“உனக்கு இதுல பெருமை வேறையா?” என்ற நாயகி…. “இன்னும் வசி, விஷால், ரித்விகா என்ன செய்யக் காத்திருக்காங்களோ…அவங்களும் அவங்களே பார்த்துப்பாங்களோ என்னவோ.” என அவர் கவலையைப் பார்த்து சிரித்த தர்மா,
“காதல் திருமணம்தான் நம்ம வீட்டுக்குச் செட் ஆகுமோ என்னவோ… இதுவரை வந்த ரெண்டு மருமகள்களும் நல்லாத்தானே இருக்காங்க பாட்டி. பின்ன என்ன கவலையை விடுங்க.” என்றதும்,
“நீ சொல்றது சரிதான். அவ்வளவு பெரிய வீட்ல இருந்து வந்தாலும், கீர்த்தி நான் பணக்கார வீட்டு பெண்ணுன்னு ஒருநாளும் திமிரா நடந்தது இல்லை. இங்க எல்லார்கிட்டயும் மரியாதையா தான் நடந்திருக்கா, அதே போல ஸ்ருதியும், சூரியா முன்னபின்ன இருந்தாலும், அவ எல்லார்கிட்டையும் நல்ல முறையில தான் நடந்துக்கிறா. இனி வர்றவங்களும் இவங்களைப் போல இருந்தா கவலை இல்லைதான்.”
“நீங்களே சொல்லிட்டீங்க. அப்புறம் என்ன நிம்மதியா இருங்க.” என்றான் தர்மா.
அருணாவை சேலத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் சொந்த தொழில்தான். அருணாவுக்கு ஆணொன்று பெண்ணொன்று என இரட்டை பிள்ளைகள். திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேலாகிறது. சில வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து, அதற்கான மருத்துவம் செய்த பிறகே அருணா குழந்தை உண்டாகியதால்… அவர்கள் பிள்ளைகளுக்கு இப்போது ஏழு வயதுதான்.
அருணா அடிக்கடி பிறந்த வீடு வருபவள் அல்ல…எப்போதோ ஒருமுறை வந்து இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே தங்கிவிட்டு செல்வாள். அதனால் அவள் வரும் போது விருந்து உபசரணைகள் பலமாகவே நடக்கும். அன்றும் அவர்களுக்குச் சிறப்பான இரவு உணவு தயார் செய்ய எனக் கீர்த்திக்கு வேலைகள் இருக்க… அவள் அப்போதைக்கு எல்லாவற்றையும் மறந்து இருந்தாள்.
மாலை மங்கும் நேரம் அருணாவின் கார் வீட்டிற்குள் நுழைய…. காரில் இருந்து இறங்கும் போதே ஆரவாரமாகத்தான் அருணா இறங்கி வந்தாள். அந்த வீட்டில் எல்லோருடனும் நல்லூரவில் இருப்பது அவள் மட்டுமே… எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுபவளும் கூட…. அதனால் எல்லோருக்கும் பிரியமானவளும்.
அருணாவைப் பார்த்ததும் விஷால் ஓடி வந்து கட்டிக்கொண்டான். அருணாவின் செல்ல தம்பியும் விஷால் தான்.
“எப்படி டா தம்பி இருக்க?” என அருணா வாஞ்சையாக விசாரிக்க…
“நல்லா இருக்கேன் அக்கா… நீ எப்படி இருக்க.” என்றவன், காரை நிறுத்திவிட்டு இறங்கிய சந்ருவிடம் “ஹாய் மாம்ஸ்…” என் அவனையும் கட்டிக் கொண்டான்.
“வாங்க அத்தான், வா அக்கா.” எனத் தர்மா வந்து இருவரையும் வரவேற்க, சந்ரூவுக்குத் தர்மாவை பிடிக்காது. அவனுக்கு விஷாலைத்தான் பிடிக்கும். அதனால் பட்டும்படாமல் தான் நடந்து கொள்வான். தர்மாவுக்கும் அது தெரியும். அருணாதான் தம்பியையும் தம்பி மனைவியையும் நலம் விசாரித்தாள்.
இவர்கள் வந்தது தெரிந்து, மற்ற வீடுகில் இருந்தும், பெரியவர்கள் சிறியவர்கள் என வந்து விட… அங்கே நல விசாரிப்பே அரை மணி நேரம் நிகழ்ந்தது.
