Suganya Vasu’s – இருதயப் பூவின் மொழி
அத்தியாயம்: 6
பிரம்மனின் படைப்பினால்
ஆன
மெர்குரி சிலையோ
அவள்..!!
தாய் தன்னுடைய முடிவில் இருந்து மாறமாட்டேன் என்ற பிடிவாதத்துடன் இருக்க,யார் சொல்லியும் கேட்கும் மனநிலையில் சிறிதும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது நம்பிராஜனுக்கு…
அவனின் தாத்தா, அவன்,அன்னலட்சுமி,ஊரார் ஒரு சிலர் என அனைவரும் தங்களுக்கு தெரிந்தது போல பல வழிகளில் சமாதானப்படுத்த முயல இருக்கும் நிலையில் இருந்து சிறிதும் இறங்கி வர அவர் நொடி கூட விரும்பவில்லை….
அன்னையின் வார்த்தைகள் வேறு அவரை மனதில் பாடாய் படுத்துக்கொண்டு இருந்தது…அவரின் ஏச்சுக்களை கேட்டப் பின்னும் அங்கு செல்வது அவருக்கு உசிதமாய் இல்லை…
இப்போதே இவ்வளவு பேசியவர் ,நாளுக்கு நாள் அவருடன் ஒரே வீட்டில் இருந்தால் என்னன்ன பேச்சுகளும்,வசவுகளும் வருமென ஊகித்தவரால் , அங்கு செல்ல துளியும் விரும்பவில்லை..
இப்போதும் அவரின் ஏச்சுக்கள் குழவியின் ரீங்காரம் போல காதருகே ஒலிப்பது போல இருக்க,கண்களை இறுக மூடிக்கொண்டார்… இறந்தும் அவரை விடாமல் ஏச வேண்டுமா என கத்த வேண்டும் போல இருந்தது…
இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அப்போது அமைதியாய் இருந்தார்..
“நான் என்ன பாவம் பன்னேனோ, என் மகளுக்கு இப்படி ஒரு சோதனை…இப்படி அல்ப ஆயிசுல என்னோட மகளை தனியா தவிக்கவிட்டு போயிட்டானே…என்ன நோவு இருந்தோ என்னவோ, நல்லா இருந்த மனுஷன் எப்படி தீடீர்ன்னு சாக முடியும்…என்னவோ தெரியல…” என்றப்படி தன் போக்கில் வாய்விட்டு புலம்பி கொண்டு இருந்த அன்னலட்சுமி
“அம்மாமாமா…..”என்ற சத்தத்தில் விதிர்த்து போய் திரும்பினார்…
திலகவதியின் முகம் கோவத்தால் ரத்த நிறம் கொண்டிற்று…தன் கணவனை அன்னை இப்படி கூறியது ரத்த அழுத்தத்தை எகுறச் செய்வதாய்…
“உங்களுக்கு இங்க இருக்க பிடிக்கலன்னா..நீங்க தாராளமா உங்க வீட்டுக்கு போயிட்டே இருக்கலாம்…அவரோட வீட்டுக்கே வந்து அவரை பத்தியே தப்பா பேச உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது..யாரும் உங்களை இங்க இருக்க சொல்லி கட்டாயப்படுத்தல..இனி ஒரு முறை இப்படி அவரை பத்தி தப்பா பேசுனீங்க அப்பறம் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்…..” என்றவர் கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியப்படி நின்று இருக்க…
தந்தையின் அழைப்பை கேட்டு,திலகவதி வெளியே வர அவருடனே பதப்பதைப்புடன் வெளியே வந்தார் அன்னலட்சுமி..
