Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -15

 

பரபரப்பாக குளித்து முடித்து வெளியே வந்தவள் அறையின் அமைதி சுபா சொல்லாமல் கொள்ளாமல் காலேஜ் சென்று இருப்பதை உணர்த்தியது…மனம் பாரமாய் இருக்க,என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தவள் நேரம் ஆவதை உணர்ந்து பிறகு இதற்கு ஒரு முடிவு எடுத்து கொள்ளலாம் என எண்ணி அதி விரைவாக தயாராகி காலேஜிற்கு விரைந்தாள்.. நடந்து வரும் வழியெல்லாம் ஜெயஸ்ரீக்கு சுபாவின் இப்புதிய அவதாரம் மனதினை அரித்துகொண்டு இருந்தது..

 

என்றாவது ஓர் நாள் தன்னிடம் எரிச்சலோடு பேசுபவள்,ஹாஸ்டல்   சேர்ந்தது முதல் தன்னிடம் பாசம் என்பதையும் ,தோழி என்பதையும் மறந்து எதற்கு எடுத்தாலும் எரிந்து விழுவதற்கான காரணம் அறியாமல் அவள் மனம் தவித்தது…நான் என்ன தப்பு செய்தேன், என் கிட்ட எதுக்கு இப்படி நடந்துக்கணும்,அதுவும் நான் நந்து கூட பேசினதை வச்சு,நான் யாரோ என் காதலன் கூட பேசுன மாதிரி என்ன ஒரு பேச்சு,அப்போ நைட் நான் பேசினது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்து இருக்கா,ஒரு வார்த்தை என் கிட்ட பேசல,ஏன் இப்படி ஒரு தீடிர் மாற்றம்..” என அவள் மனம் எதையெதையோ நினைத்துக்கொண்டு யார் முன்னால் செல்கிறார்கள்,பின்னால் வருகிறார்கள் என எதை பற்றியும் எண்ணாமல் கவனிக்காமல் தன் எண்ணத்தில் உழன்று நடந்து கொண்டு இருந்தாள்…

 

தீடிரென்று யாரோ தன்னை பிடித்து இழுக்கவும் தன் எண்ணத்தில் இருந்து விடுபட்டவள்,யாரென்று நோக்கினாள்…     

 

ஹே…கண்ணை என்ன பிடரியிலா வச்சுட்டு வர,முன்னாடி என்ன,எது இருக்கு அப்படின்னு பார்க்காம,அப்படியே நடந்து வர,அப்படி என்ன பெரிய கப்பலை பிடிக்க போற யோசனை,விட்டு இருந்தா அப்படியே இந்த குழியில விழுந்து இருப்ப,..”என கண்ணில் கனல் பறக்க

கத்திக்கொண்டு இருந்தான் வரு…

 

இன்னும் ஜெயஸ்ரீ என்ன நடந்தது என புரியாமல் விழி விரித்து நின்று கொண்டு இருந்தவளை கண்டவன் “இன்னும் என்ன முழிக்கிற,என்ன நடந்ததுன்னு புரியலையா…??”என அவளிடம் கேட்டவன் அவளின் கையினை பிடித்து அவளை திருப்பி “இங்க பாரு,எவ்வளவு பெரிய குழி தோண்டி இருக்காங்க,ரோட்ல போகாம,இப்படி தான் வருவியா,ரோட் எங்க இருக்கு,நீ எங்க எப்படி நடந்துட்டு போற,நான் மட்டும் பிடிச்சு இழுக்கலன்னா,உள்ளார விழுந்து இருப்ப,அப்படி என்ன பெரிய யோசனை உனக்கு…”என திட்டிக்கொண்டு இருந்தான்…

 

அவனின் திட்டலில் தெளிந்தவள் அப்போது தான் பார்த்தாள்,தான் சாலையில் செல்லாமல் சாலையின் ஓரத்தில் இருக்கும் பாதையில் வந்தது…சாலையின் ஓரத்தில் எதற்கேனவோ கல்லூரி பணியாட்கள் குழியினை தோண்டிவிட்டு அதனை மூடிவிடாமல் அப்படியே விட்டு சென்று இருந்தனர்…கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவிகள் அதனை கண்டு ஒதுங்கி தான் சென்றனர்…பெரும்பாலோனோர் சாலையில் நடந்தாலும்,ஒரு சிலர் சாலையின் அருகில் உள்ள மண் பாதையில் நடக்கும் வழக்கம் கொண்டவர்களாய் இருந்தனர்…

 

அப்படிபட்ட மாணவ,மாணவிகள் இருக்கும் குழியினை கண்டு ஒதுங்கியே சென்றனர்…ஆனால் சுபாவினை பற்றிய சிந்தனைகள் பலதில் மூழ்கி இருந்தவள்,எதையும் பார்க்காது,அப்படியே நடந்து வந்து கொண்டு இருந்தாள்..       

