வீட்டு வாசலில் நிழலாடவும் நிமிர்ந்து வெளியே பார்த்த ஸ்ருதி, அங்கே வசந்தம்மா வருவதை கவனித்து, “வாங்க ” , என்று மெல்லிய முறுவலோடு தலையசைத்து வரவேற்றாள். அவர் பின்னால் வந்த யோகியை அதன் பின்னர் கவனித்தாள். அவனையும் வரவேற்கும் விதமாக வெறுமே தலையசைத்தாள்.
ரமணனுடன் பேசிவிட்டு நேரே ஸ்ருதியின் வீட்டிற்கு வந்திருந்த நந்தினிக்கு கீழ் வீட்டில் குடியிருக்கும் வசந்தம்மாவை ஓரளவு தெரியும், ஆனால் யோகியைப் பார்த்ததாக நினைவில்லை.
பர்வதம்மா வசந்தியைக் கண்டதும், “வா வசந்தி, வாப்பா யோகி உக்காரு”, என்று தன்னியல்பாக அழைத்தார். அவ்விருவரும் உள்ளே வர, வசந்தி பர்வதம்மாவிற்கு அருகே சென்று உட்கார யோகி புதியவளான நந்தினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூடத்தில் இருந்த இரட்டை இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான்.
யோகியின் கேள்விப் பார்வையை புரிந்து கொண்ட பர்வதம், “இவங்க மூணு வீடு தள்ளி இருக்காங்க, விஷால்ன்னு ஒருத்தர் வருவாரில்ல? அவரோட சம்சாரம்”, என்று நந்தினியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
நந்தினியிடம் “யோகி வசந்தியோட பையன்”, யோகியை முறைப்படி அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின் வசந்தியைப் பார்த்து, “யாரை பத்தி பேசிட்டு இருந்தோம்னு கேட்டல்ல? நேத்து இங்க வந்தானே அந்த லோகேஷும் அவனோட ஆளுங்களும். அவனை பத்திதான் பேசிட்டு இருந்தோம்”
“ஓ!, என்னவாம்?”, என்று வசந்தி கேட்டார். யோகியிடம் லோகேஷ் பற்றி நேற்றே ஒரு பாட்டம் பாடி இருந்தார். அதோடு நந்தினி சொன்ன தகவல்களும் இப்போது பர்வதம்மா மூலம் அங்கே மறு ஒளிபரப்பு ஆகியது.
எல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக, “எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு. பேசாம வீட்டை அவங்களுக்கே குடுத்துடலாம்ன்னு தோணுது”, என்று நைந்த குரலில் சொன்னார் பர்வதம்.
நேருக்கு நேர் மோதுபவனை எதிர்கொள்ளமுடியும், பின்னிருந்து முதுகில் தாக்குபவனை? அதிலும் வரைமுறைகளைப் பற்றியோ நியாய அநியாயத்தைப் பற்றியோ கிஞ்சித்தும் யோசியாதவனிடம்?
“ம்ப்ச். அத்த…”, என்று ஸ்ருதியும்..
“நீங்க சும்மாயிருங்க பர்வதம்மா”,என்று வசந்தியும் அவரை வேகமாக மறுத்தனர்.
நந்தினிக்கு பர்வதம்மா சொன்னது திகைப்பாக இருந்தது. ஆனாலும் இந்த விஷயத்தில் அவள் என்ன கருத்து சொல்லி விட முடியும்? காரணம் தனபாலன் எப்படிப்பட்டவன் என்பதை இப்போது கொஞ்ச நேரம் முன்புதானே ரமணன் வாயிலாக சொல்லக் கேட்டாள்?
பர்வதம்மாவின் பேச்சுக்கு பெண்கள் மூவரும் அவரவர் மனநிலையை வெளிப்படையாகப் பிரதிபலிக்க, யோகி மட்டும் ஏதும் கூறாமல் கூர்மையாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பர்வதமோ, “இல்ல வசந்தி நா நிஜமாத்தான் சொல்றேன், இந்த வீட்டினால குடும்பத்துக்குப் பிரச்சனை வருதுன்னா இதை குடுத்துட வேண்டியதுதான்”, என்றார் தீவிரமாக.
