Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -28

 

கண்களில் கண்ணீர் வற்றி போய் இருக்க, வறண்டு போனது நாவு முழுதுமாய் வீணாவிற்கு..பிரதீப்பின் இந்த தீடீர் செயல் அவளை மிகவும் திகைப்பிற்கு உள்ளாக்கியது..அவனிடம் இருந்து அவள் அப்படி ஒரு பேச்சினையும் செயலையும் என்றும் எதிர்பார்த்தது கிடையாது..

 

என்னதான் தனக்கும் அவனுக்கும் இடையில் பிரச்சனை வந்து இருந்தாலும்,

பிரதீப் மன்னிப்பு கேட்டு அதன் பிறகு அவளிடம் இருந்து அவன் விலக ஆரம்பித்து இருந்தாலும், என்று அவன் அவளிடம் இருந்து விலக ஆரம்பித்தானோ,அன்று முதல் அவள் மனம் அவன் பால் மெதுவாய் சாய ஆரம்பித்தது..

ஆனால் வெண்ணெய் திரண்டுவந்த நேரம் பானை உடைந்த கதையாய் அவன் மேல் ஆசையும் காதலும் அவளை போட்டி போட்டு வதைத்த நேரம்,பிரதீப்பே எல்லாவற்றிற்கும் வேட்டு வைத்துவிட்டான்..அவனுடைய காதலுக்கும் சேர்த்து தான்…

 

கண்ணில் வற்றிய நீரோடு அமர்ந்து இருந்தவளை கலைத்தது அலைபேசியின் அழைப்பு…அதில் அண்ணா என்று ஒளிர,தண்ணீர் குடித்து தன் தொண்டையை சரிபடுத்தியவள் “ஹலோ அண்ணா..சொல்லுங்க எப்படி இருக்கீங்க..”என்றாள் அமைதியாய்…

 

எப்போதும் போல வீணா அமைதியாய் பேச அவனுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை போல,எனவே “நான் நல்லா இருக்கேன் மா..நீ எப்படி இருக்க…”என்றான் பாசமாய்..

 

அவனின் பாசமான விசாரிப்பில் நெகிழ்ந்தவள் மனம் இப்போதே அவனின் அரவணைப்பில் இருக்க வேண்டும் என ஏங்கியது…தாய் தந்தை பாசத்தை அவ்வளவாய் அனுபவித்திடாதவளுக்கு மாதவனின் அன்பும் மாமியின் அன்பு மட்டும் தான் பெரிய பலமே..

 

“வீணா…வீணா..” என்று மாதவன் இருமுறை அழைத்ததை அப்போது தான் உணர்ந்தவள் “ஹாங் அண்ணா ,சொல்லுங்க சொல்லுங்க” என்றாள் திணறலாய்..

 

மாதவன் “என்னடா எதுக்கு இந்த பதட்டம்,பதிலே இல்லன்னு தான் ரெண்டு முறை கூப்பிட்டேன்..”என்றான் அமைதியாய்..

 

வீணா “சாரி அண்ணா..ப்ரண்ட் கூட பேசிட்டு இருந்தேன்,அதான் கவனிக்கல..”

என பொய்யுரைத்தவள் “எப்படி அண்ணா வேலை எல்லாம் போயிட்டு இருக்கு,இப்போ பரவாயில்லையா..??”என்று அவனை பற்றி விசாரித்தவள்,சிறிது நேரம் அவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்…கடைசியில் வைக்க போனவளை நிறுத்தி “இந்த வாரம் வீட்டுக்கு வரத்தானே மா..எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்..”என்றான் அவளிடம்..

 

அவளுக்கு நன்றாகவே விளங்கத்தான் செய்தது அவன் எதை பற்றி குறிப்பிட்டு சொல்கிறான் என்று..ஆனால் அவளுக்கு பதில் சொல்ல வார்த்தை வராமல் தொண்டையில் சிக்கி தவித்தது…எப்படி சொல்வாள்,என்ன சொல்வாள் பதிலுக்கு காத்திருக்கும் தன் அருமை அண்ணனிடம்..

 

மாதவன் “என்னடா பதிலே காணோம்..வர தானா..??”என்றான் கேள்வியாய்…

 

அவனின் கேள்வியில் வர மறுத்த வார்த்தைகளை சிரமப்பட்டு வர வைத்து “கண்டிப்பா அண்ணா…சனிக்கிழமை காலையில அங்க இருப்பேன்..

கவலைப்படாதீங்க….” என்றாள் அமைதியாய்…

 

மாதவன் “சரி டா…மாப்பிள்ளை வீட்டார் வரதுக்கு எப்படியும் காலை 11 மணி ஆகும்… அதுக்கு முன்னாடியே ஞாயிற்றுக்கிழமை காலையில நாம்ப புது வீட்ல பால் காய்ச்சிடலாம்..நீ என்னமா சொல்ற..”

 

வீணா “ஹ்ம்ம்..நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம் அண்ணா..எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல..”

 

மாதவன் “ஹ்ம்ம் சரிமா…மீதி வேலையை எல்லாம் நான் பாக்குறேன்…”என சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்…அவன் போனை வைக்கவும் அதையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது ஒன்றும் தெரியாமல் மூளை மறுத்துபோக அமைதியாய் அமர்ந்து இருந்தாள்..

 

பிரதீப் பேசிய வார்த்தைகளின் வீரியம் இன்னும் அவளினுள் இருக்க,அவளுக்கு பிரதீப்பின் நடவடிக்கை பயத்தையும் ஒரு சேர அவனின் மேல் வெறுப்பையும் கொடுத்தது…எப்படி எல்லாம் அவனின் பால் உருகிக்கொண்டு இருந்தாளோ, இப்போது அது எல்லாம் கானல் நீராய் கரைந்து போனது அவளுக்கே நன்கு தெரிந்தது…

மடமடவென்று உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்தவள், கணிணியினை உயிர்பித்து வெள்ளிக்கிழமை இரவு பெங்களூரிலிருந்து சென்னைக்கு போக பேருந்து இருக்கிறதா என பார்த்துவிட்டு பயண சீட்டினை பதிவு செய்தாள்…

 

இன்று செவ்வாய்க்கிழமை இன்னும் மூன்று நாட்கள் எப்படி பிரதீப்பிடம் இருந்து தப்பிப்பது என அவளது மூளை தீவிரமாய் சிந்திக்க துவங்கியது..மனதிற்குள் ஒரு யோசனை எழ அதனையே செய்வதென்று முடிவுக்கு வந்தாள்..அதன் பிறகு தான் அவளால் நிம்மதியாய் இருக்ககூட முடிந்தது…எக்காரணம் கொண்டும் ஜெயஸ்ரீயிடம் இந்த விஷயத்தை சொல்லிவிடகூடாது என்பதில் அவள் மிகவும் உறுதியாய் இருந்தாள்..

 

ப்ராஜெக்ட் வொர்க் எல்லாம் முடிந்துவிட்டதால் விஜய்க்கு அதிக வேலை எதுவும் இல்லை…எனவே இருக்கும் சிறு சிறு வேலைகளையும் பிரதீப் மற்றும் ஜெயஸ்ரீயினை பார்க்குமாறு சொல்லிவிட்டான்…வியாழக்கிழமை காலையில் விஜய்,நவீன்,சுபா மற்றும் ஆனந்தவள்ளி நால்வரும் கேரளா போவதற்கு தேவையான பயணசீட்டு,அங்கு சென்று தங்குவதற்கான இடம் என தேவையானதை ஏற்பாடு செய்ய விடுப்பு எடுத்து இருந்தான் விஜய்..

