ஸ்மிரிதியின் மனு – 54
“பீஜி இரயில் பயணத்திலே அனாதை ஆனாங்களா? இரயில் விபத்தா?” என்று கேட்டான் மனு.
“இல்லை..அவங்க குடும்பத்தை கொன்னுட்டாங்க.”
“எப்படி நடந்திச்சு? உனக்கு யார் சொன்னாங்க? தல்ஜித்தா?”
“இல்லை..அவன் சொல்லலே..என்னை ஸ்கூலேர்ந்து பியஸுக்கு அழைச்சுகிட்டு போக அவங்க வந்த போது பீஜியே என்கிட்ட சொன்னாங்க.” என்று பதில் சொன்ன ஸ்மிரிதி, மனுவுடன் சேர்ந்து அவர்களின் சிறப்பு பாதையில் பத்து வருடம் பின்னோக்கி பயணம் செய்தாள்.
இந்தமுறை விடுமுறைக்குத் தில்லிக்குச் செல்லு முடியாத காரணத்தால், பியஸுக்கு போக விரும்பாததால் எப்போதும் போல் அன்றையப் பொழுதைக் கழித்தாள் ஸ்மிரிதி.  காலை எழுந்தவுடன் ஸ்கூல் கிரவுண்டில் கூடைப்பந்து விளையாட்டைத் தனியாக விளையாடினாள். அதை முடித்துக் கொண்டு அவள் அறைக்கு வந்து குளித்து, உடை மாற்றிய பின் காலை டிஃபனிற்காக மெஸ் சென்றாள்.  ஆங்காங்கே ஒன்றிரண்டு மாணவ, மாணவியர் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.  அவர்கள் யாருடனும் பேசாமல் அவளின் காலை உணவைத் தனியாக முடித்து கொண்டு அங்கிருந்து நேராக நூலகத்திற்கு சென்றாள்.  ஒரு மணி நேரம் மேல் அங்கே கழித்த பின் சில புத்தங்களுடன் அவள் அறைக்குத் திரும்பினாள்.  அவள் எடுத்து வந்திருந்த புத்தகத்தைப் படித்து கொண்டே தூங்கிப் போன ஸ்மிரிதியை யாரோ கதவைத் தட்டும் ஓசை எழுப்பியது.  தூக்க கலக்கத்துடன் எழுந்து சென்று கதவைத் திறந்தவளிடம்,”விஸிட்டர்” என்று சொல்லிச் சென்றார் ஹெல்பர்.  
யாராக இருகக்கூடும் என்று யோசித்துக் கொண்டே அவள் பார்வையாளர் அறைக்கு வந்து சேர, ஜன்னலோரம் இருந்த சேர் ஒன்றில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார் பீஜி.
அவரைப் பார்த்து ஆச்சர்யமடைந்த ஸ்மிரிதி சந்தோஷத்துடன்.”பீஜி” என்று விளித்தாள்.
ஸ்மிரிதியின் குரலைக் கேட்டதும் ஜன்னலிலிருந்து பார்வையைத் திருப்பிய பீஜி,”உன்னோட சாமனெல்லாம் பாக் செய்துக்க..உங்க வீட்லே பேசிட்டு உன்னை என்கூட கூட்டிக்கிட்டுப் போக வந்திருக்கேன்.” என்றார்.
அவரைத் தயக்கத்துடன் பார்த்தவள், தரையை நோக்கி பார்வையை செலுத்தி,
“நான் வரலை பீஜி..இங்கையே இருந்துக்கறேன்..நிறையே பாடம் மிஸ் செய்திட்டேன் அதான் லீவுக்கு வீட்டுக்கும் போகலே.” என்று உண்மையானக் காரணத்தை சொல்லாமல் உண்மையாலேயே அதை மறைத்தாள்.
“ஏன் பாடம் மிஸ் செய்த?” என்று கேட்டார் பீஜி.