முகத்தில் மென் நகையுடன் தர்மா ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான். விளையாட ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் அபி குதித்துக் கொண்டிருந்தாள்.
ஒருவழியாக அனைவரும் கிளம்ப, சந்துரு விஷாலை விடாமல் இழுத்துக் கொண்டு வந்தான். “நீயும் கொஞ்ச நேரம் இருந்திட்டு போ.” என ரித்விகாவை தர்மாவே அழைத்தான்.
“நைட் என்ன சமையல்? நான் வேணா மச்சானுக்குப் பிடிச்சது ஆர்டர் போடவா…” என விஷால் கைபேசியை எடுக்க…
“டேய்…. நீ உன் விருந்தெல்லாம் நாளைக்கு வச்சுக்கோ…. இன்னைக்கு எல்லாம் வீட்லயே தயார் பண்ணிட்டாங்க. நீயும் ரிதியும் இங்கேயே சாப்பிடுங்க. கீர்த்தி, நீ சித்திக்கு போன் பண்ணி சொல்லிடு. அவங்க வேற எதாவது செஞ்சிட போறாங்க.” என, கீர்த்தியும் சரியென்றாள்.
பிள்ளைகளுக்குப் பிடித்த சிக்கென் பிரைட் ரைஸ், சில்லி சிக்கன். அதோடு சப்பாத்தியும் பன்னீர் குருமாவும் செய்திருந்தனர். எல்லாம் ஏற்கனவே தயாராக இருக்க… சப்பாத்தி மட்டும் அப்போது போட்டு எடுத்தனர்.
ஜமுனா சப்பாத்திக்கு தேய்த்துக் கொடுக்க, கீர்த்தி அதைச் சுட்டு எடுக்க, அருணா சென்று பரிமாற, முதலில் பிள்ளைகள் உண்ண. அவர்களோடு ரித்விகாவும் சேர்ந்து உண்டாள்.
அடுத்து விஷாலும் சந்துருவும் உணவருந்தினர். இருவரும் பேசியபடி நிதானமாக உண்டனர். இதற்காகத்தான் தர்மா விஷாலை நிறுத்தி வைத்தான். விஷால் இருந்தால் சந்துரு இயல்பாக இருப்பான்.
“அக்கா நீயும் சாப்பிடு. நான் எடுத்திட்டு வரேன்.”
“இருக்கட்டும் டா… நான் பிறகு உன்னோட சாப்பிடுறேன்.” என்றாள் அருணா. கடைசியாக ஜமுனா, கீர்த்தி, தர்மா, அருணா சேர்ந்து அமர்ந்து உண்டனர். நாயகி ஏழு மணிக்கெல்லாம் கணவருக்கு உணவு கொடுத்து தானும் உண்டு விடுவார்.
உண்டு முடித்ததும் பிள்ளைகள் வெளியே விளையாட வேண்டும் என… அதனால் வீட்டின் பக்க வாட்டில் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றனர். ரித்விகா பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள… தர்மா, அருணா, சந்துரு, விஷால் நால்வரும் விளக்கு வெளிச்சம் இருக்கும் இடத்தில் புல் தரையில் அமர்ந்தனர்.
விஷால் அருணாவையும், சந்தருவையும் கிண்டல் செய்து ஓட்டிக் கொண்டிருந்தான்.
“உங்களை மாதிரி ஒரு கூல்லான ஆளை நான் பார்த்ததே இல்லை மச்சான். எதுக்கும் டென்ஷன் ஆகிறது இல்லை. உங்களை மாதிரி தான் நானும் இருக்கணும்னு நினைக்கிறேன், ஆனா எங்க இருக்க விடுறாங்க.” என விஷால் அண்ணனை ஓரக்கண்ணால் பார்க்க, அவன் தன்னைத் தான் சொல்கிறான் எனப் புரிந்தும், தர்மா புன்னகை மாறாமல் தான் இருந்தான்.