 

விஜய் அலுவலகத்திற்கு வராமல் இருக்க,ஜெயஸ்ரீக்கு ஏதோ ஒன்று இழந்ததை போன்ற ஒரு உணர்வு அவளினுள்…வேலை செய்ய இஷ்டம் இல்லாமல் அமைதியாய் நாற்காலியில் அமர்ந்து திரையில் தெரிந்த விஜயின் படத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்..விரல்கள் அவனின் உருவத்தை வருடிக்கொண்டு இருந்தது…

 

அவன் இல்லாத இந்த ஒரு நாளே இப்படி இருக்கிறேனே என மனதிற்குள் வியந்தவள் ..”டேய் எப்படி எல்லாம் மாத்திட்ட..உன் கிட்ட அப்படி என்னதான் இருக்கோ…இப்படி பைத்தியம் புடிக்க வச்சிட்டியே..சரியான மோசக்காரன்டா நீ..சீக்கிரம் ஆபீஸ் வந்திடு டா..ரொம்ப நாள் இழுத்த அவ்வளவுதான் உன்னை…”என செல்லமாய் அவனை திட்டிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருந்தாள்…

 

ஜெயஸ்ரீ இப்படி இருக்க,வீணாவின் மனது எல்லாம் பிரதீப் பற்றியே தான் நினைத்துக்கொண்டு இருந்தது…வந்து தன்னிடம் கேட்பானோ,இல்லை இன்னும் ஒரு நாள் இருக்கிறது என்று அமைதியா இருக்கிறானோ என நினைப்பு வந்து வேலையில் ஈடுபடாமல் பிரதீப்பை பற்றியும் என்ன நடக்கும் என்பதை பற்றியும் நினைத்துக்கொண்டு இருந்தது அவள் மனது..

 

பிரதீப்பும் வீணாவினை பற்றி தான் நினைத்துக்கொண்டு இருந்தான்..வீணாவின் பதில் என்னவாக இருக்கும் என அவனுக்கு மிகவும் தவிப்பாய் இருந்தது…இரண்டு நாட்கள் அவளுக்கு அவகாசம் கொடுத்தது தப்போ..இன்னைக்கே சொல்லி இருக்க சொல்லணுமோ…அய்யோ என்ன சொல்ல போறாளோ தெரியலையே..இப்பவே தெரிஞ்சிக்கணுமே..”என அவன் மனம் தவியாய் தவித்தது…

 

கணிணியில் இருந்த கண்களை வீணாவினை நோக்கி திருப்பியவனுக்கு,வீணா ஆழ்ந்த யோசனையில் இருப்பது நன்கு தெரிந்தது..அப்பா மேடம் சிந்திக்க ஆரம்பிச்சு இருக்காங்க..கண்டிப்பா பிரதி உனக்கு நல்ல பதில் கிடைக்கும் டா..கவலைப்பட வேண்டாம்..”என தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொண்டான்..

 

ஆனால் தன்னுடைய நினைப்பை எல்லாம் தவிடு பொடியாக்க வீணா ஏற்கனவே திட்டத்தை திட்டிவிட்டாள் என்பது அவன் அறிவானா..??..அறிந்தால் பிரதீப்பின் நடவடிக்கை என்னவாய் இருக்கும் என்பது யான் அறியேன் பராபரமே..

 

மிருணாவிற்கு அவளின் மாமியாரை மிகவும் பிடித்து போனது..நீண்ட நாட்கள் கழித்து தாய் பாசத்தில் திளைத்தாள்..மாமியார் வெண்ணிலாவின் பாசம் அவளை மிகவுமே நெகிழ வைத்தது..அதுவே அவளுக்கு அவளது தாய் கமலமித்தின் அன்பில் திளைக்க வேண்டிய ஏக்கத்தையும் கூட்ட செய்தது…மிருணாவினை தாங்குகிறேன்,மகளாய் பார்த்துகொள்கிறேன் என்று அவர் செய்த ஒவ்வொரு செயலும் மிருணாவின் ஏக்கத்தை கூட்டியதாகவே இருந்தது…

 

இதை எல்லாம் அறியாத வெண்ணிலா,மிருணாவினை சுந்தரம் இல்லாத போது ஒரு வேலை செய்யவிடாது தாங்கினார்…ஆமாம் வெண்ணிலாவின் வற்புறத்தலின் காரணமாக சுந்தரம் வந்தது முதல் சொந்த ஊருக்கு செல்லாமல் அங்கே இருந்தார்..திங்கள்கிழமை காலையில் கிளம்பலாம் என சொன்னவரை பார்த்து முறைத்தவர் “இப்போ ஒண்ணும் போக வேண்டாம்..அங்க போயி என்ன பண்ண போறோம்…அங்க யாரு இருக்கா…”என சற்று கோவமாய் கேட்க…

 

வெண்ணிலாவினை பார்த்து முறைத்த சுந்தரம் “என்னடி விளையாற்றியா..??..

அங்க எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு..அங்க யாரு இருக்கா..என்ன பண்ண போறோம்ன்னு பிணாத்திட்டு இருக்க…ஒழுங்கா மூட்டை முடிச்சை கட்ற வழியை பாரு..”என கோவமாய் சொல்ல..

 

அவரை பார்த்து தனது தோள்பட்டையில் இடித்தவர் “ம்கும்..என்னோட குல சாமியே இங்கன இருக்கு..இதுல அங்கன போயி யாருக்காக மாடா உழைக்க போறீங்க..”என காட்டாமாய் கேட்க…சுந்தரம் வெண்ணிலாவினை கோவமாய் உறுத்து விழித்தார்…உங்களுக்கு சளைத்தவள் இல்லை நான் என்பது போல வெண்ணிலாவும் அவரது பார்வையை தாங்கி நின்றார்…

 

தன் மனையாள் முடிவு எடுத்துவிட்டாள் என்பதை உணர்ந்த சுந்தரமும் மேற்க்கொண்டு எதுவும் பேசி வாக்குவாதம் செய்யாமல் தங்களுக்கு என ஒதுக்கி இருந்த அறைக்குள் நுழைந்தவர் பட்டென்று அறைகதவை சாற்றிக்கொண்டார்..

 

நடப்பதை எல்லாம் திகைப்போடு பார்த்துக்கொண்டு இருந்த மிருணாவினை கண்ட வெண்ணிலா அவளது முகத்தில் இருந்தே அவளது திகைப்பினை நன்கு அறிந்துக்கொண்டு, அவளை சோபாவில் அமர வைத்தவர் தானும் அவளின் அருகில் அமர்ந்து கொண்டார்…

 

இன்னும் அதே நிலைமையில் இருந்த மிருணாவினை பார்த்த வெண்ணிலாவிற்கு அவளது நிலைமை நன்றாகவே புரிந்தது…தன்னால் தான் மாமியாருக்கும் மாமனாருக்கும் இடையில் சண்டை என எண்ணிக்கொண்டு இருக்கிறாள் என்பதை சரியாய் ஊகித்தவர்..”என்னமா இப்படி திகைச்சி போய் நின்னுட்ட…நீ நினைக்குற மாதிரி ஒண்ணுமே இல்ல..”என சொல்ல…உங்களுக்கு எப்படி தெரிந்தது என்பது போல அவரை பார்த்தாள் மிருணா…

 

அவளின் பார்வையின் பொருள் அறிந்து கொண்டவர் “என்னால உன் மனசுல நினைக்கிறது புரிஞ்சிக்க முடியுது மா..நானும் உன்னோட நிலையை தாண்டி வந்தவ தான்..நீ நினைக்குற மாதிரி ஒண்ணும் இல்ல..உன்னோட மாமாக்கு நான் அடிபணிஞ்சி போறது எல்லாம் உண்மை தான்..எனக்கு அது பழகி போனது..அது தான் என்னோட நெகடிவ்….அதே மாதிரி நான் இல்லாம உன் மாமாவால ஒரு நாள் கூட தனியா இருக்க முடியாது…அது அவரோட நெகடிவ்..ஆனா எங்க ரெண்டு பேருக்குமே அது எந்த ஒரு பிரச்சனையும் இல்ல..அதுனால நீ ஒண்ணும் கவலைபடாத…”என்று அவளை சமதானபடுத்தினார்…

 

