சாரல் மழையே 

அத்தியாயம் 8

கீர்த்தி வீட்டில் இருந்து கிளம்பி கடற்கரை சாலைக்கு வந்திருந்தனர். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க… அடுத்து என்ன செய்வது என தர்மா நண்பர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தான். கீர்த்தி அமைதியாகக் காரில் உட்கார்ந்து இருந்தாள். 


தர்மாவுக்குக் கீர்த்தியை அப்போது தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லை. அவளை முறையாக மணந்த பிறகே அழைத்துச் செல்ல விரும்பினான். ஆனால் ஏற்கனவே பெற்றோரை பிரிந்த கீர்த்தி எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற தயக்கமும் இருந்தது. 

எப்போதுமே தெளிவாக முடிவெடுக்கும் தர்மா அன்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான். 

ராஜேஷின் வக்கீல் மூளை பலவாறு ஆராய்ந்ததில், விஷ்வா எதுவும் பிரச்சனை செய்யக் கூடுமோ என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. 

“கீர்த்திக்கு மந்திரி பையனைத் தான பார்த்ததா சொன்னாங்க. அவரோ அவர் பையன் விஷ்வாவோ பிரச்சனை பண்ண வாய்ப்பு இருக்கு. எதுக்கும் கல்யாணம் முடியுற வரை கீர்த்தியை பத்திரமா ஒரு இடத்தில வைக்கணும்.” 

“என்ன டா இப்படிச் சொல்ற? வெறும் பேச்சு வார்த்தை தான நடந்தது.” என்றான் தர்மா 

“எனக்கும் சரியா தெரியலை… கீர்த்தி அப்பா அம்மா அவங்ககிட்ட சரின்னு தான் சொல்லி இருக்காங்க. அதனால தான் நினைச்சேன். ஒன்னும் பிரச்சனை இல்லை. கீர்த்தி எங்க வீட்ல இருக்கட்டும், எனக்கு ஆபீஸ் வீட்டுக்கு கீழ தான். அதனால நான் பார்த்துகிறேன். வீட்ல செக்யூரிட்டி இருக்காங்க ஒன்னும் பிரச்சனை இல்லை.” 

தர்மா கீர்த்தியிடம் பேச சென்றான். இருவரும் காரில் உட்கார்ந்தே பேசினார். 

“கீர்த்திக் கல்யாணம் முடியுற வரை ராஜேஷ் வீட்ல இருக்கியா?” 

“ஏன் உங்க கூடக் கூடிட்டு போக முடியாதா? வீட்ல எதுவும் சொல்வாங்களா?” 

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை. உன்னை இப்பக் கூடிட்டு போனாலும் சந்தோஷமாதான் வரவேற்பாங்க. ஆனா நாம கல்யாணம் செஞ்ச பிறகு போனா… உறவுகளுக்கு மத்தியில இன்னும் மரியாதையா இருக்கும்.” 

“உனக்குத் தெரியும் கீர்த்தி எங்க குடும்பத்தைப் பற்றி. நான்தான் மூத்தவன், நானே கல்யாணம் பண்ணாம நடுராத்திரி ஒரு பெண்ணோட போய் நின்னு, நாளைக்கு நானே என் தங்கை தம்பிகளுக்குத் தவறான உதாரணமா ஆகிடக் கூடாது. உனக்குப் புரியுது தானே நான் சொல்றது.” 

“நாம கல்யாணம் பண்ணிக்க எவ்வளவு நாள் ஆகும்?” 

“அப்படியெல்லாம் உன்னை ரொம்ப நாள் தவிக்க விட்டுட மாட்டேன். நாளைக்கு வீட்ல பேசுறேன். ஒரு வாரத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி பார்த்துக்கலாம்.” 

கீர்த்தி ஒருவாறு ஒத்துக்கொள்ள… மனமே இல்லாமல்தான் தர்மா அவளை ராஜேஷின் வீட்டில் விட்டுச் சென்றான். 

காலை எழுந்ததும் முதல் வேலையாக வீட்டில் பெரியவர்களிடம் முன்தினம் நடந்ததைச் சொல்ல…. “எல்லோரையும் அழைச்சுக் கல்யாணம் பண்ண ஒரு மாதமாவது வேண்டாமா? எங்களுக்கு உன் கல்யாணத்தை விமர்சையா செஞ்சு பார்க்கனும்ன்னு ஆசை இருக்காதா? உன் அப்பா இருந்திருந்தா அப்படித்தானே செய்வார்.” என ஜமுனா சொல்ல… 

“அம்மா, நான் யாரைக் கல்யாணம் பண்ணி இருந்தாலும், என்னோட கல்யாணம் எளிமையாத்தான் நடந்திருக்கும். எனக்கு ஆடம்பரத்துக்காக வெட்டியா காசு செலவு பண்றதுல உடன்பாடு இல்லை. அந்தப் பணத்தை தேவையான நாலு பேருக்கு செலவு பண்ணா, அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.” 

