நள்ளிரவில் எதோ சத்தம் கேட்டு விழித்த தர்மா, பிறகே அது கைப்பேசியின் அழைப்பு என்பதை உணர்ந்து, கீர்த்தி எழுவதற்குள் அவசரமாக எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான். விஷால் எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறான் என நினைத்தபடி எடுத்துப் பேசினான்.
“சொல்லு டா…”
“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நான் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்.”
“ஓ… இன்னைக்கு நல்லாதானே இருந்தார். டாக்டர் பார்த்தாங்களா?”
“பார்த்திட்டு இருக்காங்க.”
“எந்த மருத்துவமனை?” என்று கேட்டவன், சரியென வைத்து விட்டான்.
விஷால் அப்போதுதான் சென்று படுத்திருப்பான். அவன் அம்மாவின் சத்தம் கேட்டு, அவர் அறைக்குப் போய்ப் பார்க்க… உமாபதி மயக்கத்தில் இருந்தார்.
“நல்லாத்தான் டா இருந்தாரு திடிர்னு ஒருமாதிரி இருக்குன்னு சொன்னார். அதுக்குள்ள மயங்கிட்டார்.” என்றதும், விஷால் நேரம் கடத்தாமல் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்.
சுதாவும், ரித்விகாவும் உடன் கிளம்பினர். அவர்கள் உடைமாற்றி வர தாமதமாகும் என்பதை உணர்ந்தவன், “நான் போயிட்டு போன் பண்றேன்.” எனத் தந்தையைக் காரில் துக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனை வந்திருந்தான்.
உமாபதியை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு, வெளியே காத்திருக்கும் நேரத்தில், அவனுக்கு முதலில் நினைவுக்கு வந்தது தர்மா தான். அவனுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு வைத்தான்.
தர்மா பால்கனி கதவை பூட்டிக் கொண்டு வந்தவன், உடை மாற்றிக்கொண்டு அறையின் கதவை திறந்து வெளியே சென்று, எதிரே இருந்த அருணாவின் அறைக் கதவை தட்ட… அருணா எழுந்து வந்தாள். அவள் கணவனை அன்று மாலைதான் ஊருக்கு அனுப்பி வைத்திருந்தாள். அவளும் பிள்ளைகளும் அந்த அறையில் படுத்திருந்தனர்.
வெளியே நின்ற தர்மாவைப் பார்த்ததும், இந்த நேரத்தில் எதற்கு வந்திருக்கிறான்? கீர்த்திக்கு தான் எதுவுமோ எனப் பயந்து விட்டாள்.
“என்ன டா?” எனப் பதட்டமாகத்தான் கேட்டாள்.
விஷால் போன் பண்ணான் என்றவன் விவிரம் சொல்ல… அருணா நெஞ்சில் கைவைத்துக் கொண்டாள்.
“அக்கா, நான் ஹாஸ்பிடல் போறேன். நான் அங்க இருந்து போன் பண்ணாம, நீ இங்க யாருக்கும் எதுவும் சொல்லாத. எதுவா இருந்தாலும் எனக்குப் போன் பண்ணி கேட்டுட்டு தான் செய்யணும். சரியா…”
“ம்ம்… ஆனா ஒன்னும் ஆகாது இல்ல டா தம்பி.” என அவள் பயப்பட….
“எதுவும் ஆகாதுன்னு நம்புவோம். இந்த நேரத்தில தாத்தாவுக்கோ பாட்டிக்கோ அதிர்ச்சியா எதுவும் சொல்ல வேண்டாம். நான் ஹாஸ்பிடல் போய் நிலைமையைப் பார்த்திட்டு போன் பண்றேன்.”
“கீர்த்தி அவளா எழுந்துக்கிற வரை எழுப்பாத.”
“சரி டா நான் பார்த்துகிறேன். நீ போயிட்டு வா… அங்க விஷால் தனியா இருப்பான்.”
