Suganya Vasu’s – இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் -2:
நட்பெனும் தோரணத்தை
தொடுத்திட்டிட
ஆசை கொண்டது
இந்த பிஞ்சு மனது..
நஞ்சொன்றை விதைத்து
போனது உறவு…
இருக்கையில் அமர்ந்திருந்தவளின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது…அவளை கண்ட சுரேஷிற்கு பாவமாய் இருந்தது…முகம் கசங்கி போய் நடப்பதை ஜீரணிக்க முடியாமல் ,அழுது அழுது சிவந்து போய் இருந்தது அவளின் முகம்…
கனியினை பார்த்தவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை….இவன் முட்டாள் போல நடந்து கொள்வான் என கனவிலும் சுரேஷ் நினைக்கவில்லை…
என்ன பிரச்சனை என்று அவனாலும் ஊகிக்க முடியவில்லை…அதுவும் தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்க்கு என்ன நேர்ந்தது…அவ்வளவு மனஉளைச்சலில் இருந்தானா…நாம் தான் அவனை கவனிக்க மறந்துவிட்டோமோ என்று குற்றவுணர்வாகி போனது….
என்ன பிரச்சனை என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், தன்னால் ஆனதை அவனும் முயற்சி செய்து இருப்பானே…அப்படி நினைக்கும் போதே அவனுக்கும் மனம் கசந்தது…ஏழை குடும்பத்தில் பிறந்து ,உதவாத அப்பா,உழைக்க உடம்பில் தெம்பில்லாத நோயாளி அம்மா , ஊதாரியாக ஊர் சுற்றும் அண்ணன்…அனைவரின் வாசமும் திருப்பூர் மாவட்டத்தில்…
இவன் மட்டும் இங்கே…தன்னால் முயன்ற டைலரிங் வேலை செய்து சம்பாதித்து தாய்க்கு தேவையான மருத்துவ செலவை பார்ப்பவன்… ஆஹா ஓஹோ என்றபடி வருமானம் இல்லை என்றாலும் அன்னைக்கு தந்தது போக மீதியினை இருப்பில் வைத்திருப்பவன் தான்…
இருந்தும் தன்னிடம் இருந்திருந்தால் நண்பனுக்கு உதவவும் அஞ்சமாட்டான்…பத்தாயிரம் அல்லது அதற்க்கு மேல் சில ஆயிரங்கள் என்றால் கூட பரவாயில்லை அவனால் புரட்டிட முடியும் ஆனால் லட்சங்கள் என்பது அவனே கண்ணில் இன்னும் காணாதவை…அப்படி இருக்க இவன் எப்படி…
இனி என்ன செய்வது என தெரியாமல் சுரேஷிற்கு கலக்கமாய் இருந்தது…மிகப்பெரிய மருத்துவமனை…அட்மிட் செய்யவே கையில் இருந்த பணமெல்லாம் கரைய துவங்கி இருந்தன…இனிமேல் மருத்துவ செலவிற்க்கு என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான்…
கலக்கமாய் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முன் நிழலாட நிமிர்ந்தவன் கனியினை கண்டு “சொல்லுமா டாக்டர் ஏதும் சொன்னாங்களா….??” என்றான்..
“அவன் சாப்பிட்ட தூக்க மாத்திரைகளை வயிற்றில் இருந்து கிளீன் பண்ணிட்டாங்க..ஆனா மூச்சு விட ரொம்ப சிரமப்பட்றதுனால தொடர்ந்து வென்டி லேட்டரில் வைச்சி இருக்காங்க…கொஞ்சம் சீரியஸ் தான் ,நாளை தான் எதுவும் சொல்ல முடியும்ன்னு சொல்லி இருக்காங்க…” என சொல்லியவள் சத்தம் வராதபடி வாயை மூடிக்கொண்டு விம்மி அழ துவங்க..