விரக்தியாக, “ஹ்ம். என்ன வீடு? நா பாத்துப் பாத்து வளத்த புள்ளையே இல்லாம போயிட்டான், இந்த இடமெல்லாம் என்ன? வெறும் தூசு”, என்றார் பர்வதம்.
யோகி, “அட என்ன பர்வதம்மா? எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறீங்க? பிறப்பும் இறப்பும் நம்ம கையிலயா இருக்கு?”, என்று திருவாய் மலர்ந்தான்.
“அதான? ஆனா இது அப்படி கிடையாதே? எவனோ ஒருத்தனுக்கு பயந்து இருக்கிற இடத்தை விட்டுட்டு போணும்னு சொல்லறீங்களே? நல்லாவா இருக்கு?”, என்று கேட்டார் வசந்தி.
“ஆமா, வசந்தம்மா சொல்றதுதான் கரெக்ட், நீங்க என்ன சொன்னாலும் நா இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”, என்று ஸ்ருதி குரல் உயர்த்தி சொல்லவும்,
பர்வதம்மா கடுகடுப்புடன், “நீ எதுக்கு ஒத்துக்கணும்? இல்ல நீ எதுக்கு ஒத்துக்கணும்னு கேக்கறேன்? இந்த இடத்தை.. என் கல்யாணத்தப்ப குடுத்த நகையை வச்சு உங்க மாமா வாங்கினார். அப்ப அவருக்கு போட்ட மோதிரத்தையும் என்னோட தாலியையும் வித்துதா முதன்முதலா இங்க குடிசை போட்டோம். அதுக்கப்பறம் மூணு வருஷம் சிறுக சிறுக சேத்து வச்சு ரெண்டு ரூம் கட்ட முடிஞ்சது. அப்படி கொஞ்சம் கொஞ்சமா கைக்காசை போட்டுத்தான் நாங்க இருந்த ஓட்டு வீடு உருவாச்சு. ஆனா வீடு ஒரு அமைப்பா ஆகி ரெண்டு வருஷத்துக்குள்ள உங்க மாமா போய் சேர்ந்துட்டார்”
“அடுத்து ரகு தலையெடுத்து வர்ற வரைக்கும் அந்த ஒட்டு வீடுதான். வீட்டைச் சுத்தி காய்கறி கீரைன்னு எவ்ளோ போட்டிருப்பேன்?”, என்று விட்டு ஜன்னல் பக்கம் திரும்பி கையைக் காண்பித்து, “இதோ தெரியுது பாரு, இந்த எலுமிச்சையும் மாமரமும். யார் வச்சது தெரியுமா? உங்க மாமா நட்டது. அவரு கைபட்டா போதும் பட்டுப்போன மரமும் பச்சுன்னு வளரும். இங்க அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க ‘இந்த மரத்தை கொஞ்சம் நட்டுட்டு போங்கன்னு எத்தனை பேரு உங்க மாமாட்ட வருவாங்க தெரியுமா?”, என்று சொல்லும்போது பர்வதம்மாவின் குரல் கமறியது.
தொண்டையை செருமிக்கொண்டு, “இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, உன்னைவிட எனக்கு இந்த வீட்டு மேல உரிமை மட்டுமில்ல, ஒட்டுதலும் ஜாஸ்தி”,என்று பெருமூச்சு விட்டார்.
அதே வேகத்தில் வசந்தியைப் பார்த்து, “ஆனா இப்போ எனக்கு இந்த வீடு முக்கியமா இல்ல, நண்டும் சிண்டுமா வச்சிட்டு..”, ராகவ் கூட இல்லாம, என்று என்னமோ சொல்ல வந்தவர் அதை விழுங்கி, “நிம்மதி முக்கியமான்னு வரும்போது நிம்மதிதான் முக்கியம்னு தோணுது”, என்று முடிவாக சொன்னார்.
அவர் பேசி முடித்ததும் அந்த இடத்தில் எள் போட்டால் எண்ணிவிடலாம் என்பதுபோல நிசப்தம் நிலவியது. பர்வதம்மாவின் வாதங்களுக்கு யார் என்ன மறுமொழி சொல்ல முடியும்?