அருணாவை கதவை பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு, தர்மா காரை எடுத்துக் கொண்டு செல்ல…. ரித்விகாவும் அவள் அம்மாவும் அப்போது மருத்துவமனை செல்வதற்காக வெளியே வர… தர்மா அவர்களை அழைத்துக் கொண்டு சென்றான்.
சுதா பயந்தபடி வர… “இப்ப மருந்து, மாத்திரையிலேயே சரி பண்ணிடுறாங்க சித்தி. ஒன்னும் பெரிசா இருக்காது பயப்படாதீங்க.” எனத் தர்மா ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தான்.
தர்மாவைப் பார்த்ததும் விஷாலுக்குப் பலம் வந்தது போல இருந்தது. விஷால் சூரியாவுக்கும் அழைத்துச் சொன்னான். “தர்மா அண்ணனுக்குச் சொன்னியா?” எனக் கேட்க, அவர் இங்கதான் இருக்காரு. என்றதும். சூரியா கவலை அகன்றவனாகப் போன்னை வைத்து விட்டான்.
மருத்துவர் அழைக்க, தர்மாவும் விஷாலும் மருத்துவரை சந்திக்கச் சென்றனர்.
“இதயத்துல ரெண்டு இடத்தில பிளாக் இருக்கு. ஆபரேஷன் பண்ணித்தான் ஆகணும். ஆனா இப்ப இருக்கிற நிலையில அதைத் தாங்கிற அளவுக்கு அவருக்கு ஷக்தி இல்லை.”
உமாநாத் தான் குடித்துக் குடித்து உடம்பை கெடுத்து வைத்திருந்தாரே… அவருக்கு இதோடு வேறு சிக்கல்களும் இருக்கிறது. என்ற மருத்துவர்,
“ஒரு வாரம் போகட்டும். எல்லா டெஸ்ட்டும் எடுத்து எப்படி இருக்காருன்னு பார்த்திட்டு தான் அப்ரேஷன் பண்ணனும்.” எனச் சொல்லிவிட… காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.
விஷாலுக்குக் கேட்டதும் தாங்க முடியவில்லை. அவன் ஒரே அழுகை… தர்மா அவனைச் சமாளித்து வெளியே அழைத்து வந்தான். சுதாவும், ரித்விகாவும் கேட்டு விட்டு அவர்களும் தாங்க முடியாமல் அழுதனர். தர்மா அவர்களைத் தேற்றி உட்கார வைத்தான்.
தாத்தா பாட்டியிடம் எப்படிச் சொல்வது எனத் தர்மாவுக்குக் கவலையாக இருக்க… விஷால் தைரியமாக இருந்தால் பரவாயில்லை…. அவனே உடைந்து போய் இருக்க…. அவனை விட்டு விட்டு கிளம்பவும் மனமில்லாமல்… சூரியா வரட்டும் என அங்கேயே உட்கார்ந்து கொண்டான்.
அதிகாலையில் தர்மாவை மட்டும் அழைத்த மருத்துவர், இன்று தாங்குவதே மிகவும் கடினம் எனச் சொல்லிவிட…. அவனுமே இதை எதிர்ப்பார்க்கவில்லை. காப்பாற்றிவிடலாம் என நம்பிக்கையில் இருந்தான்.
அதிகாலை ஐந்து மணிப்போலப் பாத்ரூம் செல்ல எழுந்த கீர்த்தி, கணவனைக் காணாது அவனது கைபேசிக்கு அழைக்க…. தர்மா
விஷயத்தைச் சொன்னதும் அவளுக்கு மிகவும் அதிர்ச்சி.
“சரி பண்ணிடலாம் தான….”
“இல்லை…” என்றவன், மருத்துவர் சொன்னதைச் சொன்னான்.
“விஷாலுக்குத் தெரியுமா?”
“தெரியாது… அவனைப் பார்க்க ரொம்பக் கஷ்டமா இருக்கு. இத்தனைக்கும் டைம் வேஸ்ட் பண்ணாம உடனே வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கான்.”
“இப்ப என்ன பண்றது?”
