Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் 12 ;-
கலங்கி துடித்து
போகிறது எந்தன் இதயம்
நீ இல்லாத வாழ்க்கையை எண்ணி…!!
அழகிய இரவு..வெண்ணிலவின் கீற்று ஒளியில் நீண்டதொரு பயணம்..இருவரும் கை கோர்த்து கதை பேசி ,சிரித்தபடி சென்றுக்கொண்டு இருந்தனர்… சட்டென இருள் தன்னகத்தே இருந்தவரை அதனுள் இழுத்துக்கொள்ள…’ அப்பா….அப்…பா…’ என்ற கதறலுடன் தனது கையினை வீசியப்படி தேடலை துவங்கி இருந்தவனை உலுக்கியது இரு கரங்கள்….
தேடலின் முடிவில் தான் தொலைத்தது கிட்டியது என்ற சந்தோசத்துடன் அந்த இரு கரங்களை இறுக பிடித்துக்கொண்டு ‘அப்பாபா…. ‘ என்ற அழைப்புடனே கண்களை திறந்தவனின் முன்பு சேகர் நின்றுக்கொண்டு இருக்க…
ஒரு நொடி கண்ணை கசக்கிக்கொண்டு மீண்டும் கண்களை திறந்து நோக்க சேகர் தான் நின்றுக்கொண்டு இருந்தான்…
சட்டென்று சுற்றும் முற்றும் பார்வையை ஓட்ட அது அவனின் விடுதியின் அறை என மெல்ல மூளை நினைவு கூர்ந்தது.... மெல்லிய வெளிச்சத்திலான மின்விளக்கை தவித்து அதீத ஒளி தரக்கூடிய LED விளக்குகளின் வெளிச்சங்கள் அவ்வறையின் முழுதும் பரவி இருந்தன…
பரிதவித்தப்படி எல்லா திசையிலும் பார்வையை பதித்தப்படி இருந்த நம்பிராஜனை கண்டு சேகர் புருவ மத்தியில் ஏற்பட்ட முடிச்சுடன் நோக்கினான்…
‘என்ன டா…என்ன ஆச்சு.. ஏதாவது கெட்ட கனவா…!!அப்பா அப்பான்னு கத்தின…’என பரிவுடன் கேட்டவனுக்கு பதில் சொல்ல முடியாமல் தொண்டை வறண்டு போய் இருக்க,
தண்ணீர் வேண்டுமென செய்கையால் தெரிவித்தவன் , வேர்த்திருந்த தனது முகத்தினை அழுந்த துடைத்தான்…
அதற்க்குள் தண்ணீர் பாட்டிலுடன் வந்த சேகர் கொடுத்த நீரை பருக மெல்ல பருகியவனின் தொண்டை குழிகள் நீரால் நிரம்பி வாயின் ஓரத்திலும் வழிய, லேசாய் பொறையும் ஏறிற்று..’மெதுவா டா..என்ன அவசரம்…நிதானமா குடி…’ என்றப்படி தலையை தட்டிவிட்டு, நெஞ்சை நீவி விட்டான்…
கடிகாரத்தில் நேரத்தை காண மணி விடியற்காலை 2 மணி என காட்டியது… கனவின் தாக்கம் இன்னும் மிச்சமிருக்க, ஒன்றும் பேசாது தலையை தன் இரு கைகளாலும் தாங்கிக்கொண்டான்…
‘நம்பி…’ என்ற சேகரின் அழைப்பில் லேசாய் தலைவுயர்த்தி பார்க்க…’ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்க…ஏதாவது பிரச்சனையா… அப்பா பத்தி ஏதாவது கெட்ட கனவு கண்டியா..??..நீ ஒன்னும் கவலைப்படாத.அப்பாக்கு ஒண்ணும் ஆகாது.. தேவையில்லாம கண்டதையும் மனசுல போட்டு குழப்பாத..காலையில அப்பாகிட்ட போன் பண்ணி பேசுனா எல்லாம் சரியாகிடும்…’
‘ இப்போ எதையும் யோசிக்காத நிம்மதியா தூங்கு..’ என சொல்லிவிட்டு திரும்ப எத்தனிக்க , நம்பிராஜனின் கரங்கள் அவனின் தோளை பற்றி நிறுத்தியது…
‘ என்னடா ஏதாவது வேணுமா…’ என கேட்ட சேகரை இறுகி அணைத்துக்கொண்டான்…
நம்பிராஜனின் செயலில் சில நிமிடங்கள் திகைத்தவன் ‘நம்பி என்னடா.. என்ன ஆச்சு…’ என கேட்டுக்கொண்டு இருந்தவன் தனது தோளின் மேல் பட்ட ஈரத்தினால் அதிர்ந்தான்…
‘டேய் நம்பி என்னடா ஆச்சு.. இங்க பாரு முதல்ல…எதுக்கு இப்போ நீ அழுகுற…’ என பதற்றத்துடன் கேட்டவனுக்கு நம்பிராஜனின் அழுகையில் குலுங்கிய உடல் மொழி வேறேதோ செய்தி இருப்பதாய் மனது உணர்த்தியது…
அழுகையில் கரைந்தவனின் மனம் சற்றேனும் சமன்படட்டும் என எண்ணி ஆதூரமாய் தட்டிக்கொடுத்தப்படி சேகர் இருக்க…துயரை துறந்திட எண்ணி அழுகையிலே தன்னை கரைத்துக்கொண்டு இருந்தான் நம்பிராஜன்…
எவ்வளவு நேரம் தான் நிற்க முடியும் ஆனால் அழுகையும் அப்போதைக்கு ஓய்வதாய் இல்லை…அவனுக்கு தெரிந்த நம்பிராஜன் எதற்குமே இந்த அளவு மனம் கலங்கியது கிடையாது…
கண்ட கனவின் தாக்கமாய் இருக்குமென அவனால் நிச்சயம் நம்ப முடியவில்லை… ‘நம்பி இங்க பாரு…ஏன் இப்படி அழுற…முதல்ல விஷயத்தை சொல்லிட்டு அழு…இப்படியே மணி கணக்கா அழுதா எல்லாம் சரியா போயிடுமா..’
