Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??  – 30

 

மகனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதத்தினை காண முடியாமல் உரக்கடைக்கு செல்ல வெளியே வந்தவர் ,அங்கு இருந்த விஜயினை பார்த்து “ஹே வரு..எப்போ வந்த…ஏன் வெளியவே நிக்கிற…வா உள்ள….” என்றவர் “இப்போ  தான் பா..”என்ற அவனின் பதிலில் “ “அப்படியா…வா…”என்றவர் “சாரு… சாரு… வரு வந்து இருக்கான்… வந்து பாரு…வா…”என்று மனைவியை அழைத்துக்கொண்டே உள்ளே சென்றார்…

 

கணவரின் அழைப்பில் இருந்து வரு வந்ததை சாரதா அறிந்து கொண்டாலும் யாதவனின் மேல் இருந்த கோவத்தில் அமைதியாய் சமையற்கட்டிற்குள்ளே இருந்தார்…

 

எப்போதும் தான் வீட்டிற்கு வருவது என்றால் தன்னை காண ஓடிவரும் அம்மா,குடிக்க ஏதாவது குடுப்பவர் ,இன்று தன் முகத்தினை கூட பார்க்க விரும்பாமல் சமையற்கட்டிற்குள் இருப்பதை கண்டே அவரின் கோவத்தின் ஆழத்தை உணர்ந்தவன்,எதிரில் அமர்ந்து இருந்த யாதவனை முறைத்தான்…

 

தம்பியின் முறைப்பில் குற்றவுணர்வு அடைந்தவன் அமைதியாய் தலையை குனிந்துகொண்டான்…தாயினை காண சமையல் அறைக்குள் சென்றவன் “அம்மா…”என்றான் சாரதாவின் அருகில் சென்று…

 

விஜய் அழைப்பதை காதில் விழுந்தது போல காட்டிகொள்ளாமல் அவர் தன் பாட்டில் காய்கறிகளை நறுக்கிக்கொண்டு இருந்தார்…”அம்மா…”என அவரது கையினை பிடித்து தன் பக்கம் திருப்பியவன் “நான் என்னமா பண்ணேன்..அவன் மேல இருக்குற கோவத்தை என் மேல காமிக்கிறீங்களே..நியாயமா…”என அவரது கண்களை பார்த்து கேட்க…

 

அவனை பார்த்துக்கொண்டு இருந்த சாரதாவின் கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது…தாயின் கண்ணீரை கண்டு பதறியவன் “என்னமா..எதுக்கு இப்போ அழுறீங்க…நீங்க அழுவுற அளவுக்கு என்ன நடந்துடுச்சு…”என பதட்டத்தோடு அவரை அணைத்து ஆறுதல்படுத்தினான்….

 

அவனின் தோள் சாய்ந்து கண்ணீர் உகுத்தவர் “பின்ன என்னடா,அவன் இஷ்டத்துக்கு பண்றதா இருந்தா அவனையே கல்யாணம் பண்ணிக்க சொல்லு…பொண்ணு வீட்டுக்கு போயிட்டு ,அழகா அம்சமா இருக்குற பொண்ணை பார்த்துட்டு,எதுவும் பேசாமல் வந்துட்டான்…இங்க வந்து உன் ப்ரண்ட் சுரேஷோட தங்கச்சியை விரும்புறேன்..அவளை பொண்ணு கேளுங்க அப்படின்னு சொல்றான்…என்னடா இதெல்லாம்…”என முதலில் அழுகையில் ஆரம்பித்தவர் பின் கோவத்தில் முடித்தார்…

 

“சுரேஷா..சுரேஷை இவங்க எங்க பார்த்தாங்க…”என யோசனையில் இருந்தவன்,”என்னமா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..சுரேஷை நீங்க எங்க பார்த்தீங்க..எனக்கு ஒண்ணுமே புரியல..”என குழம்பிய முகத்துடன் கேட்க…

 

சாரதா நடந்ததை அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனிடம் சொன்னவர்,யாதவன் சுரேஷின் தங்கை சரண்யாவினை விரும்புவதையும்,அதனால் தான் இப்போது பார்த்த பெண்ணை வேண்டாம் என அவன் மறுத்ததையும் ஒன்றுவிடாமல் வருவிடம் கூறினார்…

 

சுரேஷின் தங்கையை தான் யாதவன் விரும்புகிறான் என எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டவனுக்கு சாரதாவின் எண்ணமும் சரி தான் என்று தோன்றியது…ஒன்றுக்குள் ஒன்றாய் இருக்கும் குடும்பத்தில் ஒரு பெண்ணை பார்த்துவிட்டு,வேறு பெண்ணை பிடித்து இருக்கிறது என்று சொல்வது அவனுக்கும் பிடிக்கவில்லை…இருந்தும் என்ன செய்ய அதனை செய்தது அவனின் அண்ணன் யாதவன் அல்லவா…

 

எப்படியேனும் சாரதாவினை சமாதானப்படுத்துவது தான் இப்போதைக்கு முக்கியம் எனப்பட “அம்மா எல்லாம் சரி தான் மா…கோவப்படாதீங்க…நான் அவன் கிட்ட பேசுறேன்…கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க…”என சொல்ல அவனை பார்த்து முறைத்தவர் “அது தான பார்த்தேன்,நீ எங்க எனக்கு சப்போர்ட் பண்ண போற…எல்லாம் உன் அண்ணனுக்கு தான்…போ நீ அந்த பக்கம்…”என கோவமாய் அவனை அந்த பக்கம் தள்ளினார்…

 

“ஆஹா…இது என்ன புது பூதம்..”என மனதிற்குள் அலறியவன் “அம்மா அவனுக்கு போய் நான் சப்போர்ட் பண்ணுவேனா…நான் அவன் பண்ணது சரின்னு சொல்லல..தப்புன்னு தான் சொல்றேன்…அவனுக்கு இருக்கு கச்சேரி…” என்றவன் “என்னமா நான் வந்து எவ்வளவு நேரம் ஆகுது..இன்னும் எனக்கு பச்ச தண்ணி கூட குடுக்கல..நீங்க ரொம்ப மோஷம்…”என செல்லமாய் முறுக்கி கொள்ள…

 

அவனின் செல்ல கோவத்தில், அவருக்கு இருந்த கோவம் எல்லாம் பறந்து போக “அடேய்…ரொம்ப பண்ணாத..ஒரு நிமிஷம் இரு..உனக்கு பால் காய்ச்சிட்றேன்..”என்றவர் சிறிது நிமிடத்தில் பாலினை காய்ச்சி ஒரு டம்பளரில் ஊற்றியவர் அவன் கையில் திணித்தார்…

 

“ஹி…ஹி…தேங்க்ஸ் மா…என் செல்லம்…”என செல்லம் கொஞ்சிய வரு பாலினை உறிஞ்ச ஆரம்பித்தான் யாதவனை பார்த்துக்கொண்டே…யாதவன் வருவினை பாவமாய் பார்க்க “நான் பார்த்து கொள்கிறேன்..”என்பது போல கண்மூடி அவனை சமாதானபடுத்தியவன்,குடித்து முடித்த டம்பளரை சாரதாவின் கையில் குடுத்துவிட்டு “கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வந்துட்றேன் மா…”என்றவன் அறைக்கு சென்றான்…

 

அங்கு அமர்ந்து இருந்த யாதவனை முறைத்து பார்த்த சாரதா அறைக்கு சென்று கதவை சாத்திகொண்டார்…மனோகரன் யாதவனின் தோளில் தட்டிகொடுத்தவர் உரக்கடைக்கு சென்றுவிட்டார்…தனித்து விடப்பட்டவன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாய் சோபாவில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்…

 

“எப்படி அம்மாவை சமாதானப்படுத்துவது,ஏற்கனவே அம்மாகிட்ட வரு மாதிரி நம்பளோட விருப்பத்தை சொல்லி இருக்கணுமோ..சொல்லாம விட்டது தப்போ..”என அவன் மனம் காலம் கடந்து தான் செய்த தவறினை சிந்தித்து பார்த்துக்கொண்டு இருந்தது…

 

“நீ செஞ்சது ரொம்பவே தப்பு தான் யாதவ்…”என்றபடி அவனின் அருகில் அமர்ந்த தம்பியினை பார்த்தவன் பார்வை நிர்மலமாய் எந்த உணர்வும் இல்லாமல் அமைதியாய் இருந்தது…யாதவனின் பார்வையில் இருந்தே அவன் உள்ளுக்குள் நினைப்பதை அறிந்த வரு “விடு யாதவ்..உன்னோட நிலைமையும்..நீ என்ன நினைச்சு செஞ்ச அப்படின்றதும் எனக்கு புரியுது…அம்மா இன்னும் யோசிக்க ஆரம்பிக்கல..கண்டிப்பா அம்மா சரியாகிடுவாங்க..நீ எதுவும் கவலைப்படாத…சியர்  அப் மேன்…”என சொல்ல..