ஆனால் எதற்கும் திலகவதி ஒத்துவராமல் போக, தான் பேசியது தான் ,இவள் மறுப்பதற்கு காரணமோ என எண்ணியவர் ,எதுவும் பேசவில்லை…தனது கணவனுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என எண்ணியவர் இம்மியும் வெளியில் மூச்சு விடவில்லை…ஊரின் முன் வேண்டுமானால் அன்னலட்சுமி ராங்கியாய் இருக்கலாம் ஆனால் கணவனின் கோவத்தின் முன்பு அவர் ஒரு பெட்டி பாம்பே…
தாயிடம் தனியாக இதனை பற்றி பேசவேண்டும் என நினைத்துக்கொண்டவன் ,தனது தாத்தாவிடமும் “நான் ஒரு முறை அம்மாவிடம் மீண்டும் பேசி பார்க்கிறேன் தாத்தா… இல்லையென்றால் வேறு ஏதாவது யோசிப்போம்..”என சொல்லி இருந்தான்…
இன்னும் ஐந்து நாட்களில் கல்லூரிக்கு செல்லும் படி இருப்பதால், அதற்க்குள் அன்னையிடம் பேசிட வேண்டும் என மனதில் குறித்துக்கொண்டான்…
காரியம் முடிந்து உறவினர்கள் அனைவரும் சென்று இருக்க,அவனின் தாத்தா மற்றும் பாட்டி அன்னலட்சுமி இருவரும் மட்டுமே அந்த வீட்டில் சொந்தமென எஞ்சி இருந்தனர்…பிறகு அவர்களும் விடைபெற்று செல்ல அன்னையும் மகனும் மட்டுமே அந்த வீட்டில் …
திலகவதி கனகசபையின் புகைப்படம் அருகே அமர்ந்துக்கொண்டு கணவனின் முகத்தினை பார்த்த வண்ணமே அமர்ந்திருந்தார்… கண்களில் கண்ணீர் நிறைய துவங்கி,கன்னத்தில் வழிய துவங்கியது…
காலையில் சிரித்து பேசிய கணவன்,இப்போது தன்னுடன் இல்லை என்ற நிதர்சனம் அவருக்கு நெஞ்சின் மேல் வைத்த கல்லாய் மனமெல்லாம் கனத்து போனது…
நாட்கள் அதன் போல கரைய,சுப்பையாவும்,அன்னலட்சுமியும் மட்டும் மாலை வேலையிலும், காலை வேலையிலும் வந்து பார்த்து சென்றனர்…
இன்னும் நாளை மறுநாள் கல்லூரி மீண்டும் துவங்குவதால் , நாளைக்கு கல்லூரிக்கு செல்ல வேண்டும் எனவே அதற்க்குள் அம்மாவிடம் பேசி சம்மதிக்க வைத்திட வேண்டும் என எண்ணி கொண்டான்…
பேசும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தான்…தோட்டத்தில் வேலை செய்யவென ஒரு ஆளும்,மாடுகளை கவனித்து கொள்ளவென ஒரு ஆளையும் சுப்பையா ஏற்பாடு செய்து இருந்தார்…
அவர்களே அனைத்து வேலைகளையும் கவனித்து கொள்ள, திலகவதிக்கு வீட்டு வேலை மட்டுமே எஞ்சி இருந்தது…துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது, சமளிப்பது என எளிய வேலைகளே…இருந்தும் அதனை கூட தெளிவான மனநிலையில் செய்ய முடியவில்லை அவரால்…
இழப்புகள் வாழ்வில் எவ்வளவு பெரிய மனவலியை கொடுக்கிறது…இருந்தும் பிறப்பு இறப்பு என்பது நாம் தீர்மானிப்பதா.. இறைவன் தீர்மானிப்பதாயிற்றே…
அவன் ஆட்டிவிப்பது போல் ஆடும் பொம்மைகளே நாம்…அவன் ஆட்டுவிக்கிறான், நாம் ஆடுகிறோம் அவ்வளவே…
“அம்மா……அம்மா….மா…”என்ற அழைப்புடனே உள்ளே நுழைந்த நாகராஜனை கண்டவர்…
“என்ன ராஜா…எதுக்கு இப்படி கத்திட்டு வர…நான் இங்கே தானே இருக்கேன்…சொல்லு..”என்றவர் துணிகளை மடிக்க துவங்க…