‘முதல்ல நேரா நில்லு ..’ என கோவத்துடன் மொழிந்தப்படி தன்னிடம் இருந்து அவனை வலுக்காட்டாயமாக பிரித்தெடுத்தான்…
கன்னங்களில் கண்ணீர் பெருக சேகரை காணாது வேறெங்கோ பார்த்தபடி இருந்த நம்பிராஜனின் முகத்தை தன் முகம் பார்க்கும் படி தன்னை நோக்கி திரும்பியவன் ‘என்னன்னு சொல்ல போறியா இல்லையா…இப்படி நட்ட நடு ராத்திரியில எழுந்து உட்கார்ந்து இப்படி அழுகுற அளவுக்கு என்ன நடந்தது…’ என கோவத்துடன் முறைத்துக்கொண்டே கேட்டான் சேகர்…
‘ஒண்ணுமில்ல….’ என சொல்லிவிட்டு கண்களை துடைத்தப்படி தனது படுக்கையில் விழுந்தவனை சேகரின் கரங்கள் எழுப்பியது…
‘என்னடா நினைச்சிட்டு இருக்க,உன்னோட மனசுல.என்னைய பார்த்தா கேனையன் போல தெரியுதா..??..நீ அழுதா நாங்க காரணம் கேட்க கூடாதோ..??…’என்றவன் மேலும் கோவத்துடன் தொடர்ந்தான்… ‘முதல்ல எங்களை உன்கிட்ட ப்ரண்டா நினைச்சி இருந்து இருந்தா எங்களோட சகஜமான முறையில பேசி இருப்ப…சாதாரணமான விஷயத்திற்கே எங்களை விட்டு பல்லாயிரம் மைல் தூரம் நிக்கிற நீ..இப்போ ஏதாவது பிரச்சனை அப்படின்னு வரும்போது எங்ககிட்ட சொல்லிட்டு தான மறுவேலை பார்ப்ப…’ என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியப்படி கோவத்துடன் பேசிக்கொண்டு இருந்தவனை அமைதியாய் நோக்கினான்…
அப்பெரிய வளாகத்தில் அன்னை குழந்தைகள் இல்லம் என்ற பெயரை தாங்கி நின்றது முதல் தளம்…வரவேற்பு அறையை ஒட்டி இரு பெரிய அறையும் அதனை தாண்டி சின்னதாய் ஒரு சிறிய அறையில் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்களும் ,அதனை ஒட்டிய மற்றொரு அறை குழந்தைகள் படம் வரைவதற்கென ஓவிய அறையாகவும் ஒதுக்கப்பட்டு இருந்தது …
முதல் பெரிய அறையின் கதவு குழல்மொழி குழந்தை நல மருத்துவர் என்ற பெயர் பலகையை தாங்கி இருந்தது…
அறையின் உள்ளே இருந்த குழல்மொழியின் முகம் கோவத்தால் சிவந்து போய் இருந்தது…தன் அருகில் இருந்த பணிப்பெண்ணை கோவத்துடன் முறைத்தாள்….
