சாரல் மழையே 

அத்தியாயம் 18

கீர்த்திக்கு ஒன்பதாம் மாதம் துவங்கி இருந்தது. அந்த மாத பரிசோதனைக்குத் தர்மா அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிருந்தான்.

கீர்த்தியை உள்ளே உதவி டாக்டர் பரிசோதிக்க… தர்மா பெரிய டாக்டரின் முன் அமர்ந்திருந்தான். இரண்டு நாட்கள் முன்பே ஸ்கேன் எடுத்திருந்தனர். அந்தப் பரிசோதனையின் முடிவை பார்த்த டாக்டர், “எல்லாம் நார்மல் தான். ரெட்டை குழந்தையா இருக்கிறதுனால, ரிஸ்க் எடுக்காம நாம ஒரு ஒருவாரம் பத்துநாள் முன்பே ஆபரேஷன் பண்ணி குழந்தைகளை வெளிய எடுத்திடுறது பெட்டெர். வலி வந்து குழந்தைகளைப் பிரசவிக்கிறது கொஞ்சம் ரிஸ்க் தான்.” என,

“நான் உங்களுக்கு ரெண்டு நாள்ல சொல்றேன் டாக்டர்.” என்றான்.

கீர்த்தியுடன் வந்த உதவி டாக்டர் எல்லாம் நார்மல்.” எனச் சொல்ல,

“ஓகே அடுத்து பத்து நாள்ல திரும்ப வரணும்.” எனச் சொல்லி இருவரையும் அனுப்பினர்.

ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர் சொன்னது தர்மாவுக்குக் கவலைதான். அவன் யோசனையில் வர… ”குழந்தை பிறந்திட்டா என்னால ரொம்ப நாள் ஐஸ்கிரீம் சாப்பிட முடியாது. அதனால இன்னைக்கு எனக்குப் பலூடா வாங்கித் தரனும்.” எனக் கீர்த்தி அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். 


உடல்நலமில்லாமல் இதே மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்க வந்த நவீனா… அப்போது கண்டிப்பாக மகளை அங்கே எதிர்ப்பார்க்கவில்லை. எதிரே வந்த மகளை அதுவும் அவள் இப்போது இருப்பதைப் பார்த்ததும், சட்டென்று என்ன செய்வது என்று கூடத் தெரியவில்லை. அவர் திகைத்துப் போய் நிற்க… ஆனால் கீர்த்தி அப்படியில்லை. அன்னையை நேரில் பார்த்ததும், “ஹே…. அம்மா…” என்றவள் நவீனாவிடம் விரைந்து சென்று…. 


“எப்படி மா இருக்கீங்க? இங்க எதுக்கு வந்தீங்க? உங்களுக்கு உடம்பு சரியில்லையா?” எனக் கேள்விகளாக அடுக்க… 


“இல்லையில்லை… இங்க ஒருத்தரை பார்க்க வந்தேன்.” என்றவர், “நீ எப்படி இருக்கக் கீர்த்தி? நானும் அப்பாவும் உன்னை எப்படிப் பார்க்கிறதுன்னு யோசிச்சிட்டே இருந்தோம், நல்லவேளை இங்க பார்த்திட்டேன்.” என்றார். 


“ஒருநாள் திடிரென்று மகளை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். அதன் பிறகு அவளோடு தொடர்பிலும் இல்லை. இப்போது திடிரென்று என்ன காரணம் சொல்லி மகளோடு சேர்வது எனத் தெரியாமல் இருந்தனர்.

“யாருக்கோ பயந்தா மா என்னோட பேசாம இருந்தீங்க?” எனக் கீர்த்திக் கேட்டதும், நவீனாவுக்கு அதிர்ச்சி தான்.

“அதெல்லாம் இப்ப பேச வேண்டாம் கீர்த்தி.” என நவீனா சொல்ல, தர்மாவும் வேண்டாமே என்பது போலப் பார்க்க… கீர்த்தியும் விட்டு விட்டாள்.

“ஏன் டி உன் வயிறு இவ்வளவு பெரிசா இருக்கு… உன்னைப் பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கு. டாக்டரைப் பார்த்தியா என்ன சொன்னாங்க?” என நவீனா படபடக்க…

“எனக்கு ட்வின்ஸ் பேபி…. அதுதான் வயிறு பெரிசா இருக்கு.” என்றால் கீர்த்திச் சந்தோஷமாக.

