எல்லோரும் குடும்பமாகத்தான் சென்றிருந்தனர். அன்று காலை உணவு எல்லோருக்கும் தர்மா தான் வரவழைத்திருந்தான்.

காலை உணவு முடிந்ததும், ரங்கநாதன் எல்லோரையும் வைத்துக் கொண்டே தனது ஆற்றாமையைக் கொட்டினார். 

“அவன் அப்பாவும் இல்லை. எனக்கும் முடியலை… ஆபீஸ் வேலை, கல்யாண வேலைன்னு அவன்தான் எல்லாத்துக்கும் அலையுறான். யாரும் கூடமாட ஒத்தாசை செய்யக் கூட மாட்டேங்கிறீங்களே…” எனச் சொல்லியே விட்டார். 

தனது அண்ணன் மகளைச் செய்யவில்லை என்ற கோபத்தில், சனிதா அவர் கணவரிடமும் பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டார்.” நாம கல்யாணத்துக்குப் போறோம் வரோம் அவ்வளவுதான். யாரும் எதிலேயும் தலையிடக் கூடாது.” என முன்பே எச்சரித்து இருக்க… அதனால் ரவீந்தர் குடும்பம் எட்டவே நின்றது. 
உமநாத் நல்ல நாளிலேயே எதுவும் செய்ய மாட்டார். இப்போது கேட்கவே வேண்டாம். 

விஷால் ஒருவன்தான், “இப்ப என்ன செய்யணும் சொல்லுங்க. நீங்க சொல்லாம நாங்க செய்யலைன்னு சொல்லக் கூடாது.” எனச் சண்டைக்கு வந்தான். 

“கொஞ்ச நாளுக்கு ஆபீஸ்க்கு வந்து பார்த்துக்கோ. நான் பத்திரிக்கை வைக்கிறவங்களுக்கு வச்சிட்டு வரேன்.” எனத் தர்மா சொல்ல, 

“உங்க ஆபீஸ்ல நான் வந்து இருக்கவா… அதுக்கு வாய்ப்பே இல்லை…. அங்க வந்தாலே எனக்குத் தலைசுத்தும்.”

“அப்ப உங்க பெரியம்மாவை அழைச்சிட்டுப் பத்திரிகை வைக்க, சொந்தகாரங்க வீட்டுக்கு நீ போயிட்டு வா…தாத்தாவுக்கு மதுரை வரை கார்ல உட்கார்ந்திட்டு போக முடியாது. ப்ளைட்ல டிக்கெட் போட்டு மதுரையில விட்டுட்டு, அப்படியே ரெண்டு நாள் அங்க இருந்து, அங்க பத்திரிகை வைக்கிறவங்களுக்கு எல்லாம் பத்திரிகை வச்சிட்டு வா.” 

“ம்ம்… சரி இதெல்லாம் பண்றேன்.” என விஷாலும் ஒத்துக்கொண்டான். 

இருவருக்குமே இதற்கு முன்பிருந்தே பிரச்சனைதான். லவ் பிரேக் அப் என விஷால் குடித்து விட்டு டிப்ரஷன் என பேர் பண்ணி கொண்டிருக்க…. தர்மா ஒருநாள் வைத்து வாங்கி விட்டான்.  
“வேண்டாம்னு சொல்லிட்டு போன பொண்ணு முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டனும். குடிச்சிட்டு சுத்தினா எல்லாம் சரியாகிடுமா…. குடிச்சிட்டு சுத்த உனக்கு ஒரு சாக்கு. மேல படிக்கலைனா நம்ம கம்பனிக்கு வா.” 
“படிச்சு முடிச்சதும் வேலை பார்க்கனும்னு சட்டமா என்ன? நான் எனக்குத் தோணும் போதுதான் வருவேன்.” என விஷாலும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அண்ணனின் திருமணத்திற்கு உதவுவதாக ஒத்துக் கொண்டான். 

“ரெண்டு பேரும் அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு மாதிரி முறைச்சிட்டு நின்னாலும், அவங்களுக்கு ஒண்ணுன்னா சேர்ந்துப்பாங்க கவனிச்சியா?” எனச் சூரியா வசீயின் காதைக் கடிக்க…. அதை வசீயும் ஆமோதிக்க…. இருவரும் கேலியாகச் சிரித்தனர். 

