சின்ன மருமகள் உண்டானதில் சுனிதாவுக்குச் சந்தோஷம். அதே சமயம் ஸ்ருதி இன்னும் உண்டாகவில்லை என எப்போதுமே முனங்கிக் கொண்டே இருந்தார்.

கீர்த்தியின் பிறந்த வீட்டினரின் செல்வ செழிப்பை பார்த்ததும், சுனிதாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதற்குத் தர்மா மனது வைத்தால் தான் உண்டு என்பதால்.. அவனுக்கு ஐஸ் வைப்பதாக எண்ணி,

கீர்த்திக்கு வளையல் அடுக்கி முடித்ததும், “கீர்த்தி, நீ ஸ்ருதிக்கு வளையல் போட்டு விடு…. ரெட்டை குழந்தையைச் சுமக்கிற உன் கையாள வளையல் போட்டா, இனியாவது குழந்தை உண்டாகிறாளா பார்ப்போம்.” என்றார். அதைக் கேட்ட ஸ்ருதியின் முகம் வாடிவிட்டது.

“சித்தி, இங்க எங்க வீட்ல வச்சு… ஒருத்தரை காயப்படுத்திறதை நான் எப்பவும் அனுமதிக்க மாட்டேன்.” எனத் தர்மா கோபப்பட….

“அத்தை, அவங்க இப்பதான் குழந்தை பெத்துக்கப் பிளானே பண்ணி இருக்காங்க. உங்களுக்கு ஏன் அவசரம்? இப்படியெல்லாம் பண்ணி நீங்களே அவங்க மனசுல ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தாதீங்க.” என்றால் கீர்த்தியும்.

“சபையில வச்சு இப்படித்தான் பேசுவியா…” என மருமகளைக் கண்டித்த நாயகி,

“நீ எதுவும் மனசுல நினைக்காத ஸ்ருதி. உனக்கும் சீக்கிரமே குழந்தை உண்டாகும். நாங்க உனக்கும் இப்படி வளையல் அடுக்குவோம்.” என்றார்.

அதன் பிறகு மதிய விருந்து ஆரம்பிக்க… தர்மா அவனே சென்று சுபாவுக்கு உணவு கொடுத்துவிட்டு வந்தான். சாயந்திரமா வீட்டுக்கு வரேன் என்றார் சுபா. தர்மா வாரத்தில் இரண்டு நாட்களாவது சென்று சுபாவை பார்த்துவிட்டு வருவான். சில நேரம் கீர்த்தியும் உடன் செல்வாள்.

அன்று வார தினம் என்பதால்… சூரியாவும் வசீகரனும் மதியம் உண்ணும் நேரதிற்குதான் வந்தனர். ஸ்ருதி அப்போதே சுனிதா இன்று செய்ததைச் சூரியாவிடம் சொல்லிவிட்டாள். 


“வீட்டுக்கு வரட்டும்.” என்றான் சூரியா. 


சொத்துக்கள் எல்லாம் உரிய ஆவணம் பார்த்து, அன்று பேசியது போல யாருக்கு என்ன எனத் தனியாக அவரவர் பெயரில் பதிந்தாகிவிட்டது. இன்னும் தொழிலில் தான் கணக்கு முடிக்காமல் இருக்க…. அதனால் இன்னும் பொதுவில் தான் இருந்தனர். 


சூரியாவும் வசீகரனும் விஷாலோடு முகம் கொடுத்து பேசுவது இல்லை. இன்றும் விஷால் சந்துருவோடுதான் இருந்தான். சந்துரு இப்போது எல்லாம் அடங்கி இருந்தான். அருணா தான் அவனை இங்கே இருக்க விடுவதே இல்லையே… அதோடு தர்மாவும் அருணாவுக்கு அவள் அப்பா கொடுப்பதாகச் சொன்ன சொத்துக்களோடு, அவன் பங்குக்கு எனச் சேர்த்து பெரிய சொத்து ஒன்றை அருணாவின் பேரில் கொடுத்திருந்தான். 


தர்மா கொடுக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால் அவன் பெருந்தன்மையாக நடந்து கொண்டான். ஆனால் அருணா இன்னும் அந்தப் பத்திரங்களை வாங்கிக்கொள்ளவில்லை. தர்மாவிடமே இருக்கட்டும் என்று விட்டாள்.

வளைகாப்பிற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் உண்டு முடித்துக் கிளம்பியிருக்க… வீட்டினர் மட்டுமே இருந்தனர்.