“அப்ப எப்படித்தான் உன் கல்யாணத்தைப் பண்ணப் போற? அதையும் நீயே சொல்லு.” 

“நம்ம வீட்டு ஆளுங்களே அதிகம். அதோட ரொம்பத் தெரிஞ்சவங்க, தவிர்க்க முடியாவங்களை மட்டும் அழைச்சு, கோவில்ல கல்யாணத்தை வச்சுக்கலாம்.” என அவன் பெரியவர்களைப் பார்க்க… 

“கோவில்ல கல்யாணம் நடக்கவும் குடுப்பினை வேணும். இங்க சென்னையில வேண்டாம். நம்ம ஊர் பெருமாள் கோவில்ல வைப்போம். நம்ம வீடே பெரிசா இருக்கு. உன் கல்யாணமாவது சொந்த ஊர்ல நடக்கட்டும்.” என்றார் நாயகி. 

“ஒரு வாரத்தில இருக்க மாதிரி முஹுர்த்தம் பார்த்து சொல்லுங்க.” என்ற தர்மா அலுவலகம் கிளம்பி சென்றான். 

ரங்கநாயகி போன்னில் மதுரையில் இருந்த அவர்கள் குடும்ப ஜோசியரை தொடர்பு கொண்டு தர்மா கீர்த்தியின் பெயர் ராசிக்கு ஏற்ற முஹுர்த்த தேதி குறித்துத் தர சொல்லிக் கேட்க, அவர் பதினைந்து நாட்கள் கழித்தே நல்ல முஹுர்த்த நாள் என, ஒரு நாளை குறித்துக் கொடுத்தார். 

அலுவலகத்தில் இருந்த பேரனை நாயகி தொடர்பு கொண்டு ஜோசியர் குறித்த நாளை சொல்ல… “இன்னும் பதுனைஞ்சு நாளா? பாட்டி, அவ்வளவு நாள் எல்லாம் கீர்த்தி ராஜேஷ் வீட்ல இருந்துக்க மாட்டா… நீங்க வேற நாள் பாருங்க.” என்றான். 

“ஒரு கல்யாணம் பண்ண பதினைஞ்சு நாளாவது வேண்டாமா? உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண முடியாது டா…. ஊர்ல இருக்க நம்ம வீட்டை பெயிண்ட் பண்ண சொல்லி இருக்கேன். அந்த வேலை நாலு நாள் நடக்கும். பிறகு நாங்க பெரியவங்க முதல்ல கிளம்பி ஊருக்கு போறோம். கீர்த்தியையும் எங்களோட அழைச்சிட்டு போறோம். நீ கல்யாணத்துக்கு முதல் நாள் வா போதும்.” என நாயகி போன்னை வைத்து விட்டார். 

அன்று ஜமுனாவும் நாயகியும் மாலை நேரத்தில் கீர்த்தியை பார்க்க வருவதாகத் தர்மா சொல்லி இருந்தான். அவர்கள் வருவது தெரிந்து மற்ற நண்பர்களின் வீட்டினரும் வந்து விட… ராஜேஷின் மனைவி சந்தியா கீர்த்தியை நல்ல உடை அணிந்து தயராகச் சொன்னாள். 

கீர்த்திக் கொண்டு வந்ததில் சின்னப் பெட்டியை மட்டுமே திறந்து பார்த்திருந்தால்… அதில் அவள் அன்றாடம் அணியும் ஆடைகளே இருந்தது. புகுந்த வீட்டினர் வருவதால் இன்னொரு பெட்டியில் என்ன இருக்கிறது எனப் பார்க்க திறந்தவளுக்கு ஆச்சர்யமே… 
எல்லாமே புத்தும் புதிய ஆடைகள். சுடிதார்கள், புடவைகள் என எல்லாம் விலை உயர்ந்தவை… அதோடு புடவைகளுக்கு நடுவே நகைப்பையும் இருக்க…அதில் ஒரு திருமணத்திற்கு அணிந்துசெல்லல வேண்டிய செட்டான நகைகள் இருந்தது. இதெல்லாம் நவீனா மகளுக்காக முன்பே வாங்கி வைத்திருந்தது. அதோடு சாதாரணமாக வீட்டில் அணிய வேண்டியவைகளும் இருந்தது. 

பார்த்ததும் கீர்த்திக்கு அவ்வளவு கோபம். வேண்டாம் என்று தான் வெளியே அனுப்பிவிட்டர்களே… பிறகு இதெல்லாம் யார் கேட்டார்கள் எனக் கோபமாக வர, காலையில் இருந்து முயன்ற அவள் அம்மாவின் எண்ணிற்கு மீண்டும் அழைத்தாள். அவள் அம்மா எடுக்கவில்லை. 