“பிலீஸ் கனி அழாத…யாராவது பார்க்க போறாங்க…தப்பா நினைப்பாங்க…நீ வேணும்னா போ.. நான் பாத்துக்குறேன்…” என சொல்ல…
மறுப்பாய் தலையை ஆட்டியவள் “பரவாயில்லை அண்ணா…நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன்…” என்றவள் அவனிடம் ஏதோ கேட்க நினைத்து தயங்கிய படி அவன் முகம் பார்க்க…
அதனை கண்ட சுரேஷ் “ என்கிட்ட ஏதாவது கேட்கணுமா கனி…” என்றான் அவளின் பார்வை மற்றும் தயக்கத்தை கண்டு…
ஆமாம் என்ற அமோதிப்புடன் தலை அசைத்தவள் ஐசியூக்கு சற்று தள்ளி இருந்த இருக்கையில் தொய்வாய் அமர்ந்தாள்…
இடைவெளி விட்டு இரு இருக்கைக்கு பிறகு அமர்ந்தவன் அவளின் முகத்தை காண ,சில நேர யோசனைக்கு பின் “ஏன் இப்படி செஞ்சான்னு உங்களுக்கு தெரியுமா அண்ணா “ என்றாள் வேதனையுடன்…
“இல்ல கனி…நைட் வேலையை முடிச்சிட்டு வரும் போது சேர்ல உட்கார்ந்து இருந்தான்…கண்ணெல்லாம் கலங்கி போய் முகம் எல்லாம் வாட்டமா இருந்தது.. கன்னத்துல வேற தண்ணி…ஏண்டா அழற கால் ரொம்ப வலிக்குதா.. ஹாஸ்பிடல் போலமான்னு கேட்டேன்…ரொம்ப வலி எல்லாம் இல்லை…சரியா போய்டும்னு சொன்னான்…”
“நானும் நேத்து அடிப்பட்டதுனால வலி இருக்கும்…மாத்திரை போட்டா சரியாகிடும்ன்னு நினைச்சு அசல்ட்டா அவனை கண்டுக்காம, உடல் அசதியில சாப்பிட்டு தூங்கிட்டேன்…நான் தூங்கும் போது விடியற்காலை 3 மணிக்கு மேல இருக்கும்…”
காலையில நான் 7 மணிக்கு எழுந்து வந்து பார்க்கும் போது ரூம்ல லைட் எரிஞ்சிட்டு இருந்தது…ஆப் பண்ண போனேன் அப்போ படுக்கையிலிருந்து கீழ விழுந்திட்ற மாதிரி படுத்து இருந்தான்…
அவனை நேரா படுக்க வகிச்சிட்டு திரும்பின போது தான் ஒரு அட்டையிலே இருந்த மாத்திரை எதுவுமே இல்லாம வேத்து அட்டையா கீழ இருந்தது…
அதை எடுத்து பார்க்கும் போது தான் தெரிஞ்சது ,அது தூக்க மாத்திரைன்னு ,அவனை தட்டினா அசையாம சிலை மாதிரி படுத்து இருந்தான்…எனக்கு உயிரே போயிடுச்சு ..என்ன பண்றதுன்னு ஒரு நிமிஷம் புரியவே இல்லை…மண்டையில அதிர்ச்சி மட்டும் தான் பலமா இருந்தது…
அடுத்த நிமிஷம் வேகமா போய் ஹவுஸ் ஓனர் கிட்ட சொல்லி ,அவரோட பையன் ஆட்டோ புடிச்சிட்டு வர,நானும் ஹவுஸ் ஓனரும் அவனை தூங்கிட்டு வந்து ஆட்டோல ஏத்திட்டு கோவை மெடிக்கல் காலேஜ் போனோம்…
அவங்க இங்க பார்க்க சொல்லி லெட்டர் எழுதி குடுத்து அனுப்பிட்டாங்க…அதுக்கு பிறகு உனக்கு போன் பண்ணா நீ எடுக்கவே இல்ல…அங்கவே ஆம்புலன்ஸ் மூலமா இங்க வந்து அட்மிட் பண்ணிட்டு ஹவுஸ் ஓனர் ரொம்ப முக்கியமான வேலை இருக்கு….ஏதாவது வேணும்ன்னா கண்டிப்பா கூப்பிடுன்னு சொல்லிட்டு கையில கொஞ்சம் பணம் குடுத்துட்டு போனார்….என்றான் நீண்ட மூச்சுடன்…