“கீர்த்தியை நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்னு நினைக்கிறோம். நாங்களே அங்க வச்சுப் பிரசவம் பார்க்கிறோம்.” என நவீனா ஜமுனாவிடம் கேட்க,

அதுதான் முறை.. அதோடு கீர்த்திக்கும் செல்ல ஆசை இருக்கும் என்ற எண்ணத்தில் ஜமுனா சரியென்றார்.

தர்மா சோமசேகரின் எதிரில் சென்று உட்கார்ந்தவன், “மாமா, பிரசவத்திற்கு நாள் ரொம்பச் சுருக்கமா இருக்கு. கீர்த்தியை நாங்க இங்க பக்கத்தில் நல்ல ஹாஸ்பிடல்ல தான் காட்டிட்டு இருக்கோம். இப்போ புதுசா இன்னொரு டாக்டர் பார்க்கிறது எல்லாம் ரிஸ்க்.” என எடுத்து சொல்ல… அவரும் புரிந்து கொண்டார். ஆனால் நவீனா “நாங்க இதை விடப் பெரிய ஹாஸ்பிடல்ல வச்சு எங்க பெண்ணை இன்னும் நல்லா பார்ப்போம். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்.” என்றார். 


என் மனைவி மீது எனக்குக் கவலையோ அக்கறையோ இல்லாமல் எப்படி இருக்கும். அதை இவர் எப்படிச் சொல்லலாம் என்ற கோபத்தில்…

“அவ உங்க பொண்ணு மட்டும் இல்லை… எனக்குப் பொண்டாட்டியும் கூட அதையும் நினைவு வச்சுக்கோங்க. நீங்க கூப்பிட்டதும் எல்லாம் அனுப்ப முடியாது.” என்றான் தர்மாவும் சூடாக.

“தர்மா, அவங்களுக்கு அவங்க பெண்ணை வச்சு பார்க்க ஆசை இருக்கும் தானே …” என ஜமுனா சொல்ல…

தன் அம்மாவும் புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில், “ஏன் உங்களுக்கு அவளை வச்சுப் பார்க்க கஷ்டமா இருக்கா? என அவன் திருப்பிக் கேட்க,

“உங்க அம்மா கீர்த்திக்காகச் சொல்றா. ஆனா கீர்த்தி அம்மா, நாங்க இங்க இத்தனை பேர் இருக்கோம். ரெட்டை குழந்தை வேற… நீங்க தனியா அவளை எப்படிப் பார்பீங்க. குழந்தை பிறந்து கொஞ்ச நாள் ஆகட்டும். அதுக்குப் பிறகு நீங்க அழைச்சிட்டு போய் மூன்னு மாசம் கூட வச்சுக்கோங்க.” என நாயகி எடுத்து சொல்ல….

“என் பெண்ணை என்னைவிட யார் பார்த்துப்பா… என்னை நம்பி என் பெண்ணை அனுப்ப மாட்டீங்களா?” என நவீனா அதிலேயே நிற்க…. தனது பாட்டி சொல்லியும் கேட்கவில்லை என்றதும் தர்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

“உங்க பொண்ணு வந்தா தாராளமா கூட்டிட்டு போங்க.” என்றான்.

கீர்த்திக் கீழே அறையில்தான் படுத்திருந்தாள். ஏசி அறை என்பதால் வெளியே என்ன பேசினார்கள் எனக் கேட்கவில்லை. அவளுடன் அவள் தம்பி வினோத் உட்கார்ந்திருந்தான்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் பேசாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அது எல்லாம் பார்த்த நொடியில் மாறிவிட்டது. இருவரும் கதைப் பேசிக் கொண்டிருந்தனர். என்ன இருந்தாலும் உடன்பிறந்த சொந்தம் அல்லவா… அபி அவள் அம்மாவின் அருகில் கட்டிலில் படுத்திருந்தாள்.

“வெளிய என்ன பண்றாங்க பார்க்கலாம்.” எனக் கீர்த்தி எழுந்து வெளியே செல்ல, அவளுடன் வினோத்தும் அபியை தூக்கிக் கொண்டு வந்தான்.

“உங்க அம்மா உனக்கு அவங்க வீட்ல வச்சுப் பிரசவம் பார்த்துகிறேன்னு சொல்றாங்க. இன்னைக்கே உன்னைக் கூடிட்டுப் போகக் கேட்கிறாங்க, நீ என்ன சொல்ற கீர்த்தி?” என ஜமுனா கேட்க, மனைவி செல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையில் தர்மா இருக்க… எங்கே வர மாட்டேன் என இத்தனை பேர் முன்னிலையில் சொல்லிவிடுவாளோ என்ற பதட்டத்தில் நவீனா இருந்தார்.

