடித்தான் தச்சன்.
“முன்ன பின்ன சாப்பாட்டையே பார்த்திராத மாதிரி இப்படி முக்குற?”
“சாப்பிட தானே கூட்டிட்டு வந்த?”
“அதுக்காக அதை மட்டுமேவா செய்வ? கொஞ்சமாச்சும் பக்கத்தில் இருக்கிறவனைப் பாருடி…”
“என்னால சும்மா ஒண்ணுமில்லாம எல்லாம் யாரையும் பார்க்க முடியாது…” அவனை குத்திக்காட்டும் நோக்கில் அவள் எதுவோ சொல்ல அதை அவனுக்கு ஏற்றமாதிரி மாற்றிக்கொண்டான் தச்சன்.
“நான் சும்மா இல்லடி… டிரஸ் போட்டுதான் இருக்கேன்…” என்று கேலியாய் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுக்க, நறநறவென பல்லை கடித்து முறைப்புடன் தச்சன் புறம் திரும்பினாள் குந்தவை.
“உன் புத்தி மட்டும் ஏன் இப்படி யோசிக்குதோ தெரியல…”
“உன்னால அப்படி யோசிக்க முடியலைன்னா எல்லோரும் அப்படியே இருப்பாங்களா என்ன?” என்று தச்சன் பரிகாசம் செய்ய எரிச்சல் மெல்ல அவளை சூழ்ந்தது.
“ப்ச்… இப்போ என்ன தான் வேணும் உனக்கு?”
“அதை நான் கேட்கணும். சண்டை போட்டீயே அதுக்கு அப்புறம் ஒரு போன், மெசேஜ் ஏதாவது செஞ்சியா? நான் பேசிடுவேன்னு ஒருநாள் முழுசும் போனை ஆப் பண்ணி தானே வச்சிருந்த?” என்று அவனே குத்திக்காட்ட, அவளுக்கு காரணம் கிடைக்காமலா இருக்கும்!
“மறுநாளே நான் போன் ஆன் பண்ணிட்டேன் ஆனால் அதன்பிறகு ஒருமுறை கூட நீயும் என்னை கூப்பிடல… ஒருநாள் எடுக்கல உடனே நீயும் இவள் எப்படியோ போகட்டும்னு விட்டுட்ட தானே? சண்டை போட்ட அன்னைக்கு கூட உன்னை சாப்பிடச் சொல்லி நான் மெசேஜ் போட்டேன்.” என்று காரணம் தேடிப்பிடித்து வம்பிழுத்தாள் குந்தவை.
“நீதானே சண்டையை ஆரம்பிச்ச அப்போ நீதான் சமாதானம் பேசணும். நானே எப்போதும் சமாதானம் பேசணும்னு நினைக்கக் கூடாது.”
“என்னது ஆரம்பிச்சேனா? நீ பண்ண காரியத்துக்கு வேற எப்படி ரியாக்ட் பண்ண முடியும்? மறுபடி மறுபடி அதை நியாபகப்படுத்தாத எனக்கு வெறியாகுது…”
“ரொம்ப பண்றடி நீ…”
“என்ன பண்ணிட்டேன் நானு? என்கிட்டேயே தைரியமா பொண்ணுகளை சைட் அடிச்சேன்னு சொல்லுவ… லோ ஹிப் பத்தி எங்கிருந்தோ தெரிஞ்சிக்கிட்டு வந்து நான் அப்படி கட்டலைன்னு என் முகத்துக்கு நேராவே குறைப்படிப்ப… அதை கேட்டுட்டு என் பிராணநாதரே ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்கீங்கன்னு பாராட்டனுமாக்கும்? இனி ஒருதரம் எவ மேலாவது உன் கண்ணு போச்சு முழியை நொண்டி எடுத்துருவேன் பார்த்துக்கோ…” கட்டளைகள் உரிமையாய், அதிகாரமாய் பிறப்பிக்கப்ட, உதட்டை சுழித்தான் தச்சன். உணவுகள் இவர்களின் பஞ்சாயத்துக்கு இடையில் காய்ந்து போயிருந்தது. பிணக்கிலும் சூழ்நிலை உணர்ந்து இவர்களின் குரல்கள் மெலிதாகவே வெளிவர, மானம் தப்பித்தது.
