Suganya Vasu’s – இருதயப் பூவின் மொழி 9
அத்தியாயம் – 9:
வீசும் காற்றில்
இறகாய் பறக்கும்
உயிரில்லா காகிதப்
பூவாய் என் மனம்…
வேகமான நடையுடன் மூச்சு வாங்க,கால் வலி உயிர் போக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு நடையை கூட்டியவன், அடுத்த ஐந்து நொடிகளில் வீட்டை அடைந்திருந்தான்…
வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்று கதவை திறக்க முயல ,கதவு பூட்டி இருந்தது.திலகவதி எங்கோ சென்றிருப்பார் போலும்.எப்போதும் சாவியை வைக்கும் இடம் தெரியும் என்றாலும்,அதனை எடுக்காமல் விடுத்து அங்கே போடப்பட்டு இருந்த ஒற்றை ஆள் படுக்கும் கயிறு கட்டிலின் மேல் காலை அசைக்காது மெல்ல சரிந்தான்…
கண்களை இறுக மூடிக்கொண்டவனுக்கு , வலியை விட பயமே முழுதும் அவனை ஆட்கொண்டது…அந்த நடுங்கிய விரல்களின் வருடலே மீண்டும் மீண்டும் நினைவில் வர முகமெல்லாம் வேர்த்து போயின..
நினையாதே மனமே…. நினையாதே…!!! என ஸ்ரீராமஜெயம் போல உள்ளுக்குள்ளே உறு போட்டாலும் ,அதனையே நினைத்து கலங்கி போனான் நம்பிராஜன்…
தன் நெற்றியில் பட்ட சில்லென்ற பரிசத்தில்,.”ஹ்..ஹ்..ஹா….’ என்ற சத்தத்துடன் சட்டென்று எழுந்தவன் ,பயத்துடனே கண்ணை திறந்து எதிரில் நோக்க திலகவதி நின்று இருந்தார்.
திலகவதியின் முகம் ஒரு வித பதட்டத்துடன் அவனையே நோக்கிக் கொண்டு இருந்தது.’என்ன ராஜா, என்ன ஆச்சு ,ஏன் முகமெல்லாம் இப்படி வேர்த்து போய் இருக்கு..’ என பதட்டபட்டவரை ‘ஒண்ணும் இல்ல மா,நடந்து வந்தேன் அதுனால வேர்த்து இருக்கு,நீங்க எதுக்கு இதுக்கு போய் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க,கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க மா “ என்றவன் அவரின் கைகளை தனது கையினுள் அடக்கிக் கொண்டான்…
அவரின் மனம் ஏனோ சமாதானம் அடைய துவங்க, ஒரு நம்பிக்கை இல்லா பார்வையை மகனின் மீது செலுத்தினார், என்னவோ மறைப்பது போலவே அவரின் உள் மனது உரக்க சொல்லியது,கண்ணால் அவனை ஊடுருவியப்படி இருக்க ,அவரின் பார்வையை கண்டு மனதில் நொந்துக்கொண்டான்…
“சமாளி டா நம்பி சமாளி இல்ல அம்மா எல்லாத்தையும் கக்க வச்சிடும், எஸ் ஆகிடு, இல்ல அவ்ளோ தான், விட்டா அம்மாவோட பார்வை மனசுக்குள்ள போய் நடந்ததை லைவ் டெலிகாஸ்ட் பண்ணிடும் போல..எஸ் ஆகு..” என மூளையும் மனமும் ஒரு சேர எச்சரிக்க,
சட்டென்று கட்டிலை விட்டு கீழே இறங்க,அப்போது தான் காலில் இருந்த க்ரிப் பேண்டினை கண்ட திலகவதி ‘ டேய் என்னடா இது கால்ல கட்டு ,என்ன ஆச்சு..” என அதீத பதற்றத்துடன் கேட்க துவங்கினார்.
