Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -26

 

சுபாவினையே பார்த்துக்கொண்டு நெருங்கியவள் மனமோ,கண் முன்னால் தெரியும் பிம்பத்தை கண்டு கலங்கி போய் இருந்தது அவளது மனம்…எப்படி இருந்தவள்,எப்படி இருக்கிறாள்,இதற்கு எல்லாம் தானும் ஒரு காரணம் என நினைக்க நினைக்க அவளுக்குள் பெரிய பிரளையமே உண்டானது..

 

தனக்குள் உண்டாகும் கேவலை உள்ளுக்குள் விழுங்கியவள்,சுபாவின் அருகில் சென்று நின்றாள்.. ஜெயஸ்ரீக்கு வழி விட்ட நவீன் அமைதியாய் ஓரத்தில் நின்றுக்கொண்டான்..நவீனின் அருகில் சென்று நின்ற விஜய் ஆறுதலாய் நவீனின் தோளினை அழுத்தினான்..

 

விஜயினை பார்த்து வெறுமையாய் சிரித்தவன்,விஜயின் கையின் மீது தன் நடுங்கும் கையினையும் வைத்து அழுத்திக்கொண்டான்…

 

மெத்தையின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த சுபா,தன் அருகில் நிழலாடவும்,யார் இது என்பது போல ஜெயஸ்ரீயினை பார்த்தாள்..சுபாவின் அருகில் அமர்ந்த ஜெயஸ்ரீ,சுபாவின் கையினை தன் கையில் அடக்கினாள்..

 

யாரோ ஒருவர்,முன் பின் தெரியாதவர் தன் கையினை பிடிப்பது போல,சட்டென்று ஜெயஸ்ரீயின் கையில் இருந்து தன் கையினை உருவியவள்,அப்படியே அங்கு இருந்து நகர்ந்து கட்டிலின் விளிம்பில் சென்று சுவற்றோடு ஒட்டிக்கொண்டாள்..

 

அடிபட்ட பார்வையினை ஜெயஸ்ரீ சுபாவினை நோக்கி வீச,அவளோ ஜெயஸ்ரீயினை சந்தேக பார்வையோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்…

குழந்தையாய் தன் கண் முன் தெரியும் தன் தோழியிடம் எப்படி அணுகுவது என்று ஜெயஸ்ரீக்கு புரியவில்லை…

 

சிறிது நேரம் அமைதியை கடைபிடித்தவள்,அதன் பின் நியாபகம் வந்தவளாக நவீனை நோக்கி “கு…குட்டி பாப்பாக்கு என்ன ஆச்சு..”என திக்க திணறி கேட்க..கண்களை இறுக மூடியவன் “எங்களுக்கு அந்த குடுப்பனை இல்ல ஜெயஸ்ரீ..கரு கலைஞ்சி போச்சு..”என்றான் வேதனை மிகு குரலில்…

 

அதிர்ச்சியோடு ஜெயஸ்ரீ சுபாவினை பார்க்க அவளோ பக்கத்தில் இருந்த தலையணை கொண்டு வெகு தீவீரமாக அதனுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள்…அடுத்து என்ன செய்வது என சிந்தனையில் இருந்தவள்,

அறையில் இருந்து அமைதியாய் வெளியேறினாள்…

 

அவளின் யோசனையான முகத்தினை கண்டவன்,கண்களினாலே சுபாவினை கவனிக்குமாறு நவீனிடம் சொல்லியவன்,ஜெயஸ்ரீயின் பின்னே சென்றான்…அங்கு இருந்த பால்கனியில் சென்று நின்ற ஜெயஸ்ரீ வானத்தை வெறித்து நோக்கிக்கொண்டு இருந்தாள்…

 

விஜய் “என்ன ஜெய்,என்ன ஆச்சு..”என்றான் அவள் அருகில் சென்று…அவனை நோக்கியவள் கண்கள் கலங்கி போய் இருக்க,எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்..

அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவன் “என்னடா,எதுக்கு இப்போ இப்படி மனசை போட்டு குழப்பிக்கிற..எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்..சரி பண்ணிடலாம்..”என அவளுக்கு அறுதல் சொன்னான்…

 

ஜெயஸ்ரீ “எப்படி ஜெய்..சத்தியமா என்னால முடியல…எனக்கு இவள பார்க்க பார்க்க,மனசு அப்படியே தவியா தவிக்குது..நான் தான் இவளோட இந்த நிலைமைக்கு காரணம் அப்படின்னு என்னோட மனசாட்சி என்னை கொல்லுது..என்னால நிம்மதியா மூச்சுகூட விட முடியல ஜெய்..நான் என்ன பாவம் பண்ணேன்..ஆனந்தி அம்மாக்கு மட்டும் இவளோட நிலைமை தெரிஞ்சா உடஞ்சி போயிடுவாங்க..அவங்க கிட்ட நான் எப்படி இவளோட நிலைமையை எடுத்து சொல்லுவேன்…எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..”என சொல்லியவள் கடைசியில் விஜயின் மீது சாய்ந்து அழ ஆரம்பிக்க…

 

அவளை ஆதரவாய் அணைத்துக்கொண்டவன்,அவளின் முதுகினை வருடிக்கொடுக்க ஆரம்பித்தான்..அழுதுக்கொண்டு இருந்தவள்,விஜயின் வருடலில் அவளது அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது..மனதில் பாரம் குறையவில்லை என்றாலும்,ஏதோ ஒன்று அவளுக்கு தெம்பினை கொடுத்தது,அது விஜயின் நீண்ட நாள் கழித்து கிடைத்த அருகாமையா,

இல்லை  விஜயின் வருடலா,அவன் கூடவே இருக்கிறான் என்ற தெம்போ,ஏதோ ஒன்று அவளுக்கு மிகப்பெரிய தெம்பை தந்தது….

 

விஜய் “நீ எதுக்கும் கவலைபாடாத,எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..

எல்லாமே சீக்கிரம் சரியாகிடும்..நாம்ப பட்ட கஷ்டத்துக்கு விடிவு காலம் வந்துடுச்சு ஜெய்..சுபாவை கண்டிப்பா சரி பண்ணிடலாம்,இப்போ இருக்குற மருத்துவ வசதியில எல்லாமே சாத்தியம்,அப்படின்னு நாம்ப நம்புவோம்..”என சொல்ல…ஜெயஸ்ரீ சரி..என தலையசைத்தாள்..

 

அதன் பிறகு நந்துவிற்கு அழைத்தவன்,அவனிடம் அடுத்து என்ன செய்வது என கலந்தாலோசிக்க ஆரம்பித்தான்…பின் இருவரும் பேசியவர்கள் அதன் பின் சுபாவின் வீட்டில் தற்போதைய சுபாவின் நிலையை சொல்வது நல்லது என்று முடிவு எடுத்தவர்கள்,நவீனிடமும் ஜெயஸ்ரீயிடமும் தங்களது எண்ணத்தினை பகிர்ந்து கொண்டனர்…

 

நவீனுக்கு எப்படியாவது சுபாவினை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனினுள் ஊறிபோய் இருக்க,அவன் “நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல..உங்க விருப்பப்படி செய்ங்க..”என்றுவிட்டான்..