அவள் தம்பி எண்ணிற்கு அழைத்தால்… அதுவும் அனைத்து வைக்கபட்டிருந்தது. கோபத்தில் போன்னை தூக்கி எறிந்தவள், ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு தயாரானாள். 

மாலை ஆறு மணிப்போல நாயகியும் ஜமுனாவும் பூ, பழங்கள், இனிப்புகள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தனர். சற்று நேரத்தில் தர்மாவும் வந்துவிட… வீடே களைகட்டியது. ராஜேஷ் வெளியே இருந்து உணவு வரவழைத்தான். எல்லோரும் சேர்ந்து இரவு உணவு உண்டனர். 

கிளம்புவதற்கு முன் நாயகி கீர்த்தியை உட்கார வைத்து, திருமணதிற்குச் செய்திருந்த ஏற்பாடு பற்றியெல்லாம் சொல்லி விட்டார். 

“மதுரை தான் எங்க சொந்த ஊர். உங்க கல்யாணம் அங்கதான் நடக்கப் போகுது. நாம ஒரு வாரம் முன்னாடியே அங்க போயிடுவோம். அங்க போய்க் கல்யாணத்துக்குத் தேவையான புடவைகள், நகைகள் எல்லாம் வாங்கிக்கலாம். தர்மா இங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு, இங்க இருக்கிறவங்களை அழைச்சிட்டு கல்யாணத்துக்கு முன்னாடி வரட்டும்.” என்றவர், “சரி தானே கீர்த்தி. எங்களோட வர்றது உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.” என்றதும், 

“இல்லை பாட்டி. நான் உங்களோட வரேன்.” என்றவள், “அம்மாவே தேவையான டிரஸ் நகை எல்லாம் கொடுத்திருக்காங்க.” என… 

“அவங்க கொடுத்தது இருக்கட்டும். கல்யாணப் புடவை, நகை எல்லாம் நாங்களும் வாங்கணும். உங்க அம்மா கொடுத்ததும் இதையும் கலந்து போட்டுக்கோ….ஒன்னும் பிரச்சனை இல்லை.” 

“இன்னும் ஐந்து நாள்ல கிளம்பனும் தயாரா இருந்துக்கோ.” என்றவர், விடைபெற்று செல்ல… அன்று எல்லோரும் இருந்ததால் தர்மாவால் கீர்த்தியுடன் தனியாகப் பேச முடியவில்லை. வீட்டிற்குச் சென்று அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். அதே போல அவன் அறைக்கு வந்ததும் அழைக்கவும் செய்தான். 

“என்ன கீர்த்தி என் மேல கோபமா? ஒரு வாரத்தில் தான் வைக்கக் சொன்னேன். நாள் இல்லைன்னு சொல்லிட்டாங்க. நான் சிம்பிள்லா முடிக்கலாம்னு பார்த்தா விமாட்டாங்க போல இழுத்திட்டே போகுது.” 

“ம்ம்… பரவாயில்லை அவங்க இஷ்டப்படியே பண்ணட்டும். 

“உன் அம்மாகிட்ட பேசினியா?” 

“போன் எடுத்தா தானே பேசுறதுக்கு. போன்னே எடுக்க மாட்டேங்கிறாங்க.”

“அவங்களுக்கு எதோ வருத்தம். விடு பார்த்துக்கலாம்.” 

“கல்யாணத்துக்கு நிறைய வேலை இருக்கு. உன்னைப் பார்க்க தினமும் வர முடியாது கீர்த்தி. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.” 

கீர்த்திக்கு ஆற்றாமையாகத்தான் இருந்தது. அனால் அவனும் என்ன செய்வான் என்ற எண்ணத்தில் சரி என்றாள். 

“நல்லா சாப்பிடு, தூங்கு. உன் அப்பா அம்மாவை எப்படியும் கல்யாணத்துக்கு வர வைக்கப் பார்க்கிறேன். எனக்குதான் அப்பா இல்லை. உனக்காவது அவங்க ரெண்டு பேரும் வரணும் கீர்த்தி.” எனத் தர்மா சொன்னதும், கீர்த்திக்கு மிகுந்த மகிழ்ச்சி. தர்மா சொன்னால் கண்டிப்பாக செய்வான் என தெரியும். 

மறுநாள் பத்திரிக்கை அடித்து வந்துவிட… வீட்டிலேயே குலதெய்வ சாமியின் படத்தின் முன்பு வைத்து பூஜை செய்து, அருகில் இருந்த விநாயகர் கோவிலுக்கும் சென்று பத்திரிக்கை வைத்துவிட்டு வந்தனர்.