கீர்த்தி ஒரு நொடி யோசித்தவள், “நான் அவங்களோட போறேன் அத்தை.” என்றதும் தர்மா அவளை நம்பாமல் பார்க்க… நவீனாவுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. எல்லோரும் இப்போது தர்மாவைத் தான் பார்த்தனர்.

“அது தானே அவங்க அம்மா கூப்பிட்டு எப்படிப் போகாம இருப்பா…அவங்க வீட்ல இல்லாத வசதியா இங்க இருக்கு.” எனச் சுனிதா நினைக்க…

“அம்மா, நான் உங்களோட வரேன். ஆனா இன்னைக்கே திரும்ப இங்க வந்திடுவேன். எனக்குக் குழந்தை பிறக்கும் போது தர்மாவோடதான் இருக்கணும். அவர் இல்லாம என்னால அந்த நேரத்தை நினைக்கக் கூட முடியாது. நானே அவர் இருக்கத் தைரியத்துல தான் இருக்கேன்.” என்றபோது, இதுதான் எங்க கீர்த்தி என்பது போல ஜமுனாவும், நாயகியும் பார்க்க… தர்மா அப்போதுமே கொஞ்சம் விறைப்பாகத்தான் இருந்தான்.

“அவ சொல்றதுதான் சரி. கீர்த்தி அம்மா, நீங்க இப்ப முறையா அழைச்சிட்டு போங்க. நாங்க சாயங்காலமா வந்து கூப்பிட்டுக்கிறோம். பிரசவம் முடிஞ்சதும், நீங்க எத்தனை நாள் வேணாலும் உங்களோட உங்க பெண்ணை வச்சுக்கோங்க.” என்ற நாயகியைப் பார்த்து தர்மா முறைக்க,
“ஒரு ரெண்டு மாசம்.” என அவர் இழுக்க… போதும் என்பது போலத் தர்மா கையசைத்தான். 


இவர் பாட்டுக்கு வாக்குறுதிகளை அள்ளி விடுகிறாரே என்றிருந்தது அவனுக்கு. பின்னே அவன் தானே அத்தனை நாட்கள் மனைவியைப் பிரிந்து இருக்க வேண்டும். அந்தக் கடுப்பில் இருந்தான்.

மற்றவர் முன்பு விட்டுக் கொடுக்காமல் வருகிறேன் என்றாவது மகள் சொன்னாளே என்ற நிம்மதியில் நவீனா சரியென்றார்.

“உன்னோட பேசணும் வா…” எனத் தர்மா கீர்த்தியை அழைக்க, அவன் அவளைத் திட்டப் போகிறான் என்ற அச்சத்தில் ஜமுனாவும் உடன் சென்றார்.

“நீ இன்னைக்கே வருவ தான… உங்க அம்மா வீட்டுக்குப் போனதும் எங்களை மறந்திட மாட்ட இல்ல…” எனத் தர்மா சந்தேகமாகக் கேட்க,

“தர்மா, நீ தான் எப்பவும் சரின்னு நினைக்கக் கூடாது. அவளுக்கு அவங்க அம்மாவும் முக்கியம் தானே…இப்பதான் அவங்க வீட்லயே அவளோட பேசுறாங்க. இதுல நீ வேற இப்படிப் பண்ற.” என ஜமுனா சொல்ல… இருங்க அத்தை என்ற கீர்த்தி,

“நீங்க உங்க குடும்பத்தை விட்டுக் கொடுப்பீங்களா தர்மா? யாரையும் விட்டுக் கொடுக்காம எப்படி இருக்கிறதுன்னு, நான் உங்ககிட்ட இருந்துதான் கத்துகிட்டேன்.” என்றால் அவனை நேராகப் பார்த்து. 


“நல்லாக் கேளு… இவனை எவ்வளவு பேசி இருப்பாங்க. அவங்களுக்கே விட்டுத்தான் கொடுத்தான். இவன் மட்டும் பண்ணலாம். நீ பண்ணக் கூடாதா?” ஜமுனா கேட்க, 


“நீங்கதான் வேணுமுன்னு சொல்லி, நான் ஏற்கனவே அவங்களை ரொம்பக் காயப்படுத்திட்டேன். ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க, என்னைக் கேட்காமலே நான் கூட்டிட்டு போறேன்னு எதோ நம்பிக்கையில சொல்லிட்டாங்க. இப்ப எப்படி முகத்துல அடிச்சது போல வர மாட்டேன்னு சொல்றது.” 


