சாரல் மழையே

அத்தியாயம் 22

மகன்கள் இருவரும் ஒரே நேரம் பசிக்கு அழுக… நல்லவேளை கீர்த்திக் காலையில் எழுந்ததும் தாய்ப்பால் பாட்டிலில் எடுத்து வைத்திருந்தாள். இருவரும் ஒரே நேரம் அழுதால் சமாளிக்க முடியாது. அதோடு அதிகாலை நேரம் அவளுக்குத் தாய்ப்பாலும் நன்றாக இருக்கும். அந்த நேரம் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டு இருப்பார்கள். அதனால் அந்த நேரம் எடுத்து வைத்து விடுவாள்.

ஒரே நேரம் இருவருக்கும் பாட்டிலில் கொடுப்பது இல்லை. ஒரு நேரம் ஒருவனுக்குக் கீர்த்திப் பசியாற்றினால்… இன்னொரு நேரம் பாட்டிலில் என மாற்றித்தான் கொடுப்பார்கள். கீர்த்தி ஒருவனுக்குப் பசியாற்ற, தர்மா கண்ணாடி பாட்டிலில் இருந்த பாலை இன்னொரு மகனுக்குக் கொடுத்தான். அவன்தான் பிளாஸ்டிக் உபயோகிக்க மாட்டானே… அதனால் கண்ணாடி பாட்டில் தான்.

பால் குடித்ததும் ஈரம் உறிஞ்சும் வகையில் இருந்த உள்ளாடையை மாற்றினர். நவீனா குழந்தைகளுக்குத் தேவைப்படும் உடைகள் எல்லாம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே வாங்கி அவரே துவைத்து வைத்திருந்தார். அதே போலத் தாங்கள் குழந்தைகளுக்கு டையபர் உபயோக்கிக்க மாட்டோம் எனக் கீர்த்திச் சொல்லி இருக்க…. இப்போது துணியிலேயே ஈரம் உறிஞ்சும் வகையில் இருந்த உள்ளாடைகளைப் பார்த்து வாங்கி இருந்தார். 

இரட்டை குழந்தைகள் வேறு… அவள் அம்மா இல்லையென்றால் கீர்த்தி மிகவும் தடுமாறி போய் இருப்பாள்.

வழக்கம் போலத் தந்தையும் மகளும் மாடியில் இருந்த செடிகளுக்குத் தண்ணீர் விட்டுத் திரும்பிய போது, மகன்களோடு கீர்த்தியும் கட்டிலில் படுத்து உறங்கி இருந்தாள்.

கைக்குழந்தைகள் உறங்குவதும் விழிப்பதும் தானே வேலை. அவர்கள் உறங்கும் போது கீர்த்தியும் படுத்து உறங்கி விடுவாள். சற்று நேரத்திற்கு முன்புதான் அருணா டீபன் எடுத்து வந்து தந்திருந்தாள்.

சின்னக் குழந்தைகள் இருப்பதால் உணவு பண்டங்களை அறைக்குள் எடுத்து செல்வது இல்லை. உணவு பண்டங்கள் தரையில் சிந்தினால் எறும்புகள் வரும்.. குழந்தைகளைக் கடித்து விடும் என்பதால்… கீர்த்தி வெளி ஹாலில் உட்கார்ந்து உண்டுவிட்டு வந்துதான் படுத்திருந்தாள்.

தர்மாவும் அபியும் சத்தம் செய்யாமல் குளித்துவிட்டு கதவை சாற்றிக்கொண்டு கீழே சென்றனர்.

உமாபதி இறந்ததில் இருந்தே ஞாயிறு காலை எல்லோரும் சேர்ந்து கூடுவது இல்லை. அவரவர் விருப்பட்ட நேரம் வந்து ரங்கநாதன் நாயகியை பார்த்துவிட்டுச் செல்வார்கள். 

அதன் பிறகும் கீர்த்திக்குப் பிரசவம் அடுத்து இரட்டை குழந்தைகள் என இங்கேயும் வேலை சரியாக இருக்க…. அதோடு சுபா சொன்னது வேறு நாயகிக்கு உறுத்திக் கொண்டே இருக்க…. இவர்களை ஏன் கட்டி இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தர்மாவிடம், “எங்களுக்கு முடியலைப்பா நீ எல்லாரையும் கூப்பிட்டுகிட்டு இருக்காத.” எனச் சொல்லிவிட்டார்.

