சாரல் மழையே 

அத்தியாயம் 4

மறுநாள் காலை தர்மா அலுவலகம் செல்லக் கிளம்பி வர… அருணாவின் பிள்ளைகள் பீச் போக வேண்டும் என ஆசைப்பட்டனர். தர்மா மனைவியை மாலை அழைத்துக் கொண்டு செல்ல சொன்னான். கீர்த்தியும் சரி என்றாள். 


சந்துரு எழும் போதே முன் மதிய பொழுதுதான். எழுந்தவன் நிதானமாகக் குளித்துக் கிளம்பி கீழே வர மதியம் ஆகி இருந்தது. சிறிய விருந்தே தயராக இருக்க… டிவி பார்த்தபடி நிதானமாக உண்டான். 

மாலை பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கீர்த்தியும் அருணாவும் கடற்கரைக்குக் கிளம்ப, அவர்களோடு ஜமுனாவும் சேர்ந்து கொண்டார். நாயகிதான் அவரையும் சென்றுவிட்டு வரும்படி அனுப்பி வைத்தார். 

அவரவர் விருப்பத்திற்குக் கார் வைத்திருந்தாலும், குடும்பமாக வெளியே செல்ல… மூன்று வீட்டிற்கும் பொதுவாக இன்னோவா கார் உண்டு. 

டிரைவர் காரை ஓட்ட… பிள்ளைகளைக் கடைசி இருக்கைக்குத் தள்ளிவிட்டு, பெண்கள் மூவரும் நடு இருக்கையில் உட்கார்ந்து பேசிக் கொண்டே சென்றனர். 

பேச்சுச் சுவாரஸ்யத்தில் மூவரும் கார் சென்ற திசையைக் கவனிக்கவில்லை. கீர்த்தித் தான் கவனித்தாள். 

“மணி எங்கப் போறீங்க? பீச் தான போகணும்.” 

“சார் தான்மா அவர் ஆபீஸ் பக்கம் வர சொன்னாங்க.” என்றவன், சாலை ஓரம் நின்ற தர்மாவைப் பார்த்ததும் காரை நிறுத்த, டிரைவரை இறங்க சொன்ன தர்மா, தன் கையில் இருந்த பையைப் பின் இருக்கையில் இருந்த அருணாவிடம் கொடுக்க, தந்தையைப் பார்த்ததும் அபி சந்தோஷ கூச்சலிட… “ஒரே ஜாலி தான் போல…” என மகளைப் பார்த்து புன்னகைத்தபடி காரில் ஏறினான். 

ஆபீஸ்ல் இருக்கும் தனது காரை வீட்டில் விட்டுவிட்டு செல்லும்படி ஓட்டுனருக்கு சொல்லி அவரை அனுப்பி விட்டு, பின்னே திரும்பி மனைவியை முன் இருக்கைக்கு வர சொன்னான். 

“வரேன்னு சொல்லவே இல்லை…” எனச் சாதரணமாகக் கேட்டாலும், கீர்த்திக்கு கணவன் தங்களுடன் வருவது மிகுந்த மகிழ்ச்சியே… அதை அவள் முகமே காட்டிக் கொடுத்தது. 

“வரேன்னு சொல்லிட்டு வரலைனா… எல்லோருக்கும் ஏமாற்றம் தான…. அதுதான் அப்ப சொல்லிக்கலாம்னு இருந்தேன்.” 

“வேலை முடிஞ்சுதா தம்பி.” என்ற அருணாவிடம், 

“வேலையெல்லாம் முடியவே முடியாது கா… நாமதான் முடிச்சுக்கணும்.” என்றான். 

“நீ சொல்றது என்னவோ சரிதான். வெளிய வேலைக்குப் போறவங்களுக்குக் கூட லீவ் எடுக்க முடியும். ஆனா இந்தச் சொந்தத் தொழில் செய்றவங்களுக்கு லீவ் எங்க எடுக்க முடியுது.”

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க… மெதுவாகத்தான் செல்ல முடிந்தது. பேசிக்கொண்டே சென்றதால் எதுவும் தெரியவில்லை. 

