Advertisement

Suganya Vasu’s – இருதயப் பூவின் மொழி

 

அத்தியாயம் :- 14

 

என் மனதினில் துடிப்பானாய்

எந்தன் உயிரின் உறவானாய்

உறவே என்னில் புதைந்து

போக அழைக்கிறேன் உன்னை

ஆசையுடன்….

 

நாளும் நேரமும் எவருக்கும் காத்திருக்காமல் நிலையில்லா தன்னுடைய ஓட்டத்தை ஓட,மனிதர்களும் அதனின் பின்னே ஓடிட வேண்டிய காலத்தின் காட்டாயத்தில் இருந்தனர்…

 

தந்தை இறந்து இன்றோரு மூன்று மாதங்கள் முடிந்து ,நான்காம் மாதத்தின் முதல் நாள் தொடக்கம்…தன் மேசையின் மேல் இருந்த தந்தையின் புன்னகையையே பார்த்திருந்தவன் பின் கண்களை மூடி மனமுருக வேண்ட துவங்கினான்…

 

என்ன வேண்டினான், எதை தந்தையிடம் கேட்டான் எதுவும் தெரியாது…ஆனால் மனம் அவன் போக்கில் தந்தையிடம் அதீத விஷயங்களை பகிர்ந்து கலங்கி, மனதின் மூலமே அரவணைப்பை தேடி தஞ்சம் அடைந்தது…வேண்டி முடித்து ,தந்தையின் புகைப்படத்தை கைகளில் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான்…

 

அப்போது அவனின் அலைபேசி சிணுங்க, அதை பார்த்தவன் தன் அன்னை அழைப்பதை கண்டு ஆனந்தத்துடன் ஏற்று ‘அம்மா எப்படி இருக்கீங்க…தாத்தா பாட்டி எல்லாம் நல்லா இருக்காங்களா…’ என்று தனது நல விசாரிப்பினை தொடங்க…

 

‘நல்லா இருக்கோம் ராஜா…தாத்தாவுக்கு தான் கொஞ்சம் உடம்பு சுகமில்லாம இருக்கு,கொஞ்சம் நீ ஊருக்கு வந்துட்டு போறியா…’ என சொல்லியவரின் கலக்கத்தை அவனால் நன்கு உணர முடிந்தது…

 

‘என்னமா என்ன ஆச்சு…நல்லா தானே இருந்தார்..’ என பதட்டத்துடன் கேட்டுக்கொண்டு தனக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்…

 

‘என்னன்னு தெரியல ராஜா…நல்லாவே தான் படுத்தார்..இப்போ அவரால எந்திரிக்க கூட முடியல ,எனக்கும் அம்மாக்கும் ரொம்ப கலக்கமா இருக்கு பா…காத்தவராயன் அப்பா உதவியோட இங்க ஈரோட்ல இருக்குற ஒரு மருத்துவனையின் பெயரை சொல்லி அங்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்….

 

‘நான் உடனே கிளம்புறேன் மா,எதுக்கும் பயப்படாதீங்க, தாத்தாக்கு சீக்கிரம் சரியாகிடும்…’ என கூறியவன் சேகரிடமும் விக்ரமிடமும் விவரத்தை கூறிவிட்டு அவனின் பிரிவு தலைமையருக்கு அழைத்து விடுமுறைக்கு சொல்லிவிட்டு கோவையில் இருந்து ஈரோட்டிற்க்கு பஸ் ஏறினான்….

 

சிறிது நாட்களாக தாத்தாவின் உடல்நிலையில் சிறிது நலிவு ஏற்பட்டது அவனால் நன்கு உணர முடிந்தது…சிறுது நேரமும் ஓய்வில்லாமல் வயதிற்கு மீறிய உழைப்பை தொழில் கொடுத்துக்கொண்டு உள்ளார் என ஒரு முறை அவனின் அன்னையிடம் பேசும் போது தெரியவந்தது…

 

தாத்தா சுப்பையாவிற்க்கு செங்கல் சூளைகள் ஐந்தும், மர அறுக்கும் தொழிலையும் செய்துக்கொண்டு வந்தார்…மர அறுவையிலும் சரி செங்கற் சூலையிலும் சரி நன்கே லாபம் கிட்டியது எனலாம்…