ஸ்ருதிக்கு அத்தை மனதுள் எவ்வளவு பாரம் சுமந்துகொண்டு இருக்கிறார்? என்று தோன்ற ஏதும் பேசாமல் இருந்தாள். ஆனாலும் ஒருவனின் மிரட்டலுக்குப் பயந்து வீட்டைத் தருவதில் அவளுக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை.
“அத்த நம்ம நிம்மதிய விட வீடு முக்கியமில்லதான். ஆனா ஒருத்தன் வேணும்னு அநியாயமா தட்டிப் பிடுங்கறாங்கும்போது..”, என்ற ஸ்ருதியின் ஸ்ருதி குறைந்துதான் இருந்தது.
யோகி, “அட என்ன வளவளங்கிறீங்க? பர்வதம்மா குடுக்கலாம்ன்னு தெளிவா சொல்றாங்க, நீங்க என்ன நினைக்கறீங்கன்னு பளிச்ன்னு சொல்லாம..?”, நேரிடையாக ஸ்ருதியிடம் கேட்டான்.
“அது..”, என்று நிறுத்தி.. ‘அத்தை இவ்ளோதூரம் பேசினதுக்கப்பறம் வீட்டைக் கொடுக்கமாட்டேன் னு எப்படி சொல்ல முடியும்?’ தயங்கியவள், சட்டென, “ஆங்.. அந்த எழுபது லட்சம், அது இருக்கே? அதுவும் வாங்கிட்டோம்னு ஒத்துக்க முடியுமா?”, என்று தனது தரப்பு வாதத்தினை வைத்தாள் ஸ்ருதி.
வசந்திக்கு அப்போதுதான் அந்த எழுபது லட்சம் ஞாபகம் வந்தது. “ஆங். அந்த பிரச்சனை வேற இருக்கே? எவ்ளோ தைரியமா வீடு தேடி வந்து பொய் சொல்றாங்க? அதுக்காகவாவது நாம வீட்டை கொடுக்கக்கூடாது பர்வதம்மா”, என்று பர்வதத்திடம் சொன்னார்.
“ஸ்ஷ். வசந்தி”, என்று அமர்த்தி, “அந்த தனபாலனும் அவனோட ஆளுங்களும் எப்படி பட்டவங்கன்னு இவ்ளோ நேரம் படிச்சுப் படிச்சு சொன்னேனே அது உங்களுக்குப் புரியலையா?”, என்றவர்.. நந்தினியைக் கைகாட்டி, “நீயே சொல்லும்மா, அந்த தனபாலன் எப்படிப்பட்டவன்னு..”, என்று சலிப்பாக சொன்னார்.
“ஆமாங்க, ஒரு இடம் அந்தாளுக்கு பிடிச்சுப் போச்சுன்னா அசரவே மாட்டான். அதை குடுக்குற வரைக்கும் நமக்கு பிரச்சனை பண்ணிட்டே இருப்பான் ன்னு வெளில பேசிக்கறாங்க”, நந்தினி.
மருமகளிடம் திரும்பி, “உனக்கு உன் பசங்களை விட, நாம நல்லா நிம்மதியா இருக்கறத விட சொத்து பத்து முக்கியமா ன்னு யோசிச்சிக்கோ ஸ்ருதி”, என்றார் பர்வதம்மா.
எப்போதும் சாந்தமாகவே இருப்பவர்தான், ஆனால் குடும்பத்திற்கே கேடு வரும் சூழலில் எப்படி இவரால் அமைதியாய் இருக்க இயலும்? எனவே அவர் வாதத்தில் பிடியாய் நின்றார்.
“அத்த, உங்களுக்குப் புரியவேயில்லை, நீங்க சொல்ற மாதிரி பணமும் குடுத்து வீட்டையும் குடுத்தா, நாம ஒன்னுமில்லாம நடுத்தெருலதான் நிக்கணும்”, என்று ஸ்ருதி தனது மறுப்பைச் சொன்னாள்.
“ஓ! செடி விக்கற பொண்ணுதான? பேருகூட பூங்கோதை இல்ல?”, என்று வசந்தி மேலும் விவரம் சொன்னார். ஆம் என்பது போல யோகி தலையசைத்தான்.