“நீ தைரியமா இருக்கணும் கீர்த்தி. என்னால விஷாலை விட்டுட்டு வர முடியாது. தாத்தா பாட்டி எழுந்ததும், நீ கீழப் போய் மெதுவா… உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்னு மட்டும் சொல்லு.”
“அவங்களை முன்னாடியே தயார் படுத்தி வைக்கணும்.”
“ம்ம்… சரி நான் பார்த்துக்கிறேன்.”
“அருணா அக்காவுக்கு அட்மிட் பண்ணது தெரியும். வேற எதுவும் தெரியாது.”
“நீங்க சொல்றது புரியுது. நான் சொல்ல மாட்டேன்.”
“ம்ம்… சரி பார்த்துக்கோ.”
தர்மாவுக்குத் தெரியும், கீர்த்தி மிகவும் தைரியமான பெண். சூழ்நிலைக்குத் தக்க நடந்து கொள்வாள்.
நள்ளிரவில் விஷால் அழைக்கும் போது, ஸ்ருதியும் விழித்துவிட்டாள். அப்போதிருந்து கணவனை மருத்துவமனை செல்ல சொல்லிக் கொண்டே இருக்கிறாள்… ஆனால் அண்ணன் கூட இருக்கார் எனச் சொல்லி திரும்பப் படுத்து உறங்கி விட்டான்.
என்ன ஆனதோ என்ற கவலையில் ஸ்ருதி உறங்காமல் இருந்தாள். அடுத்துத் தர்மா சூரியாவை அழைக்க…. அதுவரை கணவனை எழுப்ப போராடிக்கொண்டிருந்த ஸ்ருதி தர்மா என்றதும் உடனே எடுத்தாள்.
“அத்தான், சின்ன மாமா எப்படி இருக்காங்க.”
“நிலைமை சீரியஸ் தான். அவன் என்ன பண்றான்?”
“தூங்கிட்டு இருக்கார்.”
“அவனை எழுப்பி உடனே ஹாஸ்பிடல் அனுப்பு மா… அவன் வந்தா தான் நான் இங்க இருந்து நகர முடியும். வீட்ல தாத்தா பாட்டியை வேற பார்க்கணும்.”
“சரி அத்தான். இப்பவே அனுப்புறேன்.”
“கீர்த்திகிட்ட தாத்தா பாட்டிக்கு மெதுவா விஷயத்தைச் சொல்ல சொல்லி இருக்கேன்.”
“புரியுது அத்தான். நான் அத்தை மாமா அங்க போகாம பார்த்துக்கிறேன்.”
“ம்ம்… நான் சித்தியையும் ரித்விகாவையும் என்னோட வரும் போது கூட்டிட்டு வரேன். நீ அவங்களோட இரு.” என
“சரி அத்தான் நான் அவங்களைப் பார்த்துகிறேன்.”
“சூரியாவை உடனே அனுப்பு.” என்றவன் போன்னை வைத்து விட….
“உங்க அண்ணனே போன் பண்ணிட்டார். மாசமா இருக்கப் பொண்டாட்டியை விட்டுட்டு அவரே ஹாஸ்பிடல்ல போய் இருக்கும்போது உங்களுக்குப் போறதுக்கு என்ன?” என ஸ்ருதி அடித்து எழுப்ப…
“அண்ணனா போன் பண்ணார்?” என்றபடி எழுந்து உட்கார்ந்தவன், “ஐயோ நல்லா தூங்கிட்டேனே… இப்ப போனா முறைப்பாரே… நீயும் கூட வரியா… நீ இருந்தா திட்ட மாட்டார்.” என
“இப்படித்தான் எதாவது ஏடாகூடமா செய்ய வேண்டியது. அப்புறம் அவர் திட்றார், முறைக்கிறாருன்னு அவரைக் குறை சொல்றது.”