“இங்க என்ன மா..பண்றீங்க…உங்களை யாரு இதெல்லாம் செய்ய சொன்னது….”என திட்டிக்கொண்டே அவரை எழுப்பியவன் “நீங்க முதல்ல வெளிய வாங்க…”என்றபடி அவரை வம்படியாய் கையை பிடித்து இழுத்தபடி ஹாலுக்கு அழைத்து வந்தவன் அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான்…
“ஐயோ….கையை விடு ராஜா…கை வலிக்குது…” என்று அவனின் பிடியில் இருந்து கையை உருவிக்கொண்டவர் மணிக்கட்டை கைகளால் தேய்த்துக்கொண்டார்…
அவன் சற்று இறுகி பிடித்திருந்ததால் அவரின் சிவந்த கையின் மணிக்கட்டில் ரத்த நிறத்துடன் மேலும் சிவந்துவிட்டு இருந்தது…
அவரின் முக சுணக்கத்தை கண்டவன் “சாரி மா…ரொம்ப சாரி மா….மெதுவா தான் பிடிச்சேன்…கடைசியில என்னையே அறியாமல் கை இறுகி போயிடுச்சு…ரொம்ப வலிக்குதா …சாரி மா…நான் வேணும்ன்னா தேய்ச்சு விடவா…”என சொல்லிக்கொண்டே அவரின் கையின் பிடித்து மெதுவாய் நீவி விட..
அவரின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் ,கைகளில் பட்டு சிதறியது….
தனது கையின் மேல் விழுந்த கண்ணீரை கண்டு பதறியவன் “அம்மா…ம்ஆ…ரொம்ப வலிக்குதா.. சாரி மா..நான் ஒரு முட்டாள், கையை ரொம்ப அழுத்தி பிடிச்சுட்டேன்.. சாரி மா…” என கெஞ்ச…
“ஷ்ஷ்ஷ்…ராஜா…என்னது இது…எனக்கு ஒண்ணுமில்ல.. உன்னோட அப்பாவும் இதே மாதிரி தான், நான் கொஞ்சம் முகம் சுணங்கினா போதும்.. என்னோட கால் அடியில உட்கார்ந்து என்னோட கையை நீவி விடுவார்…அவரு இப்போ இல்லன்னு என்னால ஏத்துக்கவே முடியல ராஜா…”என்றப்படி அவனின் தோள் மீது சாய்ந்து அழத் துவங்க…
அவனின் கண்களிலும் கண்ணீர் கோர்த்துக்கொண்டது…அம்மா…ப்ளீஸ் மா..அழாதீங்க மா….”என தேற்றியவனும் அவரின் கூடே சேர்ந்து அழத் துவங்க…ஆற்றுவார் தேற்றுவார் அன்றி இருவரும் ஒருவர் தோளில் சாய்ந்து கண்ணீர் உகுக்க துவங்கினர்…
தந்தையின் இழப்பு அவனை வெகுவாய் பாதித்து இருந்தது…கண்ணீரில் கரைவதற்க்கு கூட அவனுக்கு போதுமான நேரம் இல்லை என்பதை விட,சுப்பையா வந்த பிறகு அவனது நேரத்தை அவர் விழுங்கிக்கொண்டார் …
வயது முதிர்ச்சியினால் அனைத்து வேலையும் அவரால் செய்ய இயலாமல் போக,சில வேலைகளை இவனின் உதவிக்கொண்டு முடித்துக்கொண்டார்…அதனால் அவனுக்கு போதிய நேரம் கிட்டவில்லை..அதன் பிறகும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன அவனுக்கு…தாத்தாவின் கட்டளையின் பேரில் அனைத்தையும் செய்தான்…
எவ்வளவு நேரம் கரைந்தனரோ …முதலில் சுதாரித்து தன்னை தேற்றிக்கொண்ட திலகா “ராஜா…போதும் அழுதது…எழுந்திரு…”என அவனை எழுப்ப முயல..”மீண்டும் அவரின் மடியிலே தலையை ஆழ புதைத்துக்கொண்டவன்…ஏம்மா… இப்படி ஆச்சு…அப்பா மட்டும் தனியா விட்டுட்டு போயிட்டார்…அப்பாவை நினைக்காம இருக்க முடியல மா..நைட் கனவுல எல்லாம் அப்பாவே வரார்…எனக்கு தூக்கமே வரல மா…எனக்கு அவர் நினைப்பாவே இருக்க மா…மனசு அவரை ரொம்ப தேடுது மா…”என சொல்லி அழ…
திலகவதிக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது…என்ன பாவம் பண்ணோம் நாங்க ரெண்டு பேரும்…எங்களுக்குன்னு இருந்த ஒரே சொந்தத்தையும் வேரோட பிடிங்கிட்டு போயிட்டயே… என மனதில் ஊமையாய் அழுதவர்..
