அத்தியாயம் 9

ஆயிற்று, மாதேஷ் கோபித்துச் சென்று நான்கு மாதங்கள் கடந்திருந்தன. காலை நேரம். ஸ்ருதி, தனக்கான மதிய உணவை கட்டிக் கொண்டிருந்தாள். சற்றே மேடிட்ட வயிறு, கொஞ்சம் பூசினாற்போல இருந்தாள். அவளது உணவு சரிவிகிதமாக போஷாக்காக இருக்க வேண்டும் என்பதில் ஒரு மெனெக்கெடல் வந்திருந்தது. முகம் பழைய அப்பாவித்தனத்தை தொலைத்திருந்தாலும் அதில் அழுத்தமான அமைதி வந்திருந்தது. முன்னமே அழகிதான், இப்போது கருக்கொண்டதினாலோ, அல்லது தன்னைத் தானே செதுக்கிக்கொள்ள ஆரம்பித்ததாலோ என்னமோ இன்னமும் மிளிர்ந்தாள். கைப்பையை எடுத்துக் கொண்டு வழக்கம்போல மொட்டையாக, “ஆபிஸ் கிளம்பறேன்”, என்று சுவற்றைப் பார்த்து (அத்தையிடம்தான்) சொல்லிவிட்டு படியிறங்கினாள். அவர் கேட்டாரா தலையசைத்தாரா என்பதெல்லாம் அவளுக்கு அனாவசியம். சொல்ல வேண்டிய கடமை சொல்லியாயிற்று, அவ்வளவே.

இருவருக்குமிடையே இன்னமும் சுமுக பேச்சுவார்த்தை வரவில்லை, அன்று சண்டையிட்ட தினத்திலிருந்து ஸ்ருதி தன்னை நன்றாக பார்த்துக் கொண்டாள் என்றால் அதற்கு நேர்மாறாய் பர்வதம். பாதி நாட்கள் விரதம், மீதி நாட்கள் அரைகுறை சாப்பாடு என்று ஆள் பாதியாய் சுருங்கி இருந்தார். அவரை பார்க்கும்போது பாவமாய் இருந்தாலும், ஸ்ருதிக்கு பேச மனம் வரவில்லை. எனினும்  அவர் குளித்து வரும்முன் பூஜையறையை துடைத்து வைப்பாதாகட்டும், அவருக்கு பிடித்த இலகுவான உணவாக பார்த்து பார்த்து சமைப்பதாகட்டும், அவருக்கான எந்த வேலைகளிலும் குறை வைக்க மாட்டாள்.

அதென்னவோ, அவரிடம் சகஜமாக முடியவில்லை. அவரும் இவளுக்கேற்றாற்போல் இருந்தார், அவர் வயதுக்கேயுரிய பிடிவாதம், இருவரும் ஒரு விஷயத்தில் நன்றாக ஒத்துப்போயினர். இவர்களது பனிப்போர் இரண்டாம் பேருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதுதான் அது.

ஸ்ருதி, ஸ்ரீகுட்டி இருக்கும் நேரத்தில், ‘பாட்டிக்கு இத குடுத்துட்டு வா’, பாட்டிய சாப்பிட வர சொல்லு’ என்றும், ‘கூர்க்கா வந்திருக்கான்’, ‘கோவில் சந்தா வாங்க வந்திருக்காங்க’ அம்மாவை கூப்பிடு ஸ்ரீகுட்டி’, என்று அவரும் மாறி மாறி ஜாடையாய் பேசிக்கொண்டனர்.

ஸ்ருதி தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகம் செல்வதை வழமையாக்கிக் கொண்டாள். வண்டியை சாலையில் தனியாக ஓட்டிசென்ற முதல்நாள் கொஞ்சம் படபடப்பாக இருந்தது. பின் சாலைகளும், அதில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவளுக்கு ஓட்டும் லாவகத்தை கற்றுக் கொடுத்தனர். கார் பழகவில்லை, இது அதற்கான சமயமில்லை, பின்னர் பார்க்கலாம் என்று விட்டு வைத்டிருக்கிறாள்.

