மறுநாள் ஞாயிறுக்கிழமை என்பதால் வழக்கம் போலக் காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அருணா வந்திருப்பதால்… இன்னுமே சிறப்பான விருந்து தயராக. ஜமுனா சமைக்கக் கீர்த்தி அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள். 

எல்லோரும் ஒவ்வொருவராக வந்து சேர பத்து மணி ஆகிவிட்டது. சுனிதாவின் அண்ணன் மகள்கள் இனியா மற்றும் சௌம்யா இருவரும் நேற்றே வந்திருந்தனர். அதில் சௌமியாவை தான் வசீகரனுக்குத் திருமணம் பேசலாம் என நினைத்திருக்கிறார்கள். 

முன்பு தர்மாவுக்கும் இனியாவுக்கும் திருமணம் செய்யலாம் என நினைத்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இனியாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெளிநாட்டில் மேற்படிப்பை முடித்துவிட்டு இப்போது தான் திரும்பி இருக்கிறாள். 

கீர்த்தி இப்போதுதான் இனியாவை பார்க்கிறாள். பெயருக்கு ஏற்றார் போல… முகத்தில் எப்போதும் புன்னகையுடன் வளம் வந்தாள். கீர்த்தியாக இரண்டொருமுறை சென்று பேசியும், அவள் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. ஆனால் அது வெளிப்படையாகத் தெரியாதது போலவும் காட்டிக் கொண்டாள். 

இந்தப் பொண்ணு செம கேடி என்றுதான் கீர்த்திக்கு தோன்றியது. அதன் பிறகு கீர்த்தியும் அவளைக் கண்டுகொள்ளவில்லை. தர்மா வீட்டிற்கு வரும் விருந்தினரை எப்படி நலம் விசரிப்பானோ, அப்படி விசாரித்துவிட்டுச் சென்றிருந்தான். 

ரங்கநாதனை வீல் சேரில் உட்கார வைத்து, தர்மா ஹாலுக்கு அழைத்து வந்தான். அவருக்கு அதிக நேரம் நிற்கவோ உட்காரவோ முடியாது. படுக்கையில் தான் அதிகம் இருப்பார், காலை மாலை இருவேளையும் சிறிது நேரம் உட்கார வைப்பார்கள்.

எல்லோரையும் பார்க்க பெரியவர் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. அவரை எல்லோரும் நலம் விசாரிக்க, அவரும் எல்லோரையும் நலம் விசாரித்தார். 


முன்பே ரங்கநாதன் அவர் அறையிலேயே உண்டிருக்க… மற்றவர்கள் அவர்களுக்குத் தேவையானது அவர்களே எடுத்துக் கொண்டு உண்டனர். 

முதலில் பெரியவர்கள் உண்ணும் போதே அருணா பிள்ளைகளுக்கும் கொடுத்து அவளும் உண்டு விட்டாள். அடுத்து சூரியா, வசி, விஷால், ரித்விகா, இனியா, சௌமியா மற்றும் சந்துரு சேர்ந்து பேசிக்கொண்டே டைனிங் ஹாலில் உண்டனர். 

கீர்த்தியும் ஸ்ருதியும் தேவையானது பார்த்து பரிமாறிவிட்டு உண்ண அமர, தர்மாவும் அவர்களோடுதான் உண்டான். 
“விருந்தாளிங்க வந்திருக்காங்க இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” தர்மா ஸ்ருதியிடம் கேட்க, 

“போங்க அத்தான் நீங்க வேற…” என ஸ்ருதி சலித்துக்கொள்ள… 

“என்ன ஆச்சு?” 

“என்ன கொடுத்தாலும் இதுவான்னு கேட்கிறாங்க. சரி என்ன வேணும் சொல்லுங்கன்னு சொன்னாலும் சொல்றது இல்லை. இதுல உலகத்தில இல்லாத அண்ணன் பொண்ணுக வந்த மாதிரி, உங்க சித்தி வேற ஒரே ரகளை…” என ஸ்ருதி சலித்துக்கொள்ள… தர்மா சிரித்தபடி உண்டான். 

உண்டுவிட்டு எப்போது கிளம்புவோம் என்று நினைத்தபடிதான் எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். இன்னும் ரங்கநாதன் அறைக்குச் செல்லவில்லை. அவர் இருக்கும்வரை தான் இதுவும். இல்லையென்றால் யார் இப்படி வாரவாரம் வந்து கொண்டிருப்பார்கள். 

“விஷால், நீ நாளைக்குச் சிமெண்ட் கம்பெனிக்கு போகும் போது அங்கே…” எனத் தர்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே…. 

“நான் என்ன பண்ணனும்னு நீங்க முடிவு பண்ணாதீங்க?” என்றான் விஷால் காட்டமாக… அப்படிச் சொல்லு என்பது போலச் சந்துருவும், சூரியாவும் பார்க்க… இனியா முகத்தில் விஷம சிரிப்பு. 

“எல்லத்தையும் நீங்களே முடிவு செய்யாதீங்க. நாங்க ஒன்னும் உங்களுக்கு அடிமை இல்லை.” 

