Advertisement

Suganya Vasu’s – இருதயப் பூவின் மொழி

 

அத்தியாயம் – 10

 

அழகாக தான் தெரியும்

அருகில் செல்…

அனலாய் எரியும்

பாலைவனமும்

பலரின் மனமும்..

 

ஒரு வழியாய் அன்னையை தாத்தாவின் துணைக்கொண்டு தங்க வைத்துவிட்டு வந்து இருந்தவனுக்கு மனதிற்குள் சிறு நிம்மதி எழ ஆரம்பித்தது.இன்னும் இரண்டு வருட படிப்பை நல்ல முறையில் முடித்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் படிப்பில் தீவிரமாய் முழு மூச்சுடன் படிக்க ஆரம்பித்தான்.

 

படிப்பு படிப்பு என முழுதும் படிப்பை பற்றிய நினைப்புடனே இருக்க,வெகுவாய் நண்பர்களிடம் பேசுவதை குறைத்துக்கொண்டான்.ஒரு பெரும் படை எனும் சொல்லும் அளவிற்க்கு நண்பர்கள் குலாம் அவனை சுற்றி இல்லை என்றாலும், ஒன்று இரண்டு பேருடன் நல்ல நட்பில் இருந்தான் எனலாம்.

 

ஆனால் அதுவும் குறைந்து இவன் மட்டும் என்ற தனிமை நிலையை நாட,முதலில் நண்பர்கள் இவனின் நடவடிக்கையை சாதாரணம் போலத்தான் எண்ணிக்கொண்டனர். ஆனால் தினமும் அதே தொடர நண்பர்கள் இவனை கண்டனத்துடன் முறைக்க துவங்க அதை எதையும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

 

தன் போக்கில் தனது வேலைகளை முடித்துக்கொள்பவன், எவரிடமும் சிரித்து பேசுவது என்பது துளியும் இல்லாமல் குறைந்து போய் இருந்தது. மற்றவர்களிடம் தான் முகத்தை திரும்புகிறான் என எண்ணினால், அறை தோழர்களிடமே அப்படி என்றால் என்ன நினைக்க இயலும்.

 

சேகரும் விக்ரமும் நம்பிராஜனின் அறை தோழர்கள்.இருவருக்குமே சொந்த ஊர் கோவை அருகில் உள்ள மருதமலை தான்.இருவரும் அண்ணன் தம்பிகள் கூட,சேகரின் அப்பாவும், விக்ரமின் அப்பாவும் அண்ணன் தம்பிகள். சேகர் விக்ரமின் பெரியப்பா பையன்..சேகரின் அப்பாவிற்க்கும் ,விக்ரமின் அப்பாவிற்க்கும் ஒரே மேடையில் திருமணத்தை முடித்து இருந்தனர் அந்த வீட்டின் பெரியவர்கள்..

 

சேகருக்கும் விக்ரமிற்கும் ஆறு மாதங்கள் வித்தியாசம் மட்டுமே.இருவரும் சிறு வயது முதலே நல்ல தோழர்களாய் இருந்து ,ஒரே கல்லூரியையும் தேர்வு செய்தனர். அக்கல்லூரியில் ஒரு அறையை மூன்று அல்லது நான்கு பேர் பகிர்ந்து கொள்ள வேண்டும்…

 

ஏற்கனவே அனைத்து அறைகளிலும் நான்கு பேர் இருக்க,இரண்டு பேர் மட்டும் இருந்த இவர்களின் அறையை தேர்ந்தெடுத்துக்கொண்டான் நம்பிராஜன்.

 

அதன்பின் சகஜமாய் பழக அரம்பித்திருந்தனர் மூவரும்.அண்ணனும் தம்பியும் நம்பிராஜனிடம் அளவுக்கு மீறி நெருக்கத்தை காண்பிக்க முடியவில்லை. அதற்க்கு நம்பிராஜன் இடம் அளித்தால் தானே.

 

தனக்கான ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டவன் அதனை விட்டு வெளியில் வரவில்லை,வரவும் விரும்பவில்லையோ..!!.இருவரிடமும் பேசுவான் ஆனால் அதுவும் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே.அவர்களின் கேள்விக்கு இவனிடம் இருந்து ஓரிரு வார்த்தையிலான பதில் மட்டுமே.