வேலை முடித்து வரும்போதே, காய்கறி, தேவையான சிறுதீனி, பழங்கள் முதலானவற்றை வாங்கி வந்துவிடுவாள். மளிகையோ மாதமொருமுறை. மின்கட்டணம், மற்ற அனைத்து வரிகளும் இணையத்தில் செலுத்துவது எப்படி என்று தெரிந்து கொண்டாள். உபயம் தேவகி. புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வதால், ஸ்ருதிக்கு நாட்கள் சுவாரஸ்யமாகத்தான் சென்றது. ஒவ்வொரு சின்ன சின்ன மைல்கற்களை தாண்டும்போதும் அவளது தன்னம்பிக்கையின் சதவீதம் கூடிக்கொண்டே சென்றது.

இந்நிலையில், ஸ்ருதிக்கு அவளே எதிர்பாராவிதமாக அபிரிதமாக சேர்ந்த கையிருப்பைத்தான்  என்ன செய்வதென்று புரியவில்லை. ராகவ்-ன் காப்பீட்டு தொகை, அவனது அலுவலகத்தில் செட்டில் செய்த தொகை என்று அனைத்தும் இப்போது வந்து சேர, கொஞ்சம் திணறித்தான் போனாள். முன்பே ராகவ்-ன் பங்கு வர்த்தக கணக்கு, இவள் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. பரஸ்பர நிதி நிறுவனங்களிலும் தேவையான சான்றிதழ்களை கொடுத்து மாதேஷ் அதற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.

ஆனால், ஸ்ருதிக்கு பங்கு வர்த்தகமும் பிடிபடவில்லை, பரஸ்பர நிதி முதலீடுகளும் புரியவில்லை. இவளது அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒருவன், பங்கு வர்த்தகம் மிக எளிது, தான் சொல்லித் தருவதாக சொன்னான். அவனோ பங்குகளைக் குறித்து நான்கு வார்த்தை பேசினால், ஸ்ருதியின் அழகு குறித்து நாற்பது வார்த்தை பேசினான். கீ போர்டு, மௌஸ் நகர்த்துவதுபோல மேலே ஈஷினான். தெரிந்து செய்கிறானா, வேண்டுமென்றே செய்கிறானா என்பது தெரியாத அளவு இருந்தது அவன் செய்கை.

முதல் இரண்டு நாள் பொறுத்துப் பார்த்தவள், ‘எப்படி உங்க ஃபீலிங்ஸ் நீங்க கட்டுப் படுத்தறீங்க?’ என்று அவன் மறுநாள் கேட்கவும், ஆழ மூச்செடுத்து, தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கைகளை கட்டிக்க கொண்டவள், அவனை தீர்க்கமாக பார்த்து, “கஷ்டமாத்தான் இருக்கு, இப்போகூட உங்களை ஓங்கி அறையணும்போல ஃபீல் வருது, அடக்கிட்டு அமைதியா உக்காந்திட்டு இருக்கன்ல?”, என்று அமர்த்தலாக பதில் சொல்லவும், அவன் எச்சில் விழுங்கி, ‘இல்ல, சாரி.. தப்பா எடுத்துக்காதீங்க சிஸ்டர்”, என்று வழிந்தான். அதன் பின் ஸ்ருதியைப் பார்த்தாலே பத்தடி தள்ளி நின்றான். அதன் பின் யார் என்ன எப்படி என்பதை பார்வையிலேயே வரையறுக்க பழகினாள். அங்கே அலுவகத்தில் இவளது தோரணை தானாக மாறியது.

வாழ்க்கை அதன் போக்கில் அப்படியே போனால், மாற்றங்கள் ஏது? ஒன்றுமில்லா  பேரண்டத்தில் மாற்றம் நிகழ்ந்து பால் வீதி தோன்றியது. பின் அதுவே மருவி, கோள்கள், துணைக்கோள்கள் என்றானது. கோள்களோ அத்தோடு நில்லாமல் உயிர் உருவாக்க ஆசை கொண்டு… வெப்பம், பனி, குளிர், நிழல், நீர் எல்லாம் கொண்ட கண்டங்கள் படைத்து.. ஒற்றை செல்லை ஆதாரமாக விளையாட விட்டு, கைகட்டி நின்று அதன் பல்பெருக்கத்தை, படிப்பெருக்கத்தை கண்டு கொண்டிருக்கிறது. மாற்றம் இல்லாவிட்டால், நீங்கள் ஏது? நான் ஏது? இவ்வுலகம்தான் ஏது?

