சாரல் மழையே
அத்தியாயம் 7
முன்தினத்தில் பெற்றோரிடம் வாக்குவாதம். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் பிறகு தர்மாவினால் ஏற்பட்ட மகிழ்ச்சி என நிறைய நடந்திருக்க… கீர்த்தி மிகவும் களைத்துப்போய் இருந்தாள். இரவு தாமதமாக உறங்கியதால்…. காலை ஒன்பது மணி வரை கலையாத உறக்கம்.
விடாது ஒலித்த கைப்பேசி அழைப்பில், கண்ணைத் திறவாமல் கையால் மெத்தையைத் தடவி கைபேசியை எடுத்து, யார் என்றும் பார்க்காமல் காதில் வைத்து, “ஹலோ…” என
“என்ன இன்னும் தூக்கம் போகலையா?” எனத் தர்மாவின் குரல் கேட்டதும், சட்டென்று அவளின் உறக்கம் விடைபெற்று, உற்சாகம் தொற்றியது. மகிழ்ச்சியுடன் கண் விழித்தாள்.
“என்ன காலையிலேயே போன் பண்ணி இருக்கீங்க. வேலை ஒன்னும் இல்லையா?”
“ம்ம் இருக்கு.” என்றவன், “இப்ப நான் எங்க இருக்கேன் தெரியுமா?” என்றதும்,
“எங்கே?” என
“உங்க வீட்ல தான் இருக்கேன்.” என அவன் சாதாரணமாகச் சொல்ல…
“இங்க என்ன பண்றீங்க?” என அவள் அலற…
“உங்க அப்பா அம்மாகிட்ட நம்ம கல்யாணத்தைப் பத்தி பேச வந்திருக்கேன்.” என்றதும், தர்மா விளையாட்டுக்கு பேசுபவன் இல்லை எனத் தெரியும் என்பதால்… அரக்கபரக்க குளியல் அறை சென்று பல் துலக்கி முகம் கழுவி, அலறி அடித்துக் கொண்டு அவள் கீழே வரவும், அவளின் அப்பா ஹாலுக்கு வரவும் சரியாக இருந்தது.
ஹால் சோபாவில் தர்மாவும் ராஜேஷும் இருந்தனர். அவர்கள் முறையாக அறிமுகம் செய்துகொள்ள… எதோ தொழிற்துறை சந்திப்பு என்றே சோமசேகர் நினைத்திருந்தார். பிறகே இரவு உடையுடன் நின்ற மகளைக் கவனித்தார்.
மகள் எதோ சொல்ல வந்திருக்கிறாள் என நினைத்து, “நான் உன்கிட்ட பிறகு பேசுறேன் கீர்த்தி.”என்றார். ஆனால் கீர்த்தி அங்கிருந்து செல்லாமல், அவரையும் தர்மாவையும் பயத்துடன் மாறி மாறி பார்த்தாள். அப்போது நாவீனாவும் வந்துவிட்டார்.
“அப்பா, அவங்க என்னோட ப்ரண்ட்ஸ் தான்.” என்றால் தைரியத்தைத் திரட்டி.
“என்ன காலையிலேயே போன் பண்ணி இருக்கீங்க. வேலை ஒன்னும் இல்லையா?”
உனக்குத் தெரிஞ்சவங்களா? என்னை ஏன் பார்க்க வந்தீங்க?” என அவர் குறிப்பாகக் கைகடிகாரத்தைப் பார்க்க, முதலில் தர்மாதான் பேசினான்.
தானும் கீர்த்தியும் அறிமுகம் ஆனதில் இருந்து, முன்தினம் நடந்தது உட்பட அனைத்தையும் அவன் சொல்லி முடிக்க… சோமசேகர் அமைதியாக இருக்க… “அவளுக்கு நாங்க மினிஸ்டர் பையனைப் பேசி இருக்கோம். இப்ப வந்து இப்படிச் சொன்னா எப்படி? எங்களுக்கு இதெல்லாம் சரிப்படாது.” என நவீனாதான் படபடத்தார்.
