Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-1

 

காண வேண்டும் சீக்கிரம்… என் காதல் ஓவியம்

வராமலே என்னாவதோ… என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா

கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா…

கனிவாய்…மலரே… உயிர் வாடும் போது ஊடலென்ன

பாவம் அல்லவா…

 

காலை வேளை பரபரப்பில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துகொண்டு இருந்தனர்…அவர்களின் தேவை எல்லாம் நாளுக்கு நாள் அதிகம் ஆனதே தவிர குறையவில்லை..அதை செவ்வனவே நிறைவேற்றும் வண்ணம் தன்னுள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருந்தது பெங்களூர் மாநகரம்…

 

பெங்களூர் கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் (3,000 அடி) உயரத்தில், இருப்பதால் பெங்களூரு ஆண்டு முழுவதும் அதன் இனிமையான காலநிலை அறியப்படுகிறது. இதன் உயரம் தான் இந்தியாவின் முக்கிய பெரிய நகரங்களில் மத்தியில் உயர்ந்தது ஆகும்…

 

பெங்களூரில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து கோரமங்களாவிற்கு வேலைக்கு செல்பவர்களும்,கல்லூரிக்கு செல்பவர்களும் என ஒவ்வொருவரும் அந்த டிராபிக் ஜாமில் நீந்தி தத்தம் இடம் சேருவதற்குள் சோர்ந்து போனர்…

 

ஐந்து நிமிடமாக தன் ஸ்கூட்டியில் அமர்ந்து பச்சை விளக்கு எரிகிறதா???சிவப்பு விளக்கு எரிகிறதா??முன்னால் வண்டி ஏதாவது நகர்கிறதா??என பார்த்து கொண்டு,அந்த டிராபிக் போலீஸை மனதிற்குள் வறுத்து எடுத்துகொண்டு இருந்தாள் ஸ்ரீ…

 

தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக பெங்களூர் இடம் பெயர்ந்தவள்…XYZ சாப்ட்வேர் கம்பெனியில் ப்ரோகிராமராக வேலை செய்பவள்…24 வயது இளம் யுவதி…

 

அழகானவள்,அறிவானவள்,திறமையானவள்,பிடிவாதமானவள்.தனக்கு வேண்டும் என்றால்அது கிடைக்கும்வரை போராடுபவள்,கொஞ்சம் துடுக்கானவள்…இவளின் இத்தகைய குணங்களில் ஒரு குணம் அவளின் வாழ்வில் எந்த அளவிற்கு வேதனையை அளிக்கும் என அவள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை…

 

முன்னால் இருந்த கார் நகரவும் சிறு நிம்மதி அடைந்து தன் ஸ்கூட்டி பெப்பை நகர்த்தினாள்..அவளின் கெட்ட நேரமோ என்னவோ,பெப் தெரியாமல் தன் பக்கத்தில் இருந்த பைக்யினை இடித்துவிட்டு ஒரு இருமலுடன் அமைதியாக நின்று கொண்டது…பக்கத்தில் இருப்பவன் இவளை பார்த்து முறைக்கவும் அவனை பார்த்து ஹிஹி என இளித்துவைத்தாள்..

 

அவனோ “லூசு போல இருக்கு,சாரி சொல்லாம பல்லை இளிக்கிறது பாரு “என கன்னடத்தில் சொல்லிவிட்டு சிக்னல் விழவும் அவன் பறந்து சென்றுவிட்டான்…. போனவனை பார்த்து முறைத்தவள்,தற்போது டிராபிக் போலீஸை விட்டு இப்போது முகம் மற்றும் பேர் தெரியாதவனை வறுத்தெடுத்தாள்..