“உங்களுக்குச் சூரியவோட மோதனும்னா நேரா மோதுங்க. எதுக்கு நடுவுல என்னை இழுக்குறீங்க?” எனச் சந்துரு சொன்னதை அப்படியே விஷால் ஒப்பிக்க… 

“நான் எதோ தில்லு முள்ளு பண்ற மாதிரி நீங்க பண்றீங்க. கணக்கு வழக்கைத்தான் நீங்க கண்ணுல விளக்கெண்ணை விட்டு தானே பார்க்கிறீங்க. அப்புறம் என்ன உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லை.” எனச் சூரியாவும் குற்றம் சாட்ட… 

“நீ ஏன் விஷால் சிமெண்ட் கம்பெனிக்கு தான் போகணும்னு சொல்ற? அவன் எங்க விருப்பமோ அங்க இருக்கட்டும்.” என ரவீந்தர் சொல்ல… உமாநாத்தும் அதுதானே என்றார். 

எல்லோரும் தர்மாவை நிற்க வைத்துக் கேள்வி கேட்பது போல இருக்க…. நாயகி ரங்கநாதனைப் பார்த்தார். ஆனால் அதற்குள் தர்மாவே பேசினான். 

“நான் உன்கிட்ட சூரியா பத்தி எதாவது குற்றம் சொன்னேனா? உன்னை அங்க போகச் சொன்னா அங்க தவறு இருக்குன்னு அர்த்தம் இல்லை. நாம பெரிய அளவுல பண்றது சிமெண்ட் பிசினஸ் தான். அதுல ஒருத்தருக்கு ரெண்டு பேரா இருங்கன்னு சொன்னேன்.” 

“சூரியா பார்த்தா நீ பார்க்க கூடாதுன்னு இருக்கா… அவன்கிட்ட நீ நல்லா வேலையைக் கத்துக்கலாமேன்னு கூட நான் சொல்லி இருக்கலாம்.” 

“சூரியா, கணக்கு வழக்குல குளறுபடினா… உன்கிட்ட நான் நேரடியா  கேட்பேன். எனக்கு யார்கிட்டயும் பயம் இல்லை.” 

“நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிகிட்டா அதுக்காக நான் தப்பானவனா ஆக மாட்டேன் சரியா?” எனத் தர்மாவும் நன்றாகத் திருப்பிக் கொடுக்க… விஷால் எதோ சொல்ல வர… 

“டேய், அவனைக் கேள்வி கேட்கிறதுக்கு முன்னாடி அவனைப் போல ஒரு மாசமாவது வேலை செஞ்சிட்டு வந்து கேள்வி கேளு.” என்றார் ரங்கநாதன். 

“இல்ல தாத்தா…” என விஷால் ஆரம்பிக்க… 

“இருபது வயசுல பிசினஸ் உள்ள வந்தான். உங்க அப்பாவுக்கு மேல அவங்க அப்பா அவனைச் செல்லமா வளர்த்தான். ஆனா திடிர்ன்னு அவன் விட்டுட்டுப் போனதும், நானும் விழுந்துட்டேன். நினைச்ச படிப்பை அவன் படிச்சுக் கூட முடிக்கலை….என்னோட மத்த ரெண்டு பிள்ளைகளும் அவ்வளவு சூட்டிகை இல்லை. கண்ணைக் கட்டிக் காட்டுல விட்ட நிலை…. ஆனாலும் என்னையும் பார்த்துகிட்டு எல்லாத்தையும் கத்துகிட்டான்.” 

“மகன் படுற கஷ்டத்தைப் பார்த்து அவங்க அப்பா, மகனை இந்த நிலையில விட்டுட்டு போயிட்டோமன்னு கண்டிப்பா வருத்தப்பட்டிருப்பான். ஆனா இன்னைக்கு எங்க இருந்தாலும் கண்டிப்பா மகனைப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பான்.” 

“நாங்க உருவாக்கினதை அவன் இன்னைக்குப் பல மடங்கா பெருக்கி இருக்கான். எல்லாம் அவனோட உழைப்பு. இல்லைன்னு இங்க யாருமே சொல்ல முடியாது.” 

“முதல்ல அவன் அளவுக்கு உழைங்க. அப்புறம் வந்து அவளைக் கேள்வி கேட்கலாம்.” என்றதும், விஷால் மற்றும் மற்றவர்களின் தலை தொங்கிவிட….இனியாவின் விஷம சிரிப்பும் மறைந்தது. 

ரங்கநாதன் பேசிவிட்டு மேற்கொண்டு பேச விரும்பாமல்… தர்மாவிடம் செய்கையில் உள்ளே அழைத்துச் செல்லும்படி சொல்ல…. 

“தாத்தா, உங்களுக்கு எப்பவும் அந்தப் பேரன் தான் உசத்தி. நான் அவரையும் விட நல்லா வந்து காட்டுறேன்.” என விஷால் சவால் விட… 
“நான் சாகிறத்குள்ள செஞ்சு காட்டுடா பார்க்கலாம்.” என்றார் ரங்கநாதனும் பேரனுக்குக் குறையாத திமிரில்… தர்மா தாத்தாவின் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு சென்றான். 