மகன் அழுவதை பார்த்து ,தானும் அழுதால் மனளவில் மிகவும் உடைந்து போவான் என எண்ணி,கண்களை புறங்கையால் அழுந்த துடைத்துக்கொண்டவர்,”ராஜா…இங்க பாரு….” என அவனின் முகத்தை நிமிர்த்தி தன் கண்களை காண செய்தார்,பின் அவனின் கண்களை ஆழ நோக்கி “அப்பா நம்பள விட்டுட்டு எங்கவும் போகல…நம்ப கூடவே தான் இருக்காங்க…அவரால நம்பள விட்டுட்டு எங்கவும் போக முடியாது… அப்பாவோட ஆத்மா எப்பவும் நம்மளை சுத்தியே தான் இருக்கும்…” என அவனை தேற்ற முயன்றார்…
“நீ இப்படி அழுதா அப்பாக்கு பிடிக்குமா..”என்ற அவரின் கேள்விக்கு அவனிடம் இல்லை என்பதுபோல தலையசைப்பு கிடைக்க…அப்போ ஏன் இப்படி அழுதிட்டு உட்கார்ந்து இருக்க… முதல்ல நீ எழுந்திடு….”என்றவர் அவனை எழுப்பி தன் அருகில் அமர்த்திக்கொண்டார்…
பின் அவனை திசை மாற்றும் பொருட்டு “எதுக்கு என்னைய கூப்பிட்டுட்டே வந்த…”
“இல்ல…ஒண்ணும் இல்ல…சும்மா தான்…” ராஜன்
“என்னன்னு சொல்லு பா…ஏன் தயங்குற…” திலகவதி
“அது வந்து மா..உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…அதான்..” என்றான் அவரின் முகம் பார்த்தபடி…தான் சொல்லப்போவதை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்ற தயக்கம் மனதினுள்…
“என்ன விஷயம் பா…சொல்லு…” என ஊக்கினார்..
“நாளைக்கு மறுநாள் காலேஜ் ஓபன் ஆகுது மா..”
“அது தான் தெரியுமே…வேற என்ன சொல்லு…”மகன் ஏதோ சொல்ல வந்து,எதையெதையோ பேசுகிறானோ என்னவோ என தோன்றிற்று அவருக்கு…
“நாளைக்கு மறுநாள் நான் காலேஜ் போகனும்மா.. அதுக்கு நாளைக்கு இங்க இருந்து கிளம்பினா தான் ,அடுத்த நாள் காலையில போக முடியும்..”
“சரிப்பா…ட்ரஸ் எல்லாம் எடுத்து வைக்கணுமா…அம்மா எல்லாம் எடுத்து வச்சிற்றேன்…உனக்கு என்ன வேணுமோ சொல்லு ரெடி பண்ணி வச்சிற்றேன்…” என்றார் அவனை நோக்கி…
“இல்ல மா..அதெல்லாம் வேண்டாம்..நீங்களும் நாளைக்கு என்னோட காலேஜ் வாங்க..”