 

அத்திபூத்தாற்போல் ஒரு சில சமயங்களில் அவர்களுடன் இணைந்து பேச்சில் சிறிது கலகலத்து இருப்பான்.ஆனால் அடுத்த நாள் அனைத்திற்கும் எதிர்மறையாய் அமைதி காத்திடுவான். வலிய சென்று பேசினாலும் சிறு பார்வை மட்டுமே. முதலில் இதனை சற்று எரிச்சலுடன் எதிர்கொண்ட நண்பர்கள் நாளடைவில் அவனின் குணமே இது தான் எனும் எண்ணத்தில் பெரிதாய் எடுத்துக்கொண்டது கிடையாது.

 

அரட்டை அடிக்கும் போது அவனையும் பேச்சில் இழுப்பர், அவன் கலந்து கொண்டால் சேர்ந்து கொட்டம் அடிப்பர்,இல்லையேல் அவர்களே கொட்டம் அடிப்பர்.உயிர்த்தோழன் எனும் சொல்லும் அளவிற்க்கு யாரும்  நம்பிராஜனிடம் நட்பு பராட்டிட அவன் இடம் கொடுக்கவில்லை…

 

அதற்க்கெல்லாம் அவன் ஒன்றும் சிடுசிடுத்து பேசும் முசுடு எல்லாம் கிடையாது, அன்னையிடமும் தந்தையிடமும் நன்றாக பேசுவான்.சிரிப்பான் சண்டடையிடுவான்.அன்னையை விட தந்தையிடம் அதீத நெருக்கம்..

 

ஆனால் பள்ளியிலோ, கல்லூரியிலோ எதிர்மறை குணம் கொண்டவனாய் காணப்பட்டான்.இதற்க்கு எந்த ஒரு சிறப்பு காரணமும் கிடையாது,ஏனோ அவன் மனம் அங்கு சென்றாலே ,அனைவரையும் கண்டாலே தன் போல் சுருங்கி கொள்ளும். அவனும் தான் என்ன செய்வான்.

 

நண்பர்களிடம் சிரித்து பேசிட ஆசைக்கொள்ளும் மனம் அதுவும் ஒரே ஒரு நொடி மட்டுமே,பின் உள்ளுக்குள்ளே சுருங்கிவிட எவரிடமும் இன்முகமாய் பேசுவதை கூட விரும்பமாட்டான்..

 

வீட்டில் கலகலத்து இருப்பதால் தந்தைக்கு அவனின் மறு குணம் தெரியாமலே போயிற்று. என் நண்பன் இவன் என சொல்லிக்கொண்டு ஒரு நாளும் ஒருவனையும் வீட்டிற்க்கு அழைத்து வந்ததும் கிடையாது, எப்போவாது ஒரு முறை கனகசபை அவனை காண செல்லும்போது வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தால், இவன் மட்டுமே தனித்து சென்று பார்த்து பேசிவிட்டு வருவான்…

 

அப்போது தான் அறையின் உள்ளே நுழைந்த நம்பியை கண்டு சேகரும், விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அதனை கண்டு கொண்ட நம்பி என்னவென்று கேட்காமல் தனது மேசையின் மேல் இருந்த புத்தகங்களில் எதையோ ஒன்றினை தேடிக்கொண்டு இருந்தான்..

 

‘ என்ன தேடிட்டு இருக்க நம்பி ‘ இது சேகர்.

 

தேடுவதை விடுத்து அவனை பார்த்தவன் ‘ஒண்ணுமில்ல ..’ என்ற முனகலோடு மீண்டும் தேடும் பணியை தொடர்ந்தான்.

 

‘என்ன தேடரன்னு சொன்னா நாங்களும் தேடி பார்ப்போம் இல்ல..’ இது விக்ரம்.

 

‘ஒண்ணுமில்ல …’ என மீண்டும் மொழிந்தவன் எவரினது முகமும் பார்க்காமல் ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தான்..

 

சேகருக்கும் விக்ரமிற்கும் கோவம் வர,இருவரும் ஒரு சேர அவனை முறைத்தப்படி நின்று இருந்தனர்.. ‘எங்களை பார்த்தா உனக்கு எப்படி டா இருக்கு..”என கோபமாய் மொழிந்தான் விக்ரம்.