ஸ்மிரிதியிடமிருந்து அதற்கு பதிலில்லை.
அதுவரை சேரில் உட்கார்ந்திருந்த பீஜி எழுந்து வந்து ஸ்மிரிதியின் கையைப் பிடித்து கொண்டு,”சீக்கிரம் கிளம்பு..அப்பறம் ட்ரெயின் மிஸ் ஆயிடுச்சுன்னா தில்லிலேயும் மிஸ் ஆகிடும்.” என்று சொன்னார்.
அவரைச் சங்கடத்துடன் பார்த்த ஸ்மிரிதியிடம்,”உங்கப்பாவோட ஃபோன் நம்பர் கொடு..நான் பேசறேன்..நீ அதுக்குள்ள பாக் செய்திடு.” என்றார் பீஜி. அவள் மறுப்பை பீஜி ஏற்க போவதில்லை என்றுணர்ந்த ஸ்மிரிதி கார்மேகத்தின் ஃபோன் நம்பரை அவருக்குக் கொடுத்துவிட்டு அவள் அறைக்கு சென்று பத்தே நிமிடத்தில் அவள் சாமான்களுடன் திரும்பி வந்தாள்.
அந்த முறை பியஸுக்கு பீஜியுடன் ஸ்மிரிதி செய்த இரயில் பயணம்தான் அவள் வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைக்ககூடிய பயணமாக மாறியது.  இரண்டு இரயில் மாறி அவர்கள் பியஸ் சென்றடைந்தபோது ஸ்மிரிதியும் மாறிதான் போயிருந்தாள்.
அவர்கள் பயணத்தின் ஆரம்பத்தில் மௌனமாக ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதியிடம் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தார் பீஜி.
“அவங்க நாலு பேரும் உனக்காக பியஸ்லே வெயிட் செய்யறாங்க.” என்றார்.
“இல்லை பீஜி..அவங்க எனக்காக எதுவும் செய்ய மாட்டாங்க..அவங்க நாலு பேரும் ஒண்ணு..நான் வேற பீஜி..நான் தனி.” என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.
“ஸ்மிரிதி.…அவங்க நாலு பேரும் நடந்ததை சொல்லியிருந்தா உனக்கும் தண்டனை கிடைச்சிருக்காது.அவங்க எதுவும் சொல்லாதது தப்புண்னு இப்பதான் அவங்களுக்குப் புரிஞ்சிருக்கு.”
“யார் சொன்னாங்க உங்களுக்குப் பீஜி? தல்ஜித்தா?”
“அவனுக்கு அன்பு காட்ட தெரியுது அதை எல்லா நேரத்திலேயும் காட்டணும்னு உணரலே.” என்றார் பீஜி.
“அவனாலேதான் நான் அவங்க க்ரூப்லே சேர்ந்தேன்..சுசித் ரா, மெஹக் இரண்டு பேருக்கும் என்னைப் பிடிக்காது..கபீருக்கு என்னைப் பிடிக்குமாண்ணு எனக்குத் தெரியாது..அவங்க நாலு பேரும் என்னோட பிரண்ட்ஸ்னு நாந்தான் நினைச்சுகிட்டிருந்தேன் அவங்க அப்படி நினைக்கலே.” என்றாள் ஸ்மிரிதி.
“இல்லை ஸ்மிரிதி..அவங்க அப்படி நினைச்சதாலேதான் நீ ஸ்கூலுக்கு மறுபடியும் வந்த பிறகு உன்னோட பேச முயற்சி செய்தாங்க.” 
“எப்படி பீஜி என்னாலே அவங்களோட பழையபடி இருக்க முடியும்?
“நீ அன்னைக்கு தப்பே செய்யலேயா ஸ்மிரிதி?” என்று நேரடியாக பீஜி கேட்க,
“தப்பு செய்தேன் பீஜி..ஆனா நான் மட்டும் செய்யலே.” 