 

பிறகு தனது பெப்யிடம் “அவன் இருக்கான் நீ கவலைபடாத செல்லம்,உனக்கு ஒண்ணும் ஆகல,இல்லன்னா ஹாஸ்பிடல் (மெக்கானிக் கடை) போய்டலாம் “என தனது பெப்யிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.. பின்னால் இருந்து கேட்ட ஹார்ன் ஒலியில் பெப்யிடம் பேசுவதைவிட்டு அதனுடன் தனது பயணத்தை தொடர்ந்தாள் தன் அலுவலகத்தை நோக்கி…

 

தன் அலுவலக வளாகத்தில் தன் பெப்பியினை நிறுத்திவிட்டு தனது ஐடிகார்டினை கொண்டு உள்ளே நுழைந்தாள்…உள்ளே நுழைந்தவளை கண்டு அவளை விட மூன்று வருட சீனியர்கள் பிரபு மற்றும் மிருணா “குட் மார்னிங்ஸ்ரீ…“என்றனர் ஒரு சேர…

 

ஸ்ரீ “குட் மார்னிங் கைய்ஸ் ,அப்புறம் எப்படி இருக்கீங்க”.

பிரபு “நாங்க நல்லா இருக்கோம் ஸ்ரீ ,நீ எப்படி இருக்க” என அக்கறையாக விசாரித்தான் தனது தங்கை போன்றவளை…ஸ்ரீயும் சிரித்துக்கொண்டே “எனக்கு என்னப்பா,நான் ரொம்ப சௌக்கியமா இருக்கேன்..”என்றவள் மிருணாவின் அருகில் சென்று “அப்புறம் மேடம் ஹனிமூன் எல்லாம் எப்படி போச்சு,நல்லா என்ஜாய் பண்ணீங்களா…”என்றாள் குறும்போடு கண்களை சிமிட்டி…

 

அவள் கேட்டதை புரிந்துக்கொண்ட மிருணாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது,அதனை அவளின் ஆருயிர் காதலன் மற்றும் கணவன் பிரபு மையலாய் பார்த்துகொண்டு இருந்தான்…ஆம் பிரபுவும் மிருணாவும் காதலித்து சமீபத்தில் திருமணம் புரிந்தவர்கள்…இருவருக்கும் மதுரை தான் சொந்த ஊர்…வேலைக்காக வந்தவர்கள் பார்த்து பழகி பிடித்து காதலித்தனர்…

 

பிறகு பெற்றோரின் அனுமதியில் திருமணம் செய்யலாம் என எண்ணி அவர்களிடம் சொல்லும்போதே அவர்களின் காதலுக்கு இரண்டு பக்கமும் போர் கொடியை தூக்கினார்களே தவிர,பச்சை கொடியினை யாரும் தூக்கவில்லை….

 

அப்போது தான் கம்பெனியில் சேர்ந்து இருந்த ஸ்ரீ எல்லோரிடமும் சீக்கிரம் ஒட்டிகொண்டாள்…அதுவும் ஸ்ரீயின் துறுதுறுப்பு,குறும்புதனம் எல்லோரையும் அதிகமே கவர்ந்தன..

 

மிருணாவிற்கு ஸ்ரீயின் குறும்புதனம் மிகவும் பிடித்தமான ஒன்று…ஸ்ரீக்கும் மிருணா என்றால் மிகவும் பிடித்தம்,அவளின் அமைதியான குணம் ஸ்ரீயினை ஈர்த்த ஒன்று…பின் மிருணாவுடன் அவள் நட்பு இறுகியது…இதனிடையில் மிருணா-பிரபு அவர்களின் காதலைதெரிந்துகொண்டவள்,அவர்களுக்கு பிறப்பிடத்தில் இருந்து எதிர்ப்பையும் தெரிந்துகொண்டாள்…

 

