சாரல் மழையே

 

அத்தியாயம் 3
தர்மாவின் அலுவலகம் வழக்கம் போலப் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. ஒரு இருக்கையில் இருந்து மற்றொன்றிற்கு என ஆட்களின் நடமாட்டம். விடாது அழைக்கும் தொலைபேசி அழைப்புகள்… அதை உடனே ஏற்கும் பணியாளர்கள் என வேலைப் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. 

கீர்த்தியைப் பார்த்ததும் தொலைபேசியில் அழைப்பில் இருந்தாலும், மேடம் எனக் கையசைத்தவர்களுக்குப் பதிலுக்குத் தானும் கையசைத்தவள், மற்ற நாட்களாக இருந்தால்… நின்று எல்லோரையும் நலம் விசரித்திருப்பாள். ஆனால் இன்று இருந்த மனநிலையில நேராகக் கணவனின் அறைக்குச் சென்றவள், கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள். 

மனைவியை எதிர்பாராத தர்மா, “ஹே என்ன திடிர்னு இந்தப் பக்கம்.” என, அவனையும் மீறி குரலில் துள்ளல் வெளிப்பட… அங்கிருந்த உதவியாளர் மாதவி கூட அவனை ஆச்சர்யமாகப் பார்க்க, கீர்த்தி மாதவியைப் பார்த்து கடமைக்காகப் புன்னகைத்தவள், எதுவும் பேசாது அறையில் இருந்து சோபாவில் சென்று உட்கார்ந்து கொண்டாள். 

உடனே மனைவியின் அருகே செல்ல முடியாமல் வேலைகள் இருக்க… “இன்கம் டாக்ஸ் பைல் பண்ண தேவையானது இருக்குன்னு நினைக்கிறேன். இதெல்லாம் ஆடிடருக்கு அனுப்பிடுங்க.” என்றவன், மாதவி எழுந்து வெளியே செல்லும் வரை காத்திருந்தவன், “அபி ஸ்கூல்ல இருந்து வந்து உன்னைத் தேடுவாளே… பார்த்துக்கச் சொல்லி அம்மாவுக்குச் சொல்லிட்டியா?” என்றான். 

“நான் சொல்லலை நீங்க சொல்லுங்க.” என்றதும், ஜமுனாவை அழைத்தவன், கீர்த்தி இங்கே வந்திருப்பதாகச் சொல்லிவிட்டு வைத்தான். 

தர்மாவுக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க… அவனுக்கு வேலை அதிகம் இருக்கும் எனக் கீர்த்திக்கு தெரியும். இப்போது இங்கே வந்திருக்கக் கூடாது என நினைத்தவள், 
“நான் கிளம்புறேன்.” என எழுந்து கதவின் அருகே செல்ல… 

“இருங்க சார் திரும்பக் கூப்பிடுறேன்.” என அலைபேசியை வைத்தவன், “கீர்த்தி, நீ இப்ப இங்க இருந்து போனா… எனக்கு ஒரு வேலையும் ஓடாது. பிறகு உன் இஷ்டம்.” என அழுத்தம் திருத்தமாகச் சொல்ல… கீர்த்திச் சென்று மீண்டும் சோபாவில் உட்கார்ந்து விட்டாள். 

தர்மா சற்று முன் துண்டித்த நபருக்கு மீண்டும் அழைத்துப் பேசிவிட்டு வைத்தவன், இனிமேல் யார் அழைத்தாலும் மேனேஜருக்கு செல்லும்படி கால் டைவேர்ட் செய்துவிட்டு, இண்டர்காமில் அழைத்து அவரிடமும் சொல்லிவிட்டு, பிறகே மனைவியின் அருகே உட்கார்ந்தவன், “இனி எந்தத் தொந்தரவும் இருக்காது சொல்லு.” என, 

“இன்னைக்குக் கிளாஸ் முடிச்சிட்டு ஷாப்பிங் போனேன். அங்க அம்மாவைப் பார்த்தேன். ஆனா அவங்க என்னை மதிக்கக் கூட இல்லை. எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?” எனச் சொல்லும் போதே கீர்த்தியின் குரல் உடைய…. அவள் மேற்கொண்டு பேச முடியாமல் நிறுத்த, தர்மா மனைவியின் கையை ஆறுதலாக பற்றித் தட்டிக் கொடுத்தான். 

