“சொல்லுங்க உங்க காதல் கதையைக் கேட்போம்.” என விஷால் வசதியாகப் படுத்துக் கொண்டு கதைக் கேட்க ஆர்வமாக…
“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை.” என்றதும்,
“யார் முதல்ல லவ் பண்றேன்னு சொன்னது?.”
“லவ் பன்றோம்னு இதுவரை ரெண்டு பேருமே சொன்னது இல்லை.” எனக் கீர்த்திச் சொன்னதும், விஷால் என்ன டா இது என்பது போலப் பார்க்க…
“எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. ஆனா எனக்குப் பிடிக்கலை. எனக்கு அப்போ தர்மாவை கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருக்கும்னு தோனுச்சு. அவர்கிட்ட கேட்டேன், அவரும் எனக்கு முன்னாடியே உன்னைப் பிடிக்கும்னு சொன்னார். அவ்வளவுதான்.”
“அவருக்குப் பிடிச்சிருந்தும் உங்ககிட்ட சொல்லலை… பார்த்தியாக்கா, எல்லாம் மண்டை கணம். காதலிக்கிறேன்னு சொன்னா கவுரம் போயிடுமா?” என விஷால் அருணாவிடம் சொல்ல, கீர்த்தி மறுத்தாள்.
“அப்படியில்லை அவர் எனக்காகத்தான் யோசிச்சார்.” என்றவள், காரணத்தையும் விளக்க… விஷால் உடனே தன் எண்ணத்தை மாற்றிக்கொள்வானா என்ன?
“அப்படியென்ன வீட்டை விட்டு வரும் அளவுக்கு, உங்களுக்கு அவர்கிட்ட பிடிச்சது?” என்றான்.
“அவர் தன்னோட இடத்தில இருந்து மட்டும் யோசிக்க மாட்டார். அடுத்தவங்க விருப்பத்துக்கும் மதிப்பு கொடுப்பார். எல்லாப் பெண்களுமே தன்னைப் புரிஞ்சிக்கிற கணவன் வேணும்னு தானே நினைப்பாங்க. இப்ப கூட எங்க வீட்ல முடிவு பண்ணிட்டாங்க, இப்படித்தான்னு சொல்லவே இல்லை. உனக்கு ஒகே வா கீர்த்தின்னு, என்னோட விருப்பத்தையும் கேட்டுதான் செஞ்சார்.”
“தன்னோட முடிவுதான்னு இல்லாம, அவர் எப்பவும் என்னையும் சமமா நடத்துவார். எனக்கு அந்தக் குணம் ரொம்பப் பிடிச்சிருந்தது.”
கீர்த்திச் சொன்னதற்கு விஷால் பதில் எதுவும் சொல்லவில்லை. “இதெல்லாம் ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். போகப் போகக் கசக்கும்.” என நினைத்துக் கொண்டான்.
கீர்த்தி ஒன்றும் நேற்று தர்மாவை பார்த்து காதல் கொண்டு, இன்று மணந்து விடவில்லை. அவளுக்கு அவனை இரண்டு வருடமாகத் தெரியும். அவளுடைய ஓய்வு நேரத்தை அதிகம் தர்மாவுடன் தான் கழித்திருக்கிறாள். இங்கே இருவருமே ஒருவரையொருவர் நன்றாக அறிந்து புரிந்து கொண்டவர்கள் என்பது அவனுக்குப் புரியவில்லை.
சமையல்காரர் கணேசனும் உதவியாளரும் மாடி ஹாலில் படுத்துக்கொள்ள, விஷால் அங்கிருந்த அறை ஒன்றில் சென்று படுத்துக் கொண்டான். கீழே இருந்த ஒரு அறையில் ரங்கநாதனும் நாயகியும் இருக்க, பெரிய அறையில ஜமுனா, கீர்த்தி, அருணா அவளின் பிள்ளைகள் எல்லோரும் படுத்துக் கொண்டனர்.
எல்லோரும் களைப்பில் உடனே உறங்கி இருக்க… கீர்த்தி உறக்கமே வராது என நினைத்திருந்தாள். ஆனால் சிறிது நேரத்தில் அவளும் நன்றாக உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலை உணவு முடிந்ததுமே, ரங்கநாதனுக்குத் துணையாக அவர் உதவியாளரை வைத்துவிட்டு, கணேசனையும் பார்த்துக்கொள்ளச் சொல்லிட்டு விட்டு, விஷால் பெண்களை ஷாப்பிங் கிளம்பச் சொன்னான்.
நாயகி அங்கே மர பீரோவில் இருந்த தன்னுடைய திருமணப் புடவையை எடுத்து வந்து காட்ட… கீர்த்தி ஆசையாக வாங்கிப் பார்த்தாள்.
மை ஊதா நிறத்தில் உடல் முழுவதும் வெள்ளி ஜரிகைகள் கொடியாகப் படந்திருக்க… முந்தானையில் வெள்ளி ஜரிகையால் அழகான வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அசல் வெள்ளியால் நெய்யப்பட்ட புடவை.
