சாரல் மழையே 

அத்தியாயம் 24 

கீர்த்தி வெள்ளிக்கிழமை மாலையே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவள் அம்மா வீடு சென்று விடுவாள். நவீனாவே வந்து அழைத்துச் செல்வார். வார நாட்களில் புகுந்த வீடு, வார இறுதியில் அம்மா வீடு என நேரம் சந்தோஷமாகக் கழிந்தது.

தர்மா கீர்த்தியின் பெற்றோருக்கு மருமகன் மட்டும் அல்ல இன்னொரு மகனும் கூட அப்படித்தான் அவனை நடத்தினர்.

“எனக்குப் பிறகு நம்ம குடும்பத்தை யார் பொறுப்பா வழி நடத்துவான்னு எனக்கு ஒரு கவலை இருக்கும். ஆனா இப்ப அப்படி இல்லை.” எனச் சோமசேகர் மருமகனை நினைத்து மனைவியிடம் பெருமைப்பட்டால்….

இன்னொரு பக்கம் தர்மா, “எங்க அப்பா இல்லைன்னு நான் ரொம்பப் பீல் பண்ணியிருக்கேன் கீர்த்தி. ஆனா இப்போ உங்க அப்பாவோட சேர்ந்திருக்கும் போது, எனக்கு அந்த வருத்தம் குறைஞ்சிடுச்சு.” என்பான். 


வினோத்துக்குப் பெரிய இடத்தில் திருமணம் நிச்சயமாகி சிறப்பாக நடந்தது. சோமசேகருடன் திருமண வேலைகளைத் தர்மாவும் பங்கு போட்டுக்கொண்டு செய்தான். கீர்த்தி அவள் அம்மாவுக்கு உதவியாக இருந்தாள். ஆனால் வந்த மருமகள் தர்ஷாவுக்கு, கீர்த்தியின் திருமணத்தைப் பற்றி முன்பே தெரிந்து தானே இருக்கும். அவள் சற்று குறைவாகக் கீர்த்தியை பார்ப்பதாக நவீனாவுக்குத் தோன்ற… என் மகளை ஒருவர் குறைவாகப் பார்ப்பதா என்ற எண்ணத்தில், பக்கத்திலேயே அவர்களுக்கு இருந்த பெரிய அபார்ட்மெண்ட்டில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டார். 


“நானும் உங்க அப்பாவும் தனியாவே இருக்கோம். நீயும் உங்க அக்காவும் எப்போ வேணாலும் வந்து எங்களைப் பார்த்திட்டு போங்க.” என நவீனா சொன்னது சோமசேகருக்குச் சரியாகவேபட்டது.

அடுத்த ஒரு வருடத்தில் ரித்விகாவின் திருமணம் முடிந்து, அவள் கணவனுக்கு வெளிநாட்டில் வேலை என்பதால்… அவளும் அங்கே சென்று விட்டாள். பிரியங்காவுக்குப் பையன் பிறந்து நான்கு மாதங்கள் ஆகிறது.

சௌமியாவுக்குப் பையன் ஸ்ருதிக்குப் பெண். இருவருக்கும் பத்து மாதங்கள் தான் வித்தியாசம். சுனிதா ஓரவஞ்சனையாகப் பேரனை மட்டும் வாஞ்சையாகக் கவனிப்பவர், பேத்தியை எதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்.

இவர் இப்படி நடந்து கொண்டதால் நன்றாக இருந்த சௌமியாவுக்கும் ஸ்ருதிக்கும் இடையே பிரச்சனை வந்தது. அதனால் ஸ்ருதி தனிக்குடித்தனம் செல்வதில் பிடிவாதமாக இருக்க… தர்மா காதுக்கு விஷயம் வர… “உங்களுக்குத் தனிக்குடித்தனம் தானே போகணும். இதோ இந்த இடத்தில வீட்டை கட்டிட்டு வாங்க.” என அவன் வீட்டிற்கு அடுத்து இருக்கும் காலி இடத்தைக் காட்ட…. சூரியாவும் சரியென வீட்டை அங்கேயே கட்டினான்.