சுனாமி வந்து ஓய்ந்தது போல இருந்தது வீடு. வீட்டில் அவ்வளவு பெரிய களோபரம் நடந்து முடிந்து இருக்க… கீர்த்தி எதுவுமே நடக்காதது போல…. உணவு மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தாள். 

“கீர்த்தி, எப்படி இப்படி இருக்க நீ? ஒரு நாளுக்கே எனக்குப் பைத்தியம் பிடிக்குது. நீ எப்படி இதெல்லாம் பொறுத்திட்டு இருக்க.” 

“உன் புருஷன்கிட்டே சொல்லு… அவனுங்க என்ன பண்ணா நமக்கு என்ன? இவன் அக்கரையில் சொல்ல… அவனுங்க எதோ இவனைக் கெட்டவன் மாதிரி பேசுறது கேட்க கஷ்டமா இருக்கு.” என அருணா கண் கலங்க…. 

“அதெல்லாம் உங்க தம்பியோட பிறவி குணம் அண்ணி. அவர் நாம சொன்னா எல்லாம் மாற மாட்டார். அதோட அவர் ஏன் மாறனும் சொல்லுங்க?” 

“இந்தக் காலத்தில நல்லது நினைக்கிறது, நல்லது செய்றது கூடத் தப்புன்னா…. எனக்குப் புரியலை…” 

“அவர் இவங்ககிட்ட மட்டும் இல்லை. எல்லார்கிட்டயும் அப்படித்தான். அந்தக் குணம் பிடிச்சுதான் நான் அவரைக் கல்யாணம் பண்ண விரும்பினேன். இப்ப நானே எப்படி அவரை மாறுங்கன்னு சொல்ல முடியும்?” 

“எதுவா இருந்தாலும் அவர் பார்த்துப்பார். நீங்க கவலைப்படாதீங்க.” என்ற கீர்த்தியின் தெளிவைப் பார்த்து அருணாவிற்கு ஆச்சர்யமே…. 

“நீ எப்படித்தான் இதெல்லாம் பார்த்திட்டு இருக்கியோ. வந்த மூன்னு நாள்ல முப்பது தடவை பிரஷரை ஏத்தி விடுவானுங்க போல.. இனி ஓசி சோறுக்கு ஆசைப்பட்டு இங்க வரவே கூடாது.” என அருணா சொன்னதைக் கேட்டுக் கீர்த்திச் சிரிக்க… 

“உனக்குச் சிரிப்பா இருக்கா…. எனக்குக் கடுப்பா இருக்கு.” என்றாள் அருணா. 

அருணா மதிய உணவை முடித்ததும் கிளம்பிவிட்டாள். அவர்கள் சாமான்களைக் காரில் ஏற்றிக் கொண்டு இருக்க, அவர்கள் கிளம்புவது தெரிந்து விஷால் வந்தான். 

எப்போதும் போகும்போது ஜாலியாகச் சொல்லிக் கொண்டு செல்லும் அருணா அன்று அமைதியாக இருக்க…. 

“என்னக்கா அதுக்குள்ள கிளம்புற… நீ சாயங்காலம் தான் போவேன்னு நினைச்சேன். நான் பசங்களுக்கு எதுவுமே வாங்கிக் கொடுக்கலை…” என அவன் பர்சை எடுக்க… 

“வேண்டாம், கீர்த்தி எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கா போதும்.” என்றாள் கண்டிப்பாக. 

குரலில் இருந்த கண்டிப்பை உணர்ந்து விஷால் அமைதியாக, எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அருணாவின் குடும்பம் விடைபெற்றது. 

காரில் ஏறி சிறிது தூராம் வந்ததும், “அன்னைக்குத் தர்மா என் முன்னாடி விஷாலை கம்பெனிக்கு வர சொன்ன போது, அவன் சரின்னுதான் சொன்னான். ஆனா இன்னைக்கு ஏன் அப்படிப் பேசினான்.” 

“நேத்து நீங்க எல்லாம் தான் அவனோட இருந்தீங்க. நீங்க தான் எதாவது சொல்லி இருக்கணும்.” என அருணா கணவனைப் பார்க்க… 

“ஆமாம் உங்க வீட்ல என்ன நடந்தாலும் அதுக்கு நான் காரணமா?” என்றான் சந்துரு அலட்சியமாக. 

“சத்திரியனா இருக்கலாம், சாணக்கியனாவும் இருக்கலாம். ஆனா சகுனியா மட்டும் இருக்காதீங்க. நீங்க இப்ப பண்றது சகுனி வேலைதான்.” என்றால் அருணா கணவனின் முகத்தில் அடித்தது போல…. ஆனால் சந்துருவுக்கு உரைக்க வேண்டுமே… அவள் யாரையோ சொன்னது போல… வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான்.