“உனக்குத் தண்டனை கிடைச்சிடுச்சு மற்றவங்க தப்பிச்சிட்டாங்கன்னு உனக்கு அவங்க மேலே கோபமா?” என்று பீஜி கேட்க,
“கார்லே என்னோட இருந்த பையனுக்குக் தண்டனைக் கிடைக்கலே பீஜி..என் பெயர்தான் கெட்டு போயிடுச்சு..நான் அவனோட பேசக்கூடாது, தொடர்பு வைச்சுக்க கூடாதுங்கற கண்டிஷன்லேதான் திரும்ப ஸ்கூலுக்கு வந்திருக்கேன்…அவனைத் தனியா அழைச்சுகிட்டு போய் வேணும்னே ஆக்ஸிடெண்ட் செய்த மாதிரி பேசி.. அப்படியே எல்லாத்தையும் மாத்திட்டான்..அதனாலே அவன் எந்த தப்பும் செய்யாத மாதிரியும் நான் மட்டும் தப்பு செய்த மாதிரியும் ஆயிடுச்சு.” என்றாள் ஸ்மிரிதி.
“நீயும், அவனும் கார்லே தனியா இல்லைன்னா உங்ககூட வேற யார் இருந்தா?” 
“நான், ப்ரதீக் முன்னாடி இருந்தோம்.. தல்ஜித்தும், கபீரும் பின்னாடி உட்கார்ந்திருந்தாங்க.” 
தல்ஜித்தின் பெயரைக் கேட்டவுடன் பீஜி சற்று உணர்ச்சிவசப்பட்டார்.”கார்லே உன்னோட இருந்ததை தல்ஜித் என்கிட்ட சொல்லலே..கார் ஆக்ஸிடெண்ட்னாலே உனக்கு பனிஷ்மெண்ட் கிடைச்சுது..அதனாலே நீ அவங்களோட கோபமா இருக்கேண்ணு மட்டும் சொன்னான்.” என்றார்.
“அவங்க இரண்டு பேரும் கார்லே இருந்ததை யார்கிட்டையும் நான் இதுவரை சொல்லலே..ப்ரதீக்கும் சொல்லலே.”
“அவன் ஏன் யார்கிட்டையும் சொல்லலே?” 
“எனக்குத் தெரியாது பீஜி..அது பாய்ஸ்குள்ள..அந்தக் கார்லே நானும், அவனும் மட்டும் இருந்த மாதிரிதான் கம்ப்ளெண்ட் பண்ணியிருந்தான்.”
“ஏன் ஸ்மிரிதி அந்தக் காரை ஓட்டின?” என்று கேட்டார் பீஜி.
“குடிச்சிருந்தேன்..அதனாலே இருக்கலாம்.” என்று ஒப்புக்கொண்டாள் ஸ்மிரிதி.
அவள் குடிபோதையில் வண்டியை ஓட்டினாள் என்று கேட்டு அதிர்ச்சியடைந்த பீஜி,
“எப்பலேர்ந்து ஸ்மிரிதி?’
“கொஞ்ச நாளாதான்.”
“உங்க எல்லாருக்குமே இந்தப் பழக்கமிருக்கா?
“எனக்கு முன்னாடியே எல்லாருக்கும் இருந்திச்சு.” என்றாள் ஸ்மிரிதி
“வேற என்ன பழக்கம்?”
“சிகரெட், பீடி.” 
“எப்படி ஆரம்பிச்சது?” என்று பீஜி கேட்க,
மௌனமாக இருந்தாள் ஸ்மிரிதி.
“உங்க வீட்லே இதுகெல்லாம் வாய்ப்பில்லை..உங்க அஞ்சு பேருக்கும் இந்தப் பழக்கம் பள்ளிக்கூடத்திலேதான் ஆரம்பிச்சிருக்கணும்.” என்றார் பீஜி
“மெஹக்குக்கு முதலேர்ந்து இருக்கு..அவங்க அம்மாவாலே.” என்றாள் ஸ்மிரிதி.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு,
“நான் தல்ஜித்தைப் பற்றி நினைச்சுகிட்டு இருக்கறதெல்லாம் தப்பு போலே.” என்றார் பீஜி.
