தங்கள் வீட்டை பார்த்ததும் கீர்த்திக்கு பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தது. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இங்கே வந்து.
வீட்டிற்கு வந்ததும் அவள் அம்மா எதாவது குடிக்கிறியா எனக் கேட்க, இப்ப எதுவும் வேண்டாம் என்றவள், தண்ணீர் மட்டும் வாங்கிக் குடித்தாள்.
சோமசேகர் மகளுடன் பேச எண்ணி அபியை அவனுடன் வைத்திருக்கச் சொல்லி வினோத்தை அனுப்பியவர், மகளுக்குச் சோபாவை காட்டிவிட்டு அவள் எதிரில் அமர்ந்தார்.
“எங்களுக்கு உன் காதல் பிடிக்கலை தான். உன் மேல ரொம்பக் கோபம் கூட. ஆனா உன்னைக் கட்டாயபடுத்தி எதுவும் செய்ய வைக்க முடியாது. அதனால வேற வழி இல்லாம விஷ்வா வீட்ல சொல்லிடலாம்னு நினைச்சோம்.”
“விஷ்வா வீட்ல இருந்து போன் பண்ணி அவங்களே என்ன ஆச்சுன்னு கேட்டாங்க. நான் பிடி கொடுத்து பேசலை…. அவங்களுக்குச் சந்தேகம் வந்திடுச்சோ என்னவோ…. உங்க கூடச் சம்பந்தம் பண்றதே பெரிசு… இதுல உங்க சம்மதத்துக்கு வேற காத்திருக்கனுமான்னு அவங்க மேனேஜரே திமிராதான் பேசினான்.”
“அவன் சொல்லும் போது கூட நான் விஷ்வா வீட்ல அப்படியெல்லாம் இல்லை. என் பொண்ணுக்கு விருப்பம் இல்லைனா… அவங்க என்ன சொல்லப் போறாங்கன்னு தான் நினைச்சேன். அதனால நான் பெரிசா எடுத்துக்கலை.”
“நான் தர்மாவைப் பத்தி விசாரிக்கக் சொல்லி சரத்கிட்ட சொன்னேன். அப்பவும் உங்களுக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கிற ஐடியா இல்லை.” சரத் சோமசேகரின் நெருங்கிய நண்பர்.
“அவர் எதுக்குன்னு கேட்டான். அப்போ நான் அவன்கிட்ட எல்லாமே சொன்னேன்.”
“எங்க பொண்ணு லவ் பண்ணது எங்களுக்குத் தெரியவே தெரியாது. நாங்க கல்யாண பேச்சை எடுக்கிறதுக்குள்ள அவ வீட்டை விட்டு போயிட்டான்னு சொல்லிடுங்க. அப்பத்தான் நீங்களும் உங்க குடும்பமும் இதுல இருந்து வெளியே வர முடியும்னு சொன்னான்.”
“நான் ஓவர்சீஸ் பிஸ்னஸ் பண்றேன். அதுவும் உணவுப் பொருள். நம்ம பொருளைப் பத்தி அவங்க எதாவது புரளியை கிளப்பி விட்டாளோ இல்லை அப்ரூவல் கான்செல் பண்ண வச்சாலோ…. திரும்ப எல்லாம் சரியாக நிறைய நாட்கள் ஆகும். அதுக்குள்ள பொருள் எல்லாம் வீணா போயிடும்.”
“கோடி கணக்குல நஷ்டம் ஆகும். நஷ்டம் நமக்கு மட்டும் இல்லை. நம்மோட சேர்த்து நம்ம கம்பெனியில வேலை செய்யுற எத்தனை பேர் இருக்காங்க. எல்லாம் பாதிக்கப்படுவாங்க.”
“அவ்வளவு ஈகோ அவங்களுக்கு. நாம கேட்டு மறுக்கிறதான்னு… ஐயோ நல்லவேளை இவங்க வீட்ல பொண்ணு கொடுக்கலைன்னு நான் அப்ப நினைச்சிட்டேன்.”
“சரியான கிறுக்கனுங்க. என்ன வேணா பண்ணுவாங்க. அப்ப அவங்க அவ்வளவு ஆத்திரத்துல இருந்தாங்க.”
“உன் ஒருத்தி காதலுக்காக நாங்க எல்லாம் இழந்து நிற்க முடியாது இல்லையா கீர்த்தி.”
“உன்னை நாங்க அதுக்காக விட்டுடோம்னு அர்த்தமும் இல்லை. தர்மா தான் வேணும்னு நீதான் முடிவு பண்ண. உன் வாழ்க்கையை உன் இஷ்டத்துக்கு வாழ நாங்க அனுமதிச்சோம்.”
