Advertisement

Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி

அத்தியாயம்:7

அன்பெனும் அழகிய

தேர் மாலையோ

அவள்…!!

கல்லூரிக்கு செல்லாமல் அடம்பிடிப்பவனை எப்படி சம்மதிக்க வைப்பது என மனம் யோசனையில் தவித்தது…சிறு பிள்ளை தனமாய் நடந்து கொள்பவனை அடித்து கல்லூரிக்கு அனுப்ப முடியுமா…கட்டி போட்டு கல்லூரிக்கு அனுப்ப அவன் என்ன கை சப்பும் பாப்பாவா…

நம்பிராஜன் நடந்து கொள்வதை நினைக்க நினைக்க திலகவதிக்கு வேதனையாகவும், கோவமாகவும் இருந்தது..மானம் ரோஷம் இல்லாமல்,தாய் சொன்ன சொல்லை மறந்து, அவரின் வீட்டின் வாசற்படி மிதிப்பதா…அதுவும் தாயாகவே இருந்தாலும்…

அவரின் ஏச்சுக்களை கேட்டபின் அவரால் அங்கு ஒரு பருக்கை சோற்றை உண்ண முடியுமா…உண்டால் அது தொண்டையில் சிக்கிய மீனின் முள்ளை போன்று என்னில் உருத்தாதா ..மனம் ஏனோ முரண்டு பிடித்துக்கொண்டே இருந்தது..மறக்க முடியவில்லை அவரால் அந்த வார்த்தைகளை…

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.”   என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க..

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது..

நடைமுறையில் திலகவதி அனுபவித்துக்கொண்டு இருந்தார்..மகனிடம் நீயா ..??..நானா..?? பார்த்துவிடுவோம் என்ற உறுதியுடன் இருந்தார்…

வீட்டின் ஹாலில் அமர்ந்து இருந்த திலகவதி மகனுக்கு புரிய வைத்திட வேண்டும் என்ற நோக்கில் பேச்சு கொடுத்தார்…

“ரா…ஜா….ராஜா…”

“கேட்குது…சொல்லுங்க….”பட்டு தெரித்தாற் போல வார்த்தைகள், அவனின் கோவத்தின் அளவு புரிந்தது.. இருந்தும் அவன் சொல்வதை கேட்பதற்கு மனம் ஒப்பவில்லை…

“எத்தனை நாளுக்கு இப்படியே காலேஜ் போகாம வீட்ல இருக்க போற..”

“நீங்க சம்மதிக்கிற வரைக்கும்..” என பட்டென வந்தது பதில்..

“அது நிச்சயம் நடக்காது…” அழுத்தத்துடன் ஒலித்தது திலகவதியின் வார்த்தைகள்..

“அப்போ நானும் போக மாட்டேன்..”அவரை விட அழுத்தமாய் மொழிந்தவன் ரிமோட்டை தூக்கி சோபாவில் எறிந்து விட்டு வெளியேறிவிட்டான்..

அதிர்ச்சியுடன் போனவனையே பார்த்துக்கொண்டு இருந்தார் திலகவதி..அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. இப்படியே நாட்கள் கடந்தால் அவனது படிப்பு பாதிக்குமே.. ஏன் இவனுக்கு புரிய மாட்டேங்குது…சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டான்…சொல்லவும் முடியாது…அதுக்கு பிறகு அப்பா அம்மா கூட பேச மாட்டான்…

அவனுக்கு அவங்க துணை கண்டிப்பா தேவை…நான் இன்னும் எவ்ளோ காலம் இருப்பேனோ..எனக்கு அவங்க உதவி வேண்டாம்ன்னு சொல்லி விலகி இருந்தாலும், அவங்களோட உதவி நம்பிராஜனுக்கு எப்பவும் தேவை…

அவரோட ஈம காரியத்தின் போது கூட அப்பா மட்டும் இல்லன்னா ,சின்ன பையன் எப்படி எல்லாத்தையும் செஞ்சு இருக்க முடியும்…கடவுளே எப்படியாவது இதுக்கு ஒரு நல்ல முடிவினை கொடு என  வேண்டிக்கொண்டார்…அப்போது அவரால் அதை மட்டுமே செய்ய முடிந்தது…

