வானதி அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கையில் அவளைச் சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் எஜமானிக்கு அப்படி கூட்டம் இருந்தால் பிடிக்கும். சென்ற வாரம் கூட நட்பு வட்டத்திற்காக ஒரு பார்ட்டி. அதுவும் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் அவளுக்காக என்றே ப்ரத்யேகமாக நடந்த நட்பு விழா.
அதன் நினைவுகளின் தாக்கத்தில் நின்ற வானதியை, அவள் தாய் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே நடு நாயகமாக கிடத்தியிருந்தார்கள் அவளை. அந்த வீட்டு எஜமானி, வானதியின் பள்ளிப் பருவத்திலிருந்து அவளுடனே வளர்ந்த உயிர்த் தோழி. இன்று அல்பாயுசில் உயரைவிட்டு கண்ணாடிப் பெட்டிக்குள் மீளா உறக்கத்திலும் மேக்கப் கலையாது படுத்திருக்கிறாள்.
அவள் அருகில் ஒரு சிறு கண்ணாடிப் பெட்டிக்குள் அவள் போற்றிக் கொண்டாடிய அவளது தங்க மகன், ஒரு வயதைக்கூடத் தாண்டாத மழலையும் தாயுடனே சென்றுவிட, அவர்களின் உடல்கள் மட்டுமே, அவர்களைச் சார்ந்திருந்த நெருங்கிய சொந்தங்களுக்கும் நட்புகளுக்கும் மிச்சமாய் இருக்கின்றது.
எல்லாவற்றையும் தன்னிடம் பகிர்ந்த தோழி, இனி எதுவுமே சொல்லப்போவதில்லை என்பது தாக்க, கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது வானதிக்கு. அவள் நிற்க முடியாமல் தள்ளாட, அவள் அம்மா அணைத்தபடியே மெல்ல நகர்த்தி ஒரு இருக்கையில் அமர்த்தினார்.
“இதுக்காகவாடி அப்படி ஆர்பாட்டமா வாழ்க்கையை அனுபவிச்ச ? அடுத்து அடுத்துன்னு ஓடுவியே….. இப்ப …இப்ப ..நின்னு நிதானிச்சு நீ தேர்ந்தெடுத்த இந்த வாழ்க்கையை அனுபவிக்காம, இப்படி சிதறடிச்சிட்டு போயிட்டியே….”, மனம் ஓலமிட்டது. மனதின் வலி முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது, ஆனால் அவள் கண்களில் மட்டும் ஏனோ கண்ணீர் வரவில்லை.
தலை மாட்டில் அமர்ந்திருந்த அவள் தோழியின் மாமியார், “வானதி, பார்த்தியா உன் ஃப்ரெண்ட ? போன வாரம் எவ்வளவு ஆசையா உனக்காக பார்ட்டி வெச்சா? நீ ஊர் போய் சேரத்துக்குள்ள, அவ மொத்தமா போயிட்டாளே….. என் புள்ளையை இப்படி நிர்கதியா நிக்க வெச்சிட்டு அவ புள்ளையையும் சேர்த்து கூட்டிட்டு போயிட்டாளே…. என் மகனை என்னால பார்க்க முடியலையே… என் பிஞ்சு பேரனை வாரிக்கொடுத்துட்டு, நான் ஆயுசை வெச்சிருக்கேன். இந்த கொடுமையெல்லாம் பார்க்க என்ன பாவம் செஞ்சேனோ….”, அடித்துக்கொண்டு அழும் அந்தம்மாவைத் தேற்ற அவர் அருகில் சென்றவளுக்கு தொண்டை அடைத்தது.வானதியின் அம்மாதான் ஏதோ தேறுதல் வார்த்தைகளைக் கூறிக்கொண்டிருந்தார்.
அவர் அருகில் அழுது வீங்கிய முகத்தோடு, ஜீவனற்று இருந்தார், சந்திராம்மா.அவள் தோழியின் தாய். பல நாட்கள் அவளுக்கும் தாயாய் இருந்தவர்.எப்போதோ இளம்பிராயத்திலேயே ஆன்ட்டியிலிருந்து சந்திராம்மாவாகியிருந்தார். இவள் அம்மா சந்திராம்மாவை அணைக்க, பேச முயன்றவர் குரல் கட்டியிருந்தது…. கண்ணில் நீர் சுரக்க கையை மகள் புறம் காட்டி முகத்தில் அறைந்துகொண்டார்.