 

சற்று உடல் மெலிந்து இருக்க முன்பு போல் அநேக நேரங்களில் வேலை செய்ய முடியாமல் தடுமாறினார்..வேலை பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கும் படி நம்பிக்கை ஆனா ஆட்கள் அவருக்கு கை வசம் இல்லாததால் அனைத்தையும் அவரே பார்க்க வேண்டிய சூழல்…

 

வேலையினால் ஏற்பட்ட அலைச்சல், உடல்.மெலிவு, வயது முதிர்ச்சி என அனைத்தும் ஒரு சேர சுப்பையாவை ஓரு வழியாக்கிற்று….

 

பேருந்து பயணத்தின் இரண்டு மணி நேர முடிவில் ,ஈரோட்டை அடைந்தவன் பேருந்து நிலையத்தில் இருந்து அன்னைக்கு அழைத்து மருத்துவமனையை பற்றிய விவரம் அறிந்தபின் ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு மருத்துவனைக்கு விரைந்தான்…

 

வரவேற்ப்பு அறையில் அவனின் தாத்தாவின் பெயரையும் வயதையும் சொல்லி எங்கு இருக்கிறார்கள் என வினவ, முதல் தளத்தில்அறை எண் 205 என்ற அப்பெண்ணின் பதிலுக்கு நன்றி உரைத்துவிட்டு மேலே விரைந்தான்….

 

மேலே சென்றதும் அறையின் வாசலலிலே திலகவதியும் ,காத்தவராயன் தாத்தாவும் இருக்க,அருகில் தமிழ்செல்வனும் இருந்தார்…இவர் எப்படி இங்கே… என எண்ணியவன் முகத்தில் எதையும் கட்டிக்கொள்ளாமல் அன்னையினை நெருங்கினான்…

 

டாக்டர் என்ன சொன்னாங்க என்றான் பொதுவாய்… அவனின் கேள்விக்கு காத்தவராயன் தான் பதில் சொன்னார்…திலகவதி அழுதுக்கொண்டு இருக்க,அன்னையின் அருகே சென்று தோளோடு அணைத்துக்கொண்டவன் காத்தவராயனின் பதிலுக்காக அவரின் முகத்தை பார்த்தான்….

 

இன்னும் எதுவும் சொல்லல…டாக்டர் இப்போ தான் ஒரு ஆபரேஷன் முடிச்சிட்டு வந்து பார்த்திட்டு இருக்கார் என்றார் அவர்… தமிழ்ச்செல்வன் அருகிலே இருப்பதினால் அவரிடம் நலம் விசாரிக்காமல் இருப்பது தவறெனப்பட ‘எப்படி இருக்கீங்க மாமா..’ என்றான் கடமைக்காக…

 

ஹ்ம்ம்…நல்லா இருக்கேன் என்றவர் மேற்கொண்டு எதுவும் பேசாது அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்..அவரின் அலச்சியத்தை ஒதுக்கியவன் ‘அழாதீங்க மா,தாத்தாக்கு சரியாகிடும்…’ என்றான் தேற்றும்விதமாக…

 

‘”தாத்தாவை பார்க்கவே ஒரு மாதிரி ஆகிடுச்சு ராஜா எனக்கு…முகமெல்லாம் ஒரு பக்கமா வந்துடுச்சு…வாயெல்லாம்.ஒரே நீர்…” என்று அழுதபடியே கூற அதிர்ச்சியுடன் காத்தவராயனை பார்த்தான்…

 

அவர் ஆம் என்பதாய் தலையை அசைக்க எப்படி என்று புரியாத குழப்பத்துடன் தாத்தாவை அனுமதித்து இருக்கும் அறைக்கு முன் செல்ல வேண்டி நகரவும், டாக்டர் உள்ளே இருந்து வரவும் சரியாய் இருந்தது…அதற்க்குள் தமிழ்செல்வனும் வந்திருந்தார்…

 