தாயும் மகனும் பேசிக்கொண்டு இருக்க, ஸ்ருதியின் யோசனையாக முகம் கண்டு வசந்தி பேசுவதை நிறுத்தினார். யோகி கேள்வியாக பர்வதம் ஸ்ருதி இருவரையும் பார்த்தான்.
அவன் பார்வை உணர்ந்து, “அது.. பவர்ன்னா?”, ஸ்ருதி கேட்டாள். பவர் பத்திரம் என்பதை கேள்விப்பட்டிருக்கிறாள்தான் ஆனால், அறுதியிட்டு பவர் என்றால் இதுதான் என்று தெளிவாக இன்னும் தெரியாது.
‘அட,இது கூட தெரியாதா?’ என்று சொல்ல வந்த யோகி, பர்வதம்மாவும் புருவ முடிச்சோடு யோகியின் பதிலுக்காக எதிர்பார்த்து காத்திருக்க, , அவரைப் பார்த்து, “உங்களுக்கு பதிலா உங்க சொத்துக்களை நிர்வாகம் பண்ற உரிமைய இன்னொருத்தங்களுக்கு தந்தீங்கன்னா அதான் பவர் எழுதித் தர்றதுன்னு சொல்வாங்க”
ஸ்ருதி, “ஓ”,என்றாள்.
“அப்ப நமக்கு எந்த பிரச்சனையும் வராதா?”, பர்வதம்.
அவரை நேரிடையாக பார்ப்பதை தவிர்த்த யோகி, “ஏன் வரப்போகுது? எதுவாயிருந்தாலும் பவர் ஏஜென்ட் கிட்ட பேசிக்கங்கன்னு சொன்னா எவன்னாலயும் ஒன்னும் பண்ண முடியாது”, என்றான்.
ஸ்ருதி, “தந்துடலாமாத்தை?”, என்று அத்தையை கேட்க..
“நமக்குத் தொந்தரவு ஏதும் வராதுன்னா..”, என்று பர்வதம் இழுக்க..
“கண்டிப்பா வராது பர்வதம்மா,அதான் சரத்து சொல்றானே?”, வசந்தி அடித்துச் சொன்னார். மகன் பேச்சு அவருக்கு வேதவாக்கு அல்லவா? தவிர அவன் வக்கீலும் கூட. தப்பாயிருக்க வாய்ப்பில்லை என்பது அவர் கருத்து.
“எதுவா இருந்தாலும் சீக்கிரம் பண்ணுங்க ஸ்ருதி, அவன் என்னவோ ஒரு வாரம் டைம் குடுத்துருக்கிறதா..?”, நந்தினி தன் பங்குக்கு விஷயத்தை துரிதப் படுத்தினாள்.
ஸ்ருதிக்கு தனபாலனின் ஆளான லோகேஷின் மிரட்டல் பேச்சு நினைவுக்கு வர, முசுமுசுவென கோபம் பற்றியது. “ஆமா, ஒரு வாரத்துல ஒன்னா வீட்டைத் தரனும், இல்லனா எழுபது லட்சம் வேணுமாம் அவனுக்கு”, என்றாள்.
“ஆமாப்பா, அவன் நம்ம கிட்ட வராத மாதிரி சீக்கிரமா ஏதாவது செய்ய முடிஞ்சா நல்லா இருக்கும்”, பர்வதம்.
“செய்யலாம் பர்வதம்மா, நீங்க யார் மேலயாவது பவர் குடுங்க, அவங்கள வச்சு உடனே கேஸ் போட்டுடலாம். கூடவே மிரட்றாங்கன்னு ஒரு கம்பளைண்ட்-ம் சேத்து பதிவு பண்ணிடலாம்”, யோகி.
“அப்டின்னா நீ சொல்றா மாதிரியே செய்யலாம்ப்பா. நீ என்ன சொல்ற ஸ்ருதி? ”
“எனக்கு இதுல எதுவும் தெரியாது அத்த. நீங்க சொல்றதுதான். யார் பேர்ல தரலாம்னு..?”, என்று ஸ்ருதி பர்வதத்தைப் பார்த்தாள்.