 

யாதவ் “எப்படி வரு,எதையும் நினைச்சு கவலைப்படாம இருக்க முடியும்…நான் ஏதோ ஒரு எண்ணத்துல செய்ய போய் இப்படி ஆகிடுச்சே…அம்மாகிட்ட சொல்லி இருக்கணும்டா…அது சொல்லாம விட்டது தப்பு தான்…நான் என்ன பண்றது சொல்லு…பிடிச்ச பொண்ணுக்கிட்ட என்னோட விருப்பத்தை சொல்லிட்டு அம்மாகிட்ட சொல்லலாம் அப்படின்னு நினைச்சது தப்பா…காதல் சொல்ல தைரியம் இல்லாம இருக்கேனே அது தப்பா…பச் விடுடா..”என சல்லிப்புடன் சொன்னவன் பின்

 

“அம்மா விருப்பபடியே நான்  அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்…ஆனா அந்த பொண்ணு வேற ஒருத்தனை விரும்புது டா…அந்த பொண்ணு தான் அப்படி சொல்ல சொல்லிச்சு…நான் என்னடா பண்ணட்டும்…”என சொல்லிக்கொண்டே சென்றவன் தன் கண் முன்னே கோவமாய் நின்றுக்கொண்டு இருந்த சாரதாவினை கண்டு அப்படியே பேச்சினை நிறுத்த…

 

அவனை உறுத்து விழித்த சாரதா அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்…வரு “அம்மா….”என்று அதிர்ந்து கத்த, யாதவன் அதிர்ந்து போய்  கன்னத்தில் கைவைத்த படி சாரதாவினை பார்த்தான்…சாரதா “ஏன் டா..என்கிட்ட முன்னாடியே சொல்லல…அப்படி என்ன நான் உன்கிட்ட ப்ரண்ட்லியா இல்லாம போயிட்டேன்…என்கிட்ட இந்த விஷயத்தை முன்னாடியே  சொல்லி இருக்கலாம் இல்ல…”என கோவம் மற்றும் ஆதங்கம் இரண்டும் கலந்து வெளிப்பட்டது அவரின் குரலில்…

 

”என்னைக்காவது நான் உங்களோட விருப்பத்துக்கு மாறா நடந்து இருக்கேனா..இல்ல அப்பா தான் நடந்து இருக்காறா…”என யாதவனை பார்த்து கேட்க..

 

அவரின் கையினை பிடித்துக்கொண்ட யாதவன் “சாரி மா..உங்ககிட்ட சொல்லகூடாது அப்படின்னு எல்லாம் இல்ல…சரண்யாகிட்ட சொல்லிட்டு அவளோட விருப்பம் தெரிஞ்ச பிறகு சொல்லலாம்னு இருந்தேன்..ஆனா கடைசி வரைக்கும் எனக்கு அவகிட்ட சொல்ற அளவுக்கு எனக்கு தைரியம் வரல மா…அங்க எனக்கு சரண்யாவை பார்க்கவும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல…”என்றவன் மேலும் தொடர்ந்தான்…

 

“நாம்ப பொண்ணு பார்க்க போனமே அந்த பொண்ணுகிட்ட நான் பேசறதுக்கு முன்னாடியே,அவ வேற யாரோ ஒருத்தனை லவ் பண்றதாவும்,நீங்க ஏதாவது சொல்லி பிடிக்கல அப்படின்னு சொல்லிடுங்க,அப்படின்னு சொல்லும் போது எனக்கு ஒரு வாய்ப்பா எடுத்துகிட்டேன் மா…ஆனா நீங்க இந்த அளவுக்கு கோவப்படுவீங்க அப்படின்னு கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கல மா…நான் பண்ணது தப்பு தான் மன்னிச்சிடுங்க மா..”என அவரிடம் மன்னிப்பு கேட்க…

 

அவனின் தலையை ஆதரவாய் கோதியவர் “நீ முன்னாடியே சொல்லி இருந்தா இந்த அளவுக்கு பிரச்சனை வந்து இருக்காது…அது தான் எனக்கு கோவமே…வேற எனக்கு ஒண்ணும் இல்ல..என்னோட பையன் நல்லா இருக்கணும்,அவனுக்கு பிடிச்ச பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னு நான் நினைக்க மாட்டேனா…”

 

“விடு யாதவ்,எல்லாம் நேரம் வேற என்ன சொல்ல…எனக்கு உன்னோட பீலிங்க்ஸ் எல்லாம் புரியுது…ஆனா எப்படிடா பொண்ணு கேட்டு போன வீட்ல வேற பொண்ண கேட்க முடியும்…”என சாரதா மகனின் மேல் இருந்து கோவம் எல்லாம் சென்று அவனின் வாழ்க்கைக்காய் யோசிக்க…

 

அவரது பதிலில் நிம்மதி அடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்…பின் “அம்மா நான் சுரேஷ்கிட்ட பேசுறேன் மா..அது தான் அண்ணன் சொல்றானே..அந்த பொண்ணு வேற யாரையோ லவ் பண்ணுது அப்படின்னு…வேற என்ன பிரச்சனை…”என வரு கேட்க..

 

சாரதா “உனக்கு எதுவும் தெரியாது வரு..அவங்க வீட்ல கேட்டு பார்க்கணும்..கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க..முதல்ல நீ சுரேஷ்கிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசு…”என்றவர் “கொஞ்ச நாள் பொறுமையா இரு யாதவ்..அப்பாகிட்ட பேசிட்டு என்ன பண்றது அப்படின்னு முடிவு பண்ணலாம்…”என்றார் யாதவனிடம்…

 

“சரி மா..நான் சுரேஷ்கிட்ட பேசுறேன்…அவனோட கான்டக்ட் என்கிட்ட இல்ல மா…நான் ப்ரண்ட்ஸ்கிட்ட கேட்டு பாக்குறேன்..”என்ற வரு போனுடன் அங்கு இருந்து நகர்ந்தான்…

 

சாரதாவை பார்த்த யாதவன் “தேங்க்ஸ் மா…இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்…சாரி மா…”என்று கூற “டேய் லூசு…யாருக்கு தேங்க்ஸ் சொல்ற…நான் உன்னோட அம்மாடா..எனக்கு போய் தேங்க்ஸ் ,சாரின்னு உளறிட்டு இருக்க, உனக்கு காதல் முத்தி போச்சு..சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிட்றேன்…”என சொன்னவர் யாதவனின் வெட்கம் அடைந்த முகத்தை பார்த்து “டேய்…உனக்கு வெட்கம் எல்லாம் படத்தெரியுமா…அய்யோ…வரு இங்க வந்து பாறேன்..உன்னோட அண்ணன் வெட்கப்பட்றான்…வா வா சீக்கிரம்..”என கத்த…

