அடுத்த இரண்டு வருடங்களில் இரவு உறக்கத்திலேயே ரங்கநாதன் தவறி இருந்தார். தர்மா தான் இடிந்து போய் உட்கார்ந்து விட்டான். தினமும் காலை அவரைப் பார்க்காமல் அவன் நாள் தொடங்கியதும் இல்லை. அதே போலப் படுக்கும் முன் அவரைச் சென்று பார்க்காமல் இருந்ததும் இல்லை. அவனுக்குப் பெரிய பலமாக இருந்தவர்.
அண்ணனின் நிலை உணர்ந்து தம்பிகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டனர்.
“இருக்கிறவரை நீ அவரை நல்லா பார்த்துகிட்ட… அவருக்கு ரொம்ப முடியலை. இனியும் இருந்தா கஷ்டம்தான் பட்டிருப்பார். உங்க எல்லார் கல்யாணத்தையும், கொள்ளு பேரன், பேத்தி எல்லாம் பார்த்திட்டார். இதை விட என்ன வேணும். விடு தர்மா அவரையே நினைச்சிட்டு இருக்காத.” என நாயகியே அவனைத் தேற்றும்படி ஆனது.
“பெரிய பையன் ஆகிட்ட… இன்னும் உங்க அம்மாவோட படுப்பியா?”
“நீங்களும் தான் பெரிசா இருக்கீங்க. நீங்க ஏன் எங்க அம்மாவோட படுக்கிறீங்க.” என விஷாகன் தர்மாவின் மானத்தை வாங்க…. மகன் பேசுவதைக் கேட்டுச் சிரிப்புதான் தர்மாவுக்கு. இருந்தாலும் முகத்தைக் கோபம் போலவே வைத்திருந்தான். இந்த வாக்குவாதம் நடக்கும் போது விஷாலும் இருந்தான்.
“பாருங்க எப்படி அவங்க அப்பாகிட்ட எக்கிட்டு பேசுறான்.” என ஜமுனா சொல்ல…
“அப்படியே இவனை மாதிரியே இருக்கான். நல்லா வச்சோம் பாரு பேரு விஷாகன்னு. இந்தப் பய விஷாலைப் போலவே வந்திருக்கு.” என நாயகி நொடிக்க…
“இதென்னடா வம்பு… நான் பெத்தது பண்றதுக்குத் தான் நான் பொறுப்பு. இவர் பெத்தது பேசினதுக்கு நான் எப்படிப் பொறுப்பு ஆவேன்.” என நினைத்த விஷால்,
“கெழவி ரொம்ப ஓவரா போறீங்க.” என, ஆமாம் உன்னை மாதிரி தான் எதிர்த்து பேசுறான்.” என்றார் நாயகியும் விஷாலை முறைத்துக் கொண்டு.
மாலை இங்கே விளையாட வந்திருந்த மகனை அழைக்கச் செல்ல வந்திருந்தான். அப்போதுதான் உள்ளே அப்பாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் நடக்க… இவன் தலையும் உருண்டது.
“இந்தப் பையன் என்ன பாயிண்டு பாயிண்டா பேசுறான். நமக்கு எல்லாம் அப்ப இப்படிப் பேச தெரியலைப் பா…” என்று வேறு நினைத்துக் கொண்டான்.
அவன் பேசிய பேச்சில் தர்மாவே இதற்கு மேல் பேசினால் நம் மானம் இன்னும் கப்பல் ஏறும் என விட்டுவிட…. கார்த்திகேயன் மட்டும் மாடியில் இவர்கள் அறைக்குப் பக்கத்து அறையில் தனியாகப் படுத்துகொள்ள… அவன் மட்டும் தனியாகப் படுக்கிறான் என நினைத்தானோ என்னவோ விஷாகனும் சென்று அண்ணனுடன் படுக்க ஆரம்பித்தான். விஷாகனை யாரும் எதுவும் கட்டயபடுத்திச் செய்ய வைக்க முடியாது அவனாக நினைத்தால் தான் உண்டு.
அபி ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது பெரியப்பெண் ஆகிவிட… அம்மாக்களுக்கே வரும் பதட்டம் கீர்த்திக்கு. மாதவிடாய் காலங்களை மகள் எப்படிச் சமாளிப்பாள்? என நிறையக் குழப்பங்கள். தர்மா பதட்டப்படாமல் இருந்தான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா… அபிக்கு நல்லா விவரம் தெரியும். அதெல்லாம் அவ சமாளிச்கிப்பா.” என்றான்.
அபி வகுப்பில் ஐந்தாம் வகுப்பிலேயே பெரிய பெண் ஆனவர்கள் எல்லாம் உண்டு. அதனால் அவளுக்கு இது ஒன்றும் மிரட்டச்சியைத் தரவில்லை. அதனால் பதட்டம் இல்லாமல் நிதானமாக இருந்தாள்.
வீட்டில் சடங்கு வைக்க வேண்டும் என்று சொல்ல… தர்மாவுக்குக் கண்டிப்பாக வைக்க வேண்டுமா என யோசனைதான். அபிக்கு விருப்பம் என்றால் செய்யலாம் என்றான். இவர்கள் வீட்டு ஆட்களே அதிகம் தானே. அதோடு கீர்த்தியின் வீட்டினர் என வீட்டிலேயே மூன்றாம் நாள் தலைக்கு தண்ணிர் ஊற்றி அன்றே சடங்கு செய்வோம் என ஏற்பாடானது.
