மதியம் சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு தர்மா அவன் நண்பர்களைப் பார்க்க சென்றான். நண்பர்கள் என்றால் சேர்ந்து தண்ணி அடிப்பதோ அல்லது சேர்ந்து ஊர் சுற்றுவதோ அல்ல… நல்ல ஆக்கப்பூரவமான விஷங்களைப் பேசுபவர்கள் மற்றும் செய்பவர்கள்.
உன் நண்பர்கள் யார் என்று சொல்… நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பதற்கு ஏற்ப… தர்மாவின் நண்பர்கள் அவனைப் போல நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் கொண்டவர்கள்.
ராஜேஷ், சுமந்த், தீபக் மற்றும் விஷ்ணு. இவர்கள்தான் தர்மாவின் நண்பர்கள். ஒரே பள்ளியில் அல்லது கல்லூரியில் படித்தவர்களா என்றால் கிடையாது. ஒரே துறையைச் சேர்ந்தவர்களும் கிடையாது. ஆனால் இவர்கள் அனைவரும் ஒத்த கருத்துடையவர்கள். அதன் மூலம் நண்பர்கள் ஆனவர்கள்.
இதில் ராஜேஷ் பிரபல வக்கீல். சுமந்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவன். தீபக் மருத்துவன், விஷ்ணு நகரத்தில் அங்கங்கே ஆர்கானிக் பொருட்கள் விற்கும் கடைகளின் உரிமையாளன்.
தந்தை இறந்து தர்மா தொழிலில் இறங்கிய புதிதில், அவனுக்கு வேலையைப் பழகுவதற்கே நேரம் சரியாக இருந்தது. சில வருடங்களில் அவன் தொழிலில் நன்றாகக் காலூன்றிய பிறகு ஒரே மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்ற… மனதை வேறு விஷயங்களிலும் செலுத்த ஆரம்பித்தான்.
பள்ளி நட்பு, கல்லூரி நட்பெல்லாம் விட்டுப் போயிருந்தது. அரட்டை அடிக்கவோ அல்லது ஊர் சுற்றவோ அவன் நண்பர்களைத் தேடவும் இல்லை.
சென்னையில் புயல் வந்த நேரத்தில், தர்மாவும் களத்தில் இறங்கி வேலை செய்ய… அப்போது நண்பன் ஆனவன் தான் தீபக். அவன் மூலமே மற்றவர்களின் அறிமுகம் கிடைத்தது.
இவர்கள் ஐவருக்கும் பொதுவாக இருந்த விஷயம், சமூகநலனும் அக்கறையுமே.
பிளாஸ்டிக் ஒழிப்பு, ஆர்கானிக் உணவின் முக்கியத்துவம் போன்ற விழிப்புணர்வு அல்லது மருத்துவ முகாம் என மாதத்திற்கு ஒருமுறை சமூகநலன் சார்ந்த ஏதாவது ஒரு செயல்பாடு இருக்கும். இவர்கள் மட்டும் அல்ல… இணைந்த கைகள் என்ற பெயரில், இவர்களைப் போல இன்னும் நிறையப் பேரை சேர்த்துக் கொண்டு செய்கிறார்கள்.
அதே நேரம் இயற்கை பேரிடர் எதாவது ஏற்படும் சமயங்களிலும், அந்தப் பகுதிக்கே சென்று களத்தில் இறங்கி வேலை செய்வார்கள்.
தர்மா அவனின் வேலையை முன்னிட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே செல்ல இயலும். இருந்தாலும், தேவைப்படும் உதவிகளைப் பணமாகவோ அல்லது பொருளாகவோ கொடுத்து விடுவான்.
அது மட்டும் அல்ல… அவனின் இந்த நண்பர்கள் மூலம் நல்ல ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்து வந்த போதுதான், அவனின் வாழ்க்கையின் திருப்புமுனையாக அவனது மனைவி கீர்த்தியின் அறிமுகமும், அவனின் இந்த நண்பர்கள் மூலமே ஏற்பட்டது.