“நோண்டி எடுத்த பிறகு எங்கடி பார்க்குறது… ஆனாலும் தம்மாந்துண்டு இடுப்புக்கு நீ இம்புட்டு இம்சை செய்யக் கூடாது குந்தவை. அதுவும் வேணுமே நான் தேடித் தேடிப் போய் பார்த்த மாதிரி பேசுற… உன்கிட்ட தான் அதைத் தேடுனேன் மத்தவங்களை முகத்தோட நிறுத்திப்பேன்… மீ ஜென்டில் மேன்…”
“கொழுப்பு அதிகம்டா உனக்கு. எனக்கு பத்திக்கிட்டு வருது… ரோட்டுல போற எவனாது ஒழுக்கம் கெட்டு பார்த்தாலே அவ்வளவு கோபம் வரும்… ஆனால் எனக்கு வாக்கப்படவன் நீ! அது மாதிரி இருந்தா… ஸ்… செம்ம காண்டாகுது…” என்று விரல்களை மடித்து பற்களை கடித்தாள் குந்தவை.
“அமைதி அமைதி அமைதியோ அமைதி குந்தவை தேவியாரே… நீங்க ரொம்பபப ஒழுக்கசீலியா இருக்கிறதாலத் தான் இவ்வளவு பிரச்சனையும்.”
“அதனால உன்னை மாதிரி இருக்கச் சொல்றியா?” சீற்றமாய் வந்த அவளது குரலில் சற்று பம்மியவன்,
“இல்லையே… அதாவது என்னை மாதிரியும் நீ இருக்கலாம் தப்பில்லை… நானும் தப்பா நினைக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்…”
“கேவலமா இருக்கு உன்னோட ஐடியா…”
“தெரியுதுல்ல… முடிஞ்ச நிகழ்வுகளை மாற்ற நினைக்குறது இயலாத காரியம். அதை பிடிச்சிக்கிட்டு நீ சண்டை போடுறது அதைவிட மடத்தனம். இதுக்கு மேல என்ன செய்யணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ.” என்றவன் இதோடு முடிந்தது என்று உணவில் மீண்டும் கவனம் செலுத்தினான்.
குந்தவைக்கு அவன் சொல்ல வருவதும் புரிந்துதான் இருந்தது. இரண்டு நாட்களாக யோசித்துப் பார்த்தவளுக்கு அவனின் வெளிப்படைத் தன்மையில் பிரதிபலிக்கும் மெய், அவன் குற்றமற்றவன் என்பதை பறைசாற்றுவது போலத்தான் இருந்தது. அவன் சொல்லாமல் இருந்திருந்தால் அவளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை எனும்போது ஒளிவுமறைவற்ற அவனது குணத்தை சீண்டிப்பார்த்து, இருக்கும் இணக்கத்தை குறைத்து, உண்மையாக இருப்பவனை நேரெதிராய் மாற்றிவிட வேண்டாம் என்றே முடிவெடுத்திருந்தாள். இருந்தும் சின்ன சுணக்கம். அதுவும் இப்போது அவனாய் பேசவும் மறைந்திருந்தது. அமைதியாய் உண்டு முடித்தவள் கைகழுவிவிட்டு வருவதற்குள் பில் கட்டிவிட்டு அவளுக்காய் காத்திருந்தான்.
“உன் வீட்டுல ஏதாவது எடுக்கணுமா இல்லை இப்படியே நம்ம வீட்டுக்கு கிளம்பிடலாமா?”
“வீட்டுக்கு போய் அம்மாகிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்…” என்று குந்தவை சொல்ல, அவள் வீடுக்குச் சென்றுவிட்டே கிளம்பினர். குந்தவை வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் பயணம் நெடுகிலும் அவன் தோளில் பிடிமானத்திற்காக அழுந்தப் பதிந்திருந்த அவளது கரமே அவள் மனதை காட்டிக்கொடுத்தது.
தச்சனும் வாங்கிக்கட்டிக் கொண்டவரை போதுமென்று வாயை மூடிக்கொண்டான். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவளை வீட்டு வாயிலில் இறக்கிவிட்டவன், “நீ போ குந்தவை… எனக்கு வேலை இருக்கு.”
யோசனையாய் கடிகாரத்தை பார்த்துவிட்டு நிமிர்ந்தவள், “காபி குடிக்குற நேரம் தான்… உள்ளே வந்து குடிச்சிட்டு போ…”
“இல்லை வேண்டாம்… குணாவுக்கும், வேலை செய்யறவங்களுக்கும் டீ வாங்கிட்டு போகணும். அங்கேயே நானும் குடிச்சிக்குறேன்.” என்றுவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் அவன் சென்றுவிட, பார்வையிலிருந்து அவன் மறையும் வரை அங்கேயே நின்றுவிட்டு பின் வீட்டினுள் சென்றாள் குந்தவை.