கடற்கரையில் கூட்டம் அதிகம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திய தர்மா, காரைவிட்டு இறங்கியதும், “தூக்குங்க பா…” என வந்த மகளைத் தூக்கிக் கொண்டவன், அக்காவின் பிள்ளைகளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு முன்னால் செல்ல… பெண்கள் மூவரும் ஆளுக்கொரு பையோடு பேசிக்கொண்டே பின்னால் சென்றனர். 

பெண்கள் மூவரும் சிறிது நேரம் கடல் அலையில் நின்றுவிட்டு வந்து மணலில் போர்வை விரித்து உட்கார்ந்துகொள்ள… கடற்கரையில் பிள்ளைகளோடு பிள்ளைகளாக அவர்கள் போதும் என்னும் வரை ஆட்டம் போட்ட தர்மா, இருட்டிய பிறகே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தான். 

பிள்ளைகளுக்கு உடை மாற்றி விட, இவ்வளவு நேரம் ஆடியது அவர்களுக்குப் பசித்திருக்க, கீர்த்தி வீட்டில் இருந்து கொண்டு வந்த நொறுக்கு தீனிகளை வெளியே எடுக்க,
“கணேசன் அண்ணன்கிட்ட டிபன் செஞ்சு தர சொல்லி கொண்டு வந்தேன். அதை எல்லோருக்கும் கொடு.” என்றான். 

“இருக்கிற வேலையில இதெல்லாம் எப்படி டா உனக்கு நியாபகம் இருக்கு.” என்றபடி அருணா தம்பி கொடுத்திருந்த பையைப் பிரித்தாள். உள்ளே ஹாட்பாக்ஸில் பூரியும், ஒரு பாத்திரத்தில் கொண்டக்கடலை மசாலா மற்றும் தேவையான பேப்பர் தட்டுகளும் இருந்தது. 

பிள்ளைகளுக்குத் தான் பூரி என்றால் பிடிக்குமே…. அருணா ஒரே தட்டில் வைத்து மூன்று பிள்ளைகளுக்கும் ஊட்டி விட… அவர்கள் உண்டதும், அதே தட்டில் அருணா தனக்குப் பூரி வைத்து உண்ண, கீர்த்தி மாமியாருக்கும் கணவனுக்கும் ஆளுக்கொரு பேப்பர் தட்டில் வைத்துக் கொடுத்தாள். 

தர்மாவுக்குமே நல்ல பசிதான் இருந்தாலும், “நீயும் சாப்பிடு கீர்த்தி.” என்றவன், மனைவி அவளுக்கும் எடுத்துக் கொள்ளவும் தான் உண்ண ஆரம்பித்தான். 

“இப்படி இங்கேயே உட்கார்ந்து சாப்பிடுறது கூட நல்லா இருக்கு இல்ல….” அருணா சொன்னதற்கு, 

“உங்க தம்பிக்கு இந்த மாதிரி எங்காவது வெளியில போனா வீட்ல இருந்து சாப்பாடு எடுத்திட்டுப் போய்ச் சாப்பிடத்தான் பிடிக்கும்.” என்றாள் கீர்த்தி. 

“எங்க அப்பாவும் அப்படித்தான். எங்காவது சுத்திப் பார்க்க போகும்போது அவருக்கு வீட்ல இருந்து தான் சாப்பாடு எடுத்திட்டு போகணும். காலையில மதியத்துக்கு வீட்ல இருந்து எடுத்திட்டுப் போறதுதான் சாப்பிடுவோம். நைட் திரும்ப வரும்போது மட்டும் வெளிய வாங்கித் தருவார். இவன் அப்படியே எங்க அப்பாதான்.” 

“எனக்கும் அப்பா அப்ப சொல்லும் போது அம்மாவுக்கு அன்னைக்கும் வேலையான்னு முதல்ல கோபம்தான் வரும். ஆனா எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் போது, அது தயிர் சோரா இருந்தாக் கூட…. அன்னைக்குத் தான் வயிர் நிறையச் சாப்பிடுவோம். பெரிய ஹோட்டல்ல சாப்பிட்டாக் கூட அந்த மன நிறைவு வராது இல்லையாக்கா?” 