 

அப்போது தான் தன் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்து,கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தவன் ஜெயஸ்ரீயினை காணவும் அவளிடம் பேசவேண்டும் என எண்ணிக்கொண்டு வந்தவன் கண்ணில் அப்போது தான் பட்டது அவளின் முகவாட்டமும்,சிந்தனை கோடுகளும்…

 

சிறு நிமிடங்கள் அவளை உற்று நோக்கியவனுக்கு ஏதோ சரியில்லை என்பது மட்டும் அவளின் முகத்தில் இருந்து நன்றாகவே அறிந்துகொள்ள முடிந்தது..நண்பர்களுடன் பேசிக்கொண்டே இவளின் மேல் ஒரு கண்ணை வைத்து கொண்டு இருந்தவன்,ஜெயஸ்ரீ பாதையின் ஓரத்தில் இருக்கும் குழி வழியாய் வரவும் அவனுக்கு அதிர்ச்சியாய் போனது…அப்பணியாட்களும் அதனருகுகில் எந்த ஒரு அறிவிப்பு பலகையையும் வைக்காமல் விட்டு இருந்தது…அவன் “ஜெயஸ்ரீ…”என அழைத்தும் அவளின் காதுக்குள் அது எட்டிய பாடாய் இல்லை…பிறகு நேரம் தாழ்த்தாமல் அவளிடம் விரைந்தவன்,அவளின் கையினை பிடித்து இழுத்து,அவளிடம் காட்டு கத்து கத்தியிருந்தான்…

 

அவனை நோக்கியவள் “சாரி வரு..நான் கவனிக்கல…”என்றாள் குற்றவுணர்வோடு தலையை குனிந்துகொண்டு…

 

அவளை பார்த்தவன் தன் கோவத்தினை சிறிது குறைத்துக்கொண்டு “என்ன ஜெயஸ்ரீ,என்ன ஆச்சு,கூப்பிட கூப்பிட பலத்த யோசனை,அப்புறம் சுபா எங்க…”என்று கேட்டவன் அவளை தேடினான்…

 

அவனின் கேள்வியில் நிமிர்ந்தவள் “அது..அ..து…அவளை நான் முன்னாடி போக சொல்லிட்டேன்…நான் ரெடியாக டைம் ஆகிடுச்சு…பர்ஸ்ட் டே இல்ல..அவளை கிளாஸ் எங்கன்னு பார்த்து வைக்க சொல்லி இருக்கேன்…அதான்…”என்றாள் திக்கிதிணறி…

 

அவளின் திணறலை கண்டு கொண்டவன்,இதில் ஏதோ வேறு காரணம் இருக்கு என எண்ணி கொண்டு அவளை மேலும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் “ஓ…அப்படியா..சரி சரி…நீங்க ரெண்டுபேரும் ஒரே டிபார்ட்மென்ட் தான..”என்றான் அவளிடம்..

 

“ஹ்ம்ம்…ஆமா..நாங்க ரெண்டு பேரும் CSE..”என்றாள் அவனின் கேள்விக்கு பதிலாக..

 

அவளின் பதிலை தனக்குள் பதித்துகொண்டவன் “சாரி,சட்டுன்னு அங்க அப்படி பார்க்கவும்,ஏதோ கோவத்துல திட்டிட்டேன்,மனசுல வச்சிக்காதீங்க..”என்றான் வரு..

 

“இல்ல,பரவாயில்ல,நான் தான் சாரி கேட்கணும்…நான் ஏதோ நினைப்புல,எதையும் பார்க்காம அப்படியே வந்துட்டே இருந்துட்டேன்…சாரி”என்றாள் ஜெயஸ்ரீ…

 

“விடுங்க..அது தான் எதுவும் ஆகலையே…”என்றவன் பிறகு “சாப்பிட்டாச்சா…??” என்றான்..