அடுத்த ஆறு மாதத்தில் சூரியாவும் ஸ்ருதியும் தங்கள் புது வீட்டிற்குப் பால் காய்ச்சினர். அன்று புது வீடு பால் காய்ச்சி முடித்து அலுவலகம் சென்றிருந்த தர்மா, மதிய உணவுக்கு வீட்டுக்கு வர… சுனிதா பேரனை மொபைலில் விளையாட விட்டுச் சாதம் ஊட்டிக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்த தர்மா அவரை வைத்து வாங்கினான்.

“அவன் செல் இருந்தா தான் சாப்பிடுறான். நான் என்ன பண்றது?” எனச் சுனிதா சொல்ல…

“உங்களுக்கு ஒடி ஆடி ஊட்டிவிடச் சோம்பேறின்னு சொல்லுங்க.” என்றவன், “தனியா இருந்தாலும் பரவாயில்லை… வீட்ல இத்தனை குழந்தைகள் இருக்க…. விளையாடவா ஆள் இல்லை. எதுக்குச் செல் எல்லாம் கொடுத்து பழக்கப்படுத்துறீங்க.” என எல்லோரையும் பார்த்து கேட்க, ஸ்ருதியும், சௌமியாவும் உள்ளே அறைக்குள் சென்று பதுங்கினர்…. ஏனென்றால் அவர்கள் பிள்ளைகள் எப்போதும் செல் வைத்துதான் விளையாடுவார்கள்.

“செல் பேசுறதுக்குதான் இல்லைப்பா…” எனக் கார்த்திகேயன் மழலையில் சொல்ல… ஆமாம் டா கண்ணா என்றான்.

“உங்க பெரியப்பா ஸ்ட்ரிக்ட் ஆபீசர்…. நான் வாங்கி முடிச்சிட்டேன். அடுத்து நீ தான்.” என மடியில் வைத்திருந்த மகனிடம் விஷால் சொல்ல.. அருகில் இருந்த அவன் மனைவி… “அவனை ஏன் திட்டப்போறார். நீங்க ஒழுங்கா இல்லை அதனால திட்டியிருப்பார்.” என்றதும்,

“வா டி என் பொண்டாட்டி. நீ யாருக்கும் தெரியாம செல்ல ரைம்ஸ் காட்டி தானே உன் மகனுக்குச் சோறு ஊட்டுற… அண்ணன்கிட்ட சொல்லவா…” என விஷால் கேட்க, பிரியங்கா அங்கிருந்து ஓடிவிட்டாள்.

தர்மா விஷாலின் மகன் ஹர்ஷாவைப் பார்த்து, “ஹாய் பட்டுக்குட்டி.” என, ஹர்ஷா பொக்கை வாய் காட்டி அவன் பெரியப்பாவை பார்த்து சிரிக்க…

“இவனுக்குச் செல் கொடுத்துப் பழக்களைத் தானே…” எனத் தர்மா கேட்க, ஆமாம் இல்லை இரண்டுமாக விஷால் தலையாட்டி வைக்க…. தர்மாவின் கையில் இருந்த செல்லை கேட்டு விஷாலின் மகன் அழுக… தர்மா விஷாலைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றான்.

“இன்னும் என்னோட கோட்டா முடியலை போல… நீ பண்றதுக்கும் அவர் என்னைத்தான் முறைச்சிட்டு போறார்.” என விஷால் மகனிடம் நொந்து கொண்டான்.

தனிக்குடித்தனம் வந்த பிறகு ஸ்ருதியும் சௌமியாவும் எப்போதும் போலப் பேசிக்கொண்டனர். யாரும் யாரோடும் அதிகம் ஒட்டிக்கொள்ளவும் இல்லை அதே போல விலகவும் இல்லை. தேவையான நேரம் சேர்ந்து கொண்டனர்.

விஷால் மட்டும் தர்மா குடும்பத்தோடு மிகவும் ஒட்டுதலாக இருப்பான். ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக மகனோடு இங்கே வந்துவிடுவான். மற்ற நாட்களும் அவன் மகன் இங்கே வந்து விளையாடுவான். பிரியங்கா நல்லதாகப் போய்விட்டது என ப்ரீயாக இருப்பாள்.

கீர்த்திக்குப் பிரியட்ஸ் அதனால் அவள் வலியில் துவண்டு படுத்திருக்க… அவளைச் சுற்றி அவள் பிள்ளைகள் மூன்று பேரும் படுத்திருந்தனர். “போய் விளையாடுங்க.” என்றாலும் கேட்கவில்லை.
இதே மற்ற நேரம் ஜமுனா நாயகியிடம் இருப்பார்கள். ஆனால் கீர்த்திக்கு முடியவில்லை என்றால் அவளுடன் தான் இருப்பார்கள். இதில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை சரியாகி விட்டதா என்று வேறு கேட்டே அவளைக் கொல்வார்கள்.