பிறகு அவர்களை பதிவு திருமணம் செய்து கொள்ளும்படி தனது யோசனையை சொன்னவள் அதற்கான ஏற்பாட்டினையும் அவளின் புது நண்பர்களின் உதவியுடன் செய்தாள்…சில பல பிரச்சனைகளின் இடையில் நண்பர்கள் புடைசூழ அவர்களின் திருமணம் இனிதே நடந்தது…பிறகு ஹனிமூன்போகவும் ஏற்பாடு செய்து அவர்களை பிரான்ஸ் அனுப்பினாள்… கம்பெனி சார்பில் எல்லா செலவையும் அவர்களே ஏற்றுகொள்ளும்படியும் செய்தாள்…பிரபுவும் ஸ்ரீயினை தன் உடன் பிறந்த தங்கையாகவே கருதினான்…

 

பிரபுவின் பார்வையை உணர்ந்த மிருணாவின் முகம் இன்னும் அந்திவானமாய் சிவந்தது…இருந்தும் மனதில் “ஸ்ரீ முன்னாடியே வச்சிக்கிட்டு பாக்குற பார்வையை பாரு,சரியான திருட்டு பையன் “என செல்லமாக தனது கணவனை திட்டியவளும் அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்…

 

இவர்களின் மோனநிலையை பார்த்தவள், சிறிது நேரம் அதை கண்டும் காணாமலும் ரசித்தவள் பிறகு இருக்கும் இடம் உணர்ந்து”ஷ்…பப்ளிக் பப்ளிக்” அவர்களை நினவுலகிற்கு கொண்டு வந்தாள்…மிருணா அவளை செல்லமாக “போடி..”என்றும் ,பிரபு அவளின் தலையினை கலைத்துவிட்டும் அந்த இடத்தினை விட்டும் அகன்றனர்…

 

ஸ்ரீயும் தனது இடத்திற்கு சென்று சிஸ்டமை ஆன் செய்து அன்றையவேலையில் மூழ்கினாள்…பிறகு அவளின் குழுத்தோழி வீணா வந்து அழைக்கவும் தான் நிமிர்ந்தாள்…

 

வீணா “என்ன ஸ்ரீ ரொம்ப வேலையா??,,சாப்பிடக்கூட போகாம..வா போகலாம்..”

 

ஸ்ரீ “அப்படி எல்லாம் இல்ல வீணை..மேனேஜர் மெயில் அனுப்பி இருந்தார்,அதுக்கு ரிப்ளே பண்ணி,மீதி வொர்க் முடிக்க லேட் ஆச்சு “என்றாள் நடந்தபடியே…

வீணா “உன்னை வீணைன்னு கூப்பிடாத அப்படின்னு எத்தனை தடவை சொல்றது “என்று கீச்சு குரலாய் வெளிவந்தன வீணாவின் வார்த்தைகள்…அவளின் கீச்சு குரலை கேட்கும் போதெல்லாம் ஸ்ரீக்கு வீணை இசை போல் இருக்கும்..வீணை என்று சொன்னால் வீணாவிற்கு இன்னும் கோவம் அதிகம் ஆகுமே தவிர குறையாது…அது அவளை கிண்டல் செய்வதாக கருதுவாள்..

 

அதனாலே ஸ்ரீ வீணாவை வெறுப்பேற்ற வீணை என்று தான் எப்போதும் அழைப்பாள்…இப்போதும் அப்படியே அழைப்பதை பார்த்து கோவம் கொண்டு அவளின் பக்கத்தில் அமராமல் வேறு மேசையில் சென்று அமர்ந்து கொண்டாள் வீணா…

 

அவளின் சிறு கோவத்தினை உணர்ந்த ஸ்ரீயும் எதுவும் பேசாமல் உணவினை உண்ண ஆரம்பித்தாள்…சிறிது நேரத்தில் தன்னுடன் வந்து அமர்வாள் அப்படி இல்லை என்றாலும் வந்து அழைப்பாள் என எண்ணி அமர்ந்து இருந்தவளின் எண்ணத்தினை பொய்யாக்கி தனது ஹாஸ்டல் உணவினை உண்ண ஆரம்பித்தவளை கண்டு கோவமுற்று அவளின் அருகில் சென்று தனது உணவு பாக்ஸினை “நங்…” என்று சத்தத்தோடு வைத்தாள் வீணா…