 

விக்ரமின் கோவமான வார்த்தைகளை கேட்டு கைகள் தன் போல் வேலையை நிறுத்திகொள்ள கேள்வியுடன் விக்ரமை நோக்கியவன் பார்வை சேகரையும் ஒரு முறையோ தொட்டு மீண்டு மீண்டும் விக்ரமை நோக்கியது..

 

“ ஏன்.. என்னாச்சு…” என்றான் அமைதியாய். “நான் என்ன செய்தேன் உங்களை..’ என்ற கேள்வி பொதிந்த பார்வையுடன்.

 

“பச்…ஒழுங்கா வாயை தொறந்து கேள்வி கேட்கிறது கூட விளக்கமா கேட்க மாட்டியா..”என மீண்டும் முறைப்புடன் விக்ரம் சொல்ல..

 

“இப்போ என்னாச்சு..” என்பது போல் தான் இருவரினையும் பார்த்துக்கொண்டு இருந்தான்..

 

விக்ரமால் தலையில் அடித்துக்கொள்ள மட்டும் தான் முடிந்தது,வேரன்ன செய்ய முடியும் எவ்வளவு தான் அவனும் இழுத்து வைத்து பேசுவான்…’போடா…நீயும் உன்னோட முசட்டு தனமும்..” என தூக்கி எரிந்து பேசிவிட்டு செல்லத்தான் நினைத்தான்…

 

ஆனால் சேகரின் பார்வையும், ஏற்க்கனவே பேசியதும் அவனை அப்படி சட்டென்று செய்ய விடவில்லை.. சேகர் அவனிடம் “ அவன் எப்படி வேணும்னாலும் இருக்கலாம் டா,அது அவனோட குணம் நாம மாத்த முடியாது ஆனா இந்த அளவுக்கு முன்னாடி இல்ல,எனக்கு ஏதோ அவன்கிட்ட தப்பா தோணுது.. இப்போ எல்லாம் நம்ப முகம் கூட நேருக்கு நேர் பாக்கிறது இல்ல, ஒரு ரூம்ல இருந்துட்டு இப்படி இருந்தா நல்லாவா இருக்கு நீயே சொல்லு..ஒரு முறை பேசி பார்க்கலாம் டா,சரிப்பட்டு வரலன்னா அவன் வழிக்கே விட்டுவிடுவோம் ..” என சொல்லி பேச சொல்லி இருந்தான்…

 

அதன் பொருட்டே இப்போது இருவரும் மாறி மாறி நம்பிராஜனிடம் வாதாட துவங்கி இருந்தனர்.. “இப்போ எல்லாம் நீ முன்ன மாதிரி எங்க கிட்ட முகம் கொடுத்துக்கூட பேசறது இல்ல, ரூம்ல இருக்கிறது மூணு பேர் ,நாங்க ரெண்டு பேரும் வலிய வந்து பேசினாலும் நீ பேசறது இல்ல, இப்படி ஒரே ரூமிக்குள்ள இருந்துட்டு இப்படி முகத்தை தூக்கி வச்சா நல்லா இருக்கா. “ என்றான் சேகர்.

 

இது ஒரு பிரச்சனையா என்பதை போல் இருவரையும் பார்த்தவன் , அதனை வாய்மொழியாகவும் கேட்டான்..ஆம் என்றனர் இருவரும் ஒரு சேர..

 

அதற்க்கு என்ன செய்ய என்பது போல பார்த்துக்கொண்டு இருந்தான் நம்பிராஜன்..அவனின் பார்வையை புரிந்துக்கொண்ட விக்ரம் “உனக்கு வேற வழியே இல்ல ,நீ எங்ககிட்ட பேசணும், அதுவும் நல்லஆஆ…அந்த நல்லாவில் சிறு அழுத்தம் கொடுத்தவன் , ‘உன்னோட மூஞ்சை இப்படியே பார்க்குறதுக்கு போர் அடிக்குது..ஒழுங்கா சைட் கூட அடிக்க முடியலையாம்…சேகர் சொன்னான் “ என்றான் விக்ரம் சிரிப்பை அடக்கியப்படி…

 