“நம்ம வீட்ல இதுவரை யாருக்குமே ட்வின்ஸ் இல்லை… உனக்குத்தான் முதல்ல….”

“இவரோட அக்காவுக்கு ட்வின்ஸ் தான். அதே போல எங்களுக்கும் ட்வின்ஸ்.”

நவீனா தான் பயந்துப் போய் இருந்தார். கீர்த்தித் தைரியமாகவே இருந்தாள்.

நவீனாவுக்கு மகளைத் தங்களிடம் இருந்து பிரித்துவிட்டது தர்மா என அவன் மீது எக்கச்சக்க கோபம் இருந்தது. அதனால் அவர் மகளுடன் மட்டுமே பேசினார். தர்மா என்ற ஒருவன் அங்கிருப்பதையே அவர் கவனிக்காதது போல இருந்தார். தர்மாவுக்கு அது புரிந்துதான் இருந்தது.
நவீனாவுக்கு அடுத்து என்ன செய்வது என ஒன்றும் புரியாத நிலை.

“உங்க அம்மாவை நம்ம வீட்டுக்கு கூப்பிடு கீர்த்தி, அபி வந்து நம்மைத் தேடுவா… வீட்டுக்கு போகணும்.” எனத் தர்மா நினைவுப்படுத்த…

“எங்க வீட்டுக்கு வாங்க மா.” எனக் கீர்த்தி அழைத்தாள்.

“இருக்கட்டும், நான் இன்னொரு நாள் வரேன்.” என்றதும்,

“சரி அப்பாவோட வாங்க.” என்றவள், விடைபெற்றுக் கிளம்ப… தர்மாவும் “வீட்டுக்கு வாங்க.” எனச் சொல்லி நகர்ந்து விட்டான். கீர்த்தி அப்போது எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. அவள் அம்மா அவளுடன் பேசியதே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அளவில் இருந்தால் கூட போதும் என்றுதான் நினைத்தாள்.


தர்மா வீட்டுக்கு வந்ததும், அவன் நண்பன் தீபக் மருத்துவன் என்பதால்… அவனுக்கு அழைத்து மருத்துவர் சொன்னதைச் சொல்ல… “இட்ஸ் பெட்டெர். ரெண்டு குழந்தைங்க வேற ரிஸ்க் எடுக்கக் வேண்டாம். ” என்றான். 


நவீனா இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் மகளைப் பார்த்ததைச் சொன்னவர், அவள் இப்போது இருக்கும் நிலையையும் சொன்னார். 


மகளை அந்த நிலையில் பார்த்ததில் இருந்து நவீனா ஒருநிலையில் இல்லை. இப்போது அவருக்குத் தடை எதுவும் இல்லையே…. அதனால் அவளை எப்படியாவது இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. 


அவர் கணவரிடம் சொல்ல… “உடனே எல்லாம் நடக்காது நவீனா. நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.” என்றார். ஆனால் நவீனா எங்கே கேட்டார்.

ஒன்பதாம் மாதம் என்பதால், வளைகாப்பு போட்டு அவளை இங்கே அழைத்து வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், கீர்த்திக்கு அழைத்து வளைக்காப்புச் செய்யப் போவதாகச் சொல்ல… அதுவும் நட்சத்திர ஹோட்டலில் என்றதும்,

“நான் எங்க வீட்ல கேட்டுட்டு சொல்றேன்.” என்றாள்.

“நான் என் பொண்ணுக்கு பண்றதுக்கு அவங்களை ஏன் கேட்கணும்.” என்றதும்,

“நான் கூட்டுக் குடும்பத்தில இருக்கேன். என் இஷ்டத்துக்கு எல்லாம் முடிவு பண்ண முடியாது. முதல்ல நீங்க எங்க வீட்டுக்கு வந்து தாத்தா பாட்டிகிட்ட அப்புறம் என் அத்தைகிட்ட பேசுங்க. அவங்க சொல்றது சரியாதான் இருக்கும்.” என்றாள்.

அப்போதே அவர்கள் சொல்வதைத்தான் மகள் கேட்பாள் என நவீனாவுக்குப் புரிந்துவிட்டது. 