 

ஜெயஸ்ரீக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும்,அவளும் அதையே செய்ய வேண்டும் என்று நினைத்து இருக்க,அவள் ஏதுவும் சொல்லவில்லை..ஆனால் இது எந்த அளவிற்கு சுபாவிடம் மாற்றம் தெரியும் என்பது அவளுக்கு குழப்பமாகவும்,சந்தேகமாகவும் இருந்தது…

 

அவளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தையும்,குழப்பத்தையும் கண்ட விஜய் “என்ன ஜெய்..என்ன ஆச்சு உனக்கு மீண்டும்,இப்போ தான சொன்னேன்,நீ எதை பத்தியும் கவலைபாடாத அப்படின்னு அப்புறம் என்ன..”என அவள் தன் மேல் நம்பிக்கை வைக்கவில்லையோ என அவன் சற்று கோவமாய் கேட்க..

 

ஜெயஸ்ரீ “எதுக்கு ஜெய் இப்படி கோவப்பட்ற..நான் உன் மேல நம்பிக்கை இல்லாமல் இல்ல,ஆனா எனக்கு ஏதோ கலக்கமா இருக்கு..வீட்ல இதை எப்படி எடுத்துப்பாங்க அப்படின்னு…சுபாகிட்ட எந்த அளவுக்கு முன்னேற்றமோ இல்ல,மாற்றமோ இருக்கும் அப்படின்னு ஒரே கவலையா இருக்கு, அந்த நினப்புல தான் அப்படி இருந்தேன்..”என அவனிடம் பொறுமையாய் சொல்ல…

 

விஜய்க்கு தன் முன்கோவத்தின் மீது எரிச்சலாய் வந்தது..தன்னையே முட்டாள் என மனதிற்குள் திட்டிகொண்டவன் “சாரி ஜெய்…உன்னோட முகத்துல தெரிஞ்ச கவலையை பார்த்து கொஞ்சம் கோவம் வந்துடுச்சு…நாளைக்கு கண்டிப்பா,உன்னோட அப்பா,அம்மா எல்லாம் சுபா அப்பா,அம்மாவோட இங்க வந்துடுவாங்க..என்ன நடக்குதுன்னு பொறுத்து இருந்து பார்ப்போம்..எல்லாம் நன்மைக்கே அப்படின்னு நம்புவோம்…”என்றான் அமைதியாய்..

 

சரி என தலையசைத்தவள்,சுபாவினை காண அவளது அறைக்குள் சென்றாள்..அமைதியாய் மருந்தின் வீரியத்தில் அவள் உறங்கிக்கொண்டு இருக்க,நவீன் அவளது அருகில் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு சுபாவின் தலையினை வருடிய நிலையில் அமர்ந்து இருந்தான்…

 

“எப்படி எல்லாம் நவீன் அண்ணாக்கூட வாழ வேண்டிய,இப்படி தன்னோட வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்கா..கடவுளே சீக்கிரம் இவ சரியாகணும்..ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசமா வாழணும்..”என இறைவனிடம் வேண்டிகொண்டாள்…

 

பின் மெதுவாய் நவீனின் அருகில் சென்று நின்றவள்,சுபாவினையே பார்த்துக்கொண்டு இருந்தாள்…காலடி சத்தம் கேட்டு திரும்பியவன் ஜெயஸ்ரீயினை பார்த்துவிட்டு,மீண்டும் சுபாவின் தலையினை வருட ஆரம்பித்தான்..

 

“அண்ணா..”என ஜெயஸ்ரீ நவீனை அழைக்க..சுபாவின் தலையினை வருடுவதை நிறுத்தியவன் “சொல்லுமா..”என்றான் ஜெயஸ்ரீடம்…

சுபாவினை ஒரு முறை திரும்பி பார்த்தவள்,”உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் அண்ணா,பேசலாமா…”என சொல்ல..சரி என தலையசைத்தவன், சுபாவிற்கு தலையணை சரி செய்து வைத்துவிட்டு வெளியேறிய ஜெயஸ்ரீயின் பின்னே சென்றான்…

 

மெதுவாய் கதவினை மூடியவன்,விஜயும் ஜெயஸ்ரீயும் அமர்ந்து இருந்த சோபாவின் அருகில் சென்றவன்,தானும் மற்றொரு சோபாவில் அமர்ந்து கொண்டான்…

 

விஜய் “நவீன் கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காத,சுபாக்கு நீ எத்தனையோ ஹாஸ்பிடல் பார்த்து இருக்க,ஆனா அவகிட்ட எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கு அப்படின்னு உன்ன தவிர வேற யாருக்கும் தெரியாது…கொஞ்சம் அதை பத்தி தெளிவா சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி இன்னும் பெரிய பெரிய டாக்டர் கிட்ட அவளுக்கு சிகிச்சை குடுக்கலாம்…”என சொல்ல…

 

நவீன் “நீ சொல்றதும் உண்மை தான் விஜய்…ஏற்கனவே ஆயுர்வேதிக் மருந்து நிறைய எடுத்து,அவளோட வயித்துல இருந்த புண்ணை சரி பண்ணோம்…

சட்டுன்னு கரு கலைஞ்சதுல அவளோட கருப்பையில கொஞ்சம் அதிகமா பாதிப்பு அடைஞ்சிடுச்சு…அது குணம் அடையிறதுக்கு தான் முதல்ல சிகிச்சை குடுத்தாங்க..அதுக்கு பிறகு தான் மனநிலை சரியில்லாம போனதுக்கு ஒரு மனநல மருத்துவர் கிட்ட காட்டினோம்…ஆனா எந்த ஒரு முன்னேற்றமும் இல்ல விஜய்..மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..”என அவன் வேதனையோடு சொல்ல

 

விஜய் “நீ ஒண்ணும் கவலைபடாத,எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்..கண்டிப்பா நல்லதையே நினைப்போம்..நல்லதே நடக்கும்…”என தேற்றினான்..பின் “எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட இதை பத்தி போன்ல விசாரிச்சேன்…

கேரளாவுல இதுக்கு நல்ல மருத்துவம் பாக்குறாங்களாம்..அதுவும் இல்லாம சுபாக்கு கொஞ்சம் இடம் மாற்றம் இருந்தா நல்லா இருக்கும்..ஏன் நாம்ப அவளை கேரளாக்கு அழைச்சிட்டு போக கூடாது..”என சொல்ல…நவீனுக்கும எத்தனையோ இடத்தில் சுபாவிற்கு மருத்துவம் பார்த்து இருந்தாலும்,

இதையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் உருவானது…  

 

எனவே விஜய் சொல்லியதிற்கு “சரி ..”என்று சம்மதம் தெரிவித்தான்..நவீன் சரி சொல்லவும்,ஜெயஸ்ரீயிடம் திரும்பியவன், “நீ சுபாவோட ரிப்போர்ட் எல்லாம் நவீன்கிட்ட இருந்து வாங்கி வை..நான் கொஞ்ச நேரத்துல வரேன்..”என்றவன்,அலைபேசியினை எடுத்துக்கொண்டு அங்கு இருந்து அகன்றான்…

 

ஏற்கனவே நந்துவின் மூலம் சுபாவின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்க சொல்லி இருந்ததால் நந்துவிற்கு அழைத்து,என்ன சொன்னார்கள் என விசாரிக்க எண்ணி நந்துவினை அழைத்தான்…

 

நந்து “சொல்லுடா….”

