மாடிக்கு தனது வீடு நோக்கி செல்ல ஆரம்பித்த ஸ்ருதியின் கவனத்தை ஈஸ்வரியின், “அத்த பசங்க எல்லாம் இங்க கீழதான் இருக்காஞ்சாங்க ஸ்ருதி”, தடுத்து நிறுத்தியது. ‘ஏன் என்ன பிரச்சனை?’ யோசித்தவாறே வசந்தியின் வீட்டுக்குப் போனாள்.
வாசல் கதவு விரியத் திறந்து கிடக்க, பெரியவர்கள் யாரும் கூடத்தில் காணோம். ஸ்ரீகுட்டி மட்டும் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தாள். இவளை ஒரு நொடி தலை தூக்கிப் பார்த்து, “ஹாய் மா”, சொல்லி அவளது விளையாட்டைத் தொடர்ந்தாள். அவ்வீட்டின் படுக்கையறையில் அனைவரும் குழுமியிருப்பது ஹாலில் இருந்து பார்த்தாலே தெரிந்தது. மெல்லிய பய உணர்வொன்று ஸ்ருதிக்குத் தலைதூக்க அறைக்குள் சென்றாள்.
அங்கே.. மெத்தையில் பர்வதம்மா படுத்துக்கொண்டு இருக்க அவரது வலது கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டிருந்தது. கட்டிலின் இடப்பக்கம் வசந்தி அமர்ந்திருந்தார். அத்தை கண்மூடி சலமின்றி இருந்ததைப் பார்த்ததும் வெளிறிப்போனவள், வேகமாக பர்வதம்மாவின் அருகே சென்று, “அத்த”, என்று அவர் கையைப் பிடித்தாள்.
“ஸ்ஸ்.. பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல ஸ்ருதி, லோ பிபி ஆயிடுச்சு. அதுவுமில்லாம மனச ரொம்பவும் அலட்டிக்கிட்டாங்களா? டாக்டர் தூங்கறதுக்கு ஊசி போடறேன்னு போட்டார்”, மெதுவாக சொன்னார் வசந்தி .
“டாக்டர் வந்து பாக்கற அளவுக்கு என்ன ஆச்சு?”
“ஹ்ம். நல்லா கேட்ட போ, நாங்க கோவில்லேந்து வரும்போதே அந்த லோகேஷா அவன்? அவனைப் பத்தி புலம்பிட்டே வந்தாங்க. மேலே போம்போதுகூட என் கைப்பிடிச்சிட்டுத்தான் மாடிக்கு ஏறினாங்க. வீட்டுக்கு போனதும் நீ போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கறது தெரிஞ்சதா? அவ்ளதான்”
“ஸ்டேஷனுக்குப் போற ஆம்பளைங்க உயிருக்கே உத்தரவாதமில்ல, இவ தனியா இந்த நேரத்துல போயிருக்காளேன்னு சொல்லி பயந்துட்டாங்க. அப்பயே சடசடன்னு வேர்த்துப் போச்சு. அதோட விட்டங்களா? வாக்கிங் ஸ்டிக் கூட எடுத்துக்காம சைடு கைப்பிடி சுவத்த பிடிச்சிட்டு கீழ இறங்க ஆரம்பிச்சிட்டாங்க. வேணாம் கொஞ்சம் பொறுமையா இருங்க. சரத்தை கூப்பிட்டு என்னான்னு பாக்கச் சொல்றேன்னு சொல்லியும் கேட்கலயே..”