“உங்க அளவுக்குப் பணக்காரங்க இல்லைதான். ஆனா இன்னும் சில வருஷத்துல எங்கையோ இருப்பான். எல்லாத்தையும் விடக் கீர்த்திச் சந்தோஷமா இருப்பா… ” என்ற ராஜேஷ் மேலும் தர்மாவின் குணநலன்கள் பற்றியும் எடுத்துச் சொன்னான்.
“உங்களால உடனே முடிவெடுக்க முடியாது. நீங்க என்னைப் பத்தி என் குடும்பத்தைப் பத்தி வெளியில நல்லா விசாரிங்க. பிறகே உங்க முடிவை சொல்லுங்க. அப்படி நீங்க உங்க பொண்ணுக்கு நான் வேண்டாம்னு முடிவெடுத்தா, அதுக்கான காரணமும் எனக்குச் சொல்லணும். சரியான காரணமா இருந்தா, நானே உங்க பெண்ணை விட்டு விலகிடுறேன்.”
பெண்ணைப் பெற்றவர்களிடம் ஒருவன் இப்படித் துணிந்து சொல்கிறான் என்றால்… அவன் மீது அவனுக்கிருக்கும் நம்பிக்கையைத் தானே காட்டுகிறது. அதோடு அவனைச் சரியான காரணம் சொல்லிதான் நிராகரிக்க வேண்டும். இல்லையென்றால் யார் தடுத்தாலும் இந்தத் திருமணம் நடக்கும் என்பதைத் தான் சொல்கிறான் என்பதும் சோம சேகருக்குப் புரிந்தது.
தர்மாவும் ராஜேஷும் விடைபெற்று சென்றவுடன், “நம்மகிட்டயே இப்படிப் பேசுறான். ரொம்பத் தைரியம் தான் இவனுக்கு.” என நவீனா சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கீர்த்தி மெதுவாக அவள் அறைக்கு நழுவ…
“எங்கப் போற நீ… உன் இஷ்டத்துக்கு விட்டதுக்கு இப்ப எங்களைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாகிட்ட இல்ல…. நாங்க இப்ப விஷ்வா வீட்ல என்ன சொல்றது?”
“அம்மா, எனக்கும் தெரியாது மா…ரெண்டு வருஷமா அவரோட பழகி இருக்கேன். சும்மா பிரண்ட்ஸ் கூடச் சேர்ந்து பொழுது போக்கா தான் சர்வீஸ் பண்ண போனேன். ஆனா என்னையே எனக்கு அடையாளம் காட்டினது அவர்தான். என்னால இதெல்லாம் கூடச் செய்ய முடியும்னு அவர் மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன்.”
“எனக்கு நிறையச் சொல்லிக் கொடுத்திருக்கார். ஒரு பிரச்சனை வந்தா நம்ம இடத்துல இருந்து மட்டும் யோசிக்காம, அடுத்தவங்க இடத்துல இருந்தும் யோசிக்கணும்னு எல்லாம் அவர்கிட்ட இருந்துதான் நான் பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.”
“சில பேர் பேசுவாங்க, ஆனா செயல்ல இருக்காது. தர்மா அப்படியில்லை. நேர்மையான அதோட மனிதாபிமானமும் உள்ள மனுஷர். நாங்க நல்ல ப்ரண்ட்ஸா தான் இருந்தோம். அதுக்கு மேல காதல் கல்யாணம்ன்னு எல்லாம் யோசித்ததே இல்லை. அவரும் எதையும் என்கிட்ட காட்டிக்கிட்டதே இல்லை.”
“இப்ப நீங்க கல்யாண பேச்சை ஆரம்பிச்சு, விஷ்வாவை பத்தி தெரிஞ்சிக்கும் போதுதான், நான் எப்படிப்பட்ட ஒருத்தரை திருமணம் செஞ்சுக்க விரும்புறேன்னும் புரிஞ்சது.”