 

விஜய் “வெண்ண..நான் என்ன சொல்றது,நீ தான் சொல்லணும்…என்ன  பேசுனியா..என்ன சொன்னாங்க..”என்றான் ஆர்வமாய்..

 

நந்து “பாவி…எவ்வளவு கேவலமா திட்றான்..யார் மேல இருக்குற கோவமோ..என் மேல பாயுது..எல்லாம் என் நேரம்..வாங்கி கட்டிக்க வேண்டியது தான்..”என மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருந்தான்…

 

விஜய் “டேய்…என்னடா பண்ணிட்டு இருக்க…நான் பேசுறது கேட்குதா,

இல்லையா..??”என கத்த, விஜயின் கத்தலில் தன் மன புலம்பலில் இருந்து வெளியேவந்தவன், “ஹாங்…சாரி டா..சொல்லு…”என சொல்ல ,விஜயிற்கு தன் கண் முன்னே நந்து இருந்தால் அடித்து தும்சம் செய்யும் அளவிற்கு கோவம் வந்தது..

 

தன்னை கட்டுபடுத்தி கொண்டவன், “டேய்..என்ன டா..பூலோகத்துல இருக்கியா..?? இல்ல வானலோகத்துல இருக்கியா…”என்று கடிந்த பற்களியிடையே வார்த்தை சிக்கி தவித்து வெளிவந்தன..

 

நந்து “ஏன்டா..உனக்கு இந்த கொலைவெறி,வானலோகம் போற அளவுக்கு எனக்கு வயசு ஆகல..”என அலறிக்கொண்டு சொல்ல…விஜய்க்கு எப்படி அவனிடம் பேசுவது என்றே புரியவில்லை…

 

விஜய் “நந்திலா…”என கோவமாய் அழைக்க…

 

நந்து ”சரி சரி…ஜோக்ஸ் எல்லாம் அபார்ட்…கம்மிங் டு தி மேட்டர்…நீ சொன்ன மாதிரி நான் ஆனந்தி அம்மாகிட்ட பேசிட்டேன்..அவங்க ஒரே அழுகைடா விஷயம் கேட்டதுல இருந்து…ஆனா கொஞ்சம் மாமா தான் முறுக்கிட்டு இருக்கார்…ஆனந்தி அம்மா நாம்ப நினைச்ச மாதிரி தான் ரியாக்ட் பண்ணாங்க…அவங்க விட்டா இப்பவே அங்க கிளம்பி வந்துடுவாங்க…ஆனா மாமா கோவமா இருக்குறதுனால கொஞ்சம் தயங்குறாங்க…நீ சொன்ன மாதிரி விஷயத்தை ஜெயஸ்ரீ வீட்டுக்கும் சொல்லிட்டேன்…”என சொல்ல…

 

விஜய் ”அப்படியா…அவங்க என்ன சொன்னாங்க…எப்போ வராங்க..”என்றான்..

 

நந்து “அது தெரியல டா… ஆனா எனக்கு என்னமோ அவங்க கண்டிப்பா வருவாங்க அப்படின்னு தோணுது…தமையந்தி அத்தை எப்படியாவது எல்லோரையும் அழைச்சிட்டு வந்துடுவாங்க…”என்று தனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொண்டான்..

 

விஜய் “ஹ்ம்ம்..சரிடா…அவங்க வந்து போன பிறகு நாம்ப சுபாவை கேரளாக்கு அழைச்சிட்டு போகலாம்…இது பத்தி உன்கிட்ட நான் அப்புறம் பேசுறேன்…”என சொன்னவன் நந்துவிடம் இருந்து விடைபெற்று உள்ளே வந்தான்..

 

நவீன் கொடுத்து இருந்த ரிப்போர்ட் எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தவள்,விஜய் வந்து அருகில் அமரவும், “என்ன இவ்வளவு பக்கத்துல உட்கார்ந்து இருக்கீங்க..கொஞ்சம் தள்ளி உட்காருங்க…”என மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல…

 

விஜய் “ம்ம்ம்…கொஞ்ச நேரம் தான்டி..உன்ன ஹாஸ்டல்ல விட்டா இப்படி பக்கத்துல மீண்டும் எப்ப உட்கார முடியுமோ..ப்ளீஸ்..”என கெஞ்ச,அவனின் கெஞ்சலில் அவள் மனம் உருகினாலும்,நவீன் வந்து பார்த்தால் தன்னை பற்றி என்ன நினைப்பான் என எண்ணியவள், “ப்ளீஸ் கொஞ்சம் நகர்ந்து உட்காருங்க..”என்றாள் சற்று கோவமாக..

 

விஜய் “ஹேய்ய்ய்…என்னடி ரொம்ப பண்ற…முன்னாடி எல்லாம் உன் பக்கத்துல தான உட்கார்ந்து இருந்தேன்…அப்போ எதுவும் சொல்லாதவ,இப்போ மட்டும் எதுக்கு முறுக்குற..”என கேட்க..அவனை பார்த்து முறைத்தவள், “அப்போ தள்ளி உட்கார்ந்து இருந்தீங்க…இப்போ அப்படியா..உரசிட்டு உட்கார்ந்து இருக்கீங்க…நவீன் அண்ணா பார்த்தா என்ன நினைப்பார்..கொஞ்சம் தள்ளி தான் உட்காருங்களேன்..”என ஜெயஸ்ரீ கெஞ்ச துவங்க…

 

விஜய் “சரி சரி..தள்ளி உட்கார்றேன்…ஆனாலும் ரொம்ப பண்ற..எனக்கும் ஒரு காலம் வரும்..அப்போ பார்த்துக்கிறேன் உன்னை..”என விஜய் செல்ல கோவத்தோடு நகர்ந்து உட்காரவும்..நவீன் இவர்களை நோக்கி வரவும் சரியாய் இருந்தது..

 

விஜய் “சரி டா நவீன்…எங்க கிட்டவே ரிப்போர்ட் இருக்கட்டும்..எதுக்கும் ஸ்கேன் காப்பி எடுத்து அந்த டாக்டர்க்கு அனுப்பி பார்க்கலாம்..ப்ரண்ட்டோட

சொந்தகாரர் தான் அவரு..நல்ல மனுஷர்…அவரால முடிஞ்சா கண்டிப்பா நமக்கு ஹெல்ப் பண்ணுவார்..நீ ஒண்ணும் கவலைபடாத,சீக்கிரம் சுபா பழைய மாதிரி சரியாகிடுவா..”என நவீனுக்கு தெம்பூட்டினான்..