பொதுவாய் அனைவரையும் பார்த்தவர் ரொம்ப பயப்பட ஒண்ணும் இல்ல, இவருக்கு வந்து இருக்கிறது முகவாதம்…பிசியோ தெரபி பண்ணா சரியாகக்கூடிய வாய்ப்பு உண்டு…ஆனா எந்த அளவிற்க்கு பாதித்து இருக்குன்னு ஸ்கேன் பண்ணி பார்த்திட்டா ஓர் அளவிற்க்கு எப்படி மூவ் பண்றதுன்னு முடிவு எடுக்கலாம்…

 

எம். ஆர்.ஐ ஸ்கேன் ஒண்ணு எடுத்திடுங்க, ரிப்போர்ட் வந்ததும் என்ன செய்யறதுன்னு பார்க்கலாம் என சொல்லியவர் பின் வேறு நோயாளிகளை காண சென்றார்….

 

அப்போது தான் நினைவு வந்தவனாக அன்னலட்சுமியை பற்றி விசாரிக்க, அவரின் ஓயாத அழுகையால் அங்கேயே அவரை விட்டுவிட்டு வந்ததாக தெரிவித்தவர் ,தந்தையை காண அறைக்கு சென்றார்…அவரின் பின்னே நம்பிராஜனும், காத்தவராயனும் செல்ல,நர்ஸின்2 ஒவ்வொருத்தரா போய் பாருங்க என்றதில் திலகவதி மட்டும் உள்ளே சென்று பார்த்து வந்தார்….

 

கணவனை பறிக்கொடுத்து சில மாதங்களே ஆகி இருக்க, துணையாய் இருந்த தந்தையின் நிலையும் இப்படி மோசமாய் இருப்பதை எண்ணி அவருக்கு நெஞ்சு தவித்தது…என்ன பாவம் பண்ணினனோ…என உள்ளுக்குள்ளே குமுறியவர் தந்தையின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக்கொண்டார்…

 

தன் கைக்குள்ளே இருந்த தந்தையின் கைகளில். ஒரு மெல்லிய நடுக்கத்தை அவரால் நன்றாய் உணர முடிந்தது….ஒரு நிமிடங்களுக்கு பிறகு வெளியே வர அதன் பின் நம்பிராஜன் மட்டும் தனியே சென்று பார்க்க கம்பீரமாய் இருந்த அவனின் தாத்தா சுப்பையாவா இது..?? என அவனுக்கே சந்தேகம் வந்துவிட்டது…

 

உடல் மிகவும் மெலிந்து ,முகம் ஒரு பக்கம் கோணலாய் இழுத்து நிற்க மேற்கொண்டு பார்க்க முடியாமல் கலங்கிய தன் கண்களை துடைத்தப்படியே வெளியேறினான்….அதற்க்குள் நர்ஸ் வந்து ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொல்ல,நம்பிராஜன் தாத்தாவுடன் சென்றான்…

 

ஸ்கேன் ரிப்போர்ட் வர ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அனைவரும் காத்திருக்க ஆரம்பித்தனர்…

 

பணம் சற்று குறைவாக இருப்பதால் ,வீட்டிற்க்கு சென்று பணம் எடுத்துவரும்படி நம்பிராஜனை பணிந்த திலகவதி தமிழ்ச்செல்வனின் புறம் திரும்பி,நீங்க வேணும்ன்னா வீட்டுக்கு போங்க தம்பி ,அது தான் அய்யா இருக்காங்க இல்ல…நான் பார்த்துக்குறேன் என்க…

 

மறுப்பாய் தலை அசைத்தவர் இல்ல அக்கா…அப்பாக்கு ஒன்னும் தெரியாது இன்னும் கொஞ்ச நேரத்துல ரிப்போர்ட் வந்தா டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பார்க்கணுமே அக்கா,டாக்டர் சொல்றது அப்பாக்கு புரியுமா..??,நான் இங்கே இருக்கேன்,எப்படியும் நம்பி இங்க தானே வரப் போறான் வரும் போது குழலையும் அழைச்சிட்டு வரட்டும் ,அதுக்குள்ள டாக்டர் என்ன சொல்றார்ன்னு தெரியும் ,அதுக்கு பிறகு நான் குழலை அழைச்சிட்டு வீட்டுக்கு போறேன் …என்க..

