காலை உணவுக்குப் பிறகு அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்கள், அடுத்து நீச்சல்குளம் சென்றனர்.
தந்தையும் மகளும் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருக்க… மரநிழலில் இருந்த பெஞ்சில் கீர்த்திச் சாய்ந்து படுத்திருந்தாள். ஒருமணி நேரம் போல நீரில் ஆடிவிட்டு இருவரும் மேலே வர… மூவரும் அறைக்குத் திரும்பினர்.
தந்தையும் மகளும் முன்னால் பேசிக்கொண்டு செல்ல… கீர்த்தி மெதுவாக வேடிக்கை பார்த்தபடி சென்றாள். செல்லும் வழியில் சிறிய மலர் தோட்டம் இருக்க… அதற்கு இரண்டு பக்கமும் பாதை இருந்தது. தந்தையும் மகளும் ஒரு வழியில் செல்ல… கீர்த்தி இன்னொரு வழியில் சென்றாள். அப்போது அவளுக்கு எதிரே வந்தவன், கீழே அவனது பர்சை போட்டுவிட…. கீர்த்தி அதை எடுக்கக் கீழே குனிய…. அவளின் நிலையை உணர்ந்தவன், “இருக்கட்டும் நானே எடுத்துக்கிறேன்.” என, அதற்குள் கீர்த்தி எடுத்து அவனிடம் நீட்டி இருந்தாள்.
இப்போது இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டனர். அவனது முகம் திகைப்பை காட்ட…. கீர்த்திக்கு அவன் யாரென்று தெரியவில்லை. அவள் சிறு புன்னகையுடன் அவனைக் கடந்து செல்ல….
“நீங்க மிஸ்டர் சோமசேகர் பொண்ணு கார்த்தித் தான…” என்றதும் நின்று அவளைத் திரும்பி பார்த்தவள், “ஆமாம் நீங்க யாரு?” என…
“நேர்ல பார்த்தே தெரியலை… பேர் சொன்னா மட்டும் தெரியுமா?” என்றவன், வேறு எதுவும் பேசாது சென்றுவிட…. கீர்த்தியைக் காணாது தந்தையும் மகளும் அவள் சென்ற பாதையில் தேடி வந்தனர். அப்போது விஷ்வா கீர்த்தியுடன் பேசியதைத் தர்மா பார்த்துக் கொண்டேதான் வந்தான்.
“எங்களோட வராம எங்கப் போன….” என்றவன், மனைவியின் தோளில் கைபோட்டு அவளுடன் நடக்க, விஷ்வா ஒருமுறை அவர்களைத் திரும்பி பார்த்துவிட்டுச் சென்றான்.
கீர்த்தி நடந்ததைச் சொல்ல… தர்மா அமைதியாக வந்தவன், அறைக்கு வந்ததும் மகளைக் குளிக்கச் சொல்லி அனுப்பிவிட்டு, “உனக்கு அது யாருன்னு தெரியலையா?” எனக் கேட்க,
“உங்களுக்குத் தெரியுமா?” என்றவள், யார் என மண்டையை உடைத்துக்கொள்ள…
“உனக்கு உன்னையே புரியவச்சவர்.” எனக் கணவன் சொன்னதும்,
“விஷ்வா…” எனக் கீர்த்திச் சரியாக ஊகிக்க….
“அவரே தான்.” என்றதும்,
“என்ன இவன் இப்படி இருக்கான். அப்ப மைதா மாவுல செஞ்ச மாடல் மாதிரி இருந்தான். இப்ப தொந்தியும் தொப்பையுமா… தாடி மீசையோட நல்லாவே இல்லை.” எனக் கீர்த்திச் சொன்னதும் தர்மாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“ரொம்பக் கொழுப்பு உனக்கு. நல்லவேளை உனக்கு அடையாலம் தெரியலை… இது மாதிரி எதாவது சொல்லி வச்சிருப்ப…” என்றதும், கீர்த்தியும் சிரிக்க… தர்மா முகம் யோசனையைக் காட்டியது.
“என்ன தர்மா?”
“நீ அவனை லேசா நினைக்காத… எனக்கு என்னமோ இவானாலதான், அதாவது இவங்க குடும்பத்துக்குப் பயந்துதான், உங்க வீட்ல உன்னைத் தள்ளி வச்சிருப்பாங்கலோன்னு தோணுது.” என்றதும்,
“போயும் போயும் இவனுக்காகவா…” எனக் கீர்த்திக் கோபப்பட…
“பெரிய அரசியல் பின்பலம் உள்ளவங்க. உங்க அப்பா செய்யும் தொழிலுக்கு அரசாங்க சப்போர்ட் வேணும். இவங்களைப் பகைச்சிகிட்டா… எல்லாத்துக்கும் முட்டுக் கட்டை போடுவாங்க. அதனால கூட இருக்கலாம்.”