பின் ஷேர்ஸ் பற்றி  இவளாக தெரிந்து கொள்ள, இரண்டொரு நாள் பங்கு வர்த்தகர்களுக்காக இயங்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பினை காண முயன்று, ஸ்ருதிக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம். அதில் சுற்றிச் சுழலும் (ஸ்க்ரோல்) எண்களும், பச்சை சிவப்பு முக்கோணங்களும், வேக வேகமான மூச்சு விடாத விவரணைகளும் அவள் மூளைக்கு எட்டவில்லை.

மொத்தத்தில் நிதி மேலாண்மை தெரியாது குழம்பினாள்.

நல்ல வேளையாக,  இவள் கணக்கு வைத்திருந்த வங்கியின் துணை மேலாளரான ரமணன் (நந்தினி-யின்.. வீட்டிற்கு வந்திருந்தவன்), ஸ்ருதியின் வீடு வந்து, நிலை வைப்பாக கணிசமான தொகையை போட்டு வைக்கலாமே என்று ஆலோசனை கூற, அக்கடா என்று ஸ்ருதியும் பிக்சட் டெபாசிட்-ல் முதலீடு செய்துவிட்டாள். அதிலிருந்து வந்த வட்டி இவளது சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம். ஆனாலும், இப்போது பார்க்கும் வேலையை விட வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இந்த ஓட்டம், சவால், பரபரப்பு ஸ்ருதிக்கு பிடித்துத்தான் இருந்தது.

இத்தனை வேலைகளினால் ஏற்பட்ட இன்னொரு நன்மை, ஸ்ருதியின் நினைவு அடுக்கில் இருந்து ராகவ் கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தான். என்றேனும் அவளறியாது சில சமயம் படுக்கையில் அனிச்சயாய் கைகள் கணவனைத் தேடும்.  சில்லிட்டிருக்கும் போர்வை தட்டுப்பட, விழித்து எழுந்து சில நொடி இருளை வெறித்து இருப்பாள். பின் அருகிலிருக்கும் மகள் புறம் திரும்பி, அமைதியாக அவள் தலை கோதி படுத்துக் கொள்வாள். பின் வயிற்றிலிருக்கும் மகவின் அசைவுகள் அவளுக்கு ஆறுதல் அளிக்கும்.

*******************

“சார், இப்போ அவங்க கிட்ட பேசமுடியாது. இன்னுமொரு ஆறு மாசம் டைம் குடுங்க, நான் உங்களுக்கு முடிச்சு தர்றேன்”

“….”

“அதுக்குள்ள இப்போ இருக்கிற ப்ராஜெக்ட் முடிச்சுக்கலாம், இன்னொரு பார்ட்டி இருக்காங்க, அவங்க ஊரோட செட்டில் ஆகப்போறாங்க, அந்த பழைய வீட்டை தட்டிடலாம், ஒன்னரை கிரௌண்ட் இருக்கு, தாளாரமா இப்போ இருக்கிற FSI க்கு எட்டு வீடு கட்ட முடியும், உங்களுக்கு தெரியாததில்ல. நாளைக்கு வர சொல்லி இருக்காங்க, உங்க ஆளுங்கள அனுப்புங்க, பேசி முடிச்சிடுவோம்”

“…”

“சார், அந்த பொறுப்பை என்கிட்ட விடுங்க, இப்போ கண்டிப்பா வீடு விக்கறதோ, இல்ல மாறறதோ அவங்க பண்ண மாட்டாங்க. கொஞ்சம் டைம் எடுக்கும்”

“…”

“புரியுதுங்க அந்த இன்வெஸ்ட்மென்ட் அதிகம்தான், அத காமிச்சு லோன் போட்டு இந்த புது ப்ராஜெக்ட்-ல திருப்புங்க. நீங்க கேட்ட hind ware செட் இருநூத்தம்பது வந்துடுச்சு. சைட்-ல இறக்கிடலாமா?”

“…”

“எப்பவும் டிஸ்கவுண்ட்டோட போடறதுதான்ங்க. இப்போ அனுப்பறதுக்கான அட்வான்ஸ் இன்னும் நமக்கு வரல”

“…”

“சரி, சரி நா மொத்தமா வாங்கிக்கறேன். ஆனா, பெரிய அமெண்டச்சே அதான் மத்த சப்ளையருக்கு செட்டில் பண்ணணுமில்ல?”

“….”

“அது உங்களுக்கு பெரிய அமௌன்ட் இல்லதான், ஆனா நமக்கு பெரிசு பாருங்க, அதான் சொல்லவேண்டியதா போச்சு”, போனில் பேசி முடித்து நிமிர்ந்த விஷால், நந்தினியின் யோசனையான பார்வையை எதிர்கொண்டான்.