“தர்மாவை விட்டு நான் இன்னொருத்தரை எந்தக் காரணத்துக்காகத் திருமணம் செஞ்சாலும், என் வாழ்க்கை முழுக்க… நான் ஒரு நல்ல வாழ்க்கையை இழந்திட்டேன்னு எனக்கு உருத்தலாவே இருக்கும். நான் வேற யாரைக் கல்யாணம் பண்ணாலும் சந்தோஷமா இருக்க மாட்டேன்.”
கீர்த்திப் படபடவெனத் தன் மனதில் இருந்தது எல்லாம் கொட்டி விட்டாள்.
“ரொம்ப நல்லவனோட வாழுறதும் கஷ்டம் கீர்த்தி. கோடு போட்டது போல எல்லாம் எப்பவும் வாழ முடியாது. வாழ்க்கையில கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் வேணும். நல்லா யோசிச்சுக்கோ.” என்றார் நவீனா.
“அம்மா, தினம் குடிச்சிட்டு வந்து அடிச்சு உதைக்கிற புருஷனோடவே பொண்ணுங்க வாழ்ந்திடுறாங்க. ஆனா நல்லவனோட வாழ முடியாதா?”
“நீங்க மட்டும் இல்லை, இன்னைக்குச் சமூகமே இப்படித்தான் இருக்கு. பத்து பேர் தப்பா இருந்து ஒருத்தன் சரியா இருந்தா.. நாம அந்தத் தனியொருவனைத்தான் இளிச்சவாயன், பொழைக்கத் தெரியாவன் சொல்றோம்.”
“எப்படி வேணா வாழலாம்ன்னு இருக்கவங்க மத்தியில இப்படித்தான்னு சில கொள்கைகளோட இருக்கத் தர்மாவோட வாழுற வாழ்க்கை ரொம்ப அர்த்தமானதா இருக்கும்.”
“இதெல்லாம் தர்மா யோசிக்கலைன்னு நினைக்கிறீங்களா… உங்களுக்கு முன்னாடியே அவர் இதெல்லாம் என்கிட்டே கேட்டுட்டார்.”
எந்தக் கேளிவிக்கும் தெளிவான விளக்கம் வைத்திருக்கும் மகளைப் பார்த்து பெற்றோருக்கு ஆச்சர்யமே… திடிரென்று மகள் வளர்ந்துவிட்டதாகத் தோன்றியது. எங்கே இருந்து அவளுக்கு இவ்வளவு பக்குவம் வந்திருக்கும் எனத் தெரியாமல் இல்லை.
இதே தர்மாவிடத்தில் வேறு ஒருவன் வந்து பேசி இருந்தால்…. இப்படிப் பொறுமையாக உட்கார்ந்து எல்லாம் பேசி இருந்திருக்க மாட்டார்கள். அவனும் வார்த்தையை அனாவசியமாக விடவில்லை. அதே போலக் கண்ணியம் குறைவாக அவனிடம் பேசியும் விட முடியாது. அவனிடம் அப்படியொரு ஆளுமை இருந்தது.
சோமசேகர் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர், வெளியே கிளம்பி சென்று விட்டார்.
அன்று இரவு வீட்டில் தனது தாத்தா பாட்டி அறைக்குச் சென்ற தர்மா, ஜமுனாவையும் வைத்துக் கொண்டு மூவரிடமும் கீர்த்தியை தான் திருமணம் செய்ய விரும்புவதையும், அவள் வீட்டில் அவள் பெற்றோருடன் பேசிவிட்டு வந்தது வரை சொல்லிவிட்டான்.