அவனின் பேச்சில் தன்னையும் மீறி சிரித்துவிட்டான் நம்பிராஜன். அவனின் சிரிப்பை கண்டு அருகில் வந்து கட்டிக்கொண்ட சேகர் “இனிமேல் இப்படியே இரு டா..நீ சிரிச்ச முகமா இருந்தா எவ்ளோ அழகு தெரியுமா..” என தன்னையும் மீறி அவன் சிரித்துவிட்ட சந்தோஷத்தில் சேகர் பேசிக்கொண்டே செல்ல…

 

விக்ரம் வாய்விட்டு சிரிக்க துவங்கி இருந்தான்..’நான் சொன்னேன் தான ,நீ நம்பவே இல்ல இப்போ பார்த்தியா ,அவன் வாயாலேயே ஸ்எல்லாம் சொல்லிட்டான்..இவன் உன்னை ரொம்ப நாளா சைட் அடிக்கிறான் போல ,எனக்கே தெரியல…” என்ற விக்ரம் இன்னும் சிரிப்பை உதட்டினுள் புதைக்க படாத பாடுபட்டு கொண்டு இருந்தான்.

 

அவனை தன் கொண்டு எரித்த சேகர் “அவனை கண்டுக்காத டா நம்பி.. நீ எப்பவும் எங்கக்கூட இதே மாதிரி இருக்கணும்..ப்ராமிஸ் பண்ணு..” என கையை அவனின் முன் நீட்ட இதுக்கெல்லாம் ப்ராமிஸ்ஸா வேண்டாம்…” நான் இனிமேல் இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன் என கூற.

 

ப்ராமிஸ் ஸா…என்றான் மறுபடியும் அவனின் நண்பன்..அய்யோ விட மாட்டியா ப்ராமிஸ்…என்றான் அழுத்தமாக…நம்பலாமா…!!! என்க…நம்பஜ்6 நம்பு…ப்ராமிஸ் ப்ராமிஸ் என்றான் சத்தத்துடன்…

 

“டேய் என்னடா..என்ன ஆச்சு.. “என சுரேஷ் உலுக்கிய பின் தான் இருக்கும் இடம் உணர்ந்து ‘ ஒண்ணுமில்ல ணா…” என்றவன் அமைதியானான்.. நடந்தவற்றை எல்லாம் எண்ணிக்கொண்டு இருந்தவனுக்கு அவையாவும் சற்று முன் நடந்தது போல பிரம்மை…ஆனால் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன..

 

“நீ ஏன் இப்படி ரொம்ப டிஸ்டர்பா இருக்க,எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் “ என்ற சுரேஷ் கேன்டீனில் இருந்து வாங்கி வந்திருந்த உணவினை அவனுக்கு அளித்து பின் மாத்திரையினை விழுங்க வைத்தான்..

 

மாத்திரையின் வீரியத்தினால் அவனின் கண்கள் விரைவில் உறக்கத்தை தழுவ நம்பிராஜன் உறங்கி விட்டான்..நார்மல் வார்டில் இருந்ததால்,அவனின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து உறங்க ஆரம்பித்து விட்டான் சுரேஷ்…

 

அறைக்கு சென்ற கனிமொழி அலுப்பு தீர குளித்து முடித்ததும், அன்னைக்கும் தந்தைக்கும் சிறிது நேரம் பேசியவள்,நம்பியிடம் பேசியதை மனதில் அசைபோட்டப்படி படுத்திருந்தாள்..

 

டூயூட்டி முடிந்ததும் ஊருக்கு சென்று வரவேண்டும் என எண்ணி கொண்டவள் தன்னையும் மீறி உறங்க ஆரம்பித்து இருந்தாள்.மறுநாள் காலை மருத்துவமனை சென்று நம்பிராஜனை பார்த்துவிட்டு,அவனிடம் எதுவும் விசாரிக்காமல் சுரேஷிடமே அனைத்தையும் கேட்டு தெரிந்துக்கொண்டவள் பணிக்கு திரும்பினாள்.

 

கனியிடம் பேசலாம் என நம்பிராஜன் கனியின் முகத்தினையே பார்த்துக்கொண்டு இருக்க, அவனின் முகத்தினை கூட காணாது சென்று விட்டாள்…திமிர் உடம்பெல்லாம் திமிர் ..என மனதில் அவளை வஞ்சம் இல்லாமல் வைதுக்கொண்டு இருந்தான்.