ஏதோ ஒரு நெருடல் தோன்ற, “யார் வீடு பத்தி பேசிட்டு இருக்கீங்க?”, கேட்டாள் நந்தினி.

ஒரு அலட்சிய பார்வை பார்த்து, “ப்ச். கிச்சன் போயி வேலைய பாரு, கஸ்டமர் கூட ஆயிரம் பேசுவோம், அதெல்லாம் உனக்கெதுக்கு?” இவள் கேட்டு நான் பதில் சொல்வதா? என்ற எண்ணம். அவர்கள் வீட்டில் பெண்கள் சமைக்க, வீட்டு வேலை, கணவனுக்கு குழந்தைகளுக்கு பணிவிடை செய்ய இருப்பவர்கள். அவர்களின் அடக்க ஒடுக்கத்துக்கு ஏற்றாற்போல், தங்கமும் பட்டுமாக ஈடு செய்யப்படும்.

நந்தினி இதில் விதிவிலக்காக இருந்தாள், தங்க முதலீடு அனாவசியம் என்றாள். தேவைப்பட்டால், பாண்ட் (அரசாங்கத்தின் தங்க பத்திரங்கள்) வாங்கலாம் என்று ஆலோசனை வேறு. பட்டு.. என்று பேச்செடுத்தால், ஒன்றா மிருக வதை என்பாள், இல்லை செயற்கை பட்டுதானென்றால்.. பண விரயம் என்பாள்.

நாளை சதாப்தியில் ஊருக்கு போகிறேன் என்றால், சரி என்று விட்டு அடுத்த வேலைக்கு செல்லாமல், எத்தனை மணி, என்ன கோச் .. பர்த் வரை துருவித் துருவி கேட்பாள். சந்தேகம் என்று இல்லை, அவளுக்கு இந்த விபரங்களை கேட்கத் தெரியும் என்பதால் கேட்பாள். கூடவே, டிக்கெட் அலைபேசியில் இருந்தால் போதும், ஆதார் எடுத்து செல்லுங்கள் என்று உபரி தகவல்கள் (அவனுக்கு தெரியாத) வேறு வரும்.

எதற்காகவும் தன்னை எதிர்பார்க்காத மனைவி, எல்லாவற்றிலும் அவனுக்கு மேல் அறிந்த மனைவி அவனுக்கு கசந்து வழிந்தாள். அவர்கள் வீட்டில் அம்மா தங்கை, அக்கா அனைவரும் அவரவர் துணையினை தொட்டதற்கெல்லாம் எதிர்பார்த்து நிற்க, இவளானால், கையடக்க பேசியில் இணையத்தின் வாயிலாக தேவைகளை முடித்து விடுகிறாள். அதுவே ஒரு ஒவ்வாமையாய் போனது விஷாலுக்கு.

திருமணமான புதிதில் இவன் எல்.ஐ.சி. கட்டிடம் பற்றி பேச, அவளுக்கோ ஈஃபிள் கோபுர விபரங்கள் வரை தெரிந்திருந்தது. இவளுடன் என்ன பேசுவது? விஷாலுக்கு அதிகம் தெரிந்தது தனது தொழிலைப் பற்றி, இவளிடம் ஏதேனும் சொல்லப்போக, அதிலும் தன்னை விட அதிகம் தெரிந்தவளாய் இருந்து இவனை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவாளோ என்ற பயம் வேறு வர, சாதாரண பேச்சைக் கூட நிறுத்தி விட்டான். ஒரு வித தாழ்வு மனப்பான்மை என்று கூட சொல்லலாம். அதன் வெளிப்பாடு விஷாலின் இந்த அலட்சிய பாவம். ஆனால் இதன் விளைவுதான் அவன் கொஞ்சமும் எதிர்பார்க்காததாய் இருந்தது.

விஷால் வெளியே சென்ற பின் கூடத்தில் கணவனது அலட்சிய பாவத்தையே அரை மணி நேரம் மனதில் அசைபோட்டு மொட்டு மொட்டென்று அமர்ந்திருந்தாள். பின், கையில் இருந்த அலைபேசியில் அவளது முக புத்தகத்தில் வந்திருந்த ரமணனின் நட்பு அழைப்பை ஏற்றாள். பின் மெசஞ்சர் சென்று, ‘ஹலோ பேச்சாளரே, நலமா?’, என்று தகவல் அனுப்பினாள்.