‘என்ன இது கோதை…இது எப்படி நடந்தது …இவ்ளோ அஜாகிரதையா தான் இருப்பீங்களா…கொஞ்சம் கூட பொறுப்பு இருக்கா உங்களுக்கு…உங்களை நம்பி தான இங்க இருக்குற குழந்தைகளை விட்டுட்டு போறோம்…அப்புறம் எப்படி நீங்க இப்படி நடந்துக்கலாம்…’ என பொரிய துவங்கியவள் ,
‘இல்ல மேடம்…அது வந்து..நான்…’ என பதில் சொல்ல முடியாமல் தினறியவளை தன் கையை உயர்த்தி நிறுத்துமாறு கூறியவள் ‘ நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்…நான் ஒன்னும் பணம் காசுக்காக இதை செய்யல…என்னோட மன நிம்மதிக்காக செய்றேன்…அப்படி செய்ற என்னோட ஒரு விஷயத்துல தப்பு நடக்குறத்தை தாங்கிக்க முடியாது…
‘செய்ய விருப்பம் இல்லாதவங்க இங்க இருக்க வேண்டாம் ..நீங்க உங்களோட இந்த மாத சம்பளத்தை வாங்கிட்டு போயிடுங்க…நான் ரிசெப்சன்ல இருக்குற சக்திக்கு போன் பண்ணி உங்களோட செட்டில்மெண்ட் பணம் புல்லா தர சொல்லிட்றேன்..இத்தனை மாதம் செய்த உங்கள் சேவைக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள்…’ என சொல்லியவள் அடுத்த நொடி சக்திக்கு அழைத்து விவரத்தை சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள்…
குழலின் கோவத்தை நன்கு உணர்ந்த கோதை மேற்கோண்டு எதுவும் பேசாமல் அமைதியாய் வெளியேறினாள்…
அதன் பின் குழந்தைகள் இருந்த அறைக்கு சென்று அங்கிருந்த ஆயாவிடம் குழந்தைகளை பற்றி விசாரித்தாள்…ஒரு சில குழந்தைகள் மருந்தின் வீரியத்தால் உறங்கிவிட்டு இருக்க ,ஒரு சில குழந்தைகள் அழுதுக்கொண்டு இருந்தனர்…அவர்களிடம் விறைந்தவள் குழந்தையை பரிசோதித்தாள். .குழந்தையை தூக்கி தட்டிக்கொடுக்க குடித்த பாலெல்லாம் அவளின் மீதே வாந்தி எடுத்தது அந்த பச்சிளம்…
‘அச்சோ என்ன கண்ணு இப்படி ஆயிடுச்சு…நீங்க எதுக்கு குழந்தையை தூக்கினீங்க..நான் பார்த்து இருப்பேன் இல்ல…’ என்றப்படி ஆயா நெருங்க ,’வேண்டாம் ஆயா…பச்ச குழந்தை உடம்புக்கு முடியாம வாந்தி எடுக்குது…கழுவினா இதெல்லாம் போயிடும் ஆனா இந்த குழந்தைங்க பட்ற கஷ்டத்தை நம்பலாள வாங்க முடியுமா…’
‘இந்த பிஞ்சுங்க என்ன பாவம் பண்ணுச்சுங்க.. தாயால நிராகரிப்பட்டு இப்போ தாயோட அரவணைப்பு இல்லாம வளர்றாங்க…தாய் பாலின் ருசியை கூட அறிந்திராத பிஞ்சுகள் இவன்களுக்கு துரோகம் பண்ண எப்படி அந்த கோதைக்கு மனசு வந்ததது…’ என உள்ளம் குமரியவளை கண்டு அந்த ஆயாவால் இரக்கப்பட மட்டுமே முடிந்தது…
அவரால் மட்டும் என்ன செய்ய இயலும், நல்லவளை போல பேசிப்பேசி காரியத்தை இத்தனை நாள்கள் செய்துக்கொண்டு இருக்கிறாளே மோசக்காரி…புள்ளைய பெத்தாளோ இல்ல கல்லை பெத்தாளோ…
குழைந்தையோட பாலை வித்து பணம் சம்பாதிச்சு இருக்குற ஈனப் பிறவி…கெட்டுப்போன பழைய பாலை ஊத்தி குடிக்கவச்சிட்டு இப்போ அஞ்சு குழந்தைங்க உடம்புக்கு ஒத்துகாம வாந்தி எடுத்திட்டு இருக்குங்க… இவளை எல்லாம் ஆண்டவன் மன்னிக்கவே மாட்டான் ,சாகும் போது என்ன மாதிரி சாவு வருமோ என எண்ணத்தை தாண்டிய வேதனையில் உள்ளத்தில் தோன்றியது…
ஆயா குழந்தையை கழுவி சுத்தம் பண்ணுங்க…என்ற குழலின் பேச்சில் நினைவிற்க்கு வந்தவர் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றார்…
பின்னர் வரவேற்பில் இருக்கும் சக்திக்கு அழைத்து விவரத்தை சொல்லி பார்த்துக்கொரம்ள்ளுமாறும் இன்னும் 5 நிமிடத்தில் உடை மாற்றிக்கொண்டு வருவதாகவும் கூறிவிட்டு சென்றாள்…
தனது அறைக்கு சென்று ஏற்க்கனவே இருக்கும் மாற்றுடையை எடுத்தவள் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி எழுப்ப அதனை திறந்து பார்த்து அக்குறுஞ்செய்தியினை வாசித்தாள்…
“நம்பியின் அம்மா இங்க வந்து சேர்ந்தாச்சு…’ என்ற செய்தியை கண்டவளின் கண்களில் மெல்லியதாய் குறும்பில் சிரித்தன.
இருதயப் பூவின் மொழி தொடரும்…