“அவன் என்ன செய்வான் பீஜி? எங்க கிளாஸ் பாய்ஸ் எல்லாருக்கும் இருக்கு… பழகிக்கலேனா டீஸ் செய்வாங்க.”
“மற்றவங்க வாழ்க்கைலே மாற்றத்தைக் கொண்டு வர நான் எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கறேன்..என் பேரன் மற்றவங்களுக்கு பயந்துகிட்டு அவன் வாழ்க்கையை இந்த மாதிரி மாற்றிகிட்டு பாழ் செய்துகிட்டு இருக்கான்.” 
ஸ்மிரிதி அமைதியாக, 
“என்ன நடந்திச்சு அன்னைக்கு?” என்று கேட்டார் பீஜி.
அவளைக் குற்றவாளி போல் பார்க்காமல் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள தயாராக இருந்த பீஜியிடம் அவள் மனதைத் திறந்தாள் ஸ்மிரிதி.
அன்னைக்கு காலைலே எல்லாரும் கிரவுண்ட்லே எங்களோட பிராக்டீஸ் முடிஞ்ச பிறகு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தோம்..ரூமுக்கு போக பிடிக்கலே..மற்ற பசங்களோட விளையாட்டை வேடிக்கைப் பாரத்துகிட்டு ஃப்ளாஸ்க்லேர்ந்து ஸிப் எடுத்துகிட்டிருந்தோம்..
எங்க வீட்லே இப்ப எதுவும் சரி இல்லை பீஜி அதனாலே எல்லாரையும் விட நான் கொஞ்சம் ஜாஸ்தியா குடிக்க ஆரம்பிச்சிருந்தேன்…பிராக்டிஸ் முடிஞ்சு கிரவுண்டே காலியான பிறகும்  நாங்க அஞ்சு பேரும் மட்டும்  உட்கார்ந்துகிட்டு வெய்யிலை என் ஜாய் பண்ணிகிட்டு இருந்தோம்.. அப்ப ப்ரதீக் அங்கே வந்தான்…
அவனுக்கும் எனக்கும் ஒத்துப்போகாது பீஜி…மெஹக்கோட, என்னோட ரொம்ப வம்பு செய்வான்..எங்க இரண்டு பேரையும் பார்த்து பிளாக் அண்ட் வைட்ன்னு கூப்பிடுவான்..அவன் அப்பா பெரிய ஆளுன்னு மெஹக் பயப்படுவா..அதனாலே அவன் செய்யறதை வெளிலே சொல்ல மாட்டா..ஸ்கூல்லே எல்லாரும் அவன் மெஹக்கோட பாய்பிரண்டுன்னு சொல்றாங்க..
அவன்  எங்க இரண்டு பேர்கிட்டையும் வம்பு செய்துகிட்டு இருந்தபோது கோச் அவரு காரை ஆன் பண்ணி வைச்சிட்டு வைண்ட் அப் பண்ண ஆபீஸ் ரூம் போனாரு..அவரு எல்லாத்தையும் ஒப்படைச்சிட்டு, கையெழுத்து போட்டு திரும்பி வரும்போது இன்ஜின் ரெடியாயிருக்கும்.. காரை ஓடிட்டு போயிடுவாரு..