அருணா அன்று மதியத்திற்கு மேல் ஊருக்குக் கிளம்புவதாக இருந்தது. “அக்கா, பேர் வைக்கிற அன்னைக்குக் கண்டிப்பா வந்திடு.” எனத் தர்மா சொல்ல…

“ரொம்பச் சின்னக் குழந்தையா இருக்கு. மூன்னு மாசத்தில வைக்கலாம். உன் மாமியார் அவங்க வீட்ல வைக்கணும்னு நினைப்பாங்க. அங்கேயே பேர் வச்சிட்டு அழைச்சிட்டு வரலாம்.” என்றார் நாயகி. தர்மாவும் சரி என்றான்.

தர்மா காலை உணவை உண்டு கொண்டிருக்க.. விஷால் வந்தான். அருணா ஊருக்கு கிளம்புவதால் வந்திருப்பான் என நினைத்துக் கொண்டான்.

“அன்று நீ சொத்தெல்லாம் வித்துட்டுத்தான் போகப் போற.” என்ற சூரியாவின் பேச்சு விஷாலை ரொம்பவே யோசிக்க வைத்திருந்தது.

அவன் எதாவது தொழில் தொடங்கி அது நஷ்டமானால்… சொத்தை தானே விற்க வேண்டியது வரும். அதோடு அவன் அப்பா இருந்திருந்தால் வேறு… இப்போது அவன் தானே அவன் அம்மாவையும், ரித்விகாவையும் பார்க்க வேண்டும். ரித்விகாவுக்கும் திருமணம் செய்ய வேண்டும். அதனால் ரிஸ்க் எடுக்கப் பயம் வந்திருந்தது.

விஷால் எல்லோரையும் நலம் விசாரித்தவன், எங்கே அண்ணியும் குட்டிசும் என்று கேட்க, மேலே உறங்குவதாகச் சொல்ல.. பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்றவன், “உங்களோட தான் பேச வந்தேன்.” எனத் தர்மாவிடம் சொல்ல… சொல்லு என்பது போல அவன் பார்த்தான்.

“நீங்க புதுசா ஆரம்பிக்கிற பிஸ்னஸ்ல என்னையும் சேர்த்துக்கோங்க.” என்றான் நேரடியாக…

நான் இப்படி யோசிக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? என எதுவும் சொல்லாமல் நேரடியாக அவன் கேட்டதும், “சேர்ந்திருக்கிறது வேண்டாம்னு தானே தனியா வந்தது. இப்போ எதுக்குத் திரும்பச் சேர்ந்து பிஸ்னஸ் பண்ண? அதெல்லாம் சரி வராது.” என்றான் தர்மா.

“நான் எத்தனை தடவை நம்ம பிஸ்னஸ் பார்க்க வா சொல்லியிருப்பேன். அப்ப கேட்டியா நீ. இப்போ நீ சொன்னா நான் கேட்கணுமா? போதும் நான் வாங்கின பேச்சு எல்லாம். அவங்கவங்க தனித் தனியா செய்வோம்.” என்றான்.

“நீங்க ரொம்பச் சுயநலவாதி ஆகிட்டீங்க. நான் எல்லாத்தையும் இழந்து தெருவுல நிற்கணும், அதை நீங்க பார்க்கணும். அதுதானே உங்களுக்கு வேணும் ரைட் விடுங்க.” என விஷால் கத்த…

“என்னைக்காவது நீ என்னைச் சரியா புரிஞ்சிருக்கியா? இன்னைக்குப் புரிஞ்சிகிறதுக்கு?” எனத் தர்மாவும் திருப்பிக் கத்த, இவர்கள் இருவரின் சத்தம் கேட்டு ரங்கநாதன் ஹாலுக்கு வந்துவிட்டார்.

விஷால் தர்மாவை குறை சொல்ல… “உன் அப்பா அம்மாவுக்குத் தானே உன்னைப் பத்தி பொறுப்பும் அக்கறையும் இருந்திருக்கணும். உனக்குத் தர்மாவை பேச என்ன ரைட்ஸ் இருக்கு. நீ சொன்னா அவன் உடனே ஒத்துக்கனுமா?” என்றார் ரங்கநாதன் பதிலுக்கு….

“எல்லோரும் சேர்ந்திட்டு என்னை விட்டுட்டீங்க இல்ல…” என விஷால் சொல்ல…

“உன்னை அப்படியெல்லாம் விட்டுடுவோமா விஷால். நீ எப்படியும் போன்னு முதல்ல தர்மா விடுவானா… என்ன செய்யலாம்னு பொறுமையா பேசலாம் பா…” என ஜமுனா சொல்ல… அதன் பிறகே விஷால் கொஞ்சம் அடங்கினான்.