“தள்ளி இருந்தாலும் நீ நல்லாயிருந்த… இதே நீ கஷ்டபட்டா பார்த்திட்டு இருந்திருப்போமா… கண்டிப்பா கிடையாது.”
“வினோத் மேற்படிப்புக்குதான் வெளிநாடு போறதா இருந்தது. ஆனா விஷ்வா வீட்ல எப்ப என்ன பண்ணுவாங்கன்னு தெரியலை. ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு நினைச்சு, நான் வினோத்தைக் கூட அப்பவே படிக்க வெளிநாடு அனுப்பி வச்சிட்டேன்.”
“வாசன் குடும்பம் உன்னோட தொடர்புல இருந்தாங்க. அவங்களாவது இருக்கட்டும் உனக்கு ஒரு சப்போர்டா இருக்கும்னு நினைச்சுதான் நாங்க அவங்ககிட்ட இருந்தும் விலகி நின்னோம்.”
“வினோத்துக்கு அங்க தனியா இருக்க முடியலை. அதனால அம்மா அங்கதான் நிறைய நாள் இருந்தா…” எனச் சோமசேகர் மனைவியைப் பார்க்க,
“எனக்கு அப்ப எல்லாம் உன் மேல ரொம்பக் கோபம் கீர்த்தி, அப்பா தனியா இங்க இருக்கார். நாங்க அங்க இருக்கோம். எல்லாம் உன்னாலன்னு கோபம் இருந்தது உண்மைதான்.” என்றார் நவீனா.
“அப்பா இங்க தனியா இருக்கும் போது, ஒரு தடவை உடம்பு சரியில்லாம இருந்தார். நான் அதைக் கேட்டு அங்கிருந்து அரக்கபரக்க ஓடி வந்தேன். நான் வந்ததுக்குப் பிறகு நல்லா ஆகிட்டார். அப்போதான் உன்னை மால்ல பார்த்தேன். அப்போ நிஜமாவே உன் மேல கோபம் எனக்கு.”
“அதுதான் உன்னைப் பார்த்தும் பேசலை. பேசினா கோபமா உன் மனசு நோக பேசிடுவேன்னு பயம். வீட்டுக்கு வந்து எனக்கே கஷ்டமாதான் இருந்தது.”
“நேர்ல பார்க்காத வரை ஒன்னும் தெரியிலை…. உன்னை நேர்ல பார்த்ததும் விட முடியலை… அப்போ இருந்தே யோசனை தான்.”
“திரும்ப உன்னை ஹாஸ்பிடல்ல அதுவும் இந்த நிலைமையில பார்த்ததும் என்னால அதுக்கு மேல முடியலை. போ இதுக்கு மேல விஷ்வா வீட்ல தொந்தரவு கொடுத்தா கொடுக்கட்டும். எனக்கு எதைப் பத்தியும் இனி அக்கறை இல்லை.” என்றார் நவீனா.
“உன் விருப்பம் தெரியாம நாங்க கல்யாணம் பேசினதும் தப்புதான். இனி அதைப் பத்தி பேச வேண்டாம் கீர்த்தி. நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவோம்.”
“நீ சந்தோஷமா இருக்க. அது உன்னைப் பார்க்கும் போதே தெரியுது. உன் வீட்டு ஆட்கள் மேல ரொம்ப மரியாதையா இருக்க… அது உன் பேச்சில இருந்தே தெரியுது.”
“இப்ப சமீபமாத்தான் தர்மாவை பற்றி நிறையத் தெரிய வந்தது. யார்கிட்ட அவரைப் பத்தி பேசினாலும் ரொம்ப மரியாதையாதான் சொல்றாங்க.” என அவள் தந்தை சொன்னதும், கீர்த்திக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“நீ ரெஸ்ட் எடு கீர்த்தி.” என்ற சோமசேகர் அவர் அறைக்குச் செல்ல… கீர்த்தி அவள் அறைக்குச் சென்றாள்.
சில வருடங்கள் சென்று வந்தாலும், கீர்த்தியின் அறையில் அவள் பொருட்கள் அப்படியே பராமரிக்கபட்டிருந்தது.
கீர்த்தி அவள் அறையில் மெத்தையில் படுத்துக்கொள்ள… அபி அங்கே வந்தவள், அவளும் கீர்த்தியின் அருகில் படுத்து உறங்கி விட… உடைமாற்றி வந்த நவீனா அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டார்.