 

“இல்ல இனிமேல் தான் சாப்பிடணும்…நீங்க சாப்பிட்டாச்சா..??”என்றாள் ஜெயஸ்ரீ..

 

அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் “ஹ்ம்ம்…ஆச்சு..

இப்போ தான் சாப்பிட்டு வரேன்…”என்றவன் “நீங்க ஏன் சாப்பிட்டல..நந்து எடுத்துட்டு வருவான்னு அப்படியே வந்துட்டீங்களா…”என்றான் கிண்டலாக…

 

“அய்யோ…அப்படி எல்லாம் இல்ல..முதநாள் லேட் ஆககூடாதுன்னு சாப்பிடாம,அப்படியே அவசர அவசரமா ஓடி வந்துட்டேன்…”என்றவள் “ஹ்ம்ம்…அந்த லூசு எடுத்துட்டு வந்து கொடுத்துட்டா,அப்படியே பூமி ரெண்டா பிளந்திடும்…”என முணுமுணுக்கவும் செய்தாள்…

 

அவளின் முனகலை கேட்டவன்,தனக்குள் சிரித்துக்கொண்டு “இப்போ மட்டும் லேட் ஆகலையா…”என்றான் மெதுவாக…

 

அவனின் கேள்வியில் விழித்தவள் அதன் அர்த்தம் உணர்த்து “அச்சச்சோ…எப்படி மறந்தே போனேன்…ஹ்ம்ம்…ஆமா ஆமா…எனக்கு லேட் ஆகிடுச்சு…நான் கிளம்புறேன்…அப்புறம் பார்க்கலாம்…”என அவனிடம் சொன்னவள் அடுத்த நிமிடம் சிட்டாய் அவ்விடம் விட்டு பறந்து இருந்தாள்…

 

அன்றும் போல இன்றும் அவளின் குழந்தை தனமான செய்கையை தன்னை மறந்து ரசித்தவன் கண்களோ அவள் போன திசையையே விழி எடுக்காமல் அவள் அங்கு இருப்பது போல பார்த்து கொண்டு இருந்தது…

 

இவனின் மோன நிலையை கலைக்க பின்னால் இருந்து அவனின் முதுகில் தட்டி “என்னடா மாப்பு,இப்படி ப்ரீஷ் ஆகி அப்படியே நின்டுட்டு இருக்க….என்ன மாப்பு,என்ன விஷயம்….”என்றான் அவனின் வகுப்பு மற்றும் உயிர் தோழன் சஞ்சீவ்..

 

வரு பதில் சொல்லும்முன் “இது என்னடா,விளகங்காத மாதிரி பார்த்து அவனை கேட்குற,உனக்கு உன் கண்ணால பார்த்தா தெரியல,என்ன நடந்ததுன்னு…”என்றான் அவனின் இன்னொரு தோழன் தாமஸ்…

 

இன்னொருவனோ “ஹ்ம்ம்…ஆமா டா…அந்த காட்சியை தான் பார்த்துட்டே இருக்கலாம் போல இருந்ததே…ஹீரோயினை காப்பாற்ற ஹீரோ ஓடிய ஓட்டம் என்ன…”என்றான் கிண்டலாக…இவனின் பெயர் சுரேஷ்..

 

மூவரும் கிண்டல் செய்வதை நின்று அவர்களை முறைத்தவன் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லாது வகுப்பு நோக்கி தன் நடையை போட்டான்…

 

இவனின் செயலில் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் நமட்டு சிரிப்புடன் எதுவும் சொல்லாது அவனோடு இணைந்து கொண்டனர்…

 

வரு,சஞ்சீவ்,தாமஸ்,சுரேஷ் நால்வரும் B.C.A முடித்து அதன் பிறகு M.C.A படிக்க இக்கல்லூரியில் சேர்ந்தனர்..அதன்முன் நால்வருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது…M.C.A வகுப்பு ஒன்றாய் இருந்தாலும் சேர்ந்த முதலில் வருவும் சஞ்சீவும் ஒன்றாகவும்,சுரேஷ் மற்றும் தாமஸ் தனியாக மட்டுமே கல்லூரிக்கு வருவர்…