“எப்போ இருந்து மீண்டும் கால் வலின்னா…”என கேட்டவள் மனதில் “என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே” என்று ஆதங்கப்பட்டாள்…
“முன்னாடி எல்லாம் கொஞ்சம் வலி அவ்வளவா இல்லாம தான் மா இருந்தது, நேத்து கீழ விழுந்ததுல இருந்து அதிக வலி எடுத்திடுச்சி போல…வலியில ரொம்ப கஷ்டப்பட்டான்…” என்றான் அவன் பட்ட கஷ்டத்தை தன் கஷ்டம் போல எண்ணி…
“என்னண்ணா சொல்றீங்க..கீழ விழுந்துட்டானா…எப்போ எங்கே, ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல அவன்…அவ்வளவு வேண்டாதவளா அகிட்டேனா அவனுக்கு..” என அழுதவளை காண பாவமாய் இருந்தது…
தெரியாமல் தன் வாயால் தான் உளறியதை எண்ணி மானசீகமாக தன்னை திட்டிக்கொண்டவன் “நீ கஷ்டப்படுவேன்னு சொல்லாம இருந்து இருப்பான் மா…மத்தபடி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை…”என நண்பனுக்கு பரிந்து வந்தான்…
அவள் அதற்கு எந்த பதிலும் பேசாமல் அமைதியாய் தன்னுள் கரைந்த வண்ணம் இருந்தாள்…”வலியினால் அவன் மாத்திரை விழுங்க வில்லை…தான் சொல்லிய ஏதோ ஒன்று அவனின் மனதினை பாதித்துள்ளது..”என எண்ணியவள் குற்ற உணர்வுடன் கண்ணீரை சொறிய துவங்கினாள்…
சுரேஷிற்க்கு தான் கஷ்டமாய் போனது…”அழுகாத மா..கண்டிப்பா பாரு அவன் சீக்கிரம் குணமாகி வந்திடுவான்…” என ஆறுதல் சொன்னவன் “கடவுளிடம் ப்ளீஸ் எப்படியாவது அவனை காப்பாத்திடு…நல்லவனுக்கு ஏன் இந்த சோதனை…உன்னை கெஞ்சி கேட்குறேன் ப்ளீஸ்.. நான் திட்டினத்தை எல்லாம் மனசுல வச்சிக்காத சாமி….” என்ற மன்னிப்பு படலத்துடன், வேண்டுதலையும் அவரின் முன் வைத்தான்…
ரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்பு மேற்கொண்ட சிகிச்சையை தொடரலாம்… என டாக்டர் தெரிவித்து இருந்ததால் சிகிச்சை முடிவு வரும்வரை காத்திருந்தனர்…
யோசனையில் இருந்தவள் தீடீரென்று “அண்ணா ராபின் அவங்க அம்மாக்கு சொல்லிட்டீங்களா..??.”என்றால் அவனிடம்..
“இல்லை “ என்பது போல தலை அசைத்தவன் “அவன் கண்ணு முழிக்கட்டும் மா…பிறகு சொல்லிக்கலாம்…அவங்க வந்தா அழுதுட்டே இருப்பாங்க…இவனையும் பார்க்க முடியாது…அவங்களையும் சமாளிக்க முடியாது…டாக்டர் வரட்டும் பார்க்கலாம்..”என சொல்லிக்கொண்டு இருந்தபோதே மருத்துவர் வர…
இருவரும் அவரிடம் விரைந்தனர்…கனியை கண்ட டாக்டர் “நீ இங்க என்னமா பண்ற…டூயூட்டி இல்லையா..” என்க..
“இருக்குங் டாக்டர்…பேஷண்ட் என்னோட ரிலேடிவ் …அண்ணா தனி ஆளா சிரமப்பற்றாங்கன்னு ஹெல்ப் பண்ண வந்தேன்…பெர்மிஸ்ஸின் கேட்டு வந்தேன் டாக்டர்..”என்றவள் சுரேஷிடம் தலை அசைத்து விட்டு அவருடன் பேசிக்கொண்டே ஐசியூவில் நுழைந்தாள்..