தீபக் ஏற்பாடு செய்திருந்த கேன்சர் பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டவன், விழா முடிந்ததும், நண்பர்களுடன் நின்று சிறிது நேரம் பேசிவிட்டு, “நான் கிளம்புறேன்.” என்றான்.
“அடுத்த முறை வரும் போது கீர்த்தியை கூடிட்டு வா….” என்ற நண்பர்களிடம்,
“கண்டிப்பா…இன்னைக்குதான் அக்கா ஊருக்கு போனா… அதுல இருந்து அபி சிணுங்கிட்டே இருக்கா… அதுதான் இன்னைக்கு வரலை.” எனக் கூறிவிட்டுக் காரில் எறியவனுக்கு, மனம் முழுவதும் அவன் மனைவியே ஆக்ரமித்திருந்தாள். அவளை முதல் முதலாகப் பார்த்ததில் இருந்து நினைத்துப் பார்த்தான்.
நல்ல நண்பர்கள் இருந்ததால் நேரமும் நல்ல விதமாகவே சென்று கொண்டிருந்தது. சில நாட்களாக நண்பர்களின் பேச்சில் கீர்த்தி என்ற பெயர் அடிக்கடி வர கேட்டிருந்தான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. சிலமுறை இவன் அவர்களைச் சந்திக்கச் செல்லும் போது, இப்பதான் கீர்த்திப் போனாங்க என்பார்கள். இருவரும் நேரில் சந்திக்காமலே சில காலம் சென்றது.
கீர்த்தி என்பது படித்து வேலையில் இருக்கும் அல்லது திருமணம் ஆன பெண் என்றே நினைத்திருந்தான். ஆனால் அவள் ஒரு கல்லூரி மாணவி என்பது அவனுக்குத் தெரியாது.
அன்றும் கேன்சர் பற்றிய விழிப்புணர்வுக்காக, இன்னொரு அமைப்போடு சேர்ந்து, ஞாயிறுக்கிழமை அதிகாலை மாரத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஓட்டம் தொடங்குவதற்கு முன் அன்று தர்மாதான் சிறப்புரை ஆற்றினான். ஒரு பதினைந்து நிமிடங்கள்தான் பேசி இருப்பான். ஆனால் அந்தப் பதினைந்து நிமிடத்திற்குள் கான்சர் நோயினால் ஏற்படும் பாதிப்பு, என்ன மாதிரியான வாழ்க்கைமுறையால் கேன்சர் நோய் பாதிப்பை தவிர்க்க முடியும் எனத் தெளிவான ஆங்கிலத்தில் பேசினான்.
“ஏற்கனவே நாம் சாப்பிடும் உணவே இப்போது நஞ்சுதான். பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது மூலம், நாமே இன்னும் நோயை தேடிக் கொள்கிறோம். முடிந்தவரை பிளாஸ்ட்டிக் பொருட்களைத் தவிர்ப்போம்.” எனப் பேச்சை முடித்திருந்தான்.
அன்று கீர்த்தியும் அங்கிருந்தாள். அந்த விழா எதோ ஒரு ஹாலில் நடக்கவில்லை. கடற்கரை முன்பு திறந்தவெளியில் நடந்தது. ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் அங்கிருப்பவர்கள் அவன் பேச்சை சுவாரசியமாகக் கேட்டிருந்தனர்.
அவன் பேசுவதை இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலதான் இருந்தது. அவன் பேசியதன் விளைவாக எல்லோரும் கையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கி எறிந்ததுதான் அன்றைய அவனின் பேச்சின் வெற்றியே.
கீர்த்தி மேடைக்கு வெகு தள்ளி இருந்தாள். அவனைப் பற்றி அறிமுக உரை எல்லாம் அவள் கேட்டிருக்கவில்லை. அதனால் யாரு சாமி இவன் என்பது போலத்தான் ஆச்சர்யமாகப் பார்த்திருந்தாள்.
