அத்தியாயம் 8
ஸ்ருதி வீட்டிற்குள் செல்லும்போதும், அத்தை சிவபுராணம் மற்றும் ஸ்லோகங்களில் மூழ்கி இருந்தார். தான் தூங்குவதாக நினைத்திருப்பார் என்பதை யூகித்து, பூஜையறையை கடந்து கிட்சன் சென்றாள். முதுகின் புறம் இவளது நிழலை அசைவைப் பார்த்து திரும்பிய பர்வதத்தின் கண்கள் லேசாக கலங்கி இருந்தன. “நாந்தாத்த..”, என்று அவரிடம் சொல்லி விட்டு வீட்டுக் காரியங்களில் கவனம் செலுத்தினாள் ஸ்ருதி. காரணம், அத்தையின் கலங்கிய முகத்தில் இருந்தே, இந்த முடிவு அவருக்கு விருப்பமில்லாதது மட்டுமல்ல, யாரோ சொல்லி செய்தது என்பதையும் அவளால் நன்றாக உணர முடிந்தது. ஆனாலும்… கோபம் இருந்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் பூஜையறையில் இருந்து வெளியே வந்த பர்வதம், அடுக்களையில் வேலையாய் இருந்த மருமகளை பார்த்து, “நீ ஏன் பண்ற? ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான? காலைல நேரமா எழுந்திரிக்க…”
அடுப்பில் இருந்து திரும்பி வெடுக்கென, “தேவையில்ல”
“ஏன்? என்ன தேவையில்ல? “, குழப்பமாக கேட்டார் பர்வதம்.
“நா டாக்டரை இப்போதான் பாத்துட்டு வர்றேன்”, மூக்கு விடைக்க கடினமாக சொன்னாள்.
“ஆங்…..”, என்று முதலில் அதிர்ந்து.., கொஞ்சம் படபடப்போடு, “எப்போ?”, கேட்டார் அவநம்பிக்கையாய். தூங்கிக்கொண்டு தானே இருந்தாள்?
“கொஞ்ச நேரம் முன்னாடிதான் போனேன். புதன் கிழமை செக் அப் வர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்”, அப்பட்டமான குற்றம் சாட்டும் குரல்.
“ஓஹ்….”, என்ன சொல்வதென வார்த்தை வராமல் திகைத்தார் பர்வதம். ஆனால், மனதில் இனம் புரியாத ஒரு நிம்மதி.
நேர்பார்வையாய் அவரைப் பார்த்து, “ஒரு வேளை என் இடத்துல நீங்க இருந்தா இதைத்தான் செஞ்சிருப்பீங்களா அத்தை?”, ஸ்ருதியிடமிருந்து வார்த்தைகள் உஷ்ணமாய்.
“ஸ்ருதி..!!!?”, ஸ்தம்பித்தார்.
“சொல்லுங்கத்த”, வேக மூச்சுடன், “எப்போவாச்சும் உங்க வார்த்தைக்கு மறுபேச்சு பேசியிருப்பேனா? ஏன் இப்படி பண்னீங்க?”, பட பட வென பொரிந்தாள்.
“….”, பிரமை பிடித்ததுபோல நின்றார் பர்வதம்.
“வேண்டாம் நீங்க எனக்கு எதுவும் சொல்லவேணாம், இனி என் விஷயத்துலேயும் தலையிடவும் வேணாம்”
“உன் நல்லதுக்காகன்னு..”, மென்று முழுங்கினார். ஸ்ருதியின் இந்தக் கடினமான வேகமான பேச்சு அவருக்கு முதன்முறை. எல்லாவற்றிலும் இவரது ஆலோசனை கேட்டு, பணிவாக பூனை போல வளைய வந்த பெண், இப்போது தன்னைத் தள்ளி வைக்கிறாள் என்பது பர்வதத்துக்கு வலித்தது.
“என் நல்லத நீங்க எப்படித்த முடிவு பண்லாம்? அதவிட… எப்படி தைரியமா இவ்ளோ பெரிய பொய் சொன்னீங்கத்த? இது உங்க வம்சமில்ல?”, மனம் கொந்தளிக்க கேட்டாள்.
“ப்ச். ஸ்ருதி..”,அத்தை குரலுயர்த்த..
“என்ன குறை நமக்கு சொல்லுங்க? இங்க வர்ற வாடகை வச்சே குடும்பம் நடத்த முடியும். பத்தும் பத்தாதுக்கு எனக்கு வேலையும் இருக்கு, ஒரு குழந்தையை காப்பாத்த முடியாதுன்னு அதை பாரமா நினைச்சிட்டிங்களே”, ஆற்றாமையாய்.
முகம் நிறமிழந்து, “க்..ஹம் அது அப்படியில்ல ஸ்ருதி….”, அத்தை குரல் இடறியது.