அவரை ஆச்சரியமாய் நோக்கியவள் “எப்படி அத்தை..இந்த வயசுலையும் நீங்க மாமாவுக்கு தகுந்த மாதிரியும்,மாமா உங்களுக்கு தகுந்த மாதிரியும் நடந்துக்குறீங்க…என்னால சத்தியமா அப்படி இருக்க முடியுமான்னு கண்டிப்பா எனக்கு தெரியல அத்தை..ஆனா நாங்களும் உங்களை போல தான் இருக்கணும்..”என சொல்லியவள் கண்ணில் மாமியாரையும், மாமனாரையும் நினைத்த பெருமிதமே இருந்தது…

இதை எல்லாம் அறையின் உள்ளே இருந்து கேட்டுக்கொண்டு இருந்த சுந்தரத்திற்கு மிருணாவின் மேல் முதன் முதலாய் நற்மதிப்பினை தோற்றுவித்தது…வந்தது முதல் இன்று வரை சுந்தரம் எதற்கும் ஒரு வார்த்தை கூட மிருணாவிடம் பேசியதுகூட கிடையாது…ஆனால் மிருணா மாமனாருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்தாள் அன்று முதல் இன்று வரை…

 

பிரோவின் முன் நின்றுக்கொண்டு இருந்த மிருணாவிற்கு உடனே தாயினை பார்க்க வேண்டும் என ஆசை எழுந்து அவளை பாடாய்படுத்தியது…குளித்து முடித்துவிட்டு தலையினை துவட்டிக்கொண்டே வெளியே வந்த பிரபு,அங்கு தனக்கு முதுகுகாட்டி அமர்ந்த நின்று இருந்த மனைவியினை கண்டவன் புன்சிரிப்போடு அவளை நெருங்கினான்…

 

பின்னால் இருந்து அவளை அணைத்து வாசம் பிடித்தவனுக்கு,மிருணாவிடம் இருந்த இறுக்கம் சிறிது நேரம் கழித்து தான் தெரிந்தது…யோசனையோடு அவளை தன் பக்கம் திருப்பியவன் அதிர்ந்து போனான்..”என்னடா மிரு என்ன ஆச்சு…ஏன் கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு…”என கேட்க..சட்டென்று கண்களை துடைத்துக்கொண்டவள் “ஒண்ணும் இல்ல மிபு நான் நல்லா தான் இருக்கேன்…எனக்கு என்ன..”என புன்னகைத்து சொன்னவளின் கண்கள் என்னவோ ஜீவனை இழந்தது போன்று இருப்பதாகவே அவனுக்கு பட்டது…

 

பிரபு “இல்ல மிரு,என்னவோ என்கிட்ட  இருந்து மறைக்கிற..நீ அழுவுற அளவுக்கு என்னவோ நடந்து இருக்கு..என்னன்னு சொல்லு..அப்பா ஏதாவது சொன்னாங்களா..??.இல்ல அம்மா ஏதாவது சொன்னாங்களா..??.சொல்லு மிரு..”என அவளின் கண்களை பார்த்து அழுத்தமாய் கேட்க..

 

அவனின் கேள்வியில் அதிர்ந்தவள் “அய்யோ..அப்படி எல்லாம் எதுவும் இல்ல மிபு..மாமா என்ன எதுவும் சொல்லல..அத்தையை ஏதாவது தப்பு சொன்னேன் அப்படின்னா,அந்த கடவுளுக்கே பொறுக்காது..என்னைய அத்தை பெத்த பொண்ணு மாதிரி பத்துக்குறாங்க..நீங்க அப்படி எதுவும் தப்பா நினைக்காதீங்க..”என்றாள் அவனுக்கு சமாதானமாய்..

மிருணாவை முறைத்து பார்த்த பிரபு “என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு மிரு,ஒண்ணுக்கும் உதவாதவன் போல இருக்கா..இல்ல அப்படின்னு நீ முடிவே பண்ணிட்டியா..??”என கோவமாய் கேட்க..மிருணா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்…மிருணா “என்ன மிபு என்ன ஆச்சு,எதுக்கு இப்போ இவ்வளவு கோவபட்றீங்க..”என நடுங்கும் குரலில் கேட்க..

 

அவனோ அவளை பார்த்து உறுத்து விழித்தவன் “என் கிட்ட சொல்ல விருப்பம் இல்லாத போது,நான் கேட்டு எந்த பிரோஜனமும் இல்ல..ஆனா இப்போ எனக்கு ஒண்ணு மட்டும் நல்லா புரியுது..என் மேல உனக்கு எப்பவுமே நம்பிக்கை வராது,

எதுக்கும் நான் உகந்தவன் இல்லன்னு நீ எப்பவோ முடிவே பண்ணிட்ட..உன் மனசுல என்ன இருக்குன்னு நீ என்கிட்டே எப்பவும் சொல்ல வேண்டாம் மிரு..

ஆனா உனக்கு ஒண்ணு அப்படின்னா உன்னோட கணவனா நான் இருக்கேன்னு நீ என்னைக்கும் மறந்திடாத..”என முதல் கோவமாய் ஆரம்பித்தவனின் குரல் கடைசியில் பிசிறியது..  

 

அவன் சொன்னதை எல்லாம் கேட்டவளின் மனம் வேதனையில் வெந்து போனது..”மிபு என்ன இது,பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க..என்னைக்கும் எதையும் உங்ககிட்ட நான் மறைக்கணும் அப்படின்னு நினைச்சதே கிடையாது..”என அவனின் மடியின் மீது சாய்ந்து அழுதுக்கொண்டே சொன்னவள்,தனக்கு வெண்ணிலாவின் பாசத்தினால் தாயின் நினைவு வந்ததையும் அவரை காண வேண்டும் என்ற ஏக்கம் வாட்டி வதைப்பதையும் அழுதுக்கொண்டே சொல்லி முடித்தாள்..

 

எல்லாவற்றையும் அமைதியாய் கேட்டவன்,அழுக்கொண்டு இருந்த மிருணாவினை எழுப்பி அவளது கண்ணீரை துடைத்துவிட்டவன் “லூசு எல்லாத்தையும் உனக்குள்ளே வச்சிகிட்டா எனக்கு எப்படி தெரியும்,என்ன ஏதென்னு சொன்னா தான எனக்கும் புரியும்..உன் கண்ணு கலங்கி இருக்குறதை பார்க்கும் பொது மனசு ரொம்ப தவிச்சி போச்சு..நார்மலா கேட்டா நீ எதுவும் சொல்லமாட்ட,அதான் இப்படி ஒரு அதிரடி எப்படி..?? “என சட்டை காலைரை தூக்கிவிட்டுக்கொண்டு அவளை பார்த்து கண் சிமிட்டி கேட்ட பிரபுவினை கண்டு முறைக்க ஆரம்பித்தவள் பின் சிரிக்க ஆரம்பித்தாள்..

 

அவளது சிரிப்பினை பார்த்து மனம் கனிந்தவன் “நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் மிரு..அது தான் எனக்கு வேணும்..”என்று பிரபு சொல்ல,அவனை தாவி அணைத்துக்கொண்டாள் மிருணா..தன் துணைவியின் வருத்தத்தை எக்காரணம் கொண்டு நீடிக்க விடக்கூடாது,என்ன செய்தாவது அவளது பெற்றோரை அவளுடன் பேச வைத்திட வேண்டும் என உறுதிகொண்டான் மனதில்..

 

************************

 

புதன்கிழமை அமைதியாய் சிந்தனையில் கழிய ,வியாழக்கிழமை இனிதே விடிந்து வீணாவின் இதய துடிப்பை தாறுமாறாய் எகுற வைத்தது..”கடவுளே இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எப்படியாவது சீக்கிரம் போயிடனும்..அதுக்கு பிறகு இந்த பிரதீப் என்னைய ஒண்ணும் பண்ண முடியாது..”என கடவுளிடம் பிராத்தனை செய்ய ஆரம்பித்தாள்..

