அத்தியாயம் 10 1

வீட்டின் வாசலில் காத்திருந்த இருவரைப் பார்த்ததும் ஸ்ருதி வண்டியினை வெளியிலேயே  நிறுத்தி, “என்ன வேணும்? யார் நீங்க?” என்று கேட்டாள்.

“இங்க ஸ்ருதின்னு ஒருத்தங்க…?”, ஒரு வெள்ளை சட்டை கேட்டது.

கேள்வியாக அவர்களை நோக்கி, “ஆமா, நாந்தான் என்ன விஷயம்?”

“நாங்க பக்கத்து…”

அவர்கள் ஆரம்பிப்பதற்குள், ஸ்ருதியின் வண்டி சப்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து, இவளிடம், “அம்மா, ம்மா” என்று மூச்சிரைக்க ஓடி வந்த ஸ்ரீகுட்டி அவர்களது பேச்சை இடைவெட்டினாள்.

வந்த வேகத்தில் அம்மாவின் அருகே எதிரே அறிமுகமில்லாத இருவர் நிற்கவும் ஸ்ரீகுட்டி ஓட்டத்தின் வேகம் தானாக தடைபட்டது. அருகே வந்து அன்னையை உரசி நின்று ஸ்ருதியின் கையை பிடித்துக் கொண்டது பிள்ளை.  “உஷ். ஸ்ரீமா..”, என்று கண்டனமாக ஆனால் மெதுவாக மகளைக் கடிந்து, பின் திரும்பி, “சொல்லுங்க”, என்றாள் வந்தவர்களை பார்த்து.

சரியாக அதே நேரம் மருத்துவமனை சென்றிருந்த குருக்கள் மாமி, ஆட்டோவில் வீட்டு வாசலில் வந்து இறங்கினார். ஸ்ருதியையும் ஸ்ரீகுட்டியையும் பார்த்தபடி இறங்கிய .அவர்,  அந்த இருவரை கவனிக்கவில்லை.  “ஸ்ருதி, உங்க மாமியாருக்கு கால்ல பிராக்ச்சர் ஆயிருக்கு, தெரியுமோ?”, என்றார் படபடவென.

“ஆங்.. ! என்னது? எனக்கு தெரியாதே? நா இப்போதான் வர்றேன்”, ஸ்ருதி பதற்றமானாள். எதோ பேச வந்த அப்புதிய நபர்களை மறந்து போனாள்.

ஸ்ருதியின் கைபிடித்து இழுத்து, “ஆமாம்மா, படிக்கட்டுல விழுந்துட்டாங்க, ஆனா கண்ண மூடிட்டுல்லாம் இல்ல, நா பாத்தேன், அது உங்ககிட்ட சொல்லத்தான் ஓடி வந்தேன்”, ஸ்ரீ.

“மேடம், அந்த ஏரியாத்தான் நம்ம ஸ்டாண்ட், வாரீங்கன்னா சொல்லுங்க, வெயிட் பண்றேன். இல்லன்னா எம்டியா போகணும்”, ஆட்டோ காரர்.

ஸ்ருதிக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டாற்போல் இருந்தது. ஆட்டோக்காரரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவருக்கு வண்டி சத்தம் கொடுத்து, மீதிக்காக காத்திருந்த மாமியிடம், “மாமி இப்போ அத்தை கூட யார் இருக்கா?, எந்த ஆஸ்பிடல்?”

“ஈஸ்வரி அம்மாதான் கூட இருக்காங்க, ரொம்ப வலி இல்லாம இருக்கறதுக்கு ஊசி போட்டுருக்காங்க, நம்ம தேவகி டாக்டர் பாத்துட்டு ஆர்த்தோ டாக்டரை வரச்சொல்லி இருக்காங்க. எஸ்க்ரே எடுத்துருக்காங்க. ஆனா ஒன்னும் சொல்லல, நா வேற மாமாகிட்ட சொல்லாம போயிட்டேனா, சரி நீங்க போங்க நா பாத்துக்கறேன் ன்னு வசந்தம்மா சொன்னாங்க. அதான் கிளம்பி வந்துட்டேன்”, இவளிடம் சொல்லி, “சில்லறை இல்லன்னா பரவல்லப்பா, தேடவேண்டாம் விட்டுடு”, ஆட்டோக்காரரிடம் சொன்னார் அந்த மாமி.