மகளைப் பார்ப்பது போல அவர் மட்டும் ஒருநாள் சென்றார். காலை பதினோரு மணி போல வந்திருந்தார். கீர்த்தியின் அம்மா வந்திருப்பது எல்லோருக்குமே மகிழ்ச்சி. அவரை வரவேற்று நல்லபடியாகவே உபசரித்தனர். 


ஜமுனா சம்பந்திக்கு தடபுடலாக விருந்து தயார் செய்தார். அவர் வந்திருக்கிறார் என்றதும், தர்மாவுக்குத் தகவல் செல்ல… அவர் மகளோடு பேசி கொண்டிருக்கட்டும் என்றெண்ணி… அவன் சிறிது நேரம் சென்றுதான் வந்தான். 


“வாங்க அத்தை.” என்றவன், சந்தோஷமாக இருந்த மனைவியிடம், “உங்க அம்மாவுக்கு எதுவும் சாப்பிட கொடுத்தியா இல்லையா?” எனக் கேட்க, 


“அதெல்லாம் அத்தை கொடுத்தாங்க.” என்றாள். 


“நாங்க கீர்த்திக்கு வளைகாப்பு செய்யுறதா இருக்கோம்.” என நவீனா சொன்னதும், 


“நாங்களும் ஏழாம் மாசம் செய்யலாம்னு இருந்தோம், ஆனா எங்க சின்னப் பையன் தவறிட்டதுனால செய்யலை…” 


“நீங்க வந்து செய்யணும்னு இருக்கு. நல்லது தான… தரலாமா பண்ணுங்க.” என்றார் நாயகி. 


“நான் அப்ப ஒரு ஒரு வாரத்துக்குள்ள இருக்க மாதிரி ஹோட்டல்ல ஹால் புக் பண்றேன்.” 


“ரெட்டை குழந்தை வீணா கண்ணு படும். அவளுக்கு அலையவும் முடியாது. இங்கே வீடே பெரிசா இருக்கே… நெருங்கின சொந்தங்களை மட்டும் அழைச்சு வீட்லயே பண்ணலாம்.” என நாயகி சொல்ல… தர்மாவும் ஆமோதிக்க, நவீனா கீர்த்தியைப் பார்த்தார். 


“இதுக்கே பாட்டி எனக்குத் தினமும் சுத்தி போடுவாங்க. ஹோட்டல்ல எல்லாம் வச்சா அவ்வளவுதான். எனக்கு அலையவும் முடியாது வீட்லயே வச்சுக்கலாம் மா.” என்றாள். 


“நாங்க ஒரு நாலு குடும்பம் மட்டும்தான் வருவோம். உங்க வீட்ல எத்தனை பேர் சொல்லிடுங்க, வளைகாப்பு நாங்கதான் செய்யணும். சாப்பாடுக்கு நான் ஏற்பாடு பண்ணிடுறேன்.” என்றார் நவீனா. 


“இல்லை… அது சரி வராது. எங்க வீட்ல வைக்கிறோம். நாங்களே சாப்பாட்டுக்கு சொல்லிடுறோம். நீங்க எத்தனை பேர் வேணாலும் வந்து சந்தோஷமா உங்க பெண்ணுக்கு வளைக்காப்பு பண்ணுங்க.” என்றுவிட்டான் தர்மா. 


“நல்ல நாள் பாரு.” என அதுவரை அமைதியாக இருந்த ரங்கநாதன் நாயகியிடம் சொல்ல… அவர் பார்த்து அடுத்த வார புதன்கிழமை நல்ல நாள் என்று சொல்ல… அன்றே வளைகாப்பு வைத்துக்கொள்வோம் என முடிவாகியது. 


இருந்து உண்டுவிட்டு செல்ல சொல்லி எல்லோரும் எவ்வளவோ வற்புறுத்தியும் நவீனா உண்ணாமலே கிளம்ப… அது எல்லோருக்கும் வருத்தமென்றால்… அவர் தன் மகளுக்காக மட்டுமே வந்திருக்கிறார் எனத் தர்மாவுக்குப் புரிந்தது. 