“ஏற்கனவே வெளில போயிட்டு வந்தது. உக்காந்து தண்ணீ கூட குடிக்காம டென்ஷானது, ஸ்டிக் இல்லலாம இறங்கினதால உடஞ்ச கால்ல வெயிட் அதிகம் குடுத்ததுன்னு எல்லாம் சேந்து தல கிறுகிறுன்னு வந்துடுச்சு போல. நல்ல வேளையா நா அவங்களோட பேசிட்டு பின்னாலயே வந்தால தாங்கி பிடிச்சிட்டேன்”
“அப்பவும் சமாளிச்சிட்டு ஸ்டேஷனுக்கு போறேன்னு அடம்புடிக்கிறாங்க. சத்தம் கேட்டு ஈஸ்வரி வந்து, ‘இன்னும் கொஞ்ச நாள் உங்க பேரக்குழந்தைங்களோட இருக்கணும்னு எண்ணம் இருக்கா இல்லியா?’ ன்னு ஒரு அதட்டு போட்டா.”
“அப்பத்தான் புறப்படறத நிறுத்தினாங்க. அதும் நா சரத்தோட ஸ்டேஷனுக்கு போயி ஸ்ருதிய கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி அவங்க முன்னாலேயே அவனுக்கு போனை போட்டேன். அதுல கொஞ்சம் சமாதானமாகி, கீழ் வீட்டுக்கு வந்தாங்க. அதுக்குள்ள ஈஸு இங்க பக்கத்துல பாலி க்ளினிக் வச்சுருக்கற டாக்டரைக் கூப்பிட்டு பர்வதம்மா உடம்ப செக் பண்ண சொன்னா. அவர் வந்து பாத்துட்டு லோ பிபி ஆயிருக்கு, இப்போதைக்கு ட்ரிப்ஸ் போடறோம், நல்லா தூங்கி நார்மலா எழுந்துட்டாங்கன்னா ஓகே. இல்ல மயக்கம் வந்துட்டே இருந்தா வந்து அட்மிட் ஆகுங்கன்னு சொல்லிட்டு போனாங்க”, கவலையாக சொன்னார்.
மெலிந்து காய்ந்து போன பர்வதம்மாவின் கைகளை எடுத்து தன் கையில் பொதிந்து கொண்டு “ஹ்ம்ம்” எனப் பெருமூச்சு விட்டு, “கார்ல வரும்போதே சொல்லியிருக்கலாமே மா?”, என்று வஸந்தியைப் பார்த்தது கேட்டதும்..
“எங்க சொல்ல விட்டீங்க ரெண்டு பேரும்? மாத்தி மாத்தி சத்தம் போட்டுட்டு இருந்தீங்க”, குறை சொல்லும் விதமாக ஆரம்பித்த வசந்தி..தொடர்ந்து..
“நீ ஸ்டேஷனுக்கு போன நேரத்துல சரத்து வெளிய போயிருந்தான். போன்ல கூப்பிட்டதும் உடனே வந்துட்டான்ன்னு வச்சிக்க. அப்போதான் பர்வதம்மாக்கு ட்ரிப்ஸ் போட்டுட்டு இருந்தாங்க.”
“போலீஸ் ஸ்டேஷன் போனீங்களாக்கும்? சரி சரி அத விட்டுட்டு இப்போ குட்டிப்பையனை பாக்கறீங்களா?”, கேட்டது ஈஸ்வரி. அவளது மடியில் சின்னவன் இருந்தான். அவனருகே இருந்த சிப்பரில் பால் காலியாகியிருந்தது.
குட்டிக்கு இன்னமும் முகம் பார்த்து ஆளை அடையாளம் கண்டுகொள்ள தெரியவில்லை, ஆனால் ஸ்ருதியின் குரலும் வாசனையும் மிக நன்றாகத் தெரியும்.இப்போதும் ஸ்ருதியின் பேச்சு சப்தம் கேட்டதாலோ என்னவோ தன் தலையை திருப்பி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் மகன். தனது பிஞ்சுக் கால்களில் இருந்த சலங்கைகள் ஒலியெழுப்ப உதைத்தபடி இருந்தும் பார்வை என்னவோ அம்மாவிடம்.
சின்னவனைப் பார்த்ததுமே ஸ்ருதிக்கு மனம் லேசாகியது. ஏதோ எல்லா தொல்லைகளும் நொடியில் சொடக்கிட்டார்போல் மாயமாக கூடவே அவளுக்கு பாலூறும் உணர்வும் வர, கீழே அமர்ந்து அவனை அள்ளி எடுத்துக் கொண்டாள்.