 

நவீன் “ஹ்ம்ம்..சரி டா…உன்னைய தான் நம்பி இருக்கேன்…இன்னைக்கு அம்மா கண்டிப்பா வந்துடுவாங்க…அவங்க வந்தா எனக்கும் கொஞ்சம் தெம்பா இருக்கும்…எல்லாம் நல்லதாவே நடக்கும் அப்படின்னு நம்புறேன்…

பார்க்கலாம்..நீ கேட்டுட்டு சொல்லு..உனக்கு நான் போன் பண்றேன்…”

 

விஜய் “ஹ்ம்ம்…கண்டிப்பா டா…நானே கேட்டுட்டு உனக்கு போன் பண்றேன்..சுபாவை பத்திரமா பார்த்துக்கோ..நாங்க கிளம்புறோம்…”

 

நவீன் “சாரி விஜய்…சாப்டீங்களா இல்லையான்னு கூட கேட்கல..கொஞ்ச நேரம் பொறுங்க…நான் சமைச்சிட்றேன்..சாப்பிட்டு போலாம்..”

 

விஜய் “ஹே நவீன் நமக்குள்ள எதுக்கு பார்மாலிட்டி எல்லாம்..அது எல்லாம் ஒண்ணும் வேண்டாம்…நாங்க கிளம்புறோம்,..நீ போய் சுபாவை பாரு…”என்றவன் “போலாமா ஜெய்..”என்றான் ஜெயஸ்ரீயிடம்..”சரி..”என்பது போல அவள் தலை அசைக்க…அதன் பின் சுபாவினை இருவரும் அவளது அறைக்கு சென்று பார்த்துவிட்டு நவீனிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டனர்…   

 

ஜெயஸ்ரீயினை அவளது ஹாஸ்டலில் விட்டவன் “சரி கிளம்பட்டுமா ஜெய்..”என்றான் அவளிடம்…”இருங்க ஒரு நிமிஷம்..இன்னும் பாதி கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல…”என கேட்க…”என்ன கேள்வி..”என்றான் விஜய்

 

ஜெயஸ்ரீ “ஹ்ம்ம்…ஜீவாக்கு எப்படி விஷயம் தெரிஞ்சது..அவ மேல தப்பு இல்லன்னு உங்களுக்கு எப்போ தெரிஞ்சது..எல்லாத்தையும் சொல்லுங்க..

தெரியல அப்படின்னா என்னோட மண்டையே வெடிச்சிடும்..”  

 

விஜய் “ஜீவாவுக்கு எப்படி விஷயம் தெரிஞ்சது அப்படின்னு நீ அவகிட்ட தான் கேட்கணும்..என்கிட்ட கேட்டா,எனக்கு எப்படி தெரியும்…உனக்கு தெரியும் போது தான் எனக்கும் தெரியும்..அதுக்கு முன்னாடி எனக்கும் ஒண்ணும் தெரியாது…எனக்கு சுபா கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கா அப்படின்னு நந்து சொல்லி தான் தெரியும்..உன் மேல இருக்குற கோவத்தை கொஞ்சம் நந்து மேலையும் காட்டினேன்..உனக்கு சப்போர்ட் பண்ணான்..

அதுக்கு பிறகு அவன் உன்னை பத்தி பேசாம விட்டதுனால எப்பவும் போல அவன் கிட்ட பேச ஆரம்பிச்சிட்டேன்…நவீனுக்கு என்னோட நம்பர் கிடைச்சதே நந்து மூலமா தான்…”என்றவன் இன்னும் தொடர்ந்தான்..

 

“நவீனோட அத்தை பையனும்,நந்துவும் ப்ரண்ட்ஸ் போல..அப்படி தான் நந்துவோட நம்பர் நவீனுக்கு கிடைச்சி இருக்கு…அதுக்கு பிறகு தான் நவீன் எனக்கு போன் பண்ணி இருக்கான்..மீதி எல்லாம் உனக்கு தெரியுமே..”என சொல்ல…

 

அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் “உங்களுக்கு என்னோட தங்கச்சி மேல கோவம் வரலையா..சுபா மேல கோவம் வரலையா..”என கேட்க…அவளை உறுத்து பார்த்தவன் கண்ணில் என்ன செய்து இருக்கிறது என்பது அவளால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது…என்னை பற்றி உனக்கு தெரியாதா..“என்றது அவன் பார்வை…

 

ஜெயஸ்ரீ “எனக்கு புரியுது…இருந்தும் நீங்க இவ்வளவு அமைதியா இருக்குறது தான் எனக்கு சந்தேகமா இருக்கு…என்கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறீங்களா..”என அவனை பார்த்துக்கொண்டே கேட்க..

 

“ஹா ஹா ஹா…”என வாய்விட்டு சிரித்தவன் “ஏண்டி..நானே கொஞ்சம் கன்ட்ரோல்ல இருக்கேன்…அது உனக்கு பொறுக்கலையா…”என அவளை பார்த்து கேட்டவன் “எனக்கு உன்னைவிட கோவம் அதிகமா இருந்தது ஜெய்…அதுவும் உண்மை தெரியும் போது..நான் பட்ட அந்த வலி,வேதனை,சுபாவை ஏதாவது பண்ணனும் அப்படின்னு எனக்குள்ள வந்த வெறி..எல்லாம் இருந்து என்ன பண்ண…கண்மூடி தனமா ஒரு சின்ன பொண்ணு பேசுன பேச்சை கேட்டு..உன்னை எந்த அளவுக்கு கஷ்டபடுத்தி இருக்கேன்…எனக்கே என்ன நினைச்சா வெறுப்பா இருக்கு…”

 

“ஜீவா சொன்னதை கேட்டுட்டு,அவகிட்ட எதிர்த்து பேசி,என்னைய நான் புரிய வைக்காம,கோழை மாதிரி அங்கு இருந்து ஓடி வந்தேனே..நானே அப்படி இருக்கும் போது,உன்னைய விட சின்ன பொண்ணு..தன்னோட அக்கா வாழ்க்கை எக்காரணம் கொண்டும் கெட்டவன் கையில சேர்ந்திட கூடாது அப்படின்னு..சுபா சொன்னதை அச்சு பிசகாமல் செஞ்ச ஜீவா மேல தப்பு இல்ல ஜெய்…அவ உன் மேல கண்மூடித்தனமா வச்சு இருக்குற பாசத்தை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு…நானும் என்னோட அண்ணனும் கூட இந்த அளவுக்கு இல்ல…”யூ ஆர் ரியல்லி கிரேட் டு ஹேவ் சச் குட் சிஸ்டர்…”என்றான் அவளிடம்…

 

விஜய் பேச பேச,அவளுக்கு மனதில் தோன்றி இருந்த வருத்தம் எல்லாம் விலகி,அப்போதைய ஜீவாவின் நிலையினை அவளால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது…ஒரு வேளை தானும் அந்நிலையில் இருந்து இருந்தால் இப்படி தான் யோசித்து இருப்போமோ..”என்ற எண்ணம் வந்து ஜீவாவின் மேல் இருந்த கோவம் குறைவது அவளால் நன்கு உணர முடிந்தது..

 

விஜய் சொல்வது போல ஜீவா கிடைக்க தான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது…ஜீவாவினை நினைத்து பெருமையே உண்டானது…ஆனால் சிறு துளி கோவமும் அவளின் மேல் இன்னும் அணையா நெருப்பாய் தகித்துக்கொண்டு தான் இருந்தது அவள் செய்த மடத்தனமான செயலை எண்ணி..