 

நாட்கள் ஓடிய வேலையில் நால்வரும் எப்படி இணைந்தார்கள் என்றே தெரியாமல்,முதலில் சிறிது பேசியவர்கள்,நாட்கள் போக்கில் உயிர்தோழர்களாய் ஆகினர்…வருவும் சஞ்சீவும் ஒரே அறை என்பதால்,சுரேஷ் மற்றும் தாமஸ் எப்போதும் அவர்கள் அறையில் இருப்பதை விட வரு மற்றும் சஞ்சீவ் அறையில் இருப்பதே அதிகம்…

 

அதுவும் தாமஸ் ஹாஸ்டல் வந்தால் எந்நேரமும் வருவின் அறையிலே குடிக்கொண்டு இருப்பான்..சில சமயங்களில் குளிக்க மட்டுமே தன்னோடு அறைக்கு செல்வான்..சில சமயங்கள் அதுகூட வருவின் அறையிலே குளித்துக்கொள்வான்…

 

சுரேஷ் தூங்க மட்டும் அவனின் அறைக்கு சென்றுவிடுவான் மற்ற நேரம் அரட்டை அடிக்க,படிக்க,அசைன்மென்ட் எழுத வருவின் அறைக்குள் அடங்கிகொள்வான்..

 

ஒரு அறைக்கு நான்கு பேர்கள் என்ற விகிதத்தில் மாணவர்கள் தங்களது அறையை பகிர்ந்துகொண்டு இருந்தனர்…

 

வருவின் அறை தோழன் ஒருவன் வாரநாட்களில் மட்டுமே ஹாஸ்டலில் இருப்பான்..மற்ற நாட்களில் அவனின் அண்ணாவின் அறையில் தங்கிகொள்வான்…மற்றவனோ எதையும் கண்டு கொள்ளாது 24 மணி நேரமும் தொலைபேசியுடனே அமர்ந்து கொள்வான்..இல்லையேல் அவனுக்கு மடிக்கணினி போதும்..வேறதும் அவனின் கண்ணுக்கு புலப்படாது..அதில் அவன் என்ன செய்கிறான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சம்…        

 

பிறகென்ன நால்வர் குழு அடிக்கும் கொட்டத்திற்கு அளவு இருக்குமா என்ன..??

 

தாமஸ் போகும் வருவினை பார்த்து “இவன் எதையோ மறைக்குறான் டா…அந்த பொண்ணு போகும்போது எப்படி வாயில ஈ போகற அளவுக்கு பார்த்துட்டு இருந்தான்…நாம்ப எல்லாம் ஒண்ணா வரும்போது ஒரு வார்த்தை நம்பகிட்ட கூட சொல்லாம அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆககூடாதுன்னு எப்படி தவிச்சு போய் ஓடி வந்தான்…எனக்கு என்னவோ இருக்குது போல இருக்கு…”என சொல்லவும்…

 

சுரேஷ் “என்ன டா இருக்கு…”என்றான் தாமஸ் சொல்வது புரியாமல்..  

 

சுரேஷை ஒரு முறை முறைத்தவன் “உனக்கு நேரா சொன்னாவே விளங்காது,இதுல உனக்கு பொடி வச்சு பேசுனா மட்டும் என்ன புரிய போகுது…”என்றான் தாமஸ்…

 

தாமஸ் சொன்னதை எல்லாம் டீலில் விட்டுவிட்டு “என்ன டா பொடி…”என்றான் மீண்டும் தாமஸ் சொல்வது புரியாமல்…

 

இவர்கள் இருவர் பேசியதையும் பொறுமையாய் கேட்டுகொண்டு வந்த சஞ்சீவ்,சுரேஷின் கேள்வியில் வாய்விட்டு சிரித்தான்…

 

சஞ்சீவ் சிரிக்கவும் அவனையும் முறைத்தவன் “உனக்கு ஹாஸ்டல்ல எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்…”எனவும் சுரேஷும் எதுவும் சொல்லாமல் மண்டையை மண்டையை ஆட்டினான்…

 

பிறகு மூவரும் வகுப்பிற்கு சென்று சஞ்சீவ் வருவின் பக்கத்திலும்,சுரேஷ் மற்றும் தாமஸ் அவர்களுக்கு அருகில் இருந்த மற்றொரு மேசையில் அமர்ந்தனர்…

 

வருவினை பார்த்தவர்கள் “யாருடா.. அந்த  பொண்ணுஎன்று தன் கேள்வி கணையினை அவன் நோக்கி முதலில் தாக்கினான் தாமஸ்..