“எனக்கும் வேற வேலை கொடுத்திருக்கார்.” என்றவள் விவரம் சொல்லிவிட்டு, கீழே இறங்கியவள் தனது அத்தை மாமாவின் அறைக் கதவை தட்டி அவர்களுக்கு விஷயம் சொல்ல…
“நான் போய் அத்தை மாவை பார்க்கிறேன்.” எனச் சுனிதா கிளம்ப…
“அவங்களைக் கீர்த்திப் பார்த்துப்பாங்கலாம். அத்தானே வீட்டுக்கு வரேன்னு சொன்னனர். நீங்க அங்க போக வேண்டாம்.” என்றதும்,
“இவன் அவங்க தாத்தா பாட்டியை எத்தனை நாள் பொத்தி வைக்கிறான்னு நானும் பார்க்கிறேன்.” என்றார் சுனிதா.
“சொத்து பிரிச்சதும், அவன் அவங்க தாத்தா பாட்டியை வெளியே அனுப்புறானா இல்லையான்னு பாரு.” என்றவர், திடிரென்று நினைவு வந்தது போல,
“ஐயோ வசீகரன் இன்னைக்கு ஹனிமூன் கிளம்புறானே…. அவனால போக முடியாதோ….” என்ற மாமியாரின் கவலையைப் பார்த்து ஸ்ருதிக்கு எரிச்சலாக இருந்தது. 

கீர்த்திப் பல் துலக்கி, முகம் கழுவி, உடைமாற்றிக் கொண்டு கீழே இறங்கி வர… கீழே ஹாலில் தான் அருணா இருந்தாள்.
இவளுக்குத் தெரியுமா தெரியாதா என்பது போல அருணா பார்க்க… “இப்பத்தான் அவர்கிட்ட பேசினேன்.” என்றவள், சமையல் அறை சென்று பாலைக் காய்ச்ச…
“அவன் போனதுல இருந்து நான் தூங்கவே இல்லை. இப்ப என்ன பண்றது?”
“தாத்தா பாட்டி எழுந்துகட்டும் மெதுவா விஷயம் சொல்லலாம்.” என்றாள் கீர்த்தி.
மகள் மருமகள் இருவரும் ஒன்றாகச் சமையல் அறையில் இருப்பதைப் பார்த்த ஜமுனா, “என்ன அதுக்குள்ள எழுந்துட்டீங்க. பசிக்குதா கீர்த்தி.” என, கீர்த்திப் பதில் சொல்லாமல், இந்தாங்க காபி என அவருக்கு கொடுக்க…
“நான் போய் முதல்ல அத்தை மாமாவுக்குக் கொடுத்திட்டு வரேன்.” என்றவர் நாயகிக்கு காபியும், ரங்கநாதனுக்குப் பாலும் எடுத்துக் கொண்டு சென்றார்.
ஜமுனா திரும்பி வந்து, அவர் காபியை பருகும் வரை கீர்த்தி ஒன்றும் சொல்லவில்லை. பிறகு அருணாவை அவரிடம் சொல்லச் சொல்லிவிட்டு, தாத்தா பாட்டியின் அறைக்குச் சென்றாள்.
கீர்த்தியைக் காலையில் பார்த்ததும் இருவருக்கும் ஆச்சர்யம். “நீ ஒழுங்கா தூங்கினியா இல்லையா… ரெண்டு நாளா அலைஞ்சிருக்க… அதுக்குள்ள எதுக்கு எழுந்த?” என நாயகி சொல்ல,
ரங்கநாதன் எதிரில் கட்டிலில் உட்கார்ந்த கீர்த்தி, “தாத்தா, சின்ன மாமாவுக்கு உடம்பு முடியலை. நைட்டே விஷால் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு இவருக்குப் போன் பண்ணாங்க. இவரும் அப்பவே போயிட்டார்.” என்றதும், கேட்ட வயதான தம்பதிகளுக்கு மிகுந்த பதட்டம். 

ரங்கநாதனே தன் கைப்பேசியில் தர்மாவை அழைக்க… அவர் அழைப்பதைப் பார்த்ததுமே, கீர்த்தி அவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டாள் எனத் தர்மாவுக்குப் புரிந்தது.