ஸ்ருதி ஆட்டோக்காரரைப் பார்த்தாள், இப்போதைக்கு அத்தையை சென்று பார்ப்பது மட்டுமே தலையாய காரியம் என்று புரிந்து, “அண்ணா ஒரு ஐஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, தேவையானதெல்லாம் எடுத்து வச்சிட்டு வந்துடறேன்”, அவரிடம் சொல்லி மேலே செல்ல திரும்ப, அங்கே வாசலில் அந்த இருவர் இன்னமும் நின்று கொண்டுதானிருந்தனர்.

“யார் இவங்க?”, மாமி கேட்டார்.

“என்னவோ கேக்கணும்னு வந்தாங்க மாமி, தெரில”, அவருக்கு பதில் அளித்து, வெள்ளை சட்டைக்காரரிடம், “இப்போ கொஞ்சம் பிசியா இருக்கேன், இன்னொரு நாள் பாக்கலாம்”, என்று அவர்களை கத்தரித்தாள்.

அவர்களும் வேறு வழியின்றி “சரிங்க, நீங்க பாருங்க”, என்று கிளம்பினர்.

“ஸ்ரீகுட்டி மேல வாடா”, என்று கவனமாக ஆயினும் வேகமாக நடந்தாள். தாழ் போடாமல் இருந்த வீட்டை பார்க்க, சற்றே மனம் திடுக்கிட்டாலும், வீட்டின் வாயிலில் கண்காணிப்பு கேமரா இருப்பதும், அதற்கான அறிவிப்பு பொருத்தி இருப்பதும் நினைவுக்கு வந்து கொஞ்சம் ஆறுதல் அளித்தது. கைப்பையை ஓரமாக வைத்துவிட்டு, கிட்சன் சென்று ஒரு டம்ளர் நீர் குடித்தாள். படபடப்பு கொஞ்சம்  குறைந்தாற்போல் இருந்தது.

பரபரவென இரண்டு தட்டில் இட்லி வார்த்து அடுப்பில் வைத்தாள். மற்றொரு அடுப்பில் வெந்நீர் வைத்தாள்.  பிக் ஷாப்பர் பை எடுத்து, அத்தைக்குண்டான மாற்று துணிமணி, துண்டு, போர்வை, அவரது சிவபுராண புத்தகம், தட்டு, இரண்டு தம்பளர்கள் எடுத்து வைத்தாள். பிளாஸ்க்-கில் வெந்நீர் நிரப்பி, சின்ன சின்ன டப்பாக்கள் இரண்டில் உப்பு, சர்க்கரை எடுத்து அதையும் உள்ளே வைத்தாள். காலை வைத்த சாம்பார் இருக்க, அதையும் பாக் செய்து வைத்தாள். கைகள் தன்னிச்சையாக வேலையை செய்தாலும் அத்தைக்கு ஏதும் பெரியதாக இருக்கக்கூடாதே என்று மனம் இறையிடம் ப்ரார்த்தனை செய்தபடி இருந்தது.

‘வேறு என்ன தேவைப்படும்?’, என்று யோசித்து, ‘சரி நேரமாயிற்று, ஏதேனும் தேவையென்றால் மீண்டும் வந்து எடுத்துச்செல்வோம்’, ‘இன்னும் சில நாட்களுக்கு அலுவலகம் செல்ல முடியாது, காலை அலுவலகத்துக்கு  போன் செய்து பெயர் மாற்றத்திற்கான இரு கோப்புகளை பார்க்குமாறு பவானியிடம் சொல்ல வேண்டும். ஸ்ரீகுட்டியை பள்ளிக்கும் அனுப்ப முடியாது, ம்ஹ்ம். அதையெல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம். முதலில் அத்தையை பார்க்க வேண்டும்’, வீட்டை பூட்டி, ஸ்ரீகுட்டி-யை கீழே செல்ல பணித்து, கட்டைப்பை ஹாண்ட் பாக் சகிதமாக வந்துவிட்டாள்.