 

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது உணவில் மூழ்கி இருந்தவளை கண்டு இன்னும் வீணாவிற்கு BP  பல மடங்காக எகுறியது..இருந்தும் அடக்கப்பட்ட கோவத்துடன் “ஸ்ரீஸ்ரீஸ்ரீ…………”என்றாள்…

 

அவளின் அழைப்பில் இருந்தே அவளின் கோவத்தின் அளவினை கண்டு கொண்ட ஸ்ரீ வேறேதும் பேசாமல் “சாரி வீணுகுட்டி,தப்பு தான்,இனி இப்படி பண்ண மாட்டேன்,நோ கோவம்,என் செல்லம் இல்ல,நான் வேணும்னா தோப்பு காரணம் போடறேன்,சரியா…,கொஞ்சம் சிரி பார்க்கலாம்…”என அவளின் தாடையினை பிடித்து செல்லம் கொஞ்சினாள் ஸ்ரீ…

அவள் செய்கையில் வாய்விட்டு சிரித்தாள் வீணா…தன் செய்கையில் சிரித்த வீணாவினை கண்டு ஸ்ரீயின் மனம் பூரிப்படைந்தது…வீணா சிரித்து பேசும் ஒரே ஆள் ஸ்ரீ தான்,அவளை தவிர வேறு யாரிடமும் அவள் பேசக்கூடமாட்டாள்..

அப்படியே பேசினாலும் ஒரு சில வார்தைகள் மட்டுமே…வீணா அவள் மனதளவில் ஒடுங்கி போய் இருந்த போதெல்லாம் ஸ்ரீயின் பேச்சுகளே அவளுக்கு ஊக்கமருந்து,ஆகாரம்…

 

ஸ்ரீயின் மனதில் “இன்றும் போல் என்றும் இவள் இப்படியே சிரிப்புடனே இருக்கணும் கணேஷா…”என மனதிற்குள் தனது நண்பன் மற்றும் அவளின் இஷ்ட தெய்வமான கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்…ஆனால் அவளாலே தன் தோழியின் இந்த சிரிப்பும் பறிபோக போகிறது என பாவம் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்….

 

வீணாவிற்கு அப்பா,அம்மா கிடையாது…அண்ணாவின் அரவணைப்பில் வாழ்கிறவள்…அமைதியான சுபாகம் கொண்டவள்…ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டாள்…அவளின் கோவம் எல்லாம் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டுமே வெளிப்படும்…அவளின் அண்ணா மாதவன் சென்னையில் ஒரு கம்பெனியில் சூப்பர்வைசர் ஆக வேலை பார்க்கிறான்…

 

இருவரும் விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள வீட்டில் சந்திப்பது மட்டுமே…மற்றபடி அவர்கள் போனில் தான் பேசிகொள்வர்..அவனும் பாசம் உள்ளவனே..இருந்தும் தங்களது பொருளாதார நிலையினை கண்டு சிறிது நாள் அவன் முன்னேறும் வரையில் தங்கையினை வேலைக்கு அனுப்பிஉள்ளான்…

 

அவர்களுக்கு உதவும் பொருட்டு யாரும் இல்லை..அவர்கள் செலவை அவர்கள் தான் பார்த்துகொள்ள வேண்டும்…வீணா மற்றும் மாதவனின் அப்பா நடராஜ்- அம்மா ஜெயந்தி  காதலித்து,வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்துகொண்டவர்கள்…ஆகையால் அவர்களுக்கு சொந்தங்கள் என்று யாரும் இல்லை…

 