அன்னைக்கும் அப்படிதான் செய்தாரு..அப்ப ப்ரதீக் எங்க இரண்டு பேரையும் விட்டிட்டு தல்ஜித்தையும், கபீரையும் கேலி பேச ஆரம்பிச்சான்..நாங்க எல்லாரும் வாயை மூடிகிட்டு இருந்தோம்..அப்ப அவன் தல்ஜித்தையும், கபீரையும் பார்த்து,”ரூமுக்கு வாங்க கவனிச்சுக்கறேன்னு மிரட்டினான்.” நான் உடனே,”நீ அவங்க இரண்டு பேரைக் கவனிச்சேன்னா நான் உன்னைக் கவனிச்சுப்பேண்ணு.” பதிலுக்கு மிரட்டினேன். அதுக்கு அவன்,
“நீ பாய்ஸ் விஷயத்தில தலையிடாதேன்னு என்கிட்ட சொன்னான்.” 
“நீ எதுக்கு கேர்ல்ஸ்கிட்ட வந்து பேசறே.. கெட் லாஸ்ட்டுனு கத்தினேன்.”
அவனைக் கெட் லாஸ்ட்டுண்ணு சொன்னவுடனே அவனுக்கு கோவம் வந்திடுச்சு..என்கிட்ட வந்து என்னை ஸ்கூலேர்ந்து அனுப்பிடுவேண்ணு மிரட்டினான்..அதுக்கு நான், முடிஞ்சா அனுப்பு..நான் எதுக்கும் பயப்பட மாட்டேண்ணு அவனுக்கு பதில் சொல்லிட்டு அங்கேயிருந்து கிளம்பிட்டேன்..என் பின்னாடியே மற்ற நாலு பேரும் வந்தாங்க.
நாங்க சண்டைப் போடாம அமைதியா போகறதைப் பார்த்து, நாங்க அஞ்சு பேரும் தைரியமில்லாதவங்க அதான் அவன்கிட்டேயிருந்து ஒதுங்கிப் போறோம்ணுனான்.
அதுக்கு நான், அவந்தான் எங்ககிட்ட வீணா வம்பு செய்யறாண்ணு சொன்னேன்
அதுக்கு, அவன் சொல்ற வேலையை நான் செய்தா இனி எங்க விஷயத்துக்கு வரவே மாட்டாண்ணு பிராமிஸ் செய்தான்..
நாங்க எல்லாரும் ரொம்ப நாளா அவனுக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைச்சுகிட்டு இருந்தோம்.. அதனாலே மற்ற நாலு பேரும் என்கிட்ட,”ஸ்மிரிதி, அவன் சொல்றதை செய்திடு..அதுக்கு அப்பறம் நம்மை தொந்தரவு செய்ய மாட்டாண்ணு சொன்னாங்க பீஜி.”
“எப்படி ஸ்மிரிதி அவ்வளவு முட்டாளா இருந்திருக்கீங்க நீங்க அஞ்சு பேரும்? அவன் இவ்வளவு தொந்தரவு கொடுத்திருக்கான்..அவனைப் பற்றி ஏன் கம்ப்ளெண்ட் செய்யலே?
“நிறைய பசங்க நிறைய தடவை செய்திட்டாங்க பீஜி..அவனை ஒண்ணும் செய்ய முடியலை.”
“அவன் உன்னை என்ன செய்ய சொன்னான் ஸ்மிரிதி?’
“எனக்குத் தெரிஞ்ச விஷயத்தைதான் செய்துக்க காமிக்க சொன்னான்..நானும் அவனுக்கு அதை செய்து காமிச்சேன் பீஜி..ஆனா அந்த விஷயத்தை நான் அவ்வளவு நல்லா செய்வேண்ணு அவன் எதிர்பார்க்கலே..அதனாலே திடீர்னு அவன் வேற ஏதோ செய்ய போய் விபத்தாகிடுச்சு..
பீஜி மௌனமாக அவளுக்காக காத்திருக்க, ஸ்மிரிதியின் மனது அந்த மதிய வேளைக்கு பயணித்தது.