அந்த நேரம் ஓட்டம் தொடங்கிவிட…. சரி பிறகு வந்து பார்த்துக் கொள்வோம் என ஓட தொடங்கினாள்.
பேசி முடித்து விட்டு வந்த தர்மாவிடம் சிலர் ஆர்வமாகப் பேச வர… அவர்களோடு பேசிவிட்டுத் தர்மா சிறிது தாமதமாகத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டான்.
வழியில் தாகத்திற்குக் குடிக்க இளநீர், எலுமிச்சை சாறு மற்றும் மோர் வழங்கப்பட்டது.
சிறிது தூரம் ஓடிய பிறகு… “அதோ கீர்த்தி.” என விஷ்ணு சொல்ல… இன்றாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் தர்மாவின் கண்கள் ஆவலாக முன்னே ஓடிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்க்க, அவளும் எல்லோரையும் போல…. வெள்ளை நிற டி ஷர்ட், கருப்பு நிற ட்ராக் பாண்டில், ரப்பர் பேண்டில் அடக்கி இருந்த கூந்தல் துள்ள… முன்னே ஓடிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் தர்மா சற்று வேகமாகச் சென்று அவளுடன் இணைந்து ஓட…. கீர்த்திக்கு மறுபக்கத்தில் இருந்த தீபக், “ஹாய் தர்மா…” என்றதும், இவனைப் போலவே கீர்த்திக்கும் தர்மா என்ற பெயர் பரிட்சயமே. அதனால் அவளும் ஆவலாகத் தர்மாவின் பக்கம் திரும்பியவள், அவனைப் பார்த்தும் மேலும் ஆச்சர்யமானாள்.
இவன் தானா அவன் என்பது போல் அவள் பார்க்க… தர்மா பதிலுக்குப் புன்னகையுடன் தலையசைத்தான்.
அப்போது இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஓட்டத்தைத் தொடர்ந்தனர். ஓட்டம் முடிந்த பின்னர் இருவருக்கும் இடையே சுமந்த் முறையாக அறிமுகம் செய்து வைத்தான்.
அதன் பிறகும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது. கலந்து கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல் மூன்று இடங்களில் வந்தவர்களுக்குப் பரிசுகள் கொடுத்து, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உதவிய தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பி… எல்லாம் ஒழுங்குபடுத்தி நேரம் பார்க்க, காலை பத்தரை மணி ஆகியிருந்தது.
மற்றவர்கள் சொல்லிக் கொண்டு கிளம்ப, இவர்கள் ஆறு பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
கீர்த்திச் சென்னையின் புகழ் பெற்ற கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டுப் படிப்பதாகச் சொன்ன விஷ்ணு, அதோடு அவள்தான் போன மாதம் நடந்த மருத்துவ முகாமுக்கும், இன்று நடந்த மாரத்தான் ஓட்டத்திற்கும் நிறையக் கல்லூரி மாணவர்களைத் திரட்டியது என்றான்.
“இந்தச் சின்ன வயசுல சமூகச் சிந்தனையும் அக்கறையும் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யமா இருக்குங்க. நிஜமா நீங்க கிரேட். உங்களுக்கு என்ன இருபது வயசு இருக்குமா? நான் அந்த வயசுல எல்லாம் இப்படி யோசிச்சதே இல்லை.” எனத் தர்மா மனமார பாராட்ட…. கீர்த்தியிடம் மெல்லிய புன்னகை.
“நீ ரொம்பப் புகழுறதைப் பார்த்தா… கீர்த்தியை பெரியவங்க லிஸ்ட்ல வச்சிருந்த போல….” என ராஜேஷ் சொல்ல… அப்படியா எனக் கீர்த்திப் பார்க்க…
“உண்மையா சொல்லனும்னா அப்படித்தான் நினைச்சேன். நிச்சயமா இவ்வளவு சின்னப் பெண்ணை எதிர்பார்க்கலை.” என்றான் தர்மா மனதை மறையாது.