“உண்மைதான் டா…” 

“இதுல மட்டும் இல்லைக்கா. அப்பா அன்னைக்குச் செஞ்ச சில விஷயங்கள் அப்ப எதுக்குன்னு தோணினது உண்டு. ஆனா இப்போ நான் அதையே தான் செய்யுறேன்.” 

“அப்பாவை ரொம்ப மிஸ் பண்றியா தர்மா?”

“நான் அவருக்கு எதுவுமே செஞ்சது இல்லையேக்கா. எனக்கும் அவரை நல்லா பார்த்துக்கணும்னு ஆசை இருக்கும் தானே….அவர் எனக்கு அந்தச் சாய்ஸ் கொடுக்கவே இல்லைக்கா?” 

“இவ்வளவு உழைச்சு, நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன். ஆனா அதைப் பார்க்க அப்பா இல்லையே… அந்த வருத்தம் எனக்கு எப்பவுமே இருக்கும்.”

மகன் பேசுவதைக் கேட்டு கலங்கிய ஜமுனா… “அவருக்கு அவ்வளவுதான்னு விதி இருக்கும் போது, நீ என்ன பண்ணுவ? உங்க அப்பா இப்ப இருந்திருந்தா, எப்படி என்னை, உங்க தாத்தா பாட்டியை பார்த்துப்பாரோ, அப்படித்தான் நீயும் பார்த்துக்கிற. எங்க இருந்தாலும் உங்க அப்பா உன்னைப் பார்த்துப் பெருமை தான் படுவார்.” என அவர் ஆறுதலாகச் சொல்ல… எல்லோரும் நாராயணனின் நினைவில் சிறிது நேரம் இருந்தனர். 

கீர்த்தித் தனது மாமனாரை பார்த்ததே இல்லை. போட்டோவில் தான் பார்த்து இருக்கிறாள். ஆனால் கணவன் தனது தந்தையைப் பற்றி நிறையப் பேசி கேட்டு இருக்கிறாள். அதனால் நேரடியாக அவரைத் தெரிந்துகொள்ளாத போதிலும், மாமனார் மீது நிறைய மரியாதை கொண்டிருந்தாள். 

ஜமுனாவும் அருணாவும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்த கடைகளுக்குச் செல்ல… தர்மா அப்படியே போர்வையில், தலைக்கு அடியில் கையைக் கொடுத்து நேராகப் படுத்துக் கொண்டான். 

“உனக்காகத்தான் வந்தேன் தெரியுமா? நீ உங்க அம்மாவை பார்த்ததுல இருந்து ரொம்ப டல்லா தெரியுற கீர்த்தி. உன்னோட இருந்தா சந்தோஷப்படுவியேன்னு வந்தேன்.” 

“நிஜமா நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை.” 

“மதியமே வர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். இன்னைக்கு உங்களுக்கு நிறைய வேலை இருந்திருக்கும். பசங்களை வேற வச்சிட்டு எப்படி டிபன் செஞ்சு எடுத்திட்டு வருவீங்க. அதுதான் கணேசன் அண்ணனை செய்யச் சொன்னேன்.”

“நல்லதுதான். எல்லாம் கார்ல போகும் போதே தூங்கிடுவாங்க. இப்ப சாப்பிட்டாங்க இனி தூங்கினாலும் பரவாயில்லை.” 

“காத்து சிலுசிலுன்னு அடிக்குது. என்னை விட்டா… நான் இப்படியே இங்கயே படுத்து தூங்கிடுவேன்.” 

“ரொம்பக் களைப்பா தெரியுறீங்க. வீட்டுக்கு கிளம்பலாமா…” 

“ம்ம்…” என்றவன் எழுந்து போர்வையை உதறி மடிக்க… கீர்த்தி எல்லாவற்றையும் பைகளில் அடுக்கி வைத்தாள். 

