ஈஸ்வரியின் வளைகாப்புக்கு இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில், நாளை காலை ஊரிலிருந்து இரு வீட்டார் சுற்றங்களும் வந்து விடுவார்கள். யோகி ஊருக்குச் சென்றிருந்தபோது அனைவருக்கும் ரயிலில் முன்பதிவு செய்து விட்டு வந்திருந்தான்.
ஆட்கள் அதிகமாக இருந்ததால், யோகி பக்கத்தில் ஒரு சத்திரத்தை ஏற்பாடு செய்து விட்டான். கீழே ஒரு வீடு மேலே ஒரு வீடு என்று வாடகைக்கு இருந்தபோதும் வரும் மக்கள் அதிகம் என்பதால் இந்த சத்திர ஏற்பாடு.
யோகி, சுகுமாரன் வீடு சென்று அவர்களை சம்பிரதாயப்படி வளைகாப்பில் கலந்து கொள்ள வருமாறு சென்னைக்கு அழைத்தான். பின், யாரும் எதிர்பாரா வண்ணம், அதாவது கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேர பயண தூரத்திலிருக்கும் வனிதாவின் வீட்டுக்குச் சென்று அவளது குடும்பத்தையும் ஈஸ்வரியின் விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தான்.
அதன் பின்னர் யார் யாருக்கெல்லாம் பிரயாண சீட்டு பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டதில் முதலில் சுகுமாரனின் அம்மா அப்பா அத்தை, மாமா என்று ஒரு லிஸ்ட் முடித்ததும் அடுத்து வனிதாவுக்கு போன் செய்து சென்னை வருபவர்களின் பெயரைக் கேட்டறிந்தான். பின்னர் ஊரில் இவனது நலம்விரும்பிகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. கடைசியாக யோகி முன்பதிவு செய்யும்போது அந்த குறிப்பிட்ட ரயிலின் இரண்டு கோச் முழுவதுமாக நிரம்பி இருந்தது.
“எதுக்குப்பா ஊரே திரண்டு வருது?”, என்று வசந்தி யோகியிடம் கேட்க..
“ஹ ஹ ஏன் கேக்கமாட்டாங்க? ஊர் பிள்ளைங்க எத்தனை பேருக்கு ட்யூஷன் சொல்லி குடுத்திருக்கா? எத்தனை பசங்கள பேங்க் வேலைக்கு எக்ஸாம் எழுதுங்கடான்னு மிரட்டி இருப்பா? ஊர்ல பாதிப் பசங்க அரசாங்க உத்தியோகம் பாக்கறாங்கன்னா யாரு காரணம்? என் பொண்ணுதான?”, என்று பெருமை பொங்கப் பேசினார் வசந்தி.
“இந்தாப்பா நீயே பேசிக்கன்னு அத்தை போன என்கிட்ட குடுத்துடுச்சு. ‘நீங்க வாங்க அத்தான், வந்து கூப்பிடுங்க.கண்டிப்பா நா வருவேன். இல்லன்னா இவங்க வீட்ல என்னை அனுப்ப மாட்டாங்க’ன்னு வனி ஒரே அழுக. ஹ்ம்ம் என்ன பண்றது? அவளுக்காக போக வேண்டியதா போச்சு”
“நல்ல காரியம்தான் பண்ணியிருக்க. வரட்டும். எல்லாரும் வந்து பாத்து, ஈஸ்வரி நல்லா இருக்கணும்னு வாழ்த்தட்டும்.அதுக்கு தகுந்த மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணிடுப்பா”, என்று வசந்தி அந்த பேச்சை முடித்து விட்டார்.
அடுத்ததாக யோகி சூறாவளியாக காரியத்தில் இறங்கினான். இதோ நாளை மறுநாள் நடக்கும் வைபவத்திற்கு தோரண வாயிலில் வாழை மரம் கட்டுவதற்கு ஏழு மணிக்கு வருவதாக சொன்ன காண்ட்ராக்டர் மண்டப வாசலில் காத்திருக்க, அவரை பார்க்க சென்றிருக்கிறான்.
ஆனால், ஈஸ்வரியோ இன்னமும் சுகுமாரனோடு சகஜமாகாமல் முறுக்கிக்கொண்டு இருந்தாள். ‘வனி வீட்டு ஆளுங்க வரும்போது வாங்கன்னு மட்டும் ஒரு வார்த்த ஈஸ்வரிய கூப்டுட சொல்லிடு சுகு’, என்று சுகுமாரனின் வீட்டில் நச்சரிக்க இதோ மனைவியோடு போராடிக் கொண்டிருக்கிறான் சுகுமாரன்.