“உன்னோட காலேஜ்க்கா, எதுக்கு பா…ஏதாவது பிரச்சனையா..??..” அவருக்கு சற்று பயமாய் இருந்தது…ஏதாவது செய்ய கூடாத தவறு செய்துவிட்டானா…அய்யோ கடவுளே இது என்ன சோதனை..
“நீங்க நினைக்குற மாதிரி பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்ல மா…காலேஜ்ல இருந்து டீஸி வாங்கணும்…நீங்களும் கூட வந்தா தான் வாங்க முடியும்…அதான் உங்களை வர சொல்றேன்…”
“டீஸி யா …எதுக்கு…ஏன் இப்போ டீஸி வாங்கணும்….ராஜா…என்னை டென்ஷன் பண்ணாத…எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு பேசுற…நேரடியா விஷயத்துக்கு வா…எனக்கு சொல்றதை கேட்டா மண்டையே வெடிச்சிடும் போல…”என சிறிது கோவத்துடன் கத்த துவங்க…
அவரை பயத்துடன் பார்த்தவன் “நான் அங்க படிக்கல மா…இங்கவே வேற ஏதாவது காலேஜ் சேர்ந்துக்குறேன்…உங்க கூடவே இருக்கேன் .. உங்களுக்கு துணையா இங்கவே இருக்கேன்…ப்ளீஸ் மா…”என கெஞ்சத்துவங்க…
அவனின் பதிலில் விக்கித்து போய் நின்றார்…இவன் இப்படி எல்லாம் யோசித்தானா…அந்த அளவிற்க்கு நாம் அவனை கண்டுகொள்ளாமல் விட்டோமா…இவனின் சிந்தனை இப்படியே சென்றால் ,நிம்மதியாக படிக்க மாட்டான்..பழையப்படி சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி தன்னை கட்டாயப்படுத்துவான்..
எப்படியாவது இவனின் மனதை மாற்றிட வேண்டும் என முடிவு எடுத்துக்கொண்டார்..”ராஜா..தேவையில்லாம நீ கண்டதையும் போட்டு குழம்பிக்கிற..”என மேற்க்கொண்டு ஏதோ சொல்ல வர…
“நீங்க ஒண்ணும் எனக்கு கண்டது இல்ல மா…” என்றான் அவனோ கோபமாக…
“சரி…தப்பா சொல்லிட்டேன்…சாரி….”என்றவர் ,அவனின் முகம் கண்டு மேலும் தொடர்ந்தார் “இங்க பாரு ராஜா…உன்னோட அப்பா எவ்ளோ ஆசையா,உன்னை அந்த காலேஜ்ல சேர்த்தினாங்க.. நீ இப்படி பாதியிலே வேற காலேஜ் போறேன்னு சொல்ற…இது மூணாவது வருஷம்.. இப்போ போய் மாற முடியுமா…அப்படி நீ மாறனும்ன்னு நினைச்சா,நீ புதுஷா வேற படிப்பு தான் படிக்கணும்…”
“அப்பா ஆசை உன்னோட லட்சியம் இல்லையா…” என்று அவனை மடக்க பார்க்க…
“என் அம்மாவோட பாதுகாப்பு என்னோட கடமை இல்லையா ..”என மகன் அவருக்கு சளைத்தவன் இல்லை என நிரூபிக்க…
இடுங்கிய கண்களுடன் அவனை நோக்கியவர் “என்னோட பாதுகாப்புக்கு அப்படி என்ன வந்ததை நீ கண்டுட்ட…” என்றார் கோபமாக…
“அப்படி எதுவும் வந்திடக்கூடாதுன்னு தான் பயப்பற்றேன்…என்னோட நிலைமை உங்களுக்கு புரியல மா..உங்களை இங்க தனியா இப்படி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல விட்டுட்டு ,என்னால அங்க நிம்மதியா இருக்கவும் முடியாது,படிக்கவும் முடியாது…இப்போ எல்லாம் ஐபோன் க்கே கொலை பண்ற காலமா ஆகி போச்சு…” என்க…