அவனது வங்கியில் வேலையாய் இருந்த ரமணன், அலைபேசியின் ‘டிடிங்’ சப்தம் கேட்டு அதை எடுத்துக் பார்க்க.., முகத்தில் ஒரு மந்தகாசமான புன்னைகை வந்தமர்ந்தது.

************

ஒரு நாள் மதியம் நான்கு மணி சுமாருக்கு எப்போதும் போல பள்ளி வாகனம் ஸ்ரீகுட்டியை வீட்டில் இறக்கி விட, பர்வதம் அவளிடமிருந்து பையை வாங்கி, “லன்ச் ஒழுங்கா சாப்டியாடா?” கேட்டவாறே வீடு செல்ல, “பாட்டி ஈஸ் அத்தைய பாத்துட்டு போலாம்”, என்றது வாண்டு.

“இரு இரு மேல வந்து டிரஸ் மாத்திட்டு போவியாம்”, என்றார்.

சிட்டாய் பறந்து வீட்டின் முன் ஸ்ரீகுட்டி நிற்க, பர்வதமோ மெல்ல மேலேறி வந்தார். “பாட்டி, சீக்கிரம் சீக்கிரம் டோர் ஓபன் பண்ணுங்க”, என்று கால் மாற்றி கால் மாற்றி நின்று நெளிந்தாள் ஸ்ரீகுட்டி. அவளது உடல் மொழியிலேயே அவளது அவசரம் புரிய, புன்னைகைத்துக் கொண்டே “ஈஸ் அத்தைகிட்ட பேசறேன்னு சொன்ன? அப்போ இந்த அவசரம் இல்லையா?”

“ஐயோ பாட்டி, அங்கயும் பாத்ரூம் இருக்கில்ல? அத யூஸ் பண்ணிப்பேன்ல”, சொல்லிக்கொண்டே உள்ளே ஓடி விட்டாள். பர்வதம் ஸ்ரீகுட்டிக்கு, செய்து வைத்திருந்த சத்துமா கஞ்சியை அவளுக்கு கொடுக்கவென, கூடத்தின் மத்தியில் இருந்த மேஜையில் வைத்தார்.

ஸ்ரீகுட்டி, ஸ்ருதி அலமாரியில் அவளது கையெட்டும் உயரத்தில் எடுத்து வைத்திருந்த ஃபிராக்-கை எடுத்து வந்து பாட்டியிடம் குடுத்து மாற்றி விட சொன்னாள். பள்ளி வேனில் பாடிக்கொண்டே வந்த நர்சரி ரைம்ஸ் இன்னும் வாயில் விளையாடியது. கூடவே ஆட்டமும். அவர்கள் உலகம் வேறுதானே? இழப்புகளுக்கும் வலிகளுக்கும் அதிகம் இடமில்லா இனிமையான பிள்ளைப் பருவம் அல்லவா? மடக் மடக் என்று பானத்தை வேகமாக குடித்து கீழே விளையாடச் சென்றாள். “பாத்து மெதுவாப்போ”, என்ற இவரது குரல் வெறும் வாசலுக்குத்தான் கேட்டது. ஸ்ரீ சிட்டாய் பறந்திருந்தாள்.

சில நிமிடங்களில் டம்ளர்களை கழுவி கவிழ்த்து வைத்து, ஸ்ருதி வர இன்னும் நேரமிருப்பதால், வசந்தம்மாவோடு அருகிலிருக்கும் பஜன் மண்டலி, மற்றும் லைப்ரரிக்கு சென்று வருவோம் என்று கிளம்பினார். செருப்பினை போட்டுக்கொள்ளும் போதே தலை கொஞ்சம் சுற்றுவது போலிருக்க, சமாளித்து படி இறங்கினார். கீழே கார் ஷெட் அருகே ஸ்ரீகுட்டியும், குருக்கள் வீட்டு பேரனும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். பேத்தியின் சிரிப்பை கேட்டபடி இறங்கியவருக்கு, பாதி படியில் கால்கள் துவள, தலை கிறுகிறுத்து மயங்கி கீழே சரிந்தார்.