அப்போது வெளியில் இருந்து “திலகா…” என அழைக்கும் குரல் கேட்க..வெளியே சென்றார்…

அன்னலட்சுமியின் பெரியப்பாவின் பேரனும் ,பேத்தியும் வந்திருந்தனர்…அதாவது திலகவதிக்கு தம்பி மற்றும் அக்கா முறை ஆகிறது… கோவைக்கு வந்திருந்தவர்கள்  திலகவதியின் கணவர் கனகசபையின் இறப்பை கேள்விப்பட்டு துக்கம் விசாரிக்க வந்திருந்தனர்…

வாங்க முத்தக்கா…வாப்பா தமிழ்…வாங்க உள்ள வாங்க …என அவர்களை உபசரிக்க இருவரும் உள்ளே நுழைந்தனர்…

“உட்காருங்க…இதோ வரேன்…” என்றவர் குடிக்க தண்ணீர் கொண்டு வர, வாங்கி குடித்தவர்கள் கண்கள் வீட்டை பார்வையால் அளந்தது..

இருவரின் கண்ணிலும் ஒரு மெச்சுதல் தெரிந்தது…அதனை கண்டும் காணாதவும் பார்த்துக்கொண்டு இருந்தார் திலகவதி…

“நேத்து தான் விஷயம் தெரிஞ்சது…நான் வேலை விஷயமா வெளி ஊர் போயிட்டேன்…அக்கா இன்னைக்கு தான் சிங்கப்பூர்ல இருந்து வந்தாங்க,எங்களால் வர முடியல” என கூற திலகவதி ஏதும் பதில் கூறவில்லை…அமைதியாய் நின்றிருந்தார்…

“எப்படி திலகா.. நல்லா தானே இருந்தார்…என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா..??..”என முத்து விசாரிக்க..

“நல்லா தான் கா இருந்தாங்க, காலையில எழுந்து பால் கறந்துட்டு, ஜாடை ஓட்டினார்…பிறகு பரம்பு இழுத்துட்டு, நெல்லு நடவுக்கு உரம் போட்டுட்டு இருந்தார்…நல்லாவே வேலையாளுங்க கிட்ட பதில் சொல்லிட்டு இருந்தவர் அப்படியே அடுத்த நிமிஷம் குப்புற தண்ணியில விழுந்துட்டார்…அப்படியே உயிர் போயிடுச்சு..” என்றபடி புடவையின் முந்தானையை வாயில் பிடித்தபடி அழ…

நெஞ்சுவலியா தான் இருக்கும்ன்னு எல்லோரும் சொல்றாங்க…இன்ன வரை எப்பவுமே நெஞ்சு வலி வந்ததே இல்ல…முதல் முறை இப்போ தான்…”என்க.

தோளோடு அணைத்துக்கொண்ட முத்து “அழாத திலகா…போனவர் நிம்மதியா போயி சேர்ந்துட்டார்…நீ இப்படியே அழுது அழுது உடம்புக்கு ஏதாவது வர வச்சிக்காத.. பையன் எங்க காலேஜ் போயிட்டானா..”

“இல்ல கா…இங்க தான் இருக்கான்…லீவ் போட்டு இருக்கான்…இன்னும் ரெண்டு மூணு நாள்ல போயிடுவான்..” என்க.

“எங்க படிக்கிறான்..” என்றார் தமிழ்ச்செல்வன்.

“இன்ஜினியரிங் மூணாவது வருஷம்…இப்போ…”

“எந்த காலேஜ்..எங்க..” தமிழ்ச்செல்வன்

“XYZ காலேஜ்…கோயம்புத்தூர் தான்..”

ஓஹ்…அங்கவா..என்றவர் மேலும் எதுவும் கேட்கவில்லை…

அப்போது உள்ளே நுழைந்த நம்பிராஜன் ,புதியவர் இருவர் இருப்பதினை கண்டு வாசலிலே தயங்கி நிற்க..

“வா ராஜா..”என்று அவனை உள்ளே அழைத்த திலகவதி “இது தான் என்னோட மகன் நம்பிராஜன்…” என இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்க,அவர்களை கண்டு கை கூப்பி வாங்கினான் ராஜன்..