“ஈஸு, உங்க அண்ணனே எங்க அக்கா புருஷன் ஊருக்கு போயி விசேஷத்துக்கு வாங்கன்னு கூப்பிட்டு இருக்கார். அவங்க வரும்போது இப்படி உம்மணா மூஞ்சியா இருந்தேன்னு வை, அவ்ளோதான்”, என்று சுகுமாரன் ஈஸ்வரியிடம் சத்தம் போட்டுகொண்டு இருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவளோடு மன்றாடிக் கொண்டு இருக்கிறான். இவ்வளவு நேரமாக கெஞ்சி & கொஞ்சி கேட்டும் அவள் இளகாமல் இருக்க, சுகுமாரன் இப்போது மிஞ்ச துவங்கியுள்ளான்.
மகளும் மருமகனும் பேச ஆரம்பித்ததுமே இல்லையில்லை, மருமகன் மகளோடு பேச ஆரம்பித்ததுமே வசந்தி பர்வதம்மாவைத் தேடி மாடிக்கு சென்று விட்டார். இங்கே கீழே ஈஸ்வரியோ நீ என்னவும் சொல்லிக்கொள், எனக்கென்ன என்பதுபோல அசையாமல் இருக்ந்தாள். கூடவே எட்டு மணி ஆகிவிட்டது, அண்ணன் யோகி வரும் நேரமாயிற்றே என்று டென்சனும் சேர்ந்திருந்தது.
“உனக்கு ஆயிரத்தெட்டு தரவ சொல்லிட்டேன், மறுபடியும் சொல்றேன். அன்னிக்கி வனிதா வீட்டுக்காரர் பேசினத்துக்கு நா பதில் பேசிட்டேன். அதுக்கப்பறம் அந்த ஆளோட இன்னும் ஒரு வார்த்த கூட பேசல. ஆனா, இது வீட்டு விஷேஷம். ஊரே வந்து கலந்துக்குதுங்கும்போது அவரை கூப்பிடாம இருக்கக்கூடாது. நம்ம வீட்டு சார்பா எங்க அம்மா போனாங்க, உன் பொறந்த வீட்டு சார்பா உங்க அண்ணனும் போயி கூப்டுட்டு வந்துட்டாரு.”
“…”
“அவங்களும் கூப்பிட்ட வார்த்தைக்கு மரியாதை குடுத்து வர்றேன்னு டிக்கெட் புக் பண்ணி இருக்காங்க. நாளன்னிக்கி காலைல வளைகாப்பை வச்சிக்கிட்டு நீ எங்கிட்ட முறைச்சிகிட்டு இருந்தா நல்லாருக்காது சொல்லிட்டேன்.”
“..”, அங்கிருந்த ஓடாத தொலைக்காட்சியின் கறுப்புத் திரையை வெறித்துகொண்டு ஈஸ்வரி அமைதியாக இருந்தாள்.
சுகுமாரனின் பொறுமை காற்றில் பறந்தது. கட்டிலில் அவள் அருகே அமர்ந்து இருந்தவன் விருட்டென எழுந்து, “என்னதாண்டி பண்ணனும் உனக்கு? பேசினது தப்புதான். உனக்கு நா தேவையில்லைன்னு தோணுதா? சொல்லு? அப்டியே நேரப் போயி ரயில்ல விழுந்தர்றேன்”, என்று கோபமாக சொன்னான்.
கறுப்புத் திரையிலிருந்து பார்வையை விலக்கி சுகுமாரனை கோபமாக நோக்கிய ஈஸ்வரிக்குச் சரியாக இடது கை வாட்டத்தில் சுகுமாரன் நிற்க, கொஞ்சம் கூட யோசியாமல் அவனை பளிச் சென கன்னத்தில் அறைந்தாள்.
“ஸ்ஷ்”, என்று சொல்லி காந்திய கன்னத்தைப் பிடித்த சுகுமாரனுக்கு சில நொடிகள் ‘ங்கொய்..’ என்ற ரீங்கார சப்தம் மட்டுமே கேட்டது. அவள் அடித்து இருக்கிறாள் என்பதே அதற்குப் பிறகுதான் அவனுக்கு உரைத்தது.
சுள்ளென கோபம் தலைக்கேற, “ஏய்.பண்றதையும் பண்ணிட்டு அடிக்க வேற செய்றியா?”, என்று அடித்த அவள் கையைப் பிடித்து முறுக்கினான்.
ஒரு கையை கணவன் பிடித்திருக்க, தனது மறுகையால் கொத்தாக அவனது தலைமுடியைப் பிடித்து தன்னருகே இழுத்த ஈஸ்வரி, சுகுமாரன் கொஞ்சம் கூட எதிர்க்க முடியாத ஒரு செயலைச் செய்தாள்.
முடியைப் பிடித்து இழுத்த வேகத்தில் அவளது முகத்தின் அருகே வந்த சுகுமாரனை, தன் நெடுநாளைய கோபம், இப்போது அவன் கையை முறுக்கியதில் ஏற்பட்ட வலி அனைத்தும் ஒருங்கே சேர வன்மையாக, மிக வன்மையாக முத்தமிட்டாள் ஈஸ்வரி.