“பெரியம்மா உங்களுக்குப் புரியலை…. தர்மா அண்ணனை மீறி எல்லாம் எங்களுக்குப் பிஸ்னஸ் வராது. கஸ்டமர்ஸ் அவர்கிட்ட தான் போவங்க. அடுத்து அவங்க போறது சூரியா அண்ணன் வசிகரன் அண்ணன்கிட்ட தான் இருக்கும். அவனுங்க அவ்வளவு சீக்கிரம் விட்டுட மாட்டாங்க.” என விஷால் சொல்ல… அவன் சரியாகவே கணித்திருக்கிறான். அந்த வகையில் விஷால் புத்திசாலிதான் எனத் தர்மா நினைத்துக் கொண்டான்.

இதெல்லாம் இப்போது யோசித்து என்ன பயன்? அப்போதே வந்து பிஸ்னஸ் பார்த்திருந்தால் விஷாலுக்கும் இந்நேரம் எல்லாம் அத்துப்படி ஆகி இருக்கும்.

“ஏற்கனவே குழந்தைக்கு முடியாம ஹாஸ்பிட்டல்ல இருந்ததுக்கு, பண்ண பாவம்னு உன் பெரியம்மா சுபா சொல்லி இருக்கா. இதுல உன்னைச் சேர்த்திட்டுத் தர்மா பிஸ்னஸ் பண்ணா… அவனை இன்னும் வாயில வச்சு நமத்து எடுப்பா? இது அவனுக்குத் தேவையா?” என நாயகி கேட்க,

“சரி பாட்டி விடுங்க. நான் என்னவோ பண்ணிக்கிறேன்.” என்றவன் விரக்கதியான மனநிலையிலேயே கிளம்பி சென்றான்.

“எப்படிப் பேசிட்டுப் போறான் பாரு… இவனுங்க நம்மை இப்படியும் போக விட மாட்டாங்க, அப்படியும் போக விட மாட்டாங்க.” என்ற அருணா, “என்ன டா பண்றது?” எனத் தர்மாவிடம் கேட்க,

தான் தொழிலும் வாழ்க்கையிலும் முன்னேற தர்மாவிடம் யோசனை கேட்டிருந்தால், கண்டிப்பாகச் சொல்லி இருப்பான். அதை விட்டுத் திரும்பப் பிசினஸ் சேர்ந்து செய்வோம் என அவனாகவே முடிவெடுத்து பேசியது தான் தர்மாவுக்குக் கோபம். மற்றபடி விஷாலுக்குப் பொறுப்பாக எடுத்துச் செய்யத் தன்னை விட்டால் ஆள் இல்லை எனத் தர்மாவுக்குத் தெரியும். அவனை முதலில் செட்டில் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டான். 

“நான் பார்த்துக்கிறேன் அக்கா.” என்றான்.

கீர்த்திக்கும் குழந்தைகளுக்கும் பதினாறாம் நாளே வீட்டில் புண்ணியாதானம் செய்தனர். நாயகி குழந்தைகளைப் பட்டு துணி விரித்த முறத்தில் போட்டு, குழந்தைகள் இடுப்பிற்குக் கருப்பு கயிறும், வசம்பு கோர்த்த மஞ்சள் நூலை கையிலும் கட்டி விட… தர்மா வாங்கி இருந்த தங்க சங்கிலிகளை ஜமுனா இருவருக்கும் போட்டு விட்டார். 

நவீனா கைக்குத் தங்க காப்பு, விரலுக்குத் தங்க மோதிரங்கள், காலுக்கு வெள்ளியில் கொலுசு மற்றும் காப்பு, கழுத்துக்குத் தங்க சங்கிலி, வெள்ளியில் சீர் வரிசை என அடுக்கி விட்டார்.

இவ்வளவா என்பது போலத் தர்மா கீர்த்தியைப் பார்க்க… “நீங்க உங்க அக்காவுக்கு இதெல்லாம் செய்யலை…” எனக் கீர்த்திக் கேட்க, தர்மா வாயைத் திறக்கவில்லை. இவன் செய்யலாம் அவன் அக்காவிற்கு, ஆனால் அவள் அம்மா அவர் பேரக் குழந்தைகளுக்குச் செய்யக் கூடாதா… எல்லாவற்றிற்கும் சொன்னால் எப்படி என அவளுக்குக் கோபம். 