ஆட்டோக்காரரிடம், “அண்ணா, கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நீங்க வெயிட்டிங்க்கும் சேர்த்து காசு வாங்கிக்கோங்க”, என்றாள்.

“ரொம்ப டேன்க்ஸ்மா”, சொல்லி, “தங்கச்சி, நம்ம நம்பரு சொல்றேன் குறிச்சுக்கோங்க, எப்பன்னாலும் கூப்பிடுங்க வந்துடுவேன்”, என்றார் அவர்.

ஸ்ருதியின் நிலையை கவனத்தில் கொண்ட ஆட்டோ ட்ரைவர், அதிக குலுங்கல்கள் இல்லாமல் சற்று மெதுவாகவே ஆட்டோவை நடத்தினார். கால் மணி நேரத்தில் மருத்துவமனை வந்து விட்டார்கள். கனமாக இருந்த கட்டைப்பையை மருத்துவமனை வளாகம் வரை ட்ரைவர் கொண்டு வந்து வைத்து கிளம்பினார்.

ஸ்ரீகுட்டி, “பாட்டிக்கு என்னாச்சு? ஊசி போடுவாங்களா? கால் உடைஞ்சு போச்சா?” என்று விடாது தொணதொணத்தாள். “அதெல்லாம் ஒண்ணுமில்லடா, சும்மா கட்டு போட்டு இருப்பாங்க, பாக்கத்தான போறோம்”, சமாதானம் சொல்லி மாமி சொன்ன அறை எண்ணை அடையும்போது, டெட்டாலும் மருந்துகளும் கலந்த ஒரு வித வாசனையில் தன்னைப்போல ஒரு பதட்டம் ஒட்டிக்கொண்டது.

அவள் வாழ்வில் இப்போதுதானே ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டது? ஒரு பயம் வயிற்றைக் கவ்வியது. ஒருமுறை ஆழ மூச்செடுத்து அறையுள் சென்றாள். அங்கே, நுழைந்ததும் முதலில் தெரிந்தது, அத்தையின் வலது காலை இரு தலையணைகளை அணைவாக கொடுத்து அசையாத படி வைத்திருந்ததுதான். வெகுவாக வீங்கி இருந்தது. ரத்தக்கசிவு ஏதும் தென்படவில்லை. அவரது முகம் வாட்டமாக இருந்தது, தூக்க மருந்தின் உதவியோ என்னவென்று தெரியவில்லை, உறக்கத்தில் இருந்தார்.

முதலுதவி மட்டும் செய்திருந்தனர். முறையான சிகிச்சை துவங்க எலும்பு முறிவு மருத்துவருக்காக காத்திருக்கின்றனர் போலும். டாக்டரை பார்க்க வேண்டும், அதற்கு முன் அத்தையின் கூட இருந்த இந்த வசந்தம்மா…? என்று யோசித்து பார்வையை சுழற்ற,  அவர் சுவர் ஓரத்தில் இருந்த ஒருவர் மட்டும் படுக்கும் நீளமான மெத்தையில் அமர்ந்திருந்தார்.

ஸ்ரீகுட்டி, “பாட்டி…”என்று பர்வதத்தின் அருகே செல்ல, “உஷ்.., குட்டிமா பாட்டி தூங்கறாங்க, தொந்தரவு பண்ணக்கூடாது”, என்று கிசுகிசுவென சொன்னார்.

ரொம்ப புரிந்ததுபோல தலையை அசைத்த ஸ்ரீகுட்டி, அமைதியாக பாட்டியின் அருகே சென்று நின்று கொண்டாள்.

“என்ன சொன்னாங்க டாக்டர்?”, ஸ்ருதி குரலைக் குறைத்து  மெதுவாக கேட்டாள்.