 

மாலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட சுரேஷ் நம்பியை அழைத்துக்கொண்டு  வீட்டிற்க்கு வந்து சேர்ந்தான் சுரேஷ்..கனி வருவாள் என எதிர்பார்த்த நம்பிக்கு பெருத்த ஏமாற்றமே..மனதில் ஒருவித வெறுமையும், எரிச்சலும் உருவாக, அது முகத்தில் பிரதிபலித்திடா வண்ணம் முகத்தை அமைதியாய் வைத்துக்கொண்டான்..

 

வீட்டிற்க்கு வந்த ஒரு மணி நேரத்தில் அங்கே ஆஜராகி இருந்தார் திலகவதி.அவரை கண்டு அதிர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் பீதியுடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்..

 

முதலில் சுதாரித்த சுரேஷ் “ வாங்க மா..வாங்க..உள்ள வாங்க…” என வரவேற்று அவர் அமர்வதர்கு அங்கிருந்த நாற்காலியை இழுத்து போட்டான்..மகனை முறைத்தவர் சுரேஷினையும் முறைக்க துவங்கினார்..

 

“அவன் தான் போன் பண்ணி சொல்லல..நீயாச்சும் சொல்லி இருக்கலாம் இல்ல சுரேஷ், பையன் எப்படி இளச்சி போய் இருக்கான் பாரு ,உங்க ரெண்டு பேருக்கும் என்னோட நினைப்பே இல்லையா..!! ஹ்.. அது எப்படி இருக்கும் ,பெத்த புள்ளைக்கே இல்ல,உனக்கு இருக்குமா..??..” என்று பேசியப்படி மூக்கை உறிஞ்ச துவங்கினார்…

 

அவரின் கஷ்டத்தை காண பொறுக்காத சுரேஷ் “என்னமா இப்படி எல்லாம் பேசுறீங்க.நான் என்னைக்காவது உங்களை அப்படி நினைச்சி இருப்பேனா, என்னோட அம்மா போலத்தானே நீங்களும், நம்பி என் கூட பிறக்காத தம்பி மா..எதையாவது சொல்லி உங்க மனசையும் கஷ்டப்படுத்தி ,என்னையும் கஷ்டப்படுத்தாதீங்க மா..” என்றான் சங்கடமாய்…

 

சுரேஷுன் மனமும் நம்பிராஜனின் மனமும் இவருக்கு விஷயம் தெரிந்து இருக்குமா..?? இல்லையா..??  தெரிந்து இருந்தால் இவ்வளவு சதாரணமாக இந்தி இருப்பாரா..?? என்ற அலசலில் இருந்தன…

 

யோசனையின் ஊடே நம்பிராஜன் சந்தேகமாய் சுரேஷினை காண,அவனின் பார்வையில் இருந்தே புரிந்துக்கொண்ட சுரேஷ் “ டேய் நான் எதுவும் சொல்லல டா..என்னை எதுக்கு இப்படி பாக்குற…தேவையில்லாம ஏதாவது சொல்லி மாட்டிக்க போறோம்..கொஞ்ச நேரம் அமைதியா இரு…” என்று அவனின் காதில் மெதுவாய் கிசுகிசுத்தான் திலகவதிக்கு கேட்காதவாறு…

 

ஒரு முறை மீண்டும் சுரேஷினை சந்தேகமாய் பார்த்தவன்,அன்னையின் புறம் திரும்பினான்…மகனை கண்டு கண் கலக்கியவர் “ இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு ராஜா.பரவாயில்லையா..??..லேசான ஜுரம் இருக்கும்போதே ஹாஸ்பிடல் போய் இருக்கலாம் இல்ல,ரொம்ப வர வரைக்கும் இப்படி தான் கண்டுகொள்ளாமல் இருப்பியா..?? “ என்று கடிந்துக்கொண்டார்…

 

ஜூரமா…?? , இவனுக்கா..??.இவனால மற்றவர்களுக்கு வராமல் இருந்தால் சரி என மனதில் நினைத்த சுரேஷ் நம்பிராஜனை காண அவனோ இவனை முறைத்துக்கொண்டு இருந்தான்..