“இதை எங்க கல்யாணத்து அன்னைக்குக் கட்டிக்கோங்க பாட்டி.” எனக் கீர்த்திச் சொன்னதற்கு.
“இந்த வயசுல நான் இப்படிப் புடவை கட்ட முடியுமா?” என்றார்.
பச்சைக் கற்பூரம், லவங்கம், வேப்பில்லை எல்லாம் போட்ட ஒரு பையில் தான் புடவையைப் பாதுக்காப்பாக நாயகி வைத்திருந்தார். அதிலிருந்து பச்சைக்கற்பூரம் வாசனை தூக்கலாக இருக்க…. கீர்த்திப் புடவையை வாசம் பிடித்தாள்.
“அழகா இருக்கு கட்டிக்கோங்க பாட்டி.”
“நீ வேணா கட்டிக்கோ. நீ என் பேரன் பொண்டாட்டி தானே….” என்றதும், பிகு பண்ணாமல், “சரி நான் ஒருநாள் கட்டிக்கிறேன்.” என்றவள், “உங்க கல்யாண புடவை எங்க அத்தை?” என ஜமுனாவிடம் கேட்க,
மருமகள் கேட்டதும் காட்ட முடியவில்லையே என வருத்தம் ஜமுனாவிற்கு, சென்னையில இருக்கு என்றதும், “சரி அங்க வந்து பார்த்துகிறேன்.” என்றாள்.
எல்லோரும் கடைக்குச் செல்ல…. கீர்த்தித் திருமணப் புடவையை வெகு நேரம் தேர்வு செய்தாள். பிறகு நிச்சயத்திற்குப் பார்க்க… “நான் பாட்டியோடது கட்டிக்கிறேன். புதுசா எல்லாம் வாங்க வேண்டாம்.” என்றுவிட்டாள். நாயகியின் புடவைக்கு ஏற்றவாறு ரெடிமேட் ரவிக்கை வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது மட்டும் வாங்கிக் கொண்டாள்.
அதே போல் நகை கடைக்குச் செல்ல… தாலிக் கொடி மட்டும் அவள் விருப்பத்திற்கு வாங்கியவள், பெரிய நகை செட் ஒன்று பார்க்க, வாங்கவே விடவில்லை.
கீர்த்தியை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. காலையில் தான் அவள் அம்மா கொடுத்த நகைகளைப் பீரோவில் வைக்கக் கொடுத்திருந்தாள். அப்போது என்ன இருக்கிறது என எடுத்து காட்டினாள்.
சின்னதாக இருந்தாலும் அவள் அம்மா மகளுக்காக மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். பார்க்கத்தான் சின்னதாக இருந்ததே தவிர… ஒவ்வொன்றும் எடை அதிகம்தான்.
தங்க நகைகளுக்கு இடையே கல் பதித்த நகைகளும் ஒரு செட் இருக்க… அது அத்தனையும் வைரம். அந்த வீட்டிலும் வைர நகைகள் உண்டுதான். ஆனால் காதில் அணிந்திருக்கும் தோடு, மோதிரம், மூக்குத்தி மட்டுமே வைரம். இன்னும் பெரிய நகைகள் வாங்கும் அளவுக்கு வரவில்லை.
கீர்த்திக்கு இப்போது அவள் அம்மா கொடுத்திருப்பது எல்லாம் ஒன்றுமே இல்லை. மினிஸ்டர் பையனுக்கு தானே அவளை பேசி இருந்தார்கள். அவர்கள் வசதிக்கு சீர் வரிசை செய்ய முடியும் என்பதால் தானே.
பெரிய பணக்கார வீட்டில் இருந்து வந்தும், அந்தப் பந்தா இல்லாமல் இருப்பது பார்த்து ஆச்சர்யமே… அவள் நகை வேண்டாம் எனப் பிடிவாதமாக இருக்க…. ஜமுனா தர்மாவை அழைத்துக் கேட்க, “அம்மா… அவ இஷ்டத்துக்கு விட்டுடுங்க. அவ சரியாத் தான் சொல்வா.” என்றான்.
“சரி டா, அப்ப நீ வரும்போது லாக்கர்ல இருக்க என்னோட நகைகளை எடுத்திட்டு வா… அவளே எது வேணுமோ போட்டுக்கட்டும்.” என்றார்.
தர்மா அவன் பக்க உறவினர்களை, அவர்கள் விருப்பதிற்கே திருமனதிர்க்கான ஆடைகள் எடுக்கச் சொல்லி பணம் கொடுத்திருந்தான். அதனால் இவர்களுக்கு மட்டும் வாங்கினர்.
அவர்கள் புடவை தேர்வு செய்யும் நேரத்தில், விஷாலும் கீர்த்தியும் சென்று தர்மாவுக்கு உடைகள் வாங்கினர்.