இரவு அலுவலகத்தில் இருந்து வந்த தர்மாவுக்கு ஆச்சர்யம். இந்நேரம் வீடே அதிர்ந்து கொண்டிருக்கும். எப்படி இவ்வளவு அமைதி என நினைத்தவன், அவர்கள் அறைக்குச் சென்று பார்த்தது…. மனைவி மக்கள் எல்லாம் ஒரு இடத்தில் சுருண்டு கிடந்ததைத் தான்.

யாருக்கும் எதுவும் ஆகிவிட்டதோ எனப் பயந்து விட்டான்.

“என்ன ஆச்சு?”

“குட்டி போட்ட நாயை சுத்தி குட்டிங்க படுத்திருக்குமே… அது போல என்னைச் சுத்தி படுத்திருக்காங்க பாருங்க.” எனக் கீர்த்திச் சொல்ல…

தந்தையின் குரல் கேட்டதும் அபியும், கார்த்தியுமாவது எழுந்தார்கள். ஆனால் விஷாகன் இன்னும் அவன் அம்மாவை ஒன்றிக் கொண்டான்.

பிறந்து முதல் ஒரு வாரம் அன்னையை அறியாதவன், அதன் பிறகு அறிந்ததெல்லாம் அன்னையை மட்டும் தான். மற்ற இருவரும் தர்மா இருந்தால் அவனிடம் தான் இருப்பார்கள். ஆனால் விஷாகனுக்கு எப்போதுமே அவன் அம்மா வேண்டும். கீர்த்தி இல்லாமல் இருக்கவே மாட்டான். அந்த மகனை கீர்த்தியுமே இறக்கி விடாமல் தான் வைத்திருப்பாள்.

“ஏன் டல்லா இருக்க உடம்பு சரியில்லையா?”

“எப்போதும் இருக்கிறது தான்.” எனக் கீர்த்திச் சொல்ல, 


“முடியலைனா போன் பண்ணி இருக்க வேண்டியது தானே மா… நான் வந்து இவங்களைப் பார்த்திருப்பேன் இல்ல…” என்றவன், மனைவியை ஒட்டிக் கொண்டு படுத்திருந்த மகனை தூக்க, விஷாகன் சிணுங்க…. “அப்பா வந்தாச்சு பாருங்க. வாங்க விளையாடுவோம். அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்றான். 


அப்போதும் மகன் அழுக… “இங்கயே விளையாடுவோம்.” என்றதும், அமைதியாக இருந்தான்.

“அபி, அவங்க தான் சின்னப் பசங்க. அம்மாவுக்கு முடியலைனா… நீ அவங்களைப் பார்த்துக்கனுமா இல்லை… நீயும் சேர்ந்து உங்க அம்மா பக்கத்துல படுத்துப்பியா… நீ அவங்களை எதாவது செய்ய வச்சிருக்கலாமே…”

“நான் இன்னொரு தடவை உங்களை இப்படிப் பார்க்க கூடாது.” எனத் தர்மா கண்டிப்பாகச் சொல்ல…. அபி முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு சரிப்பா என்றாள்.

இரவு தங்கள் பாட்டியோடு அபியும் கார்த்தியும் உறங்க, விஷாகனுக்கு அவன் அம்மா வேண்டும். அன்றும் இரவு உணவு முடித்துப் பிள்ளைகளைச் சிறிது நேரம் விளையாட விட்டு உறங்க வைக்க… விஷாகன் கீர்த்தியோடு ஓட்டிக் கொண்டு மாடிக்கு சென்று விட்டான்.

தர்மா வந்து பார்க்க அம்மாவும் மகனும் ஓட்டிப் படுத்து கொண்டிருந்தனர். வேண்டுமென்றே இருவரையும் பிரித்து நடுவில் அவன் படுத்துக்கொள்ள… விஷாகன் எழுந்து தர்மாவின் மீதி ஏறி மிதுத்து, இருவருக்கும் நடுவே சென்று படுத்துக் கொண்டான்.