 

“அம்மாமா…”என்றான் சிணுங்கலாக…அவனின் சிணுங்களை பார்த்தவர் “சரி சரி யாதவ்…கொஞ்சம் மிச்சம் வை…மீதியை கல்யாணம் முடிஞ்சதும் வெட்கப்பட்டுக்கலாம்…”என மீண்டும் அவர் அவனை கலாய்க்க ஆரம்பிக்க “அய்யோ..அம்மா ஆளை விடுங்க…”என அங்கு இருந்து அறைக்கு ஓடினான்…

 

ஓடும் அவனையே பார்த்தபடி நின்று இருந்தவர் மனம் “எல்லாம் நல்லபடியா நடக்கணும் ஆண்டவா…என்னோட பையன் இப்பவும் போல எப்பவும் சந்தோசமா இருக்கணும்…”என பிராத்திக்க மட்டுமே அவரால் இப்போது முடிந்தது…போனை எடுத்துக்கொண்டு சென்றவன் நந்துவிற்கு அழைத்தான்… ”சொல்லுடா..எப்படி இருக்க..??..”என்றான் அந்த பக்கம் நந்து…

 

வரு “எனக்கு என்னடா ஏதோ உன்னோட புண்ணியத்துல நல்லாவே இருக்கேன்…”என நக்கலோடு சொல்ல…”என்னடா கொழுப்பா…காலையில போன் பண்ணி கடுப்பேத்திட்டு இருக்க…என்ன விஷயம் சொல்லு…”என நந்து பல்லை கடிக்க…

 

வரு “சரி சரி மச்சி..ஓவர் டென்ஷன் ஆகாத…விஷயத்தை சொல்றேன்…எனக்கு என்னோட ப்ரண்ட் சுரேஷோட நம்பர் வேணும்டா..நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ தெரியாது…உன்னோட போலீஸ் மூளையை இதுலயாவது காட்டி கொஞ்சம் கண்டுபுடி..”என மீண்டும் நக்கலாக சொல்ல…

 

நந்து “ஏன்டா உன் ப்ரண்ட் சுரேஷ் நம்பர் உன்கிட்ட இல்லையா..??..அவனை நான் ஒரே டைம் தான் பார்த்து இருக்கேன்…நான் எப்படி டா அவனோட நம்பரை கண்டுபுடிப்பேன்…..”என பாவமாய் கேட்க…

 

வரு “அடப்பாவி நீ போலீஸ்ன்னு வெளிய சொல்லிக்காத..வெட்கக்கேடு..எப்படி தான் நீ திருடங்களை எல்லாம் பிடிக்கிறியோ..அய்யோ கடவுளே…”என தன் தலையில் அடித்துகொண்டவன் “நான் ஜாப்ல ஜாயின் போகும் போது அவங்க கிட்ட எதுவும் சொல்லாம வந்துட்டேன் டா..அவங்க எனக்கு நிறைய முறை கால் பண்ணாங்க ஆனா நான் அவாய்ட் பண்ணிட்டேன்…”என சொன்னவன் நடந்ததை அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனிடம் பகிர்ந்து கொண்டான்….

 

“நீ தான் எப்படியாவது நம்பர் கண்டுபிடிச்சு குடுக்கணும் டா…”என சொல்ல…”சரி டா..நீ ஒண்ணும் கவலைப்படாத நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்…”என்றவன் “ஆனா அந்த மாதவனோட நம்பர் இருக்கும் இல்ல..அவர்கிட்டவே போன் பண்ணி கேட்டா தெரிஞ்சிடும் இல்ல…” என அறிவாளியாக கேட்க…

 

வரு “டேய்..உன்ன எல்லாம் யாருடா போலீஸ் வேலையில சேர்த்தது…உன்ன என்ன பண்றது…அவங்க கிட்ட கேட்குறதா இருந்தா கேட்க மாட்டோமா..ஏற்கனவே யாதவன் பண்ணி வச்சிட்டு வந்து இருக்குற கூத்துக்கு எப்படி டா நம்பர் கேட்க முடியும்…நீயும் யோசிக்காம லூசு மாதிரி பேசாத..”என கடிந்து கொள்ள…

 

”ஆமா இல்ல…”என அந்த பக்கம் அசடு வழிந்தவன் “சாரி மச்சி…அந்த மாதிரி யோசிக்கல…ஈவன் சுரேஷ் கூட உன்னோட அண்ணன் மேல கோவமா இருக்கலாம்…எனக்கு கொஞ்சம் டைம் குடு…சீக்கிரம் அவனோட நம்பர் கண்டுபிடிச்சு சொல்றேன்..சரி டா நான் வச்சிட்றேன்….”என்றவன் அழைப்பை துண்டித்தான்…

 

அதன் பின் சாரதாவிடம் சென்ற வரு நந்துவிடம் விஷயத்தை சொல்லியதையும்,சீக்கிரம் அவன் கண்டுபிடிப்பதாய் சொன்னதையும் பகிர்ந்து கொண்டவன் “இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..சுரேஷ்கிட்ட பேசி எப்படியாவது புரிய வைக்கலாம்…ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்..அந்த பொண்ணோட கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியாகிடும்…அதை சுரேஷ்கிட்ட சொல்லலாம்..அவன் கண்டிப்பா புரிசிப்பான்…”என நிம்மதியுடன் சொல்ல…

 

”ஆமா வரு நீ சொல்றதும் நிஜம் தான்…எனக்கு ரொம்ப பயமா இருந்தது…பேசி பார்ப்போம் அவங்ககிட்ட முதல்ல…அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்…அப்பா வரட்டும் நான் பேசிட்றேன் அவருகிட்ட…சரி வா சாப்பிடலாம்…”என சாப்பிட அழைக்க…”யாதவ் சாப்பிட வா…”என அவனையும் அழைத்தார்…

 

அதன் பின் ஒன்றாய் சாப்பிட்டு முடித்த சகோதர்கள் இருவரும் அடுத்து என்ன செய்வது என சிந்திக்க ஆரம்பித்தனர்…நந்துவிடம் இருந்த நம்பர் கிடைத்ததும் முதலில் சுரேஷிடம் பேசலாம் என முடிவு செய்தனர்…ஆனால் இவர்கள் எல்லாம் பேசுவதற்கு முன்பே சுரேஷ் எல்லாம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டான் என அவர்கள் அறிய வாய்ப்பில்லை தான்…      

 

********************

 

மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு சென்று தகவல் சொல்கிறோம் என்று சொல்லி சென்ற பின் வீணா மனதிற்குள் வருந்துவாள் அவளை சமாதானபடுத்தலாம் என எண்ணி அவளின் அறைக்கு வந்தவனுக்கு உள்ளே சரண்யா வீணாவிடம் யாதவனை பற்றி பொறிந்து தள்ளியது காதில் விழுந்தது…

 

ஆனால் அதற்கு எதிர்மறையாய் வீணாவின் முகம் சந்தோசத்தில் தத்தளித்தது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்தது…சரண்யாவிடம் இருக்கும் அந்த கோவத்தின் சாயல் சிறிது கூட ஏனோ வீணாவின் முகத்தில் இல்லாததை கண்ட சுரேஷ் புருவ முடிச்சுடன் அவளை கண்காணிக்களானான்…சரண்யா அவள் பக்கம் திரும்பியதும் பாவமாய் தன் முகத்தை மாற்றிக்கொண்ட வீணாவினை கண்டதும் அவனுக்கு உள்ளுக்குள் சந்தேகம் உண்டானது…

 

அதுவும் அடுத்து வந்த மாதவன் “இந்த மாப்பிள்ளை இல்லைன்னா என்னமா…வேற மாப்பிள்ளை பார்க்கலாம்..தரகரிடம் வேற நல்ல வரனை பார்க்க சொல்றேன்..”என சொன்னதும் அவளது முகத்தில் தோன்றிய அதிர்ச்சி அவனது சந்தேகத்தை உறுதிபடுத்தியது…

 

மாதவனிடம் அவசரத்திற்கு என்று ஏதாவது ஏற்பட்டால் ஜெயஸ்ரீயின் நம்பரை தொடர்பு கொள்ளுமாறு குடுத்து இருந்தாள் வீணா..அது சுரேஷ் அறிந்த ஒன்றே..ஒரு சில முறை தான் மாதவன் ஜெயஸ்ரீயிடம் பேசி இருக்கிறான்…மற்றபடி அவன் அதிகமாய் பேசியது கிடையாது..