வெளி கேட்டுக்கும் கிரவுண்டுக்கும் நிறைய தூரம் பீஜி..நாங்க விளையாடற இடம் உயரத்திலே,  மேடுலே இருக்கு..கேட் பள்ளத்திலே இருக்கு…கோச்சோட காரை கிரவுண்டுலேர்ந்து கேட்டுவரைக்கும்..மறுபடியும் கேட்லேர்ந்து கிரவுண்டுக்கு ரிவர்ஸ்லேயே ஓட்டி காட்ட சொன்னான் பீஜி..
எனக்கு கார் ஓட்ட தெரியும்ங்கற விஷயம் எங்க க்ரூபைத் தவிர யாருக்கும் தெரியாது ஆனா ப்ரதீக் என்கிட்ட காரை ஓட்டி காட்டணும்னு சொன்ன போது யாரோ எங்க க்ரூப்லேர்ந்து அவன்கிட்ட அந்த விஷயத்தை சொல்லி இருக்காங்கண்ணு எனக்குப் புரிஞ்சிடுச்சு..எங்க அஞ்சு பேர்லே மெஹக்தான் அவனோட சுத்திகிட்டு இருப்பா அவதான் அவன்கிட்ட சொல்லியிருக்கணும்..
அவன் கார் ஓட்டணும்னு சொன்னவுடனே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு பீஜி..இவ்வளவுதானா அப்படின்னு உடனே போய் கோச்சோட காரை ஸ்டார்ட் செய்தேன்..மற்ற எல்லாரும் வேடிக்கைப் பார்க்க, ஒருமுறை இல்லை  பீஜி பலமுறை ஓட்டி காட்டினேன் பீஜி..
அப்பதான் ஒருதடவை நான் கேட்டிற்க்குப் போகும்போது அவனா கார் கதவைத் திறந்து முன்னாடி ஸீட்லே உட்கார்ந்துகிட்டான்..அவன் உட்கார்ந்தவுடனே தல்ஜித்தும், கபீரும் பின்னாடி ஸீட்லே உட்கார்ந்துகிட்டாங்க..நான் யாரையுமே என்கூட வர சொல்லி  கூப்பிடவேயில்லை பீஜி..மூணு பேரும் அவங்களாவே வந்து உட்கார்ந்துகிட்டாங்க..
என் பக்கத்திலே உட்கார்ந்த பிறகு இப்ப ஓட்டி காட்டுண்ணு சவால் விட்டான் பீஜி..நானும் அவனைக் கொஞ்சம் பயமுறத்தலாம்ணு கேட்லேர்ந்து கிரவுண்டுக்கு, கீழேயிருந்து மேலே ரிவர்ஸலே வரும்போது வேணுமிட்டே ஒரு இடத்திலே கியரை ஃபர்ஸ்ட்டுக்கு மாற்றி கார் கொஞ்சம் தூரம் வேகமா கீழே இறங்கி முன்னாடி போனவுடனே மறுபடியும் ரிவர்ஸ் கியர் போட்டு அதைவிட வேகம் கூட்டி மேலே ஏறினேன்….அப்படியே இரண்டு மூன்று தடவை முதல் கியர், ரிவர்ஸ் கியருண்ணு மாறி மாறி போட்டு வேகமா கீழே இறங்குவேன் அதைவிட வேகமா ரிவர்ஸ்லேயே மேலே ஏறுவேன்..