தமிழ்ச்செல்வன் அவனை ஏற இறங்க மெச்சுதலுடன் பார்க்க,நம்பிராஜனுக்கோ அவரின் எடைபோடும் பார்வை பிடிக்கவில்லை, முகத்தை திருப்பிக்கொண்டான் யாரும் அறியாவண்ணம்..

“இவங்க உனக்கு பெரியம்மா முறை ஆகணும் பேரு முத்து, இவங்க உனக்கு மாமா முறை ஆகணும் பேரு தமிழ்ச்செல்வன்” என்று இருவரையும் மகனுக்கு யார் என்று எடுத்துரைத்தார்…

“சரி அப்போ நாங்க கிளம்புறோம் திலகா…இன்னொரு நாளைக்கு வரோம்…” என்று கூறி முத்து கிளம்ப ஆயத்தமாக..

“அக்கா…என்ன இது,வந்த உடனே கிளம்புறேன்னு சொல்றீங்க..கொஞ்சம் இருங்க,சாப்பிட்டு போலாம்…” என அவர்களுக்கு விருந்தோம்பல் செய்ய,” இல்ல திலகா வரும்போது தான் சாப்பிட்டு வந்தோம்…எங்களுக்கு எதுவும் வேண்டாம்…தமிழோட பொண்ணை காலேஜ் சேர்த்த நாளைக்கு சென்னை போகணும்..”

“இப்போ போயிட்டு கிளம்பினா கரெக்ட்டா இருக்கும் திலகா…” என மறுப்பு கூற…

“அவங்க எல்லாம் எங்க இருக்காங்க…” திலகவதி

“எல்லாம் இங்க தான் அம்மா  வீட்ல.. வித்யாவுக்கு காய்ச்சல் அதுனால அவளை பார்த்துக்க சின்னவனை துணைக்கு வச்சிட்டு, நானு ,தமிழ்,பாப்பா மூணு பேரு மட்டும் வந்து இருக்கோம்…”

“அவளையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்ல கா…சின்ன குழந்தையா இருந்தபோது பார்த்தது..ஏன் தமிழ் அழைச்சிட்டு வந்து இருக்கலாம் இல்ல….”என ஆசையுடன் குறைபட….

“இன்னோரு நாள் கண்டிப்பா குடும்பத்தோட வரோம் கா…அங்க இருந்த பிள்ளைங்க கூட விளையாடிட்டு இருந்தா..அதுனால நான் அழைச்சிட்டு வரல” என்க..

“ஓஹ் அப்படியா..சரி சரி..ம் பாப்பா என்ன படிக்க போகுது…எந்த காலேஜ்…” 3ந விசாரித்தார்..

“எம்.பி.பி.எஸ் அண்ணா யூனிவர்சிட்டி..” என்றார் தமிழ்ச்செல்வன்..

“எம்.பி.பி.எஸ். ஆஹ்…பாப்பா பெரிய பாப்பா போல…ம்ம்ம்ம்…” என எண்ணிக் கொண்டான் நம்பிராஜன்…

“டாக்டர்க்கு படிக்க போகுதா…ஹ்ம்ம்…நல்ல படிப்பு தான்..எனக்கு பிறந்ததும் தான் இருக்கே…படிக்க போக மாட்டேன்னு சர்வாதிகாரம் பண்ணிக்கிட்டு…” என்று எண்ணியவர் நம்பிராஜனை பார்க்க,அவனும் அவரை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்…

“இந்த அம்மா என்னவோ மனசுல  நினைக்குது போலவே..”என எண்ணியவன் “என்னவாய் இருக்கும் என யோசிக்க துவங்கினான்…அவனின் யோசனையை கலைத்தது தமிழ்செல்வனின் அலைபேசி பாடல்….

“ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை


உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி..”

அழைப்பை கண்டதும் பரபரப்பானவர் ,அதனை ஏற்று காதில் வைத்தவர் “சொல்லு டா குழல் …இன்னும் இல்ல டா..அவ்ளோ தான் கிளம்பிட்டோம்…இதோ உடனே வந்துற்றேன்…சரி டா..சரி சரி…கண்டிப்பா…மறக்க மாட்டேன்..” என்றவர் “அக்கா போலாமா …” என அவசரப்பட..