 

தமிழ்செல்வன் சொல்வதும் ஒரு வகையில் சரி என்பதால் மறுத்து ஒன்றும் திலகவதியினால் எதையும் கூறமுடியவில்லை…கத்தவராயனுக்கு இங்கே ஒன்றும் தெரியாது ,துணைக்காக வேண்டுமானால் அவரை உடன் வைத்துக் கொள்ளலாம், ஆனால் வயதில் பெரியவருக்கு மிகுந்த சிரமம் வேண்டாம் என எண்ணி காத்தவராயனையும் நம்பியையும் வீட்டிற்கு அனுப்பினார்…

 

மருந்தின் வாடை சற்று மனத்திற்கு ஒவ்வாமை போல் இருக்க,திலகவதி சொல்லியதும் கிளம்பினார்…நம்பியிடமும் தெரிவித்த தமிழ்செல்வன் வரும்போது குழலினையும் உடன் அழைத்து வரச் சொன்னார்…

 

குழல் இங்கே தான் இருக்கிறாளா..??  என்று எண்ணியவன் தமிழ்செல்வன் சொல்லிய அனைத்திற்கும் மண்டையை உருட்டிக்கொண்டு இருந்தான்…

 

அதன் பின் அவனும் காத்தவராயனும் வீட்டிற்கு சென்றனர்…தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னலட்சுமியின் அழுகையின் உடனான கேள்விக்கு தக்கவாறு பதிலளித்து, அவரினை சமாதானம் செய்துவிட்டு குழல்மொழியினை அழைத்துக்கொண்டு ஈரோடிற்கு பயணப்பட்டான்….

 

பள்ளிப்பாளையத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்து ஈரோட்டிற்க்கு செல்ல, அதில் இருவரும் ஏறினர்…அரசு பேருந்தில் கூட அவ்வளவு கூட்டம் இருக்காது,இந்த தனியார் பேருந்தில் கூட்டம் அலைமோதியது…எப்படியோ ஒருவழியாய் இருவரும் ஏறிவிட்டனர்…படியில் தான் இருவருக்கும் இடமே கிடைத்தது…இதில் குழல்மொழியின் பொதி மூட்டை வேறு என எரிச்சலாய் வந்தது…

 

அதனை தூக்கி உள்ளே இருப்பவர்களிடம் பத்திரமாக வைக்கும்படி கூறியவன்,அவர் எங்கு இறங்குகிறார் என அறிந்துகொண்டு பேக்கை ஈரோட்டில் வாங்கிக்கொள்வதாக சொன்னவன் குழல்மொழி நிற்க எதுவாக சற்று இடத்தை அமைத்துக் கொடுத்தான்…

 

எவ்வளவு முயன்றும் கூட்டத்தின் நெரிசலில் அவளால் தனித்தே நிற்கமுடியவில்லை…இருவரும் மற்றோருவரின் பரிசத்தை நன்கு உணர்ந்துக்கொண்டு இருந்தனர்…அதுவும் நம்பிராஜனின் கரம் குழல்மொழியின் கழுத்துப்பகுதியை கடந்து அங்கிருந்த கம்பியை பிடித்திருந்ததது…

சில நேரம் அவனின் கை உராய்ந்து அவளின் கழுத்துப் பகுதியில் குறுகுறுப்பை ஏற்படுத்த மனதில் ஏதோ போல் உணர்ந்தாள்…கை படாதவாறு சற்று தள்ளி நிற்க முயன்றால் அவனை ஒட்டிய நிற்க வேண்டும் என எண்ணி நெளிந்தாள்…

 

‘என்ன என்னாச்சு …’ என்றான் அவன்…

 

“ஒண்…ஒண்ணும்.. மில்லை…’ என்று திணறியவள் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டாள்…ஹ்ம்ம் என்ற தோள் குலுக்களுடன் அமைதியானவன் தாத்தாவை பற்றிய சிந்தனையிலேயே இருந்தான்…அவனின் மூளை ஒருவிதமான சிலிர்ப்பை உணர்ந்தாலும் மனம் இன்னும் உணரவில்லை…

 

இருந்தும் பேருந்தின் நடத்துனர் ‘உள்ளே ஏறுங்க…படியிலே நிக்காதீங்க…ஏற முடியலைன்னா அடுத்த பஸ்ல வாங்க…கீழே விழுந்து எங்களோட உயிரை எடுக்காதீங்க…’ என கத்திக்கொண்டு வந்தார்…