“அப்படிச் சொல்ல அவங்க யாரோ இல்லை… அவங்க என்னோட அம்மா. எங்க அம்மா மேல எனக்கு ஆயிரம் வருத்தம் இருக்கலாம்… அதுக்காக நான் அவங்களை விட்டுக் கொடுக்க முடியாது.” 


யோசித்துப் பார்க்கும்போது தானும் இப்படித்தான் நடத்து கொண்டிருப்போம் எனத் தர்மாவுக்குப் புரிந்தது.

“கீர்த்தி, நீ உங்க அம்மா வீட்டுக்குப் போறது எனக்குப் பிரச்சனையே இல்லை… ஆனா இப்ப போறதுதான். நீ உடனே திரும்புறேன்னு சொல்லிட்ட… அதனால பரவாயில்லை.” என்றவன்,

“முன்னாடியே நானே அவங்களோட பேசி சமாதானம் செஞ்சு வச்சிருப்பேன். ஆனா நான் அவங்க பணத்துக்காக வந்ததா நினைச்சிட்டா? அந்த ஒரே காரணதுக்காகத்தான், நான் இதுவரை உங்க வீட்டு ஆளுங்ககிட்ட இருந்து விலகி நின்னேன்.” 


“நீ வசதி இல்லாத வீட்டுப் பெண்ணா இருந்திருக்கக் கூடாதான்னு, எத்தனை முறை நினைச்சிருக்கேன் தெரியுமா?”

“இப்பவும் சொல்றேன், நீ உங்க வீட்டுக்கு போயிட்டு வர்றதில்லை எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா அங்க இருந்து நான் எதையும் வாங்கிக்க மாட்டேன். அதை மட்டும் நினைவுல வச்சுக்கோ.” என்றதும்,

“எனக்கு உங்களைப் பத்தி உங்களையும் விட அதிகமா தெரியும்.” எனக் கீர்த்திச் சொன்னதும், தர்மாவின் முகம் மென்மையானது.

இதுவரை கீர்த்திக்காக மட்டுமே தான் ஜமுனா யோசித்தார். இப்போது மகன் சொன்னதும்தான்… அப்படி ஒரு கோணம் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.

அவர் அறையில் இருந்து வெளியே சென்றதும், கீர்த்தித் தர்மாவை அனைத்துக்கொண்டாள். 


“என் மேல கோபமா?” 


“இல்லை மா… இன்னைக்கே போயிட்டு வர்றது உனக்கு அலைச்சல் தான். நாளைக்கு வேணாலும் வா…” என்றதற்கு,

“நைட் நீங்க எனக்குக் கால் அமுக்கி விட்டாத்தான் எனக்குத் தூக்கம் வரும். அதனால இன்னைக்கே வந்திடுறேன்.” எனக் கீர்த்திச் சொல்ல…

“உங்களை விட்டு இருக்க முடியாது சொல்றீங்களா மேடம். கால் அமுக்கி விடணுமாம்.” 


“நேத்து மருதாணி வச்சு விட்டதுக்கே எல்லோரும் ஹான்னு பார்த்தாங்க. தினமும் கால் அமுக்கி விடுறது யாருக்கும் தெரியாது போல….” எனத் தர்மா சொன்னதும், கீர்த்திக்கும் சிரிப்புத்தான். 


இருவரும் பேசியபடி வெளியே வர… தர்மா எதுவும் கோபமாக இருப்பானோ என நவீனா பார்க்க…. அவன் அப்படி ஒன்றும் இல்லை. நன்றாகத்தான் எல்லோரோடும் பேசினான். 


கீர்த்தி அபியை அழைத்துக் கொண்டு அவள் பெற்றோருடன் கிளம்ப…. அருணா அவளுக்கு மடி நிரப்பி அனுப்பினாள். “அப்பா, நீங்களும் வாங்க…” என அபி அழைக்க… தான் பிறகு வருவதாகச் சொல்லி தர்மா அவர்களை அனுப்பி வைத்தான்.

கீர்த்திச் சென்றதும், அவளுக்கு மருத்துவர் ஆபரேஷன் செய்ய வேண்டும் எனச் சொன்னதைத் தர்மா வீட்டில் சொல்லிவிட்டான். கீர்த்திக்கு இப்போது சொல்ல வேண்டாம். அதையே நினைச்சிட்டு இருப்பா… ரெண்டு நாள் இருக்கும்போது சொல்லிக்கலாம் என்றான். 