“என்ன தமிழ் ..சாப்பிட்டு போலம்ன்னு சொல்லிட்டே இருக்கேன்..இப்படி கிளம்புறேன்னு சொல்றியே…கொஞ்சமா இரு சாப்பிட்டு போலாம்…பத்து நிமிஷத்துல ரெடி பண்ணிற்றேன்..” என்ற திலகவதி  சமையல் அறைக்குள் செல்ல முயல..

திலகத்தை இழுத்து பிடித்துக்கொண்ட முத்து “ அய்யோ…எதுவும் வேண்டாம் திலகா…நாங்க கிளம்புறோம்…தமிழுக்கு போன் வந்தாச்சு…இனி ஒரு நிமிஷம் லேட் பண்ணாலும், என் தம்பி மக நொடிக்கு ஒரு முறை போன் போட்டிட்டே இருப்பா…நாங்க கிளம்புறோம் திலகா..”

“உடம்பை பார்த்துக்கோ…கோவைக்கு வந்தா கண்டிப்பா உங்களை வந்து பார்க்குறேன்…” என்றவர் திலகத்திடம் விடைபெற..

தமிழ்செல்வன் நம்பியிடமும், திலகவதியிடமும் விடைபெற்று செல்வதர்குள் மீண்டும் ஓர் அழைப்பு குழலிடம் இருந்து…

“இங்க பாருங்க கா திரும்பவும் குழல் போன் பண்றா..இவளை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகுது…” என வார்த்தையில் மட்டும் தான் புலம்பலே ஒழிய முகம் முழுவதும் பெருமிதத்தில் பூரித்து போய் இருந்தது…

போனிலே மகள் ஆர்டர் செய்திருந்த ஐஸ்க்ரீமை வாங்க வேண்டும்…வேகமாய் வண்டியை செலுத்தினார்…மெதுவா போ தமிழ்.. எதுக்கு இவ்ளோ வேகம் என சொல்லிய அக்காவின் வார்த்தைகள் எல்லாம் காற்றோடு கரைந்தே போனது…

கடைக்கு சென்று ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு ,வீட்டிற்க்குள் நுழைவதர்குள் ,அப்பப்பா…..என அவள் ஓடி வந்து அவரின் கழுத்தை கட்டிக்கொண்டவள் ,அவரின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் பதித்தாள்…

தந்தையின் கையில் இருந்த ஐஸ்கிரீமை கண்டவள் ,மேலும் சில முத்தங்களை அன்பு பரிசாய் வாரி வழங்கிவிட்டு ,கையில் இருந்ததை பறித்துக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்….

“ரொம்ப செல்லம் குடுக்குற தமிழா…வயசுக்கு வந்த புள்ள இப்படி தான் இடம் ,பொருள், ஏவல் தெரியாம நடந்துக்குறதா…என்னத்தை சிட்டியில வளர்ந்து என்னத்தை பண்ண போகுதா…” என வெள்ளையம்மாள் ,தமிழின் அம்மா புலம்ப…

“அம்மா சும்மா புள்ளைய வையாதீங்க…பிறகு எனக்கு கோவம் வந்திடும்…சின்ன புள்ள அப்படி தான் இருக்கும்.. சும்மா எதையாவது பேசி அவளோட மனசை கஷ்டப்படுத்திடாதீங்க… நாளைக்கு அவ அங்க காலேஜ் போகணும்…” என்றவர் மகளின் அருகே சென்றார்…

மும்மரமாய் யாருக்கும் தராமல் அவளே மூன்று டப்பா ஐஸ்கிரீமை முழுங்கி,நான்காவது டப்பாவை உள்ளே தள்ளி க்கொண்டு இருக்க,அவளின் அருகே வந்த தமிழ் அவளை சிரிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார்…

அவளின் மூக்கு கன்னம்,வாய் என அனைத்துக்கும் ஐஸ்கிரீமால் அபிஷேகம் நடைபெற்று கொண்டு இருக்க ,அவள் உடுத்தி இருந்த உடையிலும் புறங்கையில் இருந்து ஒழுகிய ஐஸ்க்ரீம் அபிஷேகம் நடத்திக்கொண்டு இருந்தது…

தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த தந்தையை கண்டவள் “உங்களுக்கும் வேணுமா..”என்பது போல் ஐஸ்கிரீம் இருந்த டப்பாவை அவரின் முன் நீட்டி கேட்க, வேண்டாம் என்பது போல் மறுப்பாய் தலையசைத்தவர் “நீ சாப்பிடு …” என்றார் சைகையில்..