அபிநயா வீட்டின் முதல் பெண் வாரிசு அல்லவா … சித்தப்பாக்கள், சித்திமார்கள் எல்லாம் விஷயம் கேள்விபட்டத்தில் இருந்து இங்கே தான் இருந்தனர். நவீனாவும் உடனே வந்துவிட்டார். அவர் வந்து அபிக்கு குளிக்க ஊற்றி அறையில் தனியாக உட்கார வைத்து விட்டு, சடங்குக்கு ஏற்பாடு செய்ய உடனே சென்று விட்டார். தாய் மாமன் சீர் செய்ய வேண்டும் அல்லவா….
விஷால் அப்போதே பிரியங்காவை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றான். புதுச் சுடிதார், இனிப்புகள், பழங்கள் எனப் பிரியங்கா வாங்க… அப்போதே அவளை நகையும் எடுக்க வைத்து அழைத்து வந்தான். அவன் சென்று அபியிடம் காட்டி பிடித்திருகிறதா எனக் கேட்க, “நல்லா இருக்கு சித்தப்பா.” என்றால் அபி.
மறுநாளே அருணா மகளை மட்டும் அழைத்துக் கொண்டு வந்தாள். மகன் கரூரில் கல்லூரியில் இந்த வருடம் தான் சேர்ந்திருக்கிறான்.
அருணாவின் மகள் திவ்யாவே அபிக்கு அறையில் வைத்து மருதாணி வைத்து விட… முன்பு போல வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து வீட்டுப் பெண்களும் மருதாணி வைத்துக்கொள்ள…. கீர்த்தியும் வேலை முடித்து வந்து உட்கார்ந்தாள்.
“உங்களைப் போய்க் கேட்டேன் பாருங்க. ரொமாண்டிக்கா எதாவது உங்களுக்கு வருதா?” எனப் பிரியங்கா நொந்து கொள்ள
“என்ன என் தம்பியை பார்த்து இப்படிச் சொல்லிட்ட… அவன் ஸ்கூல் படிக்கும் போது காலேஜ் படிக்கும் போது எத்தனை பேர் என் தம்பி பின்னாடி சுத்தினாங்க தெரியுமா?” என அருணா கேட்க,
“அதுலேயே ஒன்னை கட்டி வச்சிருக்கலாம் இல்ல….” என்றாள் பிரியங்கா.
“உனக்கு என்ன இப்ப மருதாணி வைக்கணுமா? வா வச்சு தொலைக்கிறேன்.” என விஷால் மருதாணி கோனை கையில் எடுத்தவன், பிரியங்கா கையில் கிறுக்கி வைக்க…. எல்லோரும் இது உனக்குத் தேவையா என்பது போலப் பார்த்தனர்.
“நான் வைக்கிறேன் எங்க அம்மாவுக்கு.” என விஷாகன் கிளம்ப….
“எனக்கு வேலை இருக்கு டா..” எனக் கீர்த்தி எழுந்து உள்ளே செல்ல.. அவள் பின்னே விஷாகனும் சென்று விட்டான்.
“இவன் என்ன இப்படி அவங்க அம்மாவை ஒட்டிட்டே இருக்கான். நல்லவேளை எங்க அத்தான் இவனை மூனாவதா பெத்தார். முதல்ல இவன் பிறந்திருந்தா அடுத்தக் குழந்தையே இருந்திருக்காது போல…” எனப் பிரியங்கா சொல்ல…
“நீ எங்க அண்ணனை அப்படி லேசா எல்லாம் எடை போட்டுடாதா… எங்க மூன்னு பேர் கண்ணுலையே விரலை விட்டு ஆட்டினவர்… இவனெல்லாம் அவருக்கு எந்த மூளைக்கு.” என்றான் விஷால்.
“ஆமாம் அவனைச் சொல்றியே…நீ எத்தனை குழந்தை பெத்த?” என அருணா கேட்க, பிரியங்காவுக்கு ஒரு மகன் தான். அதே போல ஸ்ருதிக்கும் ஒரு மகள் தான். சௌமியாவுக்கு மட்டும் இரண்டாவதும் பையன்தான். அவனுக்கு இப்போது நான்கு வயதாகிறது.
“உங்க தம்பி தான் அண்ணி ஒன்னு போதும்னு சொல்லிட்டார்.” எனப் பிரியங்கா சொல்ல… ஏன் என்பது போல அருணா விஷாலைப் பார்க்க…
“அடுத்ததும் பையனா இருந்தா…. அதுதான் வேண்டாம். பெரிசானா சொத்து தகராறு வேற வரும். யாரு பஞ்சாயத்து பண்றது.” என்றான். இவனை என்ன செய்வது என்பது போல அருணா பார்த்தாள்.
மறுநாள் அபியின் சடங்கு நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்துச் சிறப்பாக நடந்தது.
சடங்கு நடக்கும் போது, தர்மா சோபாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மகள் புடவையில் பெரிய பெண்ணாகத் தெரிய… இப்போது தான் மகள் பிறந்து கையில் வாங்கியது போல இருக்க…. அதற்குள் பெரிய பெண்ணானது போல இருந்தது.