நாயகிக்கும், ஜமுனாவுக்கும் வருத்தமாக இருந்தது. இருந்தாலும் மருத்துவர் சொல்வதைத் தானே கேட்க முடியும் என பேசிக்கொண்டனர். 


வீட்டிற்கு வந்த சுனிதாவிடம், “நீங்க எப்படி என் பொண்டாட்டியை அங்க வச்சு அப்படிப் பேசலாம்.” எனச் சூரியா சண்டைக்குச் செல்ல… 


“அப்படிச் செஞ்சா சீக்கிரம் குழந்தை உண்டாகும்னு சொல்வாங்க டா…” எனச் சுனிதா சமாளிக்க…. 


“நீங்க வர வர வேற மாதிரி நடந்துகிறீங்க. சரியில்லை சொல்லிட்டேன்.” எனச் சூரியா எச்சரித்து விட்டுச் சென்றான். 


சௌமியா அவரின் அண்ணன் மகள் என்பதால் சுனிதா சௌமியாவை ரொம்பவும் தாங்க ஆரம்பித்து, ஸ்ருதியை மட்டும் எதாவது சொல்லிக்கொண்டும் இருந்தார். 


“நீ ஏன் அப்படிப் பண்ண… அதுவும் அங்க வச்சு.” என ரவீந்தர் மனைவியிடம் கேட்க, 


“நான் வேற ஒன்னு நினைச்சு சொன்னேன்… ஆனா வேற ஒன்னு நடந்தது.” என்றவர், 


“இப்பத்தான் தர்மா மாமியார் வீட்டோட ராசி ஆகிட்டானே… அவங்க கண்டிப்பா அவனுக்குச் சொத்து கொடுப்பாங்க தானே…. அப்போ நிறையவே வரும்.” 


“நமக்கு ரெண்டும் பசங்க… பிரிச்சிகிட்டா கம்மியாத்தானே வரும். அதுதான் தர்மாவை அவனோட சொத்துல இருந்து இன்னும் கொஞ்சம் கேட்கலாம் நினைச்சேன்.” என்றதும், 


“நீ கேட்டா கொடுப்பானா… எல்லாம் பத்திரம் பண்ணியாச்சு….தர்மாவாவது இத்தனை வருஷம் வேலைப் பார்த்திருக்கான். ஆனா என் தம்பி குடும்பத்துக்குக் கொடுத்ததுதான் அநியாயம்.” என்றார் ரவீந்தர். 


“நீங்க உங்க அப்பாகிட்ட இன்னும் சண்டை போட்டு கேட்டிருக்கணும்.” என்றார் சுனிதா.
சிலருக்கு என்ன கொடுத்தாலும் திருப்தி என்பது வரவே வராது. 


சூரியாவும் வசீகரனும் மதியம் உண்பதற்கு வந்தவர்கள், மீண்டும் கம்பெனிக்கு செல்ல வெளியே வர… விஷாலும், சந்துருவும் எதிரே நடந்து வந்தனர். 


முதலில் வம்பிழுத்தது விஷால் தான். வேண்டுமென்றே, “எப்படி இருக்கீங்க அண்ணா?” எனப் போலி பவ்யம் காட்டி அவன் வினவ…. 


“தம்பிக்கு நோகாம சொத்து வந்ததும் திமிர் வந்திடுச்சு.” எனச் சூரியா சொல்ல…. வசீகரன் கேலியாகச் சிரித்தான். 


“தம்பி, சொத்து வாங்கிறது முக்கியம் இல்லை. அதை அழியாம காப்பாத்தணும். என்ன தெரியும் உனக்கு? கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் நீ வித்திட்டுப் போகப் போற?” எனச் சூரியா சொல்ல… விஷால் அவனை அடிக்கச் செல்ல…. அப்போது தர்மா அலுவலகம் செல்ல காரில் வருவதைப் பார்த்ததும் பின்வாங்கினான். 


தர்மாவும் இவர்களைப் பார்த்து விட்டு காரை நிறுத்த, சூரியாவும் வசீகரனும் அங்கிருந்து செல்ல… விஷாலும் அவன் வீட்டை நோக்கி சென்றான். 


அவர்கள் அங்கிருந்து சென்றதும்தான் தர்மா காரை எடுத்துக் கொண்டு சென்றான்.