“நீ யோசிக்காம எதுவும் செய்ய மாட்ட… உன் முடிவுகள் தவறாகவும் இருந்தது இல்லை. உனக்குப் பொறுப்பா பார்த்துச் செய்ய என்னாலையும் முடியாது. உனக்குப் பிடிச்சிருந்தா எங்களுக்கும் சந்தோஷம்தான்.” என்ற ரங்கநாதன் கீர்த்தியின் குடும்பத்தைப் பற்றி மேலும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
“கீர்த்தி வீட்ல வேண்டாம்னு சொன்னா…. நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” ஜமுனா கவலையாகக் கேட்க,
“அப்படி இல்லைமா… அவங்க சரியான காரணம் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம். எனக்குக் கீர்த்தியை நல்லா தெரியும். ஒரு தடவை முடிவு பண்ணிட்டா மாற மாட்டா.” என மகன் சொன்னதும்தான் ஜமுனாவுக்கு நிம்மதியானது.
எவ்வளவு திறமையும், வசதியும் இருந்தாலும் தர்மா பட்டபடிப்பை கூட முடிக்கவில்லை என்பது பெண் வீட்டினருக்கு ஒரு குறையாகவே தெரிந்தது. அதுவும் இந்தக் காலப் பெண்கள் அனைவருமே நன்றாகப் படித்திருக்கும் பட்டச்சத்தில் படித்த மாப்பிள்ளையை எதிர்பார்ப்பது தவறு ஒன்றும் இல்லை.
ஜமுனா அருணாவை அழைத்துச் சொன்னவர், பிறகு சுனிதா மற்றும் சுபாவை அழைத்தும் சொல்லிவிட்டார். பக்கத்தில் இருந்து கொண்டு சொல்லவில்லை என்றால் அதுவும் நாளைக்குப் பிரச்சனை ஆகும்.
மறுநாள் சுனிதா நேரிலேயே வந்துவிட்டார். “நான்தான் எங்க அண்ணன் பொண்ணு இனியாவை தர்மாவுக்குப் பார்ப்போம்னு சொல்லி இருந்தேனே… அதுக்குள்ள இப்ப எதுக்கு இன்னொரு இடம் பார்க்கணும்.”
“நான் நேத்துதான் எங்க அண்ணன்கிட்ட பேசினேன். இனியாவும் கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லிட்டாளாம்.” என்றார்.
“நீங்க நேரத்துக்கு ஒன்னு பேசுவீங்க, அதுக்கு ஏத்த மாதிரி நாங்க ஆட முடியுமா? மூன்னு வருஷம் முன்னாடியே இந்தப் பேச்சு வார்த்தை வந்தபோது தர்மா படிக்கலைன்னு இனியா வேண்டாம்னு சொல்றான்னு நீதானே சொன்ன….இப்ப வந்து இப்படிப் பேசுற.” என நாயகி இளைய மருமகளிடம் கோபம்கொள்ள…
“அவதான் வேண்டாம்ன்னு சொன்னா அத்தை. ஆனா வேற யாரையும் கல்யாணமும் பண்ணிக்க மாட்டேங்கிறா? இப்ப தர்மாவுக்குக் கல்யாணம் சொன்னதும், அங்க வெளிநாட்டில் உட்கார்ந்திட்டு ஒரே அழுகையாம். அதுதான் அண்ணன் பேச சொன்னார்.”
“என்ன சுனிதா இப்படிச் சொல்ற. முன்னாடியாவது பரவாயில்லை. ஆனா இப்ப அந்தப் பொண்ணு வெளிநாடெல்லாம் போய் மேல படிச்சிருக்கா… படிச்ச மாப்பிள்ளையைத் தானே எதிர்ப்பார்ப்பா?”
“அதுதான் சொல்றேனே அவளுக்கும் இஷ்டம்னு.”