கீர்த்தி மாலை வரை நன்றாக உறங்கினாள். அவள் எழுந்ததும் அவளுக்குக் குடிக்க என்ன வேண்டும் எனக் கேட்டவர், ஏற்கனவே செய்யச் சொல்லியிருந்த சிற்றுண்டிகளையும், அதோடு மகள் கேட்ட ஹார்லிக்ஸ்ம் எடுத்து வர சொல்லி சமையல் அறைக்கு அழைத்துச் சொன்னார்.
தான் கட்டியிருந்த புடவையை மாற்றிய கீர்த்தி, நவீனா கொடுத்த நகையை அவரிடமே கொடுத்தவள், “நான் இங்க வரும் போது போட்டுகிறேன் மா… இங்கயே இருக்கட்டும்.” என்றாள் அவர் மனம் நோகாமல்.
“உன் புருஷன் வீடுதான் உசத்தி இல்லை. இந்த அம்மாவை பிடிக்காம போயிடுச்சா உனக்கு? நகையை எதுக்குத் திருப்பிக் கொடுக்கிற?
“என்னோட ஸ்வீட் அம்மா…” என்றவள், எழுந்து சென்று அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்,
“என்னை வீட்டை விட்டு அனுப்பும் போது கூட எனக்கு என்ன தேவைன்னு எல்லாமே கொடுத்துதான் நீங்க என்னை அனுப்பினீங்க. எங்களை மீறி போற இல்லை. கஷ்டபடுன்னு சொல்ற அப்பா அம்மா கூட இருக்காங்க. ஆனா நீங்க அப்படியில்லை.”
“தர்மாக்குன்னு சில கொள்ளைகள் இருக்கு. அதை அவர் கொஞ்சம் தளர்த்திகிட்டா… அது எனக்காக மட்டும் தான். அவர் பசங்களுக்குகாகக் கூட இல்லைதான்.”
“என் மாமியாருக்கு நம்ம அப்பா யார்? அவர் என்ன பிஸ்னஸ் பண்றாருன்னு கூட இதுவரை தெரியாது. அவங்க ஒரு நாளும் கேட்டதே இல்லை. அவங்க பையன் விரும்பிய பொண்ணு, நம்ம மருமகள், நாம நல்லா பார்த்துக்கணும். அது மட்டும் தான் நினைப்பாங்க.”
“தாத்தா பாட்டியும் என்கிட்டே அவ்வளவு அன்பா இருப்பாங்க. அவங்க யாரும் என்கிட்டே எதுவும் எதிர்பார்த்து பழகலை.”
“நீங்க நமக்குள்ள எப்பவும் பணத்தைக் கொண்டு வராதீங்க மா ப்ளீஸ்…. பணத்துக்காக வர்ற மாதிரி இருக்கும்னு எங்க வீட்ல விளகிடுவாங்க.”
“உங்க பொண்ணு மட்டும் போதும்னு நினைக்கிறீங்களா சொல்லுங்க?” என்றதும்,
நவீனா முதலில் அப்படித்தான் நினைத்திருந்தார். ஆனால் இப்போது அவள் தங்கள் மகள் மட்டும் அல்ல எனப் புரிந்தது.
“சரி டி…. ஆனா என் பொண்ணுக்குச் செய்யக் கூடாதுன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.” என்றார்.
“நீ அன்னைக்கு முதல் தடவை எங்க வீட்டுக்கு வந்திட்டு சாப்பிட்டியா?” எனக் கீர்த்திக் கேட்டதும், நவீனா யோசிக்க…
“நீ எங்க வீட்ல வந்து சாப்பிட கூட யோசிப்ப… நாங்க மட்டும் நீ கொடுக்கிறதை வாங்கிக்கணுமா?” என மகள் கேட்டதும்தான், நவீனாவுக்குத் தன் தவறு புரிந்தது. இது எதோ நான் உயர்ந்த்கவன், நீ தாழ்ந்தவன் என்ற எண்ணத்தில் செய்வது போலத்தானே நினைப்பார்கள்.
“அன்னைக்கு முதல் தடவை வந்ததுனால கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். இனி அப்படிச் செய்யலை… வளைகாப்பு அன்னைக்கு நல்லாத்தான் சாப்பிட்டேன்.” என்றார்.
“சரி இருக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்.” என்றாள்.
இவர்கள் பேச்சுச் சத்தத்தில் அபி எழுந்துகொள்ள… சோமசேகர் வினோத் இருவரும் இவர்கள் இருந்த அறைக்கு வர…. எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.