“அவங்க இடத்தில இருந்து யோசி கீர்த்தி. உனக்குப் பெரிய இடத்தில மாப்பிள்ளை பார்த்து வச்சிருந்தாங்க. ஆனா நீ என்னைக் கல்யாணம் பண்ணிகிட்ட அவங்களுக்கு அந்தக் கோபம் இருக்கும் தானே…” 

“எத்தனை நாள் தர்மா? அபி பிறந்தும் பார்க்க வரலை. என்னைக் கூட விடுங்க. அபியை பார்க்கனும்னு அவங்களுக்குத் தோணலையா? எனக்கு அதுதான் வருத்தம். இனி அவங்களே பேசினாலும், நான் அவங்க கூடப் பேச மாட்டேன்.” 

“அப்படிச் சொல்லாத கீர்த்தி. நாம நல்லா இருக்கனும்னு நம்ம அம்மா அப்பாவை தவிர இந்த உலகத்தில அதிகமா யாருமே நினைக்க மாட்டாங்க.” 

“அவங்க உன் கல்யாணத்தைப் பத்தி ஏகப்பட்ட கனவுகள் வச்சிருந்திருப்பாங்க. அது நிறைவேறலை, அந்த வருத்தம் இருக்கும் தானே மா.” 

“இன்னும் எவ்வளவு நாள்?” 

“நம்பப் பொண்ணு நல்ல ஆளைத்தான் திருமணம் செஞ்சிருக்கான்னு நம்பிக்கை வரும்வரை.” 

“நல்ல மாப்பிள்ளைன்னு அவங்க சில விஷயங்கள் வச்சிருக்காங்க பாருங்க. அதுல நீங்க எப்பவுமே வர மாட்டீங்க. அதனாலதான நான் வீட்டை விட்டு வந்தேன்.” 

“நீ எடுத்த முடிவு தவறு இல்லைன்னு நீ நம்புற தான….” 

ஆமாம் என்பதாகக் கீர்த்தித் தலையாட்ட… அப்ப கண்டிப்பா ஒருநாள் அவங்க உன்னைப் புரிஞ்சிப்பாங்க. நீ சந்தோஷமா இருந்தாலே… அவங்க மனம் மாறும் கீர்த்தி. 

சரி என்பதாகத் தலையசைத்தாலும், அவளின் மனம் படும் பாடு தர்மா அறிந்ததே. பெற்ற தாயயை நேரில் பார்த்து பேச முடியாமல் போனது அவளுக்கு எவ்வளவு துன்பம் என அவன் அறியாமல் இல்லை. 

“சாப்பிடலாமா? இன்னைக்குக் கணேசன் அண்ணன் என்ன சமைச்சிருக்கார் தெரியலை.” என்றவன், கைபேசியில் சமையல் அறையைத் தொடர்பு கொண்டு, “கணேஷ் அண்ணன் சாப்பாடு ரெடியா? கீர்த்தி வந்திருக்கா? என்ன இருக்கோ கொண்டு வாங்க. இருக்கிறதை பகிர்ந்து சாப்பிடுறோம்.” என்றான். 

தர்மாவுக்கு வெளியில் சென்று உணவு உண்ண எல்லாம் நேரம் இருக்காது. தினமும் வெளியே உண்ணுவதும் முடியாது. வீட்டிற்கு வந்து போகும் தூரமும் இல்லை. அதனால் அலுவலகத்திலேயே ஒரு சின்னப் பகுதியை சமையல் அறையாக ஒதுக்கி அதற்கு ஒரு சமையல்காரரையும் நியமித்து இருந்தான். 

கணேசன் பதினோரு மணி போல வந்தால்… அலுவலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் அவரவர் விருப்பத்திற்கு டீயோ காபியோ போட்டு கொடுத்து விட்டு, தர்மாவுக்கு மதிய சமையல் செய்பவர், மாலை எல்லோருக்கும் திரும்ப டீ காபியோடு எதாவது எளிமையான சிற்றுண்டியும் செய்து கொடுத்து விட்டு சென்று விடுவார். 

இரண்டு வகைக் காய் கறியோடு சப்பாத்தி அல்லது சிவப்பு அரிசி சாதம். அதோடு குடிக்க மோர். இதுதான் தர்மாவின் மதிய உணவு. அன்று சப்பாத்தி செய்திருந்தார். கீர்த்தி வந்திருக்கிறாள் என்றதும் மேலும் சிலது சுட்டுக் கொண்டு வந்தார். 

உணவு உண்ணும் போதும், கீர்த்தி அமைதியாகவே உண்ண… “எனக்கு ஒன்னும் இல்லை… இப்பவும் உங்க வீட்டுக்குப் போகணும்னா சொல்லு. நான் ரெடி தான். உன் அப்பா அம்மா தான… அவங்க நம்மைப் பேசினாலும் பொறுத்துக்கலாம்.” எனத் தர்மா மனைவியைப் பார்த்துச் சொல்ல… 

“வேண்டாம், நான்தான் அடிக்கடி போன் பண்றேனே… என்கிட்டையே இன்னும் பேச மனம் வரலை. நேர்ல போய் உங்களை அவமானப்படுத்தினா எனக்குக் கஷ்டமா இருக்கும். அவங்களே மனசு மாறி கூப்பிடட்டும்.” என்றாள். 