 

மாதவனிடம் சென்ற சுரேஷ் ஜெயஸ்ரீயின் நம்பரை கேட்க…மாதவன் ஏன் என கேலி கேட்க…”உனக்கு எல்லாம் நான் அப்றமா சொல்றான்..நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்..ஒழுங்கா நம்பரை குடு..”என சொல்ல..சுரேஷின் மேல் இருந்த நம்பிக்கையில் வேறேதும் பேசாமல் ஜெயஸ்ரீயின் நம்பரை குடுத்தான்…

 

ஆனால் அவன் அறியாத ஒன்று ஜெயஸ்ரீ தான் வரு காதலிக்கும் பெண்,நந்துவின் அத்தை பெண் என்று…ஜெயஸ்ரீயுடன் பணிபுரியும் பெண் என்று தான் அவனுக்கு தெரியும்….ஏனெனில் வரு எப்பவும் ஜெயஸ்ரீயினை தன் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தியது இல்லை…

 

முதல் ஒரு முறை அவர்கள் எதற்சியாய் வரு ஜெயஸ்ரீயுடன் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு கேட்கவும் நந்துவின் அத்தை பெண் என்று மட்டும் சொல்லி அவர்களின் வாயினை அடைத்துவிட்டான் மேலும் அவர்கள் கிண்டல் கேலிகள் செய்யா வண்ணம்…

 

மாதவனிடம் இருந்து எண்ணை வாங்கியவன் ஜெயஸ்ரீ’க்கு அழைத்தான்…இரண்டு ரிங் போன பிறகு அதனை ஏற்றவள் “ஹலோ…”என சொல்ல…”ஹலோ…நான் சென்னையில இருந்து சுரேஷ் பேசுறேன்…வீணா அண்ணன் மாதவனோட ப்ரண்ட்…” என சுரேஷ் தன்னை அறிமுகபடுத்தி கொள்ள…

 

ஜெயஸ்ரீ வீணாவிடம் பேசும் போது சில முறை அவள் சுரேஷின் புகழாராம் பாடி இருப்பதை கேட்டு இருந்தவளுக்கு, எதிர்பக்கம் பேசுவது சுரேஷ் என எளிதில் அறிந்து கொள்ள முடிந்தது…

 

ஜெயஸ்ரீ “ஹ்ம்ம் சொல்லுங்க அண்ணா…வீணா உங்கள பத்தி நெறைய சொல்லி இருக்கா…எப்படி இருக்கீங்க…”என நலம் விசாரிக்க…”நான் நல்லா இருக்கேன் மா…நீங்க எப்படி இருக்கீங்க…”என அவனும் பதிலுக்கு மரியாதையோடு நலம் விசாரிக்க…

 

“நான் நல்லா இருக்கேன் அண்ணா..”என சொன்னவளுக்கு வேறு என்ன பேசுவது என தெரியாமல் அமைதியானாள்…அதனை உணர்ந்த சுரேஷும் “உன் கிட்ட ஒரு சின்ன ஹெல்ப் வேணும்மா…”என தயக்கத்துடன் இழுக்க…

 

“என்னண்ணா சொல்லுங்க…என்னால முடிஞ்சா செய்யுறேன்…”என்றாள் அவனிடம்…அவளின் ஒளிவு மறைவில்லா பேச்சு அவனுக்கு பிடிக்க ”தேங்க்ஸ் மா…”என்றவன் “எனக்கு வீணாவை பத்தி கொஞ்சம் தெரியனும்..ஐ மீன் அவ யாரையாவது லவ் பண்றாளான்னு..”என தயங்கி தயங்கி கேட்டான்…

 

சில நிமிடம் சுரேஷின் கேள்வியில் அதிர்ச்சியுற்றவள் ,என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழிக்க ஆரம்பித்தாள்..

 

“எதுவா இருந்தாலும் சொல்லுமா…மாதவன் எப்பவும் காதலுக்கு எதிரி கிடையாது…வீணா ஏதாவது ஒரு விஷயத்தை தான் தயக்கம் இல்லாம மாதவன்கிட்ட சொல்லுவா…மத்தபடி எல்லாமே அவளுக்குள்ளே தான் இருக்கும்…அதான் மா..உன்கிட்ட கேட்குறேன்..அவளுக்கு அவன் அண்ணன் மாதவன் தீவிரமா மாப்பிள்ளை பாக்குறான்..அதான் மா கேட்குறேன்..”என அவன் எடுத்து சொல்ல…

 

அவன் சொல்வது அவளுக்கு புரிந்து இருந்தாலும்,என்ன சொல்வது என தெரியாம விழிக்க தான் செய்தாள் மீண்டும்…பின் சில நேரம் சிந்தித்தவள் “அண்ணா நீங்க வீணாவோட வாழ்க்கை நல்லா இருக்க இவ்வளவு தூரம் பேசும்போது,எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா…கண்டிப்பா  நான் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்…”என்றவள் வீணாவிற்கும் பிரதீப்பிற்கும் இடையேயான மெல்லிய இழையான காதலை சொன்னவள் இருவரும் இன்னும் பரிமாறிக்கொள்ளவில்லை என்பது என தனக்கு தெரிந்ததை அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொண்டாள்…

 

ஜெயஸ்ரீ சொன்ன அனைத்தையும் பொறுமையாய் கேட்ட சுரேஷ் “ஓ அப்படியா…பையன் எப்படிமா…நல்ல பையனா..அவனை நம்பி வீணாவை கட்டி குடுக்கலாமா..”என மறு அண்ணணாய் பொறுப்பாய் விசாரிக்க…”ஹ்ம்ம் கண்டிப்பா அண்ணா..சட்டுன்னு கோவம் வரும்..மத்தப்படி ரொம்ப நல்ல பையன்…வீணா மேல உயிரே வச்சு இருக்கான்னு என்னால உறுதியா சொல்ல முடியும்…”என அவள் நம்பிக்கை தெரிவிக்க

 

“சரிமா…இதை பத்தி  நான் மாதவன்கிட்ட பேசுறேன்…வீணாக்கு பிடிச்ச வாழ்க்கையை கண்டிப்பா அவன் எதிர்க்க மாட்டான்..அதை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்…சீக்கிரம் உன்னை வீணாவோட கல்யாணத்துல பாக்குறேன் மா…”என சொல்ல…

 

ஜெயஸ்ரீ “ரொம்ப சந்தோசம் அண்ணா…வீணாவை கண்டிப்பா பிரதீப் நல்லா பார்த்துப்பான்…நீங்க அதைபத்தி எல்லாம் கவலைப்பட வேண்டியதே இல்ல…நான் அவன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றேன்…அப்படியாவது வீணாகிட்ட தன்னோட காதலை சொல்லி,உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரானான்னு பார்ப்போம்…”என்றாள் சந்தோசமாக…

 

சுரேஷ் “ஹ்ம்ம் சரி மா..வீணாக்கு நான் உன்கிட்ட பேசுன எதுவும் தெரிய வேண்டாம்…மாதவன் கிட்ட பேசிட்ட பிறகு நானே அவகிட்ட பேசுறேன்…நீ பிரதீப்கிட்ட சொல்லி அவனுக்கு புரிய வை…”என்றான் அவளிடம்..