ஸ்ருதியை ஒரு பார்வை பார்த்து, “ஸ்ரீகுட்டி பிஸ்கெட் இருக்கு சாப்பிடறியா? பால் தொட்டு?”, என்று உணவருந்தும் டேபிளை காட்டினார். “ம்ம்..”, என்ற ஸ்ரீ, அந்த நீள இருக்கையில் சென்று உட்கார்ந்து பிஸ்கெட்டை கொறிக்க ஆரம்பித்தாள்.

வசந்தம்மா, “நாங்க டாக்டரை பாத்துட்டு வந்திடறோம், அதுவரைக்கும் பாட்டிய பத்திரமா பாத்துக்கணும் சரியா?”, என்று விட்டு ஸ்ருதியிடம் வெளியே செல்லுமாறு கண் காமித்தார்.

இருவரும் வெளியே வந்ததும், “அவங்க தொடை எலும்பு  உடைஞ்சிருக்கும்னு தேவகி டாக்டர் நினைக்கிறாங்க, ஆபரேஷன்  பண்ணினா பரவால்லியா-ன்னு இன்னொரு டாக்டர் கிட்ட போன்ல பேசினாங்க. எட்டு மணிக்கு அவர் வருவாரு, அவரோட வந்து பாக்கறேன்னு சொல்லி இருக்காங்க”

“ஓ..”, மணி பார்த்தாள், இன்னும் எட்டாக இன்னும் சற்று நேரம் இருந்தது.  “எப்படி திடீர்னு?”

“மாடிலேர்ந்து கீழே வரும்போது தலை சுத்தி விழுந்துட்டாங்கபோல, ஞாபகம்-ல்லாம் இருந்தது, நல்லாத்தான் பேசிட்டு இருந்தாங்க. வலிக்குதுன்னு மூஞ்சி பாத்தா தெரிஞ்சது, கொஞ்ச நேரத்துல காலு பொது பொதுனு வீங்கிடிச்சு, அதான் ஆஸ்ப்பித்திரி போலாம்னு மாமி சொன்னாங்களா, சரின்னு கூட்டிட்டு வந்துட்டோம்”

“ரொம்ப தேன்க்ஸ்மா, நல்ல சமயத்துல உதவி பண்ணியிருக்கீங்க”

“இதுல என்ன இருக்குன்னு நன்றில்லாம் சொல்ற?”, கடிந்தார்.

எதிரே டாக்டர்கள் வரவும், பெண்கள் இருவரும் அவர்களை நோக்கி நடந்தனர். “ஸ்ருதி, பர்வதம் பத்தி தான் பேசிட்டு இருக்கோம், இவர் மூர்த்தி, ஆர்த்தோ ஸ்பெசலிஸ்ட், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அவங்கள பாத்துட்டு பேசலாம்”, என்று விட்டு பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றனர்.

இவர்களும் பின் தொடர, அங்கு டாக்டர் மூர்த்தி, எக்ஸ்ரே மற்றும் சி டி ஸ்கேன் இரண்டையும் பார்வையிட்டு, மெல்ல பர்வதத்தின் கால்களை மூடியிருந்த போர்வையை விலக்கி முழங்காலுக்கு மேல் முறிவு ஏற்பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தார்.

நிமிர்ந்து உறங்கும் பர்வதத்தைப் பார்த்து மீண்டும் போர்வையை நேராக்கினார்.

தேவகியை பார்த்தவாறே அவர் வெளியேற, தேவகியும் கூடவே நடந்தார். நடந்தபடியே, “பெமூர் ஷாப்ட் பிராக்சர், சர்ஜரி மஸ்ட், டூ டு த்ரீ மன்ந்த்ஸ் ஆகும், ரெகவரி ஆகறதுக்கு, நல்லவேளை டிஷ்யூஸ் தான் கிழிஞ்சுருக்கு, உள்ள பெரிசா ஒன்னும் இஞ்சூரி இல்ல, PFNs…..”, என்று இருவரும் பேசிக்கொண்டே சென்றதில் திறந்திருந்த கதவு வழியே ஸ்ருதிக்கு இவை மட்டுமே கேட்டது.