மறுநாள் அதிகாலை விமானத்தில் ஜமுனாவும், தர்மாவும் அருணாவின் வீட்டிற்குப் பத்திரிக்கை வைக்கச் சென்றனர். அக்காவின் புகுந்த வீட்டினர் என்பதால் தர்மாவே நேரில் சென்றான். அவனே நேரில் சென்றால்… விளக்கமாகச் சொல்ல முடியும், இல்லையென்றால் தவறாக நினைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றே அவனே நேரில் சென்றான். 

தர்மாவிற்கு அங்கே ராஜ வரவேற்புதான். அடிக்கடி வரவும் மாட்டான். முக்கியமான சமயங்களில் மட்டும்தான் வந்திருக்கிறான். 

இந்தச் சின்ன வயதில், அவன் அப்பா இடத்தில் இருந்து பொறுப்பாக எல்லாம் செய்கிறான் என்ற நல்ல எண்ணம் அவன் மேல். அதோடு இவர்களும் சொந்தத் தொழில் செய்பவர்கள் தான். இவர்களுக்கு நிறைய வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து, இவர்கள் தொழில் வளரவும் உதவி இருக்கிறான். 

அருணாவின் மாமனார் மாமியாருக்கு மட்டும் இல்லை, சந்ருவின் சகோதரர்களுக்கும் தர்மா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. 

சகோதரியின் குடும்பத்திற்கு மட்டும் இல்லாமல், அவளின் மாமனார் மாமியாருக்கும் பட்டு வேஷ்டி, பட்டு புடவை எடுத்திருந்தனர். அதையும் கொடுத்து, அதோடு திருமண அழைப்பிதழை இனிப்பு, பழங்களோடு வெள்ளி தாம்பாளத்தில் வைத்து, முறையாகத் திருமணத்திற்கு அழைத்தனர். பின்னர் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்த காலை உணவை அருந்தினர். 

சந்துரு இதையெல்லாம் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதுதான் அவனுக்குப் பிடிக்காது. இவனை இந்தத் தாங்கு தாங்கும் அளவுக்கு, இவன் என்ன பெரிய ஆளா என்ற எண்ணம். 

சந்துரு மிகவும் சோம்பேறி. ஏற்கனவே பிள்ளைபேறு தள்ளி போனதில் அருணா துவண்டிருந்தாள். அதோடு வீட்டு வேலையை முடித்துவிட்டு அவர்கள் கம்பனிக்கும் சென்று பார்த்துக் கொள்வாள். சந்த்ரு எதோ விருந்தினன் போலத் தான் கம்பனிக்கு செல்வான். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தால் உறங்கிவிட்டு மாலைதான் செல்வான். அதோடு அருணா மருத்துவமனை செல்லும்போதும் உடன் செல்ல மாட்டான். தனியாகக் காரில் அனுப்பி வைப்பான். 

சில நாட்கள் பொறுமை காத்த தர்மா, ஒருநாள் அருணாவின் மாமனாரை அழைத்துக் கடுமையாகப் பேசிவிட்டான். 

“அவளுக்கு மட்டும் தான் குழந்தையா… உங்க குடும்பத்துக்கும் வாரிசு வேணும்னுதானே… அக்கா எல்லா வைத்தியமும் பண்ணிக்கிறா… கூட ஆஸ்பத்திரிக்கு இவர் போக வேண்டாமா? அக்கா போன இடத்தில மயக்கம் போட்டு விழுந்தா, யார் பொறுப்பு?” 

“கம்பனிக்கும் அவளை அனுப்பிட்டு இவர் சுகமா படுத்து தூங்கிறார். இப்படியெல்லாம் கஷ்ட்டபடனும்னு என் அக்காவுக்கு அவசியமே இல்லை. எங்க அக்காவை எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க. நான் அவளை ராணி மாதிரி பார்த்துப்பேன்.” என்றான். 

“இல்லை தம்பி இனிமேல் இப்படி நடக்காது. நாங்க பார்த்துக்கிறோம்.” என்ற அருணாவின் மாமனார், மகனையும் கடுமையாகப் பேசி இருந்தார். அப்போதிருந்தே சந்துருவுக்குத் தர்மா என்றால் ஆகாது. 

காலை உணவு முடித்துச் சிறிது நேரத்திற்க்கெல்லாம் தர்மா தன் அம்மாவுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான். மீண்டும் விமானப் பயணம் தான். மதியம் பன்னிரண்டு மணிக்குள் சென்னைக்கு வந்திருந்தனர். அங்கிருந்து நேராகக் கீர்த்தியின் வீட்டிற்குச் செல்ல… வாயிற்காவலன் அவர்கள் இங்கே இல்லை வெளிநாடு சென்று விட்டதாகச் சொன்னான்.