இருவரும் உண்டு முடித்ததும், “கொஞ்ச நேரம் உட்காரு, நான் வேலையை முடிச்சிட்டு உன்னோடவே வீட்டுக்கு வந்திடுறேன். இன்னைக்கு அக்கா வர்றா இல்ல… ” எனக் கணவன் நினைவுபடுத்தியதும், தலையில் கை வைத்த கீர்த்தி, “அதுக்குதான் ஷாப்பிங் போனேன். அதையே மறந்திட்டேன்.” 

“நான் போய்க் கொஞ்சம் சாமான்கள் வாங்கணும். வாங்கிட்டு வந்திடுறேன். நீங்க அதுக்குள்ள உங்க வேலையை முடிச்சிடுங்க.” 

“ஓகே அப்படியே பண்ணிடலாம்.” 

கீர்த்தித் திரும்பி வர இரண்டு மணி நேரங்கள் ஆகியது. நாத்தனாருக்குப் பிடித்தது, அவர் பிள்ளைகளுக்குப் பிடித்தது. தீபாவளி வேறு வருகிறது அதனால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளையும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். 

அவள் வருவதற்குள் தர்மாவும் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து வைத்திருக்க… கணவன் மனைவி ஒன்றாகவே வீடு திரும்பினர். 

தர்மா வீட்டிற்கு வந்ததும் ஹாலில் உட்கார்ந்து அலுவல் வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் தான் நாயகியும் உட்கார்ந்து இருந்தார். 

“என்ன கீர்த்தி முகமே சரியில்லை.” என ஜமுனா மகனிடம் விசாரிக்க… அவள் அம்மாவை கடையில் பார்த்ததைச் சொன்னான். 

“நாமும் வளைகாப்பு முதல் குழந்தை பிறந்தது, பேர் வச்சது, அபிக்கு காது குத்தினதுன்னு ஒன்னு விடமா சொல்லியாச்சு. இன்னும் எத்தனை நாள் கோபமா இருப்பாங்களாம்.” 

“ஸ்ருதி அவ அம்மா வீட்டுக்கு போகும் போதெல்லாம் கீர்த்தி முகத்தில ஏக்கம் தெரியுது. அதுதான் நான் உன்னை வெளியில கூடிட்டுப் போகச் சொல்வேன்.” 

“அவங்க பொண்ணுதானே உன்னைக் கல்யாணம் பண்ணிகிறேன்னு வந்தா… நீ அப்பவும் அவங்க வீட்ல கீர்த்தியை கூடிட்டு போய் முறையா பொண்ணு கேட்ட தான…அவங்க சம்மதிக்களைனாலும் கல்யாணம் முறையா தான நடந்தது. என்னவோ ஓடிப் போன மாதிரி அவகிட்ட முகத்தி திருப்பி இருக்காங்க.” 

“இவங்க உனக்கு மேல எல்லாம் என்ன மாப்பிள்ளை பார்த்திருப்பாங்க. எனக்கு இன்னும் அவங்க கோபத்துக்கான காரணம் புரியவே இல்லை.” 

“அம்மா, அவங்க மினிஸ்டர் பையனை பார்த்து வச்சிருந்தாங்க. நம்ம வசதி எல்லாம் அவங்க முன்னாடி ஒண்ணுமே இல்லை.” 

“அவங்க நினைச்சிருந்தா அவங்களுக்கு இருந்த அதிகார பலத்துக்கு, நம்மை ஒன்னும் இல்லாம செஞ்சிருக்கலாம். ஆனா அவங்க அப்படி எதுவும் செய்யலை. ஒதுங்கிதான் இருக்காங்க.” 

“நீ என்ன வேணா சொல்லு… ஆனா இன்னும் இப்படி இருக்கிறது நியாயமே இல்லை.” 

“நம்ம வீட்லயும் தான் சூரியா, ஸ்ருதியை காலேஜ் படிக்கும் போதிருந்து, லவ் பண்ணி கல்யாணம் பண்ணான். அவங்க நம்மை விட வசதிக் குறைவுதான். நாம அதெல்லாம் பார்த்தோமா என்ன? பிள்ளைங்க விருப்பம் தானே முக்கியம்னு நினைச்சோம்.”