கண்களை மூடி.. வேகமாய் கை நீட்டி அவரைத் தடுத்து, “இதபத்தி பேசவேணாம், அதே மாதிரி, உங்களை இனி எதுக்கும்… எதுவும்… கேட்க மாட்டேன்”, “நா பாத்துக்கறேன், என்னை, என் பசங்கள..”, கோபத்தில் முகம் ஜிவுஜிவுவென்றிருக்க தீர்மானமாய்க் கூறினாள்.
இப்போது என்ன பேசினாலும் இவள் கேட்கும் நிலையில் இல்லை என்றுணர்ந்து, அமைதியானார் பர்வதம். ‘இவளுக்கு நல்லதென்று இவள் தம்பியல்லவா சொன்னான்?, மருமகளாக நினைக்காமல் ஒரு சக பெண்ணாக பார்த்து, இவள் வாழவேண்டும் என்று நினைத்தது என் தவறா?’, என்று கொஞ்சம் மாமியார் ஸ்தானத்துக் கோபமும் எட்டிப் பார்த்தது. முகம் இறுக நின்றார். அவரது வயதும் அனுபவமும் அவரது வாயைக் கட்டிப் போட்டது.
சில நிமிடம் பொறுத்து, ஸ்ருதி, “நைட் டிபன் இட்லியும் சாம்பாரும் செய்யறேன்”, என்று உரைக்க.., பர்வதத்திற்கு ஒன்று தெளிவாக புரிந்தது, தனக்கு இனி தகவல்கள் மாத்திரமே, அனுமதிகள் கேட்கப்படாது என்பது.
“ம்ம்.”, என்று கூறி வெளியே சென்றார், உள்ளே புழுக்கம் அதிகரித்திருந்தது, மனதிலா, வீட்டிலா அவரறியார். நேரே வந்து வராந்தாவில் அமர்ந்து கொண்டார்.
நேரம் அதன் வேகத்தில் செல்ல.. பிள்ளையை எழுப்பி, இட்லியை ஊட்டிவிட்டு வாய் துடைத்து, முன்போல் அத்தை படுக்கும் ஹாலில் படுக்க வைக்காமல், ஸ்ரீகுட்டியை அறையில் படுக்க வைத்தாள். பின் இவர்கள் இருவருக்குமான இரவு உணவு எடுத்து டேபிளில் வைத்தாள்.
“டிபன் எடுத்து வச்சிட்டேன்”, ஒரு விளிப்புமில்லாது, மொட்டையாய் சொன்னாள்.
“… “, அத்தைக்கும் பேச ஒன்றுமில்லை, கடினமாகவே அவரும் இருந்தார். ஸ்ருதி அதிகம் பேசிவிட்டதாக அவருக்கு தோன்றியது. நேரே மேஜைக்கு வந்து இரண்டு இட்லியை போட்டு சாப்பிட்டு எழுந்தார். எதிரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்ருதி, அவர் செய்வதனைத்தையும் பார்த்தும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவருக்கு தேவையென்றால் போட்டு சாப்பிடட்டும் என்று அமைதியாய் தனக்கு மட்டும் போட்டுக் கொண்டு உண்டாள்.
அது ஒரு பனிப்போரின் துவக்கம். நம்பியவர்கள் ஏமாற்றினால், ஏமாற்றப் பட்டவர்களுக்கு ஏற்படும் தார்மீகமான கோபம். குத்துப்பட்டவர்களின் ஆதங்கம்.
பின் பாத்திரங்களை ஒழித்து, தேய்த்து முடிக்கவும் மாதேஷ் வரவும் சரியாக இருந்தது. உள்ளே நுழையும்போதே அத்தை படுத்து கண்மூடி இருப்பதை கவனித்தவாறே வந்தான் அவன். நேரே கிட்சன் வந்து, “அக்கா, இன்னும் ஒரு வாரத்துக்கு சமைக்க ஒரு மாமிய ஏற்பாடு பண்ணியிருக்கேன். அத்தை வெளிய சாப்பிட கஷ்டப்படுவாங்கன்னு சொன்ன இல்ல? விஷால் கிட்ட கேட்டு அரேஞ்…”, ஸ்ருதியின் ஈட்டிபார்வையில் பேச்சு தானாக நின்றது.
“உனக்கு தெரியுமா?”
“க்கா.”
“சொல்லு உனக்கு தெரியுமா தெரியாதா?”
“தெரியும்”
“நீதான் அத்தகிட்ட இந்த கேடுகெட்ட ஐடியா கொடுத்தியா?”
“க்கா”
“சொல்லுடா, நீதான் இப்படி சொல்ல சொன்னியா?”, வார்த்தைகள் பற்களில் அரைபட்டது.