கேட்டின்னுள் நுழைந்து உள்ளே வந்து நம்பிராஜன் கட்டிலில் படுத்திருப்பதை தான் அவரால் காண முடிந்தது. அடிபட்ட காலை அவனின் இடதுபுறம் கீழே தொங்கவிட்டப்படியும், வலது காலை கட்டிலின் மேலும் வைத்து படுத்திருந்தமையால் அவருக்கு காலில் அடிபட்டது தெரியாமல் போயிற்று.
லேசான குற்றவுணர்வுடன் மகனை நோக்கிவிட்டு, அவனின் காலை தனது கைகளால் நீவியப்படி இருந்தார்,அன்னையின் கைகளை தனது கைக்குள் அடக்கிக்கொண்டவன் ‘ ஏம்மா முகம் இப்படி வாடி போய் இருக்கு, காத்தவராயன் தாத்தா வீட்ல தண்ணி கீழே கொட்டி இருந்து இருக்கும் போல, தெரியாம அது மேலே காலை வச்சிட்டேன் ,வழுக்கிடுச்சு, ரொம்ப வலி எல்லாம் இல்ல மா லேசான வீக்கம் தான் ,’ என அவரை சமாதானம் படுத்தும் பொருட்டு சொல்லிக்கொண்டு இருந்தான்.
திலகவதியின் கண்களில் கண்ணீர் பெருக்க ஆரம்பித்து இருந்தது, அன்னையினை கண்டவனுக்கு எப்படி சமாதனப்படுத்துவது என்ற பெருத்த யோசனையாய் போனது.
தனக்கென இருக்கும் ஒரு உறவு, இப்போது தான் ஓர் உயிரை பறிகொடுத்து இருக்க,மகனும் காலில் அடி பட்டு வந்து இருக்க ,மனம் கண்டதையும் கண்டபடி யோசித்தது..எதையும் இழந்தவர்க்கு தானே தெரியும் வலியும் வேதனையும்..ஒன்றை இழந்தது போல் மற்றொன்றையும் இழக்க எண்ணுவாரா..!!!
‘கொஞ்சம் பொறுப்பா இருக்க மாட்ட,ஏடாகூடமாக ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்ணுவேன், உங்க அப்பாவை இழந்ததையே ஜீரணிக்க முடியல,நீயும் ஏதாவது செஞ்சு என்னை பாதி உயிரா செஞ்சிடாத..” என திட்டியவர் , பின் ‘ கொஞ்சம் பார்த்து இரு டா கண்ணா…சாத்தியமா இன்னொரு இழப்பை தாங்குற சக்தி இந்த அம்மாக்கு கொஞ்சம் கூட இல்ல..’என கண்ணீருடன் கூற ‘சரி மா..மன்னிச்சுடு இனி இப்படி நடக்காது.’என்றவனின் மனம் அன்னையின் மனநிலையை எண்ணத் துவங்கியது..
அவரின் பயம் அவனுக்கும் நன்றே புரியத் தான் செய்தது, எதையும் அவனும் வேண்டும் என்று செய்திடவில்லையே. எதிர்பாராமல் நடந்ததை யார் மேல் குற்றம் சொல்ல இயலும்.அன்னையை கலக்கமாய் நோக்க,அவரும் இவனை தான் கலங்கிய கண்ணீரோடு பார்த்துக்கொண்டு இருந்தார்.
‘அம்மா நீங்க தேவையில்லாம கண்டதையும் நினைச்சு மனசை குழப்பாம இருங்க, நான் இனிமேல் கொஞ்சம் கேர் புல்லா இருக்கேன் மா…ப்ளீஸ் மா,என்னால இனிமேல் நீங்க அழக்கூடாது.”என்றவன் தாயின் கண்ணீரை தன் கை கொண்டு துடைத்தான்.