 

“கண்டிப்பா அண்ணா..அவன்கிட்ட நான் சொல்றேன்…”என்றவள் சிறிது நேர பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்…பிரதீப்பிடம் பேசவேண்டும்  என எண்ணி கொண்டவள் வேலை முடிந்த பிறகு பேசலாம் என எண்ணிக்கொண்டு வேலைகளை செய்தாள்…

 

வந்ததில் இருந்து தன்னை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதீப்பை பார்த்த வீணா உள்ளுக்குள் பல்லை கடிக்க ஆரம்பித்தாள்…”இவன் ஏன் இவ்வளவு திமிரா நடந்துக்குறான்…”என ஒரு மனம் கேள்வி கேட்க இன்னொரு மனமோ  “அவன் என்னைக்கு ஒழுங்கா நடந்து இருக்கான்..இன்னைக்கு அமைதியா இருக்க..எப்பவும் இருக்குற திமிரு தான இன்னைக்கும் இருக்கு..நீ என்ன புதுசா கண்டுட்ட..”என பதில் கேள்வி கேட்க..

 

“ச்சி போங்க…உன்களை யாரு இப்போ வர சொன்னா..”என தலையில் தட்டி அவர்களை அனுப்பியவள் அமைதியாய் நகங்களை கடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்…”நாம்பளே போய் பேசலாமா..”என அவளினுள் யோசனை எழ “வேண்டாம் வேண்டாம்..ஏற்கனவே வேலை விஷயமா பேசுனதுக்கே ஒண்ணும் அவன் பேசல…நக்கல் அடிச்சிட்டு அமைதியாயிட்டான்..இதுல நாம்ப சாதரணாம பேச போய் ,இவன் மூஞ்சை திருப்புன என்ன பண்றது…”என எண்ணியவள் மீண்டும் அமைதியானாள்…

 

“ச்ச என்ன கொடுமைடா சாமி…”என உள்ளுக்குள் நொந்தவள் ஹாஸ்டல் செல்வது என முடிவு செய்து அவனிடம் சென்று “நீங்க சொன்னதை எல்லாம் முடிச்சி மெயில் பண்ணிட்டேன்…நான் கிளம்புறேன்..”என சொல்ல “ஹ்ம்ம் சரி…”என்று அவள் முகம் பார்க்காமல் கணிணியினை பார்த்து சொன்னவன் கொஞ்சமும் நிமிர்ந்து வீணாவின் முகம்  பார்க்கவில்லை…

 

அவன் பாராமுகம் அவளை கொல்ல எதுவும் பேசாமல் அமைதியாய் அங்கு இருந்து நகர்ந்தாள்…போகும் அவளை புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டு இருந்தவன் “போதும்டா பாவம் ரொம்ப கலங்கி போறா..”என அவன் மனம் அவளுக்கு வக்காலத்து வாங்க..அதனை ஆமோதித்தவன் சிஸ்டமை அணைத்துவிட்டு  கிட்டத்தட்ட ஓடினான்…ஜெயஸ்ரீயிடம் கூட சொல்லாமல் வெளியேறினாள் வீணா…

 

ஓடுபவனை ஜெயஸ்ரீ “பிரதீப், பிரதீப்…”என அழைத்து நிறுத்த முயல…அவளை பார்த்தவன் “ஸ்ரீ எனக்கு முக்கியமான வேலை இருக்கு…ப்ளீஸ் நான் உன்கிட்ட அப்பறமா பேசுறேன்…”என சொன்னவன் ஜெயஸ்ரீயின் பதிலை கூட எதிர்ப்பாரது அங்கு இருந்து அகன்றான்…

 

“இவன் எதுக்கு இப்படி ஓட்றான்..”  எண்ணியவள் சுரேஷ் பேசியதை வருவிடம் பகிர்ந்துகொள்ள அவனுக்கு அழைத்தாள்…திரையில் “ஜெய்..”என ஒளிக்க அதனை புன்சிரிப்புடனே எடுத்து காதிற்கு கொடுத்தவன் “சொல்லுங்க மேடம்…ஆபீஸ்ல வேலை இல்லையா…”என நக்கலோடு தன் பேச்சினை துவங்க…

 

ஜெயஸ்ரீ “என்ன ஜெய்..என்ன கொழுப்பா…வீட்டுக்கு போறேன்னு ஒரு போன் பண்ணி சொன்னதோடு சரி..அதுக்கு அப்புறம் ஒரு போன் இல்ல ஒரு மெசேஜ் இல்ல…பேசலாம்னு போன் பண்ணா ,நக்கல் பண்றீங்க…”என செல்ல கோவத்தோடு கேட்க…

 

அவளது பேச்சை கேட்டு “ஹா ஹா…”என சிரித்தவன் “விடு ஜெய்…உனக்கு அங்க வேலை இல்லன்னு தெரியும்..அப்புறம் என்ன..சரி சொல்லு ,என்ன பண்ற…”என்றான் சிரிப்புடன்…

 

ஜெயஸ்ரீ “சிரிக்காதீங்க ஜெய்…”என சிணுங்கியவள் “சுரேஷ் போன் செய்து கேட்டதையும்,பிரதீப்பை வந்து பெண் கேட்க சொன்னதையும்…”என ஒன்று விடாமல் சொல்ல..சிறிது நேரம் அந்த பக்கம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் மௌனமாய் இருக்க “ஜெய்..ஜெய்…லைன்ல இருக்கீங்களா…”என்ற ஜெயஸ்ரீயின் குரலில் “ஹ்ம்ம் இருக்கேன் ஜெய்…கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு..அப்போ சீக்கிரமே வீணாக்கு கெட்டிமேளம் தான்னு சொல்லு…”என சிரிப்புடன் கேட்க…

 

ஜெயஸ்ரீ “ஆமா ஜெய்…ரொம்ப சந்தோசமா இருக்கு தெரியுமா…அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை…அவளோட அண்ணா இதுக்கு ஒத்துக்கணும்..அது மட்டும் நடந்தா பிரதீப் பொண்ணு கேட்குறது மட்டும் தான் இனி பாக்கி..பார்ப்போம் என்ன நடக்குன்னு…”என பெருமூச்சோடு சொல்ல அதனை “ஆமா ஜெய்…உண்மை தான்..”என விஜயும் ஆமோதித்தான்…

 

அப்படியே சிறிது நேரம் பேசியவர்கள் பேச்சு மிருணா-பிரபு தம்பதிகளிடம் வந்து நின்றது… ”என்னன்னு தெரியல ஜெய் மிருணா அண்ணியை பார்க்கவே முடியல…அன்னைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்ததோட சரி..அதுக்கு பின்னாடி ஒரு ரெண்டு மூணு முறை போன் பண்ணி பேசுனேன்…இப்போ எல்லாம் அவங்களை ஆபீஸ்ல கூட அதிகமா பார்க்க முடியல..நாலு நாள் வேற அவங்க லீவ் போட்டு இருக்காங்க போல…என்னன்னு கேட்டா இங்க எங்களுக்கு தெரியாது அப்படின்னு சொல்லிட்டாங்க…போன் பண்ணா அவங்க எடுக்கவே இல்ல….ஏதாவது பிரச்சனையானு தெரியல ஜெய்…”என கவலையோடு சொல்ல…

 

விஜய் “ஹ்ம்ம் ..நானும் பிரபுகூட பேசி ரொம்ப நாள் ஆகுது ஜெய்…சுபாவோட பிரச்சனையில அவன் கிட்ட பேசவே முடியல…நீ ஒண்ணும் கவலைப்படாத..நீ நினைக்கிற மாதிரி எதுவும் இருக்காது…நான் பிரபுகிட்ட பேசி பாக்குறேன்..முடிஞ்சா நீ பிரபுவோட வீட்டுக்கு போய்ட்டு வா…”என்றான்…அவன் சொல்வதை கேட்டவள் “சரி ஜெய்..நான் அண்ணியை போய் பார்த்துட்டு வரேன்..”என்றவள் “சரி நான் வச்சிட்றேன்..”என சொல்ல..