வீட்டினர் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தனர். மருத்துவமனையில் குழந்தை இன்குபேட்டரில் இருந்ததால்… அதோடு சின்னக் குழந்தைகள், பிறந்து சில நாட்கள் ஆகட்டும் எனத் தர்மாவின் நண்பர்கள் இன்றுதான் குழந்தையைப் பார்க்க வந்தனர். மதிய விருந்து வெளியில் இருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒரு மாதம் ஆனதும் தர்மாவும் ஜமுனாவும் சென்று கீர்த்தியையும் குழந்தைகளையும் அவள் வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். மூன்று பேரை சமாளிப்பது எல்லாம் கஷ்டம். அதோடு அபிநயாவுக்கும் பள்ளி இருந்தது.

“நீங்களாவது அப்பாவோட இருங்க டா…” எனச் சொல்லி அபியை தன்னுடன் தர்மா வைத்துக்கொண்டான்.

வார இறுதியில் எப்படியும் மகளை அழைத்துக் கொண்டு தர்மா வருவான் என்று நினைத்திருந்தாள். ஆனால் வெள்ளி மாலையே ஜமுனாவும் நாயகியும் வந்து குழந்தைகளைப் பார்த்துவிட்டு, அப்படியே அபியை இங்கே விட்டு சென்றிருந்தனர்.

அபிக்கு அறைப் பரிட்சை முடிந்து விடுமுறை என்பதால்… இரண்டு வாரங்களுக்கு இங்கே தான் இருப்பாள்.

சனிக்கிழமை அன்று காலையில் பேசும் போது, “இன்னைக்கு நீங்க வருவீங்க தானே….” எனக் கீர்த்திக் கேட்டதற்கு “வேலை இருக்கு மா…. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வெளியே போற வேலையும் இருக்கு.” என்றான். அப்போதைக்குக் கீர்த்திச் சரியென்று வைத்து விட்டாள். ஆனால் நேரம் செல்ல செல்ல… என்ன வேலையாக இருந்தாலும் கடைசியில் கணவனிடமே அவள் மனம் சென்றது.

மற்ற வேலைகளுக்கு எல்லாம் ஆட்கள் இருக்க… குழந்தைகளை மட்டும் கீர்த்தியும் நவீனாவுமே பார்த்துக் கொள்வார்கள். நவீனாவின் அறை கீழே தான் இருக்கும். அதனால் கீர்த்தியும் குழந்தைகளும் கீழே இருந்த இன்னொரு அறையில் இருந்தனர். இரவு நவீனா மகளோடு படுத்துக்கொள்வார்.

அன்று சனிக்கிழமை என்பதால் சோமசேகர் மாலை சீக்கிரமே வீடு திரும்பி இருந்தார். எப்போதும் இருப்பது போல மகள் இருக்கக் காணோமே என நினைத்த சோமசேகர், “ கீர்த்திக்கு என்ன ஆச்சு? ஏன் டல்லா இருக்கா? குழந்தைங்க எல்லாம் நல்லாதானே இருக்காங்க.” என அவர் மனைவியிடம் விசாரிக்க…

“அவ வீட்டுக்காரர் இன்னைக்கு வருவாருன்னு எதிர்பார்த்தா… அவர் வரலைன்னு சொல்லிட்டார் போல… அதுதான் மூட்அவுட்டா இருக்கா…” என்றார்.

“ஏன் அவர் வந்திருக்கலாமே…. நம்ம வீடு தானே… நான் அவர் கண்டிப்பா இன்னைக்கு வருவார், அவரோட சாப்பிடுவோம்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்.”

“தெரியலை… ஒருவேளை வேலை இருக்கோ என்னவோ.” என்றார் நவீனா.

வினோத்தும் வந்துவிட்டால் இரவு உணவு உண்டு படுக்கும் வரை எல்லோருமாக ஹாலில் தான் இருப்பார்கள். ஆனால் இன்று கீர்த்தி அறையில் இருந்து வரவே இல்லை.

ஒன்பது மணி ஆகி விட வினோத் சென்று உண்ண அழைக்க…. “எனக்குப் பசிக்களை.” என்று விட்டாள்.

“சாப்பிடலைனா குழந்தைகளுக்குப் பால் எப்படி இருக்கும். ஒழுங்கா வந்து சாப்பிடு.” என நவீனாவும் வந்து சொல்லிவிட்டு சென்றார்.