 

அலுவலகத்திற்கு 8 மணிக்கே வந்த பிரதீப்பை காவலாளி ஒரு மார்க்கமாய் ஏற இறங்க பார்க்க,தனது பதட்டத்தை தலை கோதி சமன்படுத்தியவன் அவரது பார்வையில் தெரிந்த மாற்றத்தை பார்த்துவிட்டு அசடுவழிந்து கொண்டே உள்ளே சென்றான்..குறுக்கும் நெடுக்கும் நடந்து அறையின் நீள அகலத்தை தன்னால் முடிந்த அளவு அளந்தான் நெடுநேரம் ஜெயஸ்ரீ வரும் வரை..

 

பதட்டமாய் இருந்த பிரதீப்பை பார்த்த ஜெயஸ்ரீ “குட் மார்னிங் பிரதீப்..என்ன ஆச்சு..ஏன் ரொம்ப டென்ஷனா இருக்க,என்ன விஷயம்..ஏதாவது ப்ராப்ளமா”என சரமாரியாய் கேள்விகளை கேட்க…”டென்ஷனா ..??நானா..?? அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல..நான் எப்பவும் போல நார்மலா தான் இருக்கேன்…”என அவளை பார்த்து சொன்னவன் “ஆமா விஜய் கேரளா ட்ரிப் போறேன்னு சொன்னாரே,கிளம்பிட்டாரா..”என கேட்டு அவளை திசை திருப்ப..

ஜெயஸ்ரீ “ஹ்ம்ம் கிளம்பிட்டாங்க பிரதீப்…அவங்களை அனுப்பி வச்சிட்டு தான் ஆபீஸ் வந்தேன்..ஆமா எங்க வீணா மணி 11 ஆக போகுது..ஆள் இன்னும் காணோம்..”என அவனை பார்த்து கேட்க..

 

பிரதீப் “நானும் அவளுக்காக தான் காலையில இருந்து காத்திட்டு இருக்கேன்..”என வீணாவின் மேல் உள்ள கோவத்தில் உளறிகொட்ட “என்ன பிரதீப் என்ன சொல்ற..”என்ற ஜெயஸ்ரீயின் கேள்வியில் “நானும் அவங்களுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..அவங்க கிட்ட ஒரு வேலை குடுத்தேன், முடிச்சிட்டாங்களா..?? இல்லையான்னு தெரியல..அதை கேட்க தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..”என உண்மை பாதி பொய் பாதி கலந்து அவளிடம் சொன்னவன் “சரி ஸ்ரீ..எனக்கு வேலை இருக்கு..அப்புறம் பார்க்கலாம்..”என சொன்னவன் விட்டால் போதும் என்று  அங்கு இருந்து அகன்றான்..

 

பிரதீப்பின் பதட்டம் அவளுக்கு புதிதாய் இருக்க,என்னவாய் இருக்கும் என யோசித்துக்கொண்டு இருந்தவளின் சிந்தனையை விஜயின் அழைப்பு கலைக்க அதனை எடுத்து பேச ஆரம்பித்தாள்…”சொல்லுங்க ஜெய்..எங்க இருக்கீங்க..சுபா எப்படி இருக்கா..??”என கேட்க..

 

விஜய் “எனக்கு என்ன இடம்ன்னு தெரியல ஜெய்..சுபா தூங்கிட்டு இருக்கா..ரொம்ப ரகளை பண்ணா முதல்ல..இப்போ தான் தூக்க மாத்திரை குடுத்து தூங்க வச்சோம்..தனி கோச் அப்படின்றதுனால பரவாயில்ல..இல்லன்னா ரொம்ப கஷ்டமா போய் இருக்கும்..எப்படி இவளை ஹோட்டல் அழைச்சிட்டு போறது,ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறது அப்படின்னு ஒண்ணும் புரியல…காலையில அங்க போய் சேர்ந்துடுவோம்னு நினைக்கிறேன்,நவீன்னும் ஆனந்தி அம்மாவும் கூட தூங்கிட்டாங்க,அதான் உன்கூட பேசலாம்ன்னு கூப்பிட்டேன்..நீ என்ன பண்ற..??”

 

ஜெயஸ்ரீ “நான் வெட்டி தான் ஜெய்…நீங்க இல்லாம எனக்கு வேலை செய்யவே பிடிக்கல..நானும் உங்க கூடவே வந்து இருப்பேன்,எல்லாம் உங்களால தான்..போங்க நீங்க..”என செல்லமாய் கோவப்பட..அதை கேட்டு சிரித்தவன் “டேய் என்னது இது,பேசன்ட் கூட ரெண்டு பேரு தான் மோஸ்ட்லி அல்லோவ் பண்ணுவாங்க..ப்ரண்ட்க்கு தெரிஞ்ச டாக்டர் அப்படின்றதுனால மூணு பேரு அல்லோவ் பண்றாங்க..இதுல எப்படி உன்னையும் நான் அழைச்சிட்டு வர முடியும்..நீயே புரியாம பேசுனா எப்படி..”என விஜய் கேட்க..

 

“சரி சரி..சுபாவை சீக்கிரம் குணப்படுத்திடுவாங்க இல்ல..அவளுக்கு சீக்கிரம் சரியாகணும் ஜெய்..அவளை பத்திரமா பார்த்துக்கோங்க..அங்க போயிட்டு போன் பண்ணுங்க..”என்றாள் அமைதியாய்..பின் சிறிது நேரம் பேசியவள்,பிரதீப் மற்றும் வீணாவிற்கு இடையில் இருக்கும் நேசத்தை சொல்ல..”அட பார்றா..அப்பவே நான் நினைச்சேன்..இப்படி தான் இருக்கும் அப்படின்னு,ஆனா என்னால முழுசா நம்ப முடியல..கதை இப்படி போயிட்டு இருக்கா..சரி சரி..சீக்கிரம் என்னோட தங்கச்சிக்கு கல்யாணத்துக்கு பேசி முடிச்சிட வேண்டியது தான்..”என சந்தோஷமாய் சொல்ல..

 

“ஆமா ஜெய்..ரெண்டு பேருக்குள்ள என்னவோ சின்ன ஊடல் போல..சீக்கிரம் சரி பண்ணி அவங்களுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்..”என அதனை அவள் சந்தோசத்தோடு ஆமோதிக்க..”என்ன ஜெயஸ்ரீ மேடம்,அவங்களுக்கு மட்டும் தான் கல்யாண ஏற்பாடு பண்ணனுமா..நமக்கு யார் பண்ணுவா..??..”என கிண்டலாய் கேட்க..இப்பக்கம் ஜெயஸ்ரீயின் முகம் சிவந்து போனது வெட்கத்தால்…

 

“எல்லாம் பண்ண வேண்டியவங்க பண்ணுவாங்க..என்னோட ஆளுக்கு யாரோட துணையும் தேவையில்ல..என் அப்பாகிட்ட நேரடியா வந்து பொண்ணு கேட்பாராக்கும்..”என சொன்னவள் குரல் கடைசியில் கிசுகிசுப்பாய் முடிந்தது..

 

அதை கேட்டவனின் மனம் பெரும் ஆனந்தம்கொண்டது..பின்னே இருக்காத,

தன்னை நேசிப்பவள் தன் மேல் என்ன ஒரு மாதிரியான நம்பிக்கை வைத்து இருக்கிறாள்,இதுவே போதும் என தோன்றியது அவனுக்கு..“கண்டிப்பா ஜெய்..உன் நம்பிக்கையை காப்பத்துவேன்…”என மனதிற்குள் நினைத்துகொண்டவன் “தேங்க்ஸ் ஜெய்..என்மேல இவ்வளவு  நம்பிக்கை வச்சதுக்கு..”என்றான் உருக்கமாய்..

 

அவனை மாற்ற எண்ணியவள்,சிறிது நேரம் ஹாஸ்பிடல் பற்றியும்,எப்போது சிகிச்சை ஆரம்பிப்பார்கள் என கேட்க..”இன்னும் 2 இல்ல 3 நாளுக்குள்ள ஆரம்பிப்பாங்க ஜெய்..சுபாவோட கண்டிஷன்க்கு தகுந்த மாதிரி அவங்களோட சிகிச்சை எல்லாம் இருக்கும்..”என்றான் அவளிடம்..பின் சிறிது நேரம் பேசியவர்கள் இனிமையான மனதுடனே அழைப்பை துண்டித்தனர்..