 

தாமஸின் கேள்வியில் அவனை நோக்கி திரும்பியவன் ,அவன் கேட்கும் கேள்வி அறிந்தும்,அறியாததுபோல “யாரு..எந்த பொண்ணு …”என்றான்..

 

அவனின் எதிர் கேள்வியில் எரிச்சல் அடைந்த தாமஸ்,மற்ற இருவரையும் பார்த்தவன் “ஹ்ம்ம்..காலையில எங்களை எல்லாம்விட்டுட்டு,அப்படியே அந்த பொண்ணை காப்பாத்த ஓடிடோடி,ஹீரோ மாதிரி பறந்து போயி காப்பாத்தினையே அந்த பொண்ணு தான் “என்றான் அழுத்தமாக…

 

இது என்னடா கொடுமையா இருக்கு,அந்த பொண்ணு அங்க இருக்குற குழியில விட்டா விழுந்து இருக்கும் அதுக்கு தான் போய் பிடிச்சு இழுத்தேன்..மத்தபடி அந்த பொண்ணு யாருன்னே தெரியாது..”என்று ஒரு மூட்டை பொய்யினை ஒரே நேரத்தில் அவிழ்த்துவிட்டான்..

 

மற்ற மூவரும் அவனை நம்பாத பார்வை பார்க்க,அவர்களின் பார்வையை கண்டு கொண்டவன் “எமகாதங்க,சொன்னா நம்புறாங்களா..அப்படியே உள்ளுக்குள்ள போய்,என்

மனசாட்சிக்கிட்டயே,புல விசாரணை பண்ணுவானுங்க போல,டேய் சமாளிஎன அவனின் மூளை எச்சரிக்கை கொடுக்க,அதை அமோதித்தவன்..அவர்களை பார்த்து “என்னடா ,நம்பாத மாதிரி பாக்குறீங்க..உங்க மேல சத்தியமா டா..”என மூவரின் மேல் சத்தியம் செய்ய செல்ல “டேய் …கிராதகா..ஆளைவிடு டா..உனக்கு இன்னைக்கு நாங்க தான் பலி ஆடா…என அலறியடித்துகொண்டு வேறு மேசைக்கு தாவியவர்கள்,”என்ன தான்,நீ சொல்லலை அப்படின்னாலும்,நாங்க கண்டுபிடிக்காம விட மாட்டோம்..”என்றனர் கோரசாக..

 

மூவரும் கோரசாக சொல்வதை கேட்டு சிரித்தவன்,சஞ்சீவி நோக்கி “உனக்கு தெரியுமே டா..நீ எதுக்கு இவங்க கூட கூட்டு சேர்ற..”என சொல்லியவன் பிறகு தான் உணர்ந்தான்தான் ஒட்டு மொத்தமாய் உளறியதை,பின் நாக்கை கடித்துகொண்டு அவர்களை நோக்கவும்..தாமஸ் மற்றும் சுரேஷ் இவனை முறைத்துக்கொண்டும்

,சஞ்சீவ் இவனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டான்..

 

தாமஸ்,சுரேஷ் இருவரும் அங்குள்ள மேசையிலே கோவமாய் அமர்ந்துகொண்டனர்.. வரு ,சஞ்சீவினை நோக்கி பாவமாய் பார்க்க அவனோ “எனக்கு எதுவும் தெரியாது,நீயாச்சு,இவனுங்க ரெண்டும் பெரும் ஆச்சு..உளறிகொட்டின இல்ல,இந்த சாத்தான்களை சமாளி”என சொல்லிவிட்டு அமைதியாய் அமர்ந்து கொண்டான்..