“அவ வேண்டாம்னு போவா… பிறகு அவ இஷ்டத்துக்குச் சரின்னு சொல்லுவாளா…. என் பேரன் ஒன்னும் அவ்வளவு குறைஞ்சு போயிடலை… ஒரு தடவை வேண்டாம்னு சொன்னா இல்லை… அதோட முடிஞ்சிடுச்சு. தர்மாவுக்குக் கீர்த்தியைத் தான் பண்ண போறோம்.” என்றார் நாயகி.
“எதுக்கும் நான் தர்மாகிட்ட கேட்கிறேன்.” எனச் சுனிதாவும் விடாபிடியாக நின்றார்.
இனியா மிகவும் அழகாக இருப்பாள். அப்போது திருமணப் பேச்சு வந்த போது, பெரியவர்களுக்குப் பிடித்திருந்தால் சரி என்றுதான் தர்மா சொல்லி இருந்தான். விருப்பம் இல்லாமலா சொல்லி இருப்பான். அந்த நம்பிக்கையில் சுனிதா இருந்தார்.
சுனிதா கேட்டபோது தர்மா தெளிவாகச் சொல்லிவிட்டான்.
“சித்தி, அப்போ வீட்ல பார்த்தா சரின்னுதான் இருந்தேன். எனக்கு அப்ப கீர்த்தியைத் தெரியாது. ஆனா இப்ப கீர்த்தியை தவிர எனக்கு வேற யாரையும் கல்யாணம் பண்ற எண்ணமே இல்லை.”
“நீ என்ன சொன்னாலும், அவங்க பெரிய இடம். நீ படிக்கலை, அவங்க அளவுக்கு வசதியும் இல்லை. உனக்குப் பெண் கொடுக்க மாட்டாங்க.” என்றார் சுனிதா மனம் நோகும்படி…. வீட்டின் பெரியவர்கள் முகம்தான் மாறியது. தர்மா கொஞ்சமும் அலட்டவில்லை.
“கல்யாணத்துல படிப்பு, பணம் இதுக்கெல்லாம் மேல சில விஷயங்கள் இருக்கு சித்தி. மத்தவங்களுக்கு அது தெரியலைனாலும், கீர்த்திக்கு அது தெரியும். அவளுக்குத் தெரிஞ்சா எனக்குப் போதும்.” என்றுவிட்டான்.
சுனிதா முகத்தைத் தொங்கபோட்டுக் கொண்டு சென்றார். தர்மாவின் உழைப்பும், திறமையும் அவர் அறிந்ததே… தன் பிள்ளைகளுக்கு அவ்வளவு திறமை இல்லை என்றும் அவருக்குத் தெரியும். தன் அண்ணன் மகளையே தர்மாவுக்குத் திருமணம் செய்தால்… தன் பக்கம் பிடி அதிகமாக இருக்கும் என நினைத்தே இந்தத் திருமணப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார். ஆனால் இனியாவால் எல்லாம் கெட்டது. இப்போது அவளுக்காகப் பேசி அவமானப்பட்டது தான் மிச்சம் என நொந்து கொண்டார்.
மேலும் ஒரு வாரம் செல்ல கீர்த்தியின் வீட்டில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அன்று இரவு ஒன்பது மணி ஆகியும் வேலை முடியாத காரணத்தால் தர்மா அலுவலகத்தில் இருக்க… அப்போது கீர்த்தி அழைத்தாள்.
“நீங்க இப்பவே வீட்டுக்கு வாங்க.” என்றாள்.
“எதுக்குக் கீர்த்தி இந்த நேரத்தில வர சொல்ற?” எனத் தர்மா கேட்டதற்குக் காரணம் எதுவும் சொல்லாமல், நீங்க முதல்ல இங்க வாங்க.” என்றாள். அவள் அழுதிருக்கிறாள் எனக் குரலே சொன்னது.
எதோ பிரச்சனை என்று புரிந்தது. எதற்கும் இருக்கட்டும் எனத் தர்மா கிளம்புவதற்கு முன் ராஜேஷை அழைத்துச் சொல்லிவிட்டு கிளம்ப… பணியின் காரணமாகத் தீபக் தவிர மற்ற நால்வரும் கீர்த்தியின் வீட்டிற்குச் சென்றனர்.