சிறிது நேரம் பொறுத்து, ஒரு நர்ஸ் வந்து ரூம் கதவைத் தட்டி, டாக்டர் ஸ்ருதியை அழைப்பதாக சொல்லி சென்றார். ஸ்ருதிக்கு இப்பொழுதே கொஞ்சம் சோர்வு ஆட்கொண்டாற்போல் இருந்தது. வீட்டில் இருந்தால், இந்நேரம் சாப்பிட்டு இருப்பாள். மெல்ல பசி எட்டிப்பார்த்தது. ஆனால் இது பசி பார்க்கும் நேரம் இல்லையே? இவள் மட்டுமன்றி வசந்தம்மாவும் ஸ்ரீகுட்டியும் அல்லவா காத்துக் கொண்டு இருக்கிறார்கள்? என்ற சிந்தனையோடு, தேவகியை பார்க்க சென்றாள்.

“வா ஸ்ருதி, உட்காரு”, என்று சொல்லி, எக்ஸ்ரேயை அதன் ஸ்டாண்டில் பொருத்தி எலும்பு முறிவு எந்த இடத்தில் என்று ஸ்ருதிக்கு காண்பித்தார். “முழங்காலுக்கு கொஞ்சம் மேல இங்க பாரு, இது ஒபிலீக் பெமுர் பிராக்ச்சர்-ன்னு சொல்லுவோம். தெரியுதா? ஒரு ஆங்கிள்-ல்ல கட் ஆயிருக்கில்ல?”, அவர் காண்பித்த படத்தில் தொடை எலும்பில் கோணலாக கோடு தெரிந்தது.

“சரியாயிடும் இல்ல டாக்டர்?”, வயிற்றினில் குழந்தை அசைந்தது. பசியோ?

“நிச்சயமா, சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும், எவ்ளோ சீக்கிரம் பன்றோமோ அவ்ளோ சீக்கிரம் போன் ஜாயின் ஆக வாய்ப்பிருக்கு. ரெண்டு அல்லது மூணு மாசம் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் எடுக்கணும்”

“ஓகே அப்ப பண்ணிடுங்க டாக்டர், அப்டியே எப்போ வீட்டுக்கு போலாம்னு…”

“ஒன்னும் பிரச்சனையில்லன்னா, ஒரு ஒன் வீக்-ல போயிடலாம்”

“ஓகே டாக்டர் அப்போ சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ணிடுங்க”.

“இப்போ போனாரில்லை அவர்தான் சர்ஜரி பண்ணுவார், காலைல ப்ரொசீஜர் முடிக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிடறேன். ஒரு ஒன் லாக் அட்வான்ஸ் பே பண்ணிடு.”

“ஓகே டாக்டர்”

“நா வேணா உனக்கு டெடிக்டேட்  நர்ஸ் அரேன்ஞ் பண்ணட்டுமா?”

“ஆங்..? எதுக்கு டாக்டர்?”

“இன்னும் கொஞ்ச நாள் அவங்களால எதுவும் பண்ண முடியாது, நர்ஸ் வச்சுக்கிட்டா உனக்கு ஈஸியா இருக்கும்”

“ஓகே டாக்டர், யோசிச்சு சொல்றேன்”

“அப்போ நாளைக்கு சர்ஜரிக்கு சொல்லிடலாம் இல்ல?”, இறுதியாக ஊர்ஜிதப்படுத்த கேட்டார்.

“எஸ் டாக்டர்”, என்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டு அத்தை இருந்த அறைக்கு வந்தாள்.

இப்போது பர்வதம் விழித்திருந்தார்,  ஸ்ரீகுட்டியின் கையை வருடியபடி  மெல்ல அவளோடு பேசிக்கொண்டிருந்தார். நேரே அவரருகே வந்து, “வலி இருக்காத்த?” என்று கேட்டு நின்றாள்.