 

ஜெயஸ்ரீயின் முகத்தில் தெரிந்த கலவையான உணர்வுகளை வைத்தே அவளது மனதில் நினைப்பதை ஊகித்தவனுக்கு,அவள் மனம் ஓர் அளவிற்கு தெளிவு பெற்றதை நினைத்து மனதிற்கு நிம்மதியானது…அவன் நினைத்து பேசியதும் அதற்கு தானே..

 

என்னதான் ஜீவாவின் மீதும்,சுபாவின் மீதும் அவனுக்கு அளவு கடந்த கோவம் இருந்து இருந்தாலும்,அதனை அவன் ஒரு போதும் காட்ட விரும்பவில்லை..அவனுக்கு முடிந்த போன அந்த அத்தியாத்தம் முடிந்து போனதாகவே இருக்கட்டும்..மீண்டும் அதனை தொடர்ந்து எந்த ஒரு பிரச்சனை வரவும் அவன் ஒரு போதும் விரும்பவில்லை..தனக்குள்

நடக்கும் போராட்டம்,தன்னோடே அமிழ்ந்து போகட்டும் என எண்ணியவன் எக்காரணம் கொண்டும் அதனை ஜெயஸ்ரீக்கு தெரியும் அளவிற்கு நடந்துகொள்ளவில்லை…   

 

தன்னவன் மனதில் நடக்கும் போராட்டம் அறியாதவளாய் “தேங்க்ஸ் ஜெய்..தேங்க் யூ சோ மச்…எனக்கு என்ன சொல்றது,எப்படி சொல்றதுன்னு தெரியல…எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு…சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பண்ணிட்டா..”என அவள் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்க…

 

போதும் என்பது போல் கையுயர்த்தி அவளை தடுத்தவன் “ஏற்கனவே சொல்லிட்டேன் ஜெய்…மீண்டும் அதையே பேசாத..போய் நிம்மதியா தூங்கு..ஜீவாகிட்ட நல்லா பேசு…சின்ன பொண்ணு அவ..எனக்கும் நேரம் ஆகுது…உனக்கும் கால் வலி எடுக்கும் நிறைய நேரம் நின்னுட்டு இருக்காத…வரேன்…நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம்”என சொன்னவன் அவளது பதில் எதிர்பார்க்காமல் அங்கு இருந்து சென்றான்..

 

சிறிது நேரம் அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தவள்,பின் மனதில் தோன்றும் ஒரு வித கலக்கத்தை என்ன என்று புரியாமல் ஒதுக்கியவள்,இருக்கும் நல்ல மனநிலைமையை கெடுக்க விரும்பாமல் அறைக்கு சென்றாள்…

 

அறைக்கு சென்றவள்,முதலில் குளித்துவிட்டு நைட் ட்ரெஸ்சிற்கு மாறியவள்,வீட்டிற்கு அழைத்து பேசினாள்…அவளது அம்மா தமையந்தி சுபாவினை பற்றி விவரத்தை சொல்ல,எதுவும் தனக்கு ஏற்கனவே தெரியாதது போல பேசி,அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவள்,அதன் பின் அவர்கள் இங்கு வருவதாய் உறுதி செய்ய “சரி மா..வாங்க..”என்று பேச்சினை முடித்துக்கொண்டு மகேஸ்வரனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்…

 

பின் ஜீவாவிற்கு அழைக்க,ஜெயஸ்ரீயின் அழைப்பை ஏற்றவள், “அக்கா…”என    

அழைத்த ஜீவாவின் குரலை கேட்ட பின்,அவள் செய்த செயலின் விளைவால் நேர்ந்த எல்லாம் அவள் கண் முன் விரிய,அவளுக்கு போன கோவம் எல்லாம் வந்து அவளை ஆட்க்கொண்டது…

 

“என்ன அக்கா…யாருடி உனக்கு அக்கா,தயவு செஞ்சு என்ன அப்படி கூப்பிடாத…”என கோவமாய் சொல்ல…

 

அதை கேட்ட ஜீவாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது…”என்ன அக்கா..ஏன் இப்படி எல்லாம் பேசுற..விளையாடாத,சும்மா தான அப்படி சொல்ற..”என ஜீவா கேட்க…

 

ஜெயஸ்ரீ “யாருடி விளையாட்றா,நானா..?? இல்ல நீயா..?? செய்யறது எல்லாம் செஞ்சிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காத,உன்னால நான் பட்ட கஷ்டம் எல்லாம் போதாதா,இன்னும் என்ன செய்ய இருக்க,என்கிட்ட சொல்லி இருந்தா உனக்கு என்னடி..”என அவள் கோவத்தில் கத்த..

 

அந்த பக்கத்தில் இருந்து ஜீவாவின் விசும்பல் சத்தம் மட்டுமே ஜெயஸ்ரீக்கு கேட்டது..ஜீவா அழுவது மனதிற்கு கஷ்டத்தையும்,வருத்தத்தையும் தந்தாலும்,இதே போல் மீண்டும் ஜீவா எந்த ஒரு தவறையும் செய்து விடக்கூடாது என்ற உறுதி அவள் மனதில் இருக்க,ஜீவாவின் பால் இளகிய மனதினை கட்டுபடுத்தியவள்..

 

“உன்னோட அழுகை டிராமாவ என்கிட்ட மீண்டும் போடாத,எனக்கு எரிச்சலா வருது..”என எரிச்சலோடு சொன்னவள் “சொல்லு..உனக்கு எப்படி ஜெய் மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சது..”என கேட்க..

 

ஜீவாவிற்கு இதயமே ஒரு முறை நின்று துடித்தது…”அக்காக்கு எப்போ தெரிஞ்சது,”என அவளது மனம் யோசனையில் மூழ்க…”எனக்கு எப்படின்னு தெரிஞ்சது அப்படின்னு தான யோசிக்கிற…ரொம்ப குழம்ப வேண்டாம்..நீ ஜெய் கிட்ட சொல்லும் போது நானும் அங்கு தான் இருந்தேன்..எல்லாத்தையும் ஒண்ணு விடாம கேட்டேன்...என்கிட்ட இருந்து இன்னும் மறைக்கணும் அப்படின்னு மட்டும்  நினைக்காத…”என கறாராய் சொல்ல..

அழுகையுடனே “இல்ல அக்கா..நான் எப்பவும் சொல்லகூடாது அப்படின்னு நினைக்கல…உனக்கு மாமா பத்தி விஷயம் தெரிஞ்சா கஷ்டப்படுவ அப்படின்னு தான் நான் மறைச்சேன்..வேற எதுவும் இல்ல அக்கா..”என்றாள் தேம்பியபடியே ஜீவா…  

 

ஜெயஸ்ரீ “சரி சரி…அழுதுட்டே இருக்காத,உனக்கு எப்போ அவர் மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சது.. உனக்கு யார் சொன்னா…அத முதல்ல சொல்லு… தேவையில்லாம பேச்சை இழுத்துட்டு இருக்காத..”என்றாள் கோவத்தோடு..

 

ஜீவா “எனக்கு சொன்னது நந்து மாமா தான் அக்கா..”என்றாள்..