“என்ன டா எப்படி இருக்கான்?” என்றார் எடுத்ததும்,
“டெஸ்ட் எல்லாம் எடுக்கச் சொல்லி இருக்காங்க தாத்தா… இனிமே தான் டாக்டர் சொல்வாங்க.” என்றவன், “நான் வீட்டுக்கு வரேன், பேசிக்கலாம்.” என்றான்.
தர்மா நம்பிக்கையாக எதையும் சொல்லவில்லை என்பதை ரங்கநாதன் கவனித்தார். தான் இன்னும் என்னென்ன பார்க்க வேண்டியது வருமோ என நினைத்தவர், தன் முகத்தையே கலக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம்,
“ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லை…” எனச் சொன்னதாகப் பொய் உரைத்தார்.
நாயகி வெளியே சென்றதும், “தர்மா எதுவும் நம்பிக்கையா சொல்லலை…. எனக்கு அவன் பொண்டாட்டி பிள்ளைகளை நினைச்சாத்தான் கவலையா இருக்கு.” என்றார் கீர்த்தியிடம்.
என்ன சொல்லுவாள் கீர்த்தி, உண்மையையும் அப்போது சொல்ல முடியாது. பொய்யாக ஆறுதல் தரவும் அவர்களுக்கு கால அவகாசம் இல்லை. அதனால் அமைதியாக இருந்தாள்.
சூரியா வந்ததும் அவனிடம் தர்மா, “நீ இங்கயே விஷாலோட இருக்க.” என்றவன், விஷாலிடம் “நீ தைரியமா இருக்கணும் விஷால். உன் அம்மாவுக்கும் தங்கைக்கும் நீதான் தைரியம் சொல்லணும்.” என்றான்.
தர்மா சுதாவையும், ரித்விகவையும் அழைத்துச் சென்று உமாபதியை காட்டினான். அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் மட்டுமே சுவாசித்துக் கொண்டிருந்தார். 

“பிறகு வருவோம்.” என அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பி விட்டான்.
அவர்களை வீட்டில் விட்டுவிட்டு ஸ்ருதியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, அவன் வீட்டிற்கு முன் சென்று காரை நிறுத்திவிட்டு இறங்கிதான் நின்றிருப்பான். அதற்குள் சூரியா அழைத்துவிட்டான்.
“இங்க நான் பார்த்துகிறேன். நீங்க ரெண்டு பேரும் அங்க பார்த்துக்கங்க.” என்றவன், போன்னை வைத்து விட்டு உள்ளே செல்ல… கணவனைக் கண்டதும் கீர்த்தி நிலைமையைத் தெரிந்துகொள்ள முன்னே வர… அவளைப் பார்த்து இல்லையெனத் தலையசைத்தவன், ரங்கநாதன் அறைக்குச் சென்றான்.
இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. விஷாலுக்கு இன்னும் தந்தை இல்லையென்பதை நம்ப முடியவில்லை. திடிரென்று ஒருநாள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது.
செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் தானாக நடந்தது. தானாக இல்லை… தர்மா என்ற மனிதனால் என்பதை விஷாலும் அறிவான். இவர்களையும் பார்த்துக்கொண்டு, தாத்தா பாட்டிக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டு… நடக்க வேண்டிய வேலைகளையும் கவனித்து, அதில் மற்றவர்களையும் இணைத்து என எல்லாம் பொறுப்பாகச் செய்தது அவன்தான். 
அண்ணன் இல்லையன்றால் தான் இதை எப்படி கடந்து வந்திருப்போம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தர்மாவுக்கு விஷாலைப் பார்க்கும் போது, அவனையே பார்ப்பது போல இருந்தது. அவனும் திடிரென்று தந்தையைப் பறிகொடுத்து, அடுத்து என்ன எனத் தெரியாமல் நின்றவன் தானே… அதனால் அந்தக் கஷ்டம் புரிந்தது.