“நீ மட்டும் தான் உங்க அம்மா பக்கத்துல படுக்கணுமா? என்றவன், மனைவிக்கு அந்தப் பக்கம் படுத்து அவள் மீது கைப்போட்டுக்கொள்ள… தர்மாவின் கையை விளக்கி விட்டு விஷாகன் அவன் அம்மாவை கட்டிக் கொண்டான். 


மகனை நினைத்து தர்மாவுக்குச் சிரிப்புதான். இருந்தாலும் இப்படி அவன் அம்மாவை ஓட்டிக் கொண்டே இருக்கிறானே எனக் கவலையும் இருந்தது. 


அப்பா கோபித்துக் கொண்டாரா என விஷாகன் எட்டிப் பார்க்க… அதைப் பார்த்து சிரித்த தர்மா, “அப்பாகிட்ட வாங்க டா செல்லம்.” என அழைக்க… கீர்த்தியின் மீது புரண்டு தந்தையிடம் சென்றது அந்தச் சின்னச் சிட்டு. மகனை தன் மீது போட்டுக் கொண்டவன், “உங்க அம்மா வயித்துக்குள்ள தானே பத்து மாசம் இருந்த… வெளிய வந்தும் உங்க அம்மாகிட்ட தான் இருக்கனுமா… அப்பாவையும் கொஞ்ச கவனிங்க.” என்றான். 


அப்பாவும் மகனும் செய்வதையெல்லாம் பார்த்தபடி தான் கீர்த்திப் படுத்திருந்தாள். உண்மையில் விஷாகன் அப்படித்தான் இருக்கிறான். அவன் அக்கா அண்ணனோடு விளையாடிக் கொண்டிருந்தாலும் கீர்த்தி மாடிக்கு சென்றால் அவள் பின்னோடு வந்து விடுவான். ஆனால் பள்ளிக்கு செல்ல மட்டும் தகராறு செய்வது இல்லை. பள்ளி முடிந்து வந்தால் அம்மாவோடுதான். 


இப்போதுதான் திருமணம் ஆனது போல இருந்தது. ஆனால் அதற்குள் தர்மா கீர்த்தியின் பத்தாம் ஆண்டுத் திருமண நாள் வந்திருந்தது. அதிகாலையே எழுந்து குளித்துக் கோவிலுக்குச் சென்று வந்தவர்கள், வீட்டிலும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, காலை உணவை உண்டு விட்டு, கீர்த்தியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர்.

மகள் மருமகனுக்கு அவர்கள் சார்பாகப் புது உடைகளை நவீனா எடுத்து வைத்திருக்க… முதலில் கீர்த்திச் சென்று அணிந்துகொள்ள.. நவீனா சென்று மகளுக்கு உதவினார்.

கனகாம்பர வண்ண பட்டுப் புடவையில் அளவான நகைகள் அணிந்து கீர்த்தி எழிலாக வந்து நிற்க…. திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகி விட்டதா எனத் தர்மாவுக்கே சந்தேகமாக இருந்தது. அடுத்து அவன் சென்று பட்டு வேஷ்ட்டி சட்டை அணிந்து வர… கணவனின் கட்டுக்கோப்பான தோற்றம் எப்போதும் போலக் கீர்த்தியின் மனதை மயக்குவதாகத் தான் இருந்தது.

இருவரும் பெரியவர்களிடம் ஆசிவாதம் வாங்க…. பத்தாம் ஆண்டுத் திருமண நாள் ஸ்பெஷல் அல்லவா… சோமசேகர் ஒரே மாதிரி வடிவமைக்கபட்ட தங்க மோதிரத்தை இருவரிடமும் கொடுத்து மாற்றிக்கொள்ளச் சொன்னார்.

மருமகன் எளிமை விரும்பி என்பதால் நவீனா வீட்டிலேயே தான் அவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். எல்லோரும் சேர்ந்து பேசி உண்ணும் போது,

“அம்மா உங்க செல்ல பொண்ணு தானே அம்மம்மா.” என அபிநயா சொல்ல…

“நாங்க ஒன்னும் உங்க அம்மாவை செல்லமா வளர்க்கலை… உங்க அப்பாதான் அவர் பொண்டாட்டியை செல்லமா வளர்த்திட்டு இருக்கார்.” என்றார் நவீனா. மாமியார் சொன்னதைக் கேட்டு தர்மாவுக்கே கொஞ்சம் வெட்கம் வந்தது. அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“ஆமாம் பா…. நீங்க அம்மாவுக்குச் செல்லம் தான் கொடுக்கிறீங்க.” என்றால் ஒன்பது வயது அபிநயா…