 

ஜெயஸ்ரீ “என்னடி சொல்ற..அவனா உன்கிட்ட சொன்னது..அப்போ அவனுக்கு தான் முன்னாடியே இந்த விஷயம் எல்லாம் தெரியுமா..??”என உச்சகட்ட அதிர்ச்சியோடு கேட்க…

 

ஜீவா “ஆமா அக்கா..நவீன் அண்ணா மூலமா தான் நந்து மாமாக்கும் தெரிஞ்சது போல…அவர் தான் என்கிட்ட சொன்னார்..அப்புறமா தான் நான் விஜய் மாமாகிட்ட போன் பண்ணி நிறைய முறை மன்னிப்பு கேட்க முயற்சி செஞ்சேன்,ஆனா மாமா என்னை திட்டி போனை கட் பண்ணிட்டார்..நான் திரும்ப திரும்ப அவர்கிட்ட பேச ட்ரை பண்ணியும்,அவர் எந்த ஒரு பதிலும் சொல்லல…இன்னைக்கு தான் அவர் என்கிட்ட எந்த ஒரு கோவமும் இல்லாம நார்மல்லா பேசினார்…ஆனா நீயும் அவர்க்கூட தான் இருப்பேன்னு நான் நினைக்கல அக்கா..”என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்  

 

“நான் எதுவுமே வேணும்ன்னு செய்யல அக்கா..தெரிஞ்சோ தெரியாமலோ,

உன்னோட வேதனைக்கும்,இத்தனை நாள் நீ பட்ட கஷ்டத்துக்கும் நான் காரணம் ஆகிட்டேன்…என்னால நீ ரொம்ப கஷ்டபட்டுட்ட..நான் மட்டும் அன்னைக்கு மாமாவை திட்டி,அசிங்கப்படுத்தாத இருந்து இருந்தா,கண்டிப்பா ரெண்டு பேருக்கும் இப்போ கல்யாணம் ஆகி இருக்கும்…எல்லாத்துக்கும் நான் தான் காரணம் அக்கா…உன்கிட்ட இருந்து சொல்லாம மறைச்சதும் தப்பு தான்…என்னை மன்னிப்பியா அக்கா..”என ஜீவா கதறலோடு கேட்க…

 

ஜெயஸ்ரீக்கு கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் மழை பொழிய துவங்கியது..அவளின் உயிர் தங்கை,அவளிடம் மன்னிப்பு யாசம் கேட்கிறாள்..

அதுவும் தன் மீது வைத்து இருந்த அதிகப்படியான பாசத்தினால்,என்ன செய்வதென்று தெரியாத வயதில்,கேட்பார் பேச்சை கேட்டு,அவள் வார்த்தைகளை சிதறவிட,அது பிரச்சனையை கொண்டு வந்துவிட்டது…

 

அதற்காக அவளது தங்கையின் மேலும் வருந்தவிட விருப்பம் இல்லாமல் “ஹேய்ய் ஜீவா குட்டி,விடுடி..நடந்தது எல்லாம் கெட்ட கனவா நினைச்சி மறந்துடுவோம்…அக்காக்கு உன் மேல கோவம் எல்லாம் இருந்தது இல்லன்னு சொல்ல மாட்டேன்…நீ என் கிட்ட சொல்லாம எல்லாத்தையும் செஞ்சிட்டியே அப்படின்னு தான் இருந்தது…விடு அழாத…உன்னோட சூழ்நிலை அப்படி அதுக்கு என்ன பண்ண முடியும்..இது எல்லாம் நடக்கணும் அப்படின்னு இருந்து இருக்கு…நாம்ப ஒண்ணும் பண்ண முடியாது..”என அவளை தேற்றினாள்..

 

ஜீவா “அக்கா உனக்கு நிஜமாலும் கோவம் போகிடுச்சா..எனக்காக பொய் சொல்லாத..”என சந்தேகமாய் கேட்க…ஜீவாவின் நிலையை நன்கு புரிந்த ஜெயஸ்ரீ “ஹே குட்டி பிசாசு அதான் சொல்றேன் இல்ல..அப்புறம் என்ன திரும்ப திரும்ப கேள்வி கேட்டுட்டு..ஒழுங்கா சமத்து பிள்ளையா,போய் சாப்பிட்டு தூங்கு…இனிமேல் லூசு தனமா நீயா எதுவும் பண்ணாத,இப்ப போல எப்பவும் நான் இருக்க மாட்டேன்…நாளைக்கு ஆபீஸ் போகணும்…நான் தூங்க போறேன்..நீயும் தூங்கு..எதையும் போட்டு குழப்பிக்காத..எல்லாம் சரி ஆகிடுச்சு…சரியா…”என சொல்ல…

 

ஜீவா “சரிக்கா..தேங்க்ஸ்க்கா..என்ன புரிஞ்சிக்கிட்டதுக்கு…அகைன் சாரி அக்கா..”என கரகரப்பாய் சொல்ல…”குட்டி பிசாசு இதே மாதிரி பேசிட்டு இருந்த,நான் எப்பவும் இனிமேல் பேசமாட்டேன்..பார்த்துக்கோ…”என செல்லமாய் ஜீவாவினை கடிந்துகொள்ள..”சாரிக்கா…சாரி…”என்றவள்,சிறிது நேரம் ஜெயஸ்ரீயுடன் பேசிவிட்டு தான் போனை வைத்தாள்..

 

நந்துவிற்கு அனைத்து விஷயமும் தெரிந்து இருந்தும் அவன் சொல்லாமல் மறைத்தது அவளுக்கு கோவத்தினை கொடுக்க, “பன்னி,நாயே,பேயே..

பிசாசு..காட்டெருமை,தடிமாடு,உதவாக்கரை, **************************…”என அவளுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளில் எல்லாம் திட்டி நந்துவிற்கு மெசேஜ் அனுப்பியவள்,உண்டு முடித்தாள்..

 

ஜெயஸ்ரீக்கு சுபாவினை பற்றிய கவலை மனதை அரித்துக்கொண்டு இருந்தாலும்,அவள் மனமோ நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த நிம்மதியினை அனுபவிப்பதில் முனைப்பாய் இருந்து அவளை உறங்கவும் செய்தது..நித்திராதேவியும் அவளை செவ்வனே அரவணைத்துக்கொள்ள நீண்ட நாட்கள் கழித்து நிம்மதியாக உறங்கினாள்…

 

அவள் நித்திராதேவியின் மடியில் ஐக்கியம் ஆகிட,விஜயோ உறக்கத்தை மறந்து சுபா குணமாக செய்ய வேண்டிய வேலை எல்லாம் செய்வதில் நந்துவுடன் தீவிர ஆலோசனையில் இருந்தான்..மறுநாள் காலையில் வந்து சேரும் சுபாவின் பெற்றோர் மற்றும் ஜெயஸ்ரீயின் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு நவீனின் வீட்டிற்கு செல்வது அவனது அடுத்த நாளின் முதல் வேலையானது…அதன் பிறகு அவன் அலுவலக வேலையினை காண வேண்டியதாகவும் இருந்தது..

 

மறுநாள் காலை யாருக்கும் காத்திருக்காமல் அதி விரைவில் விடிந்துவிட,காலையில் பிரபுவுடன் சேர்ந்து ரயில் நிலையத்திற்கு சுபாவின் பெற்றோரையும்,ஜெயஸ்ரீயின் பெற்றோரையும் நவீனின் வீட்டிற்கு அழைத்து சென்றான்..