 

விஜய் “ஹேய்ய்…இரு இரு..அதுக்குள்ளவே வைக்கிற..எப்பவும் பிரச்சனையை பேசி பேசியே நம்பளோடு இந்த காதலிக்கிற நாள் காணாம போகிடுது…ஒழுங்கா கொஞ்ச நேரம் என்னோட இப்போ பேசுற…”என சொல்ல…

 

ஜெயஸ்ரீ “பார்றா…யாரோ முன்னாடி எதுக்கு போன் பண்ண அப்படின்ற மாதிரி பேசுனாங்க…இப்போ என்னவோ வேற மாதிரி பேசுறாங்க…அது யாருன்னு தெரியுதா ஜெய்..”என அவனிடமே கிண்டல் அடிக்க…

 

விஜய் “ஹே போதும்டி…ரொம்ப பண்ணாத..உன்ன எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் கவனிச்சிக்குறேன்…ஏதோ கொஞ்சம் பேசு அப்படின்னு சொன்னா நீ தான் ரொம்ப பண்ற..சரி விடு…ஜோசி என்கிட்ட ரொம்ப நாளா பேசணும்ன்னு சொன்னா…அவகிட்ட பேசிக்கிறேன்..நீ வச்சிட்டு போ…”என சொல்ல..

 

“ஜோசியா…யாரு நம்ப ஆபீஸ் ரிசப்ஷன்ல வேலை பாக்குற அந்த கிழவியா..உனக்கு எல்லாம் அவ தான் செட் ஆகுவா…போய் அவகிட்டயே மொக்க போடு….இனிமேல் என்கிட்ட பேசாத…நான் வச்சிட்றேன்…”என கோவமாய் அழைப்பை துண்டித்தாள்…

 

அவள் கோவமாய் அழைப்பை துண்டித்ததும் சிரிப்புடனே அமர்ந்து இருந்தான்…அவள்போட்ட இந்த சின்ன சண்டை கூட ஏனோ அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது இன்று…சில காலம் இறுகிய முகமாய் எப்போதும் காட்சியளித்தவன் இன்றோ அதனை எல்லாம் கிழித்தெறிந்து விட்டு மீண்டும் பழைய விஜயவரதனாக ஆனான்…

 

மீண்டும் தன்னிடம் பேச அழைப்பாள் என உறுதியாய் நம்பியவன்,சுபாவிற்கு என்ன செய்வது என்று யோசிக்கலானான்…பின் சாரதாவிடமும் விளாவாறியாகா விளக்கியவன்..என்ன செய்வது என யோசனை கேட்கலானான்…

 

“நீ சொல்றதை பார்த்தா அந்த பொண்ணு ரொம்ப மனசு அளவுல பாதிக்கப்பட்டு இருக்கு வரு…நான் சகுந்தலாகிட்ட இதைபத்தி பேசுறேன்..அவ இந்த மாதிரி நிறைய கேஸ்சை பார்த்து இருக்கா…நீ ஒண்ணும் கவலைப்படாத…கண்டிப்பா சுபாவை குணப்படுத்தலாம்…”என்று அவனுக்கு நம்பிக்கை அளித்தார்…

 

தாயின் நம்பிக்கை மகனுக்கும் சற்று இருந்தது என்னவோ உண்மை தான்..ஆனால் நாளுக்கு நாள் சுபாவின் நிலை மோசமாகிக்கொண்டு போவது அவனுக்கு சிறிது நம்பிக்கையில் ஆட்டம் காண வைத்தது…இருந்தும் அவனும் சரி நவீனும் சரி சுபாவை குணப்படுத்தியே தீர வேண்டும் என உறுதியுடன் இருந்தனர்…

 

********************

 

மூச்சு வாங்க தன் முன் வந்து நின்ற பிரதீப்பை கண்களில் கேள்வியோடு நோக்கினாள் வீணா..அவளின் கண்களில் தெரிந்த கேள்வியினை உணர்ந்தவன் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”என மூச்சு வாங்கியபடி சொல்ல…

 

வீணா “என்கிட்டயா…என்ன விஷயம்…என்ன பேசணும்”என பதில் சொல்லாமல் கேள்வியினை கேட்க…”ஹ்ம்ம்….சட்டசபையை எப்படி சீர்குழைக்கலாம் அப்படின்னு உன்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தணும்…கேட்க்குறா பாரு கேள்வி…” என முணுமுணுத்தவன் “ப்ளீஸ் வீணா கொஞ்சம் டைம் கொடேன் எனக்கு…நான் என்ன உன்னைய கடிச்சா திங்க போறேன்…”என கண்களில் சிரிப்புடன் சொல்ல…வீணா தன் முன்னால் இருக்கும் பிரதீப்பை பார்த்து முறைத்தாள்…  

 

பிரதீப் “சரி சரி…கோச்சிக்காத…மாமனை ரொம்ப நேரம் இப்படி வெறிச்சி பார்த்துட்டு இருந்தா எப்படி…”என மீண்டும் சிரிப்புடன் சொல்ல…வீணாவின் முறைப்பு அதிகமானது..ஆனால் உள்ளுக்குள் அவள் அவனது பேச்சினை ரசிக்க தான் செய்தாள்…

 

வீணா “பிரதீப் என்னன்னு சொல்லுங்க…நேரம் ஆகுது எனக்கு…நான் போகணும்…”என அவள் சொல்ல…

 

பிரதீப் “நல்ல விஷயம் தான்…நான் உன்ன லவ் பண்றேன்…”என அசால்ட்டாய் சொல்ல…”ஓ அப்படியா…சரி…”என அவள் கிளம்ப முயல…பிரதீப் “ஹே ஹே…என்ன நான் சொல்லிட்டு இருக்கேன்…நீ பாட்டுக்கு போற…பதில் சொல்லிட்டு போ…”என வீணாவினை பார்த்து சொல்ல…

 

“என்ன பதில் சொல்லணும்…சொன்னா தான் தெரியுமா…”என சொல்லியவள் அங்கிருந்து ஓடினாள்…சில நிமிடம் திகைத்து போய் நின்று இருந்தவன் அவள் சொன்னதை ஒரு முறை மூளையில் வேகமாய் ஒட்டி பார்த்தவனுக்கு அவள் சொல்லியதன் அர்த்தம் விளங்க “ஹூரே…ஹே….ஹே…ஹே….”என கத்தி தனது ஆனந்தத்தை வெளிபடுத்தியவன் வீணா ஓடிய திசையை ஆசையுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்…   

 

அங்கு இருந்த காவலாளி அவனை ஒரு மார்க்கமாய் ஏற இறங்க பார்த்து வைக்க…”இவர் வேற நேரம் காலம் தெரியாமல் சும்மா சும்மா என்னைய ஏதோ பைத்தியக்காரனை பாக்குறது போல பார்த்து வைக்கிறார்…”என முணுமுணுத்தவனை கண்டு அடக்கமாட்டாது சிரித்தாள் ஜெயஸ்ரீ…

 

தன் அருகில் தீடிரென்று சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பியவன் அங்கு சிரித்துக்கொண்டு இருந்த ஜெயஸ்ரீயை கண்டு இவ எப்போ இங்க வந்தா என யோசனை செய்தவன் அதனை அவளிடமே கேட்டான்….