முதலில் பிள்ளைகள் ஓடி வர…. பின்னே ஜமுனாவும் அருணாவும் நடந்து வந்தனர்.
“அத்தை எங்களுக்கு இதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க.” என அபி ஒரு பையைக் காட்ட…. 

“மூன்னு பேரும் ஹப்பியா… இப்ப கிளம்பலாமா?” எனத் தர்மா கேட்க, பிள்ளைகளும் சரியென…. மெதுவாக நடந்து காருக்கு வந்தனர். 

அங்கே நடைபாதையில் உட்கார்ந்திருந்த வயதானவர்களிடம், கொண்டு வந்த நொறுக்கு தீனிகளைக் கொடுத்து விட்டுக் காரில் ஏறினர். 

அங்கே விஷால், சூரியா, வசி மற்றும் சந்துரு நால்வரும் நட்ச்சத்திர ஹோட்டலில் உள்ள பாரில் இருந்தனர். நான்கு பேரும் அவர்களுக்குத் தேவையான மது வகைகள் மற்றும் உணவுகளை வாங்கியவர்கள், பேசியபடி ஒவ்வொன்றாகக் காலி செய்வதும், மீண்டும் ஆர்டர் செய்வதுமாக இருந்தனர். 

விஷால், “இன்னும் வேற என்ன வேணும்?”  

வசி, “டேய் போதும் டா… வீட்டுக்கு போனா ஒரு துர்வாச முனிவர் இருப்பார். பார்வையாலையே நம்மை எரிப்பார். போதும் ஒரு லிமிட்ல நிறுத்தலாம்.” 

சூரியா, “அவரும் அனுபவிக்க மாட்டார், நம்மையும் அனுபவிக்க விட மாட்டார்.”  

“நீங்க ஏன் டா அவன் சொல்றது எல்லாம் கேட்கிறீங்க? நீங்கதான் அவனைப் பெரிய ஆள் ஆக்கி விடுறது.” என்ற சந்துரு, “உன்னைச் சிமெண்ட் கம்பனிக்குதான் போகணும்னு சொல்ல அவன் யாரு?” என விஷாலைப் பார்த்து கேட்டவன், 

“இவங்களோட நேரா மோத தைரியம் இல்லாம… அவன் உன்னை இவங்களோட மோத விடப் பார்க்கிறான்.” என விஷாலையும் ஏற்றி விட… 

ஏற்கனவே விஷாலுக்குத் தர்மா என்றால் ஆகாது. இப்போது போதையில் வேறு இருக்க… சந்துரு சொன்னதக் கேட்டதும் அப்படியும் இருக்குமோ என விஷால் நினைக்க ஆரம்பித்தான். 

பிள்ளைகள் வரும் வழியிலேயே உறங்கி இருக்க…. தர்மா, கீர்த்தி, அருணா மூவரும் ஆளுக்கொருவரை தூக்கிக்கொண்டு உள்ளே சென்று படுக்கவைத்தனர். தர்மா மட்டும் காரில் இருந்த சாமான்களை எடுக்க வெளியே வர… அப்போது தான் விஷால் வந்து சந்துருவை இறக்கி விட்டு நிற்காமல் சென்றுவிட்டான். சந்துருவும் தர்மாவைப் பார்க்காதது போல உள்ளே சென்றான். 

குடித்திருப்பார்கள் அதுதான் நிற்காமல் செல்கிறார்கள் எனத் தர்மாவுக்கும் புரியாமல் இல்லை. வார இறுதி என்றால் உல்லாசம், அதுவும் குடிப்பது தான் இப்போது நாகரிகம் எனத் தம்பிகள் இருப்பது, அவன் அறிந்ததே. குடிக்காதவர்களைத் தான் இப்போது சமுகம் ஒருமாதிரி பார்க்கிறது.
சந்துரு நேராக அறைக்குச் சென்று படுத்துவிட… மற்றவர்களுக்கும் களைப்பாக இருக்க… உடனே உறங்க சென்றனர்.