கார் வரை சென்ற கீர்த்தி, “நீங்க அபியை பார்த்திட்டு போவீங்கன்னு நினைச்சேன் மா… அவ மதியம் தான் ஸ்கூல் முடிந்து வருவா.” மகள் சொன்னதும், பேத்தியைக் காணும் ஆவல் நவீனாவுக்கும் இருந்தது. ஆனால் உடனே ஒன்ற முடியவில்லை. 


“அடுத்தமுறை அவ இருக்கும் போது வரேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றார். 


வளைகாப்பிற்கு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் தர்மாவின் நண்பர்கள் குடும்பத்திற்கு மட்டும் தான் சொல்லி இருந்தனர். நவீனா வாசனுக்குச் சொல்வார் என்றாலும், தர்மாவும் அவரைக் கைபேசியில் முறையாக அழைத்திருந்தான். 


இன்னும் மூன்று மாதங்கள் கூட ஆகாததால்… தான் வரவில்லை…பிள்ளைகளை மட்டும் அனுப்புவதாகச் சுபா சொல்ல… நம்ம வீடுதானே சித்தி. நீங்களும் வாங்க.” எனச் சொல்லிவிட்டு தர்மா வந்திருந்தான். 


வளைகாப்புக்கு முன்தினமே அருணா வந்துவிட வீடே களைக்கட்டியது. கீர்த்தி அவளுக்கு அப்போது அரைத்த மருதாணி தான் வேண்டுமென்று சொல்ல… சேலத்தில் இருந்தே அருணா கொண்டு வந்திருந்தாள். அதை ஜமுனா அரைத்துக் கொடுத்தார். 


ஏற்கவே அருணா அழைத்திருக்க… ஸ்ருதியும் ரித்விகாவும் நேரத்திற்கு வந்துவிட்டனர். சௌமியாவும் உண்டாகி இருப்பதால்… அவள் அம்மா வீட்டில் இருக்கிறாள்.
வளைகாப்பிற்கு முந்தின இரவு உணவுக்குப் பிறகு அவர்கள் வீட்டின் வெளி வராண்டாவில் உட்கார்ந்து எல்லோருமே மருதாணி வைத்துக் கொண்டனர். 


தனக்குத் தர்மா தான் வைக்க வேண்டும் எனக் கீர்த்திச் சொல்ல… வச்சிட்டா போச்சு… இது என்ன பெரிய வேலையா? எனத் தர்மா மனைவியின் அருகில் உட்கார்ந்து விட்டான். 


அவள் சொன்னது போல… உள்ளங்கையின் நடுவில் பெரிய வட்டம் பிறகு சுற்றிலும் சின்னப் பொட்டாக வைத்து, விரல்களுக்குத் தொப்பிப் போல் வைத்து விட்டான். 


ஸ்ருதி அவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படி இருக்க மனுஷன், இப்படிப் பொண்டாட்டி கேட்டதும் மருதாணி வைத்து விடுகிறாரே என்றிருந்தது. 


மனைவியின் விருப்பத்துக்கு அவ்வளவு தூரம் மதிப்பளிக்கிறானே… என ஆச்சர்யமாக இருந்தது. சூரியா எல்லாம் வார்த்தையால் காதல் செய்வது தான் அதிகம். பேசியே கவுப்பானே தவிரச் செயலில் இருக்காது. 


இவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்க அங்கே சுனிதாவும் சுபாவும் வர… அதே போல வீட்டு ஆண்களும் வந்துவிட…. நள்ளிரவு வரை அரட்டைதான்.

தர்மா இதற்குத்தான் சொத்து பிரிக்கும் போது கூட இதுதான் வேண்டுமென்று காரராகக் கேட்கவில்லை. சொத்திற்காகச் சொந்தத்தை இழக்கவும் அவன் விரும்பவில்லை. இப்படி எல்லோரும் சேர்ந்திருப்பதையே அவன் விரும்பினான். 


மறுநாள் காலை எழுந்த கீர்த்திக் கையைக் கழுவிட்டு வந்து தர்மாவிடம் காட்ட… கருஞ்சிவப்பு நிறத்தில் மருதாணி நன்றாகச் சிவந்திருந்தது. கீர்த்தி அவள் கையை முகர்ந்து மருதானியின் வாசம் பிடிக்க… “இவ்வளவு பிடிக்குமா உனக்கு. நம்ம வீட்லையே செடி வச்சிடலாம்.” என்றான் தர்மா. 


