சடங்கு முடிந்து அபி எழுந்துகொள்ள… “உங்க அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ.” என நாயகி சொல்ல… அபி சென்று தர்மாவின் காலில் விழ. மகளைத் தடுத்தவன், அவளை மடியில் உட்கார வைத்துக் கொண்டான். எத்தனை வயதானாலும் என் மகள் எனக்குக் குழந்தை தான் என்பது போல….
“அப்பா நல்லா இருக்கா…” என அபி புடவையைக் காட்டிக் கேட்க…. பேத்திக்கு நவீனா லட்சத்தில் வாங்கி இருந்த புடவை… அவனுக்கு எங்கே விலை தெரியும். மகளின் பூ உடலை தழுவியிருந்த புடவையைப் பார்த்தவன், “நல்லா இருக்கு டா… உனக்கு எது போட்டாலும் நல்லா இருக்கும்.” என்றான்.
அபிநயா பள்ளிக்குச் சைக்கிளில் செல்ல ஆசைப்பட… பிள்ளைகளின் நியாமான ஆசையைத் தர்மா கண்டிப்பாக நிறைவேற்றுவான் எனக் கீர்த்திக்கு தெரியும்.
“மெயின் ரோடு பா… நிறைய வண்டி வரும். இவ வீட்டுக்கு வர்ற வரை நான் பயந்திட்டே இருக்கணும்.” எனக் கீர்த்திக் கவலைப்பட… நான் பார்த்துக்கிறேன் என்றவன், மகளைச் சைக்கிளில் செல்ல விட்டு, அவன் பின்னே பைக்கில் சென்றான்.
மகள் நன்றாக ஓட்டுகிறாள். துணைக்கும் தோழிகள் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு, மறுவாரத்தில் இருந்து அவளைத் தனியே செல்ல அனுமதித்தான்.
எப்போதுமே நாம் கூட இருக்க முடியாது. அதே சமயம் பிள்ளைகளுக்குச் சூழ்நிலையைத் தனியாகக் கையாள தெரிய வேண்டும் என நினைப்பான்.
வார இறுதியில் அபிநயாவை தர்மாவே சிலம்பம் வகுப்பு அழைத்துச் செல்வான். அவர்கள் வீட்டில் இருந்து தொலைவு தான். அதனால் அவனே அழைத்துச் செல்வான். சற்று ஒடிசலான உடல்வாகு தான் அபிக்கு. அவள் சிலம்பம் சுற்றும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும்.
வளர்ந்த பிறகு கார்த்திகேயனும் கற்றுக்கொள்ள… இதெல்லாம் நமக்குச் சரி வராது என விஷாகன் மறுத்துவிட்டு பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டான். விஷகனுக்கு உடம்பு நோக கூடாது.
வளர வளர விஷாகன் தனிப் பாதையில் சென்று கொண்டிருந்தான்.
எல்லோரும் இட்லி உண்டால் விஷகனுக்குத் தோசை வேண்டும். “ஏன் இட்லி சாப்பிட்டால் என்ன?” எனத் தர்மா கேட்க,
“இட்லி சாப்பிட்டா கையில ஓட்டும்.” என அவன் காரணத்தைக் கெட்டி தலை சுத்தி போனது.
“என்னது ஓட்டுதா? “ஏன் உங்க அம்மா தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் ஏதும் கொடுக்கலையா?” என்றால்…
“எனக்கு இட்லி சாப்பிட பிடிக்கலை.” என்பான்.
“எல்லோரும் சாப்பிடுறாங்க இல்ல. உனக்கு மட்டும் என்ன?” என்பான் தர்மா.
“எல்லோரும் சாப்பிட்டா நானும் சாப்பிடனுமா?” என இடக்காகக் கேட்டு வைப்பான் விஷாகன்.
முன்பு கீர்த்தியுமே பசித்தால் உண்பான் என விட்டு விடுவாள். விஷாகன் வேண்டாம் என்றும் சொல்ல மாட்டான். ஆனால் பேருக்கு இரண்டு இட்லியோடு எழுந்து விடுவான். கீர்த்திக்கு மனம் கேட்காது. அதனால் இப்போது இட்லி செய்தால் தோசையும் ஊற்றுவாள். அவனுக்கு அவித்த முட்டை பிடிக்காது. அதுவும் வாயில் ஓட்டும். அதனால். ஆம்லெட் தான் போட வேண்டும். அதே போலப் பூரியும் பிடிக்காது. பூரி செய்யும் அன்று அவனுக்குச் சப்பாத்தியும் செய்வாள். இதெல்லாம் தர்மாவுக்குப் பிடிக்காது.