யார் யாரை தேற்றுவது? இருபத்தினான்கு வயதில் மகாபலிபுரம் ரோட்டில் வந்த லாரியிடம் ஆயுசைத் தொலைத்தவளை என்ன காரணம் சொல்லி இருப்பவர்கள் மனதை சமாதானப்படுத்த முடியும் ? ஆயுசு தீராதா, குடும்பத்தின் மேல் பாரமாய் இருக்காமல் போய்விட மாட்டோமா என்று ஏங்குவோர் பலரிருக்க, வாழவேண்டிய குருத்து, மொட்டு விட்ட தன் மகனோடு முந்திக்கொண்டதற்கு யாரை நிந்திக்க ?
சிலையாய் அமர்ந்திருந்த வானதியிடம், நட்பு வட்டம் வந்து ஆறுதலாய் கைப்பிடித்தது.அவள் தோழியின் சொந்தங்களில் அனேகம் பேருக்கு அவளை நன்றாகத் தெரியும். எல்லோரும் ஆறுதல் கூறினார்கள். மகளை இழந்த தாய்க்கு நீயும் ஒரு மகளாக இரு என்று அறிவுறித்தினார்கள். என்னன்னவோ பேச்சு, அவளைச் சுற்றி வெறும் இரைச்சலாக கேட்டது. கையை அழுத்தினார்கள், தோளணைத்தார்கள், எல்லாவற்றுக்கும் தலையாட்டினாள்.
என்னவோ திடீர் பரபரப்பு. ஆட்கள் வந்து கண்ணாடிப் பேழையை அகற்றி, தாயும் சேயுமாய் அருகருகே வைக்க, குளித்து ஈர வேட்டி, துண்டுடன் வந்த அவள் தோழியின் கணவன், இறுகிய முகத்துடன் சாங்கியங்கள் சில செய்ய, பெண்களுக்கு வாய்க்கரிசி தரப்பட்டது. கையில் வாங்கிய அரிசியைப்பார்த்தவளுக்கு, தோழியின் கல்யாண நாள் அன்றும் தன் கையில் தரப்பட்ட அட்சதை நினைவுக்கு வந்தது. ‘அந்த மஞ்சள் வாசனை காயும் முன்னே இப்படியாடி வாய்க்கரிசி போட வைப்ப?’, மனதுக்குள் தோழியோடு சண்டையிட்டாள் வானதி.
வாய்க்கரிசியிட்டு அவளை சுற்றி வரும்போது, நெஞ்சை அடைத்தது வானதிக்கு. தோழியின் கணவனிடம் மஞ்சள் குங்குமம் கொடுத்து நெற்றியிலும், தாலியிலும் வைக்கச் சொல்ல, நடுங்கும் கைகளோடே வைத்தவன், அவர்களுக்கு கற்பூரம் காட்ட, மடிந்து விழுந்து அவள் பாதம் பற்றி, “ஸ்வேதா…..”, என்று கதறினான்.
“வினோத்…. “, என்று அவன் சித்தப்பா அணைத்து எழுப்பினார்.
“சித்தப்பா… என் பிள்ளை, என் பெண்டாட்டி…”, அதற்கு மேல் வார்த்தை வரவில்லை வினோத்திற்கு. அந்தக் கதறல், வானதியைக் கலங்கடித்தது. அதுவரை காய்ந்திருந்த கண்கள் தாரை தாரையாய் நீரைச் சுரந்தன.
எங்கோ தொலைவில் கேட்டது “மெல்ல …மெல்ல தூக்குங்க…பத்திரம்.”, “வழி விடுங்க… “, “பூ மாலை எங்கப்பா… பூ கூடையை வைங்க வேன்ல”… இன்னும் என்னன்னவோ இரைச்சல். அவளைச் சுற்றிலும் ஆட்கள், பரபரப்பு. சுவரில் பிடிமானத்திற்காக சாய்ந்த வானதி, சரிந்து அமர்கையிலேயே மயங்கியிருந்தாள்.