அவனின் கையை தனது கன்னத்திலே அழுந்த புதைத்துக்கொண்டவர் ‘ கொஞ்சம் பார்த்து பொறுப்பா நடந்துக்கோ ராஜா,என்னை உங்க அப்பா போல நீயும் கஷ்டப்பட வைக்காத’ அவனின் தலையை ஒரு நொடி வருடிவிட்டு எழுந்து வீட்டிற்க்குள் சென்றுவிட்டார்.
எதையெதையோ நினைத்து அவர் மிகவும் கலங்கி, குழப்பத்திலும் தெளிவில்லாத மனதுடனும் உழன்றுக்கொண்டு இருக்கிறார் என அவரின் பேச்சில் இருந்து ஓர் அளவிற்க்கு ஊகிக்க முடிந்தது
அன்னையினை இன்று ஓர் முடிவினை எடுத்திட வைத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தால் தாயோ தந்தையின் படத்தின் முன் நின்று பிராத்தித்து கொண்டு இருந்தார்.
தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணினாலும், குழம்பிய நீரில் மீனை பிடித்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் ,’இன்னைக்கு காலேஜ்ல இருந்து போன் பண்ணி இருந்தாங்க மா’ என.ஆரம்பிக்க
அவரின் வேண்டுதல் என்னவோ கடவுளான கணவனிடமே அதிகமாய் இருந்தது. மகனின் வார்த்தைகளுக்கும் செவி சாய்க்க மறுக்கவில்லை..திலகவதி கண் திறக்கவில்லை என்றாலும் ,தனது வார்த்தைகள் அவரின் செவிப்பறையில் விழும் என்ற நம்பிக்கையுடன் மேலும் தொடர்ந்தான்.
‘எப்போ காலேஜ் வருவீங்கன்னு கேட்டார் மா,முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர சொன்னாங்க.’ என சொல்லிக்கொண்டு இருக்க, தனது வேண்டுதலை முடித்திருந்த திலகவதி ,ஒளிரும் அகல்விளக்கை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு, மகனின் கண்ணிலும் ஒற்றி எடுத்தவர் ,விபூதியினை அவனின் நெற்றியில் சிறு கீற்றாய் வைத்துவிட்டார்.
அவனின் பேச்சிற்க்கு பதிலாய் , ‘ நான் உன்னை ஒரு வாரமா காலேஜ் போக சொல்லி சொல்லிட்டு தானே இருக்கேன். நீ போகாம இருந்துட்டு இப்போ காலேஜ்ல இருந்து கூப்பிட்டாங்கன்னு சொன்னா நான் என்ன செய்ய முடியும் நம்பி ,நீயே சொல்லு..’ என எரிச்சல் மடிந்த குரலில்.
‘சொல் பேச்சு கேளாதவனாய் அவனின் விருபத்திற்கு எல்லாமே செய்ய வேண்டும் என எண்ணினால் அவர் மட்டும் என்ன செய்வார். உலகில் நான் ஒருத்தி மட்டும் தான் துணை இல்லாமல் ஒத்தையாய் இருக்கிறேனா..??.ஒருவரின் துணையின்றி எவரும் வாழ முடியாது என்றால் ,உலகில் தொன்னூறு சதவீதம் வாழாமல் தான் இருப்பர்.
அவரின் புரிந்துணர்வின்படி திலகவதியின் கூற்றும் எண்ணமும் சரி என்றால் நம்பிராஜனின் எண்ணப்படி அவன் எண்ணுவதும் சரியே. எல்லோருக்கும் அவனால் பாதுகாப்பை பற்றி சிந்திக்க இயலுமா..??,அவனால் அவனின் அன்னையை பற்றி மட்டும் அல்லவா சிந்திக்க இயலும்.
‘என்னமா நீங்க திரும்ப திரும்ப அதையே சொல்றீங்க,நானும் தாத்தாவும் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லல.’