“நீ இவரை மாதிரி இருக்கனுமா…. நெஞ்சடைக்குது தண்ணி கொடுங்கன்னு சொன்னா… செத்த பிறகு தான் கொண்டு வருவார். அவ்வளவு நிதானம் உங்க அத்தான். நமக்குதான் கடுப்பாகும். இதுல உனக்குப் பெருமை வேற….” என அருணா சொல்ல, எல்லோரும் சிரித்தனர். அப்போது கீர்த்தி வர, மனைவியைப் பார்த்ததும் தர்மா கையை நீட்ட, கணவனின் கையைப் பற்றியவள், அவன் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.
தர்மா அருணாவிடம், இன்று கீர்த்தி அவள் அம்மாவைப் பார்த்ததும், அவர் பேசாமல் சென்றதும், அதனால் மனைவி வருத்தத்தில் இருப்பதும் சொன்னான்.
“நீ இப்ப சொல்லு… நாம குடும்பத்தோட உங்க வீட்டுக்கு போய் என்னதான் சொல்றீங்கன்னு ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு வரலாம். எங்களை எல்லாம் பார்த்த பிறகும், அவங்க எப்படிப் பேசாம இருக்காங்கன்னு பார்க்கலாம்.” கீர்த்தியை இயல்பாக்க அருணா பேச….
“நீங்க கூட எங்க வீட்டுக்கு வர வேண்டாம். எங்க அண்ணனை வேணா வீட்டோட மாப்பிள்ளையா வச்கிக்கோங்கன்னு சொல்லி விட்டுட்டு வந்திடலாம்.” என விஷால் அதை அவனுக்குச் சாதகமாக்க….
“என்ன டா இவன் இப்படிச் சொல்றான்.” என அருணா தர்மாவைப் பார்க்க…
“என்னை விட்டா இவனைக் இங்க கேள்வி கேட்க ஆள் இல்லை. அதனால என்னைப் பார்சல் பண்ணி அனுப்ப பிளான் பண்றான்.” எனத் தர்மா சொன்னதும், விஷால் அப்படித்தான் என்பது போல இருக்க…
“ஏன் டா ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க? எந்நேரமும் உங்களுக்குள்ள சண்டைன்னு பாட்டி சொல்லி வருத்தப்படுறாங்க.” என அருணா கணவனைப் பார்க்க, அவன் நக்கலாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.
“அடுத்தவங்க உங்களைப் பார்த்து சிரிக்க இடம் கொடுக்காதீங்க. ரெண்டு பேரும் ஒத்துமையா இருங்க டா.” என்றால் அருணா நறுக்கென்று கணவனுக்கும் உறைக்கும்படி. அதைக் கேட்டு சந்துருவின் முகம் மாறியது.
“அக்கா, நான் சொன்னா கேட்க மாட்டேங்கிறான். நீயாவது இவனுக்குச் சொல்லிட்டுப் போ… ஒழுங்கா சிமெண்ட் கம்பெனிக்கு போய் வேலையைப் பார்க்க சொல்லு…காரணம் இல்லாம நான் எதுவும் சொல்ல மாட்டேன்.”
“அதெல்லாம் அவன் இனி பொறுப்பா இருப்பான். என்ன தம்பி இனி கம்பெனிக்கு போவ தான…” என்றதும், விஷால் பொத்தம் பொதுவாகத் தலையசைத்து வைக்க… அதன் பிறகும் வெகு நேரம் உட்கார்ந்து அரட்டை அடித்துவிட்டே எழுந்தனர்.
சிரிக்கச் சிரிக்கப் பேசுவதில் அருணாவை மிஞ்ச ஆள் இல்லை. எல்லோருக்கும் சிரித்துச் சிரித்து வயிறு வலி வந்திருக்க… “இப்படிச் சிரிச்சே ரொம்ப நாள் ஆகுதுக்கா.” எனத் தர்மாவும், “அக்கா நீ இங்கயே இருந்திடுக்கா.” என் விஷாலும் சொல்ல…
“பொண்ணுங்க பிறந்த வீட்ல மட்டும் எப்பவுமே, இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டு போன்னு சொல்லும் போதே கிளம்பிடனும். அதுதான் மரியாதை.”
“வர்றோம், எல்லோரையும் பார்க்கிறோம், சந்தோஷமா இருக்கிறோம். அதோட கிளம்பிடனும். அதுதான் எல்லோருக்கும் நல்லது.” என, மற்றவர்களுக்கும் அது சரியாகவே பட்டது.
அன்று நல்ல மனநிலையிலேயே அனைவரும் உறங்க சென்றனர்.