 

ஏன் இப்படி முறைக்கிறான் மைண்ட்ல பேசுறதா நினைச்சிட்டு சத்தமா வெளியே சொல்லிட்டமோ.. என எண்ணியவன் “அம்மா நீங்க பேசிட்டு இருங்க இப்போ வந்துட்றேன்..” என்றவன் நம்பிராஜனிடம் பேசும்படி கண்ணசைத்து விட்டு சமையலறைக்கு சென்றான்…

 

அன்னை இன்னும் அழுதுகொண்டு இருப்பதை கண்டு மனத்திற்குள்ளே நொந்தவன் “அம்மா ஏன் இப்படி அழுதுட்டு இருக்கீங்க, ஜுரம் தான் மா,டாக்டர்கிட்ட போயிட்டு வந்துட்டேன்.. மருந்து சாப்பிட்டு தான் இருக்கேன்..இப்போ ஓர் அளவிற்க்கு பரவாயில்லை…” என மொழிந்துக்கொண்டு இருக்க…

 

“இப்படி தான் எப்போ பாரு ஏதாவது ஒண்ணு வந்துட்டே இருக்கு, நீ பேசாம என் கூடவே வந்திடு.. நீயும் நானும் நம்ம ஊர்லயே இருக்கலாம் ..” என்றார் அவர்..

 

“உனக்கு யார் மா எனக்கு உடம்பு சரியில்லைன்னு…” என்றான் சற்றே கோவத்துடன் சமையலறையில் இருந்த சுரேஷினை முறைத்துக்கொண்டே…

இவன் வேற சும்மா சும்மா என்னை முறைச்சிட்டு ,நான் தான் சொல்லலைன்னு சொல்றேனே டா…நம்பு டா..நம்பு …” என சிவாஜி போல இடது கையை  நெஞ்சின் மேல் வைத்து, வலது கையினை அதன் மேல் குத்தியபடி அவனிடம் சைகை மொழியில் திலகவதி அறியாது செய்து காண்பிக்க..

 

முறைக்க முயன்றவன் பின் அவனின் செய்கையில் மெதுவாய் சிரித்தவன் அன்னையை நோக்கினான்…பின் கையில் காப்பியுடன் அங்கே அஜரானான் சுரேஷ்..காபியை கையில் எடுத்துக்கொண்டவர் “ மொழி தான் டா…” என்றார் அமைதியாய்…

 

சத்தமே இல்லாமல் மகனின் தலையில் இடியை இறக்கியவர் ,பின்னும் “ அவ மட்டும் சொல்லலன்னா எனக்கு தெரிஞ்சி இருக்காது..நீயும் இந்த களவாணி பையனும் என்கிட்ட2 இருந்து மறைச்சி இருப்பீங்க..” என்றார் கோவத்துடன்…

 

அதிர்ச்சியுடன் அன்னையை கண்டவன் ,தன் முகத்தை சாந்தப்படுத்த பெரும்பாடுபட்டான்…. அவளுக்கு எப்படி தெரியும்…யார் சொல்லி இருப்பார்கள்…அவனுக்கு மண்டை குடைய ஆரம்பித்தது…

 

“மொழி….ழி… ழி…” மெதுவாய் மனத்திரகுள்ளே உச்சரித்து பார்த்து கொண்டான்…உள்ளுக்குள்ளே சர்க்கரை போல் இனிக்க துவங்கியதோ..!!..ம்கூம்.. இல்லை…ஆனால் ஒருவித நிம்மதி..அவளின் பெயரை கேட்டதும் ஏக சந்தோசம்..

 

வெகு நாட்களாய்..!!! இல்லை வருடங்களாய் அவனின் மனதில் உறங்கிக்கொண்டு இருக்கும் மொழியவள் அவள்…அவளுக்கும் இவனுக்கும் மட்டுமே தெரிந்த மொழியாய் அவர்களின் இடையில் இருந்தது காதல் மொழி..!!

 

குழல்மொழி…அவனின் மொழி….அவனுக்கே அவனுக்காய் பிறந்தவளோ அம்மொழி…அவனின் இருதயப் பூவின் மொழி…!!!

 

இருதயப் பூவின் மொழி தொடரும்…

 

Advertisement