உடலில் ஆங்காங்கே ஓயர்கள் ஒட்டி இருக்க மூக்கிலும் வாயிலும் சுவாச குழாய் பொருத்தப்பட்டு இருந்தது…அவனின் இதய துடிப்பினை மானிட்டர் காட்டி கொண்டு இருக்க ,இவளின் இதயம் தாறுமாறாய் துடிக்க துவங்கியது…
எத்தனையோ நோயாளிகளை அந்த மாதிரி கண்டு இருந்தாலும் நண்பனை காணும் போது தன்னையும் மீறி கண்கள் கலங்கத்தான் செய்தது…
“ரத்த அழுத்தம் ,இதய துடிப்பு ,” அடங்கி இருந்த நோட் பேடை பார்த்தவர்..சிறுநீரகம் மற்றும் ரத்த பரிசோதனை செய்த அறிக்கையை ஆராய துவங்கினார்…
“ஹீ இஸ் அவுட் ஆப் டேஞ்சரஸ்…”என கூறியவர் இன்னும் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் இருக்கட்டும்…திரும்ப பார்த்து செக் பண்ணிட்டு…மேற்கொண்டு கூற முடியும் என்றார்….நோ நீட் டூ ஒர்ரி, ஹீ வில் கெட் வெல் சூன்…என்றவர் வெளியேற…
அவர் வெளியே வந்ததும் சுரேஷ் அவரிடம் விசாரிக்க “அவரிடமும் அதையே சொல்லிவிட்டு சென்றார்…
டாக்டர் சொன்னது அனைத்தும் காதில் விழுந்தாலும் மூளையில் பதியவில்லை…அவளின் எண்ணமெல்லாம் ஏன் இப்படி செய்தான்,தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு ராபின் கோழையா..???..இல்லை இல்லவே இல்லை…அவளுக்கு தெரிந்த ராபின் தைரியசாலி.. தன்னம்பிக்கை மனிதன்…
பிறகு ஏன் இப்படி ஒரு விபரீதமான முடிவு…இத்தகைய முடிவு எடுக்க காரணம் என்ன…ஒரு வேலை தான் திட்டியதால் மனம் நொந்து போனானோ…அய்யோ… மீண்டும் மீண்டும் அவள் அதையே நினைக்க…
அவள் மனம் அவளையே குற்றவாளி கூண்டில் நீற்க வைத்து,அவளை கேள்வியால் துளைக்க ஆரம்பித்தது…நினைக்கவே அவள் நெஞ்சுக்கூடு சிதைவது போல இருந்தது…இன்னும் இன்னும் என கண்ணை கரித்துக்கொண்டு வந்தது…
மதியம் சுரேஷை பார்த்ததை நினைவு கூர்ந்தாள்…அப்போது தான் மதிய இடைவேளையை முடித்துக்கொண்டு வந்தவள் டூயூட்டியை பார்க்க சென்றாள்…
அவள் ஷிப்ட் பார்ப்பது இரண்டாம் தளம்…படி ஏற சங்கடப்பட்டு லிப்ட்க்கு காத்திருக்க ,தரை தளத்தை அடைந்த லிப்ட் ஓபன் ஆக உள்ளே சென்றவளை அவசரமாக உள்ளே இருந்து வெளியேறிய ஒருவன் அவளை இடித்துவிட்டு செல்ல…
“ஹலோ கொஞ்சம் மெதுவா போங்க…” என்ற குரலில் ,அரக்க பறக்க சென்றவன் “சாரி சிஸ்டர்..”என திரும்பி மன்னிப்பு வேண்டியவன்,அவளை கண்டு நிற்க…அவளும் அவனை கண்டு “அண்ணா நீங்க இங்க எப்படி “ என்றபடி வெளியே வந்தாள்…
“ராஜனுக்கு உடம்புக்கு முடியல மா..இங்க தான் சேர்த்து இருக்கேன்…”என்றவன் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை…
“உடம்புக்கு முடியலையா..என்னண்ணா ஆச்சு…இப்போ எங்க இருக்கார்.”என்றவள் அவன் சொன்ன அறை எண்ணை மனதில் குறித்துக்கொண்டு மேலே சென்றாள்…ஐசியூ வில் இருக்கிறானா என்ற யோசனையுடனே அங்கு விரைந்தாள்…
சுரேஷும் மருத்துவர் வாங்கி வர சொன்ன மருந்துகளை வாங்கி வர மருந்தகம் விரைந்தான்…மேலே சென்று அங்கு பணியில் இருந்த சிஸ்டரை விசாரிக்க அவர் சொன்ன பதில் “அட்டெம்ப்ட் சூசைட் ..” தான்…இப்பதில் அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது…
சூசைட் அட்டம்ப்ட் பண்ணானா என அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்…ஐசியூ க்கு வெளியில் வந்து இருக்கையில் அமர்ந்தவள் அப்போது அழுதது தான்..ஓர் அளவு அவள் தன்னை தேற்றிக்கொண்டு நிமிர்ந்த போது கொஞ்சம் திடமாய் இருந்தாள்…
மனதளவில் திடமானவள் தான்…அப்படி இல்லை என்றால் செவிலியர் பணியை அவளால் தொடர முடியுமா..மருத்துவர்களும், செவிலியர்களும் உடலளவிலும், மனதளவிலும் திடமாக இருக்க வேண்டுமே..