வாயிலிலேயே அவளை எதிர்கொண்ட நீலா, “பரீட்சை எப்படி எழுதி இருக்க? போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா குந்தவை?”
“முடிஞ்சிடுச்சு அத்தை… எக்ஸாமும் நல்லா எழுதிருக்கேன்…”
“நல்லது… இல்லைன்னா நீதான் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சிட்டே இருக்கனும்.”
“ஆமா அத்தை… சீக்கிரமே முடிஞ்சிடுச்சு… அங்கேயே அப்பா ஆபஸ் பக்கத்தில் வேறொரு இடத்தில் வானதிக்கு வேலைக்கு சொல்லி இருக்கேன்.” பேச்சோடு பேச்சாய் வானதியை அங்கிருந்து கிளப்பவும், வாழ்க்கையில் வானதிக்கு ஒரு பிடிமானம் வர வேண்டுமென அவள் யோசித்து வைத்திருக்கும் வழியையும் நீலாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றாள் குந்தவை.
“ஓ… நல்ல காரியம் பண்ணி இருக்க… ஆனால் வானதி வேலையைப் பத்தி என்கிட்ட ஒண்ணுமே சொல்லலையே…” தங்களுடனேயே வானதி இருந்துவிடப் போவதில்லை என்பது நீலாவுக்கு ஏற்கனவே தெரியுமென்பதால் குந்தவை சொன்ன தகவலை எளிதாய் எடுத்துக்கொண்டார்… என்னவொன்று, பிள்ளைகள் விரைவிலேயே கிளம்பிவிடுவார்கள் என்ற சிறிய வருத்தம் மட்டுமே…
“அவளுக்குத் தெரியாது அத்தை. இனி தான் சொல்லணும்.”
“வீட்டிலேயே இருந்த பொண்ணு. பிள்ளைங்களை வீட்டுல விட்டுட்டு வேலைக்கு போக சிரமமா இருக்கும்ல…”
“போய்த்தானே ஆகணும் அத்தை. எப்போதும் இப்படியே இருந்திட முடியுமா?”
“அதுவும் சரித்தான். இது விஷயமா நாங்க ஒன்னு யோசிச்சு வச்சிருக்கோம். மாமா வரட்டும் கலந்து பேசுவோம். இப்போ நீ போய் காபி போட்டு குடி… எனக்கு மாட்டுக் கொட்டகையில் வேலை இருக்கு.”
“சரிங்கத்தை…” என்று உள்ளே நுழைந்தது தான் தாமதம் வானதி அவளை பிடித்துக்கொண்டாள்.
“அப்பாடி வந்துட்டீயா… நீ இல்லாம எனக்கு இங்க ஒருமாதிரி இருந்துச்சு.”
“இனி உனக்கு அந்த கவலை வேண்டாம். ஊருக்கு தயாராகு.” என்றுவிட்டு அறைக்குச் சென்றாள் குந்தவை. அவளையே தொடர்ந்த வானதியின் முகம் சுருங்கிவிட, “என்னது ஊருக்கா?” என்ற அவள் குரலும் சுரத்தை இழந்திருந்தது.
“ஏன் இங்கேயே இருந்திடலாம்னு யோசனை எதுவும் வச்சிருக்கியா என்ன? என்னைக்கு இருந்தாலும் வீட்டுக்கு போய்த் தானே ஆகணும். நான் மாமாகிட்ட இன்னைக்கே பேசிடுறேன்… நாளைக்கு அங்க கிளம்ப தயாரா இரு…” என்க, கையை பிசைந்துகொண்டு நின்றாள் வானதி.
அவளை கண்டுகொள்ளாமல் பையை அதனிடத்தில் வைத்த குந்தவை, வாட்ச்சை கழற்றி வைத்துவிட்டு அலமாரியைத் திறக்க அன்று கோபத்தில் தூக்கி எறிந்த புடவை சுருட்டி வைக்கப்படிருந்தது. ஒரு பெருமூச்சுடன் அதை எடுத்தவள் மடித்துக்கொண்டே, “பிள்ளைங்க தூங்குறாங்களா? சத்தத்தையே காணோம்?”
“ஹம்… நான் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்.” என்று வானதி முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டாள்.

Advertisement