எச்சில் கூட்டி விழுங்கி, “இல்ல, ஆனா குழந்தை வேணான்னு சொன்னது நாந்தான்”
கண்கள் நெருப்புத் துண்டங்கள் போலாக, “ஏன்டா?”,
“என்ன தப்பு? அக்கா கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு, நா சொல்றது சரின்னு..”
“என்ன யோசிக்கணும்? என்னடா யோசிக்கணும்? ஒரு வேளை திடீர்னு உன் பொண்டாட்டி செத்துட்டான்னு வை.. வளக்கறது கஷ்டம்னு ராக்கி, ரஞ்சன் கழுத்தை திருகி போட்டுருவியா?”
“அக்கா, நானும் நீயும் ஒண்னுல்ல. சும்மா விதண்டாவாதம் பண்ணாத, உனக்கு ஒரு இழவும் தெரியாது. நா என்ன பிளான்..”
“உன் உருப்படாத பிளான்-ல்லாம் உன்னோட வச்சிக்கோ, என் வீட்ல வேணாம், என்ன நீயும் நானும்..? ஏன் நீ பண்றத நா பண்ண மாட்டேனா?”, மூச்சுவிடாது பேசி, “இங்க பார், கொஞ்ச நேரம் முன்னால அத்தைக்கு சொன்னதுதான் உன்ட்டயும் சொல்றேன். நீ சொல்ற விஷயம்ல்லாம் ஒன்னும் பெரிய கம்ப சூத்திரமில்ல, நா தெரிஞ்சிப்பேன், என்னை.. என் வீட்டை பாத்துக்க எனக்கு தெரியும்.”
“சும்மா உளறாத, உன்னால உன் வீட்டு ஈ பி பில் கூட கட்ட முடியாது, சொத்து வரி, தண்ணீ வரி, வீடு மெயின்டனெஸ் இன்னும் லைனா எவ்வளவோ இருக்கு. அவ்ளோ ஏன்? அத்தான் எங்க எங்க இன்வெஸ்ட் பண்ணி இருந்தார் தெரியுமா உனக்கு?, டெபிட் கார்ட் பின் கூட தெரியாம முழிச்சிட்டு நின்ன, ஞாபகம் இருக்கா?, உன்ன பாத்துக்கறதுக்கே ஒரு ஆள் வேணும், இதுல நீ உன் வீட்டை பாத்துக்க போறியா? விஷால் ஒரு ஐடியா சொல்லி இருக்கார், அவர் சொன்னா மாதிரி பேசாம உன்ன புனா கூட்டிட்டு போயிடலாம்னு இருக்கேன்”
“முடியாது, நான் உங்கூட வர மாட்டேன்”
“புரியாம பேசதக்கா, இப்போ உனக்கு என்ன வேணும்? குழந்தைதான? சரி இருக்கட்டும், பாத்துக்கலாம். ஆனா நீ அங்க வந்திடு. அப்பாவையும் பாத்துக்கிட்டு அங்கேயும் இங்கயும் என்னால அலைய முடியலக்கா”
“நானும் அலைன்னு சொல்லல, இனி நானா கூப்பிடவரைக்கும் என் வீட்டு படியேறாத, ஒரு வாட்டி சொல்லிட்டேன் இல்ல?, இனி என்ன ஆனாலும் நா பாத்துக்கறேன்”, தயவாவது? தாட்சண்யமாவது? அதெல்லாம் பார்க்கும் ஸ்ருதியல்ல இவள்.
அக்கா சும்மா வெறும் வார்த்தையாக சொல்லவில்லை, என்பது மாதேஷுக்கு புரிந்தது. சில நிமிட யோசனையின் பின், “சரி போறேன், ஆனா நீ அப்பா மாதிரி ஆகமாட்டேன்-ன்னு சொல்லு”
“என்ன சொல்ற? நா ஏன் அப்பா மாதிரி ஆப்போறேன்?”
“உனக்கே தெரியும், அம்மா போனதுக்கு அப்பறம்தான் அப்பாவோட அல்ஸைமர் வியாதி அதிகமாச்சு. டாக்டர், ‘அவருக்கு பழசுலேர்ந்து வெளி வர பிடிக்கல, சோ ஜஸ்ட் மருந்துகள் மட்டும் தர்றேன். அவரா நினைச்சு ஒத்துழைச்சாத்தான் எதுவும் முயற்சிக்கவாவது முடியும்’-ன்னு சொன்னார்.