“அதுக்கு என்ன பண்ணலாம் ..”என்றார் அவர் மனதுக்குள் ஏதோ அவன் திட்டம் தீட்டி இருப்பதாகவே அவருக்கு தோன்றியது…
“நீங்க என் கூடவே கோயம்புத்தூர் வந்திடுங்க…என் கூடவே இருங்க…”
“அப்புறம்…உன்னோட காலேஜ் பீஸ்,சாப்பாடு,வாடகை..”எல்லாம் என்ன பண்றது ராஜா…திலகவதி
“நான் வேலைக்கு போறேன் மா..பார்ட் டைம் வேலைக்கு போனா மாசா மாசம் ஆறு இல்ல ஏழு ஆயிரம் வரும்…அது போதாதா நமக்கு…” என்றான் இலகுவாக…
அவனின் கூற்றில் கவலை மறந்து சிரிக்க துவங்கியவர் “உன்னோட தன்னம்பிக்கை பார்க்கும் போது பெருமையா இருக்கு ராஜா…ஆனா வீட்டு வாடகைக்கே நாலு ஆயிரம் போயிடும்…சாப்பாட்டுக்கு மாசம் ரெண்டாயிரம்,மிச்ச ஒரு ஆயிரத்துல உன்னோட ஒரு வருஷ காலேஜ் பீஸ் கட்ட முடியுமா…”என்றவர்..
“இது விளையாட்டு வேலை இல்ல ராஜா…தேவையில்லாம எதையாவது யோசிச்சு ,குழம்பிக்காத..போய் வேற வேலை இருந்தா பாரு..”என்றவர் தன்னுடைய வேலையை செய்ய செல்ல முனைய…
“அம்மா…நான் சொல்றதை கேளுங்க…நீங்க என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்…நான் சொல்றதை நீங்க செஞ்சு தான் ஆகணும்…”என அவன் கத்திக்கொண்டு இருக்க ,எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அறைக்குள் சென்றுவிட்டார்…
இரண்டு நாட்களில் சமாதானம் ஆகிவிடுவான் என எண்ணி இருந்ததற்கு மாறாக ,நம்பிராஜன் அவனின் முடிவில் உறுதியாய் இருந்தான்…
கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என சிறுபிள்ளை போல் அடம் பிடிக்கும் நம்பிராஜனை சமாளிக்க முடியாமல் தினறித்தான் போனார் திலகவதி…
சாப்பாடும் ஒழுங்காக சாப்பிடாமல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள,முதலில் அசட்டையாய் விட்டவர் மூன்று வேளைக்கும் அதே தொடர தவித்து போனார்…
பசி தாங்க மாட்ட ராஜா…ஒழுங்கா சாப்பிடு…இது என்ன பிடிவாதம்…என கெஞ்சலுடன் உணவினை அவனுக்கு ஊட்ட முயல…
வேண்டாம் என தட்டை புறந்தள்ளியவன் ஒரு பருக்கை கூட உண்டான் இல்லை…
எதுக்கு இப்படி வீண் பிடிவாதம் பிடிக்கிற.. சாப்பிட்டு எதுவானாலும் பேசிக்கலாம்..என கூறியவர் அவனின் வாய்க்கு அருகே உள்ள சோற்றை கையில் அள்ளி எடுத்து ஊட்டச் செல்ல..
வாங்க மறுத்தவன் “உங்க பிடிவாதம் எனக்கும் கொஞ்சம் இருக்கட்டும் மா…நீங்க ஒத்துக்குற வரைக்கும் இப்படி தான் நா இருப்பேன்..” என்றவன் சட்டமாய் சோபாவில் அமர்ந்துக்கொண்டான்…
உதிரம் உருகுதடி
என் கண்ணில்..
உந்தன் கண்ணீரை கண்டு..
இருதயப் பூவின் மொழி தொடரும்…