 

வெகுநேரம் பிரதீப்பை கலங்கடித்துவிட்டு 12.30 மணிக்கு போல வந்து சேர்ந்த வீணா நேற்றைய வேலையினை செய்வதில் ஈடுபட்டாள் அமைதியாய்..அவள் வந்ததை பார்த்தவன் சிறிது நேரம் கழித்து அவளிடம் பேசிகொள்ளலாம் என எண்ணிக்கொண்டு தன்னுடைய வேலையில் மூழ்கினான்..தான் செய்த எல்லா வேலையினையும் பிரதீப்பிற்கு மெயில் அனுப்பினாள் வீணா..

 

தனக்கு வீணாவிடம் இருந்து வந்து சேர்ந்த மெயிலினை கண்டவன்,வீணாவின் நினைப்பு நன்றாகவே புரியத்தான் செய்தது..வேண்டும் என்றே இன்று லேட்டாக ஆபீஸ் வந்ததும் இல்லாமல்,எப்போதும் நேரடியே வந்து வேலையினை பற்றிய ரிப்போர்ட்டை சம்பிட் செய்பவள்,இன்று மெயில் அனுப்பியது எல்லாவற்றிற்கும் காரணம் அவனுக்கு புரிந்தது…

 

“நீ எங்க போனாலும் உன்னை நான் விடமாட்டேன் வீணா..எவ்வளவு நேரம் என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியும்..ஈவ்னிங் நீ என்கிட்ட நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தான் வேணும்..அப்போ பார்த்துக்குறேன் உன்னை..”என மனதிற்குள் கருவிக்கொண்டவன் மீதமிருக்கும் வேலையில் ஈடுபட்டான்..

 

விஜய் இல்லாமல் போக பிரதீப் செய்யும் வேலையை பற்றிய ரிப்போர்ட் எல்லாம் மேனேஜரிடம் தன் சமர்பிக்க வேண்டியதாய் இருந்தது..மேனேஜர் அழைப்பதாய் வந்து ஆபீஸ் பாய் சொல்லிவிட்டு செல்ல என்னவாய் இருக்கும் என எண்ணிக்கொண்டே சென்றவன், போகும் முன் வீணாவினை ஒரு பார்வையை பார்த்துவிட்டு செல்லவும் மறக்கவில்லை..

 

ஷப்பா..மாங்கா மடையன் உள்ளே கூப்பிட்டான்..இனி எப்படியும் இவன் வரதுக்கு எப்படியும் குறைஞ்சது 5 இல்ல 6 மணி நேரம் ஆகும்..இப்போ 1 மணி ஆகுது..அப்போ அவன் வரதுக்குள்ள நாம்ப ஜெயஸ்ரீகூடவே கிளம்பிடலாம்..

அதுக்குள்ளே மீதி இருக்குற வேலையை செய்யலாம் என திட்டம் தீட்டியவள் மடமடவென்று வேலையினை தொடர ஆரம்பித்தாள்..

 

சாப்பிடும் வேலையில் ஜெயஸ்ரீயினை பார்த்த வீணா “ஜெயஸ்ரீ இன்னைக்கு நானும் உன் கூடவே ஈவினிங் வரேன்..வேலையை எல்லாம் ஓர் அளவுக்கு முடிச்சிட்டேன்..மீதி கொஞ்சம் தான் இருக்கு,சோ சீக்கிரம் முடிச்சிடுவேன்னு நினைக்கிறேன்..ஓகே தான உனக்கு..”என கேட்க,அவளை பார்த்து முறைத்த ஜெயஸ்ரீ “ரொம்ப பேசுற வீணை..இது எல்லாம் சரியில்ல..ஒழுங்கா போய் வேலையை பாரு..ஈவினிங் பார்க்கலாம்..”என்றவள் கணிணியின் பக்கம் திரும்பி அமர்ந்துகொண்டாள்…வீணாவும் எதுவும் சொல்லாமல் தனது இருப்பிடத்திற்கு வந்து அமர்ந்து வேலையினை செய்ய துவங்கினாள்…

 

மேனேஜர் அறையின் உள்ளே நுழைந்த பிரதீப்பை வரவேற்ற அவனது மேனேஜர் சண்முகம் அவன் செய்ய வேண்டிய வேலையை பற்றியும்,செய்த வேலையை பற்றியும் சிறிது விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்..அதன் பின் மேல் இடத்தில் இருந்து இந்த முறை வந்து இருந்த அறிக்கைகளை வைத்து அவனிடம் கலந்தலோசிக்க ஆரம்பித்தார்…

 

நேரம் ஜவ்வு போல நீண்டு கொண்டே போக சண்முகம் மட்டும் தன் ஜவ்வு உரையை முடிப்பதாய் இல்லை..மதிய வேளை சாப்பிட்டினையும் அவரோடே சேர்ந்து சாப்பிட செய்தவர்,சாப்பிட்டு முடிந்த பின்னும் மீண்டும் தனது சொற்பொழிவினை தொடர்ந்தார்..எப்போதுடா முடியும் என பிரதீப் எரிச்சல்படும் அளவிற்கு இருந்தது அவரது பேச்சுரை…

 

மணி ஆறை நெருங்க வீணா மேனேஜர் அறையை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே  ஜெயஸ்ரீயுடன் ஹாஸ்டல் புறப்பட்டு சென்றாள்..என்ன வீணா எங்க பிரதீப் என கேட்ட ஜெயஸ்ரீயிடம் “அவர் மேனேஜரோட மீட்டிங்ல இருக்கார்…வர லேட் ஆகும் போல ஜெயஸ்ரீ…நாம்ப போலாம்..”என சொல்ல..அவளும் சரி என்று புறப்பட்டாள்..

 

பிரதீப்போ மனதில்   சண்முகத்தை அவனுக்கு   தெரிந்த மொழிகளில் வறுத்து எடுத்துக்கொண்டு இருந்தான்..”அய்யோ அவ வேற இந்நேரத்துக்கு எஸ்கேப் ஆகி இருப்பாளே..இந்த மாங்கா மடையன் வேற எவ்வளவு நேரம் தான் பேசுவானோ..ஆண்டவா என்னை காப்பாத்து..”என பிராத்திக்கவும் “சரி பிரதீப் நான் சொன்னது எல்லாம் செஞ்சிடுங்க..நாளைக்கு அதுக்கான ஸ்டேடஸ் மறக்காம குடுங்க..”என சொல்லி விடை கொடுக்க…

 

“கண்டிப்பா சார்..அப்போ நான் வரேன் சார்..”என சொல்லி அவசரமாய் விடைபெற்று வெளியே வந்தவனுக்கு ஆபீஸ் முழுதும் காலியாய் இருந்தது தான் முதலில்பட்டது..பெருமூச்சு ஒன்று வெளியேற நாளைக்கு பேசி கொள்ளலாம் என்று எண்ணி அறைக்கு சென்றான், நாளை பற்றி எண்ணி ஆயிரம் கனவுகளோடு..

 

ஜெயஸ்ரீயின் கேள்விக்கு தக்க பதில் சொல்லி அவளோடு ஹாஸ்டல் வந்து இறங்கி ஜெயஸ்ரீக்கு விடைகொடுத்துவிட்டு நிம்மதியாய் கட்டிலில் மறந்தவள்,நாளை காலை ஜெயஸ்ரீக்கு அழைத்து உடல் நிலை சரியில்லாததால் வரவில்லை என சொல்லவிட வேண்டும் என முடிவெடுத்தவள்,நிம்மதியாய் உறங்கி போனாள் பிரதீப்பிடம் இருந்து தப்பித்தோம் என்ற சந்தோசத்தோடு..