காலையிலேயே வீடு பரபரப்பகியது. சீக்கிரமே காலை உணவு முடித்து வரும் விருந்தினரை வரவேற்க தயாராகினர். 


“கீர்த்தி அம்மாவுக்கு ரெட்டை குழந்தைன்னு சொல்லிட்டு, நம்ம வீட்ல சொல்லலைனா நல்லா இருக்காது. நீங்களே சொல்லிடுங்க பாட்டி.” எனத் தர்மா சொல்லி இருந்தான். அதனால் நாயகி நான்கு நாட்களுக்கு முன்பே, “ஒன்பது மாசம் ஆனதும் சொல்லலாம்னு இருந்தோம். கீர்த்திக்கு ரெட்டை குழந்தை.” எனச் சொல்லி இருந்தார். 


கீர்த்தியின் குடும்பம் மட்டும் முன்பே வந்துவிட்டனர். அவள் பெற்றோறார் மற்றும் தம்பியைப் பார்த்ததும் கீர்த்திக்கு மிகுந்த மகிழ்ச்சி. “என்னோட அப்பா, அம்மா, தம்பி.” எனக் கீர்த்தி அபிக்கு அவர்களை அறிமுகம் செய்ய… 


“அப்பா அம்மா வா…. இத்தனை நாள் எங்க இருந்தாங்க?” என அபி கேட்க,
இந்தக் கேள்விக்காகத்தான் இத்தனை நாள் மகளிடம் சொல்லாமல் இருந்தாள். “அதை அவங்களையே கேளு.” என்றவள் உள்ளே சென்றுவிட… 


அபி தர்மாவின் மடியில் அமர்ந்து கொண்டு அவர்களைப் பார்ப்பதும், பிறகு தந்தையின் மார்பில் முகத்தை மறைப்பதுமாக இருந்தாள். 


சோமசேகர் தர்மாவிடம் நன்றாகவே பேசிக்கொண்டு இருந்தார். தர்மா வினோத் இப்போது என்ன செய்கிறான் எனக் கேட்டுக் கொண்டான். 


வினோத் அவன் சகோதரியை தேடி சென்று, “எப்படி இருக்கக் கீர்த்தி?” எனக் கேட்க…. 


“அப்பா அம்மாவை விடு, நீ ஏன் டா இப்படி இருந்த? எனக்கு உன் மேலத்தான் கோபம்.” என்றாள் தனது ஆதங்கத்தை மறைக்காது. 


“அம்மா விடவே இல்லை… நான் உன்கிட்ட பேசினா எதாவது சொல்லிடுவேன்னு, என்கிட்டே பேசக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாங்க. என்னை என்ன பண்ண சொல்ற?” 


“அதோட எனக்கு உன்னையாவது உன் விருப்பத்துக்கு விட்டாங்களே… அதனால என்னவும் பண்ணிட்டு போறாங்கன்னு இருந்துட்டேன்.” என்றான். 


கீர்த்திக்கு இன்னும் கோபம் தான் வந்தது. ஆனாலும் இழுத்து பிடிக்க முடியவில்லை. அவன் இப்போதுதான் படிப்பு முடிந்து வெளிநாட்டில் இருந்து திரும்பியும் இருந்தான்.

நவீனா அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தவர்,” இந்தா கீர்த்தி, உனக்கும் உன் பெண்ணுக்கும் டிரஸ். மாத்திட்டு ரெடி ஆகு.” என்றதும், அதை வாங்கிக் கொண்டாள். 


அடர் ரோஜா நிறத்தில் வெள்ளி ஜரிகையால் நெய்யப்பட்ட குழந்தையின் வெவ்வேறு சித்திரங்கள் உடல் முழுவதும் இருக்க… சந்தன நிற பட்டு ரவிக்கையின், இரண்டு கையிலும் குழந்தையின் உருவத்தை ரோஜா நிற ஜரிகையால் டிசைன் செய்திருந்தனர். முதுகிலும் அதே போல… இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருப்பது போல…. அதே நிறத்தில்அபிக்கும் பட்டுப் பாவாடை சட்டை எடுத்திருந்தார். 