 

அவனின் அருகில் சிரிப்புடன் சென்றவள் “நீ வீணாகிட்ட உன்னோட அழகிய காதலை சொல்லும் போதே வந்துட்டேன்…”என சொன்னவள் அவனின் அசடு வழிந்த முகத்தை பார்த்து “நீ எல்லாம் சரியான பிராட் பிரதீப்…எனிவே கங்கிராட்ஸ் மேன்…”என தன் வாழ்த்தையும் தெரிவித்தாள்…

 

“தேங்க்ஸ் ஸ்ரீ…”என அவளது வாழ்த்தை ஏற்றுக்கொண்டவன் அமைதியாய் நின்றான்…அங்கு இருந்த அமைதியை கலைக்கும் வண்ணம் “பிரதீப் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தேன்…வீணா அண்ணனோட ப்ரண்ட் சுரேஷ் அண்ணா போன் பண்ணாங்க…அவங்களுக்கு உங்களோட காதல் விவகாரம் தெரிஞ்சிடுச்சு…வீணாவோட அண்ணா மாதவன்கிட்ட உங்க கல்யாணத்தை பத்தி பேசுறேன் அப்படின்னு சொல்லி இருக்கார்…நீ உங்க வீட்ல இதை பத்தி சொல்றது நல்லது அப்படின்னு தோணுது…”என சொல்ல அவள் பேச பேச அதிர்ச்சியோடும்,ஆச்சர்யத்தோடும் கேட்டுக்கொண்டு இருந்தவன்…

 

“ஸ்ரீ….நிஜமாவா சொல்ற…என்னால நீ சொல்றதை நம்பவே முடியல…நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா…ரியல்லி ஐ அம் சோ ஹாப்பி….தேங்க்ஸ் ஸ்ரீ…சீக்கிரம் நான் வீட்ல பேசுறேன்…கண்டிப்பா வீட்ல ஒத்துப்பாங்க..வீணா கிட்ட இதை சொல்லாத…நானே சொல்றேன்..அவளுக்கு கொஞ்சம் சர்ப்ரைஸா இருக்கட்டும்…”என துள்ளலுடன் சொல்ல…

 

அவனை பார்த்து மென்மையாய் சிரித்தவள் “கண்டிப்பா பிரதீப்…சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு…”என்றவள் அங்கு இருந்து அகன்றாள்…

 

அறைக்கு சென்ற வீணாவிற்கு மனது முழுதும் சொல்ல முடியாத நிம்மதியும் சந்தோசமும் அவளை போட்டு போட்டிக்கொண்டு பாடாய்படுத்தியது…அவளின் காதலன் அவளிடம் தன் காதலை,நேசத்தை பகிர்ந்து கொண்டான்…அதுவே அவளுக்கு போதுமானதாய் இருந்தது…

 

கண்ணே மணியே என கொஞ்சாமல்,நீ இல்லாமல் நான் இல்லை என வசனம் பேசாமல்,அவனின் பாணியில் அவனின் காதலை அவன் சொல்ல…வீணாவும் அவளின் பாணியில் அதனை ஏற்றுகொண்டவள்,அவனின் காதலுக்கு தன்னுடைய பதிலையும் சொல்லியவள் அவனின் முகம் பார்க்க வெட்கம் கொண்டு அங்கு இருந்து ஓடி வந்துவிட்டாள்…

 

அந்த சந்தோசத்தை தனக்குள் அனுபவிக்க துவங்கினாள்…அதே நேரம் பிரதீப்பும் அதை பற்றி தான் நினைத்துக்கொண்டு இருந்தான்..வீணாவிடம் அவன் எதிர்த்த பதில் கிடைத்ததில் அவன் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது…இரு மனங்களும் தங்களின் காதல் பரிமாற்றத்தினால் நிறையவே சந்தோசமடைந்தனர்…

 

***********************

 

மிருணாவினை சென்று பார்க்க வேண்டும் என எண்ணியவள்,வேலைகளை முடித்து கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு தனது பெப்பியை மிருணாவின் வீட்டை நோக்கி செலுத்தினாள்…

 

மிருணாவின் வீட்டில் நிறுத்தியவள் அழைப்பு மணியை அழுத்த பிரபுவின் அம்மா வெண்ணிலா கதவினை திறந்தார்…”வாம்மா ஜெயஸ்ரீ…”என அவர் அவளை வரவேற்க…அவரை பார்த்து சிரித்தவள் “எப்படிமா இருக்கீங்க…அண்ணி எங்க வீட்ல இல்லையா…”என்ற கேள்வியுடன் அவள் நிற்க..

 

வெண்ணிலா “நான் நல்லா இருக்கேன்மா..நீ எப்படி இருக்க…அவ அவளோட ரூம்ல இருக்காமா…இரு உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்…”என சொன்னவர் சமையல் அறைக்குள் செல்ல முயல…

 

ஜெயஸ்ரீ “இல்லமா எனக்கு எதுவும் வேண்டாம்மா…”என அவரை மறுத்தவள் “அண்ணிக்கு உடம்புக்கு ஏதாவது சுகமில்லையா மா…”என கேட்க…”இல்ல மா அப்படி எல்லாம் இல்ல…”என சொன்னவர் மேல என்ன சொல்வது என தெரியாமல் தயங்க…  

 

அவரின் அமைதியில் இருந்தே ஏதோ சரியில்லை என ஊகித்தவள் “நான் அண்ணியை பார்க்கலாமா…”என அவரிடம் அனுமதி கேட்க…”இதுக்கு போய் என்கிட்டே எதுக்கு பர்மிசன் கேட்டுட்டு இருக்க மா…நீ தாராளமா பார்க்கலாம்…”என சொல்ல மிருணாவினை காண அவளது அறைக்குள் சென்றாள்…

 

கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தன் எதிரே இருந்த சுவரினை வெறித்துக்கொண்டு இருந்தவளை கண்ட ஜெயஸ்ரீக்கு பக்கென்று ஆனது…அவளின் அருகில் நெருங்கியவள் “அண்ணி என்ன ஆச்சு…ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க…”என மிருணாவின் தோளினை உலுக்கி கேட்க..

 

ஜெயஸ்ரீயின் உலுக்கலில் அவளை பார்த்தவள் கண்களில் கண்ணீர் வழிய வெறுமையுடன் அவளை நோக்கினாள்…மிருணாவின் வெறுமையான பார்வையில் கல்ங்கியவள் “அண்ணி என்ன ஆச்சு..ஏன் இப்படி இருக்கீங்க..ஆமா பிரபு அண்ணா எங்க..”என கேட்க..ஜெயஸ்ரீயின் கடைசி வார்த்தையில் “ஓ வென்று …”கதறி அழ ஆரம்பித்தவள் “எங்கன்னு எனக்கும் தெரியல ஸ்ரீ…”என அவளை அணைத்துக்கொண்டு கதற…

 

மிருணாவின் பதிலில் அதிர்ந்து போனவள் “என்ன அண்ணி என்ன சொல்றீங்க…”என பதட்டமாய் கேட்க,நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னவள் ஜெயஸ்ரீயின் தோள் சாய்ந்து கதறி அழ துவங்கினாள் மீண்டும்…மிருணா சொன்னதை கேட்டு ஜீரணிக்க முடியாமல் சமைந்து போய் இருந்தவள் கைகள் தானாய் மிருணாவினை வருடி ஆறுதல்படுத்தியது..