“அப்பாட்ட கேட்டபோது என்ன சொன்னார் தெரியுமா? “எனக்கு என் நினைவுகள்-ல உங்க அம்மா வர்றாடா, அங்க நா அவளோட பேசறேன், அதனாலதான் அத விட்டு வெளிய வர பிடிக்க மாட்டேங்குது” ன்னு சொன்னார். நீ அப்படி ஆயிடக்கூடாது”
“சரி.. அப்பா மாதிரி ஆகமாட்டேன் போதுமா?, எனக்கு ஒன்னில்லை ரெண்டு பசங்க, அவங்களுக்காவது நா நல்ல ஆரோக்கியமா இருக்கணும். அந்த அளவுக்கு எனக்கு புத்தி இருக்கு. உன்னோட அட்வைஸ் தேவையில்லை, இத இதோட முடிச்சிப்போம்.”, ஸ்ருதி வார்த்தையால் கோடரி கொண்டு அறுத்தாள்.
“இல்ல, போதாது, உனக்கு இன்னொரு லைஃப் அமைஞ்சா நீ அதை ஏத்துக்க…”, வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, ‘ச்சப்..’ ஸ்ருதியின் கைகள் மாதேஷை பதம் பார்த்திருந்து.
அனல் பார்வை பார்த்து, “வாய மூடு, தம்பியாச்சே ன்னு பாத்தா வாய்க்கு வந்தத பேசற? இந்த நினைப்போடதான் என் குழந்தையை வேணாம்னு சொன்னியா? வெளிய போடா”
எரிந்த கன்னத்தை தேய்த்தபடியே, “அக்கா, சொல்றத…”
“மரியாதையா வெளிய போயிடு”
“ச்சே, உங்கூட மனுஷன் பேசுவானா?”, ஸ்ருதி மட்டும் கோபத்தை குத்தைகைக்கு எடுக்க வேண்டுமா? மாதேஷுக்கு வரக் கூடாதா என்ன?
“வேணான்னுதான் சொல்றேன், கிளம்பு, ஏதாவது ரொம்ப அவசரம்னா மட்டும் உன்னைக் கூப்பிடலாம்னு முதல்ல யோசிச்சிருந்தேன், இனி அது கூட பண்ணமாட்டேன், போ”, ஸ்ருதியிடம் கோபத்தின் அரசாட்சி. முதலில் குழந்தை விஷயத்தில் அத்தை தம்பி இருவரும் மறைத்து பொய் சொல்லிவிட்டனர் என்று கோபம் இருந்தது, இப்போது மாதேஷ் இன்னொரு வாழ்க்கை என்று பேசியதில் ‘அனைத்துக்கும் இவன்தான் காரணம் என்ன துணிவிருந்தால் என்னிடம் இப்படி பேசுவான்?’ என்று ஆத்திரம் எல்லாமும் சேர்ந்து கொண்டது.
இவர்கள் பேசிய சத்தத்தில் அத்தை எழுத்து அமர்ந்திருந்தார். ‘சொல்லாதே சண்டை போடுவாள் என்று சொல்லியும், இதை ஆரம்பித்திருக்கிறானே, என்று மாதேஷ் மீது கோபம் வந்தது. ‘முன்பே என்னோடு சண்டை, இப்போது தம்பியுடன், என்ன பேச்சு பேசுகிறாள் இவள்?’ என்று எண்ணியவாறே அமைதியாய் இருந்தார்.
விடுவிடுவென அவனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு, அத்தை அருகே வந்து, “நா கிளம்பறேன் அத்த”
“ம்ம்”, வேறு என்ன சொல்ல முடியும்? இவன் சாப்பிடவில்லை என்பது தெரியும், ஆனால் சொன்னால் ஸ்ருதி அதற்கும் ஏதாவது கத்துவாளோ என்று கொஞ்சம் பயமாக இருந்தது. வீட்டிற்குள் சண்டை சச்சரவு பர்வதத்திற்கு ஆகாது, பழக்கமும் இல்லை.
ஒரு முறை ஸ்ருதியை நிமிர்ந்து பார்த்தார். துணிவாக என்பதை விட தீர்மானமாக இருந்தாள். முகம் இறுகி பாறை போல் இருந்தது. சரி, காலம் இவளை இப்படி மாற்ற நினைக்கிறது போலும், என்று நினைத்து படுத்துக்க கொண்டார்.
தம்பி வாசலை திறந்து வெளியே செல்வதை வெறித்து பார்த்து நின்ற ஸ்ருதிக்கு, ‘இனி தான் தனி, உதவிக்கென யாரும் கிடையாது, வருங்காலத்தில் அனைத்தையும் தனியாக எதிர்கொண்டு நிற்க வேண்டும்’, என்ற வைராக்கியம் குடிகொண்டது.
ஆனால், எல்லாவற்றையும் சமாளித்து, தனியாக போராடி வென்று விட்டோம் என்று ஸ்ருதி எண்ணும்போது.. கூப்பிடாமல் மாதேஷ் வருவான் என்பதோ, அவனோடு சேர்ந்து கூட அப்போது வந்த பிரச்சனையை சமாளிக்கமுடியாமல் போகும் என்றோ இவள் எண்ணிக்கூட பார்த்திருக்க மாட்டாள்.