தங்கள் இணையே தங்களுக்கு உறவு என்று வாழ்ந்தவர்கள்..பிறகு ஜெயந்தி இதய நோயால் இறக்க,மனைவி இறந்த சோகம் தாங்காமல் குடித்து குடித்து தன்னை பற்றியும்,தன் குழந்தைகளின் வாழ்க்கை பற்றியும் எதுவும் சிந்திக்காமல் சிறிது சிறிதாக அழித்து கடைசியில் தன்னை முழுவதுமாக  அழித்துகொண்டவர்…

 

யாரும் இல்லாமல் அனாதையாக இருந்த போது பக்கத்துவீட்டு மாமி மரகதம் மட்டுமே அவர்களுக்கு உதவி செய்தார்…அவரின் உதவியில் சாப்பிட கிடைத்த பணத்தினை கொண்டு விஷம் வாங்கி சாப்பிட சென்ற பிஞ்சு உள்ளங்களை எதர்ச்சியாக கண்டு அவர்களிடம் ஓடினார் மாமி மரகதம்….

 

மாமி மரகதம் “ஏன் டா,இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க..உங்களுக்கு யாரும் இல்லன்னா என்ன,நான் இருக்கேன், நான் உயிரோட இருக்கற வரைக்கும்,நான் உங்கள் பாத்துக்குறேன்,எனக்கும் யாரும் இல்ல குழந்தைகளா,நானும் அனாதை தான்..”என்று மாமி அவர்களை அணைத்து கண்ணீர் வடித்தார்…

 

ஐந்து வயதில் எதுவும் தெரியாத வீணா அவரின் அனாதை என்ற வார்த்தையினை கேட்டு “இல்ல மாமி,நீங்க அனாதை இல்ல…இனி நாங்களும் அனாதை இல்லை “என தனது தளிர் கரங்களினால் அவரின் வாயினை மூடி,கண்ணீரினை துடைத்தது…அதை கண்ட மாமி மரகதம் “ஆமாடி குழந்தே…இனி நான் அனாதை இல்லை,எனக்கு இரண்டு பிள்ளைங்க,நான் அனாதை இல்லை “ என்று அவர்களை  கட்டிக்கொண்டார்…

 

அதன்பிறகு மாமி மரகதம் நிழலில் தங்களது வாழ்கையினை தொடர்ந்தனர் வீணாவும் மாதவனும்…தன்  தாய் தந்தை இறந்தபோதுக்கூட கத்தி கதறாத வீணா மாமி மரகதம் இறந்தபோது அவள் அழுத அழுகைக்கு அளவே இல்லை…”அண்ணா மாமியை எழச் சொல்லுங்க …ஏன் படுத்துட்டே  இருக்காங்க…எழச்சொல்லு  அண்ணா ..”என்று கதறினாள்…

 

“மாமி நம்பளை அனாதை ஆக்கிட்டு போய்டுச்சு டா வீணு…நமக்கு இனி யாரும் இல்லை..” என மாதவனாலும் அவளுடன் சேர்ந்து அழ மட்டுமே முடிந்தது அவளை எப்படி சமாதானம் படுத்துவது என அவனுக்கும் தெரியவில்லை…

 

“இல்ல மாமி நம்பளை அனாதை ஆக்காது,நான் உங்களோடவே இருப்பேன்னு சொன்னாளே ,மாமி எழுந்திரிங்கோ,எழுங்க மாமி ,அண்ணா என்ன என்னவோ சொல்றான் …”என்று கதறி தீர்த்தாள் …

 

அவள் அழும் போதே தன்னை நோக்கி ஓடி வரும் மாமி ,தான் கதறினால்  கூடஇன்னும் எழுவாத  மாமியை கண்டு,அவள் யாரும் வரமுடியாத இடத்திற்கு சென்று விட்டாள் என உணர்ந்தாள் … மாதவனுக்கு வேதனை இருந்தாலும் அந்த பதினொன்பது வயதில் தன்னை ஓர் அளவிற்கு மீட்டுக்கொண்டான்…

 