 

ஜெயஸ்ரீ “உங்க கிட்ட சொல்லிட்டு போகலையா…”என கேட்க…”இல்லை..”என்பது போல பாவமாய் தலையை அசைத்தவள் கண்ணீர் உகுக்கலானாள்…மிருணாவின்  கண்ணீரும் வேதனையும் ஜெயஸ்ரீயினை வருந்த செய்ய எப்படி மிருணாவினை சமாதானப்படுத்துவது என தெரியாமல் கலங்கி போனாள்…

 

மிருணா ”ஸ்ரீ…விஜய்க்கு ஏதாவது விஷயம் தெரியுமா…ஒரு வேலை பிரபு அவர் கிட்ட சொல்லிட்டு போயிருப்பாறோ…கொஞ்சம் கேட்டு பாரேன்…”என கேட்க..ஜெயஸ்ரீக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை…

 

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் “அண்ணி அது வந்து..நான் இங்க வரதுக்கு முன்னாடியே விஜய் கிட்ட பேசிட்டு தான் வந்தேன்..அவருக்கும் விஷயம் இன்னும் தெரியாது..கொஞ்சம் பிரச்சனை அப்படின்றதுனால அவரால பிரபு அண்ணா கூட பேச முடியலை அப்படின்னு சொன்னார்…”என சொல்ல

 

மிருணாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது…பிரபுவின் செயலால் எதையும் சிந்திக்க முடியாமல் இருந்தவளுக்கு மனதில் இருந்த வேதனையை எல்லாம் ஜெயஸ்ரீயிடம் இறக்கி வைத்த பின்னரே கொஞ்சமேனும் அவளால் சிந்திக்க முடிந்தது…மும்பை போகிறேன் என அவனின் அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றவன் அங்கு சென்று அழைத்ததோடு சரி..அதன் பிறகு ஒரு முறை கூட அவனின் அம்மாவிற்கு கூட அழைக்கவில்லை…

 

அவனின் பேச்சை மீறி ஒரு முறையேனும் அவனின் குரலை கேட்டு விடத்துடித்த மிருணா அவனுக்கு தொடர்பு கொள்ள முயல,தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது எனது பதிவு செய்யப்பட்ட பெண் குரலே அவளுக்கு கிடைக்க அப்போது சோர்ந்து போய் அமர்ந்தவள் தான் இன்னும் சரியாகவில்லை…பின்னே இருக்காதா எங்கு சென்றான்,என்ன செய்கிறான்,எப்போது திரும்ப வருவான் என தெரியாமல் மிருணா தான் தவித்து போனாள்…

 

வெண்ணிலாவும் சுந்தரமும் இருக்க அவளுக்கு சிறிதே சிறிது உள் மனம் சமன்பட்டது…அவர்கள் இல்லையெனில் மிருணாவின் நிலை ஜெயஸ்ரீக்கு நினைக்கவே பயமாய் இருந்தது…

 

சிறிது நேரம் மிருணாவுடன் நேரத்தை கழித்தவள் இருந்தவரை மிருணாவினை நார்மலாக்க முயன்றாள்…இருந்தும் மிருணாவின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பது அவளுக்கு கவலையாய் இருந்தது…சொல்லாமல் கொள்ளாமல் சென்ற பிரபுவின் மேல் அவளுக்கு கோவம் கோவமாய் வந்தது…    

 

இந்த செய்தியை விஜயிடம் சொல்லியவள் பிரபுவினை பற்றி அவனின் மற்ற நண்பர்களிடம் விசாரிக்க சொன்னாள்…ஜெயஸ்ரீ சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்தவன் தனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் விசாரிக்க ஆரம்பித்தான்…

*********************

 

கார் மதுரையை அடைய அங்கு இருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியவன் குளித்து முடித்து தான் பேசி புரிய வைக்க வேண்டியவகளை எல்லாம் ஒரு முறை தனக்குள் ஓட்டி பார்த்தவனை கலைத்தது “போலாமா பிரபு…”என்ற ஸ்ரீகாந்த்தின் குரல்…அவனை பார்த்து “சரி…”என்பதாய் தலையசைத்தவன் ஸ்ரீகாந்துடன் தேன்மொழி சொன்ன இடத்திற்கு பயணம் செய்தான்…

 

அந்த வீட்டின் முன் காரை நிறுத்திய பிரபு தனது இஷ்ட கடவுளான கணபதியை நன்கு ஒரு முறை பிராதித்தவன்,ஸ்ரீகாந்துடன் உள்ளே நுழைந்தான்…அங்கு இருந்த ஒரு மர நாற்காலியில் அமர்ந்து ராமைய்யா பேப்பர் படித்துக்கொண்டு இருக்க,கமலம் உள்ளே சமையலறையில் வேலையில் ஈடுபட்டு இருந்தார்…

 

“அய்யா…”என ஸ்ரீகாந்த் அழைக்க..சமையல் வேலையில் ஈடுபட்டு இருந்த கமலம் “யாரு…”என கேட்டுக்கொண்டு தன் முந்தானையால் போர்த்திக்கொண்டு வாசலில் பார்த்தவர் அவர்களை யார் என்பது போல பார்க்க…

 

அவரின் பார்வையில் இருந்த கேள்வியினை கண்ட பிரபு “ராமைய்யா வீடு…”என இழுக்க…புதியவர்களை பார்த்தவர் “இது தான்… நீங்க…”என இழுக்க… மாமியாருக்கே தான் யார் என்று தெரியாத மருமகனாய் இருக்கோமோ என மனதிற்குள் வருந்தியவன் “கொஞ்சம் பேசணும்…உள்ளே வரலாமா…”என அனுமதி கேட்க..

 

இருவரையும் தயக்கத்துடனே பார்த்தவர் “வாங்க…” என்பதாய் அவர்கள் உள்ளே வர வழிவிட்டவர்..”உட்காருங்க…”என சொல்லிவிட்டு வந்தவர்களை உபசரிக்கும் வண்ணம் தண்ணீரை தந்தவர் ராமைய்யாவின் பின்னே அமைதியாய் நின்று கொண்டார்…

 

“நான் தான் ராமைய்யா…உங்களுக்கு என்ன வேணும்…”என ராமைய்யா , பிரபு மற்றும் ஸ்ரீகாந்தை பார்த்து கேட்க…

 

பிரபு மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..பின் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் சிறிது தயங்கிய பிரபு நெடுமூச்சு ஒன்றை எடுத்து தன்னை நிலைபடுத்திக்கொண்டவன் “நான் யார்ன்னு உங்களுக்கு தெரியுதா…”என கமலத்தை பார்த்து கேட்க…சில நிமிடம் அவனை பார்த்தவர் தெரியாது என்பது போல தலையை இடதும் வலதுமாக ஆட்ட…

 

ராமைய்யா பிரபுவின் கேள்வியில் கமலத்தை கேள்வியோடு நோக்கினார்…இருவரின் முகத்தில் இருந்த கேள்வியினை நன்கு அறிந்த பிரபு எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் சிறிது விழிக்க ஆரம்பித்தான்…

 

அவனது நிலை நன்கு புரிந்த ஸ்ரீகாந்த் தான் “இப்படியே அமைதியா இருந்தா எப்படி டா…சொல்ல வந்த விஷயத்தை சொல்லு…”என ஊக்க…மாமியாரையும் மாமனாரையும் பார்த்தவன் “நான் மிருணாவோட புருஷன்…உங்க மருமகன்…”என தயங்கி தயங்கி சொல்ல…

 

அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியோடு நாற்காலியை விட்டு எழுந்தவர் ,தன் பின்னால் நின்றுக்கொண்டு இருந்த கமலத்தின் பக்கம் திரும்பியவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்…

 

பிரபுவும் ஸ்ரீகாந்த்தும் உட்ட கட்ட அதிர்ச்சியோடு பார்த்தனர்….ராமைய்யாவின் இச்செயலை இரண்டு பேரும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை…கத்துவார், திட்டுவார், வீட்டை விட்டு வெளியேற சொல்லுவார் இல்லை அவமானபடுத்துவார் என எண்ணி இருக்க,ராமைய்யாவின் செயல் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்தது…

 

 

விலகல் தொடரும்…

 

Advertisement