“இருக்கிறதை சாப்பிட்டா என்ன?” என்பான்.
“ப்ளீஸ் தர்மா, அவன் கொஞ்சம் தான் சாப்பிடுவான். சாப்பிட்டு போறான்.” என்பாள் கீர்த்தி.
சின்ன வயதில் பிள்ளைகளை நாம் நினைத்தது எல்லாம் செய்ய வைக்க முடியும். ஆனால் வளர்ந்த பிறகு முடியுமா?
அப்பாவுக்கும் மகளுக்கும் ஒட்டுதல் அதிகம். இருவரும் மனம் விட்டுப் பேசுவார்கள். சரியான விளக்கங்கள் சொன்னால் போதும், அபி அதை அப்படியே கடைசி வரை கடைபிடிப்பாள். அவளை இன்னொரு தர்மா என்றே சொல்லலாம்.
கார்த்திகேயனுக்குத் தர்மா மீது மரியாதை கலந்த பயம் உண்டு. அதிகம் பேச மாட்டான். அப்பா சொன்னால் நல்லதுக்கு என அப்படியே ஏற்றுக் கொள்வான்.
விஷாகன் தர்மா சொல்வதெல்லாம் கேட்டுக் கொள்வான். ஆனால் அதில் அவனுக்கு ஒத்து வருவதை மட்டுமே எடுத்துக் கொள்வான்.
ஒருமுறை தர்மாவே மகன் பேசுவதைக் கேட்டு வாயடைத்துப் போனான். எப்போதுமே அப்பாக்கள் சொல்வதைதான் மகன்கள் கேட்க வேண்டும் என்று இல்லை. மகன் சொல்வதை அப்பாக்களும் கேட்கலாம்.
ஈசனுக்கே பாடம் சொன்ன முருக கடவுள் இல்லையா? அப்பனுக்கே பாடம் சொன்னான் மகன்.
அபி பள்ளி இறுதியிலும், கார்த்திகேயன் மற்றும் விஷாகன் எட்டாம் வகுப்பிலும் இருந்தனர்.
மற்ற இருவரும் ஒழுங்காகச் சொல் பேச்சு கேட்டு நடக்க… இவன் மட்டும் இப்படி இருக்கிறானே என நினைத்த தர்மா, “சொல் பேச்சு கேட்க மாட்டியா?” என விஷாகனிடம் கேட்க…
“உங்க பாலிசி நீங்கதான் ஃபாலோ பண்ணனும். நான் ஏன் ஃபாலோ பண்ணும்.” என்றான்.
“இது ஸ்கூல்லா… இல்ல மிலிட்டரி காமப்பா? வீடு தானே… என் இஷ்டதுக்குதான் நான் வீட்ல இருப்பேன். உங்க இஷ்டத்துக்கு இருக்க முடியாது.”
“நல்லா பேசுற டா நீன்னு… மூன்னு பேரும் ஒன்னு தெரிஞ்சிக்கோங்க… நீங்க படிக்கலைனா கூட நான் கவலைப்பட மாட்டேன். ஆனா ஒழுக்கம் தப்பிப் போனா பொறுத்துக்க மாட்டேன்.” என்றான் தர்மா கோபமாக.
“ஏன் பா எங்க மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? உங்க பேச்சு கேட்டு நடக்கலைனா ஒழுக்கமா இல்லைன்னு அர்த்தமா?” என விஷாகன் பேச பேச… தர்மாவுக்கும் அது தானே எனத் தோன்றியது.
எப்போதுமே தர்மா தான் சொல்வது மட்டும் தான் சரி என நினைக்க மாட்டான். ரொம்பவும் நாம் அவர்களை அடிக்கி வைக்கிறோமோ…. ஒருவர் சொல்லி தெரிவதை விட… அவர்களே சரி எது, தவறு எது என உணர்ந்து நடப்பது தானே நல்லது.
இன்று இவன் என் கண் முன் ஒழுக்கமாக இருந்துவிட்டு வெளியே சென்று தவறு செய்தால் எனக்குத் தெரியுமா? நான் இப்படித்தான் என அவன் வெளிப்படையாக இருப்பது நல்லது தானே எனத் தர்மாவுக்கும் தோன்றியது.