“நான் கிளம்புறேன். என் வீட்ல வெளிய போகணும்னு சொன்னாங்க. அப்புறம் லேட்டா போனா, ஞாயிற்றுக்கிழமை கூட வீட்ல இல்லைன்னு சொல்வாங்க.” எனத் தீபக் கிளம்ப, மற்றவர்களும் அதே காரணம் சொல்லி கிளம்பினர். தர்மாவும் கீர்த்தியும் மட்டுமே கடைசியாக இருந்தனர்.
“உங்க வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?” கீர்த்திக் கேட்க,
“அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு. எனக்கு இன்னும் ஆகலைங்க. ஆனாதான் தெரியும் என் நிலைமை.” எனத் தர்மா புன்னகைக்க…. கீர்த்தியும் சேர்ந்து சிரித்தாள்.
இவர்கள் இருவரும் மட்டும் சிறிது நேரம் நின்று பேசினார். கீர்த்தியின் பேச்சில் இருந்து பெரிய இடத்துப் பெண். தந்தை தாய் இருவரும் பிஸியாக இருப்பதால்…. இவள் இது போல நண்பர்களுடன் சேர்ந்து சமூகப்பணி செய்கிறாள் எனத் தெரிந்தது.
அதற்கும் தர்மா அவளைப் பாராட்டினான். இளவயதினருக்கு பொழுது போக்க வேறு விஷயங்கள் இல்லையா என்ன? ஆனால் அவளுடைய நேரத்தை அவள் நல்ல முறையில் பயன்படுத்துவதைப் பாராட்டினான். அதைக் கேட்டு கீர்த்திக்குமே இன்னும் உத்வேகம் பிறந்தது.
“அவள் கிளம்புகிறாள் என்றதும், அவள் எதில் வந்தாள்… எப்படிச் செல்லப் போகிறாள் எனக் கேட்டு அவளைத் தர்மா வழியனுப்ப…. அவன் காட்டிய அக்கறை கீர்த்திக்குப் பிடித்திருந்தது.
பார்த்ததும் காதல் எல்லாம் இல்லை. சின்னப் பெண் என்ற அக்கறைதான் தர்மாவிடம். அதே போலக் கீர்த்திக்கும், அவனின் பேச்சையும் செயலையும் வைத்து, அவன் மீது நல்ல மரியாதை கொண்டிருந்தாள்.
அதன் பிறகு சில பல சந்திப்புகள் நிகழ்ந்தது. எப்போதும் ஒரே மாதிரி இருக்க வேண்டாம் என ஒருமுறை அவள்தான் இவர்கள் எல்லோரையும் வற்புறுத்தி திரை அரங்கத்திற்கு அழைத்துச் சென்றாள். ஏன் டா அழைத்துச் சென்றோம் எனப் பின்னர் வருத்தப்படப் போகிறவளும் அவள்தான்.
தீபக் மற்றும் சுமந்த் மட்டும் தங்கள் மனைவியை அழைத்து வந்திருந்தனர். மற்றவர்களுக்குச் சின்னக் குழந்தைகள் இருப்பதால் அழைத்து வரவில்லை. தர்மாவுக்குப் பக்கத்து இருக்கைதான் கீர்த்திக்கு.
பட இடைவேளையில் கீர்த்தி எல்லோரிடமும் கொறிப்பதற்கு என்ன வேண்டும் எனக் கேட்க,
அவர்கள் எல்லாம் எதுவும் வேண்டாம் எனச் சொல்லிவிட… அதிசய பிறவி போல அவர்களைப் பார்த்தவள், பாப்கார்னும், குளிர்பானமும் வாங்கி வாங்கிக் கொண்டு வந்தாள்.
தர்மாவின் அருகே உட்கார்ந்தவள், அவனிடம் வேண்டுமா எனக் கேட்க…
“நாமே ஒன்னு வேண்டாம்னு மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றோம். பிறகு அதை நாமே செய்யலாமா?” என அவன் கேட்க,
“கூல் ட்ரிங்க்ஸா சொல்றீங்க. என்னைக்கோ ஒருநாள் குடிச்சாக் கூடத் தப்பா?”