“இப்படியெல்லாம் கூடவா பண்ணுவாங்க?”
“கண்டிப்பா பண்ணுவாங்க. இவங்ககிட்ட தலையைக் கொடுத்திட்டா வெளியில வர்றது கஷ்டம். உன் அப்பா உன் விருப்பம் தெரியாம தலையைக் கொடுத்திட்டார்.”
“நம்மையும் விட்டு வச்சிருக்க மாட்டாங்க. உங்க வீட்ல உனக்கு விஷ்வாவை பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொல்லி இருக்கணும்.” என்றான்.
அப்போது குளியல் அறையில் இருந்து துண்டை சுற்றிக்கொண்டு, “நான் குளிச்சிட்டேன்.” என அபி வந்து நிற்க…
“சும்மா தண்ணியை மொண்டு ஊத்திட்டு வந்திருப்பா…” எனக் கீர்த்திச் சொல்ல… தர்மா மகளுடன் மீண்டும் குளியல் அறை சென்றான்.
“பெரிய மன்மதன் இவனைப் பிடிச்சிருக்குன்னு தான் சொல்லனுமா என்ன? ஆளைப் பாரு நல்லா பீரும், தண்ணியும் அடிச்சு தொப்பையும் தொந்தியுமா இருக்கான். இவனை எல்லாம் கல்யாணம் பண்ணி இருந்தா வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ரொம்பக் கேவலமா இருந்திருக்கும். நல்லவேளை இவனைக் கல்யாணம் பண்ணலை.” எனக் கீர்த்தி மனதிற்குள் விஷ்வாவை அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.
விஷ்வாவுமே அப்போது இவளைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான். கீர்த்தியை ஒரு விழாவில் பார்த்துவிட்டுப் பிடித்திருந்தது. அதை வீட்டில் சொல்ல… இவர்கள் அளவுக்கு வசதி இல்லையென்றாலும் ஓரளவுக்குப் பெரிய இடம் என்பதால் பார்க்கலாம் என்றனர். தங்கள் வீட்டுக்கு வரும் பெண் என்பதால் துப்பறியும் நிறுவனத்தில் சொல்லி… கீர்த்தியை வேவும் பார்த்தனர்.
பொண்ணு பொதுச் சேவைன்னு சுத்திட்டு இருக்கு…. நல்ல பொண்ணு தான் என ரிப்போர்ட் வர… அதன் பிறகே அவளது பெற்றோரை அழைத்துப் பேசினார். அவர்கள் உடனே சம்மதம் என்றுதான் சொல்லிவிட்டு சென்றனர்.
பிறகு சிறிதுநாட்களில் வந்து மகள் காதலித்தவனையே திருமணம் செய்ய வீட்டை விட்டு சென்றுவிட்டாள். அவளுக்குத் தாங்கள் திருமணதிற்குப் பேசியதே தெரியாது என்றனர். அதைதான் நம்ப முடியவில்லை.
விஷ்வாவை திருமணம் செய்யயிருந்த பெண் வேறு ஒருவனுடன் சென்றுவிட்டாள் என்றால் இவர்களுக்குத்தானே அவமானம். அதனால் விஷயம் வெளியே தெரியாமல் இருக்க அடக்கித்தான் வாசித்தனர். ஆனாலும் சோமசேகர் தம்பதி சொன்னதை நம்பவில்லை.
இவங்க வீட்ல பொண்ணு எடுக்க நினைச்சாதே பெரிசு…. இவங்க நம்மை வேண்டாம்னு சொல்வதா என்ற ஈகோ…. ஆனால் சோமசேகர் தம்பதிகள், நாங்கள் மாப்பிள்ளை யார் என்று சொல்வதற்குள், மகள் வேறு ஒருவனை விரும்புகிறேன் எனச் சொன்னதாகவும், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும் சொல்ல… அதையும் நம்பாமல் வேவு பார்த்தனர்.
தர்மாவைப் பற்றி விவரம் தெரியவர… அவனும் பொதுச் சேவை என்றிருப்பதால் இருவரும் காதலிக்க வாய்ப்பிருக்க… அதோடு தர்மா பெரிய இடமும் இல்லை என்றது கொஞ்சம் திருப்தியாக இருந்தது.
வசதியான வீட்டுப் பெண் அங்கெல்லாம் சென்று தாக்குபிடிக்க மாட்டாள். காதல் வேகத்தில் சென்று விட்டவள், அதே வேகத்தில் திரும்பிவிடுவாள் என அலட்சியமாக நினைத்தவர்கள், சோமசேகர் தம்பதியை நிறையவே அவமானப்படுத்திப் பேசி அனுப்பிவிட்டனர்.
அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் சென்றுதான் விஷ்வாவுக்குத் திருமணம் நடந்தது. அவனும் கீர்த்தியை மறந்துவிட்டான். ஆனால் இப்போது பார்க்கும் போது, தாங்கள் நினைத்தற்கு மாறாக அங்கே தாக்குப் பிடித்து விட்டாளே என்றுதான் நினைத்தான்.
இவன் திருமணம் செய்திருக்கும் பெண், இவர்களை விடப் பெரிய இடம். அதனால் பண மழைப் பொழிய…. வார இறுதி இங்கே தாஜில் இருக்கும் வில்லாவில் தான் கழிப்பான். இப்போதும் நண்பர்களுடன் இரண்டு நாட்கள் கூத்து அடித்துவிட்டு சென்று கொண்டிருக்கிறான்.
அவன் தங்கியிருக்கும் வில்லாவின் ஒருநாள் வாடகையே நாற்பதாயிரம். கீர்த்தித் தங்கியிருப்பது அந்த ஹோட்டலிலேயே ஆரம்ப விலையில் இருக்கும் அறை… அதையும் கவனித்திருந்தான். அதுவும் ஒன்றும் மலிவு இல்லை. ஒருநாள் வாடகையே பதினோராயிரம். இருந்தாலும் இவர்கள் கிட்டே கூட வர முடியாது என்பதில் திருப்தி உண்டானது.
இங்கே இவன் இப்படி நினைக்க, அங்கே அவள் இவனைக் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருப்பது தெரிந்தால்…. எப்படி இருக்கும். உண்மையில் தர்மாவோடு ஒப்பிடும் போது, இந்த விஷ்வா எல்லாம் ஒரு ஆளே இல்லை.
மதிய உணவை அறையிலேயே உண்டுவிட்டு ஓய்வெடுக்கும் வேளையில் விஷால் கைப்பேசியில் அழைத்தான். வேறு யாருக்கும் அவனை அழைத்துப் பேச கூடத் தைரியம் இல்லை. தர்மா பால்கனியில் சென்று பேசினான்.
“டீலர்ஸ் அவருக்குப் போன் பண்றாங்க போல…. அவருக்கு விலை தெரியலை. அதுதான் நீங்க எப்ப வருவீங்க கேட்டார்.”
“ம்ம்… அவர் விக்கிற பொருளுக்கு அவருக்கு விலை தெரியலை… இதுல அவர் பொண்ணு என்னைப் பார்த்து உங்களுக்குதான் எல்லாம் தெரியுமன்னு நினைப்பான்னு கேட்கிறா? வேறு யாரையும் தெரிஞ்சிக்க வேண்டாம்னு நான் சொன்னேனா?”
“என்கிட்ட அவ்வளவு சவுடால் பேசினா இல்ல… இப்ப அவளையே டீலர்கிட்ட பேச சொல்லு.”
“அவ எதோ கோபத்தில பேசிட்டா…” என விஷால் தங்கைக்குப் பரிந்து பேச….
“அப்படி என்ன கோபம். கோபம் உங்களுக்கு மட்டும் தான் வருமா? இது எல்லத்துக்கும் காரணம் நீதான். நீ என்னைத் தப்புத் தப்பா பேச… இப்ப அவளும் ஆரம்பிச்சிட்டா….”
“எனக்கு இதெல்லாம் கேட்கணும்னு அவசியமே இல்லை. யாருக்கு என்ன வேணுமோ எடுத்திட்டு போங்க.”
“நாங்க யாரும் பிரிச்சிக்கிறோம் சொல்லலை… நீங்கதான் பிரிஞ்சு போறேன்னு சொன்னீங்க.”
“சேர்ந்து இருக்கிறவரை பார்க்கிறது என்னோட கடமை. நாளைக்கு ஆபீஸ் வந்திடுவேன்.” என்றவன்,
“ரித்விகாவுக்கு வரன் எதுவும் பார்க்கலையான்னு மட்டும் தான் கேட்டேன். அதுக்கு எதுக்கு அவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது? நான் கேட்டாத்தானே தப்பு, நீ கேட்கலாம் இல்ல… கேளு.” என்றான். அப்போதும் ரித்விகா எப்படியும் போகட்டும் என விட முடியவில்லை. விஷாலும் அதை யோசிக்காமல் இல்லை. அவளிடம் பேச வேண்டும் என நினைத்தான்.
“நான் தனியா பிஸ்னஸ் பண்ணலை…. இனியாகிட்ட சரி வராதுன்னு சொல்லிட்டேன்.” என விஷால் சொல்ல…
“நீ தனியா ஆரம்பிக்கிறது பத்தி எனக்கும் ஒண்ணுமில்லை. நான் அதனால பிரிஞ்சு போறேன்னு சொல்லலை. உனக்குச் சிலரை பத்தி இன்னும் தெரியாது. இனி தெரிஞ்சிப்ப.” என்றான்.