அவரை அருகே  வரும்படி அழைத்தவள் ,அவரின் கன்னங்களில் தன் ஐஸ்கிரீம் இதழ்களால் முத்தத்தை பதித்தாள்…

சிரிப்புடன் அதனை ஏற்றுக்கொண்டவர் ,அவளின் நெற்றியில் மென்மையாய் இதழ் ஒற்றிவிட்டு அறைக்கு சென்றார்…

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல என்று…

அதன் பின் முத்து தமிழை சாப்பிட அழைக்க, வெளியில் வந்த தமிழ் மகள் இன்னும் ஐஸ்கிரீமை சாப்பிட்டு கண்டு இருப்பதை கண்டு “இன்னும் முடியலையா குழல்…சிக்கிரம்மா, சாப்பிடலாம் எனக்கு பசிக்குது” என்க..

“இன்னும் கொஞ்சம் தான் இருக்கு பா..ப்ளீஸ் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, என்றவள் சாப்பிடுவதில் தீவிரமானாள்.. விட்டால் அத்தை இதை எடுத்து ப்ரிஜ்ஜில் வைத்து விட சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தில் சாப்பிட துவங்கினாள்..அந்த நேரம் தமிழின் அலைபேசி இசைக்க ,பார்த்தவர் அக்காவின் கணவர் சிங்காரம்  என்றறிந்து யோசனையுடன் அதனை ஏற்று காதில் வைத்தார்..

“சொல்லுங்க மாமா…நல்லா இருக்கீங்களா..”

“நான் நல்லா இருக்கேன் மச்சான்…நீங்க எப்படி இருக்கீங்க.. தங்கச்சி எப்படி இருக்கு…” என நலம் விசாரித்தார் சிங்காரம்.

“நான் நல்லா இருக்கேன் மாமா….எல்லோரும் நல்லா இருக்காங்க..” என்றவர் “ ஏதாவது முக்கியமான விஷயமா மாமா…எனக்கு கூப்பிட்டு இருக்கீங்க.. அக்காவுக்கு கூப்பிடாம “ என்க..

“என் மச்சான் ரொம்ப ஷார்ப் டா…உன்னோட அக்கா நம்பர்க்கு கூப்பிட்டேன் ,எடுக்கவே இல்ல,அதான் உனக்கு கூப்பிட்டேன்.. எங்க உன்னோட அக்கா போனை கூட எடுக்காமல் என்ன வேலை செய்றா..” என்க

“அக்கா சமையல் கட்டுல இருக்காங்க மாமா…போன் ரூம்ல இருக்குமாக்கும்.. இருங்க நான் குடுக்குறேன்..” என்ற தமிழ் அலைபேசியுடன் அக்காவிடம் விரைந்தார்…

பாத்திரங்களை தேய்த்து கொண்டு இருந்தவர் ,தமிழின் வருகையை கண்டு நிமிர,”மாமா லைனில் இருக்காங்க கா…உன்கிட்ட பேசுணுமாம்.. பேசிட்டு சீக்கிரம் வா,அப்படியே போன்லையே உட்கார்ந்திடாத, நானும் குழலும் இன்னும் சாப்பிடல, எங்களை பட்டினி போட்டிடாத ,என்றவர் அக்காவின் கையால் இரு அடியையும், மாமாவின் “போடா டேய் போடா,எப்போ பாரு எதாவது ஒண்ணை சொல்லிட்டு..” என செல்ல கோவத்தினையும் பெற்றுக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்…

அப்போது வாயிலில் “தாத்தா, தாத்தா..ஆச்சி.. “ என எவரோ அழைக்கும் குரல் கேட்க,யார்வென்று பார்க்க தமிழ் வெளியே சென்றார்…

வாசலில் இருந்தவனை கண்டு மெல்லியதாய் மில்லி மீட்டர் அளவிற்க்கு இதழை இழுத்து காட்டியவர்  யோசனையுடனும், என்ன தம்பி இவ்ளோ தூரம் என்க..