வசந்தம்மா இனி எதுவானாலும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அறையிலிருந்து வெளியேற, ஈஸ்வரியோ கூடத்திலிருக்கும் ஸ்ரீகுட்டியோடு விளையாடச் சென்றாள்.
பிள்ளைக்கு பசியமர்த்திய பின், ஸ்ருதி மிகவும் களைப்பாக உணர்ந்தாள். குட்டிப்பையன் பால் குடித்தபடி உறங்கியிருக்க, அவனை தன் மடியில் வசதியாக போட்டுக்கொண்டு பர்வதம் படுத்திருந்த கட்டிலைப் பார்த்தாள்.
பின் கூடத்தை எட்டிப்பார்க்க ஈஸ்வரியும் ஸ்ரீகுட்டியும் சளசளத்துக் கொண்டு இருந்தனர். தொலைக்காட்சியில் ஓடும் நிகழ்சியில் அவர்களது கவனம்.
அத்தை எப்போது கண்விழிப்பார், எப்போது நம் வீட்டுக்குப் போவோம் என்று எதிர்பார்ப்போடு ஸ்ருதி அமைதியாக உட்கார்ந்திருந்தாள். காரணம் அப்போதே நேரம் ஒன்பதைத் தொட்டு இருந்தது.
நாளை அந்த போலீஸ்காரர்கள் மறுபடி வீட்டிற்கு வந்தால் என்ன செய்வது? யோகியிடம் அதைப் பற்றி கேட்கவேண்டும். இவன் வக்கீலா? ஆனால் எப்போதும் வயல் வரப்பு பயிர் பச்சை குறித்து பேசியதாகத்தான் தெரிகிறது. இந்த வசந்தம்மா கூட இதைப் பற்றி சொல்லவில்லையே? ஹ்ம்ம் சரி பார்க்கலாம். நாளை பேசலாமென்றான்.இல்லையென்றால் தேவகி மேடத்திடம் ஆலோசனை கேட்கலாம்.
மேலே மாடியில் சாப்பிட என்ன இருக்கிறதோ, எப்படியிருந்தாலும் அக்கா ஏதேனும் தயார் செய்து இருப்பார், என்று பலவாறான சிந்தனையில் ஸ்ருதி சற்று கண்ணயர, திடீரென “ஸ்ரீம்மா..”,என்று கத்தலோடு பர்வதம் விழித்தார்.
அதில் திடுக்கிட்டு எழுந்தது ஸ்ருதி மட்டுமல்ல, அவள் மடியில் இருந்த சின்னவனும்தான். பாட்டியின் குரலுக்கு குழந்தை உலுக்கி விழ, ‘ஷ்.ஷ்.’ என்று அவனை சமாதானபடுத்தும் விதமாக ஸ்ருதி பிள்ளையைத் தட்டினாள்.
அப்படியே அத்தையைப் பார்க்க, அவரோ ‘எங்கிருந்து இந்த ஷ் சத்தம்?’ என்று மலங்க மலங்க பார்வையை சுழல விட்டு படுக்கையில் இருந்து தலையை உயர்த்தி வெளியே பார்த்தார். ஸ்ருதி கீழே அமர்ந்திருந்ததால், அவரது பார்வைக்கு ஸ்ருதி அகப்படவில்லை. தவிர அந்த அறையில் விடிவிளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் கண்களுக்கு இருள் பழகாத நிலையில் ஸ்ருதி அத்தைக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை அறிந்து, “அத்த”,எனக் கூப்பிட்டாள்.
குரல்வந்த திசை நோக்கித் திரும்பி, “ஸ்ருதி…?”, அவள்தானா என்று உறுதி செய்துகொள்ள மீண்டும் அழைத்தார். குரலின் நடுக்கம் அவரது பயத்தை உணர்த்தியது.