அவரோ, “இவ தம்பி பேர்ல எழுதினா சரியா இருக்குமா?”, என்று யோகியிடம் யோசனை கேட்டார்.
யோகி பதில் சொல்லாமல் இருக்க, ஸ்ருதி அவனை முந்திக்கொண்டு அவசரமாக, “இல்லல்ல, மாதேஷ்ல்லாம் ம் வேணாம்”, என்றாள்.
‘இப்படியொரு பிரச்சன இருக்குன்னு சொன்னாலே போதும். வா வா பூனா க்கு வந்துடு, உனக்குன்னு வாழ்க்கை இருக்கு வாழக்கா இருக்குன்னு பெரீய்ய இவனாட்டம் ஆரம்பிச்சுடுவான். பரதேசி’, என்று மனதுள் தம்பியைத் திட்டினாள்.
“அப்ப..”, என்று இழுத்து எதிரே இருக்கும் நந்தினியைக் காட்டி, “இவங்க வீட்டுக்காரர் பேர்ல எழுதிக் குடுங்க, அவர உங்களுக்கு நல்லாத் தெரியும்தான?”,யோகி கொக்கி போட்டான்.
விஷாலுக்கும் இந்தத் தொல்லைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதென்று யோகியின் உள்மனம் சொன்னது. இல்லெயென்றால், அவனது மனைவி நந்தினி வேலை மெனெக்கெட்டு வங்கி சென்று தனபாலன் குறித்து கேட்டறிந்து இங்கே வந்து சொல்ல வேண்டிய அவசியமென்ன?
அப்படியொன்றும் ஸ்ருதிக்கும் நந்தினிக்கும் கட்டி உருண்டு புரளும் அளவு நட்பெல்லாம் கிடையாது என்பது வரை அவனுக்குத் தெரியும். இருந்திருந்தால், அது ஸ்ருதியின் பிரசவத்தின் போது அது பிரதிபலித்திருக்குமே?, என்பது அவனது எண்ணம்.
அவன் எதிர்பார்த்தது போல, ”அய்யயோ வேணாம் வேணாம்”, என்று வேகமாக மறுத்தாள் நந்தினி. அதைக் கேட்ட யோகிக்கு அவன் யூகித்தது சரிதான் என்று நூறு சதம் உறுதியானது.
நந்தினிக்கோ, ‘திருடன் கிட்டயே சாவிய குடுத்துடுவாங்க போலிருக்கே?’, என்ற பதட்டம் வர, அவளது மறுப்பைக் கண்ட அனைவரும் அவளைக் கேள்வியோடு பார்த்தனர்.
“அது.. அது அவருக்கு ஏதாவது ப்ராப்ளம் வருமோன்னு கொஞ்சம் பயந்துட்டேன்”, என்று சமாளித்து, “உங்களுக்கே தெரியும்,ஏற்கனவே ரெண்டு ஹார்டுவேர் ஷாப் வச்சிட்டு திண்டாடறார். இப்போ இந்த வேலையுமான்னு யோசிச்சேன்”, என்றுவிட்டு, ஸ்ருதியைப் பார்த்து, “தப்பா எடுத்துக்காதீங்க, நாம நாலையும் பாக்கனுமில்லையா? அதுவுமில்லாம இவங்கெல்லாம் ஒரே தொழில்ல வேற இருக்காங்கல்ல?”, என்றாள்.
“ம்ம். சரி வா, தலைவலிக்குது, படுக்கணும்”, என்று அழைப்பைத் துண்டித்தான் விஷால்.
“அவரு வந்துட்டாரு போல, நா கிளம்பறேன்”,என்று துரிதமாக விடைபெற்றுச் சென்றாள் நந்தினி. இங்கே இருந்தால் விஷாலைக் கூப்பிடு நேரே கேட்டு விடலாம் என்று பர்வதம்மா சொன்னால்? இவள் வங்கி சென்று ரமணனைப் பார்த்து பேசியது கணவனுக்குத் தெரிந்து விடுமே? என்ற பயம் கூட நந்தினி வேகமாக இங்கிருந்து புறப்பட ஒரு காரணமாக இருந்தது..