எப்போது வருவார்கள் என்றதற்கு, ரொம்ப நாட்கள் ஆகும் எனச் சொல்லிவிட்டுச் சென்றதாகச் சொன்னான்.

கீர்த்தியிடம் அவள் பெற்றோரை எப்படியும் திருமணத்திற்கு வரவழைக்கிறேன் எனச் சொல்லிவிட்டு, இப்போது பார்த்தால்… அவள் பெற்றோர் நாட்டிலேயே இல்லை. என்ன செய்வது எப்படிக் கீர்த்தியை சமாதானம் செய்வது என யோசனையில் இருந்த தர்மா, ஜமுனாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அலுவலகம் சென்றான். 


கீர்த்தி மனம் பொறுக்காமல் அன்றும் அவள் அம்மாவை அழைத்துப் பார்க்க… அன்று பார்த்து நவீனா அதிசயமாக எடுத்துவிட்டார். 

“அம்மா….” எனக் கீர்த்திச் சொல்ல வந்ததை அவர் கேட்கவே இல்லை. 

“உன் கல்யாணத்துக்கு உன்னைக் கேட்காம முடிவு எடுத்தது எங்க தப்புதான். அதை நாங்க உணர்ந்திட்டோம். அதனாலதான் உன் இஷ்டதுக்கே விட்டோம்.” 

“நீ தானே அவன்தான் வேணும்னு வெளியப் போன… இப்ப எதுக்குப் போன் பண்ணிட்டே இருக்க? ஏன் உன் முடிவுல நம்பிக்கை இல்லையா?” 

“உனக்கு வேணா அவன் பெரிய ஆளா இருக்கலாம். ஆனா எங்களுக்கு இல்லை புரியுதா?” 

“யாரு அவன்? நாலு ரீடையல் பிஸ்னஸ் பண்ணா பெரிய ஆளா… அதிலேயும் பத்து பேர் பங்குக்கு இருக்காங்க. இதெல்லாம் சொன்னா நீ கேட்கப் போறியா? நீதான் குணம் மணம்னு இந்த உலகத்திலேயே அவன்தான் நல்லவன் மாதிரி பேசினியே…” 

“எங்களுக்கு இஷ்டமோ இல்லையோ எங்க கடமையை நாங்க செஞ்சிட்டோம். இனி உன் தம்பியை நாங்க பார்க்கணும். அவனும் நாளைக்கு உன்னைப் போலத்தான் இருப்பான். ஆனா நாங்க எங்க கடமையைச் செய்யணுமே. அதுக்குதான் யூ எஸ் ல அவனைக் காலேஜ் சேர்க்க போயிட்டு இருக்கோம்.”

“எங்களை எங்க வேலையைப் பார்க்க விடு கீர்த்தி.” 

“ஓகே மா… எனக்குப் புரியுது. சாரி மா… நான் உங்களைக் கஷ்டபடுத்திட்டேன். இனிமே தொந்தரவு பண்ண மாட்டேன். அப்பாவையும் வினோத்தையும் கேட்டதா சொல்லுங்க. பாய் மா… பார்த்துப் போங்க.” எனக் கீர்த்தி வைத்து விட்டாள். 

சமாதானமாகப் பேசி வைத்தாலும் கீர்த்தி மனதில் அப்படியொரு வைராக்கியம் எழுந்தது. சில விஷயம் எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது. வாழ்ந்துதான் காட்டனும் என நினைத்துக் கொண்டாள். 

இப்போதும் அவள் எடுத்த முடிவில் அவள் உறுதியாக இருக்கிறாள். தர்மாவை விட எல்லாம் சிறந்த துணை வாழ்க்கையில் கிடைத்து விட முடியாது. நம்பிக்கை தான் வாழ்க்கை. அவளுக்கு அது தர்மாவின் மீது அதிகமாகவே இருக்கிறது. இனி எதற்காகவும் வருந்துவது இல்லை என் நினைத்தவள், வாழ்க்கையைத் திடமாக எதிர்கொள்ளத் துணிந்தாள்.

அதன்பிறகு பெற்றோரை நினைத்து அழுவதை எல்லாம் விட்டு தெளிவாக சிந்திக்க ஆரம்பித்தாள்.