“சரி… இனி நான் நீங்க இப்படி இருங்க அப்படி இருங்கன்னு சொல்ல மாட்டேன். உங்களுக்கே நல்லது கெட்டது தெரியுற வயசு பார்த்து இருந்துக்கோங்க.”
கணவன் சொன்னதில் கீர்த்திக்கும் உடன்பாடு இருக்க…. இரவு அவர்கள் அறையில், “அவங்க உங்க ரத்தம் தர்மா. உங்களைப் பார்த்து வளர்ந்திருக்காங்க. தப்பு பண்ண மாட்டாங்க. கவலைப்படாம இருங்க.” என்றால் கீர்த்தி.
“அவங்க தப்பு பண்ணுவாங்கன்னு மட்டும் நான் அவங்ககிட்ட கண்டிப்பா இல்லை. வாழ்க்கையில நாளைக்கு என்ன நடக்கும்ன்னு யாருக்கும் தெரியாது. எங்க அப்பா என்னைத் திடிர்னு விட்டுப் போன போது, நான் என்னைச் செய்யுறதுன்னு தெரியாம நின்ன மாதிரி என் பிள்ளைகள் நிற்க கூடாது. அவங்களுக்குத் தனியா நிற்க தெரியனும் கீர்த்தி.” என்றான்.
“ஏன் தர்மா அப்படியெல்லாம் நினைக்கிறீங்க? அப்படியெல்லாம் நடக்காது. இனி இப்படியெல்லாம் பேசாதீங்க.” என்றால் கீர்த்தி.
மறுநாள் தர்மா அவசரமாக வெளியே செல்ல வேண்டியது இருந்ததால்… பைக்கில் சென்றான். ஒரு ஆட்டோ டிரைவர் கண்டபடி ஓட்டி வந்து தர்மாவின் பைக்கில் இடித்து விட… தடுமாறி ரோட்டில் விழுந்து தர்மாவுக்குக் காலில் நல்ல அடி.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் விஷாலை அழைத்துச் சொன்னவன், வீட்டுக்கு சொல்லவில்லை. விஷால் உடனே மருத்துவமனை சென்றான். நல்லவேளை எலும்பு முறிவு எதுவும் இல்லை. காலில் பெரிய கட்டுடன் வீட்டுக்கு வந்தவனைப் பார்த்து எல்லோரும் பயந்து விட்டனர்.
கீர்த்திப் பிள்ளைகளுக்காக அழுகையை அடக்கி நிற்க…. ஜமுனா நாயகி இருவரும் பெரிய அடி இல்லாமல் இதோடு போனதே எனக் கடவுளை சரணடைய…. அபிக்கு அவள் தந்தையைப் அப்படிப் பார்த்ததும் தாங்கவே முடியவில்லை. தேம்பித் தேம்பி அவள் அழுக… அவள் மட்டும் அல்ல… கார்த்திகேயன் விஷாகன் இருவரும் கண்ணீரில் கரைந்தனர்.
“இப்படி என்னைச் சுத்தி உட்கார்ந்து அழுதிட்டு தான் இருக்கப் போறீங்களா… எனக்கு இப்படி அழுகற பிள்ளைங்க வேண்டாம். அடுத்து என்னன்னு பார்க்கிற பிள்ளைங்க தான் வேணும்.”
“நீங்க இப்படி என்னைச் சுத்தி உட்கார்ந்து அழுகிறது எனக்குச் சந்தோஷமா இல்லை. வருத்தமா இருக்கு.” தர்மா சொன்னதும், மூவரும் அழுகையை நிறுத்தி கண்ணீரை துடைத்துக் கொண்டனர்.
தர்மா ஆபீஸ் போக முடியாமல் வீட்டில் இருக்க… அப்போது அபியும் பொதுப் பரிட்சை முடிந்து வீட்டில் இருந்ததால்… அவளே தந்தையின் அலுவலகம் சென்று பார்த்துக்கொள்ள ஆரம்பித்தாள். தர்மாவும் வீட்டில் இருந்தபடி மகளுக்கு வேலைகளைச் சொல்லிக் கொடுத்தான்.
மகன்களுக்குத் தான் தன்னுடைய தொழில் எனத் தர்மா நினைக்கவில்லை. மகன் மகள் என்ற பாகுபாடு அவனுக்கு இல்லை. மூவருமே தன்னுடைய வாரிசுகள் தான். அதில் அபி அவனுடன் பிஸ்னசில் இணைந்தால் மகிழ்ச்சி தான். அபியும் அவள் அப்பா வழியைத்தான் தேர்ந்தெடுத்தாள்.