 

காலையில் கேரளாவில் உள்ள ஆழப்புழா அடைந்த விஜய் -நவீன், சுபா மற்றும் ஆனந்தவள்ளியோடு ஏற்கனவே ரிசர்வ் செய்து வைத்து இருந்த ஹோட்டலிற்கு சென்றான்.. நவீன் மற்றும் சுபாக்கு என ஒரு அறையையும்,தனக்கு என ஒரு அறையையும், ஆனந்தவள்ளிக்கு என ஒரு அறையும் என மூன்று அறைகளை ஏற்கனவே ரிசர்வ் செய்து வைத்து இருந்தான்..

 

சுபா அமைதியாய் புதிய இடத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டு வர மற்ற மூவருக்கும் மனதில் சொல்ல முடியாத நிம்மதி வந்து போனது…இருந்தும் அவர் மனங்கள் எல்லாம் ஒரே படபடப்பாய் இருந்தது…ஹாஸ்பிடல் போகும் வரை இவள் இப்படியே இருக்க வேண்டும் என்று அவர்களால் பிராத்திக்க மட்டும் தான் முடிந்தது…

 

ஆனந்தவள்ளிக்கு அறையினை காட்டியவன் “உங்களுக்கு ஏதாவது வேணும் அப்படின்னா ஒரு போன் பண்ணுங்க மா வந்துட்றோம்..நீங்க ரெஸ்ட் எடுங்க..அப்பறமா ஹாஸ்பிடல் போலாம்..”என சொல்லியவன், நவீனுக்கும் சுபாக்கும் என ரிசர்வ் செய்து வைத்து இருந்த அறைக்கு அவர்களை அழைத்து சென்றான்..

 

விஜய் “நீயும் சுபாவும் இந்த ரூம்ல இருந்துக்கோங்க..ஏதாவது வேணும் அப்படின்னா எனக்கு போன் பண்ணு..முக்கியமான விஷயம் சுபாவை தனியா விட்டுட்டு எங்கவும் போகாத..உன் கிட்ட தான் அவ கொஞ்சம் நார்மலா நடந்துக்குறா..பார்த்து இரு..நாளைக்கு ஹாஸ்பிடல் போயிடலாம் அது வரைக்கும் சுபாவை கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கோ..”

 

நவீன் “சரி விஜய்..கொஞ்சம் அவ இப்போ பரவாயில்ல..ட்ரைன்ல பண்ண  மாதிரி இங்க இன்னும் அடம் பண்ணல..கொஞ்சம் அமைதியா தான் இருக்கா..எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் ஹாஸ்பிடல் போலாம்,ஹோட்டல்ல இவளை வச்சி சமாளிக்கிறது கஷ்டம் விஜய்…நான் சொல்றது உனக்கு புரியுது  இல்ல..”என கேட்க..

 

விஜய் “எனக்கு புரியுது நவீன்..நீ சொல்ல வேண்டிய அவசியமே இல்ல..வரும் போதே நாம்ப அவளுக்கு தூக்க மாத்திரை குடுத்து தான அழைச்சிட்டு வந்தோம்..5 நிமிஷம் அவளை இங்க நார்மலா அழைச்சிட்டு வரதுக்கே எனக்கு ஒரே படபடப்பா ஆகிடுச்சி,ஏதாவது ரகளை பண்ணிடுவளோன்னு பட் அப்படி எதுவும் பண்ணல..நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..அவளும் கொஞ்சம் தூங்கட்டும்..மாத்திரை எதுவும் தரவேண்டாம்..நார்மலா தூங்கட்டும்..ரூமை லாக் பண்ணிக்கோ..”என்றவன் தன்னுடைய அறைக்கு சென்றான்..

 

உள்ளே நுழைந்த சுபா “நாம்ப எதுக்கு இங்க வந்து இருக்கோம்..”என நவீனை பார்த்து கேட்க,அவளை பார்த்து புன்னகைத்தவன் “டூர் வந்து இருக்கோம்..இங்க இருக்குற இடம் எல்லாம் சுத்தி பார்க்க போறோம்..”என சொல்ல..”ஐய்…சுத்தி பார்க்க போறோமா.. ஜாலி… ஜாலி…”என்று துள்ளி குதித்தாள் சந்தோசத்தோடு…அதனை பார்த்த நவீனின் கண்களில் கண்ணீர் திரையிட்டது…

 

அறைக்குள் சிறிது நேரம் தூங்கி எழுந்தவர்கள் ஹாஸ்பிடல் செல்வதற்கு தயாரானார்கள்..சுபா எப்படி நடந்துகொள்வாள் என்ற பயத்துடனே அந்த பயணம் அவர்களுக்கு ஆரம்பமானது..நவீன் சுபாவுடன் வெளியே இருப்பதை எல்லாம் சுட்டி காட்டிக்கொண்டு அவளை திசை திருப்பி கொண்டு இருந்தான்…சுபாவும் அவன் சொல்வதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் எந்த ரகளையும் செய்யாமல்.. நால்வரையும் ஏற்றிக்கொண்டு கார் அங்குள்ள புகழ் பெற்ற மருத்துவமனையின் முன்பு நின்றது…

 

உள்ளே சென்று ரிசப்சனில் அமர்ந்தவர்கள் டாக்டர் சிவகுமாரின் அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டு அமர்ந்தனர்..சுபா அங்கு இருந்தவர்களை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு அமர்ந்து இருந்தாள்..உள்ளே அவர்களை அங்கு இருந்த நர்ஸ் போக சொல்ல ,சுபா மற்றும் நவீன் உடன் உள்ளே நுழைய ஆனந்தவள்ளி வெளியே இருக்கையில் காத்திருக்க ஆரம்பித்தார்..

 

வணக்கம் சொல்லி இருக்கையில் அமர்ந்த விஜய் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவன், “இது சுபா,இவ தான் பேசன்ட்…இது நவீன் இவளோட ஹஸ்பென்ட்..”என்று அறிமுகம் செய்து வைத்தான்..

 

“ஹ்ம்ம் ஜோசப் எல்லாத்தையும் சொன்னார்..நீங்க எல்லாம் காலேஜ் ப்ரண்ட்ஸ்னு…என்னால முடிஞ்ச அளவுக்கு நான் ஹெல்ப் பண்றேன்..கண்டிப்பா குணப்படுத்திடலாம்..ஒண்ணும் கவலைப்பட வேண்டியது இல்ல..ரிபோர்ட்ஸ் எல்லாம் குடுங்க பார்க்கலாம் ..”என வாங்கி பார்த்தவர்..சுபாவினை ஒரு முறை சோதனை பார்த்தார்…சுபாவின் நடவடிக்கைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னான் நவீன்…

 

சிவக்குமார் “ரிபோர்ட்ஸ் வச்சு பார்க்கும் போது இவங்களுக்கு Dementia  இருக்கு அதாவது புரியிற மாதிரி சொல்லணும் அப்படின்னா மனம் சிதைவடைதல் அப்படின்னு சொல்லுவாங்க தமிழ்ல..மூளையில் ஏற்படும் காயத்தினால் உருவாவதாகவோ அல்லது வளரக்கூடியதாகவோ இருக்கலாம்;இதுக்கான அறிகுறி அப்படின்னு பார்த்தீங்க அப்படின்னா தெரிஞ்சவங்களோட பேர்,.முதல்ல நடக்குற விஷயம் கொஞ்ச நேரத்துல மறந்து போகும்.. பின் நாள் ஆக ஆக பழைய சம்பவங்களும் மறந்து போகும்.சில சமயங்கள்ல பேச வேண்டிய வார்த்தை கூட மறந்து போகும்.புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது அவங்களுக்கு குழப்பம் ஏற்படும்.அடிக்கடி கோவப்படுவாங்க…”

 