‘மச்ச்….நம்பி நீ கேட்கிறது எனக்கு செய்ய பிடிக்கல ராஜா.’ என பதில் சட்டென்று வந்தது திலகவதியிடம் இருந்து.
‘ எனக்கு இந்த பதில் வேண்டாம் மா ‘ அன்னையை விட வெகுவாக பிடிவாதம் பிடித்தான்.திலகவதி அவனை முறைக்க துவங்க ,சளைக்காமல் அவரை கண்டவன் ‘நீங்கள் ஒத்துக்கொள்ளும் வரை விடமாட்டேன் ‘ என்பது போல் பதில் பார்வை பார்த்தான்.
மகனின் பிடிவாதம் அதிகரிக்க துவங்கி இருக்க ,அவனிடம் போராட முடியாமல் முழி பிதுங்க நின்று இருந்தார்,மனத்திற்குள் வெகு சோர்வாய் உணர்ந்தார்.
‘என்னைய என்ன தான் பண்ண சொல்ற ராஜா…இங்க இருக்குற எல்லாத்தையும் விட்டுட்டா எப்படி ..இதெல்லாம் உருவாக்க உன்னோட அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டார் தெரியுமா, அழிப்பது எளிது, ஆக்குவது கடினம்..!!.இதையெல்லாம் அப்படியே விட்டுட சொல்றியா..!!’ என்றார் எதையாவது சொல்லி தட்டி கழிக்கும் நோக்கோடு.
‘நாம செய்யலனா என்னமா,நிலத்தை குத்தகைக்கு விட்ருவோம் பிரச்சனை முடிஞ்சது.’ என எளிதாய் பதில் சொல்லிவிட்டான். ஆனால் வியர்வை சிந்தி இரவு பகல் பாராது உழைத்த அந்த உடம்பிற்கு தானே தெரியும் அதனின் வலி.
‘குத்தகைக்கா…!! ‘ இடுங்கிய கண்களோடு அவனை கண்டவர் ‘உனக்கு எல்லாமே ஈஸியா போச்சா ராஜா,நம்மளோட வாழ்வாதாரமே இது தான்,இதையும் யாரையோ செய்ய சொல்லிட்டு நம்மளோட வயித்துக்கு என்ன பண்ண முடியும் சொல்லு.’
‘ஏன் நான் சொல்றதை புரிஞ்சிக்காம இப்படி இந்த விஷயத்துக்கு நீ இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிற,எனக்கு நீ சொல்றதும் செய்றதும் கொஞ்சம் கூட பிடிக்கல ராஜா.’ என தனது விருப்பமின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படையாக காட்டவே துவங்கிவிட்டார்.
‘அதெல்லாம் எனக்கு தெரியாது மா, எனக்கு நீங்க தனியா இருக்க கூடாது ,அப்படி இல்லன்னா நான் இங்கவே பக்கத்துல இருக்குற ஏதாவது ஒரு காலேஜ்ல ஆர்ட்ஸ்ல சேர்ந்து படிக்கிறேன்.’ என்றான் முடிவோடு.
‘இவ்ளோ தீவிரமா பேசுறேன்னா ஏதோ முடிவு பண்ணி இருக்க,முதல்ல அது என்னன்னு சொல்லு ,ஆனா ஒண்ணை மட்டும் மனசுல வச்சுக்க, நான் உன்னோட தாத்தா வீட்ல இருக்க மாட்டேன் ‘ என்றான் அதீத உறுதியுடன்.
‘அப்படி என்னமா பிரச்சனை, தாத்தாவும் பாட்டியும் உன்னை நல்லா தான பார்த்துக்கறாங்க , அப்புறம் ஏன் நீங்க அவங்க கூட இருக்க மாட்டேன்னு சொல்றீங்க அவங்களை விட்டா எப்படி உங்களுக்கு நல்ல பாதுகாப்பு இருக்கும் ‘ என்க
‘அதை பத்தி பேசறதா இருந்தா ,நீ என்கிட்ட மேற்கொண்டு எதுவும் சொல்லாத ,நான் இங்கவே தான் இருப்பேன் வேற எங்கவும் வரமாட்டேன் ‘ என்றுவிட கப்பென்று வாயை மூடிக்கொண்டான்.