கபீரும், தல்ஜித்தும் பின்னாடி உட்கார்ந்து என்னை உற்சாகப்படுத்தினாங்க..கிரவுண்டலே நின்னுகிட்டிருந்த மெஹக்கும், சுசித் ராவும் கைதட்டி சிரிச்சாங்க..ஒருமுறை நாங்க மேலே வந்தவுடனே அவன் கார்லேர்ந்து இறங்க பார்த்தான்..எனக்கு அப்ப அவனை அதோட விடக்கூடாதுன்னு தோணிச்சு பீஜி..அவனை இறங்கவிடமா திரும்ப வேகமா நான் காரைக் கிளப்பினேன்..அவனுக்குப் பயமாயிடுச்சு பீஜி அந்தப் பயத்திலே காரை நிறத்த சொல்லி கத்தினான்..நான் நிறுத்தலே..அவன் அழ ஆரம்பிச்சிட்டான்..பயத்திலே பாத் ரூம் போயிட்டான் பீஜி..எனக்கும் போதும்ணு தோணிச்சு..அப்ப பர்தீக் அழறதைப் பார்த்து அவனை தல்ஜித்தும், கபீரும் கேலி செய்ய ஆரம்பிச்சாங்க..திடீர்னு கார் உள்ளே ஒரே சத்தம்..நான் பின் பக்கம் திரும்பி ஷட் அப்ணு கத்தினேன் அந்த நேரத்திலே  ப்ரதீக் ஸ்டியரிங்கை பிடிச்சு திருப்பிட்டான்.. ஸைட்லே இருந்த மரத்திலே போய் மோதிட்டோம்.. 
கார் மோதின சத்தம் கேட்டவுடனேயே மெஹக், சுசித் ரா இரண்டு பேரும் ஓடி வந்தாங்க..அதுக்குள்ள கபீரும், தல்ஜித்தும் கார்லேர்ந்து இறங்கி வெளியே போயிட்டாங்க..அவங்க இரண்டு பேரும் எந்த உதவியும் செய்யாம கொஞ்ச தூரத்திலே இருந்த மெஹக், சுசித் ரா பக்கத்திலே போய் நின்னுகிட்டாங்க..
நானும், ப்ரதீக்கும் மட்டும் கார் உள்ளேயே உட்கார்ந்திருந்தோம்..
என்ன நடந்திச்சுன்னு எனக்குப் புரியவே இல்லை..எப்படி மரத்தி போய் மோதினேன்னு யோசிச்சுகிட்டிருந்தேன்..
அப்ப கோச் அவரு காரை தேடிக்கிட்டு அங்கே வந்திட்டாரு..மரத்திலே மோதியிருக்கற காரைப் பார்த்து ஓடி வந்த கோச்தான் பின்னாடி பக்கம் ஏறி ப்ரதீக் ஸைட் முன்பக்க கதவைத் திறந்து அவனைக் கார்லேந்து வெளியே இறக்கினாரு..அவனுக்கு அடியேதும் படலே ஆனா ரொம்ப பயந்து போயிருந்தான்..பயங்கரமா அழுதான்..
என் ஸைட் கதவை அவர் திறந்ததுமே நான் குடிச்சிருக்கேண்ணு அவருக்குத் தெரிஞ்சிடுச்சு..அவரு உடனே என்னைத் திட்ட ஆரம்பிச்சிட்டாரு..அதை தூரத்திலேர்ந்து பார்த்துகிட்டிருந்த நாலு பேரும் அவங்களும் மாட்டிப்பாங்கண்ணு  அங்கேயிருந்து போயிட்டாங்க..
கோச்சோட காரை ஓட்டி நான் ஆக்ஸிடெண்ட் செய்ததைப் பற்றி உடனே எங்கப்பாவுக்கு ஸ்கூல் தகவல் கொடுத்திடுச்சு..அவராலே நேரலே வர முடியலே..என்கிட்ட ஃபோன்லே பேசினாரு..நான் குடிச்சிட்டு வண்டி ஓட்டினேனாண்ணு ஒரே ஒரு கேள்விதான் கேட்டாரு..ஆமாம்ணு உண்மையை சொன்னேன்….ஸ்மிரிதி மா..பெரிய தப்பு பண்ணிட்டீங்கமாண்ணு சொன்னாரு பீஜி..அதுக்குப் பிறகு அவரு என்கிட்ட ஒரு வார்த்தைப் பேசலே..எங்கம்மாவை ஸ்கூலுக்கு அனுப்பி வைச்சாரு..