நந்தினி சென்றதும் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தான் யோகி. ”மாதேஷ் ஊருக்குத்தானங்க போயிருக்காரு? வந்ததும் பவர் மாத்திக் கொடுத்துட்டா போச்சு. அப்புறம் அவரை வச்சு கேஸ் போட்றது ஈஸி”, என்றான்.
ஒரு விஷயத்தை வேண்டாமென்று மறுக்கும்போது, மீண்டும் மீண்டும் அதை வேண்டும் என்று வலியுறுத்தினால் மறுப்பு தீவிரமாகும் என்பதை அறியாதவனா யோகி?
புருவம் சுருக்கி தீவிரமான முகத்துடன், “இல்ல. அது சரி வராது. அதுவுமில்லாம நந்தினி சொன்ன மாதிரி இந்த லோகேஷ் ஆளுங்க அடுத்த வாரம் வரைக்கும்தான் நமக்கு டைம் குடுத்துருக்காங்க”, என்று மீண்டும் ஒருமுறை லோகேஷின் ஒருவார கெடுவை நினைவு படுத்தினாள் ஸ்ருதி.
சட்டென, “உன் பேர்ல பவர் எழுதிக் கொடுத்துட்டா?”, என்று கேட்டார் பர்வதம்.
இதில் கொஞ்சம் திகைப்பை வெளிப்படுத்திய வசந்தி, “என்ன பர்வதம்மா, இது என்ன பத்து ரூபா ஐஞ்சு ரூபா விஷயமா? சட்டுனு எழுதிக் குடுக்க?”, என்று கேட்டார்.
வஸந்தியைப் பார்த்து, “ஏன் கூடாது?”, என்று பர்வதமும், “அத்தை சொல்ற மாதிரியே பண்ணிடலாமே?”, என்று ஸ்ருதியும் ஒருங்கே கேட்டனர்.
வசந்தி மகனைப் பார்க்க, அவனோ முடியாது என்பதுபோல மறுத்து, “ஹ ஹ யம்மா அப்ப என் காடு கழனி எல்லாம் யார் பாப்பா?”, என்று யோகி கேட்டான்.
“ஏன்? அவன் மேல கேஸ் போட்டாலும் நீ வந்து பாக்கணும் தானப்பா?”, என்று பர்வதம் கேட்டார்.
ஆனால் ஸ்ருதியோ, “ஒருவேளை அந்த லோகேஷ் கும்பல் ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணிடுவாங்கன்னு…?” என்று கவலையான முக பாவனையோடு கேட்பதுபோல மற்றவர்களுக்குத் தெரியும்படி இருந்தாலும், யோகியைப் பார்க்கும்போது, ‘ஏன் பயமாயிருக்கா?’ என்ற ஏளனம் ஒரு நொடி வந்து சென்றது ஸ்ருதியின் கண்களில்.
எப்போதும் யோகிதான் மிதப்பாய் பேசுவான், மற்றவர் அடங்கிப்போவர் அல்லவா? இப்போது ஸ்ருதிக்கு அவனைச் சீண்ட வாய்ப்பு கிடைத்ததில் ஒரு சின்ன சந்தோஷம்.
அதைவிட முக்கியமாக இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே? இல்லையென்றால் அத்தை, மாதேஷை கூப்பிடு இல்லையா அந்த லோகேஷுக்கே வீட்டைக் குடு என்பார்களே?, என்ற அவசரமும் ஸ்ருதிக்கு இருந்தது.
பொதுவாக, யோகி ஸ்ருதியோடு பேசினால் கூட பர்வதம்மாவையோ அல்லது தன் அன்னை வசந்தியையோ பார்த்தபடி பேசுவான்.
ஆனால் இப்போது ஸ்ருதியின் பேச்சில் பிரத்தியேகமாக ஒரு சீண்டல் தெரிய, சட்டென திரும்பி அவளைப் பார்த்தான். அதில், ஒரு ஏளனம் சில நொடி வந்து போக, ’அட வீட்டுக்காரம்மா என்னம்மா பொடி வச்சுப் பேசுது?’ என்று நினைத்தவனின் இன்னொரு எண்ணம் ‘இதான எனக்கு வேணும்?’.