கீழே ஸ்ரீகுட்டி பாட்டீ…ஈ.ஈ..”, என்று கத்த, வசந்தம்மாவும், குருக்கள் வீட்டு மாமியும் வெளியே வந்து பார்த்து, பதறினர். “தண்ணீ கொண்டு வாங்க மாமி”, என்று விட்டு கீழ் படியில் சுருண்டிருந்த பர்வதத்தை மடியில் போட்டு கன்னத்தை தட்டி, எழுப்ப முயன்றார்.

மாமி தண்ணீர் கொண்டுவர, அதை தெளித்ததும் பர்வதம் மெல்ல கண் திறக்க, “என்னங்க பயமுறுத்தறீங்க? பார்த்து வரக்கூடாதா?”, என்றார் வசந்தம்மா பயம் கலந்த ஆதங்கத்துடன். பதிலாக மெல்ல புன்னைகைத்து, ஒரு வாய் நீர் அருந்திவிட்டு, “அது என்னவோ திடீர்னு கிறுகிறுன்னு வந்துடுச்சு”, என்றார். பின்,   அருகே பேத்தி மலங்க மலங்க விழிப்பதை பார்த்தார். “ஒண்ணுமில்லடா ஸ்ரீமா, நீ போ போய் விளையாடு”, என்று அவள் கன்னம் தட்டினார்.

சட்டென அவரைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டவள், “சரியாபோச்சா?”, இரட்டை குதிரைவால் அசைய குண்டு குண்டு கண்களோடு, ஸ்ரீகுட்டி தலையாட்டி கேட்க, இடது கால் தொடை வெகுவாக வலித்தாலும் வெளிக்காட்டாமல், கஷ்டப்பட்டு சிரித்து, “சரியாச்சுடா கண்ணு, நீங்க போங்க”, என்று பிள்ளைகள் இருவரையும் (குருக்கள் வீட்டு பேரனும் உடனிந்தான்), அனுப்பி வைத்தார்.

பின், வசந்தம்மாவையும் மாமியையும் பிடித்து மெல்ல எழ முயற்சிக்க, முடியவில்லை. வலி உயிர் போனது. “என்ன பண்ணுதுங்க? இந்த ஸ்ருதி பொண்ண போன்ல கூப்பிடட்டுமா?”, என்று வசந்தி பதற..

“ஐயோ. வேணாம், பதறிப் போவா”, பர்வதம்.

“வேணாங்க, நாமளே ஆஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம், எனக்கென்னவோ ஃபிராக்ச்சர் மாதிரி தோணுது. உங்க பிள்ளை இல்லியா? இருந்தா கூப்பிடுங்களேன்..”, மாமி.

“அவன் இல்லியேம்மா, தென்னை அறுப்புக்கு போனான், அடுத்து மங்கா, வெத்தலன்னு நின்னுட்டானோ என்னவோ? இருங்க என் பொண்ணு கிட்ட கேட்டு வர்றேன்”, என்று வீட்டிற்கு ஓடினார்.

விஷயம் கேள்விப்பட்டதும் ஈஸ்வரி சூழலை தனதாக்கி கொண்டாள். மளமளவென ஆம்புலன்ஸ் புக் செய்து, ஸ்ரீகுட்டியையும், அவிநாஷையும்  தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு, பெரியவர்கள் இருவரையும் பர்வதத்திற்கு துணையாய் மருத்துவமனைக்கு அனுப்பினாள். செல்லும்போது தனது டெபிட் கார்ட்-டினை அம்மாவிடம் தந்து, “ம்மா, அங்க ஹாஸ்பிடல்ல என்ன கட்ட சொல்றாங்களோ கட்டிடு, வேறே எதுவும் வேணும்னாகூட கார்ட் கிழிச்சிடு”, என்றுவிட்டு கையில் இருந்த பணத்தை அவரின் பர்ஸ்-ஸில் திணித்தாள். ஸ்ரீகுட்டியையும், அவினாஷையும் தன்னுடன் விளையாட அமர்த்திக் கொண்டதால், பாட்டி செல்வது ஸ்ரீக்கு தெரியவில்லை. (நல்ல வேளையாக, இல்லாவிட்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள்)

அந்தி சாயும் நேரம் வீடு ஸ்ருதியை, வெளிச்சுவரின் வாசலில் நின்ற இருவர், “இங்க ராகவ் கிறவர் வீடு இதான?”, என்று கேட்டனர். இவர்கள், ராகவ்-வினை அலுவலகத்தில் சந்தித்த, அவனை கோபமூட்டிய அதே இருவர்.