அவரை “உங்களை மீண்டும் பார்க்கணும் போல இருந்ததது அதான் வந்தேன்..” என மனதிலே பதிலுரைத்து  முறைத்தவன் ,அவரை பார்த்து லேசாக சிரித்தான்..

பின் “பெரியம்மா ..,போனை அங்கவே விட்டுட்டு வந்துட்டாங்க, ரொம்ப நேரம் அடிச்சிட்டே இருந்து இருக்கும் போல,நானும் அம்மாவும் தோட்டத்துக்கு பக்கம் போய் இருந்தோம்..வந்து பார்த்தா டேபிள் மேலே இருந்தது…அம்மா உங்ககிட்ட குடுத்துட்டு வர சொல்லி அனுப்பி வச்சாங்க..” என்றவன் அலைபேசியை அவரின் கையில் கொடுக்க..

“ஓஹ் அப்படியா,அக்கா போனை எடுக்கலைன்னு சொல்லி மாமா இப்போ தான் என் கிட்ட கூப்பிட்டு பேசினாங்க,இந்த அக்கா இப்படியா மறந்துட்டு வரும்.,” என தன் போக்கில் பேசியவர் ,நீ உள்ள வா..என அவனை அழைத்துவிட்டு உள்ளே சென்றார்..

அவனுக்கு உள்ளே செல்ல தயக்கமாய் இருக்க,சில நிமிடம் வெளியிலே நின்றுவிட்டான்..பின்னாடி இருந்து தன் முதுகில் ஒரு பலமான அடி இல்லையில்லை இடி போல் ஒரு அடி விழ, “ ஆஹ்….” என்ற அலறலுடன் திரும்பியவன்,தன் முன்னே சிரிப்புடன் நின்றிருந்தவரை முறைக்க துவங்கினான்..

“என்னடா முறைக்கிற.. அடி எப்படி இடி மாதிரி இருந்ததா..” என தன் மீசையை முறுக்கியப்படி கேட்க “ உங்களுக்கு கொழுப்பு ஏகத்துக்கும் கூடி போச்சு..அப்புறம் அடி இடி மாதிரி விழாம ,எப்படி விழும்.. பெரிய சண்டி வீரர் கணக்கா ,சாகசம் பண்ண மாதிரி மீசையை முருக்கிவிடுறீர், புள்ள பூச்சியை நசுக்குற நீங்க எல்லாம் என்ன சண்டி  வீரரோ..” என கடுப்புடன் கூற

“டேய் பொடி பயலே ,என்னையே கிண்டல் பண்றியா, எவ்ளோ தைரியம் உனக்கு,யார் குடுத்த தைரியம்..” என கோவத்துடன் உறும (?)

“உங்களை நான் கிண்டலும் பண்ணல, சுண்டலும் பண்ணல,.. அப்புறம் என்ன கேட்டீங்க யார் குடுத்த தைரியமா…எல்லாம் சண்டி வீரர்1 காத்தவராயன் குடுத்த தைரியம் தான்..” என்றுவிட்டு ஓட்டம் பிடிக்க…

“அடேய்….பொடி பையா.. என் பேரையே என் முன்னாலே சொல்றியா..உனக்கு அழுத்தமும் ,தைரியமும் ஜாஸ்த்தி தான் டோய்…இரு வரேன்…உன்னை…” என பிடிப்பது போல அவரும் பின்னாலே வர ,கையில் அகப்பட்டுவிட கூடாது என்று ஓடியவன் ,தரையில் இருந்த தண்ணீரை கவனிக்காது காலை வைத்துவிட, அப்படியே பளிங்கு கல்லில் கால் வழுக்கி “ அம்மாமாம்மா….” என்ற சத்தத்துடன்  கீழே விழுந்தான்…

என்னில் அவள்

மெய்யெழுத்தோ…அல்லது

உயிரெழுத்தோ..அல்லது

உயிர்மெய்யெழுத்தோ….!!!

இருதயப் பூவின் மொழி தொடரும்..

 

Advertisement