ஆனால் அவனால் என்ன முயன்றும் வீணாவினை சரி செய்ய முடியவில்லை என்பதைவிட மாமி மரகதம் இழப்பில் இருந்து வெளிக்கொண்டு வர முடியவில்லை…அவர் இருக்கும்போது இருந்த அவளின் கலகலப்பு அவர் சென்றபிறகு அவருடனே  சென்றுவிட்டதோ என்னவோ, அவளின் கலகலப்பு  காணாமல் போனது…அன்று உடைந்தவள் தான் இன்னும் மீளாமல் இருக்கிறாள் வீணா…

 

பழைய நினவுலகில் மூழ்கி இருந்தவளை வீணா நினவுலகிற்கு கொண்டு வந்தாள்…வீணா “என்ன…??“ என்று கேட்கவும் “ஒன்றுமில்லை..“ என்றாள் ஸ்ரீ…பிறகு வீணாவும் அவளும் உண்டு முடித்து தத்தம் இடத்தில் சென்று வேலையில் மூழ்கினர்…மீண்டும் வேளையில் மூழ்கிய ஸ்ரீயினை அவளின் குழுத்தலைவர்  வந்தே நிமிரவைத்தான்…

 

“ஸ்ரீ நம்ப எல்லோரையும் ப்ராஜெக்ட் மேனேஜர் வரச்சொன்னார்…”என்றான் பிரதீப்….

பிரதீப் இவர்களுடன் குழுவில் வேலை பார்க்கும் குழுத்தோழன்..சேலம்மை பிறப்பிடமாக கொண்டவன்… படிப்பினை சென்னையில் முடித்து அங்கே இதே கம்பெனி பிரிவில் வேலை செய்து பெங்களூர்க்கு மாற்றலாகி வந்துள்ளவன்…அப்பா ஆறுமுகம் பஸ் டிரைவர்,அம்மா ஜானகி இல்லத்தரசி…அக்கா மதூரி திருமணம் ஆகி இரு குழந்தைகள்…

 

பிரதீப்  மிகவும் கோவக்காரன் ஆனால் நல்லவன்…வீணா  மற்றும் ஸ்ரீக்கு ஒரு வருட சீனியர்.. அவனுக்கு கீழே வீணா,ஸ்ரீ ,சுபர்ணா வேலை செய்கின்றனர்… ஆனால் இவர்கள் எல்லாம் நண்பர்கள் போலவே பழகுவர்…வீணாவைத்தவிர மற்ற அனைவரும் ஜாலி  பேர்வழி…

 

அவனின் அழைப்பதை கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் அவன் கோவமாக வீணாவினை முறைத்துக்கொண்டு இருப்பதை கண்டு “எப்ப தான் இவன் பொறுமையா பேசப்போறனோ,சரியான சிடுமூஞ்சி,வீணாவையும் முறைக்குறத்தை பாரு…கடவுளேசீக்கிரம் இவனை மாத்து “ என தனக்குள் நொந்துகொண்டவள் “சரி பிரதீப் போலாம்…” என்றாள் அவனிடம்…

 

பிறகு“வீணா வா போலாம்,ஸ்டீல் வரச்சொல்லுச்சாம்…”என்றாள் வீணாவிடம்….அதன்பின்  நினைவு வந்தவளாக “எங்க சுபர்ணாவை ஆளையே காணோம்..”என்று தன் இன்னொரு குழுத்தோழியினை பற்றி பிரதீப்பிடம் விசாரித்தாள்..

 

பிரதீப் “அவங்களுக்கு உடம்புக்கு முடியலையாம்,வரலன்னு மெயில் பண்ணி இருந்தாங்க…”என்று தகவலை அவளிடம்பகிர்ந்துகொண்டவன்….ப்ராஜெக்ட் மேனேஜர் அறை நோக்கி அவர்களுடன் சென்றான்….

விலகல் தொடரும்…

Advertisement