 

தயக்கத்தோடு இருவரும் அருகிலும் சென்றவன் அவர்களின் முன் நின்று “சாரி டா மாப்புஷ் …சொல்லகூடாதுன்னு இல்ல,நந்து வந்து இருந்தா இல்லஎனவும்..“அது யாரு நந்து புதுசா.. “என்பது போல் இருவரும் அவனை பார்த்தனர்..அவர்களின் பார்வையில் தொக்கி இருந்த கேள்வியினை புரிந்து கொண்டவன்..” நந்து என்னோட ஸ்கூல் ப்ரண்ட்,மொத்தம் 8 வருஷமா தெரியும்,ரெண்டு பேரும் ஒண்ணா தான் படிச்சோம்..அவன் போலீஸ் லைன்ல போறதுக்கு,கோச்சிங் போறான்… அவன் இங்க வந்து இருந்த அப்போ நீங்க ஊருக்கு போய் இருந்தீங்க ,சஞ்சீவ்கிட்ட சொன்னேன்..நீங்க வந்த பிறகு சொல்லலாம்னு இருந்தேன்.. அப்புறமா மறந்துட்டேன்டா..இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் கோச்சிக்கிறீங்க..”என்றான் அவர்களிடம்..

 

இருவர்களும் அவனை பார்த்தவர்கள்,தங்களுக்குள் பார்வையினை பரிமாறிகொண்டனர் அவன் அறியாமல்..பின் தாமஸ் தான் பேசினான் “சின்ன விஷயம் அப்படின்னு நினைக்குறவன்..யாரு அந்த பொண்ணு அப்படின்னு கேட்டதுக்கு,நீ ஏன் அந்த பொண்ணு யாருன்னே தெரியாது ன்னு சொன்ன..??”என்றான் வருவிடம்.. “அ…து …அது…”என அவன் திணறினான்..எப்படி சொல்வான் அவன் ..நான் அவளை பற்றி சொன்னால்,நீங்க என்னையும் அவளையும் ஓட்டி எடுத்துடுவீங்கன்னு தான் சொல்லல என்று....பிறகு அமைதியாய் நின்று கொண்டான்..

நண்பர்களின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தும் அவன் தன் தலையை  நிமிர்த்தி அவர்களை பார்க்கவில்லை.. இவனின் செய்கையை பார்த்து சிரிப்பு வந்தாலும், மனதிற்குள் அவர்களுக்கும் கோவத்தீ கனன்று கொண்டு தான் இருந்தது..விறைப்பாய் அவனை பார்த்தவர்கள்..”எதோ உன்னோட மனசுல இருக்கு.. அதான் சொல்ல திணர்ற..பரவாயில்ல..”என்று அவனிடம் சொன்னவர்கள் அடுத்த நிமிடம் அங்கு நிற்கவில்லை..தீடிரென்று அவர்கள் செல்லவும் திகைத்து போய் நின்று இருந்தான் வரு..

 

வருவின் நிலையை பார்க்க சஞ்சீவிற்கே பாவமாய் இருந்தது.. இத்தனை நாட்கள் சிறிது மனகசப்பு கூட வந்திராத அவர்கள் நட்பில் முதன் முதலாய் அவர்களுக்கும் சிறிது வருத்தம் ..அதுவும் ஒரு பெண்ணாலே என்ற போது சஞ்சீவிற்கு காலையில் பார்த்த அந்த பெண்ணின் மேல் கோவம் வந்தது..      

 

வருவிற்கும் கோவம் தான் ஆனால் அது ஜெயஸ்ரீயின் மேல் இல்லை,அவனின் மேலே..தன் நண்பர்களிடம் எப்போதும் எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்பவன்,ஜெயஸ்ரீயினை பற்றி சொல்லாதது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை…இதை அவர்கள் கேட்டால் மட்டும் என்ன பதில் சொல்லுவான்…நண்பர்களை பற்றி நினைக்கும் போது பெருமூச்சு ஒன்று அவனிடம் இருந்து வந்தது..

 

ஒருவன் தன்னால் தவிப்பது அறியாமல்,அவளும் தவித்து கொண்டு இருந்தாள்…வருவின் தவிப்பிற்கான காரணம் ஜெயஸ்ரீ என்றால்,ஜெயஸ்ரீயின் தவிப்பிற்கான காரணம் சுபஸ்ரீ..   

 

ஆம்,சுபஸ்ரீ தான் காரணம்…அவசர அவசரமாக வகுப்பிற்கு சென்றவள் அங்கு சுபாவினை தேடி ஓய்ந்து போனாள்நேரமாகவே வகுப்பிற்கு வந்த சுபஸ்ரீ எங்கு சென்றாள் என தெரியவில்லை ஜெயஸ்ரீக்கு..