“ஏற்கனவே உங்களோட கருத்தையும் ரிபோர்ட்ஸ் வச்சி பார்க்கும் போது 90% சதவீதம் மனம் உளைச்சலா தான் காரணம்..இது சூழ்நிலைக்கு தகுந்த மாதிரியும் மாறும்..AMTS-சுருக்க மனநிலை சோதனை ஒண்ணு பண்ணலாம்..சிறு மனநிலை சோதனை,மாற்று மனநிலை சோதனை எல்லாம் பண்ணலாம்..இந்த மூணு டெஸ்ட் முடிஞ்சதும் ரிப்போர்ட்ஸ் வரது பொறுத்து நாம்ப ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்…முடிஞ்ச வரைக்கும் அவங்களை உங்களோட இருக்க வைங்க..தொடர்ந்து அவக்கிட்ட பேசிட்டு இருங்க..”என சொல்ல

 

விஜய் “ஒரு சில நேரம் ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்குறா டாக்டர்.. அந்த டைம்ல எங்களால ஒண்ணும் பண்ண முடியல..யாரையும் கிட்ட நெருங்க விட்றது இல்ல…ஏன் அப்படி..??..அதுக்கு என்ன காரணமா இருக்கும்…”என கேட்க

 

சிவகுமார் “பொதுவா இந்த மாதிரி பெசன்ட்ஸ்  எல்லோருமே எப்பவும் அப்படி தான் நடந்துப்பாங்க..அவங்களுக்குன்னு ஒரு உலகம் இருக்கும்..சில சமயம் தன்னை சுத்தி இருக்குறவங்களை அதுக்குள்ள அனுமதிப்பாங்க..சில சமயம் வெறுத்து ஒதுக்குவாங்க…தனியா அவங்களோட உலகத்துல இருக்குறதை குறைக்க பாருங்க..பேச்சு குடுத்து கொஞ்சம் கொஞ்சமா பழசை அவங்க மனசுல பதிய வைக்க பாருங்க..ஒரு சில மருந்து எழுதி தரேன் அதை ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி குடுங்க..மீதி எல்லாம் ரிசல்ட் வந்த பிறகு பார்க்கலாம்..”என சொல்ல..

விஜய் “தேங்க்ஸ் டாக்டர்..”என விடைபெற்று வெளியேறியவன் நவீன் மற்றும் சுபாவுடன்..டாக்டர்  எழுதி கொடுத்த டெஸ்ட் எல்லாம் செய்ய சுபாவினை அழைத்து சென்றான் நவீன்..டெஸ்ட் எடுக்க செல்லும் போது சுபா நவீனிடம் “நாம்ப எதுக்கு ஹாஸ்பிடல் வந்து இருக்கோம்..யாருக்கு உடம்பு சரியில்ல..”என நவீனை விடாமல் கேட்டுக்கொண்டே வர..நவீனுக்கு எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழித்தான்…

 

“எனக்கு தான் உடம்பு சரியில்ல மா…அதான் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தோம்…”என விஜய்  சொல்ல..அவனை மேலும் கீழும் பார்த்தவள் “அப்படியா சரி…”என்றவள் நவீனிடம் “அவங்க இருக்கட்டும் வாங்க நீங்களும் நானும் சுத்தி பார்க்க போலாம்…”என்றாள் நவீனிடம்…

 

அவளின் பதிலில் மூவரும் அதிர்ந்து போய் ஒருவரை பார்க்க எப்படி சுபாவிடம் சமாளிப்பது என தெரியாமல் விழித்தனர் இப்போது..சுபா “என்ன நிக்கிறீங்க…நாம்ப போலாம்..அவங்க இருக்கட்டும்..வாங்க…”என நவீனின் கையை பிடித்து இழுக்க..நவீன் விஜயினை பாவமாய் பார்த்தான்…

 

“என்னமா இது..எனக்கு ஒண்ணு அப்படின்னா நீங்க எல்லாம் துணைக்கு இருப்பீங்க அப்படின்னு தான நான் வந்தேன்..இப்படி பாதியிலே விட்டுட்டு போறேன்னு சொல்ற..”என விஜய் கேட்க..அவனை வேற்று கிரக வாசி போல பார்த்தவள் “உங்களை யாரு அப்படி நினைக்க சொன்னா..நவீன் என்னை இங்க சுத்தி பார்க்க தான் அழைச்சிட்டு வந்தார்…நான் இந்த ஊரை சுத்தி பார்க்கணும்..”என அதே முடிவு அவள் ஒற்றை காலில் நிற்கவும்…நர்ஸ் டெஸ்ட் எல்லாம் எடுக்க அவளை அழைத்தார்…

 

“என்ன எதுக்கு கூப்பிடறீங்க..இதோ இவருக்கு தான் உடம்பு சரியில்ல..”என்றவள் நவீனிடம் அழைத்து செல்ல சொல்லி கெஞ்சிக்கொண்டு இருந்தாள்…நர்ஸ் அவளிடம் உனக்கு தான் பண்ணனும் வா..”என கையை பிடித்து இழுக்க,அவரிடம் இருந்து கையை உதறியவள் “நான் வரமாட்டேன்..எனக்கு ஒண்ணும் இல்ல..”என அடம் பிடிக்க ஆரம்பித்தாள்…

 

“சமத்தா வா..நான் உனக்கு வேணும் அப்படின்றது எல்லாம் வாங்கி தரேன்…”என நர்ஸ் தாஜா செய்ய,”எனக்கு எதுவும் வேண்டாம்…நீங்க போங்க…”என அவரிடம் இருந்து கையை  உருவிகொண்டு நவீனின் பின்னே மறைந்து நின்று கொண்டாள்…”சுபா அவங்க கூட போயிட்டு வா…”என விஜயும் சொல்ல..யார் சொல்வதும் கெஞ்சுவதும் அவளின் காதிற்கு எட்டவில்லை…

 

“இது வேலைக்கு ஆகாது..”என்று நினைத்த நர்ஸ் நவீனை உள்ளே அழைத்து செல்ல சுபாவும் அவனுடனே உள்ளே சென்றாள்..உள்ள வந்தவளை பிடித்தவர்கள் அவள் திமிற திமிற கஷ்டப்பட்டு படுக்க வைத்தவர்கள் நவீனை வெளியே அனுப்பினர்… “என்ன விடுங்க…என்ன விடுங்க…நவீன்…நவீன்…நான் ஊரை சுத்தி பார்க்க போகணும்..விடுங்க…”என்று அவள் கத்தியது எல்லாம் அங்கு எடுபடவில்லை…

 

சிறிது நேரம் அடம் பிடித்தவள் தன்னை சுற்றி இருந்த பெரிய பெரிய உபகரணங்களை பார்த்து மிரண்டுவிழிக்க ஆரம்பித்தாள்..எப்படியோ கஷ்டப்பட்டு போராடி டெஸ்ட் எல்லாம் எடுத்தனர்…அதன் பின் ரிசல்ட் நாளை என்று விட சுபாவை அங்கே அட்மிட் செய்தனர்…

 

********************************

தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பிரதீப்பிடம் கூறிவிடுமாறு ஜெயஸ்ரீக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாள் வீணா..வீணாவின் மெசேஜை கண்ட ஜெயஸ்ரீ வீணாவிற்கு அழைத்து “என்ன வீணுகுட்டி என்ன ஆச்சு உடம்புக்கு..”என பதட்டமாய் கேட்க…ஜெயஸ்ரீயின் பாசத்தில் அவள் மனம் நெகிழ்ந்தது…

 

“ஒண்ணும் இல்ல ஜெயா..நார்மல் வயித்து வலி தான்…ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்..நீ டென்ஷன் ஆகாத..”என வீணா  சமாதானம் செய்ய..”அப்படியா..வேணும்ன்னா நான் வரட்டுமா…??”என ஜெயஸ்ரீ கேட்க..”அய்யோ வேற வினையே வேண்டாம்..”என மனதிற்குள்  நினைத்தவள்

 

“இல்ல ஜெயா வேண்டாம்..ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்…ஏதாவது ஒண்ணு அப்படின்னா நான் உனக்கு கண்டிப்பா போன் பண்றேன்..”என சொல்லி அவளை சமாதானபடுத்திவிட்டு போனை வைத்தவள் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தன்னை சமன்படுத்தினாள்…

 

ஜெயஸ்ரீ சொன்னதும் பிரதீப்பிற்கு தன் மேல் எழும் கோவத்தை நினைத்தவள் அவன் முகம் போகும் போக்கை எண்ணி இப்போதே அவளுக்கு இதழில் புன்னகை அரும்பியது… போனை அணைத்து வைத்தவள் அதன் பின் உண்டுவிட்டு நன்றாக உறங்கி எழுந்தாள்…வெகு நேரம் வீணாவிற்கு தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் போக பிரதீப்பிற்கு வீணாவின் மேல் கோவம் பன்மடங்காய் பெருகியது…

 

“பாவி கடைசியில ஆப்பு வச்சிட்டா..இன்னைக்கு ஆபீஸ் வந்துடுவா அப்படின்னு மிதப்பா இருந்தா எனக்கே தண்ணி காமிச்சிட்டா..இருடி உனக்கு இருக்கு…”என அவனின் மனது அவளை வறுத்தெடுத்துக்கொண்டு இருந்தது…வீணா தீட்டிய திட்டம் தெரிந்து இருந்தால் என்ன செய்து இருப்பானோ..