 

சுபாவினை பார்த்து ஆனந்தவள்ளியும்,சீதாராமனும் கலங்கி போய் நிற்க,அவர்களுக்கு ஆறுதலாய் மகேஸ்வரனும்,தமையந்தியும் உடன் இருந்தனர்…வந்தவர்களை எந்த ஒரு குறையும் இல்லாமல்,வரவேற்று உபசரிப்பதை நவீன் அம்மா இந்திரா பார்த்துக்கொண்டார்…

 

ஆனந்தவள்ளி சுபாவினை பார்த்து கண்ணீர் உகுத்த வண்ணம் இருக்க,தமையந்திக்கும்,மகேஸ்வரனுக்கும் சரி,சீதாராமனுக்கும் சரி,என்ன சொல்லி அவரை தேற்றுவது என்று தெரியாமல் அமைதியாய் இருந்தனர்..

 

“கடவுளே..இப்படி பார்க்கவா,இவளை நான் தவம் இருந்து பெத்தேன்..ஒத்த பிள்ளையை பெத்து சீராட்டி வளர்த்தேன்,ஆனா இவ இப்படி பைத்தியமா பிடிச்சு போய் இருக்காளே,எங்க போய் சொல்லுவேன்..ஆண்டவா இவளை இப்படி பார்க்கவா,நான் உயிரோட இருக்கேன்..கல்யாணம் பண்ணி இருந்தாலும்,எங்கவாது கண் காண இடத்துல சந்தோசமா இருக்கான்னு,

மனசை தேத்திட்டு இருந்தா,இப்படி ஒரேயடியா என் தலையில மண்ணை போட்டுட்டியே…நியாயமா..”என அவரது புலம்பல் நிற்காமல் தொடர்ந்துக்கொண்டு இருந்தது…  

 

பக்கத்தில் அமர்ந்து புலம்பும் அவரை ஏதோ வேற்று கிரகவாசி போல பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்த சுபாவினை கண்ட ஆனந்தவள்ளிக்கு நெஞ்சம் எல்லாம் பதறியது…”பேசுடி…என்கிட்ட பேசுடி…என்ன திட்டவாவது செய்யுடி..இப்படி சிலை மாதிரி உட்கார்ந்து இருக்காத…”என ஆனந்தவள்ளி ஆதங்கத்தில் அவளை பிடித்து உலுக்கினார்…

 

அவரின் உலுக்கலில் கைகள் வலி எடுக்க “ஷ்ஹா…”என சுபா வலியில் முனகுவதை பார்த்த நவீன் “அத்தை ப்ளீஸ் இவகிட்ட இப்படி எல்லாம் நடந்துக்காதீங்க…நீங்க இவகிட்ட இருந்தா அவளுக்குள்ள ஏதாவது மாற்றம் வருமோ என்னவோ அப்படின்னு தான் உங்களை இங்க வரவழைச்சது…

இவளை கஷ்டபடுத்த இல்ல…”என சற்று கோவமாய் அவன் பேசிவிட…

 

ஆனந்தவள்ளிக்கு தனது மகளுக்கு அருமையான குணம் கொண்ட கணவன் கிடைத்ததை நினைத்து ஒரு புறம் சந்தோசமாகவும்,அதை அனுபவிக்காமல் சிலை போல அமர்ந்து இருக்கும் மகளை நினைத்து வேதனையாகவும் இருக்க,கண்களில் கண்ணீர் வடிய அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டார்…

இந்திரா “டேய்..என்னடா இது,பெரியவங்க கிட்ட எப்படி பேசுறதுன்னு உனக்கு தெரியல…”என அவனை கடிந்தவர், “நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க..

ஏதோ தெரியாம சொல்லிட்டான்..”என ஆனந்தவள்ளியினை சமாதானப்படுத்தினார்…  

 

“பரவாயில்ல விடுங்க..மாப்பிள்ளை தான சொன்னார்…அவருக்கு எங்களை சொல்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு…”என சொன்ன சீதாராமனை விழி விரித்துபார்த்துக்கொண்டு இருந்தனர் அனைவரும்…விஜயுமே இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்த்திடவில்லை என்பது அவனின் பார்வையில் இருந்தே தெரிந்தது பிரபுவிற்கு…

 

“டேய்..ரொம்ப ரியாக்சன் குடுக்காத,அடக்கிவாசி…”என விஜயின் காதோரத்தில் பிரபு சொல்ல தன்னை சரியாக்கிக்கொண்டவன்,நவீனிற்கு மனதிற்குள்ளே சபாஷ் போட்டுக்கொண்டான்…

 

அனைவரையும் இந்திரா சாப்பிட அழைக்க,விஜயும்,பிரபுவும் வேண்டாம் என மறுத்தவர்கள்,தாங்கள் பிறகு சாப்பிட்டு கொள்வதாக சொல்லிவிட்டு நவீனை காண அவனது அறைக்கு சென்றனர்…தங்களது கல்யாண புகைபடத்தில் இருந்த சுபாவின் முகத்தினை பார்த்துக்கொண்டு இருந்தவனை கலைத்தது விஜயின் “நவீன்…”என்ற அழைப்பு…

 

கலங்கிய தன் கண்களை அவசரமாய் துடைத்தவன், “வா வா விஜய்…வாங்க பிரபு…”என இருவரையும் உள்ளே வரவேற்றான்..உள்ளே நுழையும்போதே நவீன் கண்களை துடைப்பதை கண்டுக்கொண்ட விஜயிற்கும்,பிரபுவிற்கும் நவீனை நினைத்து மிகவும் கஷ்டமாய் இருந்தது…

 

விஜய் “ஏன்டா…என்ன ஆச்சு..எதுக்கு இப்போ இவ்ளோ பீல் பண்ணிட்டு இருக்க…”என சற்று கோவமாய் கேட்க..அவனை பாவமாய் பார்த்த நவீன்,விஜயின் கட்டிக்கொண்டான்..”என்னால முடியலைடா விஜய்..எத்தனை நாளுக்கு நான் இவளை இப்படி பார்ப்பேன்…ஏற்கனவே கஷ்டபட்டுட்டு இருந்தவ,கொஞ்ச நாள் என்கூட சந்தோசமா இருந்தா,அதுக்கூட அந்த கடவுளுக்கு பிடிக்கல டா..என்னையும் அவளையும் பிரிச்சதும் இல்லாம,அவளுக்கு நான் யாருன்னு தெரியாத அளவுக்கு,ஒரு பெரிய தண்டனைய குடுத்துட்டாரே..நானா என்னடா பாவம் பண்ணேன்…ஏன் இப்படி நடக்கணும்…”என சொல்லியவன் கண்களில் இருந்த வந்த கண்ணீர் விஜயின் சட்டையினை நனைத்தது…

 

பிரபுவின் கண்களும்,விஜயின் கண்களும் கலங்கி போயின…என்ன பாவம் செய்தான் இவன்,தனக்கு பிடித்த பெண்ணை,ஒரு முரண்பட்ட சூழ்நிலையில் திருமணம் செய்து,சிறிது காலம் ஏனோ தானோ என்று வாழ்ந்து வந்தவன்,