“இங்க கீழ உக்காந்துட்டு இருக்கேன்த்த”, அவரை தேற்றும்விதமாக ஆதூரமாகச் சொன்னாள்.
“வந்துட்டியா?”, என்ற பர்வதம் கட்டிலில் இருந்து எழுந்து அமர முயற்சிக்க, ஸ்ருதி அவசரமாக, “அத்தத்தை, இருங்க. ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு, கைய அசைக்காதீங்க”, என்றாள். காரணம் சலைன் பாட்டிலில் கால்வாசிக்கும் கீழே இருந்த மருந்து, சொட்டு சொட்டாக கேன்யுலா மூலம் இன்னமும் சென்று கொண்டு இருந்தது.
பர்வதம் வென்ஃப்ளான் போட்டிருந்த கையை ஒருமுறை மெதுவாக தூக்கிப்பார்த்து,”ஓ!”, என்று விட்டு வைத்தார். இவர்கள் பேச்சு சப்தத்தில் வசந்தம்மா உள்ளே வர, “எழுந்துடீங்களா? இப்ப எப்படி இருக்கு?”, கேட்டார்.
“உங்களுக்கு இட்லி மாடிலேர்ந்து வந்துச்சு. நானே நேரமாச்சே, எழுப்பலாமான்னு இருந்தேன்”, என்று பர்வதத்திடம்சொல்லி, “லைட்டு போட்டா எழுந்துக்குவான், ஈஸ்வரி உனக்காக காத்துட்டு இருக்கு, நீ போயி சாப்பிட்டு வந்துடு ஸ்ருதி”, என்று மெதுவாக ஸ்ருதியின் மடியில் உறங்கிய பிள்ளையை தூக்கிக் கொண்டார்.
‘அதெல்லாம் வேணாம் நா பாத்துக்கறேன்’ என்பது போன்ற சம்பிரதாய பிகுக்கள் இல்லாமல், “ஸ்ரீகுட்டி?”, என்று கேட்டாள்.
“அவ அப்போவே சரத்துகூட சாப்ட்டு அந்த ரூம்ல பில்டிங் ப்ளாக் கட்டிட்டு இருக்கா,நீ சாப்பிடப் போம்மா “, என்றபோது ஸ்ரீகுட்டி லெகோ விளையாடுகிறாள் என்று புரிந்து கொண்டாள்.பின்னர் வசந்தி சொன்னதுபோல ஈஸ்வரியைத் தேடிப்போனாள்.
போகும்போதே அத்தையின்,”ஸ்ருதி எப்ப வந்தா?”, கேள்வி காதில் கேட்டது. வசந்தமாவிடம் இவள் வந்த விபரங்கள் கேட்கிறார் என்று யூகித்தாள்.
உள்ளே சாப்பாடு டேபிளில் அனைத்தும் தயாராக இருந்தது. அங்கே ஈஸ்வரி தட்டில் எதையோ போட்டு கொறித்துக் கொண்டிருந்தாள். “வாங்க உங்களுக்காகத்தான் காத்தி..ழ்..கேன்”, என்றாள் பெரியதாக எதையோ வாயினுள் போட்டபடி.
ஸ்ருதி கண்கள் பளிச்சிட, “ம்ம்?”, என்றாள். காரணம் ஈஸ்வரி, திருப்பதி லட்டை ஒரே வாயில் போட்டுக்கொண்டது போல பேசக்கூட முடியாமல் தனது வாயை நிரப்பி இருந்தாள்.
அவளது இரு கன்னங்களும் உப்பி ஒன்றிரண்டு துணுக்கங்கள் உதட்டோரம் ஒட்டி இருக்க, அவளைப் பார்க்கும் யாருக்கும் சிரிப்பு வரும்படியாக இருந்தது அவள் முகம்.
ஆனால் அந்த சில நொடி பளிச்சிடலைக் கவனித்துவிட்ட ஈஸ்வரி சிரித்தவாறே, “இதான் காத்திருக்கிற லட்சணமான்னுதான யோசிச்சீங்க?”, கேட்டாள்.