 

பேருந்தில் பயணம் செய்துக்கொண்டு இருந்து வீணாவிற்கு தனது திட்டத்தின் படி அனைத்தும் நடந்தேறியதை நினைத்து சந்தோசமாக இருந்தாலும்,ஏனோ ஒன்று மனதில் பாரமாய் அழுத்துவது அவளுக்கு புரியத்தான் செய்ததது..இருந்தும் என்ன செய்ய..??..வேறு வழி இல்லையே, என் மனதினை கொன்று புதைத்தவனை எப்படி மன்னிக்க முடியும் என அவள் மனம் முரண்டு பிடித்தது…

 

மறுநாள் காலையில் சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கியவளை “வீணா…”என்று அன்போடு அணைத்துக்கொண்டான்  அவளின் அண்ணன் மாதவன்…”அண்ணா…”என அவளும் அணைத்துகொண்டவள் “எப்படி அண்ணா இருக்கீங்க..”என்றாள் பாசமாய்..அவளின் தலையை வருடியவன் “நான் நல்லா இருக்கேன் டா..நீ எப்படி இருக்க…என்னடா ரொம்ப இளச்சி போயிட்ட..”என கேட்க..அவனை பார்த்து சிரித்தவள் “நான் நல்லா தான் அண்ணா இருக்கேன்…நீங்க தான் இளைச்சி போயிட்டீங்க..”என அவள் அவனை பார்த்து கேட்க..

 

“போதும் நீங்க பாசமழையில நனைஞ்சது..இதுக்கு பிறகும் இப்படி இருந்தா கோயம்பேடே வெள்ளத்துல மூழ்கிடும்..வாங்க போலாம்…”என்ற கிண்டலோடு அவர்களை நெருங்கினான் சுரேஷ் மாதவனின் நண்பன்..அறிமுகங்கள்,நல விசாரிப்புகள், கிண்டல் கேலிகள் எல்லாம் முடிந்து மூவரும் நேராக சுரேஷின் வீட்டுக்கு சென்றனர்..

 

சுரேஷ் மாதவனுடன் பணிபுரிகிறவன்…சுரேஷின் வீட்டிற்கு பக்கத்திலே தான் மாதவன் வீடு பார்த்து வாங்கி இருந்தான்…சுரேஷின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் காலை பால் காய்ச்சுவது என முடிவு செய்து இருந்தனர்…அதன்படி மாதவன் எல்லா வேலைகளையும் பார்க்க,வீணாவும் உடன் இருந்து சில வேலைகளை செய்துவிட்டு சுரேஷின் குடும்பத்தினருடன் சிறிது நேரம் பேசிவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தாள்..

 

அதன் பின் மாதவனுக்கு உதவியாய் பேசிக்கொண்டே அவனின் பின்னே சுற்றிக்கொண்டு இருந்தாள் வீணா…மாதவன் “வேண்டாம் டா வீணா..நீ ரெஸ்ட் எடு…”என்று எவ்வளவு சொல்லியும் அவள் காதில் வாங்கவில்லை…அவனின் பின்னே அழைந்துக்கொண்டு இருந்தாள்…

 

மாதவனுக்கு சிறு பிள்ளை போல இருக்கும் தங்கையை எப்படி வேறு வீட்டிற்கு திருமணம் செய்து வைத்து அனுப்புவது என நினைக்கும்போதே அவன் மனம் கனத்து போனது…அவனின் ஒரே உறவல்லவா..திருமணத்திற்கு பிறகு அவனுக்கு அந்த அளவிற்கு உரிமை இருக்காது என்பது அவனுக்கு புரியத்தான் செய்தது…

 

எதையும் நினைக்க கூடாது என அவள் எவ்வளவு தான் எண்ணினாலும், அமைதியாய் அமர்ந்து இருக்கும் நேரங்களில் பிரதீப் பற்றிய நினைவும்,அவன் பேசிய வார்த்தைகளும்,அவனின் மேல் கொண்ட நேசமும் அவளின் முன் வந்து அவளை பாடாய் படுத்தி அவளை வதைத்துக்கொண்டு இருந்தது..

 

அமைதியாய் இருந்து மனதை வேதனை கொள்ள செய்வதற்கு பதிலாய் வேலை செய்து கொண்டு ,மாதவனுடன் பேசிக்கொண்டு இருப்பது சிறந்தது என தோன்ற அதன் படி செய்து கொண்டு இருந்தாள்…

 

மறுநாள் காலையில் விடிந்த வேலையில் தலைக்கு குளித்து அவளின் அண்ணா வாங்கி கொடுத்து இருந்த பட்டு புடவையில் அழகாய் மிளிர்ந்தாள் வீணா…நல்ல நேரத்தில் பால் காய்ச்சி எல்லோருக்கும் கொடுத்து,சுரேஷின் குடும்பத்தினருடனும்,அண்ணன் மாதவனுடனும் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள் வீணா..

 

ஆனால் மனம் என்னவோ இதன் பிறகு நடக்கும் பெண் பார்க்கும் சம்பவத்தை நினைத்து கலங்கிக்கொண்டு இருந்தது…என்னதான் பிரதீப்பை அவள் வெறுத்து ஒதுக்கினாலும்,அவளால் வேறு ஒருவனை இப்போது மணக்க முடியும் என்பது சாத்தியமில்லை என்பது புரிய மாதவனிடம் பெண் பார்க்கும் படலத்தை நிறுத்திவிடுமாறு எப்படி சொல்வது என தெரியாமல் குழம்ப ஆரம்பித்தாள்..

 

மாதவன் அதற்கு எல்லாம் இடம் கொடுக்க போவதில்லை என்பதை பாவம் அவள் அறிய வாய்ப்பில்லை தான்.. அறிந்து இருந்தால் சென்னைக்கு பயணம் மேற்கொண்டு வந்து இறங்கி இருக்க மாட்டாளோ என்னவோ..??

 

என்னவென்று சொல்வேன் என்னில்

நடப்பதை

எப்படியென்று சொல்வேன் நான்

உணர்வதை

எங்குசென்று சொல்வேன் எந்தன்

மாற்றத்தை

யாரிடம் சொல்வேன் எந்தன்

வேதனையை

சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டால்

செய்யவேண்டியதை எல்லாம் நீ செய்வாயா

சொல்ல முடியாமல்  தவித்து போகிறேன்

சொல்லிவிட துடித்து போகிறேன்

துக்கத்தை விழுங்க பார்க்கிறேன்

துயரத்தை துரத்த எண்ணுகிறேன்

என்ன செய்து என்ன பயன்

எனக்கு விடிவு காலம் வெகு தூரம்

என்று அறிந்து கொண்டேன் இன்று

விடியலையாவது தருவாயா

எந்தன் வாழ்விற்கு

இல்லை சில விசித்திரங்களை தான்

புரிவாயா எந்தன் வாழ்வில்..??

 

விலகல் தொடரும்…

Advertisement