 

வகுப்பிற்கு வரும் முன்னர்,முதல் வருட மாணவர்கள் எங்கு அமரவேண்டும் என கல்லூரியின் லாப்பியில் போடப்பட்டு இருந்த நோட்டிஸ் போர்டினை பார்த்துவிட்டு,சுபஸ்ரீயும் அதே வகுப்பில் தான் இருப்பாள் என்ற நம்பிக்கையோடு வகுப்பிற்கு சென்றவள்,அங்கு தன் கண்களால் அலசியவள் கண்ணில் சுபஸ்ரீ அமர்ந்து இருப்பதுபோல் தெரியவில்லை..  

 

தான் வந்து இருக்கும் அறை எண்ணும்,தான் பார்த்துவிட்டு வந்த அறை எண்ணும் ஒன்று இல்லையோ,என எண்ணியவள் மீண்டும் அறை எண்ணை சரிபார்த்தாள்..ஆனால் அதுவோ அதே எண்ணை காட்டவும்,சிறிது தயங்கியவள் பின் அறைக்குள் சென்று ஒரு மேசையில் அமர்ந்தாள்..

 

பின் அவளின் கிளாஸ் அட்வைசர் வந்து தன்னை ராஜா என  அறிமுகபடுத்திகொண்டவர்,இனிமேல் தான் FOC (Fundamentals  of Computing and Programming) சப்ஜெட்டை எடுக்க போவதாக அறிவித்தார்..

 

அதன்பின் “உங்களுக்கு எல்லாம் டிபார்ட்மெண்ட் சேர்ந்து தான் இருக்கும்,பர்ஸ்ட் செமஸ்டர் மட்டும்..உங்களை எல்லாம் எந்த டிபார்ட்மெண்ட்கூட சேர்த்து உட்கார வைப்பாங்கன்னு தெரியல..எப்படி இருந்தாலும் சிலபஸ் எல்லாத்துக்கும் சேம் தான்,நான் சொல்ல சொல்ல நீங்க சிலபஸ் எழுதிக்கோங்க..”என்றவர் எழுதுவதற்கு சொல்ல ஆரம்பித்தார்..

 

அவர் சொல்ல சொல்ல மாணவர்கள் எழுதிக்கொண்டு இருந்தனர்..இடையில் புரியாத வார்த்தைகளை மாணவர்கள் கேட்கவும் அவரும் பொறுமையாய் மாணவர்களுக்கு புரியும்படியாய் தனித்தனி வார்த்தைகளாகவும் சொன்னார்..அவர் சொல்ல சொல்ல எல்லோரும் எழுதினர்…

 

“எக்ஸ்கியூஸ் மீ சார்…மே ஐ கம் இன்…”என்று அனுமதிக்காக ஒரு குரல் கேட்கவும்..சொல்லிக்கொண்டு இருந்தவர் வாயிலை நோக்கினார்..மாணவிகளும்,மாணவர்களும் யார் என்பது போல வாயிலை நோக்கினர்…   

 

அங்கு சுபஸ்ரீ தான் அவரின் அனுமதிக்காக நின்றுகொண்டு இருந்தாள்…அவளை பார்த்த ஜெயஸ்ரீக்கு மிகவும் சந்தோசம்..எங்கே சென்றாளோ என்று பதறிக்கொண்டு இருந்தவளுக்கு அவளை கண்டதும் நிம்மிதயாய் இருந்தது…

 

சுபஸ்ரீயினை கண்ட ராஜா “எஸ்…கம் இன்”என்று அனுமதி அளிக்கவும்,உள்ளே வந்தவள் அவரின் முன் நின்றாள்…அவர் என்ன என்பது போல் பார்க்கவும் “பர்ஸ்ட் இயர் சார்..இந்த கிளாஸ்ல உட்கார சொன்னாங்க..”என்றாள் அவரிடம்…

 

“ஒஹ்…கிளாஸ் மாறி போய் உட்கார்ந்துட்டீங்களா..”என அவளிடம் கேட்டவர் அவளின் தலை அசைப்பில் சிரித்தவர்..”சரி மா…போய் உட்காருங்க…”என சொல்லிவிட்டு அவர் மீதியை சொல்ல ஆரம்பித்தார்…  