ஆனால் இந்த ராபின் விஷயத்தில் மட்டும் அவள் திட நிலை குறைந்து திரவ நிலைக்கு சென்றுவிடுகிறதே….பாவம் அவள் மட்டும் என்ன செய்வாள்…
அதன் பிறகு சுரேஷை சாப்பிட அனுப்பியவள் ,ராபினின் அறைக்கு வெளியில் இருந்தாள்…அவளுக்கு உள்ளே செல்ல அனுமதி இருந்தாலும் அவளால் ஏனோ அங்கு இருக்க முடியும் என்று தோன்றவில்லை…
ஏறி இறங்கும் அவனின் இதய துடிப்பை காணும்போது கண்கள் கரித்தது…தனக்கே இப்படி எனின் அவனின் அன்னைக்கு எப்படி இருக்கும் என எண்ணி மனம் அவருக்காய் வருந்தியது…
அதுவும் அவனை நம்பி இருக்கும் ஒரே ஜீவன்…இவனை விட்டால் அவருக்கு என்று யார் இருக்கிறார்கள்…அவருக்காக வேணும் இவன் சீக்கிரம் குணமாக வேண்டும் என கடவுளை பிராத்திக்க துவங்கினாள்..
கடவுளின் காதுகளுக்கு எட்டியதோ என்னவோ ,இரண்டு மணி நேரம் கழித்து காண வந்த மருத்துவர் அவனை பரிசோதனை செய்து விட்டு “இனி பயப்பட ஒண்ணும் இல்லை….ஹீ இஸ் பைன் நௌவ்…மூன்று நாட்கள் பெட்டில் இருக்கட்டும்…பிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம்…” என சொல்லி சென்றார்…
சாப்பிட்டு வந்த சுரேஷ் “நீ ஹாஸ்டல் போ மா…நான் பாத்துக்குறேன்…நீ நாளைக்கு காலையில வா…” என கூற “கண்ணு முழிக்கட்டும் அண்ணா பார்த்துட்டு போயிட்றேன்…”என போக மறுத்தவளை
“கண்ணு முழிக்க எப்படியும் நாலு அல்லது அஞ்சு மணி நேரம் ஆயிடும்…அதுக்குள்ள நீ ஹாஸ்டல் போயிட்டு வா…” என்று கட்டாயப்படுத்தி விடுதிக்கு அனுப்பி வைத்தான்…
தான் வேலை செய்யும் கம்பெனிக்கு போன் செய்து இரவு வரமுடியாது என்றும்,தனக்கு பதில் வேறு எவரேனையும் இன்று ஒரு நாள் மட்டும் வேலைக்கு அழைத்துக்கொள்ளுமாறு கூறியவன் ,ராபினுக்கு திட உணவுகள் வழங்க கூடாது என்பதால் ,திரவ பொருட்களையே தருமாறு டாக்டர் பரிந்துரை செய்து இருக்க..