 

அதுவும் ஆண்கள் படியில் தொங்கிக்கொண்டு வருவதற்கே கத்திக்கொண்டு இருப்பவர், குழல்மொழியும் படியில் நிற்பதை கண்டு உச்சபட்ச கோபத்தில் கத்தினார்… ‘ஏம்மா உனக்கு எல்லாம் அறிவே இல்லையா…அவனுங்க தான் அறிவில்லாம திமிர்ல சீன் போட்டுன்னு படியில தொங்கிட்டு வராணுங்க…உனக்கு எங்க போச்சு புத்தி..முதல்ல மேல ஏறுமா…’ என சாடத் துவங்க…

 

குழல்மொழியின் கண்களில் நீர் கோர்த்து விட்டது…அனைவரும் அவளையே பார்ப்பது போல் இருக்க கீழே குனிந்துக்கொண்டாள்…

 

என்னண்ணா…இப்படி பேசுறீங்க…பொம்பள பிள்ளைக்கிட்ட பேசுற மாதிரியா பேசுறீங்க…இடம் இருந்தா உள்ள வரமாட்டோமா..இல்லாத போது எப்படி உள்ளே வர முடியும்..இந்த பொண்ணு காத்தவராயன் தாத்தாவோட பேத்தி ,நீங்க இப்படி அவங்க புள்ளையை. பேசினது தெரிஞ்சது ,சாயந்திரம் உங்க பஸ் இந்த ஊர் தாண்டி போக முடியாது பார்த்துக்கோங்க…’ என்றவன்

 

‘கீழ விழாத மாதிரி நாங்க பார்த்துக்குறோம்… நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க …என்றான் அவருக்கு மட்டும் கேட்கும்படி…

 

நமக்கு எதற்கடா வம்பு  என்று எண்ணியவனின் எண்ணத்தை மெய்பிப்பது போல ஓட்டுனரும் ‘யோவ்.. உன்னோட வாயை வச்சிட்டு பொத்திட்டு வா…நடக்குற பொழப்புல மண்ணை அள்ளி போட்றாத …’ என நடத்துனரை பார்த்து கத்தியவர் ‘ எவன் எப்படி போன உனக்கென்ன…’ என்றார் பார்வையின் வழியே….மேற்கொண்டு எதையும் பேசாது தன் வேலையை பார்க்க துவங்கினான் அவன்..

 

‘அவன் சொன்னதுக்கு எல்லாம் இப்படி கண்ணுல தண்ணிய விட்டுட்டு இருப்பியா..முதல்ல கண்ணை துடை…’ என்றான் சிறு அதட்டலுடன்…

 

அவனின் அதட்டலில் கண்களை விரித்து பயந்து போய் பார்த்தவளின் கண்களில் தன்னையே தொலைப்பதை போல் உணர்ந்தான் நம்பிராஜன்…சில நொடி அவளின் பார்வையில் தன்னையே இழந்தான்….இன்னும் இன்னும் இழக்கலாம் என்பது போல ஒரு மாயை அவனை சுற்றி..

 

“ச்சீ…என்ன இது..நான் போய் இப்படி எல்லாம் நினைச்சிட்டு, அதுவும் தமிழ்செல்வன் மாமா என்னை நம்பி தான் இவளை அழைச்சிட்டு வர சொன்னார்…அவர் பொண்ணை நான் வேற கண்ணோட்டத்துல பார்க்கலாமா…??..என்று அவனின் எண்ணத்திற்க்கு அவனே கடிவாளமிட முயற்சி செய்துக்கொண்டு இருந்தான்…

 

ஆனால் காதல் எனும் பேய் பிடித்து விட்டால் அது அன்னையையும் பார்க்காது..!! ஆட்டு குட்டியையும் பார்க்காது..!!..மாமனையும் பார்க்காது…!!மச்சானையும் பார்க்காது…!!!நன்றியையும் பார்க்காது..!!துரோகத்தையும் பார்க்காது…!!!..நம்பிராஜன் உணர்ந்துக் கொள்வானா…

 

இருதயப் பூவின் மொழி தொடரும்…

 

Advertisement