கீர்த்தி வெகு நேரம் ஆராய… “உங்க ஆளு எதைக் கொடுத்தாலும் போடுவாருங்க. எதாவது ஒன்னை எடுங்க.” என்ற விஷாலைப் பார்த்துப் பொய்யாக முறைத்த கீர்த்தி, “அதுக்காக நல்லா இல்லாததை வாங்க முடியுமா?” என்றவள், வெகு நேர ஆராய்ச்சிக்கு பிறகே தேர்வு செய்ய…. விஷால் அவளைப் பில் போட அழைத்துச் சென்றான். தர்மாவின் கார்டை வைத்துதான் விஷால் பணம் கட்டினான்.
அண்ணனின் கார்ட் தானே என்று விஷால் அவன் இஷ்டதிற்கு அவனுக்கும் உடைகள் வாங்கி இருந்தான். இதிலாவது தர்மாவை பழிவாங்கி விட வேண்டும் என்று நினைத்தான் போல…
தைக்க வேண்டிய ஆடைகளை அங்கேயே தைக்கக் கொடுத்து விட்டு, வாங்கிய சாமான்களோடு வீடு வந்து சேர இரவு ஆகிவிட்டது. மறுநாள் ஜமுனாவுடன் அருணாவை பத்திரிகை வைக்கச் செல்ல சொல்லிவிட்டு, விஷால் அதிகாலையே சென்னையில் இருந்து வரவழைத்த தன் நண்பர்களுடன் கொடைக்கானல் கிளம்பி சென்றுவிட்டான்.
தர்மாவுக்கு விஷால் இல்லாதது அதற்கு மறுநாள் தான் தெரியும். “அவன் எதுக்காக இங்க இருந்து போனான். இப்ப என்ன வேலை பண்ணிட்டு இருக்கான்? டூர் போற நேரமா இது.” எனத் தர்மா கத்து கத்தென்று போன்னில் கத்த…. அருணா போன்னை ஸ்பீக்கரில் போட்டு இருந்தாள்.
“இங்க அவருக்கு ஒன்னும் வேலை இல்லைங்க. அவரும் இங்க உட்கார்ந்திட்டு என்ன பண்ணுவார்? பக்கத்தில இருக்கு கொடைக்காணல் போயிட்டு வரட்டும் விடுங்க.” எனக் கொழுந்தனுக்குக் கீர்த்திச் சிபாரிசு செய்ய… இது அவள் வாழ்க்கை முழுதும் தொடரும் என அப்போது தெரியவில்லை.
“நான் கல்யாணத்தை வச்சிட்டு கம்பெனிக்கும் வந்திட்டு, எனக்கு எவ்வளவு வேலை. அவன் இங்க வரக் கூடாதா? அதுவும் என் கார்டை வச்சு இஷ்டத்துக்குப் பணம் செலவு பண்றான். எனக்கு இங்க மெசேஜ் வந்திட்டே இருக்கு.” எனத் தர்மா சொன்னதும், அனவைருக்கும் சிரிப்பு.
“நீ சம்பாத்திக்கிற, அவன் செலவு பண்றான். நீ சம்பாதிக்கிறதை செலவு பண்ணவும் ஆள் வேண்டாமா?” என ஜமுனா சொல்ல…
“நீங்க எல்லாம் இப்படியே அவனுக்குச் செல்லம் கொடுங்க.” எனத் தர்மா எரிச்சலாக…
போன்னை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற கீர்த்தி, “விஷால்கிட்ட பணத்தைப் பத்தி எதுவும் சொல்லாதீங்க தர்மா.. அது தப்பா தெரியும். உங்ககிட்ட உரிமை இருக்குன்னு தானே எடுத்துச் செலவு பண்றார். அதுவும் இங்க எங்களுக்குத் தேவையானது எல்லாம் பார்த்து செஞ்சிட்டுத்தான் போனார்.” என்றதும், தர்மாவும் சரி என்றான்.
கீர்த்தி எல்லோரோடும் நன்றாகப் பழகுவாள். அருணாவின் பிள்ளைகளோடு அவர்களுக்குச் சரிசமமாக விளையாடுவாள். இருந்தாலும், சில நேரம் அமைதியாகி விடுவாள். பெற்றோர் நினைவு வந்துவிட்டால் அப்படி இருக்கிறாள் என எல்லோருக்கும் புரிந்தது.
“இந்தத் தர்மாவாவது நேரத்திற்கு வரக் கூடாது. திருமணதிற்கு முன்தினம் தான் வருவானாம்.” என நாயகி சலிக்க…
“அவருக்கு வேலை நிறைய இருக்கும் பட்டி. அப்படியெல்லாம் போட்டுட்டு வர முடியாது. வந்தாலும் போன்ல தான் இருப்பாங்க. அதுக்கு வேலையை முடிச்சிட்டே வரட்டும்.” என்றால் கீர்த்தி.
அவளுக்காகத்தான் தர்மா வந்தால் தேவலை என நினைத்தனர். ஆனால் அவளே தர்மாவுக்காகப் பேசினாள். புரிந்துகொள்ளும் வாழ்க்கை துணை அமைவதும் வரம்தான்.