‘சரி நான் அதை பத்தி எதுவும் பேசல,ஆனா நீங்க தாத்தா வீட்ல இல்லன்னா என்ன,ஊருக்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்க இருக்கலாம் மா,நானும் லீவ் டேஸ்ல வந்து போறேன்.’ என்றான் ஒரு வழி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில்.
‘மக்கும்…முடியாது ,சொந்த வீட்டை வச்சிட்டு வாடகை வீட்லயா ,முடியாது ராஜா,..’ என எடுத்த எடுப்பிலே மறுக்க,அன்னையின் காலடியில் அமர்ந்துக்கொண்டவன் ‘ப்ளீஸ் மா, எனக்காக இதைக்கூட பண்ண மாட்டீங்களா, என்னால உங்களை தனியா விட்டுட்டு போக முடியாது மா,என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க.’
நான் இன்னும் ரெண்டு வருஷத்துல படிப்பை முடிச்சிட்டா,நானும் உங்கக்கூடவே இருப்பேன், நீங்களும் நானும் இங்கவே வந்திடலாம்,என்ன சொல்றீங்க ப்ளீஸ் மா சரி சொல்லுங்க ‘ என கெஞ்ச துவங்க.
அவனின் பரிதவிப்பு அவருக்கும் புரியத்தான் செய்தது.இருந்தும் சொல்வது போல் செய்வது என்பது சாத்தியமா என மனது யோசிக்க துவங்கியது.சிறிது காலம் அதாவது மூன்றில் இருந்து ஆறு மாதம் இருந்து பார்க்கலாம் என மனதிர்குள் நினைத்தவர் வெளியில் அவனிடம் சொல்லாது விடுத்தார்..
தலையை பரிவோடு வருடியவர் ‘ சரி உன்னோட சந்தோசத்துக்காக எனக்கு சம்மதம்,ஆனா ரெண்டு வருஷம் மட்டும் தான்’ என்றார் அவனிடம். சம்மதம் தெரிவித்ததால் சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் நம்பிராஜன்.
அதன் பின் வேலைகள் நொடியும் தாமதியாது நடந்தேறின.அனைத்தையும் அவனது தாத்தா சுப்பையாவே செய்தார்.ஊரிலே அவருக்கு நெருங்கிய ஒருவரின் வீட்டை வாடகைக்கு பேசி முடித்தார்…
அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி வீட்டிலே வைக்கப்பட்டது, காலையிலும் மாலையிலும் மாடுகளை வந்து தோட்டத்திலேயே கவனித்து விட்டு,பாலை கறந்துகொண்டு செல்வது என முடிவு எடுக்கப்பட்டது..
அதன் பின் அன்னலட்சுமி அடிக்கடி வந்து மகளை பார்த்துவிட்டும்,தேவையான சிறு சிறு உதவிகளையும் செய்துவிட்டு சென்றார்.ஓர் அளவிற்க்கு நம்பிராஜனுக்கு மனதிர்கு நிம்மதி எழ அன்னையின் கவலை சற்றே குறைந்தது போல உணர்ந்தான்.
அன்னையை புது வீட்டில் குடியமர்த்திவிட்டு,தாத்தாவின் பொறுப்பில் அன்னையை விட்டுட்டு இரண்டு நாட்களில் தாத்தாவின் உதவியுடன் அனைத்தையும் மனதிற்கு திருப்தியாய் அன்னைக்கு தேவையான வசதிகளை செய்து முடித்தபின் ,நீண்டதொரு விடுப்பிற்கு பின் கல்லூரிக்கு சென்றான்..
இருதயப் பூவின் மொழி தொடரும்…