ஆங்காரமாக, தனது கோபத்தின் வெளிப்பாடாக இதழ் ஒற்றலை துவங்கியவள் ஈஸ்வரிதான். ஆனால், சற்று நேரத்தில் கணவனின் பேச்சும் அவனது கோபத்தின் காரணத்தையும் உணர்ந்து அவளின் மனம் தானாக இளக ஆரம்பித்தது. மெல்ல தலைமுடியின் பிடியை தளர்த்தி அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
சுகுமாரனுமே முதலில் திகைத்துத்தான் போனான், ஆனால் வன்மையைக் காட்டினாலும், அவளது அருகாமை அவனுக்குத் தேவையாக இருந்தது. பொங்கும் பாலில் தெளிக்கும் குளிர் நீர்போல, அவளது ஒற்றை முத்தத்தில் முற்றிலுமாக அவனது கோபம் வடிந்திருந்தது.
தன்னிடமிருந்து விலகிய ஈஸ்வரியின் முகத்தில் கண்ணீர் வழிந்து கொண்டு இருக்க, அவள் முகத்தை கையில் ஏந்தியிருந்த சுகுமாரன் கண்ணீரைத் துடைத்து, “என்னம்மா?”,என்றான்.
“போறதா இருந்தா என்னையும் தூக்கிட்டுப் போ, வீல்சேர்ல அங்கல்லாம் வர முடியாது”, என்று அழுதாள் மனைவி.
“என்னடி சொல்ற?”, அவளை சிறுவயதில் இருந்தே பார்ப்பவன் அல்லவா?. அழுகை என்றால் என்னவென்றே தெரியாது எனும் படிதான் ஈஸ்வரி இருப்பாள். அவளது கோபம் சுகுமாரனுக்கு நன்றாக தெரியும், அது பழக்கமானதும் கூட. ஆனால் அழுகை? ஏனென்று தெரியாமல் குழம்பிப் போனான்.
“தண்டவாளத்துல வீல்சேர் போகாதில்ல?”, என்று இன்னமும் கேவி அழுதாள் ஈஸ்வரி.
“ப்ச்.. ஈஸு.. ஒரு பேச்சுக்கு சொன்னா, அதுக்கு இப்படியா அழுவாங்க?”
“பேச்சுக்கு கூட கெட்டதை சொல்லாதன்னு தான் சொல்றேன்”….”அடமா அடம் பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு பாதில விட்டுட்டுப் போவியா?”… “ நீயெல்லாம் நினைச்சா தற்கொலை பண்ணிக்க முடியும் ஆனா எனக்கு அதுக்கு கூட ஒரு ஆள் ஹெல்ப் பண்ணனும். அதான் சொன்னேன்.ரயில்ல விழறதா இருந்தா என்னையும் தூக்கிட்டு போயி விழுன்னு”, என்று கேவல்களுக்கு இடையே பதில் சொன்னாள் மனைவி.
அதைக் கேட்டதும் ‘ஐயோ’ என்று ஆனது சுகுமாரனுக்கு. ஈஸ்வரியின் இடது புறமாகத்தானே நின்றுகொண்டிருந்தான்? மனைவியை சமாதானம் செய்யும் விதமாக தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, “ப்ச். தெரியாம பேசிட்டேன் சும்மா சும்மா அழாதடா”, என்றான்.
என்னதான் கூடவே இருந்தாலும், நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டு இருந்தாலும்,அவரவர் வலிகளை அவரவர் தான் புரிந்து கொள்ள முடியும்,என்று அவனுக்குத் தோன்றியது.
சிறிது நேரத்திற்கெல்லாம், “என்ன பண்ணனும் சுகு? அத்த மாமாட்டல்லாம் எப்போதும் போல பேசுவேன். அண்ணி வந்தா வாங்கன்னு சொல்றேன். அவ்ளோதான். அதுக்கு மேல எங்கிட்ட எதிர்பாக்காத”, என்று தலை தூக்கி கணவனைப் பார்த்த ஈஸ்வரி பழைய ஈஸ்வரியாக மிரட்டினாள்.
புன்னகைத்தவன், “இன்னும் ஒன்னு பண்ணனும்”
ஈஸ்வரி, “?”,என்பதுபோல புருவம் நெரிய பார்த்தாள்.
“இதே மாதிரி அடிக்கடி எங்கூட சண்டை போடணும்”, என்று சுகுமாரன் கேட்டதற்கு..
‘அப்ப அடிக்கடி உன் வீட்டு ஆளுங்க என்னை ஏதாவது சொல்லணுங்கிறியா?’, என்று மனதில் தோன்றியதைக் கணவனிடம் கேட்காமல், அமைதியாக கணவன் பிடியில் கட்டுண்டு கிடந்தாள் ஈஸ்வரி.