அவனுக்கு தேவையான பழங்களை வாங்கி வந்து வைத்திருந்தான்…இப்போதைக்கு அவன் கண் விழிக்கவில்லை என்பதால் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது..கதவின் வழியே அவனை கண்ட போது மிகவும் கஷ்டமாய் இருந்தது…
எவ்வளவு துள்ளலான பையன்…எப்போதும் துறுதுறு என்று எதையாவது செய்துக்கொண்டே இருப்பான்…கிண்டல் கேலிகளுக்கு கொஞ்சம் பேர் போனவன்…கோவையில் வேலைக்கு சேர்ந்தது முதல் தெரியும்..ராபினின் நண்பனின் அண்ணனும், சுரேஷும் நண்பர்கள்…
சுரேஷ் நண்பர்களோடு காந்திபுரத்தில் வீடு எடுத்து தங்கி இருந்தவன்,ஆறு மாதங்களுக்குள் அவர்களுக்கும் இவனுக்கும் ஒத்து வராமல் போக,அவர்களை விட்டு தனியாக வீடு எடுத்து தங்கிக்கொண்டான்…
தனி ஆளாய் வீட்டு வாடகையும், சமையல் செலவும் செய்ய கடினமாய் இருந்தது…திருப்பூரில் இருக்கும் அவனின் வீட்டில் இருந்தும் வரலாம்,அல்லது திருப்பூரில் கிடைக்காத வேலையா..ஆனால் அவனுக்கு அங்கு இருக்க துளியூம் விரும்பவில்லை…
அம்மாவை தன்னோடவே வர சொல்லி அழைக்க அவர் மறுத்துவிட,இவன் மட்டும் தனி வீட்டில் தனி ஆளாய்…அதன் பிறகு நண்பனின் மூலம் அறையை பகிர்ந்து கொள்ள வந்தவன் தான் நம்பிராஜன்…
நம்பிராஜன் குடும்பம் சிறியது…அப்பா கனகசிவம்,அம்மா திலகவதி மற்றும் அவனை என அவர்களை அடக்கிய சிறு கூடு…
அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் புரிந்தவர்கள்..இருவரும் ஒரே ஊர்..திலகவதி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்…கனகசிவம் படிக்காதவர்…கனகசிவம் திலகவதிக்கு தாய் மாமன்..
அதாவது திலகவதியின் அம்மா அன்னலட்சுமியின் சிற்றன்னையின் தவப்புதல்வன்…அன்னலட்சுமி முதல் தாரத்தின் முதல் மகவு…கனகசிவமோ இரண்டாம் தாரத்தின் முதல் மகவு…அன்னலட்சுமிக்கும் கனகசிவத்திற்கும் பதினைந்து வருட வித்தியாசம்…
திலகவதியினை விரும்பிய கனகசிவம்,தனது தமக்கைக்கு பயந்து வெளியில் சொல்லவில்லை…திலகவதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறும் வேளையில் “கனகசிவத்தை சந்தித்த திலகவதி ,தன்னுடைய காதலையும், விருப்பத்தையும் தெரித்தவர்,அன்றே அவரின் கையால் தனது கழுத்தில் மங்கள நாணை பெற்று கொண்டார்…
இதனை அறிந்த அன்னலட்சுமி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க துவங்கினார்…தந்தையின் சொத்தை எதுவும் பெறாமல் அக்காவிற்கே அனைத்தையும் தந்தவர், தனது அன்னையின் சொத்தில் அதே ஊரில் வாழ துவங்கினார்…
கனகசிவம் மற்றும் திலகவதியின் காதலுக்கு சாட்சியாய் பிறந்தவன் தான் நம்பிராஜன்…
பாராட்டி சீராட்டி வளர்த்தனர்….அவன் கேட்டது கேட்காதது என அனைத்தும் அவனின் கண் முன்னே குவித்தார்…சொந்தங்கள் இல்லை என்ற ஒரு குறையை தவிர வேறேதும் குறை தெரியாத அளவு திலகவதியை தாங்கினார்…
கணவனின் அன்பில் நாளடைவில் அந்த குறையும் காணாமல் போனது..கணவன் மற்றும் குழந்தை இதை இரண்டையும் தவிர்த்து வேறு எதுவும் அறியாத குடும்ப உலகில் ஆழ்ந்து போனார்…
ஆனால் கணவன் இவ்வுலகில் விட்டு நீங்கும் போது உயிர் ஆறுத்த கொடியாய் மண்ணில் உயிர்பின்றி வீழ்ந்து போனார்…இப்போது மகனும் அதே நிலையில் இருக்கிறான் என்று தெரிந்தால் தாங்குமா தாய் உள்ளம் சேயின் துடிப்பை கண்டு…
இருதயப் பூவின் மொழி தொடரும்…