 

பெண்கள் அமர்ந்து இருந்த பக்கம் தன் கண்களை அலையவிட்டவள்,ஜெயஸ்ரீ அமர்ந்து இருக்கும் இடத்தினை பார்த்துவிட்டு அவளுக்கு அருகில் அமைதியாய் அமர்ந்து கொண்டாள்…

 

சுபஸ்ரீ அருகில் வந்து அமர்ந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் ஜெயஸ்ரீ..அவளுக்கு அதை சொல்ல வார்த்தையே இல்லை எனலாம்..கோவமாய் திட்டிவிட்டு சென்றோமே,இப்போது தன் அருகில் அமராமல் வேறு எங்காவது அமர்ந்து கொள்வாள் என எண்ணி இருந்தவள் நினைப்பை பொய்யாக்கி விட்டு அவளின் அருகில் அமர்ந்து கொண்டதை கண்டு மிகவும் மகிழ்ந்து போனாள்…

 

அதுவும் இல்லாமல் அருகில் அமர்ந்தவள் முன் எதுவும் நடக்காதது போன்று அவளை பார்த்து புன்னகைக்கவும் செய்தாள்…

 

அவளின் புன்னகையை கண்டவள் சுபஸ்ரீயின் கையினை பிடித்து “சாரி சுபா,நான் அப்படி பேசி இருக்ககூடாது…ரொம்ப தப்பு..என்னை மன்னிச்சிடு…”என அவளிடம் தன் மன்னிப்பினை வேண்டினாள்…

 

சுபஸ்ரீ “ச்ச்ச..நீ எதுக்கு என் கிட்ட மன்னிப்பு கேட்க்குற…நான் தான் கேட்கணும்…உன்னை போய் எப்படி எல்லாம் தப்பா பேசிட்டேன்..நீ தான் என்னை மன்னிக்கணும்…நான் உன்னை பத்தி தப்பா பேசியும்,நீ எதுவும் மனசுக்குள்ள வச்சிக்காம,என் கிட்ட எவ்வளவு அன்பா,பாசமா நடந்துக்குற…எனக்கு என்னைய நினைச்சாவே,வெட்கமா இருக்கு…”எனவும் போலியாய் நடிக்கவும்..

 

ஜெயஸ்ரீ “என்ன சுபா இது,பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு,என்னோட தோழி நீ,உனக்கு பேச,திட்ட,அடிக்க,எல்லாம் உரிமையும் இருக்கு…நான் அப்பவே மறந்துட்டேன்…இனிமேல் அதபத்தி பேசவேண்டாம்…”என்றாள் சின்ன சிரிப்போடு…

 

சுபஸ்ரீ “தேங்க்ஸ் ஸ்ரீ…இனிமேல் எல்லாம் நமக்குள்ள சரியாகிடும்…”என்று அவளை பார்த்து சொன்னாள்…ஆனால் மனதிலோ “எனக்கு எல்லாம் சரியாகிடும்..ஆனா உனக்கு இனிமேல் தான் ஏழரை ஆரம்பம் ஆக போகுது…”என சொல்லிக்கொண்டவள் ஜெயஸ்ரீயினை பார்த்து சிரித்தாள்…காலமும் இருவரையும் பார்த்து சிரித்தது…காலத்தின் கோலம் எப்படி இருக்கும் என யார் அறிவார்…

 

கண்ணே உன்னை

கண்ட நாள் முதல்

என் இதயம்

என்னிடம் இல்லையடி

என் சுவாசம் சீராய்

இல்லையடி..

எனக்கு தூக்கம் சரியாய்

இல்லையடி..

என்ன சொல்லுவேன்

இப்படி பட்ட மாற்றங்களை…

கேள்விகள் கேட்கும்

எவருக்கும் பதில்

சொல்ல முடியவில்லை

என்னால்…

ஓயாது பேசும் என் வாய்

உன்னை பற்றி

சொல்ல மட்டும்

பூட்டிகொள்கிறது…

இது என்ன புது

வேதனை அன்று முதல்…

இந்த வேதனையும்

சுகமாய் தான் இருக்கிறது…

உன்னை பற்றி நினைப்பதலோ

என்னவோ நான் அறியேன்…

 

விலகல் தொடரும்…

Advertisement