கீர்த்தித் தன் அம்மாவின் ரசனையை வியந்து கொண்டாள். வினோத் வெளியே செல்ல… கீர்த்திக் கீழே இருந்த அறையிலேயே புடவை மாற்றும் போது, அவளின் வயிற்றைப் பார்த்து நவீனாவுக்குப் பயமாகத்தான் இருந்தது. 


“என்ன டி இப்படிக் கோணீட்டு இருக்கு உன் வாயிறு?” எனக் கேட்க,


“உள்ளே ரெண்டும் ஆளுக்கொரு பக்கம் உட்கர்ந்திருக்குங்க போல…” என்றால் சிரித்தபடி. 


அவள் புடவை அணிந்ததும், தனது பர்சில் இருந்து அந்தச் சேலைக்குப் பொருத்தமாகத் தான் வாங்கி இருந்த நகைகளைக் கொடுக்க… 


“கண்டிப்பா இதைப் பார்த்தா தர்மா திட்டுவார். நீங்க ஆசையா வாங்கிட்டு வந்துடீங்க. அதனால போட்டுக்கிறேன். வளைகாப்பு முடிஞ்சதும் திருப்பிக் கொடுத்திடுவேன்… சரியா?” எனக் கேட்க, 


“நீ முதல்ல போடு…பிறகு பார்க்கலாம்.” என்றார். 


கீர்த்திச் சென்று தனது புடவையைத் தன் புகுந்த வீட்டினரிடம் காட்ட… “ரொம்ப நல்லா இருக்கு.” எனச் சொல்லி மகிழ்ந்தனர். 


நவீனா அழைத்து வந்த ஆட்கள், தட்டுகளில் அவர்கள் கொண்டு வந்த சீர் வரிசை பொருட்கள் மற்றும் வளையல்களை எல்லாம் அடுக்கி வைத்தனர். எதையும் விடவில்லை எல்லாமே கொண்டு வந்திருந்தார். 


விருந்தினர் எல்லோரும் வந்துவிட… குறித்த நேரத்தில் முதலில் பச்சை காப்பு அணிவித்து நாயகி ஆரம்பிக்க… அதன் பிறகு கீர்த்தியின் அம்மா என ஒவ்வொருவராக வலையடுக்க ஆரம்பித்தனர். 


“தான் கடைசியில் போடுவதாகச் சொன்ன ஜமுனாவை, இப்பவே போடுங்க.” எனக் கீர்த்தி விடவில்லை. அடுத்து அருணா, சுனிதா, ஸ்ருதி, ரித்விகா, பிறகு நண்பர்களின் மனைவிகள் என வரிசை நீண்டு கொண்டே சென்றது. கடைசியில் தர்மா கையில் வளையல் எடுத்தவன், கடவுளை வேண்டியபடி மனைவிக்குப் போட்டுவிட்டான். கீர்த்திக்கு மிகுந்த மகிழ்ச்சி. 


நவீனா வளையல் போட்டவர்களுக்கு எல்லாம் பரிசு கொடுத்தார். வெள்ளிக் கூடை போல இருந்தவற்றில் ஸ்வீட் பாக்ஸ், ஒரு டசன் வளையல்கள் அதோடு தாம்பூலமும் வைத்திருந்தார். உணவு மேஜையில் பழங்கள் போட்டு வைத்துக்கொள்ளலாம். பார்க்க அழகாக இருந்தது.

எல்லோரும் வைத்திருப்பதைப் பார்த்த அபி, ஜமுனாவிடம் சென்று கூடையைக் கேட்க,  

“உனக்கும் அம்மம்மா வாங்கி இருக்கேன் டா…” என்றவர், நிஜமான வெள்ளிக் கூடையில் வைத்தே பேத்திக்கு கொடுத்தார். 

கீர்த்தி தர்மாவை ஓரக்கண்ணால் பார்க்க… இதெல்லாம் அவனுக்கு பிடிக்கவில்லை என அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.

“அம்மா அவ சின்ன பொண்ணு… அவளுக்கு இது வெள்ளின்னு கூட தெரியாது. அவ விளையாட கேட்கிறா..” என்றவள், அவள் அம்மா மற்றவர்களுக்காக கொண்டு வந்த கூடையை எடுத்து மகளிடம் கொடுத்து விட்டு வெளிக்கூடையை வாங்கி ஓரமாக வைத்தாள்.