முதலில் தர்மாதான் சென்றான். அவன் அங்குச் சென்று பார்த்தபோது, கீர்த்தி அவர்கள் வீட்டின் போர்டிகோவில் நின்று கொண்டிருந்தாள்.
“என்ன கீர்த்தி?” எனத் தர்மா கேட்க,
“உன் இஷ்டத்துக்குக் கல்யாணம் பண்றதுன்னா, வீட்டை விட்டு வெளிய போயிடுன்னு சொல்லிட்டாங்க.” என்றவளுக்கு அழுகையில் குரல் அடைக்க… தர்மாவுமே இதை எதிர்பார்க்கவில்லை.
கீர்த்தியை அரட்டி மிரட்டி அவர்கள் வழிக்கு வரவைக்காமல், அவள் விரும்பியவானோடு வாழு என அனுப்பினார்களே என அப்போதும் அவன் நல்லவிதமாகத்தான் எடுத்துக் கொண்டான். தன்னை வீட்டை விட்டு போ எனச் சொன்னது கீர்த்திக்குத்தான் மனம் பொறுக்கவில்லை.
இத்தனைக்கும் பெற்றோர் அவளிடம் கடுமையாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை. அதனால் எப்படியும் திருமணதிற்கு ஒத்துக்கொள்வார்கள் என நினைத்திருந்தாள். ஆனால் இப்படி வீட்டை விட்டு போ எனச் சொல்வார்கள் என அவள் எதிர்பார்க்கவில்லை.
“நாம போகலாம்.” என்ற தர்மா பக்கத்தில் இருந்த பெட்டியைப் பார்க்க…
“நான் எடுத்திட்டு வரலை… தினம் போடுற டிரஸ்க்கு கூட இன்னொருத்தரை எதிர்பார்ப்பியா… கல்யாணத்துக்குப் பிறகு என்னவோ பண்ணு. ஆனா இப்ப இதை எடுத்திட்டு போன்னு அம்மாதான் கொண்டு வந்து வச்சிட்டு போனாங்க. இங்கயே வச்சிட்டு போயிடலாமா?” எனக் கீர்த்தி அவன் முகம் பார்க்க,
விரும்பியவனோடு போ என்றாலும், அவர்களின் மகள் அன்றாடத் தேவைக்குக் கூட இன்னொருவரை எதிர்ப்பார்க்க கூடாது என்ற எண்ணத்தில் தானே, தேவையான பொருட்களையும் கொடுத்திருக்கிறார்கள் என்பது தர்மாவுக்குப் புரிந்தது.
இவ்வளவு யோசிப்பவர்கள், ஏன் தங்கள் திருமணத்திற்கு மட்டும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.
“உங்க அப்பா அம்மா இல்லைனா நீ இந்த உலகத்துக்கு வந்திருப்பியா? உன் பேர்ல இருந்து படிப்பு வரை அவங்க கொடுத்ததுதான். அதெல்லாம் வேண்டாம்ன்னு விட்டுட முடியுமா?”
“உன் அப்பா அம்மா தானே அவங்ககிட்ட நமக்கு என்ன ரோஷம்? இதை இங்க விட்டுட்டு போனா.. அவங்க மனசு காயப்படும்.” என்றவன், ஒரு பெட்டியை எடுத்துக்கொள்ள… கீர்த்தியும் இன்னொன்றை எடுத்துக் கொண்டாள்.
இத்தனைக்கும் பெற்றோர் அவளிடம் கடுமையாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை. அதனால் எப்படியும் திருமணதிற்கு ஒத்துக்கொள்வார்கள் என நினைத்திருந்தாள். ஆனால் இப்படி வீட்டை விட்டு போ எனச் சொல்வார்கள் என அவள் எதிர்பார்க்கவில்லை.