“எங்களை மட்டும் காலையில சீக்கிரம் எழுந்துக்கச் சொல்றீங்க. ஆனா அம்மாவை எழுப்புறதே இல்லை.” என மகள் புகார் சொல்ல… ஆமாம் என அக்காவுக்கு ஒத்துப் பாடினான், ஐந்து வயது கார்த்திகேயன். ஆனால் அம்மா ரெஸ்ட் எடுத்தால் என்ன என்பது போலப் பார்த்த விஷாகன், அருகில் இருந்த கீர்த்தியை அனைத்துக் கொண்டான். 


“கீர்த்தி மட்டும் என்ன ஸ்பெஷல்?” எனச் சோமசேகர் கேட்க, 


“எல்லோருக்கும் கொள்கைகள் இருக்கலாம் மாமா… ஆனா அதை எல்லோராலும் கடைபிடிக்க முடியுதா? ஆனா என்னால முடியுதுனா அதுக்குக் காரணம் கீர்த்தித் தான்.” 


“நான் என் பாட்டுக்குக் குழந்தைகளுக்கு விளையாட செல் கொடுக்கக் கூடாது சொல்றேன். இந்த நேரம் மட்டும் தான் டிவி பார்க்கணும் சொல்றேன். இதைத் தான் சாப்பிடனும் இதைச் சாப்பிடக் கூடாது சொல்றேன். இப்படித்தான் இருக்கணும் இருக்கக் கூடாது சொல்லிட்டு… நான் பசங்களோட இருக்கலை…. கீர்த்திதான் அதை அவங்க ஒழுங்கா கடைபிடிக்க வைக்கிறா…அவ அதை மதிக்காம இருந்திருந்தா…என் கொள்கை எல்லாம் வெறும் பேச்சுல தான்.” 


“செல் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிடலாம். ஆனா குழந்தைகளுக்கு அதுல கவனம் போகாத அளவுக்குப் பார்த்துக்கணும். அவங்களோட விளையாடனும், அவங்களுக்கு எதாவது வேலைக் கொடுக்கணும். இப்படி அவளுக்குப் பகல்ல ஓய்வே இருக்காது. அதுதான் நான் வீட்ல இருக்கும் போது, அவளை ரெஸ்ட்டா இருக்க விடுவேன்.” எனத் தர்மா விளக்கமாகச் சொல்ல.. 


“ஆமாம் தானே… தர்மா இல்லையென்றாலும் கீர்த்திப் பிள்ளைகளை அவன் விருப்பத்தை மீறி நடக்க விட்டது இல்லை. நவீனாவுக்கு அவர்கள் இங்கே வரும் போது… முழுக்க அவர்களோடு இருப்பது போலத்தான் இருக்கும்.” 


செல் கொடுக்க மாட்டார்கள், டிவி எல்லா நேரமும் அனுமதி இல்லை. சில நேரம் விளையாடுவார்கள் பிறகு தோட்டத்திற்குத் தண்ணீர் விடுகிறேன் என அங்கே போய் நிற்பார்கள்… அபி பொழுது போகவில்லை என்று சமையல் அறைக்குச் சென்று காயெல்லாம் நறுக்கி தருவாள். கீர்த்திச் செய்யட்டும் என்பாள். ஏனென்றால் தர்மா எல்லாமே கற்றுக்கொள்ள வேண்டும் என்பான். 


“உங்க அப்பாவுக்கு வேற வேலை இல்லை.” எனக் கீர்த்திச் சொல்லியிருந்தால்… அவள் பிள்ளைகளும் அப்படித்தான் இருந்திருப்பார்கள். 


தர்மா சொன்ன பிறகு தான் கீர்த்திக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தனர். அதை அவள் அக்கறையாகவும் கடைபிடிக்கிறாள் தானே… 


சும்மா யாரும் யாரையும் கொண்டாட மாட்டார்கள் என இப்போது சோமசேகருக்கும் நவீனாவுக்கும் புரிந்தது. தங்கள் மகளைப் பெருமையாகப் பார்த்தனர். அபிக்கும் அவள் அப்பா சொல்வது புரிந்தது.