வாழ்க்கையில் சிறிது சந்தோசத்தையும்,நிம்மதியையும் கொடுத்து,தகப்பன் என்னும் மிகப்பெரிய வரத்தையும் கொடுத்து,கடைசியில் எதுவும் இல்லாமல்,இப்படி தவிக்க வைத்த கடவுளை நினைத்து விஜய்க்கும்,

பிரபுவிற்கும் கடவுளின் மீது சொல்ல முடியாத கோவம் எழுந்தது…     

 

விஜய் “டேய்..போதும் டா..எத்தனை நாளுக்கு இப்படியே அழுது வடிஞ்சிட்டு இருக்க போற..எல்லாம் சரியாகும் அப்படின்னு சொன்னேன் இல்ல…அப்பறம் என்ன…சுபா பழைய சுபாவா,உனக்கு கண்டிப்பா கிடைப்பா..அதுக்கு நான் நூறு சதவீதம் உத்திரவாதம்..இப்போ இருக்குற காலகட்டத்துல எந்த ஒரு கொடிய நோயினையும் சரி பண்ணிடலாம்…அப்படி இருக்குற அப்போ சுபாக்கு இருக்குறது எல்லாம் சின்ன பிரச்சனை தான்…”என நவீனுக்கு ஆறுதலித்தான்…

 

விஜய் சொன்ன பிறகு சற்று தெம்பு பெற்றவன்,சிறிது நேரம் இருவரிடமும் வேலையை பற்றியும்,சுபாவிற்கு எந்த மாதிரியான சிகிச்சை எல்லாம் செய்யலாம் என்பது ரீதியாக பேசினான்..

 

அதன் பின் இந்திரா வந்து சாப்பிட அழைக்க,மூவரும் அவரின் பின்னே உணவு உண்ண சென்றனர்..சாப்பிட போகும் முன் நவீன் ஆனந்தவள்ளியிடம் மன்னிப்பு கேட்கவும் மறக்கவில்லை…நவீன் குணம் மகேஸ்வரனுக்கும் சரி,சீதாராமனுக்கும் சரி மிகவுமே பிடித்து இருந்தது…

 

காலை உணவினை முடித்த விஜயும்,பிரபுவும் அனைவரிடமும் விடைபெற்று அலுவலகத்திற்கு சென்றனர்..இதற்கு பிறகு எல்லாம் சுகமான நிலையில் செல்லும் என்ற நம்பிக்கையில் அலுவலகத்தை அடைந்தவன் புத்துணர்வுடனே வண்டியில் இருந்து இறங்கினான்….

 

அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லிக்கொண்டே அவனது அறைக்கு சென்றவன்,முதலில் என்ன என்ன வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும் என பட்டியலிட்டவன்,தன் குழுவினர் செய்ய வேண்டிய வேலையினையும் பகிர்ந்தான்…

 

இன்னும் இரண்டு நாட்களில் எல்லா வேலைகளையும் முடித்து ஆகவேண்டிய சூழ்நிலை என்பதால்,நால்வர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியதாகியது…எனவே தான் சுபாவிற்கான சிகிச்சை எல்லாம் அடுத்த வாரம் தொடரலாம் என முடிவு எடுத்து இருந்தனர் நவீன்,விஜய் மற்றும் நந்து…

 

எனவே சிறிதும் தாமதிக்காமல்,அலுவலக வேலையினை முடிப்பதில் அதிதீவிரம் காட்டினான் விஜய்…கால்வலி எல்லாம் காற்றில் பறந்து போய் இருக்க,காலையில் எழுந்து குளித்து முடித்து,விஜயினை காண போகும் சந்தோஷத்துடன் புது மலராய் வந்த ஜெயஸ்ரீயினை பார்த்து எல்லாம் அதிசயித்து போயினர்…

 

லைட் பிங்க் புடவையில் தேவதையாய் இருந்தாள் அவள்…அதுவும் மிருணாவும்,வீணாவும் ஜெயஸ்ரீக்கு கன்னத்தில் அவளது அழகை பாராட்டி முத்தத்தையும் பரிசளித்தனர்…சிரிப்போடு தன் கன்னங்களில் ஏந்திக்கொண்டவளை முறைத்துக்கொண்டே சென்றது இரு ஜோடி விழிகள் தத்தம் வழியில்…

 

தனது அறைக்கு சென்றவள்,தனது பேக்கை வைத்துவிட்டு விஜயினை ஆசை ஆசையாய் பார்க்க சென்றாள்…வேலையில் இருந்தவன்,உள்ளே நுழைந்த ஜெயஸ்ரீயினை கண்டு அசந்தவன் வாய் தன்னையும் அறியாமல் “வாவ்…”என கூவ…ஜெயஸ்ரீயின் முகம் வெக்கத்தால் சிவந்து போனது….விஜய் ரசனையோடு அவளை நோக்க..ஜெயஸ்ரீயின் தலை தானாய் கீழே குனிந்தது…

சட்டென்று விஜய் என்ற அழைப்போடு பிரதீப் உள்ளே நுழைந்திட,இருவரும் தத்தம் நிலைக்கு மீண்டு வந்தனர்…

 

“சொல்லு பிரதீப்..”என விஜய் பிரதீப்பை பார்த்து கேட்க…”விஜய் நீங்க குடுத்த வொர்க் எல்லாம் முடிச்சிட்டேன்..

இன்னும் கொஞ்சம் பினிஷிங் இருக்கு..அத முடிச்சிட்டு அனுப்புறேன்..

பார்த்துட்டு ஏதாவது ப்ராப்லம் ஏதாவது இருந்தா சொல்லுங்க…”என சொல்ல…

 

விஜய் “கண்டிப்பா பிரதீப்…தேங்க்ஸ் பிரதீப்..சொன்ன நேரத்துக்கு முன்னாடியே முடிச்சிட்டீங்களே..யூ ஆர் ரியல்லி க்ரேட்…”என்றவன் “ஜெயஸ்ரீ நீங்க கொஞ்சம் பிரதீப்க்கூட சேர்ந்து அந்த பிரசன்டேசன் வொர்க் முடிச்சிடுங்க…வீணா கொஞ்சம் மாடுல் வொர்க் பார்க்கட்டும்..”என சொல்ல..

“சரி ஜெய்..”என்றவள்,பிரதீப் உடன் மீதம் இருக்கும் வேலையினை செய்வதில் ஈடுபட்டாள்…

 

கண்கள் ஒளி தீட்டிட

மௌனம் இசை மீட்டிட

உன் இதழ் கானம் பாடிட

கைகள் அபிநயம் பிடித்திட

கால்கள் நடனமாடிட

நரம்புகள் மாயம் செய்திட

அணுக்கள் ஆராய்ச்சி புரிந்திட

உணர்வுகள் ஊசல் ஆடிட

உள்ளங்கள் பரிமாற்றம்

உள்ளுக்குள் நடந்திட

அனைத்தையும் அறிந்தது

உந்தன் ஒற்றை பார்வையிலே…

போதுமே அது மட்டும்

தினந்தோறும் எந்தன் வாழ்விலே…

விலகல் தொடரும்…

Advertisement