பொங்கி வந்த புன்னைகையை மறைத்து இல்லையென்று தலையசைந்த ஸ்ருதி, “காத்திட்டு இருக்கும்போது ரொம்ப சின்..ன கடியா எடுத்து சாப்படறீங்களே? இன்னும் சாப்பிடும்போது..?”,என்று இழுக்க..
ஈஸ்வரியோ தட்டத்தை எடுத்து வைத்தபடி பேச்சை விடாமல்,”ஆ அது எனக்கா சாப்பிட்டேன்? முதல் கடி வயித்துப்பிள்ளைக்குன்னு தான சொல்லுவாங்க?”, என்றாள்.
ஈஸ்வரி, “ஹஹ, அப்ப நீங்களும் இப்படித்தான் பண்ணுனீங்களா?”, என்று கேலியை ஸ்ருதிக்கே திருப்ப.. இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
அந்த நேரம் ஸ்ரீகுட்டி சின்ன சின்ன லெகோ துண்டுகளால் அவள் உருவாக்கிய உயரமான கட்டிடத்தைக் கொண்டு வந்து காண்பித்து, “மா எப்படிமா இருக்கு?”,என்றாள்.
“சூப்பரா இருக்குடா, ஒரு வாய் சாப்பிடறியா குட்டிமா?”
‘ம்ஹூம்’ என்று மண்டைய வேண்டாமென வேகமாக உருட்டி, ‘இதுக்கு மேல ஒரு ஃபிளாக் (flag) வைக்கப்போறேன்’ என்று அறிவித்துவிட்டு தனது விளையாட்டைத் தொடர சென்றுவிட்டாள்.
ஸ்ரீகுட்டியிடம், “எல்லாத்தையும் ஒழுங்கா எடுத்தது வைக்கணும் குட்டிமா”,என்று ஸ்ருதி சொல்ல, “கவலைப்படாதீங்க. அதுக்குன்னே ஒரு அட்டைப்பெட்டி குடுத்துருக்கேன். வேற எங்கயும் போடமாட்டா”, என்றாள் ஈஸ்வரி. இருவரும் சேர்ந்து இரவு உணவு முடித்ததும்,ஸ்ருதி அத்தைக்கு இட்லியை தந்து சாப்பிட வைத்தாள். ஒருவழியாக ஸ்ருதி பிள்ளைகள் பின் அத்தை என்று அனைவரும் மாடிக்குச் செல்ல மணி பதினொன்றானது.
இங்கே இப்படி இருக்க, விஷாலின் வீட்டில் நந்தினி தனது அலைபேசியில் ரமணனுக்கு தகவல் அனுப்பி நாளை முடிந்தால் அவனது அலுவலகம் வருவதாக தெரிவித்தாள். நந்தினி கிச்சனில் இருந்து தகவல் அனுப்பியதால் விஷாலுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவனோ தனபாலிடம் பேசியதில் இருந்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்தான்.
‘சரி ஆபீஸ் எங்க இருக்குன்னு தெரியுமா?”
“ம்ம் தெரியும் XXX பிரான்ச் தான?”
“ஆமா, மாடில ரைட் சைட்ல இருக்கு’ என்று ரமணனிடமிருந்து பதில் வந்தது.
‘ஓகே ஒன்பது பத்து மணிக்குள்ள வர்றேன்’, நந்தினி.
“என்ன எதாவது அர்ஜென்ட்டா?’, ரமணன்.
நந்தினி, மேம்போக்காக குறிப்பாக கணவனைப் பற்றி ஏதும் சொல்லாமல் சில விபரங்களை ரமணனிடம் சொல்லி இப்படியான இக்கட்டு வந்தால் இதிலிருந்து தப்புவதற்கு ஏதேனும் வாய்ப்புண்டா?’ என்று தெரிந்து கொள்ள வருவதாக தெரிவித்தாள்